விகடன் மேடையில் அண்ணன் சீமான் அளித்த பேட்டிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டனாக அல்லது திருமாவின் தம்பியாக பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. அதனால் எனக்குத் தெரிந்த நடையில் ஆடை அலங்காரம் இன்றி, எதுகை மோனையின்றி பதில் சொல்கிறேன்....

thirumavalavan_237சீமான் : சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அண்ணன் திருமாவளவன் தனித்து நின்றிருந்தாலே ஈழத்துயரத்தின் எதிரொலியும், எங்களோடு இயைந்தவர்களின் குரலும் அவரை அமோகமாக வெற்றி பெற செய்திருக்கும்.

தமிழன் வேலு : முதலில் அண்ணனுக்கு ஒன்றை சொல்கிறேன். தலைவர் திருமாவும் சரி, அவரது தம்பிகளாகிய நாங்களும் சரி, 'ஈழத்திற்கு நாங்கள் போராடுகிறோம், அதனால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்' என்று ஓட்டுப் பிச்சை எடுக்கும் பழக்கம் இல்லை என்பதையும், எழவு வீட்டில் களவு பார்க்கும் புத்தியும் எங்களுக்கு இல்லை என்பதையும் சொல்லிக் கொள்ளகிறேன்.

தி.மு.க. வேண்டாம், அ.தி.மு.க. வேண்டாம், காங்கிரஸ் வேண்டாம், பி.ஜே.பி வேண்டாம் என்று 1999லிருந்து அழைத்து கொண்டிருக்கிறார் திருமா. ஆனால் அதற்கு மற்ற அரசியல் கட்சிகள் அசைந்து கொடுத்தபாடில்லை. 1999லும் 2004லும் சிதம்பரம் தொகுதியில் தனித்து தான் களம் கண்டார். ஆனால் அங்கேயும் வந்து சாதியவாதிகள் தோற்கடித்தார்கள். 1999யில் 2.25 லட்சம் வாக்குகள், 2004யில் 2.5லட்சம் வாக்குகள் பெற்றார். 2004யில் 2.5 லட்சம் வாக்குகள் பெற்று தேசியக் கட்சியான பா.ஜ.க.வையும், தமிழகத்தின் பிரதான கட்சியான அ.தி.மு.க.வையும் டெபாசிட் இழக்க வைத்தார்.

ஊரெல்லாம் சுற்றிவந்து பா.ம.க. பொன்னுசாமிக்கு ஓட்டு கேட்டார்களே தவிர திருமாவளவனுக்கு ஓட்டு கேட்கவில்லை. பொன்னுசாமி வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்று ஈழத்திற்காகப் பேசுவார் என்று நம்பினார்களே தவிர '25 ஆண்டுகாலமாக திருமாவளவன் ஈழத்தைப் பற்றியே பேசிக்கொன்டிருக்கிறாரே; இந்தத் தொகுதியில் திருமாவளவனை ஆதரிப்போம்' என்று யாரும் முன்வரவில்லை. 2009யில் தனித்து களம் கண்டிருந்தால் கூடுதலாக பத்தாயிரம் ஓட்டுக்கள் வாங்கியிருக்கலாமே தவிர வெற்றி பெற்று இருக்க முடியாது. அப்படி ஒரு நிலையில் கூட 2009யில் திமுக, அதிமுக கூட்டணியைத் தவிர்த்து மூன்றாவது கூட்டணி அமைக்க முயற்சித்தார். இதர அரசியல் கட்சிகள் யாரும் ஒத்துழைக்கவில்லை.

தனித்து களம் காண வேண்டுமானால், அவரைத் தாண்டி கட்சி உள்ளது. அவரது தலைமுறையைத் தாண்டியும் இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் இருக்கிறது. தொடர் தோல்விகளால் தலைமை வேண்டுமானால் சோர்வடையாமல் இருக்கலாம் ஆனால் கடைநிலைத் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள்; இயக்கம் உடைந்து போகும். எனவே ஏதாவது ஒரு அணியில் இணைந்து களம் காண வேண்டியதன் அவசியம் ஏற்ப்பட்டது. அ.தி.மு.க.வுடன் கொள்கை ரீதியாகவோ, தொகுதி உடன்பாட்டின்படியோ கூட்டணி சேர வாய்ப்பில்லாத நிலையில் தனித்து களம் காணுவது இயக்கத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் தி.மு.க. கூட்டணியில் இணைந்து களம் காண வேண்டிய நிலை ஏற்பட்டது.

