நான் காலையில் எழும்பிக் காலைக்கடன்களையெல்லாம் முடித்துக் கொண்டு உம்மாவிடம் ஒரு கப் காபி கேட்டப்போது தான் என் குரல் மாறியிருப்பது தெரிய வந்தது. வீட்டில் ஒரே களேபரமாக தகவல் வாப்பா, உப்பா, தாத்தா ஆகியோருக்கு தெரிந்ததிலிருந்து தொடங்கியது. நேற்று வரை மனித குரலில் பேசி வந்த தன் மகன் ஏதோ ஒரு குரலில் பேசும் அதிர்ச்சியில் பெற்றோர்கள் உறைந்து இருந்தனர். இது நிச்சயமாக ''அபாபீல் பறவைகளின் குரலேதான்'' என்று உப்பா கிசுகிசுத்தார். தாத்தா இது பறவையின் குரலே தான் என்று ஆணித்தரமாக கூறினார்.

அவனுக்கு குரல் திரும்பி விட்டால் ஆத்தங்கரை தாய்க்கு நூற்றியொரு குடம் தண்ணீர் இறைத்து தருவதாக உம்மா வேண்டிக் கொண்டாள். செய்தியை பெரிதுபடுத்தக்கூடாது. அதனால் பையனின் எதிர்காலமே பாதிக்கும் என்று வாப்பா வெளியே யாரிடமும் சொல்லாமல் போனாலும் அரைமணி நேரத்துக்குள்ளாக அக்கம், பக்கம் என தெரிந்தவர்களிடம் செய்தி பரவ அதிர்ச்சியடைந்த மனோபவம் வெளிக்காட்டப்படுவதை காண முடிந்தது.

நேற்றிரவு தூங்க போவதற்கு முன்பு வரை உம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த போது கூட இப்படியாகும் என்று தெரியாமலே இருந்தது. கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாத மனநிலையில் இருந்த போதும் ஏதாவது பேச முற்படும்போது அந்த குரல் தான் வருகிறது என்றால் என்னால் என்ன செய்ய முடியும் என்ற ஆதங்கம் கழிவிரக்கமாக தொற்றிக் கொண்டது. இனி இப்படி தான் என்ற எண்ணம் வேறு தோன்றிக் கொண்டேயிருந்தது. நிச்சயமாக என் வாழ்வில் நல்ல தருணங்களை இழக்கும் அபாய அறிவிப்பு தான் இந்த குரல் மாற்றம் என்று எனக்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டேன். முதலில் பறவையின் குரலா அல்லது விலங்கின் குரலா என்பதை கண்டறிய வேண்டும். மேலும் இந்த குரல் மாற்றம் எப்படி நிவர்த்தி செய்யப்படக்கூடும் என்று ஆளாளுக்கு பல்வேறுவிதமாக பேசிக்கொண்டார்கள்.

half-bird-half-human

சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு மனநல டாக்டர் அழைத்து வரப்பட்டார் அவர் என்னை பேச சொல்லி கேட்டபோது அந்த குரல் மீண்டும் வந்ததை கேட்டு திடுக்கிட்ட டாக்டர் மீண்டும் பேச சொல்லவே அந்த குரல் தான் வந்துக் கொண்டிருந்தது. இது பறவையின் குரலே தான் என்று மட்டும் தான் இப்போது சொல்ல முடியும். இது குறித்து விரிவான ஆய்வை விரைவில் செய்வோம், கவலைப்படாதீர்கள் என்று தோளைத் தட்டிவிட்டு சென்ற போதிலும் பறவையின் குரல் என்றால் எந்தப் பறவையின் குரல் என்று டாக்டர் சொல்லவில்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்டேன். வாப்பா போனில் யாரிடமோவெல்லாம் இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். போனை வைக்கும் போதெல்லாம் அவர் முகம் களைத்துப்போனது மாதிரியான உணர்வுகள் மீதியிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

செய்தியறிந்து பதறியடித்துக்கொண்டு ஓடி வந்த குட்டியாப்பா என்னைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கொண்ட போதிலும் சுதாரித்துக் கொண்டு இனி நமக்கு அதிர்ஷ்டமே என்று கூக்குரலிட்டார். வாப்பாவும், உம்மாவும், தாத்தாவும், உப்பாவும் ஆச்சரியப்பட்டுக்கொண்டு கேள்விக்குறியுடன் நிற்பதை பார்த்து புரிந்து கொண்ட குட்டியாப்பா இனி நமக்கு அதிர்ஷ்டமே என்று மீண்டும் குரலெழுப்பினார். இது வரை பேசாமலிருந்த உப்பா அப்படித்தான் தோன்றுகிறது என்று சொன்னார். அங்கிருந்து நகர்ந்த குட்டியாப்பா இனி நமக்கு அதிர்ஷ்டமே என்ற புலம்பிக் கொண்டே வெளியே சென்றுவிட்டார். உப்பா மெதுவாக என்னருகில் வந்து எல்லாம் நல்லதுக்கு தான், கவலைப்படாதே என்று கட்டியணைத்துக் கொண்டார். கொஞ்ச நேரத்தில் வீட்டில் சந்தோஷக்களை கட்ட ஆரம்பித்திருப்பதை புரிந்து கொண்ட நான் துக்கத்தை விட்டொழித்தேன். அதுவரை என்னைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களில் சிலர் கலைந்து பிரிந்து செல்ல ஆரம்பித்தனர். அப்போது சிலர் ஒரு பக்கீரை அழைத்துக் கொண்டு நிறுத்தினர். உடல் முழுவதும் பச்சை ஆடையை அணிந்திருந்த பக்கீர் கையில் தஸ்பீக்கை உருட்டியபடி ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டே என்னை ஐந்தாறு தடவை சுற்றிக்கொண்டு எனக்கு நேரே நின்று தலையிலிருந்து கால்வரை கையால் மூன்று முறை தடவினார்.

