இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப்படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாமலும் உள்ளன. சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்; தீண்டாமை வன்கொடுமைகள்; அரசுத் திட்டங்களே சாதிய ஆதிக்கத்திற்கு சாதகமாக தீட்டப்படுதல்; தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்கூட சட்டக் கடமைகளை ஆற்ற முடியாமல் தடுக்கப்படுதல்; இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடுகள், இரட்டை வாழ்விடங்கள் என்ற ஜனநாயக விரோத ஜாதிய முரண்பாடுகள் எண்ணிலடங்காமல் கிடக்கின்றன.

அரசியல், பொருளியல் தளங்களிலோ பற்பல பின்னடைவுகள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக போராடி பெறப்பட்ட தொழிலாளர் உரிமைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் புறந்தள்ளப்படுவது, எட்டு மணி நேர வேலை என்ற சட்டப்பூர்வ உரிமையைப் பறித்து பத்துமணி நேரத்துக்கு மேலாகக்கூட வேலை வாங்கும் பன்னாட்டு நிறுவனங்கள், பெரு முதலாளிகளை மனதில் கொண்டே தீட்டப்படும் திட்டங்கள், ஊழல் மயமாகிப்போன அரசு இயந்திரங்கள்; தன்னளவில் முழுமை பெற்றிருந்த உள்ளூர் உற்பத்தி முறைகள், சிறு தொழில்கள் அழிக்கப்படுதல்,  வளர்ந்துவரும் வறுமை, தேய்ந்து வரும் கிராமப் பொருளாதாரம், சாவதே மேல் என எண்ண வைக்கும் விவசாயம் என ஏராள சிக்கல்கள் நிலவி வருகின்றன.

ஆனால், இவை எவற்றையும்விட தமிழ்நாட்டு அரசியல் தளங்களில் - நுண்ணரசியல் தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது - மாற்றப்பட்டிருப்பது “திராவிடர் - திராவிடம்” என்ற சொற்களே ஆகும். அதுவும் இச்சொற்களே ஈழத்தில் நடந்த பேரழிவுக்கும், இங்கு தமிழ்நாட்டில் நிலவும் எல்லா சிக்கல்களுக்கும் காரணம்; இச்சொற்களை மக்கள் சிந்தனையில் இருந்தே அகற்றாவிட்டால் உய்யும் வழியே இல்லை என்பதுபோலப் பேசப்படுகின்றன; எழுதப்படுகின்றன; கருத்துப் பரப்பல் நடக்கின்றன.

இச்சொற்கள் மட்டுமல்ல; பெரியார் என்ற மனிதன் - பெரியாரியல் என்ற கருத்தியல் தமிழர்களிடம் ஏற்படுத்திய சிந்தனைத் தாக்கம்தான் தமிழர் வீழ்ச்சிக்கே காரணம் என்று உளம் வருந்தி பாவ மன்னிப்பு கோரி சில முன்னாள் பெரியாரியர்களும் தூய ‘தமிழர்’ ஏடுகளில் எழுதுகிறார்கள். ஆக, பார்ப்பனியத்தையும், செயற்கை இந்திய தேசியத்தையும், பன்னாட்டு சுரண்டலையும்விட கொடூரமானதாக திராவிடர் - திராவிடம் ஆகியவை காட்டப்படுகின்றன.

எப்போதும் இதையே பேசிக் கொண்டிருந்த ம.பொ.சி., குணா போன்றோரோடு, பெரியாருக்குத் 'தமிழ்த் தேசத்தின் தந்தை' என்று முன்னர் பட்டம் சூட்டிய ‘தமிழ்த் தேச’ப் பொதுவுடைமைக் கட்சி -

தனது கட்சியின் ஆவணப்படி (பக்கம் 39) “நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகை முரண் வகையிலும் எச்சரிக்கையோடும், விழிப்போடும் கையாளப்பட வேண்டிய” தரப்பினரைச் சேர்ந்த சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி -

“நாம் தமிழ்த் தேசிய மக்களே; திராவிடர்கள் அல்லர்” எனக் கூறும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் - போன்றவை இப்போது புதிதாக இந்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளன.

எனவே இந்த வேளையில் நாமும் இது குறித்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது. முதலில் ஒருவரை அடையாளப்படுத்துதல் குறித்துப் பேசுவோம்.

எந்த ஒரு மனிதருக்கும் ஒற்றை அடையாளம் மட்டுமே இருந்துவிட முடியாது. உலகில் நிலவும் எல்லா அடையாளங்களும், உறவுகளும் சார்பியல் கோட்பாட்டுக்கு உட்பட்டவையே. தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் அய்ரோப்பியர் ஒருவரோடு நின்றால் கருப்பர்; ஆப்பிரிக்கர் ஒருவரோடு சேர்ந்து நின்றால் கருப்பர் அல்லர். ஒருவரே கருப்பராயும், கருப்பர் அல்லாதவராயும் இருப்பார். ஆனால் இரண்டும் உண்மையே. ஒருவர், அமெரிக்காவில் வாழ்ந்தால் ஆசிய அமெரிக்கர்; இங்கிலாந்தில் வாழ்ந்தால் பிரிட்டிஷ் ஆசியன். அவரே இந்தியத் துணைக் கண்டத்தில் டெல்லியில், பீகாரில், வங்காளத்தில் வாழ்ந்தால் தமிழ்நாட்டுக்காரர். அவரே தமிழ்நாட்டில் சென்னையில் வசித்தால் அவர் தஞ்சைக்காரர், சேலத்துக்காரர், மதுரைக்காரர், நெல்லைக்காரர். அவரே நெல்லை நகரில் வாழ்ந்தால் தென்காசிக்காரர், புளியங்குடிக்காரர், சங்கரன்கோயில்காரர். தன் சொந்த ஊரிலேயே உள்ளபோது மேல் தெருக்காரர், தெற்குத் தெருக்காரர்... என்றவாறு இருக்கும் இடம் சார்ந்தும் அவரது சொந்த இடத்தைக் குறிக்கும் சொற்கள் வெவ்வேறாக இருக்கும். என்றாலும் அவை அனைத்தும் உண்மையே.

ஒருவர் தொழிற்சாலையில் இருந்தால் அவரது அடையாளம் தொழிலாளி, மேலாளர், நேரக் கண்காணிப்பாளர் - வீட்டில் இருந்தால் அவரது அடையாளம் அவை அல்ல. வீட்டிலும்கூட ஒருவரது அடையாளம் ஒன்றாகவே இருப்பதில்லை; இருக்க முடியாது. அதுவும் சார்பு அடையாளமாகத்தான் இருக்க முடியும். தாயோடு தந்தையோடு இருக்கும்போது மகன், மகள் எனப்படுவார். தன் குழந்தைகளோடு இருக்கும்போது தாய், தந்தை எனப்படுவார். சொந்த வீட்டுக்குள் இருக்கும்போதுகூட ஒருவரை அடையாளப்படுத்தும் சொற்கள் வேறு வேறாகவே இருக்கின்றன.

ஒருவர் தான் நிற்கும் திசையைக்கூட யாரோடு பேசுகிறாரோ, அவர் இருக்கும் இடம் சார்ந்தே கிழக்கில், மேற்கில், தெற்கில், வடக்கில் இருப்பதாகக் கூறிக் கொள்ள முடியும். இருவேறு திசைகளில் உள்ளவர்களோடு ஒரே சமயத்தில் தொடர்பு கொண்டால் அவர்கள் இருவரிடமும் தான் வெவ்வேறு திசைகளில் இருப்பதாக ஒருவர் கூறுவார். இரண்டும் நேர் எதிர் திசையாகக் கூட இருக்கலாம். ஆனால், இரண்டும் உண்மையே. எனவே, எவர் ஒருவரையும் இருக்கும் இடமானாலும், இருக்கும் திசையானாலும், உறவு முறையே ஆனாலும் ஒற்றைச் சொல்லால் மட்டுமே அடையாளப்படுத்திவிட முடியாது.

இடம் விட்டு நகராமல் இருக்கும் ஒருவரைச் சந்திக்க பலர் வரலாம். ஒவ்வொருவருக்கும் அவர் வெவ்வேறு அடையாளச் சொற்களாலேயே அறியப்படுவர். ஒருவருக்கு நண்பர்; இன்னொருவருக்கு எதிரி; மற்றொருவருக்கு கடன்காரர்; இன்னொருவருக்கு வாடிக்கையாளர்; ஒருவருக்கு விற்பனையாளர்; இன்னொருவருக்கு முகவர் - என்றிவ்வாறு எண்ணிலா அடையாளங்கள்.

அடுத்து கூட்டு அடையாளச் சொல் அணியாய் திரட்டப்பட்டு நிற்கும் போதாவது ஒற்றைச் சொல்லால் கூறிவிட முடியுமா என்றால் அதுவும் முடியாது. தொழிற்சாலையில் உரிமைக்காக அணி திரண்டால் தொழிற்சங்கம் - சாதிக்காரனோடு சண்டைக்கு அணி திரண்டால் சாதிச் சங்கம் - சொந்த ஊர்க்காரனோடு கட்டமைப்பு வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதிக்கென அணி திரண்டு நின்றால் குடி மக்கள் குழு. எனவே, தனி மனிதராக மட்டுமல்ல, கூட்டமாக அணி திரண்டு நின்றாலும் ஒற்றைச் சொல் அடையாளத்தோடு அணி திரட்ட முடியாது.

ஒரு பள்ளி வகுப்பறைக்குள் பல ஆசிரியர்கள் வருவார்கள். ஒரு ஆசிரியர் பாடத் தெரிந்தவர்கள் எல்லாம் இந்தப் பக்கம் வா; மற்றவர்கள் அந்தப் பக்கம் போ என்பார் - அவர் நாடகத்துக்கு தேர்வு செய்ய வந்தவர். அடுத்து வரும் ஒரு ஆசிரியர் உயரமானவர் எல்லாம் இந்தப் பக்கம் வா என்பார் - அவர் கூடைப் பந்து விளையாட்டுக்கு பயிற்சி கொடுக்க வந்தவர். மற்றொரு ஆசிரியர் வருவார்; ஆண்களெல்லாம் இந்தப் பக்கம் வா, பெண்களெல்லாம் அந்தப் பக்கம் போ என்பார் - சான்றிதழில் உடல் அடையாளங்களைப் பதிவுசெய்ய ஆண், பெண் ஆசிரியர்களிடம் அனுப்பி வைக்க வந்தவர் அவர். இன்னொரு ஆசிரியர் வருவார். ஆங்கிலத்தை இரண்டாம் பாடமாய் எடுத்தவர்கள் இந்தப் பக்கம் வா; பிரஞ்சு மொழியை எடுத்தவர்கள் அந்தப் பக்கம் போ என்பார் - அவர் இலவசப் பாடப் புத்தகங்களை விநியோகிக்க வந்தவர். என்றிவ்வாறு ஒரே வகுப்புக்குள் நுழையும் வெவ்வேறு ஆசிரியர்கள், வெவ்வேறு வகையாக அணி பிரிகிறார்கள். காரணம், அவர்களுக்கு வெவ்வேறு நோக்கங்கள் இருப்பதே. அப்படித்தான் கொள்கை அடிப்படையில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கென அணி பிரிப்பதும் கூட ஒரு வகையாய் இருக்க முடியாது.

