அப்பாவ இன்னும் காணும்.இருட்டி நேரம் ஆயிருச்சு. இப்பல்லாம் அப்பா ரொம்ப லேட்டாத்தான் வாரார். எப்படிப் போனாலும் என்ன லேட்டானாலும் எட்டரை மணிக்கு முன்னாடி அப்பாவின் பைக் தட தடன்னு வாசல்ல கேக்கவும் நான் வீட்டுக்குள்ள எங்க இருந்தாலும் ஓடி வந்து பெட்ரோல் டாங்க்ல உக்காந்து எனக்கு எங்க குவார்ட்டர்சுக்குள்ள ஒரு ஜாலி ரைட்; அப்றம் அப்பாவும் நானுமா வீட்டுக்குள்ள நுழஞ்சதிலேர்ந்து ராத்ரி பெரிய பெட்ல “அப்பாவுக்கும்மகளுக்கும் இன்னும் அடயலயா?” ங்ற பழகிப்போன பிரியப்பட்ட உத்தரவு வர்ரது வர ஒரே ரகளதான்.

இடயில அப்பா குளித்து விட்டு வருவார். எப்படியும் அப்பாவின் முதுகில் தொங்கி, தோளில் சரிந்து எப்ப எவ்ளவு சாப்ட்ருந்தாலும் அப்பா ஊட்டி விட ஒரு ரெண்டாவது ரவுண்டுதான். எப்பமாதுதான் அப்பா படிச்சியான்னு கேப்பார்.

ஆனா ஸ்கூல்ல மிஸ் என்ன சொன்னாங்க? என்ன கேம்ஸ் வெளயாண்டீங்க? சித்ரா கூட காயா பழமா எல்லாம் கேப்பார். கொறஞ்ச பட்சம் ஒரு ஃபை ஸ்டாராது வீட்டுக்குள்ள நொழஞ்சதும் தருவார். இல்லன்னா ஏதாவது எப்டியும் கொரிக்க. நைட் டூட்டின்னா வீட்டுக்கு வந்துட்டுத்தான் போவார்.

அப்பா எப்பாவது ஸ்டேஷன் வேலயா வெளியூருக்கு போற நாட்கள் எனக்கு வீடே இருண்ட மாதிரித்தான் இருக்கும். ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்குள்ள வந்த உடனேயே ராத்ரி அப்பா இல்லங்றத நெனச்சாலே ஏக்கமாத்தான் இருக்கும்.

ஹோம் ஒர்க் முடிப்பேன்; பசிக்கு சாப்டுவேன்; அம்மாவின் அரட்டலுக்கு முன்னதாக அநேகமா தூங்கிடுவேன். அப்பா பைக்க வீட்ல விட்டுட்டு போய்ருந்தார்னா அது என்னயே பாக்ற மாறி இருக்கும். ரெண்டாவது நாளே அப்பா எப்ப வருவார்ன்னு அம்மாவிடம் ஆரம்பித்து விடுவேன்.

முதல் ரெண்டு நாள் அம்மா தலை கோதி முத்தம் கொடுத்து சமாதானம் செய்வாங்க; மூனாம் நாள் ராத்ரி ஒங்க அப்பாகிட்ட நீயே கேளுன்னு செல்லத் தந்துருவாங்க. அப்பா ஃப்ரீயா இருந்தார்ன்னா பத்து நிமிஷம் பேசுவார். இல்லன்னா “வருவண்டா, வருவண்டா, குட்டிம்மாவுக்கு என்ன வேணும்னு” தாஜா பண்ணுவார்.

எப்படியும் வாரத்ல ரெண்டு மூனு நாள் காலயில் அப்பா என்ன ஸ்கூல்ல ட்ராப் பண்ணார்னா எனக்கு க்ளாஸ்ல அந்த நாளே தனிதான். அப்பாவின் அந்த யூனிஃபார்ம் அப்டி; பைக்கோட கம்பீர பட பட சத்தம் அப்டி; பைக்க விட்டு இறங்கி அப்பாவுக்கு பை சொல்லி ஸ்கூலோட பெரிய இரும்பு கேட்ட தாண்டி நடக்கும் என் குஷியும் கொண்டாட்டமுமே தனிதான்.

ஸ்கூல், வீடு ரெண்டுமே அப்பாவுக்கு அப்றம்தான். எதிர் வீட்டு மாமி, குவார்ட்டர்ஸ்ல தெரிந்தவர்கள், அவ்வப்பொழுது வந்து போகும் தாத்தாவிடம் “அதுவா அது சரியான அப்பா பிள்ளை” என்றுதான் அம்மா சொல்லுவாங்க. அம்மா அப்டி சொல்லுவதும் எனக்கு சந்தோஷம்தான்.

இப்படி என் செல்ல அப்பா இப்ப பத்து பதினஞ்சு நாளா ரொம்ப ரொம்ப லேட்டாத்தான் வீட்டுக்கு வாரார். நெறய நாள் ராத்ரி நான் அப்பா கூட வெளயாடறதே இல்லேன்னு ஆயிடுச்சி. அப்றம் பாத்தா சித்ரா அப்பாவும் ரொம்ப லேட்டாத்தான் வாரார்ன்னு அவளும் சொன்னா. போன வாரத்லேர்ந்து குவார்ட்டர்ஸ்ல இருக்ற அந்த சின்ன பார்க்ல அடிதடியா இருக்ற ரெண்டு ஊஞ்சலும் கூட அசயாம மொறச்சு பாக்ற மாதிரி அப்டியே இருக்கு.

அப்றம் ஒரு நாள் பாத்தா ரெண்டு ஊஞ்சலயும் தூக்கி மேல அது தொங்கிக்ட்ருக்ற கம்பி மேலேயே போட்டு யாரும் எடுத்ராத மாதிரி கட்டிப் போட்டுட்டாங்க; சீஸா பலக ரெண்டயும் கழட்டி எடுத்து சுவரோரமா சாய்ச்சு வச்சுட்டாங்க.

இதெல்லாம் யார் வேல? ஏன் இப்டி திடீர்ன்னு? அப்பாவும் இல்ல; ஊஞ்சலும் இல்ல; பார்க்ல எங்க கும்மாளமும் இல்ல; ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கான ஹைட் அண்ட் சீக்க்கும் இல்ல. நாலே நாலு நாளுக்குள்ள எல்லாம் மாறிப் போச்சு. அம்மாவின் கண்டிப்பான முகம் என்ன வாசலோடேயே கட்டிப் போட்ருச்சு. இதெல்லாம் நடந்துக்ட்ருக்கும் போதேதான் அப்பா வீட்டுக்கு லேட்டா வர்ரதும் ஆரம்பிச்சிருச்சு.

எங்களோட ஃபைனல் எக்ஸாம்லாம் முடிஞ்சிருச்சி. ஆனா இந்த வருஷம் அதெல்லாம் என்னமோ ரொம்ப அவசர அவசரமா நடந்த மாதிரி இருந்துச்சி. போன வருஷமெல்லாம் பரிட்சை முடிஞ்சி அப்றம், மூணு நாள் க்ளாஸ் இருந்துச்சு.