சீமான்: திராவிட தலைமைகளை வீழ்த்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததே அண்ணன் திருமா தான்.. அண்ணன் திருமா அவர்களே நான் பேசும் அனைத்தும் நீங்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களே; நான் வேறு எங்கும் கற்றுவரவில்லை.

தமிழன் வேலு : இந்த கேள்விக்கும் அண்ணன் சீமானே பதில் சொல்லி இருக்கிறார். இந்துமயமாகிவிட்ட திராவிடக் கட்சிகள் என்ற போர்வையில் உள்ள ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளை வீழ்த்துங்கள் என்று சொல்லிக் கொடுத்தாரே ஒழிய எங்கள் பாட்டன் காட்டிய திராவிடக் கொள்கைகளை வீழ்த்துங்கள் என்று சொல்லித் தரவில்லை. அண்ணன் சீமான் அவர்களே! திராவிடம் என்பது பெரியாரின் புதிய கண்டுபிடிப்பு அல்ல. எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் சித்தாந்தம். திராவிடம் என்பது அண்ணாதுரை, கருணாநிதி, வைகோ போன்றவர்களின் வெற்று முழக்கம் அல்ல. எங்கள் பாட்டன் அயோத்திதாசரின் கொள்கை முழக்கம். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடன் வட்டமேசை மாநாட்டில் பேசிய எங்கள் தாத்த இரட்டைமலை சீனிவாசன் கோலார் தங்கவயலில் பேசும்போது, நாங்கள் கலப்படமில்லாத திராவிடர்கள் என்று பொருள்பட பேசியிருக்கிறார்.

seeman_380புரட்சியாளர் அம்பேத்கர் திராவிடத்தைப் பற்றி சொல்லும்போது, இந்த மண்ணின் பூர்வீக குடிகள் நாகர்கள் தான். நாகர்கள் என்றால் யார்? இந்தியா முழுமைக்கும் சேரி என்ற சிறைச்சாலையில் வாழ்பவர்கள் தான் நாகர்கள். இவர்கள் தான் முற்காலத்தில் திராவிடர்களாக வாழ்ந்தார்கள், தமிழர்களாக வாழ்ந்தார்கள். தமிழர் என்பதுதான் திரமிளர், திராவிடர் என்று மாறியதாக சொல்கிறார். அதனால் தான் வடக்கே நாகலாந்த், மையத்தில் நாகபுரி, கடைசியிலே நாகர்கோவில். ஆக நாகர்கள் இந்தியா முழுமைக்கும் பரவியிருந்தார்கள் என்றால், தமிழர்கள் இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்றுதான் பொருள். அவர்கள் திராவிடர்களாக இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்றுதான் பொருள். அப்படி வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆரியத்தை எதிர்க்கும் கூரிய வாளான திராவிடம் இன்று முனை மழுங்கி இருக்கலாம். அதை கூர்மைப்படுத்துவதை விடுத்து திராவிடத்தை எதிர்ப்பது மடமை.

சாதி ஒழிப்புக்கான அல்லது ஆரியத்தை எதிர்ப்பதற்கான செயல்வடிவமான திராவிடத்தை எதிர்ப்பவர்களால் ஆரியத்தை எதிர்க்க முடியாது. ஆரியத்தை எதிர்க்க முடியாதவனால் இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாது. இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாதவனால் தமிழ்த் தேசியத்தை கட்டி எழுப்ப முடியாது....