நான் பேச ஆரம்பித்த போது அந்தக் குரல்தான் ஒலித்தது. கீச்சிடும் அந்தக் குரல் கேட்டு எல்லாரும் காதைப் பொத்திக் கொண்டனர். என் குரல் இரைத்துக் கொண்டே அதிகமானது. என்னையறியாமலே என் குரல் ஒலிக்கிறது. அந்தக் குரல் கேட்டு வீட்டில் இருந்த கண்ணாடி, பீங்கான் சாமான்கள் உடைந்து தெறிக்கின்றன. எங்கெல்லாம் கண்ணாடியிலான பொருட்கள் இருந்ததோ அங்கெல்லாம் உடைய ஆரம்பித்தது. பயங்கரமான கண்ணாடிச் சிதறல்களின் ஒலி அந்தப் பிராந்தியத்தையே உலுப்பியது. பக்கீர் அமைதியாக தஸ்பீக்கை உருட்டி கொண்டே ''லா இலாஹ இல்லல்லாஹ்'' என்று முழங்கினார். வாப்பாவும், உம்மாவும் மற்றவர்களெல்லாம் வெலவெலத்துப் பயந்து போய் நின்றனர். என் குரல் சப்தம் மெதுவாக அடங்கியது. பயம் கலைந்து அங்கு நின்றவர்களெல்லாம், மிரட்சியுடன் வீட்டை விட்டுச் சென்றார்கள். உம்மா மாத்திரம் குமுறி அழுதார். பக்கீர் புறப்பட்டுப்போனார்.

எனக்கே விசித்திரமாக நடந்த சம்பவம் போல் அது தோன்றியது. என்னருகே நின்றிருந்த தாத்தா என் தோளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். உப்பா செயரில் அமர்ந்தவாறு ஏதோ பலமாக யோசித்துக்கொண்டு இருப்பதுபோல இருந்தார். சற்று நேரத்துக்குப்பின் உம்மாவும் தாத்தாவும் வீட்டைப் பெருக்கி உடைந்த கண்ணாடிப் பொருள்களையெல்லாம் அப்புறப்படுத்தினார்கள். வாப்பா உடைந்த டீ.வி. யை தூக்கிக்கொண்டு ஒரு மூலையில் வைத்தார். அனைத்து கண்ணாடி பொருட்களும் உடைந்திருந்தன. நிச்சயமாக எனது குரல் அதிர்ஷ்டமில்லை என்று நினைத்துக் கொண்டேன். அப்போது அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஒரு கும்பலாக வந்து வாப்பாவிடம் உங்களது மகனது குரலால் கண்ணாடிப் பொருட்கள் உடைந்து விட்டன. எனவே அவனைக் கூட்டிக் கொண்டு வேறெங்காவது போய்விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தனர். வாப்பா அப்போது சரி என்று மட்டும் சொல்லுவதை தவிர வேறு வழியில்லாததினால் சம்மதித்துக் கொள்ளவே அந்தக் கும்பல் திரும்பிச்சென்றது. என்னால் என்னவெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று வருத்தப்பட்டுக் கொண்டே எனது படுக்கையில் சென்று கிடந்து கொண்டேன்.

உடம்பெல்லாம் வலிப்பது போலவிருந்தது. கொஞ்சமாக வலி கூடிக் கொண்டே வந்தது. கைகளும், கால்களும் விண் என தெறித்ததுடன் இது வரை இது மாதிரியான வலி வந்ததில்லை என்று எண்ணுமளவுக்கு வலி அதிகரித்தது. கைகளும், கால்களும் பிய்ந்து விடுவதுபோல் தோன்றியது. விலாப்புறத்திலும் இடுப்பிலும் கூட வலியின் வேகம் கூடிக்கொண்டே சென்றது. ஏன் இப்படி வலிக்கிறது என்று நினைத்துப்பார்க்கக்கூட முடியாமல் உடம்பெல்லாம் அதிர்ந்தது. மெல்ல எழும்பிப்போய் அலமாரி கண்ணாடியில் உற்றுப்பார்த்தேன். உடம்பை அணு அணுவாக நான் கவனிக்கவும் வலியும் அதனூடே பரவும் ஒரே சமயத்தில் கைகளிலும், விலாப்பகுதியிலும், கால்களிலும் ஏதோ கிழித்து கொண்டு வருவது போல தோன்றியது. கண்ணாடியை நான் நோக்கிப் கொண்டிருக்கும் போது அவைகள் வெளியே கிளம்பின. வெடித்து கிளம்பியது போல முளைக்கின்றன. அந்த இடத்திலெல்லாம் வலியும், ரத்தமும் பெருக்கெடுத்தன. ஏதோ இறகுகளை போல இருக்கிறதே என்று நினைத்தபோது அவை பெரிதாகிக் கொண்டே சென்றன. இருப்பினும் கால்களிலும் சிறிதாக தான் முளைத்து இருந்தன ''இறகுகள்''!! எனக்கு இறகுகள் முளைத்து விட்டன. சற்று நேரத்துக்குப்பின் வலியெல்லாம் அடங்கிப்போயின. கூடவே இறகுகள் வளர்வதும் நின்றுவிட்டது. அரைமனிதத் தோற்றமும் அரை பறவை தோற்றமும் கொண்ட விசித்திரப் பிராணியாக நான் மாறிப்போனேன்.