தொழிலாளர் உரிமைகளுக்குப் போராடும் அமைப்புகள் தொழிலாளி - முதலாளி என பிரித்துக் காட்டும்; போராடும். (ஆனால், கோரிக்கைகள் வெவ்வேறாக இருந்தால் தொழிலாளர்களும்கூட உடலுழைப்புத் தொழிலாளர்கள், நிர்வாகத் துறை ஊழியர்கள் என பிரிக்க வேண்டியும் வரும்) தலித் விடுதலைக்குப் போராடுவோர் ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்படும் சாதியினர் என்றுதான் பிரித்துப் பார்ப்பர்.

ஏரி, குள நீர்ப் பாசனம் பெறுவோர் அடிமடை விவசாயிகள், கடைமடை விவசாயிகள் என்று பிரிந்து நின்றே நீர் முறைப் பற்றிப் போராடுவர். சுற்றுச் சூழலுக்குப் போராடுவோர், மாசுபடுத்துவோர், மாசுகளைத் தடுக்க விரும்புவோர் என்றே பிரிந்து நிற்க முடியும்.

கிராமத்துக்குள் மோதல்கூட இந்த மதத்துக்காரர், அந்த மதத்துக்காரர்; இந்த சாதிக்காரர், அந்த சாதிக்காரர், இந்த தெருக்காரர், அந்த தெருக்காரர் என மோதலின் காரணத்தால் வெவ்வேறு வகையாக பிரிந்து நிற்பர்.

மேற்சொன்ன அணிப் பிரிவினைகளின் தரப்பினர் ஒரு நோக்கத்துக்காக ஒரு அணியில் இருப்பவர், வேறு நோக்கத்துக்காக மற்றொரு அணியில் இருக்க நேரிடும். அதாவது, ஒரு நோக்கத்துக்காக ஓரணியில் இருப்பவர்கள், வேறொரு நோக்கத்துக்காக எதிர் எதிர் அணிகளில் இருக்க நேரிடும். ஆக, நமக்கான ஒற்றை அடையாளங்கள் என்பது எதுவும் இல்லை. அனைத்தும் சார்பு அடையாளங்களே. நாம் அணி பிரிவதும் / பிரிப்பதும் தேவைகளை ஒட்டியே!

எனவே நாம் தமிழ்த் தேசிய மக்களே; திராவிடர் அல்லர் என்பது சரியானதல்ல. ஒரே நேரத்தில் ஒரே நபருக்கு இரண்டு அடையாளங்கள் இருக்க முடியும்.

தொழிற்சங்கப் போராட்டத்தின்போது தொழிலாளராகத் தானே அடையாளப்படுத்த முடியும். அங்கு நாம் தமிழ்த் தேசிய மக்களே, தொழிலாளர் அல்ல என்று கூறுவது எப்படி சரியில்லையோ, அப்படித்தான் மேலே சொல்லப்படுவதும். இவற்றை மனதில் கொண்டுதான் தமிழர் / அல்லாதோர்; ஆரியர் / திராவிடர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் விடுதலை என்று வருகிறபோது, “தமிழ்நாடு தமிழருக்கே” என ‘தமிழர்’ அடையாளத்தை முன் வைத்த பெரியார், சமூக விடுதலை, பண்பாட்டு விடுதலை என்று வருகிறபோது அடிமைப்படுத்தும் ஆரியப் (பார்ப்பன) பண்பாட்டில் அல்லலுறும் அனைத்து பார்ப்பனரல்லாத மக்களை மீட்க ஆரியரின் எதிர் அடையாளமாக ‘திராவிடர்’ என்ற அடையாளத்தை முன் வைத்தார்.

‘திராவிடர்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல என்பதை அறிந்தே பெரியார் அச்சொல்லைப் பயன்படுத்தினாரே அன்றி அறியாமல் அல்ல. ஒரு சொல்லுக்கு சமுதாயம் புரிந்து கொண்டுள்ள பொருளை மனதில் கொண்டு அதைப் பயன்படுத்தினவரேயன்றி, ‘அகராதி’யோ சங்க நூல்களையோ புரட்டிப் பொருள் பார்த்து அல்ல. ‘சமூக நீதி’ என்பது தமிழல்ல என்றாலும் அச்சொல்தான் புழக்கத்தில் உள்ளதே தவிர ‘குமுக நயன்மை’ என்ற தமிழ்ச் சொல்லை யாரும் பயன்படுத்துவதில்லையே! சொல்லுக்குள் நுழைந்து கொண்டு விளையாடும் வீண் வேலைகள் எப்போதும் பெரியாரிடம் இருந்தது இல்லை.

பல வேளைகளில் ஒரு கேள்வி திரும்பத் திரும்ப எழுப்பப்படுகிறது. திராவிடர் என்று தமிழர்களில் சிலர்தான் கூறுகிறார்களேயொழிய தெலுங்கரோ, கன்னடரோ, மலையாளியோ அவ்வாறு தன்னைக் கூறிக் கொள்வதில்லையே என்பதே அது.

தமிழர் என்பதை சரியாக உச்சரிக்கத் தெரியாத / முடியாத வடமொழியாளர்களால் உண்டாக்கப்பட்டதே திராவிடர் என்ற சொல் என்று கூறுகிறார்கள். 'படி' என்பதை 'பிரதி' எனவும், 'மெதுவாக' என்பதை 'மிருதுவாக' எனவும், 'மதங்கம்' என்பதை 'மிருதங்கம்' எனவும் உச்சரித்ததைப் போன்றே 'தமிழர்' என்பது 'திரமிளர்' என்று விளக்கப்படுகிறது. அவ்வாறாயின், 'திராவிடர்' என்பது 'தமிழர்' என்பதன் திரிந்த வடிவமே. தமிழர் என்ற சொல்லின் திரிந்த வடிவத்தை எப்படி தமிழரல்லாத பிறமொழியினர் தம்மைக் குறிக்கப் பயன்படுத்துவர் என்று நாம் எதிர்பார்க்க முடியும்? இருப்பினும் ஆந்திராவில்தான் திராவிட மொழிகளின் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. மைசூரில் இயங்கும் மொழிகள் ஆய்வு மையம் திராவிட மொழிகளை ஆய்வு செய்வதாகத்தான் அறிவித்துக் கொள்கிறது.

இது ஒருபுறம் இருக்க, பெரியார், திராவிடர் என்ற சொல்லை பார்ப்பனரல்லாத அனைவரையும் - பார்ப்பனர் ஆரியப் பண்பாட்டால் இழிவுபடுத்தப்பட்டு, அடிமைப்பட்டுக் கிடக்கிற அனைவரையும் - குறிப்பதற்கும், ஆரியத்துக்கு எதிராக அணி திரட்டுவதற்கும் அடையாளச் சொல்லாய் பயன்படுத்தினாரே அன்றி சகோதர மொழிகளைப் பேசுகிற தெலுங்கர், கன்னடர், மலையாளிகளோடு இணைவதற்கல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ‘திராவிடர்’ என்ற சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும்? ‘தமிழர்’ என்று சொன்னால் போதாதா என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. திராவிடர் என்றால் பார்ப்பான் நுழைய மாட்டான் என்று கூறுகிறீர்களே, திராவிட இயக்கமான அ.தி.மு.க.வில் ஆரிய (பார்ப்பன)ப் பெண் தானே தலைவராக உள்ளார் என்றும் பேசப்பட்டு வருகிறது. மருத்துவர் இராமதாஸ் போன்றவர்கள் திராவிடர் என்று சொல்லைப் பயன்படுத்தவில்லையே. அதைப் பயன்படுத்தாமலேயே பா.ம.க.வில் பார்ப்பனர்கள் இல்லையே என்ற இன்னொரு வாதமும் வைக்கின்றார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. போன்றவை திராவிடர் இயக்கங்கள் இல்லை. அவை திராவிட இயக்கங்கள் மட்டுமே. ஆரிய எதிர்ப்புச் சொல்லான மக்கள் கூட்டத்தைக் குறிக்கும் திராவிடர் என்பதை கைவிட்டு விட்டு மண்ணை, நிலப் பகுதியைக் குறிக்கும் ‘திராவிடம்’ என்ற வடநாட்டு எதிர்ப்புச் சொல்லால் குறிக்கப்படும் கட்சிகள் அவை.

பாட்டாளி மக்கள் கட்சியில் பார்ப்பான் என்ற இரத்தமும் சதையுமாய் உள்ள பார்ப்பன மாந்தர்கள் உள் நுழையவில்லை என்பதுகூட உண்மையாய் இருக்கலாம். ஆனால், சாதியம் என்ற பார்ப்பனர் கருத்தியலில் ஊன்றி நிற்கும் கட்சியாகத்தானே அது உள்ளது.

திராவிடர் என்ற சொல், பார்ப்பன - ஆரியப் பண்பாட்டின் எதிர்க் குறியீட்டுச் சொல் மட்டுமல்ல, பார்ப்பன - ஆரியப் பண்பாட்டுக்கு எதிராக - ஆரிய, சாதிய, இந்தியத்தின் அனைத்து வகை ஆதிக்கங்களுக்கு எதிராக - போராடி, போராடி அவற்றிலிருந்து விடுபடவும் அணி திரட்டலுக்குமான சொல்லாகும்.

திராவிடர் என்பது தமிழர் என்ற சொல்லின் திரிந்த வடிவம் என்ற சொல்லாராய்ச்சியோடு நிறுத்திக் கொள்பவர்களிடம் நமக்கு ஒரு கேள்வி உள்ளது. மொழியடிப்படையில் பார்ப்பனரை நம்மவரே என்ற கருதச் செய்யும் போக்கு அவ்வாதத்துள் புதைந்து கிடப்பது உங்களுக்குப் புரியவில்லையா? அல்லது தெரிந்தும் யாரோ சில பார்ப்பனர் நட்புக்காக - தயவுக்காக அதை மறைக்கிறீர்களா?