மிஸ் கத சொல்லுவாங்க. ரெண்டு பேர் மூனு பேரா விட்டு பாடச் சொல்லுவாங்க. புது வருஷ க்ளாஸ் எப்டி இருக்கும்? எப்டி படிக்கணும்ன்னு சொல்லி உற்சாகமாக்குவாங்க. கடசி நாள் சின்ன ஈவென்ட்ஸெல்லாம் வச்சு உற்சாகப் படுத்திதான் அனுப்புவாங்க.

ஹாலிடேஸ்ல எது எது பாக்கனும்? என்ன படிக்கணும்? தினம் என்ன வெளயாட்டுன்னு எல்லா அட்வைஸோடும்தான் சம்மர் லீவு ஆரம்பிக்கும். ஆனா இந்த வருஷம் எதுவும் இல்ல. எல்லா எக்ஸாமும் முடிஞ்ச கடசி நாளே “அதிகம் வீட்டுக்குள்ளேயே இருக்கணும்; வெளிய வரக் கூடாது; அப்பா அம்மா சொல்றதக் கேட்டு நல்லா பிஹேவ் பண்ணனும்னு ஆல் தெ பெஸ்ட்” சொல்லி அனுப்பிட்டாங்க.

“ஏன் மிஸ் காமன் அஸெம்ப்ளி இல்ல? ஏன் ஃப்ரீ க்ளாஸ் இல்லேன்னு நாங்கள்ளாம் கோரஸாகேட்டப்போ “வேர்ல்ட் பூராவும் ஒரு புது வைரஸ் பரவிக்கிட்ருக்கு; ரொம்ப ஆபத்தானது; அது மனுஷங்களுக்குள்ள வேகமா பரவுரதுனால ஒங்களயும் பிடிச்சிரக் கூடாதுங்றதுக்காக கவர்மெண்ட் ஆர்டர் படி ஸ்கூல சீக்கிரமா மூடுரோம்னு” ஒரு பயம் காட்டிதான் அனுப்பி வச்சாங்க.

நான் மூன்றாம் நாள் மதியம் அம்மா காய்ந்த துணிகளை பெட்ரூமில் உக்காந்து மடிச்சிக்ட்ருக்கும் போது அம்மாவின் மடியில் தலையை உருட்டிக் கொண்டே கேட்டேன். மிஸ் என்ன சொன்னாங்களோ அதேதான் அம்மாவும் சொன்னாங்க; மிஸ்ஸ விட அம்மா இன்னும் பயப்ட்ற மாதிரித்தான் சொன்னாங்க. அந்த வைரஸ் கண்ணுக்கே தெரியாதாம்; அது எங்க வேணா இருக்குமாம்; எப்பவும் இருக்குமாம்; அதால தனியா ரொம்ப நேரம் உயிரோட இருக்க முடியாதாம். அதுனால சான்ஸ் கெடக்றப்ப நம்ம ஒடம்புல புகுந்து சந்தோஷமா வெளாயாட ஆரம்பிச்ருமாம்.

யார்ல்லாம் ரொம்ப வீக்கா இருக்காங்களோ அவங்களெயெல்லாம் அது கழுத்த நெரிக்க ஆரம்பிச்ருமாம்.நெறய வெளி நாடுகளில் அப்டி நெறய பேர் செத்துக்ட்ருக்காங்களாம். அதுனால தேவயில்லாம எல்லாம் வெளிய போக் கூடாதாம். அதுனாலதான் பார்க்லாம் மூடியாச்சாம்.

நான் சமத்தா சாப்ட்டு நல்லா ரெஸ்ட் எடுக்கனுமாம். எப்பதான் வெளயாடறதுன்னு நான் கேட்டப்போ இந்த வைரஸக் கண்ரோல் பண்ண கொஞ்ச நாளாகுமாம். அது வரைக்கும் வெளிய வெளயாட்டெல்லாம் கிடயாதாம். “வெளாயாட்டுக்கு இப்டி வெனயாயிருச்சுயேன் செல்லம், கொஞ்சம் பொறுடா” ன்னு அம்மா கொஞ்சுறாங்க.

கொஞ்சம் விளங்ற மாறி இருக்கு; குழப்பமாயும் இருக்கு; போரடிக்றப்ப எரிச்சலாயும் இருக்கு. எங்கேர்ந்து வந்தது இந்த வைரஸ்? அதுவும் சரியா ஆனுவல் லீவுல? அந்த சனியன் பிடிச்ச வைரஸ் கண்ணுக்கு தெரிஞ்சா அது கூடயாது வெளயாடலாம். அதுக்கு கம்பனி கொடுத்து அத ஜாலி மூட்ல வச்சு அது கூட ஹைட் அண்ட் சீக் வெளயாடலாம்லான்னு நான் அம்மாட்ட கேட்டேன்.

ஒரு நிமிஷம் என் கேள்வி புரியாதது போல பாத்தவங்க என் தலயில செல்லமா குட்டினாங்க. அப்றம் என்ன அணைச்சிக்கிட்டு கொஞ்சம் ஸீரியசா “இப்பன்னாப்ல முழு ஒலகமும் என்ன செஞ்சுக்ட்ருக்குன்னு நெனக்ற? இன் எ வே யூ ஆர் கரெக்ட். வைரஸ் கூட ஒரு ஹைட் அன்ட் சீக்தான் நடந்துகிட்ருக்கு.

அதான் எல்லோரும் வீட்டுக்குள்ளயே ஒளிஞ்சு கெடக்றோம்; யார்ட்டெல்லாம் வைரஸ் இருக்குன்னு கவர்மென்ட் தேடிக்கிட்ருக்கு” என்று அம்மா சொன்னாங்க. “இந்த வைரஸ் போன வருஸம்லாம் ஏம்மா வர்ல? இப்ப மட்டும் வந்து உயிர எடுக்குது?”ன்னு நான் எரிச்சலோட கேட்டேன்.

மடித்த துணிகளை பீரோல அடுக்கி முடித்த அம்மா திரும்பினாள். “போன வருஷம் ஆனுவல் எக்ஸாமுக்கு கொஞ்சம் முன்னாடி ஒனக்கு சளியும் காயுச்சலும் இருந்துச்சா?” நான் தலையாட்டினேன். அம்மா தொடர்ந்தாள். “ இந்த வருஷம் இல்லயே - அது ஏன்? போன வருஷம் அப்டிக் கஷ்ட்டப் படுவேன்னு ஒனக்கு மொதல்லயே தெரிஞ்சுதா என்ன? இல்லயே? ஏன்? அப்டித்தான் இப்ப இந்த வைரஸும். எல்லாம் நமக்கு எப்பவும் மொதல்லயே தெரியருதுல்ல.

