அலுவலகத்தில் திடும் திடும்மென இப்படிக் கூடுவது வழக்கம் தான். என்ன ஏதென்று புரியாமல்.. மேலே இருந்து ஒருவன் கீழே வருவதும்.. கீழே இருந்து இருவர் மேலே ஓடி வருவதும்... சகஜம் தான் என்றாலும் அது வழக்கமாக என் உயிரை வாங்கும் செயல்.

தண்ணி வரலயா... கூப்டு ஹெச்சார. டாய்லெட்ல பிரச்சனையா... கூப்டு ஹெச்சார. பவர் போச்சா... கூப்டு ஹெச்சார. சாப்பாடு லேட்டா வருதா கூப்டு ஹெச்சார. இதுக்கிடைல... எம் டி எனும் எமன் முப்பத்து மூன்றரை முறைக் கூப்பிட்டு தொடர்பற்று புலம்பி தீர்த்திருப்பான். சரி என்ன தான் பிரச்னை என்று கூட்டத்தை விலக்கி விலக்கி நகர்த்தி நகர்த்தி வேகமாய் முன் சென்று நின்றேன். சலசலப்பில் காலை வெயில் ஊர்ந்துக் கொண்டிருந்தது.

அரை வட்ட கோலத்தில் அம்சமாய் கீழே கிடந்த மூர்த்தி... வியர்வை அப்பிய முகத்தில்... வேக வேகமாய் எதையோ வேண்டுபவன் போல... கழுத்துயர்த்தி பார்த்தான்.

"என்னாச்சு... என்னாச்சு" என்று இன்னும் இறுக்கமாய் சூழ்ந்த கூட்டத்தின் சீருடை வியப்புகள்.. மொசு மொசுவென்று காற்றை அடைத்துக் கொண்டிருந்தன.

காட்டுக் கத்து ஒன்றை தெறிக்க விட்டபடியே ஒரு சுழற்று பார்வை. காக்கா கூட்டமென கலைந்திருந்தது கூட்ட காக்காய்கள். அதே கணம்... அல்லது அதற்கு முந்திய கணம்... நான் இன்னும் சில காரியவாதிகள் மட்டும் சுற்றிக் குத்த வைத்து அமர்ந்து உன்னிப்பாய் ஒரு மாற்று மருத்துவன் போல பார்க்க... நான் ஓர் அறுவை சிகிச்சை நிபுணன் போல பார்த்தேன். அனிச்சையாய் பேசவும் ஆரம்பித்திருந்தேன்.

"என்னாச்சு மூர்த்தி..? என்ன... பண்ணுது..?" எதுவும் ஆகி விடக் கூடாது. நாள் முழுக்க ஆஸ்பத்திரியில் நம்மையும் போட்டுத் தாளித்து விடுவார்களே.. உள்ளே பதற கையைப் பிடித்து ஆறுதலாய்... அவசரமாய் பார்த்தேன்.

மூர்த்தி என்னவோ முனங்கினான். அவன் உடல் நடுக்கம் அவன் சாய்ந்திருந்த சுவரில் கூட உணர முடிந்தது. செக்யூரிட்டி அதற்குள் வண்டியைக் கொண்டு வந்து வாசலில் வைத்திருக்க..." எந்திரிங்க... ஹாஸ்ப்பிட்டல் போய்டலாம்.." என்றேன். பி பியாக இருக்கும் என்பது என் முடிவு.

தனது இடது கையை விட்டு விட்டு எழுவது போன்ற பாவனையில் அவன் உடல் அசைந்தது எனக்கு பயமாக இருந்தது.

"என்னாச்சு இடது கை என்ன பண்ணுது..!" என்றேன். கண்கள் விரிய குரலில் அச்சம் சூழ நானே ஒரு யாராவாக கேட்டது போல எனக்கு கேட்டது.

