ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு உரிமைகள் வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, அயோத்தியில் இராமன் கோயில் கட்டுவது ஆகிய மூன்றும் பாரதிய சனதா கட்சியின் முதன்மையான அரசியல் முழக்கங் களாக நீண்டகாலமாக முன்னிறுத்தப்பட்டு வந்தன.
ஆயினும் 1999-இல் இம்மூன்று கொள்கைகளையும் ஒதுக்கி வைப்பதாக உறுதிமொழி அளித்து, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, வாஜ்பாய் தலைமையில் பா.ச.க. நடுவண் அரசில் அய்ந்து ஆண்டுகள் ஆட்சி செய்தது.
2019-இல் நரேந்திர மோடி தலைமையில் நாடாளு மன்றத்தில் இன்னும் கூடுதலாக இடங்களுடன் இரண் டாவது தடவையாக நடுவண் அரசில் ஆட்சியில் அமர்ந்த பின், பா.ச.க. தன்னுடைய கொள்கைகளை விரைந்து செயல்படுத்தி வருகிறது. முத்தலாக் தடைச் சட்டத்தை 25.7.19 அன்று மக்களவையிலும், 30.7.19 அன்று மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றியது. 5.8.2019 அன்று ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு உரிமைகள் வழங்கும் 370ஆவது பிரிவின் கூறுகளை நீக்கியதுடன், மாநிலம் என்கிற தகுதியையும் பறித்து, லடாக், ஜம்மு-காஷ்மீர் எனும் இரண்டு ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகப் பிரித்தது.
தொடர்ந்து சொல்லப்படும் பொய், காலப்போக்கில் மெய் போன்ற தோற்றம் பெறுவதுண்டு. இந்த உளவி யலை பா.ச.க. திறம்படக் கையாண்டு வருகிறது. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமனுக்குக் கோயில் கட்டுதல் என்பதை முன்வைத்து-இந்துக்களிடையே பரப்பி வந்த முசுலீம் வெறுப்பு உளவியலை பா.ச.க. இப்போது அறுவடை செய்கிறது.
அதனால் முத்தலாக், காஷ்மீர் சிக்கல் ஆகியன முசுலீம்கள் தொடர்பானவை எனக் கருதி, இந்துக்கள் இதில் அக்கறை காட்டவில்லை என் பதுடன் பா.ச.க. அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் மனநிலையில் இருக்கின்றனர். மதம் சார்ந்த பெரும் பான்மைவாத அரசியல், சனநாயகத்தின் ஆணி வேரையே அரித்துத் தின்றுவிடும். எனவே உண்மை நிலையை அறிவதும், மக்களிடம் பரப்புவதும் மதச் சார்பற்ற, சனநாயக ஆற்றல்களின் கடமையாகும். அத்தன்மையில் முத்தலாக் தடைச் சட்டம் குறித்த உண்மை நிலையைக் காண்போம்.
திருமணம், மணவிலக்கு, வாரிசு உரிமை, சொத் துரிமை போன்ற குடும்பம் சார்ந்த உரிமைகளும் நடை முறைகளும் ஷரியத் (Shariat) என்று அழைக்கப்படும் இசுலாமியத் தனிச் சட்டத்தின்படி முசுலீம்களால் பின் பற்றப்படுகின்றன. 1937-இல் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஷரியத்திற்கு அரசு ஏற்பிசைவு வழங்கியது. இந்த ஷரியத் முத்தலாக் முறையை அனுமதிக்கிறது. இதன்படி, ஒரு முசுலீம் ஆண் தன் மனைவியிடம் ஒரே சமயத்தில் தலாக், தலாக், தலாக் என்று மூன்று முறை சொன்னாலே, அவளை மணவிலக்கு செய்து விட்டதாக ஆகும். மேலும், மணவிலக்குச் செய்யப்பட்ட மனைவிக்கு வாழக்கைச் செலவுத் தொகையைக் (ஜீவ னாம்சம்) கணவன் வழங்கும் நடைமுறை இல்லை. அதனால் முத்தலாக்கினால் எண்ணற்ற முசுலீம் பெண்கள் பெருந்துன்பத்திற்கு உள்ளாயினர்.