இது பெரிய ஸப்ஜெக்ட். இப்ப சாப்ட்டாச்சு; கொஞ்ச நேரம் படுக்கலாம்; அப்றம் கொஞ்ச நேரம் டிவி பாக்கலாம்; அப்றம் படிக்கலாம். இதெல்லாம் நம்ம ப்ளான்தான். நடக்குமாங்க்றது நம்ம கைல இல்ல. நம்ம பிரியத்தயும் நம்பிக்கையும் தவிர. அடுத்த நிமிஷம் என்ன வேணா நடக்கலாம். அது நமக்கு தெரியவே தெரியாது செல்லம்” என்று சொல்லி சோபாவில் சாய்ந்தாள்.

டிவிய ஆன் செஞ்சு கார்ட்டூன் நெட்ஒர்க்குக்கு மாறி என் பிரியப் பட்ட சீரிஸுக்கு வெய்ட் பண்ணினேன். சிக்னல் சரியாகவே இல்லை. ஒரு வழியாய் ஸ்ட்ரீம் ஆன பிறகு பார்த்தால் அன்று அந்த ப்ரோக்ராம் இரவுக்கு மாற்றப் பட்டிருந்ததாக ஸ்க்ரீன் சொன்னது. எரிச்சலோடு டிவிய அணச்சேன். அம்மா சற்று கண் அயர்ந்திருந்தாங்க.

அம்மா எதுவும் நடக்கலாம் என்பதை எனக்கு ஒரு தகவலா சொல்லிருந்தாங்களா? இல்ல காலைலேயே ப்ரோக்ராம் ஷெட்யூல பாத்துட்டு சொன்னாங்களா? எதுன்னா என்ன - யேன் ப்ளான் அவுட். நானும் சோபாவில் சாய்ந்தேன்.

அப்பாவ நான் இரவில் பார்ப்பதோ ஜாலிரைடோ எல்லாம் நின்றே போனது. பல நாட்களில் நான் காலையில் எழுந்திரிக்றதுக்கு முன்னாடியே அப்பா ட்யூட்டி போயிருப்பார். என் தலையணைக்கருகில் மட்டும் முந்திய நாள் அப்பாவின் இரவு கிஃப்ட் இருக்கு.

வைரஸ்ஸ விரட்டும் முக்கியமான செக்யூரிட்டி தொடர்பான வேலைகளில் அப்பா ரொம்ப பிஸியாகி விட்டார். அப்பாவின் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான அப்பாவின் பொறுப்பில்தான் இயங்குகிறது. நகரின் முக்கியமான ஸ்டேஷன்களில் அதுவும் ஒன்று என்று அப்பா சொல்லியிருக்கிறார்.

கமிஷனரின் நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு மாத்திரம்தான் அந்த ஸ்டேஷன் வேலை தரப் படும் என்று மாற்றி வந்தப்பவே அப்பா சொல்லியிருக்கிறார். ஸ்டேஷன் கவர் செய்யும் நகரின் பகுதி மும்முரமான கடை வீதிகளும், நெரிசலான குடியிருப்பு பகுதிகளும் இரண்டு குடிசைப் பகுதிகளும் என்று எல்லாம் நிறைந்த கலவைதான். நல்ல நாளிலேயே வழக்குகளுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் பஞ்சமே இருப்பதில்லையென்று அம்மாவிடம் சாப்பிடும் போது அப்பா சொல்லியிருக்கிறார்.

இப்ப இந்த வைரஸுக்கு அப்றம் முழு அடைப்பை உறுதி செய்வது, ஹெல்த் பணியாளர்களுக்கு பாது காப்பு தருவது, கார்ப்பரேஷன் அதிகாரிகளுடன் சரியான தொடர்பிலிருப்பது, கமிஷனரின் ப்ரத்யேக ஆணைகளை நிறைவேற்றுவது, காவலர்களின் ட்யூட்டி ரோஸ்டர் பஞ்சாயத்து, வழக்கமான நீதி மன்ற வேலைகள் என்று சவால் நிறைந்த பத்தொன்பது மணி நேர அன்றாடத்தில் அப்பா மூழ்கி விட்டார்; அம்மா வழக்கத்தை விட மிகுந்த மன உளச்சலுடன், வீட்டிற்குள் வலம் வரும் பெரிய வைரசான என்னையும் மேய்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் அப்பாவிடம் கேட்டேன். “நீ ஏம்பா எங்க பிரின்ஸிபல் மாதிரி ஆகாம போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆன?” அப்பா சிரிச்சுக்கிட்டே “ யேதாவது ஒன்னு ஆகனும் செல்லம்; கிடக்கும்னுல்லாம் நெனக்ல; எக்ஸாம் பாஸ் பண்ண உடனே நம்பிக்கை வந்துருச்சு. பள்ளிக்கூட நாட்கள்ளயே நான் ஒரு ஸ்போர்ட்ஸ் மேனியாக்; யுனிவர்சிட்டி வாலிபால் ப்ளேயர்; ஒக்காந்து பாக்ற வேலயெல்லாம் லாய்க்காகதுன்னு எப்பவோ தெரிஞ்சிருச்சு.

போலீஸ் உத்யோகம் தாத்தாவுக்கு அவ்ளவு விருப்பம் கெடயாதுதான். ஆனாலும் வேண்டாம்; காத்ருந்து வேற இன்னும் நல்ல வேலன்னு சொல்றதுக்கு குடும்ப நெலவரம் கிடையாது. அப்ப ஒங்க அத்தயோட கல்யாணம்தான் குடும்பத்தோட முக்ய அஜெண்டா . நாள் ஓடிருச்சு. இன்ஸ்பெக்டரும் ஆயாச்சு.

ஒங்க அம்மாவும் வந்தா; நீயும் வந்தாச்சு. இப்ப போய் கேக்றீயே என் செல்லம்; எல்லாம் ஒரு ஆக்ஸிடெண்ட் மாதிரி”. அம்மா அடுக்களையிலிருந்து இரைந்தார்கள். “வாயில நல்ல வார்த்த வராதா? பிள்ளைட்ட ஏன் இதெல்லாம். ஹோம் ஒர்க் முடிச்சியா?” என்று என்னை அரட்டி அமர்த்தினாங்க.

அம்மா என்ன இரைந்தாலும் அநேகமாக அப்பா பதிலுக்கு இரைவதே இல்லை; சிரிப்பார்; சில சமயங்களில் கடகடவென்று பெரிதாக. “ஏம்ப்பா அம்மா மொரச்சாலும் சிரிச்சுகிட்டே இருக்யே எப்டிப்பா?”ண்னும் ஒரு நாள் கேட்டேன். “அந்த யூனிஃபார்மப் போட்டுகிட்டு ரொம்ப சிரிச்சேன்னு வைய்யேன்; என் பொழப்பு சிரிப்பாயிடும். ஒவ்வொரு நிமிஷமும் வெறப்பா ஸீரியஸாத்தான். அதனாலதான் வீட்ல ஒங்கம்மாட்டயும் ஓன்ட்டயும் ஒவ்வொரு நிமிஷத்தயும் சிரிப்புல கரைக்கிறேன் என் செல்லம்” என்று கைகளில் தூக்கி கொஞ்சுவார்.