"சார்.. சார்.." என்று கழுத்தில் தலையை இறக்கி இறக்கி... மூக்கு விடைக்க.. கன்னம் நடுங்க..."சார்.. லெப்ட் ஏண்ட காணோம் சார்" என்றானே மூர்த்தி... குருதிப்புனல் படத்தில் புல்லட் பாய்ந்து சுவற்றில் பட படவென சரிந்துச் சாயும் ஆதி நாராயணனைப் போல ஆனேன். வினோ பிடித்துக் கொண்டார்.

"என்ன மூர்த்தி சொல்ற..." என்று மீண்டும் வாழைப்பழம் கதையைக் கேட்பது போல கேட்டேன். உலக சக்கரத்தை ஒற்றைக்கையில் ஓட்டுவதாக பட்டது.

"ஐயோ.. ஹெச்சார் சார். என் இடது கையை காணோம் சார்.." அவன் முகம் சிறுபிள்ளையின் சுழிப்புக்குள் சென்று அழுதுவிடும் தோரணையில் தனக்குள்ளேயே ஊர்ந்தது. மனம் பதறும் வதையை நெற்றி கோடிட்டு... கோடிட்டு காட்டியது.

அதிர்ச்சியோடு... என்ன இது... என்ன சொல்றான்... என்ன இது குழப்பம் என்று எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே படபடக்க... அதே நேரம் வினோ மூர்த்தியின் வீட்டுக்கு அலைபேசியில் அழைத்து விஷயத்தை சொல்லி... அவன் மனைவியை ஹாஸ்பிடலுக்கு வர சொல்லியும் விட்டார்.

நான் மெல்ல ஒரு தற்காப்புக் கலையைக் கைக்கொண்டது போல என் கையை நகர்த்தி சென்று மூர்த்தியின் இடது கையை... தொட்டேன். அங்கே கையே இல்லை.. வேறு எங்கோ தொடுகிறார்கள் என்பது போல கண்கள் சிவக்க தடுமாறிய மூர்த்தியை பார்க்க கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது. சூரியன் சுள்ளென் சூழ்ந்துக் கொண்டு முதுகில் சுளீர் சுளீரென அடித்து நொறுக்க உள் மூளையினுள் தடுமாறிய தவிப்பு தகிப்பைக் கூட்டி முதுகில் வியர்வையாய் கோடிழுத்துக் கொண்டிருந்தது.

உள்ளே பல யோசனைகள் ஓடினாலும்... ஏதும் விபரீதம் நடந்து விட கூடாது... என்று யோசித்தபடியே..."சரி வாங்க... ஆஸ்பத்திரி போய்டலாம்" என்று கைத்தாங்கலாக அழைத்து சென்று வண்டியில் அமர வைத்து கூடவே நானும் ஏறிக் கொண்டேன்.

அதே நேரம் அப்போது தான் கோமாவில் இருந்து நினைவு திரும்பியவன் போல... ஜன்னல் வழியே குனிந்து நிமிர்ந்து... அது அது இது இது என்று ஒரு 27 வேலையை வினோவிடம் சைகை மூலம் சொல்லி விட்டு போயிட்டு வந்தர்றேன்... பார்த்துக்கோங்க என்றேன்.

தலையில் கை வைத்து... அப்படியே கீழிறக்கி இடது கையை தடவியவாறே கண்கள் மிரள... "சரி சரி... போயிட்டு போன் பண்ணுங்க" என்று ஜாடை செய்த வினோவுக்கு கவனமெல்லாம் இடது கையில் தான் போல. வண்டி ஷீபா ஹாஸ்பிட்டல் நோக்கி நகர்ந்தது. ஹெச் ஆரின் காலக் கொடுமை ஹாரனாய் கத்த... கத்த.

"மூர்த்தி என்ன பண்ணுது... இப்ப எப்டி இருக்கு... இன்னும் அப்டிதான் தோணுதா" என்றேன். வண்டி குலுங்க... ஜன்னல் புகுந்த சூரிய வெளிச்சமும் குலுங்கியது.