இரண்டு கைகளையும் அசைத்துப் பார்த்தேன். இறகுகள் பட படத்துக் கொண்டு அதிர்ந்தன. இப்போது என் அசைவு கட்டுப்படாத மாதிரி கைகள் அசைகின்றன. மேலே உயர்ந்து கீழே சரிந்து கைகள் இயங்குகின்றபோது இறகுகளும் அதிரத் தொடங்குகின்றன. மெல்ல நான் மிதக்க ஆரம்பிக்கிறேன். அறைக்குள் எஸ் வடிவத்தில் பறந்து வாயில் கதவுகளை கடந்து, ஹாலை கடந்து, சிட் அவுட்டைக் கடந்து நான் பறக்கிறேன். பறக்க பறக்க இலாவகமான உணர்வை மனது எட்டிப் பிடிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தெரு வீதிகளில் ஆல, அரச மரங்களுக்கு மேலே பறந்து செல்கிறேன். உயரமான கட்டிடங்களைத் தாண்டி, மரங்களைத் தாண்டி வேகமாக, வேகமாகப் பறக்கிறேன். இப்போது என் கண்களுக்கு அந்த டவுன் முழுவதும் தென்படுகிறது. கீழே சின்னஞ் சிறுசுகளாய் வாகனங்களும் கட்டிடங்களும், மனிதர்களும் என்று பூமி சுருங்கிக்கொண்டே போகிறது. நான் வேகமாக பறந்து எனது டவுனைக் கடந்து புல்வெளி, வயல்வெளி என்று இயற்கையின் ஒவ்வொரு இருப்பையும் கடக்கிறேன். மலைகளைக் கடந்து, காடுகளைக் கடந்து, மேலும் பல ஊர்களைக் கடந்து பறக்கிறேன். என் பறத்தல் சுகமாகயிருந்தது. இனிமையான அனுபவமாகத் தோன்றியது. யாருக்கும் வாய்க்கப் பெறாத இந்த அனுபவத்தை ஒரு வேளை அதிர்ஷ்டம் என்று கூடச் சொல்லலாம். குட்டியாப்பா சொன்னதன் பொருள் இப்போதுதான் விளங்குகிறது.

ஜனங்கள் திகிலுடன், ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். இது போன்ற அதிசயமான பறவையை வாழ்நாளில் இதற்கு முன்பு காணாத பாவத்துடன், பலர் நடுங்கி குரலெழுப்பிக் கொண்டு பயந்து ஓடுகிறார்கள். எனவே ஜன நடமாட்டம் தவிர்த்து பறக்கத் தொடங்கினேன். ஆகாயத்தின் பெருவெளியில் நான் ஒரு தூசு போலத் தோன்றும் அளவுக்கு ரொம்ப நேரம்பறந்ததினால் களைப்பும், சோர்வும் என்னை தீண்டவே, மெதுவாக பறக்க ஆரம்பித்து இனி இது போதும் என்ற முடிவுடன் வீட்டை நோக்கித் திரும்பப் பறக்கிறேன். பறந்து பறந்து முடிவில் வீட்டை வந்தடைந்த உடன் நேராக எனது ரூமுக்குள்ளே சென்று விட்டேன். அப்படியே மல்லாந்து சிறகுகளை விரித்துக்கொண்டு படுத்தேன். அப்போது எதேச்சையாக அங்கு வந்த தாத்தா எனைப் பார்த்ததும் அலறினார். நான் எழும்பி உட்காரவும் உம்மாவும், வாப்பாவும், வந்துவிட்டார்கள். இது என்ன கொடுமை என்று உம்மா அழுதாள். வாப்பாவின் கண்கள் கூட பனித்தது. உப்பா வந்து பார்த்துவிட்டு அப்படியே நிலைகுலைந்து தரையில் உட்கார்ந்துவிட்டார். எல்லாரும் என்னைச் சுற்றி நின்றுகொண்டு அழுதார்கள். இதைக்கண்டு எனக்கும் அழுகை வந்தது. வெளியே ஏதோ ஆரவாரம் கேட்டு திரும்பிய எல்லோரும் மக்கள் திரளாக வந்து நிற்பதைக் கண்டு திடுக்கிட்டோம்.. வாப்பா திடீரென்று ஒரு போர்வையை எடுத்து என்மீது போர்த்திவிட்டு அவர்களை நோக்கிப் போனார்.

half-bird-half-human

கூட்டத்திலிருந்து ஒருவன், பறவை மனிதனைப் பார்த்து விட்டோம்... அவனைக் கொன்று விடுங்கள் உலக அழிவுக்கு அவன் ஒரு அபாய அறிகுறி கொன்றுவிடுங்கள் என்று கூறவே எல்லோரும் சேர்ந்து கொன்றுவிடுங்கள் என்று சப்தமுயர்த்தினார்கள். வாப்பா ஒரு வழியாக அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு என்னிடத்தில் வந்து எங்காவது சென்றுவிடு இல்லையென்றால் மக்கள் உன்னை கொன்றுவிடுவார்கள் என்று வேண்டுகோள் விடுக்கவே நான் அழ ஆரம்பித்தேன். அந்தக் குரல் தான் வந்தது. எல்லோரும் காதைப் பொத்திக்கொண்டார்கள். இனி இங்கிருப்பது அபாயமாகத் தான் முடியும் என்று எண்ணிக் கொண்டு எழும்பி நின்றுக் கொண்டு கைகளை விரித்து, சிறகடிக்க ஆரம்பித்தேன்.

