கைகளை சிலுவையாக்கி கன்னம் சரித்திருக்கிறாய்
பின் கழுத்தில் ஊர்ந்து பார்க்கும் எறும்பு மனம்
எழுதுகோலில் எங்கிருந்தோ கிளம்புகிறது
பொதுவான சிறு நடுக்கம் போதுமென புதிர் பார்வை
பதற்றம் மற்றோருக்கு தான்
அடுத்த வரி யோசிப்போனுக்கு இல்லை
கால்களின் அமைவு
அதுவாகவே ஒன்றன் மேல் ஒன்றாக
சற்று மேலே கீழே கச்சிதம் செய்திருக்கிறது
எதுகை மோனை இயல்பாக சேர்ந்து விட்டது போல
தளர்ந்து உள்ளொடுங்கிய வயிற்று பகுதியில்
வாகாக நுழைந்து நெம்பி நகர்ந்த சுவடில்
ரத்த பூக்கள் சொரிகின்றன
தத்தகாரம் சரியாகவே கிடைத்திருக்கிறது
பேரன்பின் வளைவு நெளிவுகள்
கருணையின் கால இடைவெளியை இணைக்கின்றன
வார்த்தை கச்சிதம் கிடைத்த இவ்வரியில் பேரின்பம்
மேல் நோக்கி தேடும் கண்களில் கதவடைத்த உலகம்
மெல்ல குறுகிய இதயத்தில் அப்போதும் அன்பு
நினைத்தால் கை கொடுக்க முடிகின்ற அருகாமையில்தான்
முள் கிரீடத்தில் தலைப்பு கோர்க்கிறேன்
முப்பொழுதும் மன்னிக்காதே நண்பனே
சுற்றி நின்ற அயோக்கியன்களில்
மிக கொடூரன் இந்த கவிதைக்காரன்
- கவிஜி