அண்ணன் சீமான் அவர்களே! உங்கள் நெஞ்சத்தை தொட்டுச் சொல்லுங்கள். பேரறிவாளன் உட்பட மூன்று தமிழர்களின் உயிரைக் காத்தது எம் உடன்பிறவா சகோதரி செங்கொடியா? இல்லை தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை என்று சொன்ன ஜெயலலிதாவா? மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மெலானியை அழைத்து வந்து சட்டப்போராட்டம் நடத்திய அண்ணன் வைகோவா? இல்லை உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டுமே என்ற ஒரே நோக்கத்தில் ஒற்றைக் கடிதத்தை எழுதிய ஜெயலலிதாவா?

தலைவர் திருமா, மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் எல்லோரும் இணைந்து தூக்கு தண்டனைக்கு எதிராக மாநாடு, மனிதச் சங்கிலி போராட்டங்களை அறிவித்து நடத்தினார்கள். மூன்று தமிழர்களைக் காக்க தமிழகமே ஒன்று திரண்டது; ஆர்ப்பரித்தது , அவர்களுக்கெல்லாம் ஒற்றை நன்றியைக் கூட சொல்ல மனமில்லாத நீங்கள் தான், ஜெயலலிதாவுக்கு நன்றி சொன்னீர்கள். ஜெயலலிதாவுக்கு ஈழத்தாய் பட்டம் கொடுத்த நீங்கள் தான் இன்று திராவிடத்தை வீழ்த்துவேன் என்று சொல்கிறீர்கள். எதற்கு இது என்பதை விளக்க வேண்டும்? இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றீரே, இங்கே இலை மலர்ந்து ஒண்ணரை ஆண்டுகாலம் ஆகிறது. ஈழம் என்னவாச்சு?

இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் திராவிடத்தை ஒழிப்பேன் என்றால் உங்கள் உள்நோக்கம் என்ன என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். திராவிட எதிர்ப்பு என்பது வெறும் கருணாநிதி எதிர்ப்பு, ஜெயலலிதா எதிர்ப்பு, வைகோ எதிர்ப்பு மட்டும் அல்ல என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..

அண்ணன் சீமான் அவர்களே! ஏதோ ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துதான் இளைய தலைமுறை உங்களை நம்பி வருகிறது.. மாற்றத்தை கொடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, ஏமாற்றத்தைக் கொடுக்காதீர்கள். ஒருவன் சோற்றில் மண்ணை அள்ளிப் போடுவதை விட வரலாற்றைத் திரிப்பது கொடுமையானது...

வரலாற்றைத் திரிக்காதீர்கள்....

வருங்கால தலைமுறையை வஞ்சிக்காதீர்கள்....