“எங்களப் பாத்தா ஒங்களுக்கு சிரிப்பா இருக்குல்ல? அது நாங்க வாங்கி வந்த வரம் அப்டி” என்று அம்மா பாதி சிரிப்போடும் மீதி கோபிப்பது போலுமாக பொருமுவாங்க. அப்பா அம்மாவின் டீல் எனக்கு சில சமயம் புரிவது போலவும் பல சமயம் பிடி படாதது போலவும்தான்.

ஆனால் கார்ட்டூணில் ஜோக்கர் கேரக்டர் சிரிக்கிற மாதிரி அப்பாவின்ஸ்டேஷனில் பட்டினித் திருடர்களும், பெரிய கொள்ளைக்காரங்களும் சிரிக்க மாட்டாங்கன்னு தான் எனக்கு தோனுது. மொதல்லயே அவங்களால் சிரிக்க முடியிற மாதிரி இருந்தா அப்பாவோட ஸ்டேஷனுக்குள்ள வர மாட்டாங்கள்ள? அவ்ங்க சிரிக்ற கண்டிஷன்ல இல்லங்க்றதாலதான் அப்பாவும் போலீஸ் டிப்பார்ட்மெண்டும் சிரிக்க முடியிறதில்லயா? எனக்கு தெரியல.

நான் அப்பாட்ட எப்பவோ ஒரு நாள் ஜெயிலக் காமிங்கன்னு கேட்ருக்கேன். நேற்று அம்மாட்ட ஒரு காமிக்ஸ் புத்தகத்துக்காக அரட்னப்ப “ ஒங்க அப்பாட்ட ஜெயில் காட்டு, ஜெயில் காட்டுன்னு அரிப்பல்ல; இப்ப பாரு வீடுதான் ஒனக்கு ஜெயில். வைரஸ் ஒன்ன வெளிய போகவிடாம கட்டிப் போட்ருச்சு பாரு.

ஜெயில்ல ஒனக்கு காமிக்ஸ்லாம் தர மாட்டாங்க; போய் படுத்துக்கோ” என்று சீண்டினார்கள். சித்ராவப் பாக்காம, ஹைட் அண்ட் சீக் இல்லாம, காமிக்ஸும் இல்லாம மூனு வேளச் சோற்றுடன், அப்பாவின் கம்பனியும் இல்லாம ஜெயில்ன்னா என்னன்னு கொஞ்சம் புரியிறது போல இருக்கு.

அப்பாவோட பிஸி ஷெட்யூலுக்கு மத்தில ஊடேல ரெண்டு மூனு நாள் அப்பா மதியம் லஞ்சுக்கு வீட்டுக்கு வந்தார். என்ன ப்ரயோஜனம்? அப்பா வீட்டுக்குள்ள வரவும் இல்ல; என்ன மடில உக்காத்தவும் இல்ல; ஒரே ஒரு உருண்டை கூட தரவும் இல்லை. முதல் நாள் நான் அழுதேன்; போராடினேன்.

ஆனா அப்பா வர்ரதுக்கு முன்னாடியே அம்மா எனக்கு பெரிய க்ளாஸே எடுத்ருந்தாங்க. “அப்பா வெளிய எங்கெங்கோ அலைந்து விட்டு வருகிறார். நகரம் முழுதும் வைரஸ் ஆக்ரமித்திருக்கிறது. அப்பா ரொம்பவே ரிஸ்க் எடுக்கிறார். அவர் யூனிஃபார்மும் கடமையும் அவரை அந்த கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் கட்டிப் புரள வைக்கிறது.

அது ரொம்ப ஈஸியா மனுஷங்களுக்கு மனுஷர் பரவ்ரதுனாலதான் குவார்ட்டர்ஸ் பார்க் உட்பட நகரமே அடச்சு மய்யாணம் மாதிரி இருக்கு. அதுனால் மதியம் நீ அப்பாகிட்ட போனன்னா அவ்ளவுதான். ஒன்னயும் வைரஸ் பிடிச்சிக்கும் செல்லம். இந்த நாப்பது அம்பது நாள் எல்லாருக்கும் கொஞ்சம் கஷ்டம்தான்.

நீ நல்ல பிள்ளல்ல? அப்பா ஒனக்கு எப்பவும் ஊட்டனும்னா இந்த அம்பது நாள் நீ அப்பாகிட்ட போக் கூடாது; சரியா? ஜாக்ரதயா இருக்கணும் சரியா? அப்பா வரும் போது அழக் கூடாது. நீ பெரிய பொண்ணாயிட்ட; தேர்ட் ஸ்டாண்டர்ட் போப் போற. நீ அழுதா அப்பா அப்ஸெட்டாயிருவாரு. அப்றம் அப்பாவால சரியா டியூட்டி பாக்க முடியாது. அப்பா நம்மட்டதான சிரிக்கிறார்.

நீ அப்பா பிள்ளன்னா அப்பா எப்பவும் சிரிச்சிகிட்டுருக்கனும்னா இப்ப நானும் அப்பாவும் சொல்றபடி சமர்த்தா கேக்கணும் சரியான்னு” சொல்லி காட் ப்ராமிஸ்ல்லாம் வாங்கிகிட்டாங்க அம்மா. அப்பா கிட்ட போக் கூடாது; வாசல்ல இருந்து பாக்லாம்; சாப்ட்டுட்டு அப்பா போறப்ப பை சொல்லலாம். அவ்ளவு பெரிய ஒத்திகை இருந்தும் மொத நாள் நான் பொங்கிட்டேன்.

அப்பா இறுகிய முகத்துடனும் பாதி மட்டும்சாப்பிட்டு விட்டு என்னை திரும்பி கூட பாக்க முடியாமல் பைக் தட தடக்க சீறிப் போய் விட்டார். மதியம் முழுதும் அம்மா என்னிடம் பேசவில்லை. அம்மா மதியம் சாப்பிட்ட மாதிரியும் தெரியவில்லை. எனக்கு எதுவும் புரியவும் இல்லை.

அப்பாவும் அம்மாவும் என்னிடம் கோபிப்பானேன்? பதிலுக்கு நான் யாரிடம் கோபிக்க? சனியன் வைரஸ் கண்ணுக்கு தெரியவில்லை. இல்லேன்னா அதோடயவாது சண்டை போடலாம். ஆனா எனக்கு ஒன்னுதான் புரியல. அப்பாவத் தொடக் கூடது; கிட்டப் போகக் கூடது; வைரஸ் ஒட்டிக்கும் – சரி. அப்பா ஏன் வீட்டுக்குள்ள வந்து சாப்பிடக் கூடாது?.

வீட்டு வாசலில் ஜீப்புக்கு இறக்கியிருக்கும் ப்ளாஸ்டிக் ஷெட்டில் அம்மா ஒரு நாற்காலியும் ஸ்டூலும் போட்டு வச்சிருக்காங்க. யாரோ வேலைக்காரனைப் போல அப்பா வெளியே இருந்து சாப்பிடுகின்றார். அப்பாவக் கவ்ரவப் பிச்சைக்காரனாக்கியது வைரஸா? அம்மாவா? இல்ல அப்பாவே தன்ன மாத்திக்கிட்டார?