இங்கு ஒரு செய்தியை நாம் மனங்கொள்ள வேண்டும். 1956-இல் இந்துச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்குமுன் ஒரு இந்து ஆண் பல பெண்களை மணக்கலாம். திருமணம் “புனிதமானது” என்பதால் பெண்ணுக்கு மணவிலக்கு உரிமை இல்லை; சொத்துரிமை இல்லை. இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்ட போது, இந்துச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்காக அம்பேத்கர் தலைமையில் 9.4.1948 அன்று ஒரு குழு அமைக்கப்பட்டது.
அம்பேத்கர் உருவாக்கிய இந்துச் சட்டத் தொகுப்பு வரைவில் மனைவி உயிருடன் இருக்கும் போது இன்னொரு பெண்ணை மணப்பது தண்டனைக்குரிய குற்றம், மனைவிக்கு மணவிலக்கு உரிமை உண்டு, மறுமணம் செய்யும் உரிமை, சொத் துரிமை முதலானவை இடம்பெற்றிருந்தன. மேலும் அம்பேத்கர் பார்ப்பன ஆதிக்கத்தையும், சாதி ஆதிக்கத் தையும் ஒழிக்கும் வகையில் பழக்கச் சட்டம், வழக்கச் சட்டம் என்கிற பெயரில் இருந்த நடைமுறைகள் இனி செல்லாது என்று அதில் கூறியிருந்தார். இந்துமதப் பழமையாளரான அரசமைப்புச் சட்ட அவையின் தலைவராக இருந்த இராசேந்திர பிரசாத்தும் சனாதன வாதிகளும் 5.2.1951 அன்று அம்பேத்கர் முன்மொழிந்த இந்துச் சட்டத் தொகுப்பு வரைவைக் கடுமையாக எதிர்ததனர்.
1948 முதல் இதில் அம்பேத்கருக்கு ஆதரவாக இருந்த நேரு இறுதியில் பின்வாங்கினார். இந்துச் சட்டத்தை நிறைவேற்றாததைக் கண்டித்து அம்பேத்கர் 11.10.1951 அன்று தன்னுடைய சட்ட அமைச்சர் பதவி யைத் துறந்தார். அதன்பின் 1956-இல் நாடாளு மன்றம் மூலம் இந்துச் சட்டத்தில் ஒருதார மணம், பெண்களுக்கு மணவிலக்கு உரிமை, மறுமண உரிமை, சொத்துரிமை முதலானவை சேர்க்கப்பட்டன.
ஆனால் 1400 ஆண்டுகளுக்குமுன் முகமது நபி எழுதிய குர்-ஆனில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம்; மணவிலக்கு உரிமை பெண்ணுக்கும் உண்டு; பெண் ணுக்குச் சொத்துரிமை உண்டு என்கிற முற்போக்கான கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. முகமது நபி பெண் கல்வியை ஆதரித்தார்; பெண் சிசுக் கொலையைக் கண்டித்தார். ஆனால் நபிகள் காலத்தில் நடந்த பல் வேறு போர்களில் திரளான ஆண்கள் மடிய நேரிட்டு விட்டது. அதன் விளைவால் பெண் மக்கள் தொகை ஆண்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகிவிட்டது. அந்தச் சமூகச் சூழலைக் கருத்தில் கொண்டு நான்கு மனைவியரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது அனுமதிக்கப்பட்டது. இப்போது முசுலீம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணக்கலாம்; இந்துக் கள் ஒரு மனைவிக்கு மேல் மணந்தால் தண்டனை என்றுள்ள போதிலும், இந்தியாவில் முசுலீம்களைவிட இந்துக்கள்தாம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியருடன் வாழ்கின்றனர் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் இதை உறுதி செய்கிறது.
