மானுட இயல் மனித இனத்தை நான்கு வகையாகப் பிரிக்கிறது. அவை நீக்ரோ, மங்கோலிய, ஆஸ்திரேலிய, காங்கேசிய இனங்களாகும். இவை நான்கும் அடிப்படையான இனங்களாகும். இவற்றிலிருந்துதான் மனித இனம் படிப்படியாக வளர்ச்சி பெற்று மேலும் பல்வேறுவகை மாந்த இனமாக வளர்ந்துள்ளது. ஓரினத்திலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டும் கூறுகள் பின்வருவன.

1. தோல், கண்விழி, தலைமுடியின் நிறம்
2. முடி, இமை, மூக்கு, உதடு இவற்றின் அளவும் வடிவமும்
3. தாடை, நெற்றி, பற்கள், உயரம், மார்பளவும் கூட வேறுபடுத்திக் காட்டும் கூறுகளாகும்.

இவை யாவும் உயிரியல் கூறுகள்தான், இவ்வாறு பொதுவான கூறுகள் அமைந்த மக்களை ஒரே மாந்த இனமாக மானுடவியல் ஏற்கிறது, வரையறுக்கிறது.

seeman with candlesஆப்பிரிக்கக் கண்டத்தில் தான் மனித இனம் தோன்றியதாகக் கூறும் அறிஞர்களின் கருத்தை இந்த உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. நீக்ரோ மக்கள் யார் கண்ணிலும் கண்டவுடன் அடுத்த நொடியே அவர்கள் நீக்ரோக்கள் என்று காட்சி தருபவர்கள். நீக்ரோ இனமும் கூட பின்னாளில் மற்ற இனங்களுடன் கூடிக் கலந்து வேறு இனமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது.

இப்போது இங்கு நாம் “இனம்” பற்றிப் பேசுவதற்குக் காரணம் இந்த “இனம்” இப்போது அரசியலில் அதிகமாகப் பேசப்படுகிறது.

நவீன ஊடகம் வளர்ந்துள்ள புதிய சூழலில் யார் வேண்டுமானாலும் இனம் பற்றிய கருத்துக்களை எழுத முடிகிறது.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியலில் ஆரிய திராவிட இனக்கோட்பாடுகளும் அதன் வழியாக அரசியலும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

ஆரியம், திராவிடம் இரண்டும் எதிரெதிர் நிலையில் இயங்கி வந்திருந்த போதும். இந்திய விடுதலைக்குப் பின்பு, தமிழர் – தமிழரின் அரசியல் என்ற தனித்த அடையாளத்துடன் அரசியல் கோரிக்கைகளும் சிறிய அளவில் இருந்து வந்துள்ளது.

பெரியாரின் காலத்திலிருந்தே திராவிடத்தின் பெயரால் முன்னெடுத்த எந்த ஓர் அரசியல் செயல்பாடும் போராட்டமும் தமிழர் நலன் சார்ந்ததுதான்.

1983 இல், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளும், எதிரான அரசியலும் வளரத் தொடங்கின. அதன் பின்புலத்தில் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற ஆயுத எதிர்ப்புப் போராட்டமும் முன்னுக்கு வந்தது. அதன் பின்னரே தமிழ்நாட்டு இளைஞர்கள் “தனித்தமிழர்” என்ற சிந்தனைப் போக்கை வளர்த்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் சிங்கள-தமிழினப் போராக ஈழப்போராட்டம் கணிக்கப்பட்டது. நீண்ட காலமாக ஈழத்தில் சிங்கள அரசு சர்வதேசியத்தின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஈவிரக்கமற்ற யுத்த முறையைக் கடைபிடித்து வந்தது.

இறுதியாக 2009 இல், முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு சர்வ தேசியத்தின் ஒத்துழைப்பு, ஆசியுடன் 1,50,000 மக்களைப் பலியிட்டு ஈழப்போராட்டத்தையும் புலிகள் அமைப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.

