கடந்த இருபத்தைந்து வருடங்களாக பல இடங்களில் பல பேருடன், பல மாதிரியாக பேசியவாறும், சிரித்தவாறும், ஏதாவது சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டவாறும் தென்படுகின்ற ஒடிசலான காமாட்சி என்கிற மனித உருவம் அப்படி என்ன தப்பாக கேட்டுவிட்டார் என் கோபத்தை சம்பாதிக்கும் அளவிற்கு?

டீக்கடைக்காரர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சின்ன கண்ணாடி கிளாஸில் முக்கால்வாசி அளவு மட்டும் நிற்கும் டீ. நல்ல கனத்த சரீரம் கொண்ட பருத்த வயிற்றுக்காரர்களுக்கும், தன் வயிற்றின் சரிபாதியையும், தனது நாவின் சுவை அரும்புகளையும், டீக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும், இரண்டு அல்லது மூன்று மிடறுகள், அதிலும் சில சாதனையாளர்களைப் பார்க்கலாம். டீக்கிளாஸை வாங்கிய நேரம் குடித்து முடித்த வேகம் அப்படி ஒரு அசுர மாயம்.

ஆனால் என்னிடம் டீ கேட்ட காமாட்சி அப்படியெல்லாம் இல்லை. பெரும்பாலான நேரங்களில் அந்த முக்கால் கிளாஸ் தேத்தண்ணீரே, அவர் பசி நிரப்பும் அமிர்தமாய்...

அப்படிப்பட்டவரிடம் போய்...

நம்மிடம் கை நீட்டுபவரைப் பற்றியோ, நம்மிடம் கை ஏந்தி யாசகம் பெறுபவர்களைப் பற்றியான நம்மின் மன மதிப்பீடுகள் இதுவாகத்தான் இருக்கிறது. அதன் நீட்சிகளும், தொடர்புகளும், விரிபுகளும் இப்படி விஷ நகங்களாய் நீண்டு, நீண்டு...

Dogs eating breakfast

எப்பொழுதும் போலவே அன்றும் எனது சாய்ங்கால நகர்வு அலுவலம் முடிந்து முக்கு ரோட்டுக்கடை கதிரேசன் மாஸ்டர் தரும் டீயைக் குடித்துபிட்டு நகர்வது தான் எனது சாய்ங்கால பழக்கங்களில் மிகவும் பிரதானமானது.

இப்படியான பிரதானங்களிலேயே பிரஸ்தாபித்து போனவர்கள் நிறைய நிறையவே. அதில் நானும் ஒருவனா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதில் கண்மூடிக் கிடந்தேன் என்பது மட்டும் உண்மை. ஓடுகிற வண்டி. அந்த ஓட்டத்தின் பின்னாலேயே நூல் பிடித்து நகர்கிற ஒருவனாய் பயணித்துக் கொண்டு

அந்த மாதிரியான எனது பயணத்தின் ஊடாக எந்தவித ஆஜரும் அற்று நுழைந்து விட்டவர்தான் காமாட்சி. எனது வருகைப் பதிவேட்டில் ரெகுலராக ஆஜர் ஆகிற ஆளெல்லாம் கிடையாது அவர். திடுதிப்பென பிரசன்னமாவார். அடேயப்பா அந்த பிரசன்னம், திவ்ய தரிசனம்தான். ஐந்தரை அடி உடம்பை அட்டனன்ஸனில் நிறுத்தி, அதற்கு அடுத்த நிமிடம் அப்படியே அதற்கு எதிர்மறையாய் உடலை குறுக்கி, தலை தாழ்த்தி நான்கு, நான்கரை அடியாக வளர்ச்சி குன்றி வணக்கம் சார், என்பார் ஆளை அடிக்கும் ஒரு பளீர் சிரிப்புடன்.

ஒரு சின்ன நல விசாரிப்பு. சமயத்தில் குடும்ப உறுப்பினர் வரைகூட நீளும். இதன் ஊடாக டீ கேட்கும் நளின பாங்கு, சமயத்தில் ஒரு வடை இணைப்பாக, முடித்துக் கொண்டு போய் விடுவார், அவருக்கு என்ன ஞாபக மறதி இருந்தாலும் கூட போகும் போது அந்த வார்த்தையை சொல்ல மறக்க மாட்டார். சார் போகும் போது மறக்காம காசு குடுத்துருங்க, இல்லைன்னா.... என வார்த்தையை முடிக்காமல் போவார். மிச்சத்தை அவர் சிகரெட் வாங்கும் கடையில் முடிப்பார் போலிருக்கிறது.

