எனது தெருக்கள் என்னை அனுமதிக்காத
விளையாட்டு நாட்களில்
படிப்பறையில் தைக்கப்பட்ட
எனதுடலுக்கு மரச்சன்னல்கள்
பறவைகளையும்
நட்சத்திரங்களையும் பரிசளித்தன
சிலமரக் குச்சிகளும் கோலிகளும்
வண்ணப்படத் துண்டுகளும் கண்ணாடிப் பட்டைகளும்
முற்றிலுமாக மறுக்கப்பட்ட எனது வீடு
பொட்டலுக்கு எதிராக
கம்பீரமாக நிமிர்ந்திருந்தது
எத்தனை மழைக்காலங்கள்
விலகும் சினேகதிகளின் சரும வாசனைகள்
குற்றம் காண முடியாத அறிவு மிளிரும் கண்கள்
தெருக்களில் இருந்து கண்டத்திற்கும்
கடல் நிலங்களுக்கும் அலுவலக அறைகளுக்கும்
ஓய்வு விடுதிகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும்
சேவைகளுக்கும் மாறிக் கொண்டேயிருக்கிறது
எனது சகவாசம்
தப்பித்துப் போய் விட்டதாக தெருத்தோழர்கள்
சிரிக்கிறார்கள்
எனது வீட்டின் இசையில் தனிமை கொள்கிறேன்
பறவைகளும் நட்சத்திரங்களும்
இன்னமும் எனது சன்னலில்
முற்றிலும் பால்யம் அகற்றப்பட்ட எனது வீடு
கம்பீரமாய் இருக்கிறது.

2. இராஜ விசுவாசம்

வீட்டின் கூட்டிலிருந்து
அலுவலக கட்டிடங்களில்
வந்தமரும் புறாக்கள்
கோப்புகளில் அத்தனை வித்தைகளையும் பழகுகின்றன
தேவையான தானியங்களையும்
சிலசமயம் புழுக்களையும் பொறுக்கித் தின்றபடி
மாலையில் கால்களில் கோப்புகளைக் கட்டிக்கொண்டு
வீடு திரும்புவது அவற்றின் வழக்கம்
புறாக்கள் இராஜ விசுவாசம் நிரம்பியவை
அதிகாரத்திலிருந்து அமைதியின் குறியீடுகளாக
பறக்க விடப்படும் அவைகள்
நல்லெண்ணத்தின் சின்னமாகவும்
வாயில் தானியக் கதிரை சுமக்கின்றன
மாடங்களிலும் உயர்ந்த தண்ணீர் தொட்டிகளின்
அடியிலும் மட்டுமே அடையும் புறாக்கள்
காகித வாழ்க்கைக்குள்ளே
தங்கள் சிறகுகளை உதிர்த்துவிட்டு
இறுதியில் ஓய்ந்து விடுகின்றன
மனிதருக்கிடையே சகஜமாக உலவுவதாக
பாவனைப்படும் புறாக்கள்
உண்மையில் பரபரப்பும் பதற்றமும் நிறைந்தவை
விசுவாசத்தின் தற்கொலைகளை தேக்கியிருக்கும்
அவற்றின் கண்கள்
சிலசமயம் காவி நிறத்திலும் இருக்கும்.