அம்மாவிடம் கோபமாகக் கேட்டேன். அம்மா பதில் சொல்ல வில்லை. கொஞ்ச நேரம் கழித்து “நான் அவ்ளவு சொன்னேன்; நீ தலயாட்டிட்டு அப்பாவப் பாத்த உடனே முரண்டிட்ட. அப்பா சரியா சாப்டாம போய்ட்டாரு. எத்தன தடவ சொல்றது ? குளிக்காம அப்பா வீட்டுக்குள்ள வந்தா நமக்கு எல்லோருக்கும் ஆபத்து.

வாரத்ல மூனு நாளாவது வீட்டு சாப்பாடு சாப்ட்டாத்தான் ஒடம்பு கொஞ்சம் தாங்கும். நல்லா கேள்வி கேக்றியே ஒழிய மண்டைல எதுவும் ஏர்றதில்ல. புரியலன்னாலும் கீழ்ப்படியனும் பாப்பா. ஒன்னச் சொல்லியும் தப்பில்ல. யாரயும் சொல்றதுக்குமில்ல” என்று பெரு மூச்செறிந்த அம்மா என்னை இழுத்து மார்போடு சேர்த்துக் கொண்டு அழ ஆரம்பிச்சிட்டாங்க. நான் அம்மவ இருகக் கட்டிக் கொண்டேன். தூரம் எவ்வளவு பெரிய பாரம் என்பதை அம்மாவின் அரவணைப்பு எனக்கு உணர்த்தியது.

அம்மாவிடம் இருந்து இறங்கினேன். அம்மாவின் கைய்யைப் பிடித்த்து இழுத்தேன். “சாப்ட வாம்மா” என்று இழுத்தேன். அம்மா என்னைத் தூக்கிக் கொண்டு டைனிங் டேபிளில் வந்து உக்காந்தாங்க. தட்டில் அம்மா சாதம் வைத்த பின் நான் அம்மாவுக்கு எடுத்து ஊட்டினேன். அம்மா என்னை கட்டிக் கொண்டு மறுபடியும் அழுதாங்க. நான் “ நாளக்கு அப்பாவுக்கு நல்ல கம்பனி வாசல்லேர்ந்தே கொடுப்பேம்மா; அழ மாட்டேன்; ப்ராமிஸ்மா” என்று சொல்லவும் அம்மா

“குட் கேர்ள்” என்று சொல்லி எனக்கு ஊட்டினாங்க.

மறு நாள் அப்பா வந்தவுடன் வாசல்லேர்ந்து “ஹே டாடி” சொன்னேன்.அப்பா “செல்லம்” என்று சொல்லிக் கொண்டெ ஃப்ளையிங்க் கிஸ்ஸ் கொடுத்தார். அப்பா சாப்ட ஆரம்பித்ததும் “அப்பா சித்ரா வீட்டு ஜானி ஒன்ன பாத்தா சாப்ட விடாது. சீக்ரம் சாப்டுங்க” என்று சொன்னேன். அப்பா சிரிச்சுக்கிட்டே சாப்பிட்டார்.

முடிந்து கிளம்பும் போது “செல்லத்துக்கு ராத்ரி என்னவேணும்னு” கேட்டுக்கிட்டே பைக்கை ஸ்டார்ட் செய்தார். “அப்பா நீங்கதான் வேணும்; சீக்கிரம் வாங்கப்பா” என்றேன். “யெஸ் டியர்; யெஸ் – ஃப்யூ மோர் டேஸ்” என்று சொல்லி கிளம்பி விட்டார். இதுக்கப்றம் அப்பா வந்த ரெண்டு மூன்று தினங்களில் நான் அழ வில்லை. அப்பாவுக்கு தள்ளி நின்றே கம்பனி கொடுத்தேன்.

அப்பா சாப்பிட்டு கிளம்பி விடுவார். அப்பா என்னால் தொட முடியாத தூரத்தில் இருந்தார். எனக்கு அது கொஞ்சம் பழகிப் போயிருந்தது. எப்ப இதெல்லாம் முடிஞ்சு அப்பா எப்பவும் போல வீட்டுக்குள்ள வருவார் என்று அம்மாவிடம் கேட்டதற்கு ” ஒன்ன மாதிரிதான் பாப்பா எல்லாரும் எப்ப எல்லாம் நார்மலாகும்னுதான் கேக்ராங்க. சீக்கிரம் எல்லாம் சரியாகும்கிறதுதான் எல்லாருடய நம்பிக்கயும்னு” பெரிய விளக்கமா சொன்னாங்க.

அப்றம் அப்பா ஒரு வாரம் பத்து நாள் வரவே இல்லை. ஏன்கிற கேள்விக்கு “அப்பா வருவார்” என்ற பதில் மாத்திரம்தான் வந்தது. அம்மாவின் முகம் அவ்வளவு உற்சாகமாய் இருக்கவில்லை. அம்மா நார்மலாக இல்லாதது போல் தெரிந்தது. நான் அம்மாவ ரொம்ப அரட்டல. “அப்பாவுக்கு வேல ரொம்ப ஜஸ்தியாயிருச்சு; மூனு நாளா ராத்ரி கூட வர்றதில்ல. நீ சமர்த்தா இருக்கனும்”னு மட்டும் அம்மா என்ன சமாதானப் படுத்தினாங்க.

அப்றம் ஒரு நாள் திடீர்ன்னு அம்மா தாத்தா அப்பா ஸ்டேஷன் ஜீப்ல வந்து இறங்கினார். தாத்தாவின் திடீர் கம்பனியில் எனக்கு கொஞ்சம் குஷிதான். தாத்தா வந்த மறு நாள் அம்மா “ வீட்டுக்கு மளிகை, காய்கறிகள் வாங்கனும்; நீ தாத்தா கூட சமத்தா இருக்கணும். ஒன்னோட ஃபேவரிட் சாக்லேட் வாங்கிட்டு வருவேன் சரியா?” என்று என்னை சமாதானப் படுத்திவிட்டு அப்பாவின் ஸ்டேஷன் ஜீப்பில் ஏறிப் போனாங்க. காலேல பதினோரு மணிக்கு போன அம்மா இருட்றதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் வந்தாங்க.

ஒரு பைல கொஞ்சம் வீட்டு சாமான்கள் இருந்தன. அது அம்மாவின் முகமே இல்ல; விடுவிடுன்னு பறக்கிற இமைகளுடன் உதட்ல எப்பவும் இருக்கிற சின்ன சிரிப்புள்ள அந்த முகத்ல வேற என்னவோ வந்து அப்பிக்கிட்ட மாதிரி; வெயிலோட போய்ட்டு வந்த களப்பா இருக்கும்னு நானே நெனச்சுக்கிட்டேன்.

தாத்தா டிவி செய்திகளில் கவனமா இருக்றப்ப அம்மா எனக்கு எந்திரமாய் ஊட்டிக் கொண்டிருந்தார். எது எப்படியானாலும் சாப்பாடு ஊட்டும் போது அம்மாவின் கொஞ்சலே பசிக்கலேன்னாலும் சாப்பாட உள்ள தள்ளிரும். நான் வழக்கம் போல் கை மறித்து அம்மாவின் வாய்க்கு ஊட்ட முயன்ற போது சட்டென்று என்னை அணைத்தஅம்மா குபுக்கென்று அழ வந்தது போல ; ஆனால் அடக்கிக் கொண்டாள். எனக்குப் புரிய வில்லை.