ஈழப் போராட்டம் “அழித்தொழிக்கப்பட்ட முறையையும்” அதன் பின்புலத்தில் இருந்த இந்திய-சீன-பாக்-அரசுகளையும் சர்வதேசியத்தையும் அரசியலில் நீண்ட காலமாக உள்ளவர்களும் புவிசார் அரசியலைப் புரிந்து கொண்டவர்களும் அறிவர். அனால் பன்னாட்டு அரசியலில் தமிழர்களுக்கு என்று ஓர் அழுத்தம் தரக்கூடிய சக்தியோ, அதிகார அமைப்போ இல்லாத நிலைமையை “முள்ளிவாய்க்கால் படுகொலை” நன்றாக இந்த உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வு திராவிட இயக்கத்தின் பால் ஒரு பிரிவு இளைஞர்களுக்கு வெறுப்பு மனநிலையை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம் இந்திய காங்கிரஸ் அமைச்சரவையில் தி.மு.க. பங்கு பெற்றதும், தி.மு.க.வினால் எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையையும் எடுக்க முடியாத கையறுநிலையும் தான்.

ஏற்கெனவே தனித்தமிழ் இயக்கங்களில் செயல்பட்டிருந்தவர்கள் தமிழர்களையும், தமிழ்நாட்டில் வாழும் பிறமொழி பேசும் தெலுங்கர்களையும், திராவிடர் கழகம், தி.மு.க.வில் பணியாற்றிய பிறமொழி பேசிய தலைவர்களையும் “வடுகர்” என அடையாளப்படுத்தியிருந்தனர். பெரியாரை “வடுகர்” என்று வசைபாடும் போக்கு காணப்படுகிறது.

2009 க்குப் பின் வேகம் காட்டிய பெ.மணியரசன், சீமான் போன்றோர் திராவிட இயக்கம் தமிழர் நலன் சார்ந்ததல்ல என்ற பரப்புரையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதில் அவர்கள் சிறிது வெற்றியும் கண்டுள்ளனர்.

தமிழ் பேசக்கூடிய சாதியைச் சார்ந்தவர்களை அடையாளப்படுத்தி, “தமிழர்கள் யார்” எனக் கண்டறியும் உத்தியைக் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

சாதி என்பது இந்து இந்தியாவின் ஓர் ஒடுக்குமுறைக் காரணி, இது மக்களிடையே இருந்த அகக் காரணியாக இருந்தபோதிலும் புறத்தேயும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் சாதி ஒரு பிற்போக்கு பாத்திரத்தைத் தானே வகித்து வந்துள்ளது. அச்சத்திற்கு முற்போக்கு அணிகலன் சேர்ப்பது எப்படித் தமிழ்த் தேசியமாகும். சாதிக்கு ஏதாவது புரட்சிகரத் தன்மை உண்டா?

எந்த ஓர் இனமோ, சாதியோ, பிறசாதி அல்லது இன மக்களுடன் இரத்தக் கலப்பு ஏற்படாமல் தனித்துவமாக உள்ளது என்பதை எவரும் ஏற்க மாட்டார்கள. இதற்குப் பெரிய அறிவியல் சான்று எதுவும் தேவையில்லை.

தமிழ்ச் சாதிகளைக் கண்டறிந்து திரட்ட அவர்கள் சாதியைப் பயன்படுத்தும்போது, தமிழ்நாட்டில் வரலாற்று வழியாக 5 நூற்றாண்டுகளாக இங்கு வாழும் பிற மொழி பேசும் மக்கள், குறிப்பாகத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை ஒதுக்கவும் வாய்ப்புள்ளது.

சோழர்கள் தெலுங்கு நாட்டை ஆண்டார்கள், அவர்கள் தெலுங்கு நாட்டிலிருந்து மக்களை அழைத்துவந்து குடியமர்த்தினார்கள் என்ற வரலாற்றுப் பதிவுகளும் உண்டு. சோழர் காலம் 5 நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொழிவழி தேசியத் தேடல்தான் சரியான தீர்வாக இருக்க முடியும், வாழிடம் (எல்லை), மொழி, சமூக வாழ்க்கை, பண்பாட்டு கூறுகள் தேவைகள் இதனடிப்படையில் தான் தேசியம் அமைய முடியும். நாட்டு எல்லையும் மொழியும் இதில் கூடுதலாகச் செயலாற்றக் கூடியவையாகும்.