வீட்டில் உள்ளவர்கள் அதிசயமாகப் பார்க்க நான் ரூமைவிட்டு வெளிநோக்கி பறக்க ஆரம்பித்தேன். வீட்டை விட்டு ரொம்ப தூரம் பறந்து ஒரு மலையை நோக்கி பறந்தேன். என் வேதனையை மறக்க இயன்ற போதும் முடியாமல் மலையின் உச்சியில் ஒரு பாறையின் மேல் சென்று சிறகுகளை மடக்கிக் கொண்டு இறங்கினேன். அந்த ரம்மியமான மலைப்பகுதியில் ஆளாரவாரமற்று, மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. பாறையில் அமர்ந்த நான் மக்கள் சொன்னதை மீண்டும் யோசிக்க ஆரம்பித்தேன். பறவை மனிதன் கதைகளில் கூட கேட்க முடியாத விசித்திரமான உருவம், பெற்றோர்களில் இருந்து ஒவ்வொருவரும் வெறுக்கும் உருவம். 

இந்த உருவத்தோடு எப்படி வாழ்வது, பறவை மனிதனை கொன்று விடுங்கள் என்ற சப்தம் எதிரொலித்தது. ஜனங்களெல்லாம் சுற்றி நின்று, கொன்று விடுங்கள் என்று சொல்லும் குரலொலிகள் அதிர்ந்தன. நான் கூனிக்குறுகிக் கொண்டு அழ ஆரம்பித்தேன். அந்த பிரதேசம் முழுவதும் பறவையின் அந்த குரல் சப்தம் எதிரொலிக்கத் தொடங்கியது. அப்படியே மல்லாந்து கிடந்த நான் திடீரென்று கண்விழித்த போதுதான் உறங்கிப்போனது ஞாபகத்துக்கு வந்தது. இந்த உருவத்தையும், சப்தத்தையும் எப்படியாவது, யாராவது மாற்ற மாட்டார்களா என்ற ஆதங்கமும் எழுந்தது. எப்படியாயினும் இதை மாற்றியே தீர வேண்டும் என்ற முடிவுடன் எழுந்த போது யாரோ எனை அழைப்பது போல தோன்றியதினால் திரும்பப் பார்த்தபோது ஒரு காகம் வந்து என் முன்னே அமர்ந்தது. 

காகம் எனை அழைத்ததை என்னால் புரிய முடிந்தவுடன் திடுக்கிட்டு காகத்தைக் கேட்டபோது அதுவும் ஒப்புக்கொண்டது. எனக்கு பறவையின் பாஷை தெரிகிறது. நான் எனது சங்கடத்தையெல்லாம் காகத்திடம் சொன்னபோது அது எனக்கு சமாதானம் சொல்லி தேற்றிவிட்டு தன் கூட பறந்து வருமாறு சொல்லி விட்டு பறக்கத் தொடங்கியது. எதாவது முக்கிய விஷயமாயிருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு நானும் காகத்துடன் பறக்க ஆரம்பித்தேன். அது ஒரு பிராந்தியத்தில் நுழைந்தது. அங்கே ஆயிரக்கணக்கான காகங்கள் இருந்தன. எனைக் கண்டவுடன் எல்லாக் காகங்களும் காகா என்று குரலெழுப்பி அதிருப்தியை தெரிவித்தன. உடனே காகம் இவர் சங்கடத்திலிருக்கிறார் நமது பெரியவரிடத்தில் ஆலோசனைக்காக கூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொன்னபோது காகங்கள் அமைதி காத்தன. அந்த ஆலமரத்தில் காகம் சென்று உட்கார்ந்தது. நான் ஆலமரத்தின் அடியில் நின்றேன். சிறிது நேரத்தில் ஒரு வயதான கிழ காகமும், மற்ற காகமும் பறந்து வந்து என்னருகே நின்றன. நான் நடந்த சம்பவங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் சொல்ல எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த கிழகாகம் தனக்கு ஒரு மருத்துவத் துறவியியை தெரியுமென்றும் அந்தத் துறவியை சந்தித்தால் பிரச்சனைக்கு வழிதெரியும் என்று கூறவே நான் துறவியிருக்கும் இடத்தை விசாரித்து அறிந்துகொண்டு எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு உடனே கிளம்பிப் பறக்க ஆரம்பித்தேன்.

காடுகளையும், மலைகளையும், புல் பிரரேதசங்களையும் தாண்டி அந்தக் குண்றின் தாழ்வாரத்தில் நேராக தர்ஹாவின் அருகில் சென்று இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தபோது ஐந்தாறு பேர் மருந்து அரைத்துக் கொண்டிருப்பதையும் ஒரு வயதான மனிதர், பச்சிலைகளைக் கட்டிப் போடுவதுமாக இருக்கக்கண்டு அவர்கள் அருகில் நெருங்கிய போது, அவர்கள் பயத்தால் அலறினார்கள். அப்போது வயதான மனிதர் பயம் களையும் படி அவர்களைப் பார்த்து கூறிவிட்டு என்னருகில் வந்து பிரமிப்புடன் என்னை நோக்கினார். என்ன விசயமாக இங்கு வந்தாய் என்று கேட்கவே நான் பேச முற்பட்டபோது அந்தக் குரல் தான் வந்தது. அவர்தான் மருத்துவத் துறவியாக இருக்கக்கூடும் என்று நான் ஊகித்த போது, குடிசையின் உள் சென்று ஒரு மருந்துப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து ஒரு பச்சிலையை எடுத்துச் சாறு பிழிந்து இரண்டு குளிகைகளை அதில் போட்டு கரைத்து ஒரு குவளையில் ஊற்றி விட்டு அருகில் நின்றிருந்த ஒருவனிடம் பலகையை எடுத்துவருமாறு கூறியதும், அவன் சென்று பலகையை எடுத்துக் கொண்டு வந்தான்.