"ஐயோ சார்.. என் லெப்ட் ஆண்ட காணோம் சார்... உங்களுக்கு புரியுதா... இடது கை இடது.. இடது.. கை" அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொண்டே வலது கையால் இடது கையைத் தொட்டு தொட்டு காட்டினான்.

அந்தக் காட்சியை காண காண... 'இவன் லூசா இல்ல நம்மை லூசாக்கறானா... போன வாரம் லீவு தரமாட்டேன்னு சொன்னதுக்கு பழி வாங்கறானா... இல்ல நிஜமாவே மெண்டலி ஏதும் அஃபெக்ட்டா...' - ஐயோ மூர்த்தி... நீங்களே தொட்டுக் காட்டறீங்க பாருங்க.. இந்தா... இருக்கு பாருங்க உங்க இடது கை" என்று நானும் அதே மாதிரி அழுத்தம் திருத்தமாய் தொட்டு அழுத்திக் காட்டினேன்.

வண்டியின் உள் கூரையைத் தொடுமளவுக்கு அமர்ந்த வாக்கிலேயே எகிறிக் குதித்து "ஐயோ சார்... என் கையைக் காணமே சார்... உங்க யாருக்கும் புரிய மாட்டேங்குதே.." என்று வலது கையால் தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுவது போல அரட்டினான்.

"யோவ்... அமைதியா இருய்யா... லூசு மாதிரி பண்ணிட்டு இருக்க... கை கண்ணு முன்னாலதான இருக்கு... இல்ல இல்லங்கற" என்று கத்தினேன்.

அருகே அமர்ந்திருந்த செக்யூரிட்டி என் தோளைத் தொட்டு.." சார்.. அமைதி... எதும் பேசாதீங்க... அட்டேக் ஏதும் வந்துற போகுது" என்று கிசுகிசுத்தான்.

நான் அர்த்தத்தோடு கழுத்தைத் திருப்பி செக்யூரிட்டியை கொலைவெறியில் பார்த்தேன்.

ஆமா அமைதி... என்பது போல இரு கண்களையும் இறுக மூடி திறந்து நிதானம் ஊட்டினான். எனக்கு நடிகர் அசோகன் மூஞ்சி ஒரு கணம் வந்து போனது.

"அவனுக்கு வராட்டியும் நமக்கு வந்திரும் போலயே..." மைண்ட் வாய்ஸ் நம்நமக்க... "சரி சரி... கொஞ்சம் பொறுத்துக்கோ மூர்த்தி. இப்ப ஹாஸ்ப்பிடல் போய்டலாம்" என்று மூர்த்தியின் இடது கை இருந்த இடத்தை... ச்சே... இடது கையைத் தான்... தொட்டுத் தட்டி ஆறுதல் படுத்தினேன். வண்டி மருத்துவமனைக்குள் நுழைய... எனக்கு இன்னொரு இடது கை முளைத்தது போல ஒரு அஞ்சு நொடி நிம்மதி.

ஆறாம் நொடி... "காசை அங்க காட்டுங்க... பீஸை இங்க கட்டுங்க" என்றது ஒரு சீருடை சிலுக்கு.

அப்படி இப்படி என்று லைனில் நின்று... நொந்துக் கொள்ள சில நொடிகள் கிடைத்தது. "ஹெச் ஆர் பொழப்பெல்லாம் ஒரு பொழப்பு..."

பக்கத்தில் நின்றிருந்த ரத்தம் தோய்ந்த சீருடைத்த ஒருவர் சொன்னார்... "போலீஸ் பொழப்பெல்லாம் ஒரு பொழப்பு"

நான் சட்டென்று அவர் முகத்தை நெருங்கி பார்க்க... "என்ன பாக்கறீங்க... மைண்ட் வாய்சை வெளிய விட்டுடீங்க..." என்று சிரித்தார்.