இங்கு ஓர் எடுத்துக்காட்டினைக் காண்போம்

ஈழப் போராட்டத்தில் ஒரே மொழி தமிழ் பேசுவோராக இருந்தாலும் கூட மலையகத் தமிழர்கள் தமிழீழ தேசியத்தின் வரையறைக்குள் வருவதில்லை அல்லது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் பொருள் என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ ஈழ மக்களுக்கோ மலையகத் தமிழர்கள் மீது கோபமோ வெறுப்போ என்று பொருளல்ல. மலையகத் தமிழர்கள் வரலாற்று வழியில் இந்தியர்கள் என்பதும், தமிழீழ எல்லைக்குள் அவர்கள் வாழவில்லை என்பதும் தான் காரணம். ஈழப் போராட்டம் மலையகத் தமிழரை தமிழன் என்ற முறையில் பாதிக்கவே செய்தது. இந்த ஓர் எடுத்துக்காட்டே போதும் நமக்கு.

இனம் வழியாக மக்களைத் தேடுவது கரு இயல், உடலியல் எனப் போகும், இது அறிவியலுக்கு ஏற்றதா என்பது என் கேள்வி.

இனம் வேறு, மொழி வேறு என்று வரையறை செய்வதற்கு மற்றவர்கள் சொல்வதுபோல, “தமிழினம்” என்றவுடன் எல்லாப் பிரிவினைகளும் மாறி, ஒன்றிணைந்து விடுவார்கள் என்பது “ஒரு விருப்பம் தான்.” விருப்பம் மெய்நிகழ்வாகி விடாது. இறுதியாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் மலையகத் தமிழர்கள் தமிழீழ தேசிய வரையறைக்குள் அடங்காமல் போனதற்கு மற்றுமொரு முதன்மையான காரணம் தமிழீழ தேசிய சமூகக் கட்டமைப்பில் அவர்கள் இல்லை என்பதுதான்.

ஆனால் தமிழ்நாட்டில் வரலாற்று வழியாக நீண்ட காலமாக தமிழ்ச் சமூக வரையறைக்குள் வாழ்ந்து வரும் தமிழ் மொழியை, கல்வி, சமூக மொழியாக ஏற்று வாழும் மக்களைப் “பிறர்” என்றோ வடுகர் என்றோ வரையறை செய்வது இயங்கியலுக்கு மட்டுமல்ல ஜனநாயக நெறிமுறைகளுக்கும் முரணானதாகும்.

எந்த ஒரு போராட்டத்தையோ, சித்தாந்த அரசியலையோ நீங்கள் முன்வைத்துப் போராடுவது என்பது இன்றைய உலகமயச் சூழலில் உங்கள் உள்ளூர் எதிரணி அரசியல்வாதியிடமோ அல்லது உள்ளூர் அரசிடமோ அல்ல.

நீங்கள் சொல்வீர்கள் மக்களிடம் கோரிக்கையை முன்வைக்கிறோம் என்று. அது உண்மைதான். ஆனால் நீங்கள் முன்வைப்பது இந்த முழு உலகத்திடமும்தான் என்பதைப் புரிந்து கொள்வீர்களா?

சாதி வழியாக தமிழர் அடையாளம் காண்பது எளிதான செயல்தான். எந்தச் செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பது அறிவியல் அல்லவா?

மக்கள்தொகை எண்ணிக்கை மிகுந்த சாதிகள் அதே அடையாளத்தைப் பயன்படுத்தி எண்ணிக்கையில் குறைந்த சாதிகளை அடிமைப்படுத்தவும் அழித்தொழிக்கவும் நேரலாம்.

அவ்வாறு நடக்காது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தரமுடியாது.

விடுதலையும் சமத்துவமும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து நிற்காது. வெல்க ஜனநாயகம்!

- கிரிஷ் மருது

Pin It