முதலாவதாக, கருப்பாயி, கருத்தம்மா என்ற தமிழ்ச் சொற்களின் வடமொழி சொற்களான சியாமளா, நீலா என்ற பெயர்களையும், கார் வண்ணன், இருளப்பன் என்று பொருள்படும் சியாமள வர்ணன், கிருஷ்ணன் என்ற பெயர்களையும் தயக்கமில்லாமல் தங்களைக் குறிக்கும் பெயர்ச் சொற்களாக பயன்படுத்தும் பார்ப்பனர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இதேபோல் தமிழர் என்ற சொல்லின் வடமொழி சொல்லாக மட்டுமே உங்களால் கூறப்படும் திராவிடர் என்ற சொல்லால், தன்னை அடையாளப்படுத்த முன் வரும் ஒரு பார்ப்பனரையாவது உங்களால் காட்ட முடியுமா? தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் பேசும் பார்ப்பனர்கள்கூட வேண்டாம், தமிழின் திரிந்த வடிவங்களான தெலுங்கு, கன்னட மொழி பேசும் ஒரு பார்ப்பனராவது தமிழின் திரிந்த வடிவமான திராவிடர் என்ற சொல்லால் தன்னைக் குறிப்பிட ஒப்புக் கொள்வாரா? எனவேதான் நாம் வீழ்த்த விரும்பும் பண்பாட்டு ஆதிக்கமான பார்ப்பனியத்தை எதிர்க்க ‘திராவிடர்’ என்ற எதிர் அடையாளத்தை ஏற்றாக வேண்டும் என்பதையாவது உணர்கிறீர்களா? இல்லையா?

மேலும் - 'பார்ப்பனியத்தைக் கைவிட்டுவிட்ட பார்ப்பனர்களைக்கூட பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கங்களில் சேர்த்துக் கொள்ளவே கூடாது என்ற இனவாதம், சாதிய வாதம் புரிகிறீர்கள்' என்ற கேள்வி எழுப்புபவர்களிடமும் எமக்கொரு கேள்வி இருக்கிறது.

பவுத்தம் போன்ற பார்ப்பன எதிர்ப்பு நெறிகளைக் கூட உள் நுழைந்து சீர்குலைத்த பார்ப்பனர்களைப் பற்றிய வரலாற்றுப் புரிதலால் வந்த எச்சரிக்கை உணர்வு ஒரு காரணம்.

பல்லைப் பிடுங்கி விட்டாவது பாம்பை படுக்கையில் போட்டு கொஞ்ச வேண்டும் என்ற ஆசை ஏனோ என்பார் குத்தூசி குருசாமி.

பார்ப்பனியம் கொடுமையானது - எதிர்க்கப்பட வேண்டியது - போராடி வீழ்த்தப்பட வேண்டியது என்ற புரிதலுக்கு வந்து சேர்ந்துவிட்ட பார்ப்பனர்கள் சிலரோ, பலரோ தமக்குள் அணி திரண்டு தம்மின மக்களான பார்ப்பனர்களிடம் கேள்வி கேட்டதே இல்லையே, ஏன்? வரலாற்றில் அப்படிப்பட்ட ஒரு பதிவே இல்லையே, ஏன்? அது தற்செயலானது என நம்புகிறீர்களா?

பார்ப்பனிய எதிர்ப்போடு, பிறரால் கட்டப்பட்டுள்ள அமைப்புகளில் வேண்டுமானால் தம்மை இணைத்துக் கொண்டு, அதுவும் அடிப்படை உறுப்பினராக அல்ல, தலைமைப் பொறுப்புகளில் மட்டும் இணைத்துக் கொள்கிறவர்களும், மக்களிடம் சென்று பணியாற்ற அல்ல, தம் அமைப்பில் உள்ளோரிடம் அதிகாரம் செய்கிற இடங்களில் மட்டுமே தம்மைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளவர்களும், தம்மால் கொடுமை என்று கருதப்படும் பார்ப்பனியத்தை அதன் ஊற்றுக் கண்ணான பார்ப்பனர்களைத் திருத்த வேண்டும், திருத்தி அவர்களையும் பிறரை மதிக்கிற, சமத்துவத்தை ஏற்கிற மனிதர்களாக மாற்ற ஓர் இயக்கம் கட்ட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடாதது ஏன்? பார்ப்பனரல்லா கரையான்கள் கட்டி எழுப்பியுள்ள புற்றுகளில் ஏன் நுழைந்து கொள்ள வேண்டும்? என்பதே எமது கேள்வி.

தமிழ்நாட்டை ஆள இன்னொரு நாட்டான் கூடாது என்ற பொருளில் தான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதில் உள்ள 'தமிழருக்கே' என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர அதையும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பவர்களை மட்டும் குறிக்க அல்ல.

மாகாணமானாலும், மாநிலமானாலும் அதன் எல்லைக்கோட்டோடு ஒரு மொழி மட்டுமே பேசுவோர் என கறாராகப் பிரித்துவிட முடியாது. எல்லைப் புறங்களில் பிற மொழி / இரு மொழிகள் அல்லது மும்மொழிகள் பேசுவோர்கூட இருக்க முடியும். அவர்களில் பலர் பல கட்டங்களில் வணிகத்துக்காக, ஆட்சியாளர்களிடம் பணியாற்ற, பிழைப்பு தேடிக் கூட உள் பகுதிகளிலும் வாழ்ந்து வரலாம். எந்த வகைகளில் எல்லைப் பிரிவினைகள் நடந்தாலும் பிரிவினை நடக்கும் நேரத்தில் பிரிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வருபவர்களை அப்பகுதியினராக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஒவ்வொரு பிரிவினையின்போதும் பிரிவினையின் முதன்மை நோக்கத்துக்கு வேறுபட்டு இருப்பவர்களைக் குடிபெயரச் சொல்ல முடியாது.

பாகிஸ்தான் இந்தியாவாக இணைந்திருந்தபோது ஆங்காங்கே வாழ்ந்தவர்கள் பிரிவினையின் முதன்மை நோக்கமாக மத வழித் தேச பிரிவினை என்று வந்தபோது, அடுத்தவர்களைக் குடி பெயரச் செய்யப்பட்டமை இன்றளவும் வரலாற்றுப் பேரவலமாகவும், பெருங்கொடுமையாகவுமே கருதப்படுகிறது.

பாகிஸ்தானமும், வங்க தேசமும் ஒன்றாக இருந்தபோது அரசுப் பணிகளுக்காக, வணிகத்துக்காக என மற்ற பகுதிக்குச் சென்று வீடு, நிலம், தொழிற்சாலைகள் என வாழ்ந்தவர்கள் பிரிவினை ஏற்பட்டவுடன் அந்தந்த பகுதிக்குத் திரும்ப வேண்டும் என்று சொல்லப்படவில்லை.

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் எனப் பிரிந்தபோதும், அதற்கு முன்னதாக ஆந்திரம் பிரிந்தபோதும்கூட, தமிழ்நாட்டிலே தங்கிவிட்ட பிற மொழியினரைப் போலவே கேரளத்தில் பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் வாழும் தமிழர்களும், கர்நாடகத்தில் கோலார், பெங்களூர், இரியூர் பகுதிகளில் வாழும் தமிழர்களும், ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டத் தமிழர்களும் தொடர்ந்து அங்கங்கே தான் வாழ்ந்து வருகின்றனர். காரணம், வெறும் மனிதர்கள் என்றால் குடிபெயர்வதில் சிக்கல் இல்லை. வீடு, நிலம், தொழிற்சாலை என அசையாச் சொத்துக்களோடு உள்ளவர்கள் குடி பெயர்வது அவ்வளவு எளிது அல்ல.

மேலும், நாம் தமிழர் கட்சி ஆவணத்தின் பக்கம் 34 இல் ‘உறுப்பினர் தகுதி’யில்.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தால் அல்லது தமிழை வாழ்வியல் மொழியாக ஏற்றுத் தாய்மொழிக்குத் திரும்பியிருந்தால்” தங்கள் கட்சியில் உறுப்பினராகச் சேரத் தகுதியுடையவர் என்று கூறுகிறது. அப்படியானால், தமிழ்நாட்டில் பிறமொழியினர் அல்லது நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் கூறியுள்ளபடி, ‘திராவிடர்’ எனக் குறிப்பிடுவது வேறு யாரை என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.

இந்த இடத்தில் மற்றொன்றையும் கருதிப் பார்க்க வேண்டும். சங்க காலம் முதல் பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர் என எல்லா தமிழ் மன்னர்களும் பல நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்றுள்ளனர்; பல நாடுகளை வென்றும் உள்ளனர். ஆனால், நம் தமிழ் மன்னர்கள் அனைவரும் தோற்கடித்த மன்னரின் மணிமுடி (மகுடம்) தன் காலடியில் விழுந்தால் போதும்; அல்லது மன்னனின் பிறந்த நாளின்போது வெற்றிப் பெற்ற தமிழ் மன்னன் மட்டுமே மணிமுடியோடு அரசவையில் வீற்றிருக்க, வெல்லப்பட்ட நாடுகளின் மன்னர்கள் கையுறையாக, கப்பமாக சில பொற்காசுகளை அளித்தால் போதும் என்று மட்டுமே மனநிறைவடைந்துள்ளனர். பல வேளைகளில், பகை மன்னர் பெண்டிரைச் சிறை எடுப்பதும், பகை மன்னர் அரண்மனைகளை இடித்துத் தள்ளுவதும், சில வேளைகளில் பகை அரச குலப் பெண்களை ஏரில் போட்டு எருக்கு போன்றவற்றை விதைத்தலும் செய்துள்ளனர்.

ஆனால், தமிழரல்லாத மன்னர்கள் பிற நாடுகளை வென்றவுடன் நம்பகமான தமது ஆட்களை அழைத்து வந்து தனது ஆட்சிக்குத் துணையாக வரி தண்டல் செய்ய, படைத் தலைமையேற்க, பகுதிகள், பாளையங்களில் நிர்வாகத் தலைமையேற்க என குடியேற்றங்களை வென்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ளனர். எனவே, தமிழ் மன்னர்கள் வென்றாலும், வென்ற நாடுகளில் தமது மக்களைக் குடியேற்றவில்லை. ஆனால் வென்றவுடன் பிற நாட்டு மன்னர்கள், தமது மக்களை குடியேற்றியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியினரின் வளமான வாழ்வுக்கும், அதே நேரத்தில், தம் வாழ்க்கைப் பாட்டுக்காக பிற மொழிப் பகுதிகளில் தமிழர்கள் கூலிகளாய் சென்றமர்ந்ததற்கும் காரணம் வர்க்கப் பிரச்சினையா? மொழிப் பிரச்சினையா? என்பதை கருதிப் பார்க்க வேண்டும்.

ஆக, பிறமொழியினரின் வளமான நிலைக்குக் காரணம் அவர்களது மன்னர் அளித்த ஆட்சிப் பணியில் பங்கு என்பதன் தொடர்ச்சியே அன்றி, அவர்கள் பேசும் மொழியால் அல்ல. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் மணியக்காரர், கணக்குப் பிள்ளை (முன்சிப், கர்ணம்)களாக இருந்தவர்களின் வழிமுறையினர்கூட நிலபுலன்களோடு மிக வளமாக வாழ்வதைக் கிராமங்களில் காண முடியும். அது அவர்களின் அரசுப் பணி அதிகாரத்தால் வந்ததே தவிர, அவர்கள் பேசும் மொழியால் அல்லவே!

