"டேய் மனுசனுங்களா... வந்து வண்டிய எடுங்கடா" என்று வீட்டு வாசலில் நின்று கத்திய இளம் மாடு... மிதுன் சக்கரவர்த்தியை... ஊஞ்சலில் இருந்து இறங்கியபடியே..." எத்தனை வாட்டி சொல்லிருக்கேன்... அவனுங்கள அப்டி கூப்பிடாதான்னு. 

அவுனுங்களுக்கு பேர் இருக்குல்ல... ரமேஷ்... சுரேஷ்ன்னு..." கோபமாய் சொல்லி விட்டு... அதே நேரம் சாந்தமான குரலில்..."  பாவம்ல ஸ்வீட் ஹார்ட்..." வாலை ஆட்டி கொசுக்களை விரட்டிக் கொண்டே... ஒரு தகப்பன் பாவனையில் அருகே வந்து நின்றது கிழட்டு மாடர். 

ராம நாராயணன் படத்தில் வரும் மாட்டை போல வாயைக் கோணித்துக் கொண்டு… "அப்பா உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல... இவுனுங்க நம்மள எப்படியெல்லாம் ஆட்டி படைச்சானுங்க... தண்ணி வண்டில... வைக்கப் போர் வண்டில... காய்கறி வண்டில... நிலத்த உழுகன்னு போட்டு வாட்டி எடுத்தானுங்களே.

அதுவும் சிட்டியே கார் பைக் வேன்னு போகும் போது அதுக்கு நடுவுலயும் வண்டிய இழுக்க விட்டு மானத்தை வாங்குனானுங்களே. இதுல கொஞ்சம் உடம்பு கிடம்பு சரி இல்லனா சாவடி அடிக்கறது.

மாட்ட அடிக்கறாப்ல அடிக்கறானுங்கனு சொலவடையே உருவாக்கிட்டானுங்கப்பா... எல்லாம் எகத்தாளம்.. பேச முடியுங்கற திமிரு.

இப்ப எல்லாம் போச்சா.. காலம் மாறிடுச்சுப்பா. இப்ப நாம பேச ஆரம்பிச்சுட்டோம். அவனுங்க ஊமை ஆகிட்டானுங்க. சோறு வேணும்னா சொல் பேச்சு கேட்டு தான் ஆகணும்... அதுவும்.. அவனுங்க விளையாட்டுக்கு நம்மள பலி கொடுக்கறது... அவனுங்க போட்டிக்கு நம்மள ஓட வுடறது.. அதுல மீசையை வேற முறுக்கிக்குவானுங்க... என்னவோ இவனுங்களே நுரை தள்ளி ஓடி ஜெயிச்ச மாதிரி... பிக்காலி பசங்க..." 

"சரி சரி.. காலைலயே மனுஷ புராணம் நமக்கெதுக்கு. நீ போற காரியத்துக்கு போ. துணைக்கு ராஜாவை கூட்டிகிட்டு போ.." சொல்ல சொல்லவே ராஜா ஓடி வந்து வண்டியில் ஏறி குத்த வைத்து அமர்ந்தது.

"மிதுன் சக்ரவர்த்திண்ணா... வாங்க... வந்து வண்டிய எடுங்க... இந்த ரமேசும் சுரேசும் முறைக்கறானுங்க.." வால் ஆட்டிக் கொண்டே வாயை திறந்து நாய் பேசியது வாரம் முழுக்க கமகமக்கும் சொல்லாடல்கள்.

"சரிடா தங்கம்.. வந்துட்டேன்..." என்றபடியே மாடன் மிதுன் சக்ரவர்த்தி வந்து வண்டியை எடுக்க சுரேசும் ரமேஷும் வண்டியை இழுக்க ஆரம்பித்தார்கள்.

வண்டியை தன் பிள்ளை ஓட்டும் அழகைப் பார்த்து... மெய் மறந்து... பாக்யராஜ் படத்தில் வரும் K.K சௌந்தர் போல... "நல்ல புள்ளைங்க" என்று கழுத்தை ஒரு திருகாணி பொம்மை போல ஆட்டி சிரித்தார் அப்பா மாடன்.

"ம்ம்ம்... ஹோய்... ஹாய்... வேகம்... போகட்டும்..." சலீர் என வாலை முன் பக்கம் நிமிர்த்தி வளைத்தெடுத்து சுரேஷ் முதுகில் ஒரு போடு போட்டது மாடன் மிதுன் சக்கரவர்த்தி.