"அட... போலீஸ்லாம் சிரிக்குமா!!!" எதுக்கு வம்பு. நகர்ந்து விட்டேன்.

மருத்துவ அறைக்குள் செல்லும் முன்பே படுத்தி எடுத்தி விட்டான் மூர்த்தி.

"ஐயோ என் கை... ஆயா என் கை... மாயா என் கை..."

இப்ப எதுக்கு மாயாலாம் சொல்றான். கிட்டத்தட்ட அழுது புரண்டு உருளாத குறை. அவன் வலது கையை என் கழுத்தை சுற்றி இறுக்கி.. அவன் இடுப்போடு சேர்த்து நகர்த்தி நகர்த்தி நகர்ந்தேன்.

எனக்குத்தான் ஒரு கால் இல்லை போல தோன்றியது. அவன் இடது கையைப் பத்திரமாக அரையடி மேலே தூக்கிக் கொண்டது போல சரிந்துக் கொண்டான்.. திடும்மென தோன்றியது. கருமம் இன்னைக்கே இந்த வேலையை ரிசைன் பண்ணிடனும்.

ஒரு வழியாக மருத்துவ அறைக்குள் கொண்டு செல்லப்பட்டான். இரண்டு மணி நேரங்கள் 22 நிமிடங்கள்... கழித்து மருத்துவர் சட்டையை கழற்றி பிழிந்துக் கொண்டே வெளியே வந்தார்.

"பொதுவா கை எடுக்கப்பட்டவங்களுக்கு கை இருக்கற மாதிரி தோணும். உடம்புல கை இல்லன்னாலும்... அதுக்கு பழக மூளைக்கு கொஞ்ச நாள் ஆகும். கை வலிக்கறத... அரிக்கறத கூட பீல் பண்ண முடியும்... கொஞ்ச நாளைக்கு. ஆனா இது மிராக்கிள்... இருக்கற கையை இல்லன்னு சொல்றது. எல்லா செயல்பாடு இருந்தும் இல்லாத மாதிரி பீல் பண்றது... ம்.. நிறைய டெஸ்ட் எடுத்திருக்கோம்..." டாக்டர் டெக்னீக்கலாக இதுதான் சாக்கென்று பேசிக் கொண்டிருந்தார்.

பட்டென்று பேச்சைப் பாதியிலேயே விட்டு விட்டு வேகமாய் மீண்டும் அறைக்குள் ஓடினார். கூட இரண்டு மூன்று சிஸ்கள் ஓடினர் வழக்கம் போல. பொழைச்சிட்டான் என்பதற்கும் அதே ஓட்டம் தான். செத்துட்டான் என்பதற்கும் அதே ஓட்டம் தான்.

"என்னவா இருக்கும்...சார் நேத்து அவனை ஒரு நிமிஷம் லேட்டா வந்ததுக்கு வெளிய நிக்க வச்சு மானத்தை வாங்குனீங்களே... அதனால விஷத்தை எதுவும் குடிச்சிட்டானா..." செக்யூரிட்டி வழக்கம் போல கொளுத்திப் போட ஆரம்பித்ததுமே... தொண்டைக்குள் எதுவோ கீச் கீச்.