ஆக, அவர்களது ஆதிக்கம் வர்க்க ஆதிக்கமாகக் கொண்டு எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றே தவிர, பிற மொழியினர் ஆதிக்கமாக எடுத்துக் கொள்வது பிழையானதாகும்.

(“திராவிடர் கழகம்” என்ற பெயர் சூட்டும் முடிவை பெரியார் ஒரே நாளில் எடுத்தார் என்ற வாதம் சரியா? -இது குறித்து அடுத்த இதழில் எழுதுவோம்.)

Comments

36 comments

36
பரத்
அய்யா கொளத்தூர் மணி அவர்களே,

தமிழன் என்று கூறும் போது, ஒருக்காலும் அதற்குள் பார்ப்பனர் வரமுடியாது. ஏனெனில், தமிழின் முதன்மைப் பகையே ஆரியம் தான். ஆனால், தமிழை மறைத்து விட்டு நீங்கள் திராவிடர் என திரிபு செய்வதைத் தானே இங்கு எல்லோரும் விமர்சனம் செய்கிறார்கள். நீங்களே தங்களது கட்டுரையில், அறிந்தோ அறியாமலோ செயலலிதா பற்றிக் குறிப்பிடும் போது 'ஆரிய' என்று கூறிவிட்டு, பக்கத்திலேயே அடைப்புக்குறிக்குள் 'பார்ப்பன' என்றும் எழுதுகிறீர்கள். அப்படியெனில், ஆரியர் வேறல்ல பார்ப்பனர் வேறல்ல என்பதை நீங்கள் முதலில் ஏற்றுக் கொள்கிறீர்களா?

தமிழன் என்று கூறும் போது, ஒருக்காலும் அதற்குள் பார்ப்பனர் வரமுடியாது. ஏனெனில், தமிழின் முதன்மைப் பகையே ஆரியம் தான். ஆனால், தமிழை மறைத்து விட்டு நீங்கள் திராவிடர் என திரிபு செய்வதால் தான் இங்கு ஒரு ஆரியப் பாப்பாத்தி ஆட்சிக்கு வர முடிகிறது.

////////////////////// எனவே நாம் தமிழ்த் தேசிய மக்களே; திராவிடர் அல்லர் என்பது சரியானதல்ல. ஒரே நேரத்தில் ஒரே நபருக்கு இரண்டு அடையாளங்கள் இருக்க முடியும். //////////////////////

உங்கள் கூற்றுப்படி ஒருவருக்கு இரண்டு அடையாளங்கள் இருக்க முடியும் எனில், ஒரு தமிழ்த் தொழிலாளி முதலாளியால் ஒடுக்கப்படும் போது தொழிலாளியாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல், இனரீதியாக ஒடுக்கப்படும் போது தமிழ் இனத்தவனாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், நீங்களோ இல்லாத உலகில் எங்குமே இல்லாத வகையில், 'திராவிடம்' என்ற இனத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்கிறீரே அது நியாயமா?

////////////////////// ஒரு சொல்லுக்கு சமுதாயம் புரிந்து கொண்டுள்ள பொருளை மனதில் கொண்டு அதைப் பயன்படுத்தினவரேயன்றி, ‘அகராதி’யோ சங்க நூல்களையோ புரட்டிப் பொருள் பார்த்து அல்ல.//////////////////////

'ஒரு சொல்லுக்கு சமுதாயம் புரிந்து கொண்டுள்ள பொருளை மனதில் கொண்டு அதைப் பெரியார் பயன்படுத்தினார்'என்கிற தங்கள் கூற்றுப்படிப் பார்த்தால்,
இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் திராவிடம் என்றால் பார்ப்பனரல்லாத தமிழர்கள் என்று தான் புரிந்து கொண்டுள்ளார்கள் என உங்களால் உறுதியாக கூறமுடியுமா? திராவிடம் என்றால் அது கேரள, கன்னட, ஆந்திர மாநிலங்களை இணைத்தது தான் என்று தான் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். 'திராவிடம் என்ற சொல்லுக்கு சமுதாயம் புரிந்து கொண்டுள்ள பொருளை மனதில் கொண்டு' நீங்கள் ஏன் அச்சொல் பயன்படுத்துவதை நிறுத்தக் கூடாது?

////////////////////// தி.மு.க., அ.தி.மு.க. போன்றவை திராவிடர் இயக்கங்கள் இல்லை. அவை திராவிட இயக்கங்கள் மட்டுமே. ஆரிய எதிர்ப்புச் சொல்லான மக்கள் கூட்டத்தைக் குறிக்கும் திராவிடர் என்பதை கைவிட்டு விட்டு மண்ணை, நிலப் பகுதியைக் குறிக்கும் ‘திராவிடம்’ என்ற வடநாட்டு எதிர்ப்புச் சொல்லால் குறிக்கப்படும் கட்சிகள் அவை. //////////////////////

முதலில், திராவிடர் என்றால் அதற்குள் பார்ப்பனர் வரமாட்டார் என்றீர்கள். அப்புறம், மண்ணை, நிலப்பகுதியைக் குறிப்பதும் திராவிடம் என்கிறீர்கள். உங்கள் கூற்றுப்படியேப் பார்த்தால், இந்தக் கட்டுரைக்குக் கூட, 'திராவிடர்' எனத் தொடங்கி தான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், 'திராவிட' என தலைப்பிட்டுள்ளீர்கள். ஏன் இந்தக் குழப்பங்கள்?

////////////////////// திராவிடர் என்பது தமிழர் என்ற சொல்லின் திரிந்த வடிவம் என்ற சொல்லாராய்ச்சியோடு நிறுத்திக் கொள்பவர்களிடம் நமக்கு ஒரு கேள்வி உள்ளது. மொழியடிப்படையில் பார்ப்பனரை நம்மவரே என்ற கருதச் செய்யும் போக்கு அவ்வாதத்துள் புதைந்து கிடப்பது உங்களுக்குப் புரியவில்லையா? அல்லது தெரிந்தும் யாரோ சில பார்ப்பனர் நட்புக்காக - தயவுக்காக அதை மறைக்கிறீர்களா? //////////////////////

திராவிடர் என்ற சொல் தமிழரைக் குறிப்பதே என நிறுவுவிட்டால், தமிழுக்கு முதன்மைப் பகையான ஆரியப்பார்ப்பான் எப்படி தமிழனாவான்? அவனை 'தமிழன்' என்று நீங்களே ஏன் அவசரப்பட்டு அடிக்கடி வகைப்படுத்துகிறீர்?

////////////////////// திராவிடர் என்ற சொல்லால், தன்னை அடையாளப்படுத்த முன் வரும் ஒரு பார்ப்பனரையாவது உங்களால் காட்ட முடியுமா? //////////////////////

ஏன் காட்ட முடியாது? ஓராயிரம் பேரை காட்டாலாம்.

ஆதிசங்கரர் திருஞானசம்பந்தர் என்ற ஆரியப்பார்ப்பனரை 'ஆரிய சிசு' அல்லது 'பார்ப்பன சிசு' என்றல்லவா அழைத்திருக்க வேண்டும்? ஆனால், திருஞானசம்பந்தர் என்ற பார்ப்பானை 'திராவிட சிசு' என்று அவர் அழைத்தது ஏன்? உங்களுக்கு இந்த வரலாறெல்லாம் தெரிந்தும் ஏன் கண்மூடிக் கொள்கின்றீர்?

கிரிக்கெட் வீரர் இராகுல் திராவிட்டின் பெயரிலுள்ள 'திராவிட்' என்ற சொல், அவரது தந்தை தமிழ்நாட்டின் தஞ்சையைச் சேர்ந்த பார்ப்பனர் என்பதால் வந்ததே. தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்குச் சென்ற பல பார்ப்பனர்கள் 'திராவிட்' என்ற பெயரைத் தாங்கியுள்ளனர். ஆரியப் பார்ப்பனர்கள் தான் 'திராவிட' என தங்கள் பெயரில் இணைத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர் என்பதை பின்வரும் இணைப்புகள் அம்பலப்படுத்துகின்றன.

சுட்டி ௧:
ஹ்ட்ட்ப்://ட.நிகிபெடிஅ.ஒர்க்/நிகி/%ஏ0%ஆஏ%ஆ4%ஏ0%ஆஏ%ப்ஃப்%ஏ0%ஆஏ%ப்0%ஏ0%ஆஏ%பே%ஏ0%ஆஏ%ப்5%ஏ0%ஆஏ%ப்ஃப்%ஏ0%ஆஏ%9ஃப்%ஏ0%ஆஃப்%8ட்_(%ஏ0%ஆஏ%ஆஆ%ஏ0%ஆஃப்%86%ஏ0%ஆஏ%ஆஃப்%ஏ0%ஆஏ%ப்0%ஏ0%ஆஃப்%8ட்)

சுட்டி௨:
திராவிட என்ற சொல்லை சாதியாக இணைத்துக் கொண்டது பார்ப்பனர்களே என்பதை விளக்கும் சுட்டி.
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.கேட்ரு.சொம்/இன்டெ௯.ப்ஹ்ப்?ஒப்டிஒன்=சொம்_சொன்டென்ட்&விஎந்=அர்டிச்லெ&இட்=9701:---௫&சடிட்=1137:10&ஈடெமிட்=402

சுட்டி௩:
பஞ்ச திராவிடர்கள் எனப்படும் பார்ப்பன வகுப்பினரைப் பற்றியது இது.
ஹ்ட்ட்ப்://என்.நிகிபெடிஅ.ஒர்க்/நிகி/ப்ரஹ்மின்#பன்ச-ட்ரவிட

////////////////////// 'பார்ப்பனியத்தைக் கைவிட்டுவிட்ட பார்ப்பனர்களைக்கூட பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கங்களில் சேர்த்துக் கொள்ளவே கூடாது என்ற இனவாதம், சாதிய வாதம் புரிகிறீர்கள்' என்ற கேள்வி எழுப்புபவர்களிடமும் எமக்கொரு கேள்வி இருக்கிறது.//////////////////////

கன்னட மொழி பேசும் அருந்ததியர், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் நாயக்கர், நாயுடு சமூகத்தவர்கள் என பலரையும் மொழி மற்றும் பிறப்பு அடிப்படையில் தமிழர்களாக நீங்கள் இணைத்துக் கொள்ள மறுக்கிறீர் என தமிழ்த்தேசியர்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். நியாயம் தான். பிறப்பு அடிப்படையில் ஒருவரை தமிழ் இனத்தின் பகுதியாக கருதாத மனப்போக்கு தவறே. அதை குணா மற்றும் அவர் வழியில் நிற்கும் நாம் தமிழர் போன்ற வடுகத் தமிழ்த் தேசியம் பேசுகின்ற அமைப்புகளே அவ்வாறு தவறு செய்கின்றன.