அதற்கு அர்த்தம் இல்லைன்னா என் கணக்கில் காசு ஏறி விடும் என்பதை தவிர வெறென்னவாய் இருக்க முடியும்? அவருக்கு கணக்கு என்ன கணக்கு? பெரிய்ய...காந்தி கணக்கு.

ஆனால் காந்தியின் பேரிலும் கணக்கு இருந்ததாய் பிரபலமான பேச்சாளர் ஒருவர் பேசக் கேட்டதுண்டு. அவரின் கணக்கு ஒரு குயர், இரண்டு குயர் எல்லாம் தாண்டி மூன்று குயர், முப்பது குயர் நோட்டுகளிலெல்லாம் கூட அடங்க மறுத்து விடுபவை. வாரம், மாதம் என்கிற அடிப்படையான நடைமுறை ஒழுங்கு விதிகள் எல்லாம்... ம்ஹீம்

வேலைக்குப் போய் சம்பளம் வாங்குற அன்று காசு கொடுப்பார். ஆனால் எப்பொழுது வேலைக்கு போவார்? யாருக்குத் தெரியும்? அவரது வேலை அவர் குடியிருக்கும் தெருவின் அருகிலுள்ள வங்கியில்தான்.

லீவ் போஸ்ட். இரண்டு பேரில் யாராவது கடைநிலை ஊழியர் லீவு போட்டு விட்டால் அன்றைக்கு காமாட்சி வெண்மை புரட்சி பண்ணிவிடுவார். வெளுத்த வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் கசங்காமல் நீட்டாகத் திரிவார். அவரது நடையிலும் பேச்சிலுமே ஒரு தனி தேஜஸ். சமயங்களில் இங்கிலிஸ், அட ஆமாங்க, நம்ம காமாட்சிதான்.

வாட் இஸ் திஸ்? வாட் யூ வாண்ட்? ஐயாம் நாட் ரெஸ்பான்ஸிபில் பெர்ஸன்... என்றெல்லாம் பொளந்து கட்டுவார். அவருடன் பழகும் நண்பர்கள், டீக்கடைக்காரர்கள், தெருவாசிகள் எல்லாம் அந்த நாட்களில் காமாட்சியின் தலைக்குப் பின் சுற்றும் ஒளி வட்டத்தில் திக்குமுக்காடிப் போவதுண்டு.

அந்த அளவில்லா வெளிச்சத்தின் பின்புலனாக அவரின் படிப்பு, குடும்பம், மனைவி, மக்கள் என உள்ளீடாய் அவளை பிளந்து நுழையும் சமயங்களில் எதுவும் எஞ்சாது. அங்குதான் எதுவும் இல்லையே. அப்புறம் எங்கிட்டு...

வீட்டின் ஒரே பையன் காமாட்சி. ஆரம்ப பள்ளி காலங்களிலிருந்து அவன் செய்கையும், பேச்சும் குடும்பத்தில் அதிகாரம் செலுத்தும். அவனும், தங்கையும் அடங்கிய குடும்பத்தில் அவனை கறிவேப்பிலை கொத்து என்கிற பெயர் தாங்கச் செய்து, அவன் இஷ்டத்திற்கே குடும்பமே வளைந்தது. அவனை அதட்டிய அப்பாவை, அம்மா பிள்ளைப் பாசம் என்கிற வலை விரித்து விழச் செய்து விடுவாள். அப்புறமென்ன?

கட்டற்ற காற்றாய்.... உடன் பிறந்த தங்கையை காரணம் காட்டி தனக்கு அனாவசியம் என படிப்பை நிறுத்தினார். பின்பு கல்யாணம் வேண்டாம் என்றார். தங்கைக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பின்பும் கூட. கேட்டதற்கு பிடிக்கல என்றார் ஒற்றை வரியாய்.

அதையும் மீறி பெண் பார்த்து நிச்சயித்த அன்றிலிருந்து ஒரு வருடம் ஆளே காணாமல் போய்விட்டார். அதற்கப்புறமாய் பயந்து கொண்டு யாரும் அந்தப் பேச்சை எடுப்பதில்லை.