அம்மாவை அரட்டக் கூடாதென்று மட்டும் தீர்மானித்தேன். இரவு என் கலைந்து புரளும் அரை குறை உறக்கத்தில் அம்மாவும் தாத்தாவும் மிக மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. அம்மாதரைல உக்காந்து பெட்டில் தலை சாய்த்து மேலே ஓடிக்ட்ருக்ற ஃபேனயெ பாத்துகிட்ருந்த மாதிரி. மறு நாள் காலை அம்மா வீட்டுக்குள் வேலைகளுடன்; நான் தாத்தாவுடன். அப்பா வரவில்லை.

அப்பா வீட்டுக்கு வந்து அநேகமாக பதினைந்து நாட்களுக்கும் மேல் ஆகியிருக்கும். தாத்தாவிடம் மெதுவாய் கேட்டேன். “அப்பா எங்க தாத்தா? ஏன் வரல?” தாத்தாவும் அதே கதைதான். “வைரஸ் ,பந்தோபஸ்துன்னு வேல ஜாஸ்தி. சித்ரா அப்பாவும் வர்ல பாரு. அப்பா வருவார். அடுத்த வாரம் வருவார் “ என்றார். தாத்தாவிடம் கார்ட்டூன் நெட்ஒர்க் வைக்கச் சொன்னேன். என்னன்னாலும் சரி.

அப்பா வந்த உடனே அம்மாவுக்கும் தாத்தாவுக்கும் தெரியாம அப்பா பைக்ல ஏறி உக்காந்து ஹார்ன் அடிச்சி எல்லாரயும் டென்ஷனாக்கி குஷியாக்கிறனும்னு மட்டும் தீர்மானிச்சிக்கிட்டேன். இன்னும் மூன்று நாள் போனது.

சித்ரா வீட்டு ஜானி மாத்ரம் ஒரு நாள் அப்பா வரும் நேரத்தில்வந்து மோப்பம் பிடித்து விட்டு திரும்பி போனது. அப்பா வர்ல. அடிக்ற வெயில்ல வாசல் தாண்டி ஏறும் வெளிச்சம் தவிர அப்பாவின் பைக்கும் தெரியல; அப்பாவும் வர்ல. அம்மா வீட்டுக்குள் நடமாடுகிறார்.

எப்பொழுதும் கைய்யில் செல்லுடன். அவ்வப்பொழுது என்னைக் கவனிக்கிறாங்க. செல் கூப்பிட்டால் பெட் ரூமுக்குள்ள போய் சத்தமே இல்லாமல் பேசுறாங்க. அப்பா ஏன் வர்லேன்னு அம்மாட்ட கேக்க எனக்குத் தோனவேயில்ல. தாத்தாதான் என் அரற்றல்களை சமாளித்தார்.

அப்றம் ஒரு நாள் காலேல நான் பெட்லேர்ந்து எழுந்திருக்காம புரண்டுக்கிட்ருந்தேன். வாசலில் சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தால் சித்தியும் சித்தப்பாவும். ஓடிச் சென்று சித்தியைக் கட்டிக் கொண்டேன்.

சித்தியின் கண்கள் கலங்கின. என்னை தூக்கி முத்தமிட்டு கொஞ்சிக் கொண்டே சித்தி அம்மாவிடம் போனாள். அம்மா சித்தியின் தோளில் தலைசாய்ந்து ஒரு முறை குமுறினாள். அப்பொழுதுதான் கவனித்தேன். அம்மா ஒரு சாதாரணமான சுடிதாரில் எங்கோ புறப்பட்டிருந்தார்.

கைய்யில் ஒரு துணிப் பைய்யுடன் தோளில் ரெண்டாக மடித்த துண்டுடன் தாத்தாவும் தயாராயிருந்தார். நான் சித்தியிடமிருந்து அம்மாவிடம் தாவினேன். கலங்கிய கண்களுடன் உறுதியான குரலில் “சித்திய தொந்தரவு பண்ணாம இருக்கனும்; நானும் தாத்தாவும் அவசரமா வெளிய போறோம். மதியம் நீ சாப்ட்டு முடிக்றதுக்குள்ள வந்துருவோம் சரியா” என்று சொல்லிவிட்டு திரும்பிக் கூட பார்க்காமல் அம்மாவும் தாத்தாவும் வெளியே உறுமிக் கொண்டிருந்த ஸ்டேஷன் ஜீப்பில் ஏறிப் போய்விட்டார்கள்.

வீட்டில் நடப்பதெல்லாம் புதுசாயிருக்கு. கல்யாணம் முடிஞ்ச புதுசுல சித்தாப்பாவோட வீட்டுக்கு வந்த சித்தி இப்பத்தான் வீட்டுக்கு வந்திருக்காங்க. தாத்தா வந்தா அம்மா போனாங்க. சித்தியும் சித்தப்பாவும் வந்தா அம்மாவும் தாத்தாவும் போறாங்க.யாரும் அதிகம் பேச மாட்றாங்க.

எல்லாத்துக்கும் மேலா மூனு வாரமா அப்பாவும் வர்ல. அப்பா எப்ப வருவாங்கன்னு சித்தப்பாட்டயோ சித்திக்கிட்டயோ கேக்கலமா என்ன? நான் கேக்ல. எனக்கு எதுவும் புடிக்கல. சித்தியுடன் கொஞ்ச நேரம் வெளயாண்டேன். பெட்ரூம்ல பீரோவுக்கும் சுவத்துக்கும் இருக்ற இடவெளில பெரிய அட்ட டப்பால குவிஞ்சு இருந்த என் வெளயாட்டு சாமான்களத் துழாவினேன்.

அப்பாட்ட நீங்க போறமாதிரி பெரிசா எனக்கு ஒரு போலீஸ் ஜீப் வாங்கிக் கொடுங்கப்பான்னு நான் கேட்டு வாங்கின அந்த பெரிய பேட்ரோல் கார். பேட்ரிய ஆன் செஞ்சேன். நீலம், மஞ்சள், சிவப்பு, பச்சைன்னு பளிச்சுன்னு கலர் லைட் மேல சுத்த ஒரு நல்ல ம்யூசிகல் ஹார்னுடன் சீரான வேகத்ல ஓடி பெட்டின் மறு முனையின் காலில் போய் முட்டிக் கொண்டு நின்றது.

வாசலில் அப்பாவின் ஜீப்பிலிருந்து அம்மாவும் தாத்தாவும் இறங்கினார்கள். உள்ளே நுழைந்த தாத்தா நேராக பாத்ரூமிற்குள் போய் விட்டார். நான் திரும்பி பாக்றதுக்குள்ள பெட்ரூம் அட்டாச்ட் பாத்ரூமுக்குள்ள அம்மாவும் நுழஞ்சிட்டாங்க. குளித்துவிட்டு நைட்டியுடன் வெளியே வந்தஅம்மா தரையில் அமர்ந்து பெட்டின் காலில் சாய்ந்து கால் நீட்டி கண்களை மூடிக்கிட்டாங்க.