1948-இல் இந்துச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள முயற்சி எடுத்ததுபோல் ஷரியத் சட்டத்தில் அத்தகைய முயற்சிக்கு முனையவில்லை. இந்தியா-பாக்கித்தான் நாட்டுப் பிரிவினையால் நடந்த மதப்படுகொலைளால் குருதி ஆறாகப் பெருக்கெடுத்திருந்தது. அச்சூழலில் முசுலீம் தனிச் சட்டத்தில் மாற்றம் செய்தால் நிலைமை மேலும் கொந்தளிப்பாகும் என்று காங்கிரசுக் கட்சியின் தலைமை - குறிப்பாக நேரு கருதியிருப்பார் என்று ஆய்வாளர்கள் எழுதுகின்றனர். ஆனால் இசுலாமிய நாடுகளில் ஷரியத் சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நமது அண்டை நாடுகளான பாக்கித்தான், வங்க தேசம், ஆப்கானிதான் மற்றும் ஈரான், ஈராக், சவூதி அரேபியா, சிரியா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இசுலாமிய நாடுகளில் முத்தலாக் நடைமுறை இல்லை. 1961-இல் பாக்கித்தான் அரசு இயற்றிய முசுலீம் குடும்பச் சட்டத்தின் 7ஆவது பிரிவின்படி, தன் மனைவியை மணவிலக்கு செய்ய விரும்பும் கணவன், தன் மனைவி யிடம் ஒருமுறை தலாக் சொன்ன பிறகு, அது குறித்து அரசு அமைத்துள்ள குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். அம்மடலின் படியைத் தன் மனைவிக்கு அனுப்ப வேண்டும். அம்மடல் பெற்றதும் அக்குழுவின் தலைவர் முப்பது நாள்களுக்குள் கணவன் குடும்பத்தின் சார்பில் ஒருவரையும், மனைவியின் குடும்பத்தின் சார்பில் ஒருவரையும் அழைத்து சமரசம் பேசுவார். எனவே பாக்கித்தானில் கூட ஒரே நேரத்தில் மூன்று தடவை தலாக் சொல்லி உடனடியாக மனைவி யை மணவிலக்கு செய்யும் நடைமுறை இல்லை. மேலும் மனைவியிடம் தலாக் கூறியது பற்றி உரிய குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் தெரிவிக்காத கணவனுக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இந்தியாவில் முசுலீம் சமுதாயத்தின் பிரதிநிதி என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட அகில இந்திய முசுலீம் தனிச்சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board) என்கிற ஒன்று இருக்கிறது. ஷரியத் மீதான முழு அதிகாரம் கொண்ட அமைப்பாகக் கருதப்படுகிறது. முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப் பட்ட பெண்கள் முசுலீம் தனிச்சட்ட வாரியத்திடம் முறையீடு செய்தனர். முசுலீம் சமுதாயத்தின் அறிஞர்கள் சிலரும் முத்தலாக் நடைமுறையை மாற்ற வேண்டும் என்று கருத்துரைத்தனர். ஆனால் முசுலீம் தனிச்சட்ட வாரியம் அசைந்து கொடுக்கவில்லை.
இந்நிலையில் 1985 ஏப்பிரல் 23 அன்று உச்சநீதி மன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முகமது அகமத்கான் எதிர் ஷாபானு பேகம் வழக்கில் வரலாற் றுச் சிறப்பு வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியது. முகமது அகமத்கானும் ஷாபானுவும் கணவன் மனைவி ஆவர். முகமது அகமத்கான் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர்; பணக்காரர். ஷாபானுவை மணந்த பின் 14 ஆண்டுகள் கழித்து இளம்பெண் ஒரு வரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அதன்பின் ஷாபானுவை முத்தலாக் கூறி மணவிலக்கு செய்தார். ஷாபானுக்கு அய்ந்து குழந்தைகள். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125ஆவது பிரிவின்படி தனக்கு வாழ்க்கைச் செலவுத் தொகை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை முசுலீம் தனிச்சட்ட வாரியமும், இசுலாமிய மதத் தலைவர்கள் பலரும் கண்டித்தனர். முசுலீம் களின் வாக்கு வங்கியை இழக்க நேரிடுமோ என்று அஞ்சிய பிரதமர் இராசிவ் காந்தி 1986-இல் “முசுலீம் பெண்கள் மணவிலக்கு உரிமைச் சட்டம்” என்பதைக் கொண்டு வந்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இச்சட்டம் செயலற்றதாக்கியது. இதை பா.ச.க.வும் இந்துத்துவச் சக்திகளும் கடுமையாகக் கண்டித்தன. இவர்களை மகிழ்விப்பதற்காக அதே ஆண்டில் பாபர் மசூதியின் நுழைவாயில் பூட்டைத் திறக்கச் செய்தார் இராசிவ் காந்தி. இதுவே பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.