இனியொருதரம் இப்படி நிகழ்ந்து விடக் கூடும் என்கிற பயத்திலும், தாய் தனியாளாய் பரிதவித்துப் போவாள் என்கிற முன் ஜாக்கிரதையிலும், காமாட்சியின் தங்கை கணவர் பிள்ளைகளுடன் வந்து இரண்டு வருடம் வரை கூடவே இருந்தாள். அவரது தந்தையும் கடைசி வரை காமாட்சியை செட்டில் பண்ணி உட்கார வைக்க செய்த ஜெகஜால வித்தையெல்லாம் பயனற்றுப் போக... ஒத்த ஆண் வாரிசு இப்பிடி தறுதலையா திரியுதே என்கிற வருத்தத்திலேயே இறந்து போனார்.

வங்கி வேலையின் சொற்ப வருமானமும், அவரது அம்மா மாதா மாதம் கைச் செலவிற்காகத் தந்த முன்னூறு ரூபாயும், (அது காணாமல் அவ்வப்போது நச்சி பிடுங்குவார் அம்மாவை என்பது தனி ட்ராக்) அம்மா தந்த அரவணைப்புமே அவரை இந்த நாற்பத்தி எட்டு வயது வரை வளர்ந்துள்ளது.

அம்மா இறந்து விட்ட பிறகு அவரது ஒரே நம்பிக்கையான தங்கையும், வீட்டை காலி பண்ணி போய்விட்டாள். நல்ல வேளையாக உள்ளுரிலேயே குடி இருந்தாள். அதுவரை ஷேமம்.

கணவரின் திட்டுக்களையும், கோபத்தையும் மீறி எப்பொழுதாவது திருட்டுத் தனமாக வந்து சேரும் தங்கையின் கைமணம் மிக்க சாப்பாடும், அவளது சிறுபாடு காசும் காமாட்சியை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி வயிற்றிலும், மனதிலும் அமிர்தம் வார்க்கும். மற்றபடி இப்படித்தான் அவரது பிழைப்பு. இப்படித்தான் டீக்கடை, டீக்கடையாய்.

அவருக்கென்று இருக்கும் இரண்டு, மூன்று டீக்கடைக்காரர்களின் டீ மாஸ்டர்கள் தரும் கலங்கிய டீயும், சிகரெட்டுமே பெரும்பாலான சமயங்களில் அவருக்கு உணவாகிப் போகிறதுண்டு. அன்றும் அந்த தேவையின் அடிப்படையில்தான் என்னை அணுகியிருக்க வேண்டும்.

தங்கம் டீக்கடையில் அடுக்கிக் குவித்திருந்த பஜ்ஜி என் கண்களில் மின்னியது. கூடவே எண்ணைய் பலகாரங்களுக்கென குறிப்பாக பஜ்ஜி வடைக்கு தனது நாக்கிலும், வயிற்றிலும் தனி இடம் ஒதுக்கி வைத்திருக்கும் எனது மூத்த மகனின் ஞாபகம் வந்தபோது சைக்கிள் தானாகவே கடைமுன் நின்றது.

பஜ்ஜிக்கு சொல்லிவிட்டு டீக்குடித்து கொண்டு நிற்கையில்தான் காமாட்சி சிரித்தார். அது அவரின் தேவையை ஒட்டிய சிரிப்பின்றி வேறென்ன? வணக்கம் சார், வீட்ல புள்ள குட்டிங்க எல்லாம் நல்லாயிருக்காங்களா? பதிலேதும் சொல்லாமல் வெறித்தேன். இன்றைக்கு மனமிளகாமல் இறுக்கமாக இருந்து விடுவதென்ன முடிவெடுக்கிறேன்.

ஆத்திர அவசரம், நெளிவு, சுழிவு எல்லாம் தாண்டி இதே பழக்கத்தை தொடர்ந்து சாஸ்வதமாக்கப் பார்க்கிறார். அவர் வசிக்கும் இந்த ஏரியாவில் உள்ள எந்தக் கடையிலாவது டீக்குடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பளீர் சிரிப்பாலும், மிகவும் நெருக்கமாக கேள்வியாலும் தர்ம சங்கடப்படுத்தி விடுகிறார். இன்றைக்கு என்ன ஆனாலும் சரி. டீ வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவரின் இரைஞ்சலுக்கும், கெஞ்சலுக்கும் மனமிறங்கக் கூடாது. மனதில் இரக்கம் சுரக்கும் பகுதியை இறுக்கமாக மூடி தாளிட்டு சாவியை எங்காவது தொலைத்து விட வேண்டும். எத்தனை பேர் வந்து என்ன முயற்சி செய்த போதிலும் கூட ம்ஹீம்...பார்ப்போம்.