கூடவே சோளிகளையும், அவர் நன்பு வைத்தான். அவர் பலகையில் ஏதோ வரைந்துவிட்டு சோளிகளை கைகளில் வைத்து குலுக்கிக் கொண்டு போட்டார். சோளிகள் குப்புற விழுந்து கிடந்ததைக் கண்டு ரொம்ப நேரம் கண்ணை மூடிக் கொண்டு அந்த குவளையைக் கையிலெடுத்து ஏதோ வரைந்து விட்டு சோளிகளை கைகளில் வைத்து குலுக்கிக்கொண்டு போட்டார். சோளிகள் குப்புற விழுந்து கிடந்ததைக் கண்டு ரொம்பநேரம் கண்ணை மூடிக் கொண்டு அந்த குவளையைக் கையிலெடுத்து ஏதோ ஜெபித்துக்கொண்டு, மூன்று முறை குவளையில் ஊதிவிட்டு என்னிடம் தந்து குடிக்குமாறு கூறவே நானும் மறுப்பேதும் சொல்லாமல் ஒரே மூச்சில் குடித்து முடித்தேன். பின்னர் அவர், இப்போது சொல் என்ன விஷயமாக வந்தாய் என்று கேட்டபோது நான் பேசினேன். அந்தக் குரல் வரவில்லை. மனிதக் குரலில் நான் பேசினேன். எனக்கு ரொம்பவும் ஆச்சரியமாகப் போனது. அந்தத் துறவி, சுமார் மூன்று மணி நேரம் இந்த மருந்து வேலை செய்வதால் உன்னால் மனிதக் குரலில் பேச முடியும். இதற்கான தீர்வு ஒன்றிருக்கிறது. இங்கிருந்து வலதுபுறமாகச் சென்றால் ஏழு குளங்கள் தென்படும், ஏழாவது குளத்தின் நடுவில் ஒரு பெரிய வேப்பமரம் இருக்கிறது. அந்த மரத்தின் மேல் வலியுல்லாஹ் ஒருவர் இருப்பார். அவரைச் சென்று பார்த்தால் உனது பிரச்சினைக்கு வழி தெரியும் என்று சொல்லவே நான் அவருக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு வலியுல்லாவை தேடிக்கொண்டு பறக்க ஆரம்பித்தேன்.

மனதில் உற்சாகம் கரைபுரள ஆரம்பித்தது. விடிவுகாலம் பிறந்துவிட்டது என்றே தோன்றியது. எவ்வளவு அற்புதமான துறவி. சில நொடிக்குள்ளேயே எனது பேசும் வலிமையை மீட்டுத் தந்தவர். கண்டிப்பாக நல்ல தீர்வைத்தான் சொல்லி இருக்கிறார். வலியுல்லாவை இன்னும் அரைமணி நேரத்தில் சந்தித்துவிட்டால் மனிதக் குரலிலேயே பேசி எப்படியாவது ஒரு தீர்வைப் பெற முடியும். என்று நினைத்துக்கொண்டே வலதுபுறமாக துறவி சொன்னது போல குளங்களை கடந்து, முடிவில் ஏழாவது குளத்தைக் கண்டு, குளத்தில் வேப்பமரம் இருப்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டு மெதுவாக பறந்து சென்று வேப்பமரத்தில் அமர்ந்தபோது, வலியுல்லா கண்ணை மூடிக்கொண்டு ஆழ்ந்த நிஷ்டையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரியவந்தது.

அந்த வேப்பமரத்தில் அழகான இருக்கை அமைத்துக்கொண்டு ஒதுங்கி இருப்பதுதான் நிஷ்டைக்கு உத்தமம் என்று அறிந்து வைத்திருப்பதனால் தான் இப்படி இவரால் இருக்க முடிகிறது. சாதாரணத் தோற்றமுடைய மனிதனாகத்தான் இவர் காட்சியளிக்கிறார். இவரை அழைக்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் வேறு மனதில் இருக்கிறது. எனினும் கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வேப்பமரத்திலேயே அமர்ந்திருந்தேன். சற்று நேரம் கழித்து கண்திறந்து வலியுல்லா எனைக் கண்டு எந்தவித ஆச்சரியமுமின்றி இருப்பதைப் பார்த்து எனக்கு அதிசயமாக இருந்தது. என் தோற்றம் மாற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது எந்த பதிலும் சொல்லாமல் என்னைப் பார்த்து அமைதியாக புன்முறுவல் பூத்தவாறு இருந்தார்.

பின்னர் கண்களை மூடிக்கொண்டு கைகளை மேலே உயர்த்தி ஏதோ முணுமுணுக்க அவரின் இருக்கைக்கு முன்பு மாய விநோதமான ஒரு புத்தகம் தோன்றியது. பின்னர் அந்தப் புத்தகத்தை எடுத்து எனக்கு தந்துவிட்டு போ என்று சைக்கினையால் கட்டளையிட்டார். நான் புரிந்து கொண்டு போக எத்தனிக்கும் போது, என் கையைப் பிடித்து இழுத்து கருமணிமாலை ஒன்றை கையில் தந்துவிட்டு மீண்டும் நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார். நான் அவருக்கு நன்றி கூறிவிட்டு கருமணிமாலையையும் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு பறக்க ஆரம்பித்தேன். அழகான, பசுமையான ஒரு புல்வெளிப் பிரதேசத்தை அடைந்ததும் நான் ஒரு மரத்தினடியில் இறங்கி, சற்று நேரம் ஓய்வெடுத்தேன். அப்போது தான் புத்தகத்தைக் கவனித்தேன். அந்த புத்தகம் மிகவும் புராதான காலத்தை சார்ந்ததாகக்கூட இருக்கலாம். கருமையான அட்டையை உடையதும் கோதுமை மஞ்சள் காகிதங்களை உடையதுமான புத்தகம். முன் அட்டையில் கூட எந்த எழுத்தும் காணப்படவில்லை ஆகையினால் திகைத்து அந்த முதல் பக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் போது எழுத்து தோன்ற ஆரம்பித்தது. ...யா மூமீன் இந்தப் புத்தகத்தை புரட்டுகின்றவர் யாரானாலும் பாக்கியவான்கள். ...அல்லாஹ்வின் கிருபை அவருக்கு உண்டு. வெறுக்கத்தக்க சைத்தானின் துர்நாற்றம் கூட இனி தீண்ட முடியாது. பிரபஞ்சத்தின் பேரகசியங்களனைத்தும் அடங்கியிருக்கும் மாபெரும் கலைக்களஞ்சியம் தானிது என்று பொன்னெழுத்துக்களில் தோன்றியது.