ஆனால், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழர் எழுச்சி இயக்கம் என பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் இப்போக்கை ஏற்று நடப்பதில்லை. அச்சமூக மக்களை தமிழர்களாகவே கருதுகின்றன.

ஆனால், இவர்களை எல்லாம் குற்றம் சுமத்தும் நீங்கள், பிறப்பு அடிப்படையில் பார்ப்பனர் என்பதால் பார்ப்பனியத்தைக் கைவிட்டப் பார்ப்பனரை இன்னும் சந்தேகப்படுகிறோம் என்று புளுகுவது எந்த விதத்தில் நியாயம்?

அப்படியெனில், மனித உரிமைப் போராளிகள் நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ணய்யர், பாலகோபால்(ஆந்திரம்) போன்ற எண்ணற்ற பார்ப்பனியத்தைக் கைவிட்டப் பார்ப்பனர்களை நீங்கள் இன்னும் சந்தேகப்பட்டியில் வைத்திருக்கிறீர்களா? பெ.தி.க.வினருக்கு, உற்ற நண்பரான எழுத்தாளர் வ.கீதா, இன்னும் உங்கள் சந்தேகப்பட்டியிலில் தான் இருக்கிறாரா? இதை அவர்களிடம தெரிவித்திருக்கிறீர்களா?

தமிழையும், தமிழ்ச் சமூகத்தையும் ஏற்றுக் கொண்டு பார்ப்பனியத்தைக் கைவிட்டவர் யாராயினும், எச்சாதியில் பிறந்திருப்பினும் அவரை ஏற்றுக் கொள்வது தானே சனநாயக நடைமுறை! 'அவரை பிறப்பு அடிப்படையில் உற்று நோக்கித் தள்ளும் மனுநீதிப் பார்வையை கைவிட மாட்டோம்' என்பது அறிவுடைமை தானா?
arasan
ஆழமான, அறிவார்ந்த கருத்துக்கள், வைர வரிகளாக கோர்க்கப்பட்டுள்ளது. கீற்றுக்கு பாரட்டுக்கள்..
Murugan
நல்ல கட்டுரை.. இத நாம் தமிழர் கட்சி புரியாம இல்ல..they do understand that, but they want make poliltics about it.
My worry is all these srilankan tamilian who are living in abroad they should understand about this.

Now the question is - is it possible to make them understand?
தமிழன் 100% :
பார்பனர்,பார்பனர் அல்லாதோர் என்று பிரித்து நாங்கள் பார்பனர் அல்லாதோருக்கான அமைப்பு என்று பெரியார் தி.க அறிவித்துவிடலாம்.திராவிட/திராவிடம்/திராவிடர் என்பது தேவையற்ற ஒன்று.தமிழை தாய்மொழியாகக் கொண்ட பார்பனர்களையும் எதிர்க்கிறோம்,தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத பார்பனர் அல்லாதோரை வரவேற்கிறோம்,அவர்கள் தமிழ் நாட்டிற்கு தலைமை ஏற்றாலும் ஆதரிக்கிறோம் என்று அறிவித்துவிடலாம்.
இதை நேரடியாகச் சொல்லாமல் எதற்கு இத்தனை சுற்றி வளைத்து எழுத வேண்டும்.பார்பனர் அல்லாதோர் யாராக இருந்தாலும் என்ன மொழி பேசினாலும் எங்களுக்கு அதில் எந்தவித பிரச்சினையும் இல்லை அவர்களை தமிழ்நாட்டில்
பார்பனர் அல்லாதோரின் பகுதியாக பார்க்கிறோம்,மொழி ரீதியாக பிரித்து பார்க்க மாட்டோம் என்று எழுத வேண்டியதுதானே.

‘எட்டு மணி நேர வேலை என்ற சட்டப்பூர்வ உரிமையைப் பறித்து பத்துமணி நேரத்துக்கு மேலாகக்கூட வேலை வாங்கும் பன்னாட்டு நிறுவனங்கள்,’
ஏன் பார்பனர் அல்லாதோர் நடத்தும் எல்லா நிறுவனங்களும் எட்டு மணி நேர வேலை என்பதை சரியாகக் கடைப்பிடிக்கின்றனவா.கொத்தடிமைகளாக பார்பனர் அல்லாதோர் பிற பார்பனர் அல்லாதோரை நடத்தினால் அது பெரியார் தி.கவிற்கு ஒரு பொருட்டே அல்ல. இங்கு யாரை யார் ஏய்க்கிறார்கள், சுரண்டுகிறார்கள்,யார் உழைப்பில் யார் கொழிக்கிறார்கள் என்ற கேள்விகள் எழக்கூடாது என்பதற்காக பார்பனர் பார்பனர் என்ற காரணியை முன்வைத்து பார்பனர் அல்லாதோர் பிறரை சுரண்டுவதை எதிர்த்து ஒன்று திரள்வதை தடுக்கிறீர்கள்.பெரியார் ஏன் வலுவான தொழிற்சங்கத்தை அமைக்கவில்லை,குழந்தைத்
தொழிலாளர் முறையை எதிர்த்து போராடவில்லை, விவசாயத்தொழிலாளர்களை தி.க மூலம் தொழிற்சங்க
அமைப்பாக ஒன்று திரட்டவில்லை.பார்பனர்களை திட்டி
பிற சுரண்டல்களுக்கு எதிரான மக்கள் கோபத்தை மடை மாற்றிவிடும் வேலையை செய்துகொண்டு பன்னாட்டு நிறுவனங்களை குறை சொல்ல வேண்டியது.அவற்றிற்கு சாதகமாக செயல்பட்ட ஆ.ராசா போன்றவர்களை விமர்சிக்காமல் எதற்கெடுத்தாலும் பார்பபனர்,ஆரியம்,
இந்திய தேசியம் என்று பேசுவதும்,எழுதுவம்தானே கொளத்தூர் மணியும்,வீரமணியும் செய்யும் மக்கள் நலப்பணிகள்.
rajan
மேலும் சாதீயம் குறித்த கட்டுரை 1_15 ஜூன் தமிழர் கண்ணோட்டத்தில்
இருப்பதையும் படிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
chandran
//தி.மு.க., அ.தி.மு.க. போன்றவை திராவிடர் இயக்கங்கள் இல்லை. அவை திராவிட இயக்கங்கள் மட்டுமே. ஆரிய எதிர்ப்புச் சொல்லான மக்கள் கூட்டத்தைக் குறிக்கும் திராவிடர் என்பதை கைவிட்டு விட்டு மண்ணை, நிலப் பகுதியைக் குறிக்கும் ‘திராவிடம்’ என்ற வடநாட்டு எதிர்ப்புச் சொல்லால் குறிக்கப்படும் கட்சிகள் அவை.//// - தி.மு.க., அ.தி.மு.க.தே.மு,தி.க., ம.தி.மு.க., லட்ச்சிய் தி.மு.க இவை போலியான திராவிட இயக்கங்கள் என்றால் அப்ப எது தான் உன்மையான திராவிட இயக்கங்கள்...
arasan
"அய்யா கொளத்தூர் மணி அவர்களே, தமிழன் என்று கூறும் போது, ஒருக்காலும் அதற்குள் பார்ப்பனர் வரமுடியாது. ஏனெனில், தமிழின் முதன்மைப் பகையே ஆரியம் தான். ஆனால், தமிழை மறைத்து விட்டு நீங்கள் திராவிடர் என திரிபு செய்வதைத் தானே இங்கு எல்லோரும் விமர்சனம் செய்கிறார்கள்."- பரத்

***அப்படி எனில் "தமிழ் தாத்தா"- உ.வே. சாமிநாதய்யர்???

2. "........க் மொழி பேசும் அருந்ததியர், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் நாயக்கர், நாயுடு சமூகத்தவர்கள் என பலரையும் மொழி மற்றும் பிறப்பு அடிப்படையில் தமிழர்களாக நீங்கள் இணைத்துக் கொள்ள மறுக்கிறீர் என தமிழ்த்தேசியர்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். நியாயம் தான். பிறப்பு அடிப்படையில் ஒருவரை தமிழ் இனத்தின் பகுதியாக கருதாத மனப்போக்கு தவறே" -- பரத்

சரி இது என்ன ?

"தமிழையும், தமிழ்ச் சமூகத்தையும் ஏற்றுக் கொண்டு பார்ப்பனியத்தைக் கைவிட்டவர் யாராயினும், எச்சாதியில் பிறந்திருப்பினும் அவரை ஏற்றுக் கொள்வது தானே சனநாயக நடைமுறை! 'அவரை பிறப்பு அடிப்படையில் உற்று நோக்கித் தள்ளும் மனுநீதிப் பார்வையை கைவிட மாட்டோம்' என்பது அறிவுடைமை தானா? "- பரத்..
arasan
"எதற்கெடுத்தாலும் பார்பபனர்,ஆரியம், இந்திய தேசியம் என்று பேசுவதும்,எழுதுவம்தானே கொளத்தூர் மணியும்,வீரமணியும் செய்யும் மக்கள் நலப்பணிகள்" - தமிழன் 100% :-)...

அவ்ர்கள் கிடக்கட்டும்... திரு.தமிழன் இந்த " ஏன் வலுவான தொழிற்சங்கத்தை அமைக்கவில்லை,குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்து போராடவில்லை, விவசாயத்தொழிலாளர்களை தொழிற்சங்க அமைப்பாக ஒன்று திரட்டவில்ல???"....... செய்துவிட்டு வந்து பேசினால் நன்று.....
பெரியார் குயில்
அற்புதமான கட்டுரை!

கவனியுங்கள் பெரியாரின் யுகப்புரட்சியை...!

திருப்புர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் பார்ப்பான் சாக்கடை அள்ளும் வேலைக்கு சேர்ந்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட சாக்கடை அள்ளும் வேலை இன்று இடஒதுக்கீடு மூலமாகவும், கல்வி மறுமலர்ச்சி மூலமாகவும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சி காரணமாக இந்த நிலை உருவாகி இருக்கிறது.

இதை தமிழ் தேசிய புரட்சியாளர்கள் கவனத்தில் கொள்வதோடு, தமிழ் தேசியம் என்பது பெரியாரியத்தை பத்தோடு ஒன்று பதினென்றாக கருதாமல், பெரியாரியத்தின் ஆழமான சிந்தனைகளை தமிழக சுழலில் எப்படி இன்றைய நிலைக்கு ஏற்ப கடைப்பிடிப்பது என ஆழயோசியுங்கள்!