இன்றைக்கு களத்தில் ஜெயிப்பது நானா, அவரா என? பின்னே ஒரு வரைமுறையில்லாமல் என்ன இப்படி வந்து தொணதொணத்துப் பிராண்டினால்... என்னைப் பார்த்து மட்டும்தான் இப்படி கேட்கிறாரா? இல்லை...அவர் பழகிய எல்லோரிடமும் இப்படித்தானா? ஒருவேளை எனது முகத்தில் இளிச்சவாயன் என்கிற போர்டு எதுவும் எனாமல் பெயிண்ட்டில் எழுதப்பட்டு தொங்குகிறதோ? எனக்கு என்ன வேத விதியா என்ன? இவரை பார்க்கும் சமயங்களிலெல்லாம் ஒரு டீ வாங்கிக் கொடுத்து அழுவதற்கு? அல்லது இவருக்குப் பயந்து இந்த ஏரியாக் கடைகளில் டீக் குடிக்காமல் இருக்க முடியுமா?

இவருக்குத் தருகிற இரண்டு ரூபாய்க்கு எனது மகளுக்கு ஒரு சாக்லேட் வாங்கித் தந்து விட்டுப் போகிறேன். எனக்கும், குடும்பம் பிள்ளை குட்டியெல்லாம் இருக்கிறது. ஆமாம். வர்றவுங்க, போறவுங்களுக்கெல்லாம் அள்ளிக் குடுக்க இங்க என்ன கொட்டியா கெடக்கு இவருக்கென்ன, வயது அதிகம் என்பதை தவிர வேறென்ன?

பதினாலு, பதினாறு வயசுப் பையன் வேலைக்கிப் போறான். கம்பிக்கட்டு, சித்தாள், தீப்பெட்டி ஆபிஸ் இத்தனைகளில் ஏதாவது ஒன்றில் இவர் கையை கலந்து விடலாமே? சே, என்ன மனிதர் இவர்? என்ன பிழைப்பு இது? இவருக்கு அறிந்தவர், தெரிந்தவர், சொந்தக்காரர்கள் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் போலிருக்கிறது அல்லது சொல்லி பிரயோஜனமில்லை என தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள் போலிருக்கிறது.

அப்படியானால் வாடகைக்கு வீடு பார்ப்பது, வீடு விற்க, வீடு வாங்க, டூ வீலர்... என யாரிடமாவது பேசிக்கொண்டிருப்பது எல்லாம் உடான்ஸா? அந்தத் தொழில் தனக்கு அத்துபடி எனக் காட்டிக் கொள்வது ஒரு டீ வடை, அல்லது மிக்சர் டீக்கான அஸ்திவாரமாயிருக்குமோ?

பின்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு வீடு, டூவீலர் காட்டுவாரா அல்லது தண்ணி காட்டுவாரா? டூவீலர் வாங்கித் தருகிறேன் என ஒருவரிடம் வாங்கிய 500 ரூபாயை திருப்பித் தரவில்லை என நான்கைந்து பேருடன் வந்து சண்டையிட்டு காமாட்சியின் வாட்சை வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். விட்டாரா காமாட்சி, மீதியை வெண்திரையில் காண வேண்டுமென்பதில்லை. அவரது மனத்திரையில் காணலாம். அதெல்லாம் திறந்து பார்த்து அனாவசியம்...வேண்டாம் விடுங்கள்.

காசில்லாதபோது கடன் சொல்லுவார். காசுள்ள போது கடனை அடைத்து விடுவார். இதுதான் காமாட்சி பார்முலா. அதே போல கையில் காசு உள்ளபோது வங்கியின் லீவு போஸ்ட் வேலைக்கும் போகமாட்டார். கூப்பிட்டனுப்புவது வங்கியின் மேலாளராக இருந்தபோதும் கூட.

காசை விட வங்கியின் மேலாளர் பெரியவரா? அவரது மனத்தராசு காசின் பக்கமே, அம்மாதிரியான சமயங்களில் நான் என்ன? நீங்கள் என்ன? யார் என்ன....? ஒது துச்சப் பார்வை. புறந்தள்ளும் நோக்கு...ஹீம்...

ஆனால் டீக்கடை மாஸ்டர்களை தனியாக கவனிப்பார். கவனிப்புக்கு பதில் கவனிப்பு என்பார். பொட்டலம் முதல் சப்பட்டை பாட்டில் வரைக்கும் என அவர்களுக்கு காசு தர அஞ்சுவதில்லை.

டாம், டூம், டமார், டூமில் தான்.