Comments

17 comments

17
ஷாலி
திராவிடப்பெயரை வைத்து மூன்று சினிமாக்காரர்கள் முதல்வராகி தமிழ்நாட்டில் சாராய ஆற்றை ஓடவிட்டு சீரழித்த விட்டார்கள்.திராவிடத்தை வீழ்த்துவதற்கு புதிய சினிமாக்காரர் புறப்பப்பட்டுவிட்டார்.பொதுவாக தமிழக,இலங்கை,மலேசியா தமிழர்கள் மத்தியில் சினிமா மோகம் சற்று கூடுதலாக உள்ளது.
இவர்கள் கரும்பலகையில் கற்றுக்கொண்டதை விட வெள்ளித்திரையில் கற்றுக்கொண்டதையே நம்புகிறார்கள்.இந்த நம்பிக்கை ஓட்டாக அறுவடையாகிறது. ஆக தமிழ் மக்களை வழிநடத்த கோடம்பாக்கத்து சாக்கடையிலிருந்துதான் ஆள் பிடிக்க வேண்டியுள்ளது என்பது கேவலத்திலும் கேவலம்
viyasan
நாற்பது வருடங்களுக்கு மேலான திராவிட ஆட்சியில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்குக் கிடைத்ததெல்லாம் மலையாளிகளின் சாப்பாட்டுக் கடைகளில் மேசை துடைக்கும் வாய்ப்பும், தெலுங்கர்களின் துணிக்கடைகளில் இரவுச்சிப்பந்திகளாக மூட்டை தூக்கி, 19 மணி நேரம், வாரத்தில் ஆறு நாட்கள், சில வேளைகளில் ஏழுநாட்களும், நாய் மாதிரி உழைப்பது மட்டும் தான். அந்த வேலை கூடக் கிடைப்பது கடினம். அந்த வேலையை கூடப் பிடுங்கிக் கொள்ள நேபாளிகளும், வட இந்தியர்களும் படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த நிலை அப்படியே தொடர வேண்டுமென அண்ணன் அங்கனூர் வேலு நினைத்தால் அதைத் தடுக்க யாரால் தான் முடியும். மாற்றங்களை, மாற்றுச் சிந்தனைகளை ஏற்றுக் கொள்வது கடினம் தான் அதற்காக இப்படியா?
நாங்கள் ஈழத்தமிழர்கள் கேட்பதெல்லாம், எங்களுக்காக நீங்கள் உண்மையில் குரல் கொடுக்க வேண்டுமானால், உதவ வேண்டுமானால், தமிழ்நாட்டில் தமிழர்களின் கைகளைப் பலப்படுத்துங்கள், தமிழ்நாட்டின் அரசியலையும், அதன் பொருளாதாரத்தையும் முதலில் தமிழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வாருங்கள். அதற்கு ஒரே வழி தமிழுணர்வுள்ள, தமிழ்நாட்டின் நலன்களை விட்டுக் கொடுக்காத, வேறு எந்த மாநிலத்துக்கும், குடும்ப, அல்லது பரம்பரை விசுவாசமற்ற உண்மையான தமிழர்களின் கைகளுக்கு ஆட்சி மாறுவது தான். அது திருமாவளவனாக இருந்தாலென்ன சீமானாக இருந்தாலென்ன. திருமாவளவன் 25 வருடங்களாக ஈழ அரசியல் நடத்தி விட்டு, அம்மா தாயே என்று அன்னை சோனியாவின் காலில் விழுந்தது மிச்சம். அதனால் சீமானின் கருத்துக்களையும் கேட்டு, அவருக்கொரு வாய்ப்புக் கொடுத்தால் என்ன. ஷாலி அவர்கள் கூறுவது போன்று திராவிடப்பெயரை வைத்து முதல்வர்களாகிய மூன்று சினிமாக்காரர்களும் கூட கோடம்பாக்கத்துச் சாக்கடையிலிருந்து வந்தவர்களே, ஆனால் கோடம்பாக்கத்துச் சாக்கடையிலிருந்து வருவது ஒரு தமிழனாக இருந்தால் மட்டும், தமிழ்நாட்டுக்குப் பிழைக்க வந்த, தமிழரல்லாதவர்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வந்து, அந்த தமிழனை எதிர்க்கிறார்கள் என்றால், அதற்கான காரணம் என்னவாக இருக்குமென்பதை அண்ணன் அங்கனூர் வேலு போன்ற தமிழர்கள் சிந்திக்க வேண்டுமே தவிர அவர்களுக்குப் பக்கவாத்தியம் வாசிக்கக் கூடாது, தமிழினத்தின் சாபக்கேடே அது தான்.
U K Ulakanatha Mallar
திரு.தமிழன் வேலுவின் கதை அருமையாக புளுகி தள்ளியுள்ளார். அவரின் கட்டுரையில் திரு.சீமான் அவர்கள் வரலாற்றை திரிப்பதாக குற்றம் சாடுகின்றார். ஆனால், இவரும் இவருடைய அண்ணன் திரு.திருமாவும் வரலாட்ற்றை அப்படியே திரிக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லாமல் சொல்கிறார்களா? நிச்சயமாக இல்லை.இவர்களும் திரு.சீமானைபபோல்வே உண்மையான வரலாற்றை மறைத்து திரித்து பொய் மற்றும் புளுகு மூடைகளை சொல்வதே வேலையாக இருக்கின்றனர்.