"அயோ.. பாவம்... விட்ருங்க... வாயில்லா பூச்சிங்க..." நாக்கை கழுத்து வரை நீட்டி சப்பு கொட்டியது ராஜா.

"யாரு இதுங்களா... ரெண்டு உலக போறே நடத்தின பிசாசுங்கடா. இருக்கற வயக்காட்டை எல்லாம் பிளாட் போட்டு வித்த முட்டா பயலுக. நாங்க மேய வழி இல்லாம செஞ்ச நய வஞ்சகனுங்க. உங்க இனத்துல... கொஞ்சம் புசு புசுன்னு இருக்கறத வீட்டுக்குள்ளயும் உன்ன மாதிரி தோல் ஒட்டி இருக்கறதுங்கள வீதிலயும் விட்ட விளங்காதவனுங்க... இன்னும் உனக்கு விவரம் வேணும் மார்த்தாண்டா. 

சரி அண்ணனுக்கு டென்சன் ஏறி போச்சு... அந்த... பாட்ட போடு.. அதான்... இந்த ராமராஜன் பாடுன பாட்டு. மனுஷ பயங்கள்லயே அவர் ஒருத்தர்தான்யா மனுஷன். எங்களுக்காக என்னமா பாடிருக்கார்.. அந்த பாட்ட போடுய்யா கேப்போம்..." என்ற மாடன் சக்கரவர்த்தி சுரேஷ் ரமேஷின் கழுத்தானுங்கயிறை லாவகமாக இழுத்து இழுத்து மனுஷ வண்டியை ஓர் ஓவியத்துள் இருந்து வெளியே எடுப்பது போல நகர்த்திக் கொண்டிருந்தது.

வண்டி சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த... சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த எருமை இனியராஜன்... "என்ன பங்காளி.. இன்னைக்குமா பஞ்சாயத்து… உன்காட்டுல எப்பவும் மழைதான்யா" என்று பேசிக் கொண்டே வாயை படக்கென்று மேல் நோக்கி வளைத்து ஒரு சிரிப்பு சிரித்தது.

"அயோ… ராமா... காலைலயே இவன் மூஞ்சீலயா முழிச்சோம்..." முனகிய ராஜ மார்த்தாண்டன் கண்டும் காணாமல் தலையை கீழே சரித்துக் கொண்டது. 

"அதெல்லாம் இருக்கட்டும். எப்ப தான் நீ உருப்பட போறயோ. இப்டியே ரோடு மேய்ஞ்சுகிட்டு திரி. அப்புறம் இந்த மனுஷ பயலுங்க... எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரின்னு சொலவடை உருவாக்காம என்ன பண்ணுவானுங்க… சரி சரி... வீட்டுக்கு போ... அம்மா வர சொல்லுச்சு… வெது வெதுன்னு கழுநீர் ஊத்தி வெச்சிருக்கு... போய் குடிச்சு உன் அண்டா வயித்த ரொப்பிக்கொ.."

பேசிக் கொண்டே வண்டி தொடர்ந்து முன்னேறியது. மூச்சு முட்ட சுரேசும் ரமேசும் வண்டியை இழுத்துக் கொண்டிருந்தார்கள்.

"போடா… போடா… பெரிய பஞ்சாயத்து தலைவராகிட்டான்னு ஓவர் சீன். உன்னைய கட்டி போட்டு வளர்த்தப்பவே ஊர் மேஞ்சவன்டா நான்… என்கிட்ட... உடான்ஸ் விடாத.." -சக்ரவர்த்தி போன திசையை பார்த்து "த்துரூ.." என்று துப்பி விட்டு மீண்டும் ரோடு மேயலை தொடர்ந்தது எருமை இனிய ராஜன்.

ரோட்டிலிருந்து உள்ளே தள்ளி பக்கவாட்டில் இருந்த நிலத்தில் ரெண்டு ரெண்டு மனிதர்களாக கழுத்தை வளைத்து குனிந்து கொண்டே உழுது கொண்டிருக்க... பின்னால் கலப்பையில் ஏறி நின்று வேலை வாங்கிக் கொண்டிருந்தன மாடன்களும் ஆடன்களும். 

"மே... ம்மே... அப்டித்தான் அப்டித்தான்... இன்னும் வேகம் இன்னும் வேகம்...."என்று கத்தி கத்தி உற்சாகம் ஊட்டிக் கொண்டிருந்தன ஆடுகள். 