காசு கரையும் தொங்கிய முகத்துடன் அவர் வேர்விட்டு பரந்திருந்த, வேடந்தாங்கலான டீக்கடைகளை நோக்கித்தான் அவரது கால்கள் நகர்ந்திருக்கின்றன, பற்களில் மஞ்சள் கறை படிந்த டீக்கடை மாஸ்டர்களும், அவர்களின் சைஸான பேச்சுக்களுமே அவரை இருந்தி வைக்கும் இடத்தில்.

அந்தப் பேச்சுக்களையெல்லாம் அவர் கேட்டு ரசிப்பதாலேயோ, சிரித்து மகிழ்வதனாலேயோ அங்கு நடமிடும் பேச்சுக்கள் அவருக்கு ஏற்பானவை என அர்த்தம் இல்லை. ஒருவேளை அவரின் வயோதிக, கசங்கல் தோற்றத்தை மீறிய அயர்வும், பசியும் அந்தப் பேச்சுக்களில் மறைந்து போகக் கூடும். அல்லது தற்சமயத்திற்கு ஒத்தி வைக்கப்படக்கூட செய்யலாம்.

இப்படியான அவரது நகர்வுகளின் மூலமாக அறிமுகம் ஆனவர்தான் இன்று ஒரே சாதித்தலாய் நிற்கிறார் ஒரு சிங்கிள் டீக்காக.

நானும் அதே சாதித்தலுடன் எல்லாவற்றையும் கவனிக்காமல் புறந்தள்ளுபவன் போல் கடையினுள் ஓடிய டீ.வி. மேல் பார்வையைத் திருப்பினேன். வணக்கம் சார், தோளைத் தொட்டுச் சொன்னார். திரும்ப வேண்டிய நிர்பந்தம். என்ன? பார்வையிலேயே கேட்கிறேன். சார் ஒரு டீ சொல்லுங்க. பட்டென சொல்லிவிட்டேன், இல்லண்ணே, கையில காசு இல்ல சைக்கிள் ஏறி விட்டேன். ஏறிவிட்ட சைக்கிள் மிதிபடவில்லை.

ஹேண்ட் பார், முன்சக்கரம், பின்சக்கரம், மிதிபடும் பெடல் எல்லாவற்றிலுமாய் காமாட்சி இருந்து அழுத்துகிறார் பாரமாய். சைக்கிள் செயின் மனதின் ஊடாக நகர்ந்து நகர்ந்து இழுபடுகிறது.

பல்சக்கரத்தின் மேலாக படர்ந்து எழும் செயினின் ஒவ்வொரு இடைவெளியிலிருந்தும் ஒவ்வொரு காமாட்சிகள் முளைத்தெழுகிறார்கள். முளைத்தெழுந்த காமாட்சிகள் மொத்தமாய் சேர்ந்து என் மேல் ஏறி உட்கார்ந்து லகான் இட்டு இழுக்கும்போது என்னால் சைக்கிள் மிதிக்க இயலாமலேயே போகிறது. அவர் மீது கோபப்பட்டு வரும் அளவு அப்படி என்ன கேட்டு விட்டார்?

இந்த இரண்டு ரூபாய் டீ விஷயத்தில் அவர் என்னை திட்டமிட்டு சீட்டிங் செய்கிறார் என எனது மிடில் கிளாஸ் மூளை மிகவும் சாமர்த்தியமாக யோசிக்கிறதே. இந்த இரண்டு ரூபாய் விஷயத்தில் நான் ஏமாற்றப்பட்டு இளிச்சவாயன் ஆகி விடுகிறேன் என்றால்... நான் பிறந்ததிலிருந்து இன்று வரை அனுதினமும் எத்தனை பேரிடம் ஏமாந்திருக்கிறேன். எத்தனை பேரால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் பல சமயங்களில்.

எனது முதல் மகளை இங்கிலீஸ் மீடியத்தில் சேர்க்கப் போனபோது அவர்கள் எனது சொத்தில் பாதியை (10 நயிரம்) கிரையமாக எழுதி வைக்கச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அதைச் செய்யத்தான் செய்தேன். நான் மட்டும் இல்லை. என்னைப் போல் அந்தப் பள்ளிக்கு வந்திருந்த அனைவரின் கதியும் அதேதான்.