வெற்றி உறுதி!
வெல்க பெரியாரியம்!
வளர்க தமிழ்தேசியம்!!
ஜெகதீஸ்வரன்
//தமிழ்நாட்டை ஆள இன்னொரு நாட்டான் கூடாது என்ற பொருளில் தான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதில் உள்ள 'தமிழருக்கே' என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர அதையும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பவர்களை மட்டும் குறிக்க அல்ல.//

--

தமிழ்நாட்டில் குறைந்த அளவில் உள்ள பிராமணர்களை தலைமை தாங்க விடாமல் செய்ய தெலுங்கர்களையும், மலையாளிகளையும், கன்னடர்களையும் இணைத்து தமிழ்நாட்டுக்கு தலைமை தாங்குவதை ஏற்க முடியாது. தமிழை தாய் மொழியாக கொண்டோர் மட்டுமே தமிழ்நாட்டில் தலைவனாக வேண்டும்.

அதற்கு திராவிடத்தினை மறந்து தமிழர்களாக ஒன்று கூடுவதே சிறந்தது.
sathya
தந்தை பெரியாரைக் கூட விமர்சிக்கிறீர்கள். பெரியாரைக் குறித்த விமர்சனம் உங்களைப் பிற்போக்குவாதிகள் என்ற தளத்தில் நிறுத்துகிறது என்பது பற்றி என்ன கூறுகிறீர்கள்.

பெரியாரை விமர்சிப்பதால் ஒருவர் பிற்போக்குவாதியாகிவிடுவார் என்று சொன்னால் அது பெரியாரின் பகுத்தறிவு வாதத்திற்கு உகந்ததாக இருக்காது. பெரியார் பக்தி மார்க்கத்திற்கே உரியதாக இருக்கும். காரல் மார்க்சிலிருந்து பெரியார் வரை அனைவரும் திறனாய்வுக்கு உட்பட்டவர்களே.

பெரியாரின் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்விடுதலை ஆகியவை குறித்த கருத்துகளும் அவற்றிற்காக அவர் நடத்திய போராட்டங்களும் தமிழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறது. அதற்காக அவரை த.தே.பொ.க. பாராட்டுகிறது. ஆனால் இனம், மொழி, தேசியம், தேசம் குறித்த அவரின் கருத்துகள் முழுக்க முழுக்க தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் எதிரானவை. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று அவர் தொடர்ந்து கூறி வந்தது, தமிழைப் புறந்தள்ளிவிட்டு ஆங்கிலத்தைப் படிக்குமாறும் வீட்டில் கூட வேலைக்காரியுடன் ஆங்கிலத்தில் பேசும் நிலை வரவேண்டும் என்றும் பெரியார் கூறிய கருத்துகள் போன்றவை மொழியியல் குறித்த அறிவியலுக்கு எதிரானவை. ஆங்கிலத்தின் மீது அவருக்கு இருந்த மூட நம்பிக்கைக்கான சான்று. ஆரியர்கள் திணித்த திராவிடம் என்ற திரிபுக் கருத்தியலை ஏற்று அவர் பரப்பியது தமிழினத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் இனத்தின் பெயரான தமிழர் என்பதையே மறுக்கவும் மறைக்கவும் பெரியாரின் கருத்துகள் துணை செய்தன. தேசியம் என்பதே பாசிசம் என்று அவர் வரையறுத்தார். அதுவும் சமூக அறிவியல்படி பிழையான கருத்து. தமக்கு மொழிப்பற்றோ, இனப்பற்றோ கிடையாது என்று திரும்பத்திரும்பக் கூறினார். ஆரியத்தை எதிர்த்து இன அரசியல் நடத்திய பெரியாருக்கு தமக்கான ஓர் இன அரசியல் வேண்டாமா? இனப்பற்று இல்லை என்று சொல்வது சரியா? தமிழர் மரபையும் தமிழர் இலக்கியச் செழுமையையும் முற்றிலுமாகப் பெரியார் எதிர்த்தார். இவை போன்ற அவருடைய பிழையான கருத்துகளைத்தான் த.தே.பொ.க. விமர்சிக்கிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல் பெரியார் அளித்த பங்களிப்பை நன்றியோடு ஏற்றுக்கொண்டே இந்த விமர்சனத்தைச் செய்கிறோம்.
பெரியார் குயில்
வ.கீதா, கிருஷ்ணய்யர் இன்னும் பலர் பார்ப்பினீய தன்மை அற்றவர்களாக இருந்தாலும், அவாளுடைய அந்திம்பேள், ஆத்துப்பொண்ணு, அக்கராகர மாமா ஆகியோர் அப்படியேதானே இருக்கிறார்கள். இவர்கள் வருகையை உண்மையான எண்ணத்தோடு முன்புற வாசலில் வரவேற்கலாம். ஆனால், காலப்போக்கில், பின்புறவாசலில் அவர்களின் சொந்தபந்தங்கள் அனைத்தும் உள்ளே நுழைவதை யாராலும் தடுக்கமுடியாது என்பதே காலம் நமக்கு கொடுத்துள்ள பாடம்! பல சந்தர்பபங்களில் அவர்களின் மேலான சிந்தனைகளை நாம் பயன்படுத்த தவறியதும் இல்லை.

காஷ்மீரில் தேள் கொட்டினால் கன்னியாகுமரி பார்ப்பானுக்கு வலிக்கும். சங்கராசாரி ஓடிப்போனபோதும், சொத்து தகராற்றில் கைது செய்யப்பட்டபோதும், கோவணத்தை வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கிய சங்பரிவார் வட்டாரங்கள்! ஈழத்தமிழர்கள் (இந்துக்கள்) கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோது போராட மறுத்தது ஏன்?

ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கை மீது மனித உரிமை மீறல் விசாரணக்கு வாக்களிக்கும் போது, இந்திய இலங்கைக்கு ஆதரவாகத்தான் வாக்களிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அறிக்கை விட்டதை ஏன் ஒரு (தமிழ்)பார்ப்பானும் எதிர்க்கவில்லை?

ஏனெனில் சிங்களனை தன் ஆரியத்தின் ஒருபகுதியாகவே பார்ப்பன பஜ்ரங்தள் கூட்டம் நினைக்கிறது என்பதை எத்தனை தமிழர் அறிவர்!

எத்தனை பாரம்பரிய மிக்க இந்துக்கோவில் ஈழத்தில் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது! ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை! ஏனெனில் ஈழத்தில் பார்ப்பன மேலாண்மை இல்லை! அதுமட்டுமன்று ஆரிய வாரிசு சிங்களம் இடித்தால் தப்பில்லை!

ஆளுக்கு ஆள் அளவுகோல்கள் மாறுவதை தமிழ்தேசியம் உணரவேண்டும்
பெரியார் குயில்
சத்யா! உங்கள் கருத்துகளுக்குள்ளேயே பெரியார் ஒளிந்திருக்கிறார்! கவனியுங்கள்! பெரியாரியம் மனித விடுதலை நோக்கிய பயணத்தில் உள்ளது! அதில் தேசியம் என்பதெல்லாம் மாயையே! ஆகவே, இனவிடுதலை என்பதை பெரியார் கையில் எடுத்தது மக்களுக்கு அறிவு ஊட்டவே! ஆனால், அவர் இலக்கிலிருந்து என்றும் பினவாங்கியதில்லை! பெரியாரியம் பெரிய சப்ஜெட்!
கதிரேசன்
//தமிழ்நாட்டை ஆள இன்னொரு நாட்டான் கூடாது என்ற பொருளில் தான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதில் உள்ள 'தமிழருக்கே' என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர அதையும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பவர்களை மட்டும் குறிக்க அல்ல.///