சித்தி அம்மாவின் அருகில் உக்காந்து அரட்டலுடன் நீட்டிய காப்பியில் இரண்டு மடக்கு மட்டும் குடித்து விட்டு, அம்மா என்னை நோக்கி கைய்யை நீட்டினாங்க. அம்மா என்னை வழக்கத்திற்கும் அதிகமாக இறுக்கி அணைத்திருந்தது போல தெரிந்தது. அம்மாவின் சூடான கண்ணீர் என் தோள்களை நனைக்க நான் அம்மாவின் கழுத்துக்குள் புகுந்து கொண்டேன்.

அன்னக்கு ராத்ரி அம்மா சாப்ட்ட மாதிரி தெரியல. மற்ற எல்லாரும் ஏதோ கடமைக்கு சாப்ட்டது போல. சித்தி ஊட்டிய நாலு வாயோடு நானும் மறுத்து விட்டேன். இரவின் வால் க்ளாக்கின் சத்தம் ரொம்ப அதிகமாக் கேக்ற மாதிரி இருந்தது. சித்ரா வீட்டு ஜானி ரெண்டு மூன்று முறை குரைப்பதும் ஊளையிடுவதுமாய். கட்டிலில் அம்மா புரண்டு கொண்டே இருந்தாள். ஒரு வழியாய் விடிந்தது போல.

மறுநாள் வீட்டு வேலயெல்லாம் சித்திதான். அம்மா பெட்ரூமில் ஒரு மூலையில். மதியம் தாத்தாவின் ஒரு அரட்டலுக்கு அப்றம் அம்மா கொஞ்சம் சாப்ட்டது போல தெரிந்தது. நான் வாசலயே பாத்திருந்தேன்; அப்பா வரவில்லை. சாய்ந்த்ரம் சித்ராவின் அம்மா வந்து என்னயும் சிறிது நேரம் மடியில் வைத்துக் கொண்டு அம்மாவுடன் ரொம்ப நேரம் உக்காந்த்ருந்தாங்க.

அவ்வப்பொழுது மெல்லிய குரலில் அவர்கள் பேசுவது கேட்டது. நான் பாக்ற நேரமெல்லாம் அம்மாவின் கண்களில் கண்ணீர் தெரிந்தது. நான் பக்கத்ல போனா இன்னும் அதிகமா. நான் அம்மாகிட்ட போகாம விலகினேன். ரொம்ப ஆசல்லாம் இல்ல; ஆனால் மறு நாள் மதியமும் வாசல பாத்தேன். அப்பா வர்ல. அம்மாவும் தாத்தாவும் போய் வந்ததுக்கப்றம் நான் வீட்ல யார்ட்டயும் அப்பா எப்ப வருவார்ன்னு கேக்கல. அப்பா வருவாரா - இல்லயா? தெரியல. ஆனாலும் மறு நாள் மதியமும் பாத்தேன். நோ அப்பா.

அம்மாவும் தாத்தாவும் போய் வந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு சித்தி அன்னக்கு வீட்டயெல்லாம் கொஞ்சம் ஒதுங்க வச்சாங்க. அம்மா தாத்தா சித்தப்பா எல்லோரும் கொஞ்சம் பரபரப்பா இருந்தாங்க. சாய்ந்த்ரம் அஞ்சு மணிக்கப்றம் அப்பா ஸ்டேஷன் ஜீப்ல அப்பா கூட வேல பாக்றவங்க வந்து இறங்கினாங்க.

ஜீப் தள்ளிப் போய் நின்றது. ஜீப்புக்கு அப்றம் ஒரு வேன்லயும் இன்னும் கொஞ்சம் பேர் யூனிஃபார்மிலும் இல்லாமலும் வந்து சேர்ந்தாங்க. அப்றம் ஒரு பெரிய வெள்ளக் கார் வந்தது. மத்தி வயதில் கம்பீரமான யூனிஃபார்மில் ஒருவர் இறங்கினார். மற்றவர்களெல்லாம் விறைப்பா ஒரு அட்டென்ஷன்ல வந்தாங்க. சித்ராவின் அப்பா விறைப்பா ஒரு சல்யூட் அடித்து “உள்ள போலாம் சார்” என்றார்.

“சங்கர் - ரொம்ப ஃபார்மாலிட்டிஸ்லாம் வேண்டாம்ப்பா” என்று சொல்லி கைய்யை உயர்த்தி எல்லோரயும் வரச் சொன்னார். எட்டு பத்துபேர் மட்டும் அவருடன் ஹாலுக்குள் வந்தார்கள். மற்றவர்கள் வராண்டாவிலும் வெளியுலுமாக. ஹாலின் ஓரத்தில் நின்ற அம்மா வணக்கம் செஞ்சாங்க.

அம்மாவின் அருகில் சித்தியின் கைய்யை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தஎன்னை பார்த்து “கம் டியர்” என்று கூப்பிட்டார். நான் தயக்கத்தோடு நெருங்கவும் என்னைத் தோள்களில் தூக்கிக் கொண்டே “குட் கேர்ள்” என்றார். பின்னால் திரும்பி “ரமேஷ்” எனவும் அவருடைய ட்ரைவர் ஒரு பெரிய கிஃப்ட் பேக்கை அவரிடம் தர அதை என்னிடம் தந்து முத்தமிட்டு என்னை கீழே இறக்கினார்.

திரும்ப அந்த ட்ரைவர் அப்பாவின் ஒரு பெரிய போட்டோ கொண்டுவந்தார். ஹாலின் மைய்யத்தில் சுவரில் அப்பாவுக்கு பிடித்தமான, “அன்பு சகலத்தையும் தாங்கும்” என்ற பைபிள் வசனம் பொறிக்கப் பட்டிருந்த, சிலுவையில் முள் முடியுடன் தலை கவிழ்ந்து அறையப் பட்டிருக்கும் ஜீசஸின் பிரசித்தமான அந்த ஓவியத்தின் கீழே சித்தி வைத்திருந்த டீப்பாயில் அப்பாவின் போட்டோவை சாய்த்து வைத்து, சித்ரா அப்பா கொடுத்த மாலையினை போட்டு ஒதுங்கி நின்றார்.

பெரிய அதிகாரி எல்லாரயும் திரும்பிப் பார்த்து விட்டு அட்டென்ஷனில் வர எல்லோரும் ரெண்டு நிமிஷம் அட்டென்ஷனில் வந்து விட்டு நார்மலானார்கள். அப்பாவின் சப் இன்ஸ்பெக்டர் அங்கிள் கொடுத்த ஒரு ஃப்ளாஸ்டிக் ஃபோல்டரில் உள்ளவற்றயெல்லாம் ஒரு முறை பார்த்து விட்டு ஒரு அடி முன்வர, அம்மா முன் சென்று அவரிடமிருந்து அதை வாங்கிக் கொண்டார்.