கேட்டால் நகரில் நல்ல பள்ளி. நம்ம கஷ்டப்பட்டாலாவது புள்ள நல்லா இருக்குமுல்ல என்கிற அர்த்தம் பொதிந்த வரை வரிகளுடான வசனம் வேறு. யார் நிர்ணயிக்கிறார்கள் இந்த பள்ளியில். இந்தப் படிப்புக்கு இவ்வளவு கட்டணம் ஏன் வாங்குகிறார்கள்? என்ன செய்வார்கள்? என்கிற கேள்விகளை நான் உட்பட யாரும் அன்றைய தினம் வாய்திறந்து கூட அல்ல, மனம் திறந்து கூட யாரிடமும் பரிமாறிக் கொண்டதாக எந்த நினைவும், எந்த பதிலும் இல்லை.

பிறிதொரு நாளில் வயிற்றுப் போக்கால் நடுராத்திரியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேருமளவிற்கு வந்து விட்டது. மறுநாள் மாலை டிஸ்சார்ஜ் ஆகும்போது இரண்டாயிரத்து நூறு ரூபாய் ஐம்பது பைசா பில் தந்தார்கள். இதற்கு வயிற்றுப் போக்கே தேவலாம் போல் ஆகிவிட்டது. உயர்ந்து இரண்டடுக்காய் நின்ற அந்த ஆஸ்பத்திரியின் அஸ்திவாரக் குழி தோண்ட ஆன செலவிலிருந்து என் போன்ற பேஷண்ட் தலையில்தான் விடிகிறது.

இதையெல்லாம் தாண்டி நடந்த கொடுமை. வெளியில் சொல்ல வேண்டிய கனா ஆகிப் போனது. வீடு கட்டி தந்த காண்டிராக்டர். நன்றாக வந்து, நன்றாகப் பேசி, நன்றாக ஒப்பந்தம் போட்டார். வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை, செல்போன், பைக், வாட்ச், மோதிரம் எல்லாம் தாண்டி பேச்சிலேயே வீடு கட்டி விடும் சாமர்த்தியம்.

இடத்தை கொடுத்தால் வீட்டின் சாவியை கொடுத்து விடுவதென பேச்சு. சதுர அடி ரேட். எல்லாம் பேசி முடிந்து வீடு வளர்ந்து கொண்டிருக்கும்போது காண்ட்ராக்டர் க்ரேட் எஸ்கேப் என்ன பேசியும், பஞ்சாயத்துப் பண்ணியும் ஒன்றும் ஆகவில்லை. ஐம்பதாயிரம் நஷ்டமான மனக் கஷ்டத்துடன், மனப்பித்துப் பிடித்தவனாய் யாரும் பார்க்காத சமயங்களில் கண்ணீருடனும், ஏதோ பெருந்தவறு செய்துவிட்ட மன உறுத்தலுடன் திரிந்து சிறிது நாட்கள் கழித்து மீண்டு வந்திருக்கிறேன் அந்த மிகப் பெரிய ஏமாற்றத்திலிருந்து.

இப்படியெல்லாம் ஈஸியாக அனுதினமும் சிறியவைகளிலிருந்து, பெரியது வரை யாரிடமாவது ஏமாறும் சமயங்களில் அல்லது ஏமாற்றப்பட்ட சமயங்களில் எல்லாம் மிகவும் கெட்டிக்காரத் தனமாக மனச் சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன். அல்லது வெளியில் சொல்லாமல் ஜெயித்ததாய் காட்டிக் கொள்ள விழைந்திருக்கிறேன்.

அந்த சமாதானமும், மன ஏற்பும், இந்த இரண்டு ரூபாய் செலவு விஷயத்தில் தோற்று காமாட்சி என்னை ஏமாற்றி காசு பிடுங்குவதற்காகவே உருவெடுத்தவர் போலவும் நினைத்து புழுங்கி சுருங்கிப் போவது ஏன்?

அந்த மனச் சுருக்கம் ஏன் வருகிறது? அது என்னில் எங்கிருந்து புறப்படுகிறது? புற்றீசலாய்?

அம்மாதிரி ஈசல்கள் அடர்ந்த புற்று என்னுள் வளர்ந்து, வளர்ந்து, பெரிதாகி எந்த ஆபரேஷன் செய்தாலும் சரியாகாத அளவிற்கு நிற்கிறதே ஏன்?

இப்படி பெரிது, பெரிதாக வளர்ந்து நின்று என்னை இன்றளவும் அரித்துக் கொண்டிருக்கும் புற்றின் முடிச்சு எங்கே இருந்து முளைவிடுகிறது. விடை தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் சீக்கிரம். அடுத்து காமாட்சியை பார்க்கும் தருணங்களில் கண்டிப்பாக டீ வாங்கித் தர வேண்டும்.

Pin It