இதை விட பெரியாருக்கு எதிரான கருத்து இருக்க முடியுமா.வைகோவை கொளத்தூர் மணி ஆதரிக்கட்டும்.அது அவர் விருப்பம்.கொளத்தூர் மணியின் விருப்பம் தமிழ் இனத்தின் விருப்பம் ஆகாது. திராவிடம் என்பதை எதிர்த்தால் அது பெரியாரை எதிர்ப்பது என சண்டைப்போடும் ஆட்களை பாருங்கள்.90 சதவீதம் தெலுங்கர்களாக இருக்கிறார்கள்.புரிந்துக் கொள்ளுங்கள் தமிழர்களே.
arasan
எனக்கு ஒரு செய்தி மட்டும் புரியவேயில்லை..." பெரியார் அளித்த பங்களிப்பை நன்றியோடு(?????) ஏற்றுக்கொண்டே இந்த விமர்சனத்தைச் செய்கிறோம்" என்று சொல்லுகின்ற எல்லா மாபெரும் , பேரியக்க தலை(?)வர்களும் அவர்களின் தமிழ்ச்சமூகத்திற்கு , பெரியாரைவிட என்ன பெரிய பங்களிப்பைச் செய்தார்கள் என்று, பெரியாரை விமர்சனம் செய்ய வந்திருக்கிறார்கள். இவர்களிடம் எத்தனை பேர், "ம்ஹிம் நான் வரமாட்டன், பெரியார் உன்கூட வரக்கூடாது என்று சொல்லிவிட்டார்" என்று வம்பு செய்கிறான். ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழ் நாட்டில் "திராவிடர்" கழகத்தினர் (தி.க, பெரியார் தி,க, தமிழ் நாடு தி,க உட்பட சுமார் 5000 பேர் தான் இருக்கக்கூடும். மீதி 7.5 கோடி தமிழனிடம் உன் கொள்கையை பரப்பு., இயக்கம் கட்டு, ஆய்தம் சேர், படை சமை, புரட்சி செய்..
நாடெங்கும் உள்ள சாதிப்பிரிவை அகற்ற துப்பில்லை.. தமிழன் தனக்குள்ளே சுடுகாடு முதல் கோயில் வரை சாதியால் அடித்துக் கொண்டு சாகிறான். “தமிழ் , தமிழ்த்தேசியம் பேசுகின்ற பலருக்கு” தன் சாதியை பெயருக்கு பின்னால் கூட விட மனமில்லை. எத்தனை “தமிழ்க் கம்பெனி” தலைவர்கள் குடும்பத்தில் “ எல்லாரும் தமிழர்கள் , எனக்கு சாதிப்பிரிவில் உடன்பாடில்லை என” , சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளீர்?. பெரியாரைப்பற்றி பேசுகின்ற யாராக இருந்தாலும், முதலில் உங்கள் குடும்ப கணக்கை காட்டுங்கள். உன் மருமகன், மருமகள் சாதி என்ன?. எத்தனை தமிழ்த்தேசியம் பேசும் தோழர்கள், ஈழத்தில் உள்ள கணவனை இழந்த ( சுமார் 75000) , பெற்றோரை இழந்த குழந்தைகள், பெண்களுக்கு வாழ்வு கொடுப்பதை பற்றி யோசித்து இருக்கிறிர்கள்? ( அவர்கள் அதை ஏற்பார்களா என்பது மறுபுறம்). ஒரு பெரிய இனம் சிறுபான்மை இனமாக ஈழத்தில் அழிந்து வருகிறது. அதற்கும் பெரியார்தான் காரணம். ஆமாம், அன்றைக்கே தந்தை செல்வாவிற்கு உதவி செய்யவில்லை. சொல்லுங்கள். யார் என்ன சொல்லப்போகிறார்கள். கால்காசு செலவில்லாமல் இணையத்தில்தான் எல்லாக் கருமத்தையும் எழுத முடிகிறதே? ( நான் உட்பட). சரி உங்கள் தீர்வுத்திட்டம் என்ன?. திராவிடம், திராவிட(ர்) என திட்டுவதை விட, உருப்படியான எதாவது ஒன்று?. பெரியார் சாகும்வரை கேட்டது, “ தனித்தமிழ்நாடு “. இந்திய தேசியம்(தேஸியம்) தமிழ்த் தேசியம் என எல்லாம் “தேஷ்”, தனி நாடு என்று கேட்ககூட முடியவில்லை. “தமிழ்த் தேசிய தோழர்” எல்லாம் ஒன்று கூடுங்கள். இந்தியத்திரு நாடே “ உன் துரோகத்தின் கீழ் வாழ விருப்பம் இல்லை, “ தமிழ்த் தேசியம் “ வேண்டும் என அறிவியுங்கள். ஒரு இரவுக்குள் சில ஆயிரக்கணக்கான கறுப்புச்சட்டைகாரனை௭ கோடி தமிழ்தேசியவாதிகள் கொள்ள முடியாத என்ன?. அப்புறம் எந்த பெரியார், வெங்காயம் எல்லாம். அடுத்த நாள் தமிழ்தேசியம் உங்கள் கையில், சரி அதை வைத்து என்ன செய்யலாம்?. ஆயிரத்து எட்டு சாதிகாரனுகும் பிரித்து பட்டா போட்டு கொடுங்கள். வேற என்ன செய்ய முடியும்.... அடப்போங்கப்பா... எனக்கே உப்புமா சாப்பிட ஆசையாக இருக்குது. பக்கத்தில் இருக்கின்ற தமிழ்க்கம்பெனிக்கு போய் வருகிறேன். பிறகு நிறைய பேசலாம். (குறிப்பு. எல்லாம் கால்காசு செலவில்லாமல்)
thiravidan
பெரியாரை எதிர்க்கும் தமிழ் தேசியவாதிகள் 100% சனாதனவாதிகள். அவர்கள் பார்ப்பன கைக்கூலிகள் என்பது எப்போதோ வெட்ட வெளிச்சமானவை. பெரியாரை ஒழிக்க, பார்ப்பனர்கள் ஏவிய எடுபிடிகள். இவர்கள் தங்கள் பிறப்பின் இழிவை தாங்கியவர்கள். சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் இருக்கிறோம் என்ற வெட்கம் சிறிதுகூட இல்லாதவர்கள். சுயமரியாதை அற்றவர்கள். பெரியாரின் போராட்டத்தைப் போல், ஒரு கடுகளவு போராட்டத்தை நடத்தக்கூட வக்கற்றவர்கள். இவர்கள் இன்று தமிழ் தேசியத்தைப் பற்றி சிந்திக்கும் நிலை வந்ததுகூட பெரியாரால்தான். இந்த கைக்கூலிகளை நம்பி தமிழர்கள் மானங்கெட்டு விடக்கூடாது. ஏனெனில் அந்த மானத்தை மீட்டுக் கொடுத்தவர் பெரியார்.
முத்துக்குட்டி
//திராவிடர் என்ற சொல், பார்ப்பன - ஆரியப் பண்பாட்டின் எதிர்க் குறியீட்டுச் சொல் மட்டுமல்ல, பார்ப்பன - ஆரியப் பண்பாட்டுக்கு எதிராக - ஆரிய, சாதிய, இந்தியத்தின் அனைத்து வகை ஆதிக்கங்களுக்கு எதிராக - போராடி, போராடி அவற்றிலிருந்து விடுபடவும் அணி திரட்டலுக்குமான சொல்லாகும்.// மிகச்சரியான கருத்து!
// திராவிடர் என்பது தமிழர் என்ற சொல்லின் திரிந்த வடிவம் என்ற சொல்லாராய்ச்சியோடு நிறுத்திக் கொள்பவர்களிடம் நமக்கு ஒரு கேள்வி உள்ளது. மொழியடிப்படையில் பார்ப்பனரை நம்மவரே என்ற கருதச் செய்யும் போக்கு அவ்வாதத்துள் புதைந்து கிடப்பது உங்களுக்குப் புரியவில்லையா? அல்லது தெரிந்தும் யாரோ சில பார்ப்பனர் நட்புக்காக - தயவுக்காக அதை மறைக்கிறீர்களா?// நேர்மையான வினா!
முத்துக்குட்டி
//பார்ப்பனியம் கொடுமையானது - எதிர்க்கப்பட வேண்டியது - போராடி வீழ்த்தப்பட வேண்டியது என்ற புரிதலுக்கு வந்து சேர்ந்துவிட்ட பார்ப்பனர்கள் சிலரோ, பலரோ தமக்குள் அணி திரண்டு தம்மின மக்களான பார்ப்பனர்களிடம் கேள்வி கேட்டதே இல்லையே, ஏன்? வரலாற்றில் அப்படிப்பட்ட ஒரு பதிவே இல்லையே, ஏன்? அது தற்செயலானது என நம்புகிறீர்களா?// இக்கேள்வியைத் தான் பிராமணர்களை ஏன் சேர்க்கக்கூடாது? என்று கேட்கும் நண்பர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அருமையான கருத்து!
முத்துக்குட்டி
//தமிழ்நாட்டை ஆள இன்னொரு நாட்டான் கூடாது என்ற பொருளில் தான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதில் உள்ள 'தமிழருக்கே' என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர அதையும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பவர்களை மட்டும் குறிக்க அல்ல.// என்று சொல்லும் கொளத்தூர் மணி அவர்கள், பிறகு ஏன் //தி.மு.க., அ.தி.மு.க. போன்றவை திராவிடர் இயக்கங்கள் இல்லை. அவை திராவிட இயக்கங்கள் மட்டுமே. ஆரிய எதிர்ப்புச் சொல்லான மக்கள் கூட்டத்தைக் குறிக்கும் திராவிடர் என்பதை கைவிட்டு விட்டு மண்ணை, நிலப் பகுதியைக் குறிக்கும் ‘திராவிடம்’ என்ற வடநாட்டு எதிர்ப்புச் சொல்லால் குறிக்கப்படும் கட்சிகள் அவை.// என்று திராவிடர் வேறு! திராவிடம் வேறு! என்று விளக்கம் கொடுக்கிறார் என்று புரியவில்லை. இரண்டு கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன.

கொளத்தூர் மணி அவர்களின் கருத்தை இப்படிப் பார்க்கலாம்
1) தமிழர் என்போர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்லர்! எனவே 'திராவிடர்களுக்காகப் போராடாமல் திராவிடத்திற்குப் போராடினால் அதாவது திராவிடம் என்னும் சொல் குறிக்கும் இடத்தில் உள்ள அனைவருக்கும் போராடினால் அந்நிலை சரிதானே! ஆக, தி.மு.க., அ.தி.மு.க. என்று "திராவிட" இயக்கங்களாக இருப்பதும் திராவிடர்களுக்கான இயக்கங்களாக இல்லாமல் இருப்பதும் சரிதானே! இதுவா தந்தை பெரியார் காட்டிய வழி?
murugan
திராவிட எதிர்ப்பாளர்களுக்கு கொளத்தூர் மணியின் விளக்கம்......வெண்டைக்காய் உடலுக்கு நல்லது. விளக்கெண்ணைய் சூட்டைத் தணிக்கும்...........இதுபோல நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம்!
kuzhandai
திராவிட என்னும் வார்த்தை தமிழ் மொழியிலோ தமிழ் இலக்கியங்களிலோ கிடையாது. அது வடமொழி வார்த்தை. 'பஞ்ச திராவிட' என்னும் பதம் அந்த காலத்தில் தென்னிந்தியாவில் ஐந்து பிரிவுகளாக வாழ்ந்த பார்ப்பனர்களை குறிக்கிறது. இங்கே பார்ப்பனர் அல்லாதார் எங்கே வந்தார்கள்?. தமிழ் நாட்டை ஒரேயடியாக சுரண்டி தின்பதற்கு இன்னொரு பெயர் தான் திராவிடம் என்பது. இந்த திராவிட கும்பல் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் பேசும் மக்களுக்கு செய்த சீரழிவு கொஞ்சநஞ்சமல்ல. தமிழ் பேசும் மக்கள் கர்நாடகத்திலும் கேரளத்திலும் அடி தின்றுவிட்டு தமிழ்நாட்டுக்கு அகதியாக ஓடிவருவது தான் திராவிடமா?
அன்பு
நாராயணா இந்த தமிழ் கம்பெனிகளின் கொசுத்தொல்ல பொறுக்க முடியலடா…
வேம்பையன் தொல்காப்பியன்
1. ஒரே நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் பல அடையாளங்களைத் தழுவி வாழ்வதை எவருக்கும் புரியும் வண்ணம் பல எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.

2. எந்த ஒரு அடையாளத்திலும் யாரையும் சிறைப்படுத்தி விட முடியாது என்பது பிராமணர்களுக்கும் ('பிராமணர்' என்ற அடையாளம்) பொருந்தும் என்பதை அவர் செலுத்திப் பார்க்க வேண்டும்.

3. பிராமணர்களின் பல நல்ல கூறுகளை அவர் முற்றிலும் புறக்கணித்து விட்டார். குறிப்பாக ஒன்றைக் கூறலாம்: பிராமணல்லாதார் எனினும் அவர்களின் அறிவு, திறமையைப் பிராமணர்கள் மதிப்பது போல் பிராமணல்லாதார் மதிப்பதில்லை.

4. பிராமணர்கள் பிராமணரல்லாதரை விடக் காலத்திற்கேற்ப விரைவாக மாறி விட்டனர்; மாறி வருகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர் எதிர்பார்ப்பது போல் (எந்த பிராமணர் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் பேசித் திருத்த முயன்றார்) வெளிப்படையாகப் பெரிய அளவில் இல்லை தான். ஆனால் அதற்கு நாம் அவர்களைப் பிறப்பின் அடிப்படையில் ஒதுக்கி வைத்ததும் (இன்றும் வைத்து வருவதும்) ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். நம்மை அவர்கள் சேர்த்துக் கொண்ட அளவில் நாம் அவர்களில் நல்ல நபர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை.

