ஈழதேசியம், தமிழ்த்தேசியம் என்பனயெல்லாம் ஒருவகையில் நடுவணாத்திக்கத்தின்  எதிர்வினையே ஆகும். நடுவணாதிக்கம் ஒழித்த பொருளியல் மட்டுமே எல்லா இடங்களிலும் பரவலான சமன்பட்ட வளர்ச்சியை நல்கவியலும். உலகம் முழுமையிலும் முதற்தெறி (முதலாளியம்) மற்றும் கம்யு+னிச நாடுகளில் பெருநகரங்களில் உள்ளது போன்ற வாழ்க்கைத் தரம் பிற இடங்களில் புறநகர், சிறுநகர் கிராமங்களில் அமைவதில்லை. இந்த நிலை நடுவணாதிக்க பொருளியல் அணுகுமுறையால் நிகழ்ந்ததாகும்.

நகரங்கள் 5,000, 10,000, 20,000 என்ற மக்கள் தொகை கொண்டிருத்தலே போதுமானது. இலட்சம், 10 இலட்சம், கோடி என்ற படியான பெருநகரங்கள் தேவையற்றன. பெருநகரங்களால் குமுக - பொருளியல் - சுற்றுச்சூழல் நெருக்கடிகள், மிகுதியாக ஏற்படுவதுடன், உளத்தியல் நோய்களும், உடல்  நோய்களும் பெருகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதோடு போக்குவரத்து நெரிசலும் அதிகம்.

இலாபநோக்கு அடிப்படையில் ஒரு சிறு பகுதி மக்களுக்கு மட்டுமே பொருள் உற்பத்தி செய்வது  என்ற நிலையை மாற்றி ஊர் கடந்து, எல்லை கடந்து ஒரு பெருநிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களுக்கு  உற்பத்தி மேற்கொண்டால், அதிக அளவான விற்பனைக்கு அதிக இலாபம் கிட்டும் என்ற திட்டத்துடன்  செயல்பட்டதால் சிறு சிறு பகுதிகளில் சிறு அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த தொழில்கள் நசிந்தன, தேய்ந்தன. அதனால் வேலையின்மை அவ்வப்பகுதிகளில் ஏற்படவே மக்கள் பெருநகரங்களை நோக்கி நகர்ந்தனர். இதனால் பல கிராமங்கள், சிறு நகரங்கள் காலியாயின. உலகில் இன்றுள்ள  பெருநகரங்கள் பலவும் பல கிராமங்களின் நகரங்களின் புதை மேட்டில் வளர்ந்து செழிப்பவை தான். 

இவை எவ்வாறு பெருத்துக் கொழுத்தனவோ அதே போல குறுகவும் வேண்டியவை. 1 லட்சம் மக்கள் தொகை அடிப்படையில் வட்டங்கள் உருவாக்கப்பட்டு அந்தந்த வட்டங்களில் வாழும் மக்கள் தமக்கு அடிப்படையான உணவு, உடுப்பு, உறையுள், கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு வேண்டிய உற்பத்தியை அந்த வட்டத்திலேயே மேற்கொள்ள வேண்டும். வட்டத்திற்கு வெளியிலிருந்தோ அல்லது மாவட்டத்திற்கு வெளியில் இருந்தோ பொருள்களை இறக்குமதி செய்யக்கூடாது. அதே போல் பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் உற்பத்தி மேற்கொள்ளக் கூடாது. 

உற்பத்தியும், விற்பனையும் கூட்டுறவுகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இன்னொரு நடுவணாதிக்க ஒழிப்பு வரையறை முதல்நெறியை (முதலாளியத்தை) வேரறுக்கும். ஏற்கெனவே வட்டப்பிரிவு கட்டுப்பாடு முதல்நெறி விரிந்து வளர்தலுக்கான வாய்ப்பை பெரிதும் மட்டுப்படுத்திவிட்ட போது கூட்டுறவுகள் உற்பத்தியையும், விற்பனையையும் மேற்கொள்ளத் தொடங்குமானால் அது தனி உடமைக்கு  வேட்டு வைத்தது போலத்தான்.

நடுவணாதிக்க ஒழிப்பு பின்வரும் கோட்பாடுகளையும் பின்பற்றி இயக்குவது. 

1. ஒரு தேசியத்தில் அல்லது குமுக பொருளியல் அலகில் உள்ள வளங்கள் யாவும் உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதாவது, அவை குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அதிலும் சிறப்பாக உள்ளூர் மக்களின் கைகளிலேயே இருக்க வேண்டும். அதோடு தொழில்கள், உற்பத்தி, விற்பனை ஆகியவையும் உள்ளுர் மக்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்.

உள்ளூர் மக்கள் என்போர் தம் குமுக - பொருளியல் நலன்களைத் தாம் வாழும் உள்ளுரின் குமுக- பொருளியல் நலனோடு இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவர்கள் வெளியாராக அடையாளப் படுத்தப்படுவர். அவர்கள் உள்ளுரை விட்டு உலகின் எந்த மூலை வரவேற்கிறதோ அங்கு சென்று குடியேற வேண்டியது தான். நீரில் எண்ணெய் ஒட்டாமல் மிதப்பது போல் வாழ்பவர்களுக்கு உள்ளூரில், அந்த தேசியத்தில் இடமில்லை.