அய்யயோ என்று பேண்ட் பாக்கெட்டில் இருந்து முக கவசத்தை எடுத்து வேக வேகமாய் முகத்தில் போட்டேன். இவ்ளோ நேரம் இதை மறந்துட்டேனே.. ஒரு முறை இருமி பார்த்துக் கொண்டேன். மூர்த்திக்கு ஆகும் செலவை பற்றி எம் டி க்கு தெரிந்தால்... 'சாகர வரை அமைதியா வேற பக்கம் நிக்கற மாதிரி நின்னுட்டு அப்புறம் ஓடி வந்து பரபரக்கர மாதிரி ஆக்ட் விடணும்ப்பா... பெரிய நாடக நடிகன்லாம் சொல்ற... இப்டி பேந்த பேந்த முழிச்சிகிட்டு ஆளுக்கு முன்னாடி அவனைத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போயிருக்கன்னு' ரகசியமா திட்டுவானே. இன்சூரன்ஸ் வாங்கறதுக்குள்ள ரெண்டு கையுமே நமக்கு போய்டுமே... நாளைக்கு வாரச் சம்பளத்துக்கு லிஸ்ட் இன்னைக்கே ரெடி பண்ணனுமே...
என்ன கருமந்திரம் இது.. கையை வெச்சிகிட்டே கையைக் காணோம்ங்ற வியாதி... என்னவா இருக்கும்... மண்டைக்குள் மலையில் இருந்து கற்களாக உருண்டு கொண்டிருக்க...

நிதானமாக ஆட்டோவில் இருந்து இறங்கிய மூர்த்தியின் மனைவியை நான் பதட்டத்தோடு அருகே சென்று வரவேற்றுக் கொண்டே..." நீங்க ஏதும் பயந்துக்க வேண்டாம்... உள்ள ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு... கையைக் காணொம்ன்னு..." நான் பேச பேசவே என்னை... தாண்டி... நடந்தபடியே எந்த ரூம் என்று பார்த்தார். நான் கை நீட்டி... காட்டிக் கொடுக்க கொடுக்க... அதற்குள் அந்த அறைக்குள் நுழைந்திருந்தார். ஆர்வ யதார்த்த சித்தாந்தத்தில் நாங்களும் பின் தொடர்ந்திருந்தோம்.

தலை இருந்தும் கழுத்து இல்லாதது போல அறைக்குள் அவர்களையே உற்று நோக்கினேன். மருத்துவர் செய்துக் கொண்டிருந்த பரிசோதனையை விட்டு 'என்னது எல்லாரும் உள்ள வந்துட்டீங்க...!' என்பது போலப் பார்க்க.. அதற்குள் எங்களுக்கு பின்னால் இரு சிஸ்கள் நுழைந்து ரூல்ஸ் பேச....

மூர்த்தியின் மனைவி திடமான குரலில் கத்தும் தொனியில் பேசினார். எல்லாரும் அமைதியாக பார்க்க.. பேச்சின் ஸ்லோமோஷன் வடிவத்தை எழுத முடியவில்லை. வாசித்துக் கொள்ளுங்கள்.

"கருமம்... இதே வேலை... செல்போனை மறந்துட்டு வந்தற வேண்டியது.. அப்பறம்... கையைக் காணோம் கையைக் காணோம்னு கத்தி ஊரை கூட்டி அழ வேண்டியது..." இந்தா உன் சனியன் புடிச்ச கை "என்று நீட்ட... அதே இடது கையால்... ஒரு வெறி கொண்ட கஞ்சா அடிக்ட் போல வாங்கி பட படவென தொடுதிரையில் தொட்டு மேலேயும் கீழும் இழுத்துச் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். எல்லாரும் கண்கள் முட்டிய எமோஜியாக பார்க்க.. "சார் கை வந்து விட்டது.. கிளம்பலாம்" என்றான்... Bபே என சிரிக்கும் எமோஜியாக.

கடுப்பின் கனங்கனப்பில் செக்யூரிட்டி பெல்ட்டை கழட்ட முயற்சிக்க..." வேண்டாம்... இங்க வேண்டாம்" என்று ஜாடை செய்தேன். அதே நேரம் அப்போது தான் நினைவுக்கு வந்தது... வரும் அவசரத்தில் என் செல்போனை அலுவலகத்திலேயே விட்டு வந்து விட்டேன்... கண்கள் அதிர... மூளைக்குள் எதுவோ பதற வேக வேகமாய் எனது இடது கையைத் தொட்டு பார்த்தேன்.

- கவிஜி

Pin It