5. பிராமணர்கள் புத்த மதத்தைப் புகுந்து கெடுத்தார்கள் (வரலாற்றில் இது போன்றவை ஆய்வின் அடிப்படையிலான அனுமானங்களே; நேரில் பார்த்த உண்மைகள் அல்ல) என்பதால் இன்று பிராமணர்களைப் பிறப்பின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று கூறி வருவது, நம் திறமை, அறிவின் மீது நமக்குள்ள நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது. 'கெடுத்து விடுவார்கள்' என்று பயந்து கொண்டு பிள்ளைகளை வெளியில் அனுப்பாமல் இருப்போமா? 'வெடித்து விடும்' என்று பயந்து கொண்டு சமையல் வாயுவை வீட்டிற்குள் பயன்படுத்தாமல் இருப்போமா?

6. கொ.மணி ஐயா அவர்கள் என்னை விட வயது, அறிவு, அனுபவத்தில் மூத்தவர். அவரின் பொது வாழ்வு அனுபவத்தில் எனக்கு ஒரு விழுக்காடு கூடக் கிடையாது. அவர் ஓர் இயக்கத்திற்குத் தலைமை ஏற்று நடத்தி வருகிறார். எனவே அவர் கருத்தை விமர்சிப்பது அவரை விமர்சிப்பதாகாது. அவர் மீது எனக்கு உள்ள மதிப்பை குறைக்காது.
karuppuchaddai
பெரியாரும் அவருடைய தோழர்களும் பளிச்சென்று பதில்சொல்லக்கூடியவர்கள் என்ற அடையாளம் தான் வரலாற்றில் பதிந்துள்ளது.எது எதற்க்கோ அடையாளம் சொன்ன கொளத்தூர்மணி இந்த அடையாளத்தை மறந்துவிட்டாரா?மறைத்துவிட்டாரா? பெரியாரை விட்டுவிலக எந்தபாசம் குறுக்கே நிற்கிறது?
Guest
"வீடு எரிந்துகொண்டுள்ளது. அதை உடனடியாக அணைக்க வேண்டும். ஒருவன் தண்ணீர் வைத்துக்கொண்டு நிற்கிறான். அவன் நல்லவனா, கெட்டவனா, அவனிடம் தண்ணீர் வாங்கலாமா என்று ஆய்வோமா அல்லது அவனிடமிருந்து தண்ணீரை வாங்கி தீயை அணைப்போமா? அதுபோன்றது தான் எங்களது தற்போதய அ. தி. மு. க. ஆதரவு நிலைப்பாடும்"

- இப்படிப் பேசி பார்ப்பனத்தி ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போட்டது கொளத்தூர் மணி அவர்களின் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன்.

அன்று கி. வீரமணி பார்ப்பன ஜெயலலிதாவை ஆதரித்ததை எதிர்த்து இயக்கம் கண்ட பெரியார் திகதான் இன்று ஜெயலலிதாவை ஆதரித்து நியாயப்படுத்தும் பெரியார் திகதான் தமிழ்நாட்டின் ஒரிஜினல் புரட்சி இயக்கம்
parthipan
ஒரு காலும் நீங்கள் திராவிடத்தை வைத்து இந்தியம் என்பதை மக்களிடம் புரியவைக்கமுடியாது. உன்மையில் திராவிடம் இந்தியத்தின் பங்காளி. தமிழ் என்றால் பகுதறிவு என்பது வெகு தொலைவோ?
தமிழே உன்மையான இந்தியதின் பகையாளி.அது தன் நிலையில் இருந்து இந்தியதை எதிர்கும்.
ஒருபோதும் திராவிடம் இந்தியத்தை எதிர்காது.நீங்கள்
அரசியல் நடத்த மட்டுமே திராவிடம் உதவும்.
மக்களை குழப்ப மட்டுமே உதவும்.
இவ்வளவு சீர் அழிவுக்கு பிறகும் மக்களை ஒன்று படுத்த
முடியாத கேட்டிற்க்கு அராய முற்படாமல் குழப்பும் வேளையை திராவிட சார்பாளர்கள் செயல் படுவது.
தமிழருக்கு கேடே.
deepan
ஒரு தமிழன் தன்னை திராவிடன் என்ரு சொல்லிக்கொல்வது என்பது தன் முகத்தில் தானே காரி துப்பிக்கொள்வது போன்றது.
அன்பு
// பிராமணர்கள் பிராமணரல்லாதரை விடக் காலத்திற்கேற்ப விரைவாக மாறி விட்டனர்; மாறி வருகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.//பார்ப்பனர்களை எங்களது இயக்கத்தில் உறுப்பினராக இணைத்துக்கொள்ள மாட்டோம் என்பது பெ.தி.கவின் முடிவு. அதற்கான காரணங்கள் பல உள்ளன. பயம் என்பது காரணம் அல்ல. பார்ப்பனர்கள் மாறிவிட்டார்கள் என்பது தங்களது பார்வை மட்டுமல்ல பலரது பார்வையும் அப்படித்தான் உள்ளது. ஆனால் இன்றுவரை இடஒதுக்கீடு, தமிழில் வழிபாடு, தமிழில் இசை, அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகிய பிரச்சினைகளில் அவர்களின் கொள்கை எப்படி இருக்கிறது என்று பாருங்கள் பிறகு பேசுங்கள்
அன்பு
//"வீடு எரிந்துகொண்டுள்ளது. அதை உடனடியாக அணைக்க வேண்டும். ஒருவன் தண்ணீர் வைத்துக்கொண்டு நிற்கிறான். அவன் நல்லவனா, கெட்டவனா, அவனிடம் தண்ணீர் வாங்கலாமா என்று ஆய்வோமா அல்லது அவனிடமிருந்து தண்ணீரை வாங்கி தீயை அணைப்போமா? அதுபோன்றது தான் எங்களது தற்போதய அ. தி. மு. க. ஆதரவு நிலைப்பாடும்" - இப்படிப் பேசி பார்ப்பனத்தி ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போட்டது கொளத்தூர் மணி அவர்களின் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன்.// கருத்தைப் பதியும் போது அது எந்த கால கட்டத்தில் எப்போது சொல்லப்பட்டது என்பதையும் கூறினால்தான் சரியாக இருக்கும். ஈழப்போர் உச்சத்தில் இருக்கும்போது ஆட்சியில் இருந்து அதை நடத்திய காங்கிரசையும், அக்கட்சிக்கு உற்ற துணைவனாக இருந்த திமுக வையும் எதிர்த்து அன்று தேர்தல் களத்தில் இருந்த அதிமுக விற்கு விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தும் அனைத்து பெரியார் தி.க உறுப்பினர்களின் ஒரு மனதான ஆதரவுடன் வெளியான கருத்து அது. (ஜெயலலிதாவால் மூன்றரை ஆண்டுகாலம் சிறையில் இருந்த கு.ராமகிருட்டிணன், ஒன்றரை ஆண்டுக்காலம் பெல்லாரி மற்றும் திருச்சி சிறையில் இருந்த கொளத்தூர் மணிக்கு ஆகியோருக்கு ஜெயலலிதாவின் அனைத்து முகங்களும்). இணையத்தில் கருத்தைப் பதியும்போது கூட தனது பெயர் தெரியக்கூடாது என ஒதுங்கும் பயந்தாக்கொள்ளிப் பேர்வழிகள் எதையும் அறிந்து பேச வேண்டும்.
selvan
*******
பார்பனர்,பார்பனர் அல்லாதோர் என்று பிரித்து நாங்கள் பார்பனர் அல்லாதோருக்கான அமைப்பு என்று பெரியார் தி.க அறிவித்துவிடலாம்.திராவிட/திராவிடம்/திராவிடர் என்பது தேவையற்ற ஒன்று.தமிழை தாய்மொழியாகக் கொண்ட பார்பனர்களையும் எதிர்க்கிறோம்,தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத பார்பனர் அல்லாதோரை வரவேற்கிறோம்,அவர்கள் தமிழ் நாட்டிற்கு தலைமை ஏற்றாலும் ஆதரிக்கிறோம் என்று அறிவித்துவிடலாம். ****

மிகவும் சரி. இத ரெண்டு வரியில சொல்லி தமிழன் தலையிலே மிளகாய் அரைக்கலாம். இதுக்கு போய் இவ்வளவு பெரிய கதை விடணுமா ?.
sundarath thozhan
Draavidam-is a useless word.Is there any difficulty to express ourself as Thamizhan.Thiru. K.Mani should change the nomenculture of P.D.K. as Periyaar Thamizhar Kazhakam and follow the principal of Periyaar.
Kenaiyan
இந்த திராவிட கட்சிகளுக்கும் அவற்றை நடத்தும் சில்லரை தலைவர்களுக்கும் தமிழக எல்லையை தாண்டி ஒரு செல்வாக்கும் கிடையாது. இந்த தலைவர்களுக்கு தமிழகத்துக்கு வெளியே நாய்க்கு இருக்கும் மரியாதை கூட இல்லை. இந்தியா என்னும் பரந்த அமைப்பின் அதிகாரங்கள் அனைத்தும் பார்ப்பன சக்திகளின் கையில் தான் இருக்கிறது. நீங்கள் என்ன தான் முக்கினாலும் அவர்களின் ஒரு முடியை கூட பிடுங்க முடியாது.
R Nagaraj
இந்தியாவிலே ஏன் உலகத்திலியே, தமிழ் நாட்டில்தான் பார்ப்பனர்களுக்கு இத்தனை ரசிகர்கள் (திட்டுபவர்களையும் சேர்த்து) இருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்...
parthipan
//திராவிடம் என்பதை எதிர்த்தால் அது பெரியாரை எதிர்ப்பது என சண்டைப்போடும் ஆட்களை பாருங்கள்.90 சதவீதம் தெலுங்கர்களாக இருக்கிறார்கள்.புரிந்துக் கொள்ளுங்கள் தமிழர்களே.//

உன்மை ஒன்று - எவ்வளவுக்கெவுளொ இந்த பெரியாரி தொன்டர்கள் அவ்வளவுக்கெவளவு தி முக அதிமுக என்ற அரசியல் திருடர்களுக்கு பாதுகாப்பு செய்கின்றார்கள்.
இலக்கிய வாசகன்
எனக்கு ஒரு டவுட்டு இருந்துச்சு மணி அண்ணா அது என்னெண்டால் நீங்க சொல்லுற திராவிட-திராவிடம் இடைவெளி போல பார்ப்பனியம்- பார்ப்பனர் இடைவெளி என்று ஒண்டு இருக்கிறதாக எனக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு! பெரியார் மற்றும் அவரது சீடர்கள் யாரை எதிர்க்கிறீர்கள்? பார்ப்பனர் என்கிற ஆரிய இனத்தையா இல்லை பார்ப்பனியம் என்கிற மனு அதர்ம கோட்பாடுகள் போன்ற தமிழர்களுக்கு/ ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான ஒடுக்குதல் பிரக்ஞைகளுக்கு எதிராகவா? [சுத்துறதுதான் சுத்துரீங்க காதில பூவை இதுக்கும் சேர்த்து ஒரு பூ சுத்துங்களேன்!]
Guest
பார்ப்பனர் என்றால் பொருள் என்ன?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.