2. உற்பத்தி நுகர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும். இலாப நோக்கில் அல்ல. நடுவணாதிக்க முறையில் இலாபம் மடட்டுமே குறி. உற்பத்தியான உள்ளூர் பொருளை உள்ளூரில் மட்டுமே விற்க வேண்டும். இது உள்ளூர் பொருளியல் (local economy) ஒரு உறுதியான நிலை உண்டாக வழி செய்யும். மக்களுக்கு உள்ளூர் பொருளியலின் மேல் நம்பிக்கை உண்டாகும். யாரும் அயலிடத்தை நோக்கி நகரமாட்டார்கள்.

3. உற்பத்தியும் பகிர்மானமும் கூட்டுறவுகளின் மூலமே மேற் கொள்ளப்பட வேண்டும். நடுவணாதிக்க முறையில் கூட்டுறவுகளால் போட்டியிட முடியாது. ஆயினும் நடுவணாதிக்க ஒழிந்த முறையில் போட்டி மிக மிகக் குறைவு என்பதால் கூட்டுறவுகள் நல்ல முறையில் இயங்கவியலும். வேளாண்மை, தொழில் வணிகம் ஆகியன தொழில்துறை போல் கூட்டுறவுகளால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். தனியார் முயற்சி இத்துறைகளில் தடை செய்யப்பட வேண்டும். இக்கோட்பாட்டால் தனி உடைமை பேரளவில் மட்டுப்படுத்தப்படும். திட்டமிடல் மிக எளிதாக கைக்கூடும். 

4. உள்ளூர் மக்கள் மட்டுமே உள்ளூர் பொருளியலில் தொழில்களில் ஈடுபடவும் வேலை செய்யவும் இயலும். இதன் நோக்கம் உள்ளூர் மக்களுக்கு உள்ளூரிலேயே வேலை கிடைத்தாலன்றி வேலையின்மையை விரட்ட இயலாது என்பதே. ஆதலால் இது குறித்த முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளூர் மக்களிடமே இருக்க வேண்டும். இந்த உரிமை இருந்தால் தான் அயலவர் அங்கே புக முடியாது. இன்று இந்த உரிமை இல்லாததால் குசராத்தி - மார்வாடி உள்ளிட்ட வடநாட்டாரும் மலை யாளிகளும் சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற இடங்களிலும் தொழில் நடத்துகின்றனர். பிற இடங்களிலிருந்து பொருளைத் தருவித்து விற்கின்றனர். இதனால் தமிழர் தொழில்கள் நசிகின்றன. தமிழருக்கு வேலைவாய்ப்பும் குறைகிறது. இன்னும் கூடுதலாக அயல்  இனத்தவர் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். 

5. உள்ளூரில் உற்பத்தி ஆகாம் பொருள்களுக்கே உள்ளூர் சந்தையில் முன்னுரிமை இருக்க வேண்டும்.

6. உள்ளூர் மக்கள் தாம் வாழும் தேசியத்தின் தேசிய இன  மொழியையே எல்லா வகையான உள்ளும் பரிமாற்றங்களுக்கும், தொடர்புகளுக்கும் பயன்படுத்த வேண்டும். இதாவது, நிர்வாகம், கல்வி, பொருளியல் நடவடிக்கைகள், பண்பாட்டு முயற்சிகள், சட்டம் என எல்லாவற்றிலும், எல்லா அலுவல் மற்றும் அலுவல் சாரா அமைப்புகளும் கூட தேசிய இன மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

நடுவணாதிக்கத்தில் மேற் சொன்ன எதுவும் கடைபிடிக்கப் படுவதில்லை. அதுவே இது முதல்நெறி தங்குதடையின்றி ஓங்கி வளர்வதற்கு ஊக்கம் தருகிறது. நடுவணாதிக்க ஒழிப்பு முதல்நெறிக்கு ஒரு பெருந்தடை. நடுவணாதிக்க ஒழிப்பு உலக நாடுகள் முழுமைக்கும் பொதுவானது. அது மட்டும் அல்ல நடுவணாதிக்க ஒழிப்பில் ஒரு தேசிய இனம் இறையாண்மை கொண்ட நாட்டை அமைக்க விரும்புமானால் அது ஏற்கப்பட்டு நடைமுறையாவது மிக்க எளியது. முதல்நெறியும், கம்யூனிசமும் நடுவணாதிக்கப் பொருளியலை ஆதரிப்பவை. 

ஒன்று மஞ்சள் நிறுத்ததும், மற்றொன்று சிவப்பு நிறுத்ததுமான அரத்தி (ஆப்பிள்) பழம் போன்றவை தான். ஆதலால் முதல்நெறி ஒழிப்பிற்கும், தமிழ்நாட்டின் வெளியார் சிக்கலுக்கும், தேசியங்களின் தன்னுரிமைக்கும் நடுவணாதிக்க ஒழிப்பே சிறந்த தீர்வாகும். இதை எல்லோரும் முன்சென்று  வரவேற்க வேண்டும்.

Pin It