"ஆட்டுக்கு வால அளந்து வெச்சானா கடவுளு... உங்களுக்கு அது கூட இல்லையேடா... என் டுபுக்க்ஸ்..." என்று சொல்லி முன்னங்கால்களைத் தூக்கி சிரித்த ஆட்டின் தலையில் ஒரு தட்டு தட்டி "வேலைய பாரு... நண்பா " என்றது... கூட வேலை வாங்கிக் கொண்டிருந்த மாடன்.

'பரவாயில்ல வேலை நல்லா நடக்குது..." மார்த்தாண்டனிடம் பேசிக் கொண்டே சக்ரவர்த்தி வண்டியை "ஹாய் ஹாய்... ஹே..." என்று விட....

"அண்ணா வண்டிய நிறுத்துங்க..." ராஜ மார்த்தாண்டன் கத்தினான். 

கழுத்துணாங் கயிறை எகிறி இழுத்துப் பிடிக்க... சடன் பிரேக் போட்ட மாதிரி வண்டி கச்சிதமாக நிற்க... கோழி குந்தாணிச்சி ஓடி வந்து மூச்சிரைக்க நின்று கழுத்து சாய்ந்து பார்த்தது. 

"ஏய் இவளே... என்னவ… இப்பிடி இறக்கை உதிர ஓடி வர்றவ,. !" மிதுன் கண்களில் படக்கென்று வந்து போனதொரு நாள்பட்ட கிறக்கம்.

"இல்…ல… டவுன்க்கு தான போறீக... சோளம் தின்னு தின்னு நாக்கு செத்து போச்சு... கொஞ்சம்.. குர்குரு வாங்கிட்டு வாங்க..." மூச்சு வாங்க... பேச்சும் வாங்க... ஒற்றை காலை மண்ணில் போட்டு கிறுக்கியது.

முதல் மரியாதை சிவாஜி மாதிரி வீங்கிய முகத்தோடு பார்த்து விட்டு.. "சரி சரி காலை உடைச்சுக்காத… இருக்கறதே குச்சி காலு... அதையும் உடைச்சிகிட்டா உங்க ஆத்தாகிட்ட யாரு கொத்து வாங்கறது... போக்கத்தவ... போ போ.., வாங்கிட்டு வரேன்..." என்றபடியே வண்டி கிளம்ப.

அதே நேரம்... சற்று முன்னால் சாலையில் குறுக்கே புகுந்த பாம்பு வளம்பன்... "மிஸ்ட்டர் சக்கரவதி... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ரோட் கிராஷ் பண்ணிக்கறேன்... இந்த மனுஷபயக தான் நம்மள பார்த்ததுமே... என்னமோ இவுனுங்கள கொல்ல வந்த மாதிரி... எங்களுக்கு வேற வேலையே இல்லாத மாதிரி… கொஞ்சம் கூட யோசிக்காம வண்டிய மேல ஏத்தி... கத்தி கூப்பாடு போட்டு மிச்ச மீதி இருக்கற உயிரை அடிச்சே கொன்னு... அப்புறம் மண்ணுக்குள்ள பால வேற ஊத்துவானுங்க... வர்ற கோவத்துக்கு வந்து ஓங்கி ஒரு கொத்து விடனும் போல இருக்கு.." முனங்கி கொண்டே சாலையில் நெளிந்து நெளிந்து கடக்க.

"என்ன வளம்பா... தீனி ஓவர் போல... கழுத்து வரை அடிச்சு தூக்கிருக்க... தொப்பை வந்துருமயா.. பாத்துக்கோ... அப்புறம் இப்டி இப்டி ஸ்டைலா ஊருக்கு ஊருக்கு போய் நெளிய முடியாது... ஹா அஹ்ஹா..." மேல் எகிறு தெரிய சிரித்த சக்ரவர்த்தி கொம்பை வாலால் தடவிக் கொண்டது. ஊர்வதை நிறுத்தி தலை தூக்கி பார்த்த வளம்பன்... கடுப்பில் ஸ்ஸ்ஸ் என மூச்சு விட்டது.