ஆக மொத்தத்தில், ஒரு உண்மையை திரு.தமிழன் வேலு சொலிருக்கின்ரர். அதாவது, தாங்கள் தமிழர்கள் அல்ல அசல் திராவிடர்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு உள்ளார்கள். அப்படியெனில் இவர்கள், தமிழ் நாட்டில் இவர்களுக்கு என்ன வேலை? பின் எப்படி இவர்கள் இலங்கை தமிழர்களுக்கு எப்படி போராடுவார்கள். இவர்கள் நகர்கள் என்று சொல்லும் இவர்கள் ஏன் தமிழன் பெயரான திருமாவளவன் என்ற பெயரையும் தனது டி.வீக்கு மருதம் என்று தமிழனின் பெயரையும் வைக்கின்றார்கள். அப்படி அடுத்தவர்களின் இனிசியல் பெயரை வைத்தால் அதற்க்கு அர்த்தமே வேறு. ஆகவே, இவர்கள் நாகர்கள் மற்றும் நாகர் டி.வீ என்று பெயர் வைத்தால் இனிசியல் மாறாது. இப்போ தெரிகின்றதா யார் வரலாட்ற்றை மறைகின்றார்கள் என்று.

திரு.இரட்டை மலை ஸ்ரீனிவாசனும், திரு.அயோத்தி தாசர் இருண்டு பெரும் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களுக்கு வட்ட மேசை மாநாட்டில் உதவி செய்தார்கள் என்று சொல்லுகின்றார்கள். ஆனால், உண்மையில் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களுக்கு இவர்கள் எதிராக செயல் பட்டனர் என்று ஒரு செய்தி உள்ளது.மறுக்க முடியுமா இவர்களால். இவர்களின் மள்ளர்களின் முன்னோர்களின் வரலாற்றை சொந்தம் கொண்டாடுவது எந்த விதத்தில் சரியாகும். எந்த ஒரு நபரும் தான் தனது அப்பனுக்கு தான் பிறந்தேன் என்று சொல்ல வேண்டுமே தவிர. தான் வந்து, மற்றவருக்கு பிறந்தேன் என்று சொல்லுவது அபத்தம். ஆகவே, முதலில் இவர்கள் வரலாற்றை திருத்து அளிக்காமல் அவர்களின் உண்மையான வரலாற்றை பின்பற்றிவிட்டு அப்புறம் வந்து திரு.சீமானைப்பற்றி குறை சொல்லட்டும்.
Murugan
"சாதி ஒழிப்புக்கான அல்லது ஆரியத்தை எதிர்ப்பதற்கான செயல்வடிவமான திராவிடத்தை எதிர்ப்பவர்களால் ஆரியத்தை எதிர்க்க முடியாது. ஆரியத்தை எதிர்க்க முடியாதவனால் இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாது. இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாதவனால் தமிழ்த் தேசியத்தை கட்டி எழுப்ப முடியாது"....

100% உன்மை,
eelaparai.vck
Dravida katchigal thappu seidal dravidathai olippen endraal.....

Dravidam enna seidadhu....appuram en periyar anna va pathi pesuringa...

tamilargal thappu seidal tamilnatai olipeengala...because ur thoughts like that...

first u should understand seeman...difference between dravidam and
leader of dravidam..

I am expecting your answer..
சம்பூகன்
அங்கனூர் தமிழனின் கேள்விகள் கூர்மையானவை.பதில் சொல்ல முடியாதவை.சீமான் போன்ற சினிமாக்காரர்கள் வெற்று உணர்ச்சிமயமானவர்களே தவிர சமூகப் பொறுப்பு உள்ளவர்கள் அல்ல;அதனால்தான் திராவிடம் திராவிடம் என்று புலம்புகின்றனர்.ஜாதியொழிந்த தமிழ் தேசியமே சரியானது.சீமானுடன் உள்ளோர் எல்லாம் ஜாதிப்பெருமை பேசும் தமிழர்கள்.இங்குள்ள தமிழனின் இழிவை கண்டும் காணாமல் இருந்துவிட்டு,கொடுத்த காசுக்காக ஈழத்தமிழர்கள் மேல் பாசம் பொங்கிக் கூவுகிறவர்கள்.இந்தப் புதிய ம.பொ.சிக்கு இந்த அளவு பதில் போதுமானது.துரோகிகள் விரைவிலேயே அம்பலமாவார்கள்.காத்திருப்போம்.
பெரியார் குயில்
அங்கனுார் தமிழன் அவர்களே!

