ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 2025 அக்டோபரில் தனது 100வது ஆண்டில் கால்பதித்துள்ளது. இந்த முக்கியமான காலகட்டத்தில் தனது கருத்தியலை நாடு முழுவதும் கொண்டு செல்ல பாஜக போன்ற பலமான அரசியல் அதிகாரத்தின் துணை அதற்குத் தேவைப்படுகிறது. கட்சியின் தேசியத் தலைவர் தேர்வு மற்றும் முக்கியக் கொள்கை முடிவுகளில் ஆர்.எஸ்.எஸ் தனது செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தத் தொடங்கியுள்ளது. முன்னதாக `பாஜக தனித்து இயங்கக் கூடியது' என்ற பிம்பம் உருவாக்கப்பட்ட நிலையில், இப்போது ஆர்.எஸ்.எஸ்-ஸே `அடித்தளம்' என்பது தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் ரகசியமாக நடந்த ஆலோசனைகள் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு, மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்த இந்த வெளிப்படையான கூட்டங்கள் அவசியமாகின்றன என்று பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக மாற்றங்களை வெறும் அரசியலாக மட்டும் பார்க்காமல், ஒரு பண்பாட்டுப் புரட்சியாக முன்னெடுக்க ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. இதற்கு பாஜக-வின் ஆட்சி அதிகாரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை அவர்கள் இப்போது மறைப்பதில்லை. தேர்தல் வெற்றிகளுக்குத் தொண்டர்களின் பலம் தேவைப்படுவதும், ஆர்.எஸ்.எஸ் தனது நூற்றாண்டு விழா வையொட்டி தனது செல்வாக்கை நிலைநிறுத்த விரும்புவதுமே இந்த வெளிப்படையான உறவுக்குப் பிரதான காரணங்களாகும்.

இப்போது பாஜக-வில் நடந்து கொண்டிருக்கின்ற குழப்பங்களைத் தீர்த்து வைப்பதற்கு பாஜக தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் சென்னை வந்து இருக்கிறார்கள்.

இதுவரை `நாங்கள் வெறும் கலாச்சார அமைப்புதான், பாஜகாவின் அரசியலில் தலையிடுவதில்லை' என்று கூறிவந்த ஆர்.எஸ்.எஸ், தற்போது தேர்தல் வியூகம் மற்றும் கட்சிப் பதவிகள் குறித்து நேரடியாகப் பேசுவது, பூனைக்குட்டி வெளியே வருகிறது என்று கூறுவது போன்று மறைத்து வைக்கப்பட்ட உண்மை வெளிப்படுவதைக் காணலாம்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.