ஒரு பெண் தலமைக் காவலர் அம்மாவிடம் ஒரு பெரிய ஷாலைக் கொடுத்து வணங்கினார். கம்பீர யூனிஃபார்மில் கண்களிலும் உதட்டிலும் எப்பொழுதும் இருக்கும் அந்த சிறிய சிரிப்புடன் அப்பா போட்டோவில் ரொம்பவே அழகாக. அப்பா வர்ல; போட்டோ ஏன்? புரியவில்லை. இத்தன பேர் ஏன்? தெரியல. சித்ராவின் அப்பா சித்தியிடம் “கமிஷனர் சாருக்கு சீனி கொஞ்சமா” என்று சொல்வது என் காதுகளில் விழுந்தது.

தாத்தாவை அருகிலிருந்த நாற்காலியில் உக்காரச் சொல்லி பேசிக் கொண்டிருந்தார். பின் அம்மாவைப் பார்த்து “ஒரு மாசமோ?ரெண்டு மாசமோ – ரெஸ்ட் –ஓன் சாய்ஸ் அது. அதுக்குள்ள டி ஜி பி ஸார் உனக்கு ஒரு சூட்டபிள் போஸ்ட் ரெடி பன்னிருவார். லாரண்ஸோட வீட்டம்மாங்க்றத நீ ப்ரூவ் பன்னிருவேங்க்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.

யூ ஹேவ் அல்ரெடி டன் இட்.” தாத்தாவிடம் திரும்பி “வேற எதுன்னாலும் சங்கர்ட்ட சொல்லி அனுப்புங்க. நீங்க அலயக் கூடாது. நாங்க புறப்ட்ரோம்” என்று எழுந்தவர் முன் சித்தி டீ யுடன் வந்து நின்றார். “நோ - நோ ஃபார்மாலிட்டிஸ்; அதுக்கு இது நேரமில்ல” எனவும் தாத்தா “ டீ மட்டும்தான்; வேறு எதுவும் கூடாதுட்டாங்க” என்று சொன்னார்.

சிரித்துக் கொண்டே மறுபடியும் என்னக் கூப்பிட்டவர் “ஓகே ஃபார் ஜென்னிஸ் ஸேக் – யெஸ் மை டாட்டர்” என்றவர் டீயை வாங்கிக் கொண்டு சித்ராவின் அப்பாவிடம் “வெளிய எல்லாருக்கும் கொடுத்யா” என்று விசாரித்தார். டீ கப்பை வைத்தவர் “நல்லா படிக்கணும்; குட் கேர்ளா இருக்கீங்கன்னு அம்மா என்ட்ட சொல்லனும் சரியா?” என்று சொல்லி விட்டு எழுந்தார். காரில் ஏறி அமர்ந்தவரை சித்தப்பாவின் தோளில் இருந்து பை சொல்லி அனுப்பினேன்.

எல்லோரும் போய் விட்டார்கள். சித்தி மறுபடியும் ஹாலை ஒதுங்க வைத்தார்கள். அம்மா பெட்டில் சரிந்து குலைந்திருந்தாங்க. டீப்பாயில் அப்பாவின் போட்டோவை பார்த்தேன். போட்டோவின் கீழே இரண்டு தேதிகள் உறுத்திக் கொண்டிருந்தன. தாத்தா கமிஷனர் கொடுத்து விட்டு போயிருந்த ஃப்ளாஸ்டிக் ஃபோல்டரில் இருப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தார்.

மஞ்சள் கலரில் நீள அகலமாய், டைப் செய்து, பச்சைகலர் கையெழுத்து போட்டிருந்த இரண்டு பேப்பர்கள் தாத்தாவின் காலடியில் கிடந்தன. எடுத்துக் கொடுத்தேன். “ஓ செக் கீழ விழுந்துருச்சா?” என்று கேட்டுக் கொண்டே அவைகளை பத்திரமாக ஃபோல்டரில் வைத்தார். நான் தாத்தாவிடம் தீர்மானமாய் கேட்டேன்.

“தாத்தா பொய் சொல்லாம சொல்லுங்க; அப்பா எப்ப தாத்தா வருவாங்க? ”தாத்தா சிறிது நேரம் என்னை பார்த்தார். ஃப்ளாஸ்டிக் ஃபோல்டரை ஸ்டூலில் வைத்தார். என்னை தூக்க முயன்றார்; நான் விலகினேன். “ சொல்லுங்க தாத்தா - அப்பா வருவாங்களா? எப்ப வருவாங்க?”.தாத்தா முழங்கால் படியிட்டு என் இடுப்பில் ஆதரவாய் கைகளை வைத்து “அப்பா வரக் கொஞ்சம் ரொம்ப நாள் ஆகும்மா.

இப்ப உடனே வர முடியாதும்மா. அது கஷ்டம்” என்று நிறுத்தியவர் “ஆனா நாமல்லாம் அப்பாவப் பாக்கலாம். பாக்க முடியும். நாமதான் போய் பாக்கலாம்” என்ற தாத்தாவின் கண்கள் கலங்கின. தாத்தாவின் கழுத்தை என் கைகளினால் சுற்றினேன். “எப்ப போலாம் தாத்தா? நாளக்கு? காலேல?” தாத்தா என்னை தூக்கிக் கொண்டார். தலை கோதினர்.

“ நாம போலாம்; ஆனா எப்ப போலாம்? எப்டி போகலாங்க்றது எனக்கு தெரியாதும்மா. யாருக்குமே தெரியாதும்மா. போவோங்க்றது மட்டும் எல்லாருக்கும் தெரியும். எப்ப போவோங்க்றது எல்லாருக்கும் தெரியிற மாதிரி இருந்துச்சுன்னா ஒங்க அப்பாவோட யூனிஃபார்ம், டிப்பார்ட்மெண்ட் எல்லாமே இருக்குமாங்க்றதெல்லாம் பெரிய கேள்விதான். இதெல்லாம் ஒனக்கு போகப் போகத் தெரியும்மா”.

தாத்தா முடிக்கவும் பெட்ரூமிலிருந்து அம்மாவின் கூக்குரலிட்ட அழுகை வெடித்துக் கிளம்பியது. இதுவரை தேக்கி வைத்திருந்தது எல்லாம் உடைந்து சிதறியது போல. “ செல்லம், செல்லம்னு” படுக்கையில் குமுறிக் கொண்டிருந்த அம்மாவை, ஓடிச் சென்று படுக்கையில் ஏறி இருகக் கட்டிக் கொண்டு “அப்பா” ன்னு கதறினேன்.

சித்தி ஓடி வந்து என்னை எடுத்துக் கொண்டு அம்மாவைத் தேற்ற ஆரம்பித்தார். தாத்தா வாசல் நிலையில் சாய்ந்து – தூரத்தில் - கண்ணுக்குத் தெரியாத வைரஸ் அப்பாவைக் கொண்டுட்டுப்போன கண்ணுக்கு தெரியாத அந்த தூரத்தில் வெறிக்கப் பார்ப்பது போல; அந்த துயரத்தில் சிலையாக ...

- வல்லபாய்

Pin It