2016-ஆம் ஆண்டு முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட சாயிரா பானு, இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட அய்ந்து பெண்கள் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதில் முத்தலாக், நிக்காஹ லாலா, பலதார முறை ஆகியவற்றைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரியிருந்தனர். இந்த அய்ந்து பெண் களும் முப்பது அகவையைத் தாண்டிய இளம் மனை வியர். சாயிராபானு, கணவருடன் 13 ஆண்டுகள் திருமண இல்வாழ்க்கை நடத்தியவர்; இரண்டு குழந்தைகளின் தாய். அலகாபாத்தில் வணிகம் செய்து கொண்டிருந்த கணவன் 2015 அக்டோபரில் ஒரு நாளில் தலாக், தலாக், தலாக் என்று எழுதி விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி மணவிலக்குச் செய்தார். இஷ்ரத் ஜகான் கணவர் 2014-இல் துபாயிலிருந்து தொலைப்பேசியில் முத்தலாக் சொல்லி மணவிலக்குச் செய்தார். இவர் களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவ்வாறு, கணவர் எப்போது முத்தலாக் சொல்லி மணவிலக்குச் செய்வாரோ என்கிற அச்ச உணர்வுடனே வாழும் நிலையில் முசுலீம் பெண்கள் வைக்கப்பட்டிருந்தனர்.
அய்ந்து முசுலீம் பெண்கள் தொடுத்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு பலதார மணம், நிக்கா ஹலாலா ஆகியவை குறித்து விசாரிக்கமாட்டோம்; முத்தலாக் பற்றி மட்டுமே விசாரிப் போம் என்று அறிவித்தது. நிக்கா ஹலாலா என்பது மூன்று தடவைகள் கணவனால் மணவிலக்குச் செய் யப்பட்ட பெண் மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால், வேறு ஒருவரைத் திருமணம் செய்து, மணவிலக்குப் பெற்றிட வேண்டும் என்பதாகும்.
இந்த வழக்கில் 2017 ஆகத்து 22 அன்று 395 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் ரோகின்டன் பாலிநாரிமன். யு.யு. லலித், குரியன் ஜோசப் ஆகிய மூவரும் முத்தலாக் நடைமுறை ஷரியத்துக்கும், குர்-ஆனுக்கும், அரசியல் சட்டத்துக்கும் எதிரானது என்பதால் செல்லாது என்று தீர்ப்பு அளித்தனர். தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகரும், அப்துல் நசீரும் இணைந்து எழுதிய தீர்ப்பில், “முத்தலாக் நடைமுறை தவறாக இருந்தபோதிலும் இந்தச் தனிச் சட்டத்தில் நீதிமன்றம் தலை யிட முடியாது. ஆறு மாதங்களுக்கு இந்த முத்தலாக் நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து முத்தலாக் நடைமுறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரும் வகையில் நாடாளு மன்றத்தில் இந்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்” என்று கூறினர். மேலும், “உடன்கட்டை ஏறுதல், பெண் குழந்தைகளைக் கொல்லுதல், தேவதாசி முறை ஆகிய சமூகத் தீமைகள் சட்டத்தின் மூலம் ஒழிக்கப்பட்டன. அதுபோல் முத்தலாக் முறையை நீக்குவது என்பது நீதிமன்றத்தின் மூலம் அல்லாமல் சட்டம் இயற்றுவ தன் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கருத்துரைத்திருந்தனர்.
அய்ந்து நீதிபதிகளில் மூவர் முத்தலாக் செல்லாது என்று கூறிவிட்டனர். இத்தீர்ப்பே சட்டத்திற்குரிய தகுதியைக் கொண்டதாகும். முத்தலாக் முறையைத் தடை செய்யத் தனியாகச் சட்டம் இயற்ற வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கூறியது சிறுபான்மைத் தீர்ப்பு என்பதால் நடுவண் அரசு அதைப் புறக்கணித்திருக்க லாம். ஆனால் மோடி தலைமையிலான பா.ச.க. ஆட்சி, முசுலீம் பெண்களின் பாதுகாவலனாகக் காட்டிக் கொள்ளவும், அதேசமயம், முசுலீம் ஆண்களை அச்சுறுத் தவும் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தது.
2017 திசம்பர் 28 அன்று மக்களவையில் “முசுலீம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்டம்” என்பதைக் கொண்டு வந்து ஒரே நாளில் நிறைவேற்றியது. “முசுலீம் சகோதரிகளின்” இன்னல்களைத் துடைப்ப தற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இச்சட்டம் “முத்தலாக் சட்டம்” என்று குறிப்பிடப்படுகிறது. இச்சட்டத்தின்படி முத்தலாக் சொன்ன கணவன் பிணையில் வெளியில் வர இயலாத வகையில் சிறையில் அடைக்கப்படுவார். மூன்று ஆண்டு கள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.