"வாயை குறை. ஓயாம செத்த கிழட்டு மூதேவிங்க மாறி பேசிட்டே இருக்காத. பாம்புனா ஒரு கெத்து இருக்கியா.. அதை மெயிண்டெயின் பண்ணு.. "சக்ரவர்த்தி பேச பேசவே இடைமறித்த பாம்பு வளம்பன்... "சரி சரி.....உடனே அட்வய்ஸ் பண்ண ஓடி வராத... மூடிட்டு போ. ஊருக்கே பன்னாட்டன்னு நினைப்பு..." என்று சொல்லி விட்டு... "ஒரு நாளைக்கு மூக்குலயே போடறேன் பாரு..." என்று முனகிக் கொண்டே சோளக் கட்டுக்குள் ஊர்ந்து மறைந்தது .

"ஐயோ அண்ணே... இவன கண்டாவே எனக்கு காண்டாகுது.. அரசியல் மொள்ளமாரித் தனம் நிறைய பண்ணுவாண்ணா. வண்டிய எடுங்க..." முனகிய ராஜ மார்த்தாண்டனை பார்த்து... "பாம்பன் குசும்பன்...அவனுக்கு அவனே ஆப்பு வெச்சுக்குவான். இல்லனா அவன் கூட்டத்துலயே ஆப்பு வைப்பானுங்க... அவன் கூட்டத்துக்கு அறிவே இல்ல மார்த்தாண்டா... லூசுல விடு.." பெரிய தலையை பெருந்தன்மையாக ஆட்டிக் கொண்டே வண்டியை முடுக்கியது மிதுன் சக்ரவர்த்தி.

எங்கிருந்தோ வேகமாய் வந்த பறவை ஒன்று பட்டென்று ரமேஷ் தலையில் ஒரு கொத்து... சுரேஷ் தலையில் ஒரு துப்பு. அதே வேகத்தில் மேலெழுந்து சக்ரவர்த்தியின் தலையில் அமர்ந்து வாங்கியது பெருமூச்சு.

"ஏய்... என்ன பண்ணிட்டு இருக்க... அதுங்களே... பாவம்.. முடியாம வண்டியை இழுத்துகிட்டுருக்குதுங்க... அதுங்கள போய்..." உரிமையோடு கோபித்துக் கொண்டது சக்ரவர்த்தி. 

"யாரு பாவம்.. இதுங்களா… அக்கட்டால போ நீ... உனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி சக்ரா. இந்த பயலுங்கதான் குளத்தை... கிணத்தை... வாய்க்கால... ஆத்தை... எல்லாத்தையும் காலி செஞ்சவனுங்க. ஒரு சொட்டு தண்ணிக்கு ஊர் ஊரா ரெக்கய தொங்க போட்டுகிட்டு அலையறதுங்களுக்கு தான் தெரியும் மூக்கு தள்ளறது.

உனக்கென்ன ஜம்முனு ஊருக்குள்ள நாட்டாமை பண்ணிட்டு திரியற. படுபாவிங்க… உக்காந்து இளைப்பாற... கூடு கட்ட.... குஞ்சு பொறிக்க... ஒரு மரம் விட்டு வைக்கல... எல்லாத்தையும் வெட்டி ரோடு போடறானுங்களாம்... வெங்காய ரோடு..." எட்டி உதைக்க ஒற்றை காலை தூக்கி தூக்கி சுரேஷ் பக்கம் நீட்டியது பறவை.

"சரி சரி விடு ஆத்தா.. நீ வீட்டுக்கு போ.. முன்னாலயே தொட்டி நிறைய தண்ணி இருக்கு… உன் ஆளுங்களல்லாம் கூட்டிட்டு போய் குடிச்சு குளிச்சு கும்மாளம் போடு... நான் சாய்ந்தரம் வந்தர்றேன்.. பேசிக்குவோம்..." - கொம்பை காற்றில் நீவிக் கொண்டே கரு கரு வாய் தோலை தூக்கி சிரித்து வழி அனுப்பியது சக்ரவர்த்தி.

"ம்க்கும்.. இன்னும் எத்தனை காலத்துக்கு கேன் தண்ணிய வாங்கி ரொப்பி வைப்பீங்கன்னு பாக்கறேன்.." முணங்கிக் கொண்டே வானத்தில் விமானம் ஆனது பறவை.

சிறுவர்களின் நாடக திரை இடைவேளைக்கு மூடியது. பார்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் அமைதியாய் மூடிய திரையையே வெறித்தார்கள். சீமாட்டி ஒருத்தி மடியில் அமர்ந்திருந்த நாய்க்குட்டி துள்ளி துள்ளி எதுவோ பேச முயற்சித்துக் கொண்டிருந்தது.

- கவிஜி

 

Pin It