half-bird-half-human

நான் அதிசயமாக புத்தகத்தையே மீண்டும் கவனித்துக் கொண்டிருக்கவே மீண்டும் எழுத்து தோன்றியது. இந்த புத்தகம் மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் காலத்திலே இறையருளால் இரக்கப்பட்டது. எகிப்து தேசத்திலும், பாரசீக தேசத்திலும், அரேபிய தேசத்திலும் பல்வேறு இறையடியார்கள் இந்தப் புத்தகத்தை பாதுகாத்து வந்தனர். மொகலாய பேரரசர்களின் காலத்தில் பாரசீக தேசத்திலிருந்து இந்த புத்தகம் கொண்டு வரப்பட்டது. வட நாட்டில் பல இறையடியார்கள் இந்தப் புத்தகத்தை பொக்கிஷம் போல் பாதுகாத்து வந்தனர். தென்னாட்டில் இருந்து வந்த சூபி ஒருவருக்கு இது கிடைக்கவே தென்னாட்டில் இந்த புத்தகம் வந்தது. இப்போது பல வலியுல்லாஹ்களின் கைமாறி பாக்கியம் நிறைந்த உனக்கு கிடைத்துள்ளது. அல்லாஹ் அக்பர் அர்ரஹிமானி ஸ்ரஹிம்...இன்ஷா அல்லா இந்த புத்தகத்தை பிரச்சனைகளில் இருந்து விடுபட நினைத்துத் திறக்கும் பட்சத்தில் பாக்கியம் நிறைந்தவர்களின் கண்களுக்கு மாத்திரம் பதில் கிடைக்கும் என்று பொன்னெழுத்துகள் மின்னி மறைந்தன.

நான் எனது பிரச்சனையை மனதில் நினைத்துக் கொண்டு மீண்டும் புத்தகத்தைப் புரட்டவே... பாக்கியம் நிறைந்தவனே...அல்லாவின் கிருபையால் உனது பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். மொஹல்ல தீவுகளின் நடுவில் அமைந்த ஒரு தீவில் இருக்கும் கண்ணாடி மாளிகையில் ஒரு பளிங்குச் சிலை இருக்கிறது. அந்தச் சிலையில் இருக்கும் அதன் இரண்டு வைரங்களாலான கண்களை எடுத்துக் கொண்டு பொதிகை மலையின் உச்சியில் அமைந்திருக்கும் கற்சிலையிலான ஒரு ராட்சத கழுகுக்கு அந்தக் கண்களை பொருத்தும் பட்சத்தில் உனது பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என்று பொன்னெழுத்துக்கள் மறைந்து விட்டன. நான் சந்தோசத்தில் துள்ளிக் குதித்து சப்தமிடவே மீண்டும் அந்தக் குரல் தான் வந்தது. அந்த குரல் கேட்டு படபடவென்று இறக்கையடித்து, பயந்தவாறு பறந்தன, அந்த பிராந்தியத்தின் பறவைகள் விரைவாக... மருந்தின் நேரம் முடிந்து விட்டது. அதனால் தான் பழைய குரல் தோன்றியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

மொஹல்ல தீவு என்பது தற்போது மாலத்தீவுகள் என்பது கூட எனக்குத் தெரியும். ஆனால் அவை ரொம்ப தூரத்தில் அல்லவா இருக்கிறது. இங்கிருந்து அவ்வளவு தூரம் பறப்பது சாத்தியமான விஷயம் தானா. கடல் கடந்தல்லவா செல்ல வேண்டும். வழியில் எங்குமே களைப்பாறக் கூட எந்த வாய்ப்பும் இல்லையே என்றெல்லாம் பல்வேறு விதமாக நினைத்துக்கொண்டு மொஹல்ல தீவுக்கு புறப்படத் தயாரானேன். கருகமணி மாலை கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. முன்னது போல புத்தகத்தை எடுத்து வயிற்றில் சேர்த்து கட்டிக் கொண்டேன். இப்போது மெதுவாக கைகளையும் சிறகுகளையும் விரித்துக் கொண்டு மெலெழும்பிக் கொண்டு பறந்தேன். பல விதமான ஊர்களையும், வானாந்தரங்களையும், மலைகளையும், வயல்வெளிகளையும், கடந்து கடல் நோக்கிப் பறந்து மெல்ல மெல்ல கடலின் மீது பறக்க ஆரம்பித்தேன். நீலத்திரையுடன் கடல் ஆர்ப்பரிப்பது காதுகளுக்குக் கேட்டுக் கொண்டேயிருந்தது. படகுகளில் மீனவர்கள் மீன்பிடிப்பதும், நாரைகளும், கடல் பறவைகளும் கூட்டம் கூட்டமாக எனை தாண்டி பறந்து செல்வதை பார்த்துக் கொண்டே சிறகடித்துக் கொண்டிருந்தேன்.