ஆனால் மாநி லங்கள் அவையில் பா.ச.க.வுக்குப் பெரும்பான்மை இல்லாததால் முத்தலாக் சட்டம் நிறைவேறவில்லை. அதனால் அது சட்டமாகவில்லை. மணவிலக்கு என்பது குடிமையியல் சார்ந்தது. அதைக் குற்றவியல் போல் கருதி சிறைத் தண்டனை அளிப்பது தவறு என்று எதிர்ப்புகள் எழுந்தன. எல்லா மதங்களிலும் மனைவியைக் கைவிட்ட கணவன்கள் அனைவருக்கும் பொருந்துவதாக இல்லாமல், முசுலீம் ஆண்களுக்கு மட்டும் சிறைத் தண்டனை என்பது வஞ்சகமான பழிதீர்க்கும் செயலாகும்.
எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் ஆறு மாதங்களுக் குள் நிறைவேற்றப்பட வேண்டும்; இல்லா விட்டால் அது தன் இருப்பை இழந்துவிடும். அதனால் 2018 செப்டம்பரில் மோடி ஆட்சி அவசரச் சட்டம் மூலம் முத்தலாக் தடைச் சட்டத் திற்கு உயிரூட்டியது.
2018 திசம்பரில் முத்தலாக் சட்டத்தை இரண்டாவது தடவையாக மக்கள் அவையில் நிறைவேற்றியது பா.ச.க. ஆட்சி. 2017-இல் கொண்டுவந்த சட்டத்தில் இப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. முத்தலாக் சொன்ன முசுலீம் ஆண் மீது யார் புகார் அளிப்பது என்று திட்ட வட்டமாகக் குறிப்பிடாமல் முன்பு இருந்தது. இப்போது, பாதிக்கப்பட்ட மனைவி அல்லது அவரின் குருதி உறவினர் புகார் அளிக்கலாம் என்பது இடம்பெற்றது. அதேபோல் குற்றம் சாட்டப்பட்ட கணவன் பிணையில் வெளிவருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பிணை அளிப்பதற்கு முன் நீதிபதி மனை வியின் கருத்தைக் கேட்க வேண்டும் என்கிற நிபந்த னையும் விதிக்கப்பட்டுள்ளது. முத்தலாக் சொன்ன கணவன் தன் மனைவி, குழந்தைகளுக்கு வாழ்க்கைச் செலவுத் தொகை அளிக்க வேண்டும். குழந்தைகளை மனைவி தன் பொறுப்பில் வைத்துக் கொள்ள உரிமை உண்டு.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட கணவனைச் சிறையில் அடைத்த பின்னும், கணவனும் மனைவியும் சமரச மாகப் போக விரும்பினால் அதற்கும் இச்சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால் முத்தலாக் சொன்னால் மூன்று ஆண்டுகள் தண்டனை மற்றும் அபராதம் என்பதில் மாற்றம் இல்லை. இரண்டாவது தடவையும் மாநிலங்கள் அவையில் முத்தலாக் சட்டத்தை நிறைவேற்ற முடிய வில்லை. எனவே நரேந்திர மோடி ஆட்சி 2019 பிப்பிர வரியில் இரண்டாவது தடவையாக அவசரச் சட்டம் கொண்டு வந்தது.
2019 மே மாதம் பா.ச.க. நரேந்திர மோடி தலை மையில் மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்குமேல் பெரும்பான்மைப் பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரசுக் கட்சியும், சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகளும் தேர்தலில் படுதோல்வியடைந்தன. இந்தச் சூழலில் மூன்றாவது முறையாக முத்தலாக் சட்டத்தை மோடி ஆட்சி 25.7.19 அன்று மக்களவையில் நிறைவேற்றியது. எதிர்க்கட்சிகளிடையே ஒருங்கிணைவு இல்லாததைப் பயன் படுத்தி-மாநிலங்கள்
அவையில் தனக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், 30.7.2019 அன்று நிறைவேற்றி யது. இச்சட்டத்தின் ஆதரவாக 99 உறுப்பினர்களும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர். எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் இருபது பேர் அன்று அவைக்கு வரவில்லை. சில கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் முத்தலாக் சட்டம் மாநிலங்கள் அவையில் நிறைவேறியது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது.