தனித்து நின்றிருந்தால் கட்சி உடைந்திருக்கும், கடைக்கோடி தொண்டன் பலவீனமாகிவிடுவான் என்று கூறினால், உங்கள் அமைப்பு குறித்து தாங்கள் வைத்துள்ள மதிப்பீடு என்ன??????

கருணாநிதியுடன் கூட்டு வைப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், கருணாநிதி என்றைக்கு மேதகு.பிரபாகரன் அவர்களை மதித்திருக்கிறார்? அப்படியிருக்க கருணாநிதி பின்னால் நின்று கொண்டு ஈழவிடுதலை பேசுவது டெசோ மாநாடு கதைதான் (உங்க தலைவர் பத்திரிக்கை பேட்டியில், ”எங்கலை ஏன் டெசோ மாநாட்டுக்கு அழைக்கவில்லை என்று தெரியவில்லை?” என்று வருத்ததுடன் தெரிவித்த பிறகுதான் கருணாநிதி உங்களையும் விளையாட்டுக்கு சேத்திக்கிட்டார்! ஆனாலும், நீங்க ஒப்புக்கு சப்பாந்தான்!!)

திராவிட எதிர்ப்பு என்பது தமிழர் அரசியல் வெற்றிடத்தின் நிரப்புதல்தான் என்பதில் சந்தேகமே இல்லை! அங்கனுார்! இன்று இந்தியா முழுமைக்கும் தங்களது மாநில உரிமை என்ற போக்கு வளர்ந்து நி்ற்கிறது! (திருப்பூர் முத்துாட் கொள்ளைகாரனை பிடிக்க பீகார் போன டி.எஸ்.பி குழு கைது செய்யப்பட்டது) அப்படியிருக்க நாம் மட்டும் திராவிடம் என்ற கருத்தை ஏன் ஏந்தி பிடிக்க வேண்டும்?? ஆரியர், திராவிடர் வேறுபாட்டிற்காகவே திராவிடர் என்ற சொல் இருந்தாலும், ”தமிழரே திராவிடர்” என்ற கருத்தியல் ஏன் உருவாக்கப்படவில்லை?!
ஏனெனில் எந்த மலையாளியும், தெலுங்கனும், கன்னடத்தானும் திராவிடக்கூட்டுக்குள் இல்லை என்பது தெளிவான பிறகும் இந்த நடிப்பு தேவையா?? ஆக, உள்ளது உள்ளபடி என்ற ”பழைய ஏற்பாட்டின்” வழியில் திராவிடம் பயணிக்கிறது. ((எ-கா) இன்றைய தமிழர் தலைவர் வீரமணி (?) திராவிடர் கழக மேடைகள்)

அய்யா.அயோத்திதாச பண்டிதர் காலத்தில் சென்னை ராஜதானி இருந்தது என்பதும், அதில் மலையாளியும், தெலுங்கனும் பிரியவில்லை என்பதும் அக்காலத்தில் ஏற்ற வரையறையாக அய்யாவின் உரையில், எழுத்தில் திராவிட சொல்லாடல் அமைந்திருக்கும் என்பதும் சந்தேகத்திற்கு இடமில்லாத ஒன்று.

இங்கே உள்ள பார்ப்பான், தமிழர் என்றால் உள்ளே வந்துவிடுவான் என்ற பயம் தேவையே இல்லை. காரணம், தமிழர் என்பதற்கு சரியான வரையறையும், அளவுகோலும் இருந்தால் பார்ப்பனர்களை வெளியே நிறுத்தி விடலாம். ஆனால், நாம் தமிழர் ஆவணம் இந்த இடத்தில் தடுக்கி விழுந்து உள்ளது. சரி செய்து கொள்வார்கள் என நம்புவோம்.

ஜெயா மாமிதான் மாற்று என்றோ... ஜெயா மாமியைக் கொண்டு ஈழவிடுதலை பெறலாம் என்றோ...சீமான் மேடைப்பேச்சில் உசுப்பேற்றி இருக்கலாம். அவருக்கே தெரியும் ஜெயா மாமியும் கருணாவும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பது!