****

நாகதேவி கட்டிலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பதை கண்ட பணிப்பெண்கள் அரசியை எவ்வாறு எழுப்பி விஷயத்தை சொல்வது என்று யோசித்துக் கொண்டு மௌனமாக நிற்கவே, திரும்பிப் படுக்கும் நேரம் அரசி தற்செயலாகக் கண்விழித்துப் பார்க்க, பணிப்பெண்கள் நிற்பதை கண்டு, படுக்கையில் இருந்து எழும்பி என்ன விஷயம் என்று கேட்டபோது மந்திரி பிராதானிகள் சொன்ன விஷயத்தை அப்படியே பணிப்பெண்கள் சொல்வதைக் கேட்டு திடுக்கிட்டுப் போன நாகதேவி மந்திரியை அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்று மெய்காப்பாளர்களுக்கு கட்டளையிட்டு இருபது வினாடிக்குள் அங்கு வந்த மந்திரியை நோக்கி போர் முரசு ஒலிக்கட்டும் என்று ஆணையிடவே நகர் முழுக்க, போர் முரசு ஒலித்தது கண்டு, யானைப்படையும், குதிரைப்படையும், காலாட்படையும், சிறப்புப்படை குழுவும் போருக்கு தயாராக சென்றனர். போர்க்களம் ஆரவாரத்தினால் அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்க எதிரிப்படையான கழுகுரசனின் படையில் படைத்தலைவர்கள் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருந்தார்கள். காலாட்படை மாத்திரமே இருபதினாயிரத்திற்கும் அதிகமாக கழுகரசனுக்கு இருப்பது நாகதேவியின் முதன்மைப் படைத்தளபதிக்குத் தெரிந்தேயிருந்தது. கிட்டதட்ட ஐந்துமுறை மோதியும் வெற்றித்தோல்வி இல்லாது போர் முடிந்தபோதும் கழுகரசன் தனது தோல்வியாக எண்ணிக்கொண்டே படைகளை வாபஸ் பெற்ற போதும் இம்முறை மிகுந்த பலத்துடன் எப்படியும் நாகதேவியை வென்று சிப்பித்தீவை தன் வசப்படுத்தி விட வேண்டும் என்ற ஆசையில் படையெடுத்து வந்திருக்கிறான். சிப்பித்தீவுக்கு சிப்பியை போன்ற வடிவமுடைய தீவாக இருக்கிறமையால் இப்படி பெயர் உண்டாயிற்று என்று பொதுவான கருத்து நிலவுகிறது.

கடந்த நப்பது வருட காலமாக நாகதேவி சிப்பித்தீவை ஆண்டபோதிலும் சிப்பித்தீவு கழுகுரசனின் முன்னோர்களை பதினெட்டாவது தலைமுறையை சார்ந்த அரசன் ஒருவனுடன் பரம்பரை ஆட்சி முறியடிக்கப்பட்டு நாகதேவியின் மூதாதோயர்கள் கைப்பற்றிக் கொண்டு ஆட்சி நடத்தி வருகின்றனர். கழுகரசனின் முன்னோர்கள் பதினெட்டு தலைமுறைகளாக நூற்றுக்கும் மேற்பட்ட முறை படையெடுத்துப் போர் புரிந்தபோதும் நாகதேவியின் முன்னோர்களை வெல்ல முடியவில்லை. நாகதேவியைப் பொறுத்தவரை அவளது ஆட்சிக் காலத்தில் இது ஆறாவது முறையான போராகும். இத்தீவை விட்டுக் கொடுக்க கொஞ்சம் கூட நாகதேவியின் மனம் இடம் தரவில்லை. படைக் கூட்டத்தை தேரிலிருந்து அணிவகுப்பைப் பார்த்து விட்டு போர் முரசை எதிர்பார்த்து காத்திருக்கவே, முரசு அதிரத் தொடங்கியது. நாகதேவி வாழ்க என்று படைகள் ஆவேசத்துடன் பெரும் குரலை உயர்த்திக் கொண்டே செல்ல கழுகரசனின் படையும் பெரும் குரலுடன் நகர்ந்து வந்தது. ஆவேசமான தாக்குதல்கள் தொடங்கிவிட்டன. காலாட்படை வீரர்கள் வாளாலும், ஈட்டிகளாலும் மாறி மாறி தாக்குகின்றனர். மரண அலறலும், தாக்குதலுமாக போர்க்களம் போர்க்களமாகவே காட்சியளிக்கத் தொடங்கியிருந்த ஒரு மணி நேரத்திற்குப் பின் நாகதேவி எதிர்பார்க்காத கழுகுப்படை ஒன்று வான்வெளியிலிருந்து தாக்குதல்களை தொடங்கியது. பெரிய தீப்பந்தங்களையும், ஈட்டிகளையும் வீசிக்கொண்டு வெகு சுலபமாக கழுகுப்படை முன்னேறிய போது, நாகதேவியின் காலாட்படை பின் வாங்கத் தொடங்கியது கண்ட நாகதேவி கடும் சினம் கொண்டு குதிரையில் பாய்ந்து வாளெடுத்துப் பல தலைகளை உருட்டிக் கொண்டே வகையாக கழுகரசனின் குதிரைப்படையின் இடையில் சிக்கிவிட, சக்கர வியூகத்தில் தாக்குதல் தொடுத்த குதிரைப்படை கொஞ்ச நேரத்திலேயே நாகதேவியை தாக்கி, மூர்ச்சையிழக்கச் செய்து, பிணைக்கைதியைப் போல சிறைப்பிடித்தனர். காலையில் தொடங்கி மாலை நான்கு மணிக்குள் போர் ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருந்தது. நாகதேவியின் பெரும்பான்மையான படைகள் எல்லாம் கீழ்ப்படிந்ததன் காரணம் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு இருந்தது.

