ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு முதல் முறையாக தலைமை நிர்வாக அதிகாரி நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டு மொத்தம் 18 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் பூணூல் அணிவீர்களா? குடுமி வளர்ப்பீர்களா? அசைவம் சாப்பிடுவீர்களா? சைவம் சாப்பிடுவீர்களா? மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளதா? என்பன உள்பட பல்வேறு வித்தியாசமான கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன.
இந்த பொறுப்புக்கு 5,300 பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 18 பேர் இறுதி செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களின் வயது 50 முதல் 70–க்குள் உள்ளது. 18.8.2026 அன்று நேர்காணல் தொடங்கியது. நேர்காணலின் ஒரு பகுதியாக விண்ணப்ப படிவம் ஒன்றை நிரப்பி வழங்கினர். அதில் மொத்தம் 18 வகையான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதில்தான் மேற்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. (ராமன் மாட்டுக்கறி சாப்பிட்டதையும், கள் குடித்ததையும் வால்மீகி இராமாயணம் கூறுகிறது).
இதுதவிர சம்பந்தப்பட்டவர்களின் குடும்பப் பின்னணி, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எந்த வகையான பணி செய்கின்றனர். ராமன் கோயிலில் கூட்டம் அதிகரிக்கும்போது அதனைக் கட்டுப்படுத்துவது எப்படி? கடவுள் ராமன் மீதான நம்பிக்கை எப்படி உள்ளது?, ராமன் கோயிலின் எதிர்கால வளர்ச்சி குறித்த திட்டம் தொடர்பான கேள்விகள் உள்ளிட்டவை கேட்கப்பட்டனவாம். அதாவது ’பிராமண’ குலத்தில் பிறந்தவரா என்பதைக் கண்டறியவே இந்தக் கேள்விகள். ராமன் கோயிலைக் கட்டிய கட்டடத் தொழிலாளிகளிடம் இந்தக் கேள்விகளைக் கேட்பார்களா? இதுதான் பார்ப்பனியம்.
மோகன் பகவத் வருகைக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு
வாசிங்டன், ஆக.21, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரும் 29 ஆம் தேதி நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செல்ல உள்ளார். இந்நிலையில், பன்னாட்டு மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவர் ஆசிப் மஹ்மூத் மற்றும் ஆணையர் ஜீன் மில்ஸ் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது அமெரிக்காவில் பொருளாதார தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். அவர்களின் கருத்துகள், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் (20.8.2026) அன்று பதிவிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு பல துணை அமைப்புகளைக் கொண்டது. அந்தத் துணை அமைப்புகள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன. இப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அமெரிக்கா வர திட்டமிட்டுள்ளார். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வன்முறைச் செயல்களிலிருந்து பகவத்தின் வரு கையை தனிமைப்படுத்திப் பார்க்க முடியாது.
எனவே, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு உயர்மட்ட சந்திப்புகள் அல்லது ராஜதந்திர மரியாதைகள் மூலம் கவுரவம் அளிக்கப்படக் கூடாது. அதற்குப் பதிலாக மத நம்பிக்கை சுதந்திரம் மீறல்களுக்குப் பொறுப்பானவர்களாகக் கண்டறியப்படும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மீது தடை விதிப்பதில் அமெரிக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்.
- விடுதலை இராசேந்திரன்