அரசியலில் காலம் என்பது மிக முக்கியம். இலக்கை நோக்கிய பயணத்தில் எல்லோரும் ஒன்று சேர காலம் கனியும்....
MUTHAMIZHAN
VYASAN & UKV MALLAN AAGIYORIN KARUTHU MIGA SARIYANATHU.
VETRICHELVAN PH: 98948 99510
Seemaanin Arasiayal 80 mudhalaaththuva arasiyaldhaan ! adhai maraikkaththaan vasadhiyaaga DHRAAVIDA YEDHIRPPU mugamoodiyai
aniginraar !
unmaiyil SEEMAAN dhraavidaththai yedhirkka vendum yenil thamizh thesiyaththai uyarththip pidikka vendum thaane ? AVAR AVVAARU THANITH THAMIZH THESIYATHTHAI UYARTHTHIP
PIDITHTHAAL THIRAITHTHURAIYIL NEEDIKKA MUDIYAADHU !

AAM AVARAI NAMBUM YAARUKKUM AVAR PESUVADHU THAMIZH THESIYAMUM ALLA ! AVAR INDHIYA DHESAK KATTUMAANATHTHAI YEDHIRPPAVARUM ALLA YENBATHUM THERIYAADHU ! PAARTHTHAAL PURATCHI MAADHIRIYUM THERIYANUM PUDHUMAIYAAVUM THERIYANUM PUZHUTHTHUP PONA MUDHALAALIYA PAARAALUMANRATHTHUKKUM SEVAI SEIYYANUM ! IDHUTHAANGA SEEEEEEMAAAANIN KOLGAI !

UNMAIYIL DHRAAVIDAM VEEZHTHTHAP PADAVENDUM YENBATHIL MAATRUK KARUTHTHIRKKU IDAMILLAI !

ADHANAI SEEMAANIN SANDHARPPAVAADHA ARASIYAL MOOLAMAAGA VEEZHTHTHA MUDIYAADHU YENBADHE N KARUTHTHU ! thodarndhu vivaadhippom ! nanri...
kannan
சீமானின் திராவிட எதிர்ப்பு என்பது என்னதான் மாய்மலங்களுடன் சொல்லப்பட்டாலும் அது உண்மையில் வைகோவை எதிர்க்க அவர் தூக்கும் ஆயுதம். ஆனால் அது இறுதியில் அவரை தான் அழிக்கும். தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக யார் கிளம்பினாலும் இறுதி தோல்வி அவர்களின் தோல்வியாக வே அமையும். வைகோவை எதிர்க்க திராவிடத்தை கையில் பிடித்து இருக்கும் சீமானை தேசியத்தலைவர் மன்னிக்க மாட்டார். -
thennarasu
Dravidathai vaithu pizhaippu nadathum vottu porukkikalai neradiyaga ethirpathi vittu vittu Dravidam endru avargal adayalam iruppathaal thaan avargal makkalai yematrugirargal enpathu avargal pinpatriya surandal arasiyalai padhu kaapathu agum. Karunadhi thamilar arasiyal pesi irunthalum makkalai yematri thaan iruppar. Indiya vallanmaiyai Yetru kondu intha surandal amaippil evan entha peyaril pathavikku ponalum thamizharkalai yemaatravey seivan. Thavarandhu nabar all. Arasiyal vazhi.
செழியன்
தமிழர் என்பதுதான் திரமிளர், திராவிடர் என்று மாறியதாக புரட்சியாளர் அம்பேத்கர் சொல்கிறார். சரி பின் எதற்கு முரண்பாடுகள்?

தமிழர்கள் அனைவரும் ஒரே இயக்கத்தின் கீழ் வரலாமே?

இங்கு எத்தனை பேர் திராவிடம் என்றால் என்ன? தமிழர்கள் என்றால் என்ன? எனத் தெரிந்துகொள்ள முயன்றுள்ளனர்.

முயன்றிருந்தால்... இங்கு இத்தனை கட்சிகள் தோன்றியிருக்காது அல்லவா.

மக்களுக்கு இதையெல்லாம் தெரிந்துகொள்ள விருப்பம் இல்லை. அவர்களுடைய தேவை தேர்தலின் போது ஆதாயம்... சிலருக்கு பதவிகள், சிலருக்கு பணம், பொருள்...