சிப்பித்தீவு கழுகரசனின் கைக்குள் வந்தது. அரசியைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். முக்கிய மந்திரிகளையும் படைத்தலைவர்களையும் முக்கிய ஒற்றர்களையும் என்று நூற்றுக்கு அதிகமானவர்களைச் சிறையிலடைத்துக் கொண்டு முடிசூட்டும் விழாவை நடத்த நாட்டு மக்களை தயாராகும்படி கழுகரசன் கேட்டுக்கொண்டார். விஷயம் தெரிந்த பலரும் கழுகரசனாவதற்கு ஆதரவு தெரிவித்த போதும் இன்றைய தலைமுறையின் இளைஞர்கள் எதிர்ப்பு தான் தெரிவித்தார்கள்.

நாகதேவியை வென்ற கழுகரசன் முடிசூட்டு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடிவிட்டு, அரண்மனையின் மர்மக் குகையை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தது போல மர்மக் குகைகையை கண்டறிந்து உள்ளே நுழைந்தான். மர்மக் குகையில் இரண்டு காத தூரம் நடந்ததும் பெரிய ஏரி ஒன்று தென்பட ஆரம்பித்தது. ஏரிக்கரையோரம் வந்து ஒரு படகில் கழுகரசனும், படைத்தளபதியும், கூடவே மனைவி மாத்திரம் ஏறி ஏரியை படகு கடந்து செல்லவே கண்ணாடி மாளிகை தெரிய ஆரம்பித்தது. கொஞ்சநேரத்திலே கண்ணாடி மாளிகையை அடைந்தவர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். மாளிகையின் மையப்பகுதியில் வந்தபோது பளிங்குச்சிலை தெரிந்தது. பளிங்குச் சிலையைப் பார்த்த கழுகரசன் ஒருகணம் திடுக்கிட்டுப் போனான். அதன் இரண்டு கண்களையும் காணவில்லை. மிகுந்த வேதனையடைந்தவன் இதற்கான காரணத்தைக் கேட்கும் ஆசையில் படைத்தலைவர்கள் முகத்தை பார்த்ததும் படைத்தளபதி புரிந்து கொண்டு விரைவில் தகவல் அறிவிக்கிறேன் என்று உறுதிமொழி கூறவே, கண்களைப் பொருத்திய பிற்பாடு தான் தேவியை பூஜை செய்ய இயலும். இப்போது நாம் கிளம்புவோம் என்று கிளம்பி விட்டனர்.

இரண்டொரு நாளுக்குள் முக்கிய ஜோதிடர்களையெல்லாம் அழைத்து பிரசன்னம் வைத்து பார்த்ததில் அன்னிய தேசத்தின் கழுகு ஒன்று வைரக் கண்களைப் பாதுகாத்து வருகிறது என்றும், ஒரு சில தினங்களுக்குள்ளே அந்தக் கழுகு தானாகவே கழுகரசனிடம் வந்து கண்களை ஒப்படைத்து விட்டுப் போய்விடும் என்றும் தெரிவித்தார்கள். இச்சூழலில் தான் கழுகரசனுக்கு விநோதமான கனவு ஒன்று தோன்றியது. கனவில் விசித்திரமான பறவை மனிதன் ஒருவன் பறந்து வந்து கொண்டிருந்தான். பொன்னிறத்தில் பளபளக்கும் ஒரு புத்தகத்தை கட்டிக் கொண்டிருந்தாலும் புத்தகம் கண்ணை பறித்தெடுப்பதாக இருந்தது. பறவை மனிதன், மர்மக்குகையில் பறந்து போகிறான். மலையுச்சியில் நாகமும் கழுகும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு பெரிய ராட்சதக் கழுகு சிலையொன்று இருந்தது. அதன் கண்கள் மாத்திரம் காணப்படவில்லை. பறவை மனிதன் மலையுச்சியில் வந்து இறங்கி ராட்சத சிலைக்கு கண்களைப் பொருத்துகிறான். திடீரென்று நாகதேவியும் மனித உருக் கொண்டிருந்தாள். பறவை மனிதன் மனிதனாக மாறுகிறான்.

அதைப் பார்த்த நாகதேவி ஆவேசம் கொள்கிறாள். என்னைச் சிறை வைத்த தளபதி நீ.. தளபதியாரே நீங்களா அப்போது ராட்சத சிலை ஒன்று பேசியது. ஐயாயிர வருடப்பகை இன்றோடு தீர்ந்தது. தளபதி உங்களைச் சேர்த்து வைப்பார். நீங்களிருவரும் அடுத்த பௌர்ணமி வரை இந்த மலையுச்சியிலேயே கழியுங்கள். அதன் பின் இங்கு வரும் விண்தட்டு ஒன்றில் ஏறிச்சென்றுவிடுங்கள், ஒரு விநோத உலகுக்கு... அங்கே கழுகுகளும், நாகங்களும் மாத்திரமேயிருக்கும். நீங்களிருவரும் ஆட்சி நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு... தளபதியே நீ வைத்திருக்கும அந்த புனிதப் புத்தகத்தை துறவியிடமே ஒப்படைத்துவிடுங்கள். அதனால் அநேகக் காரியங்கள் ஆக வேண்டியிருக்கிறது என்று சொல்லிவிட்டு குரல் மௌனமானது. திடுக்கிட்டு கண்விழித்த கழுகரசன் காலை விடியலின் அமைதியை ரசிக்கத் தொடங்கினான்.

Pin It