“முசுலீம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் தவறு மோடி ஆட்சியில் சரிசெய்யப்பட்டு விட்டது. சமூக சீர்திருத்தவாதிகளான இராசாராம் மோகன் ராய், ஈசுவர வித்யா சாகர் போன்றோர் வரிசையில் நரேந்திர மோடியை வைத்து போற்ற வேண்டும்” என்று உள் துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை வெளியிட்டார்.
முத்தலாக் சட்டத்தை 2019 சூன் 21 அன்று மக்களவையின் சட்ட அமைச்சர் முன்மொழிந்து பேசிய போது, “இச்சட்டம் மதம் தொடர்பானது அன்று. பாலின சமத்துவத்தையும் நீதியையும் நிலைநாட்டு வதும், பெண்களின் உரிமைகளையும் சுயமரியாதை யையும் காப்பதும் இதன் நோக்கம்” என்று கூறினார்.
இவ்வாறு கூறுகின்ற பா.ச.க. சபரிமலை கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கடுமையாகப் போராடியது. மோடி ஆட்சி இதற்கு ஆதரவாக நின்றது. வழக்கு நடந்தபோது பெண்கள் கோவில் நுழைவு ஆதரவுநிலை கொண்டிருந்த பா.ச.க. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எதிர் நிலை எடுத்தது. 2014 முதல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் பா.ச.க. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றுவதற்கான சிறு முயற்சியையும் மேற்கொள்ளாதது ஏன்? எனவே முத்தலாக் சட்டம் தொடர்பாக பா.ச.க. பேசும் பாலின சமத்துவம் போலியானது ஆகும்.
முத்தலாக் சட்டப்படி, முத்தலாக் செல்லாது; மண விலக்கு செய்ததாகாது; அப்படியெனில் திருமண உறவு நீடிப்பதாகப் பொருள்; அப்படியிருக்க, வாழ்க்கைச் செலவுத் தொகையை மனைவி எப்படிக் கோர முடியும்? மேலும் சிறையில் உள்ள கணவனால் பணம் எப்படித் தரமுடி யும்? எனவே முத்தலாக் செல்லாது என்று 2017இல் உச்சநீதிமன்றம் கூறியதை ஏற்று, சிறைத் தண்டனை என்பது இல்லாமல், வாழ்க்கைச் செலவுத் தொகை அளிக்க வேண்டும் என்பதாக மட்டுமே இச்சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். முசுலீம் பெண்களின் காவலனாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, அவர்களின் வாக்குகளை ஈர்க்க வேண்டும் என் நோக்கத்துடனும், முசுலீம் ஆண்களை அச்சுறுத்தி வைக்க வேண்டும் என்கிற இந்துத்துவ மனப்போக்குடனும் முத்தலாக் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
1985-இல் உச்சநீதிமன்றம் ஷாபானு வழக்கில் அவருக்கு வாழ்க்கைச் செலவுத் தொகையை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறிய போதே முசுலீம் தனிச் சட்ட வாரியம் அதை வரவேற்று இருக்க வேண்டும். பாக்கித்தான் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் முத்தலாக் நடைமுறையை ஒழித்திருப்பது போல் இந்தியாவிலும் செய்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யத் தவறியது தன் சொந்த மதத்துப் பெண்களுக்கு இழைத்த அநீதியாகும். இதை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி பா.ச.க. முத்தலாக் சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது.
1980 முதல் தீவிரமடைந்துவரும் இந்துத்துவத்தை எதிர்கொள்வது என்கிற எண்ணத்தில் பழமைவாத இசுலாமிய நடைமுறைகளை மேலும் இறுக்கம் பெறச் செய்வது தீர்வாகாது என்பதை முசுலீம் தனிச்சட்ட வாரியம் உணர வேண்டும். எது எப்படியிருப்பினும் முத்தலாக் சட்டத்தில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பதை நீக்க வேண்டும்.
உலகில் எல்லா மதங்களும் பெண்களை இழிந்த பிறவியாகவும் ஆணின் அடிமைகளாகவுமே கருது கின்றன. இக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே மதச்சடங்குகளும் வாழ்வியல் நெறிகளும் வகுக்கப்பட் டுள்ளன. இத்தகைய மத நம்பிக்கைகள், சடங்குகளி லிருந்து விடுபடுவதே பெண்களின் விடுதலைக்கான வழியாகும்.