அவர்கள் கூறுவதெல்லாம் தமிழராவது ... திராவிடமாவது...
padmanaban
kannan pondra athimethavikal ontrai purinthukollavendum. seemanaiyum vaiko avargalaiyum muthalil sandai podavaipathai niruthi kolla veandum. iruvarum oru ilakkil payanikkarargal, seeman arasiyalukku vanthu 3 aandugal agirathu atharkul avar meethu ivvalavu vimarsam vaippathu thevai illathathu. kalam than elavatrirkum pathil vaithirukkum.poruthirunthu parpoam.
Ambeth.yuvan
உலகநாத மள்ளரே! மள்ளர்கள் வரலாற்றை சொந்தம் கொண்டாடும் அவசியம் பறையர்களுக்கு இல்லை.....வள்ளுவ பெருந்தகையையும்,அவ்வையாரையும் தந்த இனம் எங்களது, ஆதி தமிழன் என் இனமே......மறையர்கள் வரலாறு மறைகப்பபட்டது என்பதே உண்மை.....பள்ளு,பறை ஒற்றுமைக்காக கூட"மருதம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாம்....முதலில் உங்களை ஏன் அடிமை படுத்தினான் என்று ஆராயுங்கள் .....நீங்க உங்க வரலாற்றை வெளிப்படுத்தி எங்களிடம் வாதிடுவதை விடுத்து,உங்களை அடிமைபடுத்திய பார்பனனை பார்த்து வாதிடுங்கள்
ச.அருள்
/// தலைவர் திருமாவும் சரி, அவரது தம்பிகளாகிய நாங்களும் சரி, 'ஈழத்திற்கு நாங்கள் போராடுகிறோம், அதனால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்' என்று ஓட்டுப் பிச்சை எடுக்கும் பழக்கம் இல்லை என்பதையும், எழவு வீட்டில் களவு பார்க்கும் புத்தியும் எங்களுக்கு இல்லை என்பதையும் சொல்லிக் கொள்ளகிறேன்.//

//ஊரெல்லாம் சுற்றிவந்து பா.ம.க. பொன்னுசாமிக்கு ஓட்டு கேட்டார்களே தவிர திருமாவளவனுக்கு ஓட்டு கேட்கவில்லை. பொன்னுசாமி வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்று ஈழத்திற்காகப் பேசுவார் என்று நம்பினார்களே தவிர '25 ஆண்டுகாலமாக திருமாவளவன் ஈழத்தைப் பற்றியே பேசிக்கொன்டிருக்கிறாரே; இந்தத் தொகுதியில் திருமாவளவனை ஆதரிப்போம்' என்று யாரும் முன்வரவில்லை//

முரண்
Yogi
தமிழர்களாகிய நாம் பல ஜாதி அமைப்புகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்றோம். இதனால் ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்யாமல் சுயநலத்தால் பிரிந்து கிடக்கின்றோம். இதனால் பிற மாநிலதவர்களாகிய மூன்று சினிமாக்காரர்கள் முதல்வராகி நம்மை சீரழித்த விட்டார்கள்.

கடந்த 50 ஆண்டுகலில் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் மற்றும் வட இந்தியர்களும் நம் நாட்டின் முக்கால் பாகத்தை ஆக்கிரமித்து சந்தோஷாமாக வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள்.

நாம் இன்னும் யார் தமிழர்கள் என்ற சந்தேகத்தோடு நம் உரிமைகள் மறுக்கப்பட்டு ஏமார்ந்து வாழ வழியின்றி தவித்து கொண்டிருக்கின்றோம்.

இந்த நிலமையை மாற்றவேண்டுமானால் நாம் தமிழர் என்ற ஓர் குடையின் கீழ் நம் நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.
sivakumar
தமில் தமில் என்ட்ரு பேசும் தலைவர்கல் வீட்டு பில்லைகல் படிப்பது இங்லிஷ் கான்வென்டில் அதை கேட்டு கொன்டிருந்த தமிலர்கல் வீட்டு பில்லைகல் கார்பரேசன் பல்லியில் வால்க தமில் வலர்க தமில் தலைவர்கல்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.