இந்திய ஒன்றியத்தில் அடங்கிய 29 மாநிலங்கள், 7 ஒன்றிய ஆட்சிப் புலங்களில் நாடு என்ற பெயர் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. பெயரில் என்ன இருக்கிறது? என்று எளிதில் கேட்கலாம். மல்லிகைக்கு என்ன பெயர் சூட்டினாலும் அது மணம் வீசும் என்பது உண்மைதான், ஆனால் யாரும் மல்லிகையை வேறு பெயரால் அழைப்பதில்லை. தமிழ்நாடு என்பது தமிழ்மொழியை அடியொற்றிய பெயர்.
பொது மொழி கொண்ட ஒரு குமுகாயம் புலம், பண்பாடு, பொருளியல் ஆகிய இழைகளால் இணைந்து வரலாற்றில் வளர்ந்து நிலைக்கும் போது தேசம் ஆகிறது என்பது குமுக அறிவியல். மாந்தக் குலம் முன்னேறிச் சென்று உரிமையும் நிகர்மையும் உடன்பிறந்தமையும் தழைக்க மக்கள் கூட்டங்கள் தேசங்களாக அமைந்து ஒவ்வொரு தேசமும் அரசுரிமை அல்லது இறைமை பெறுவது வரலாற்றின் கட்டளை ஆகிறது.
பிரெஞ்சுப் புரட்சி தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதியிலும் ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின் பகைப்புலத்தில் அடுக்கடுக்கான குடியாட்சியப் புரட்சிகள் நிகழ்ந்து முடியாட்சியமும் கிழாரியமும் போப்பாளுமையும் சமயக் குருக்களின் மேலாண்மையும் தூக்கி வீசபட்ட போது, மொழிவழித் தேசங்கள் அரசுகளாக உருப்பெற்றன. ஐரோப்பிய வரலாற்றில் இந்தச் செயல்வழி தேச அரசுகளின் உருவாக்கம் (nation-state formation) என அழைக்கப்படுகிறது. இந்தச் செயல்வழி இல்லாமல் குடியாட்சியம் நிறைவு பெறாது.
கிழாரியத்துக்கும் முடியாட்சியத்துக்கும் எதிரான போராட்டத்தில் போலவே அயலாரின் வன்குடியேற்ற ஆளுமைக்கு எதிரான போராட்டத்திலும் மொழிவழித் தேசங்கள் உருப்பெறும் தேவை எழுகிறது. பேரரசியத்துக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் திரளக் குடியாட்சியம் தேவை, இதையே தேசிய இயக்கங்களின் குடியாட்சிய உள்ளடக்கம் என்று தோழர் இலெனின் குறிப்பிட்டார்.
அந்தக் குடியாட்சியத்தின் மலர்ச்சிக்கு மொழிவழித் தேசங்களாக மக்கள் ஒன்றுபட்டு உணர்வும் அறிவும் பெற வேண்டும். வரலாற்று வழி வந்த மொழிவழித் தேசங்களின் மறுமலர்ச்சிக்குரிய தேவை எழுகிறது. இந்தியத் தேசியப் பாவலரான பாரதியாருக்கு ”செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து” பாய்ந்ததாம் காதினிலே! இந்திய சுதேசி இயக்கத்தின் பகுதியாகக் கப்பலோட்டிய வ.உ. சிதம்பரனாரை யாரும் கப்பலோட்டிய இந்தியர் என அழைக்கவில்லை. கப்பலோட்டிய தமிழனாகத்தான் அவர் புகழ் பெற்றார்,
இந்தியாவின் புதுமக் கால வரலாற்றில் மொழிவழித் தேசங்களின் விடுமைக்கான தேவையை முதலிலேயே கண்டு சொன்னவர் காந்தியார். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் அடித்தட்டு மக்களின் அணிதிரட்டலுக்குமான தேவையைப் போலவே மொழிவழித் தேசிய இனங்களின் ஓர்மைக்கும் விடுமைக்குமான தேவையையும் அவர் தென்னாப்பிரிக்காவில் நிற வேற்றுமைக்கு எதிரான போராட்டத்தில் கற்றுக்கொண்டார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் போதே மொழிவழிக் குமுகாயங்களின் விடுமை பற்றிப் பேசினார். இந்தியாவுக்கு எவ்வளவு விடுமை தேவையோ அவ்வளவு விடுமை மொழிவழிக் குமுகாயங்களுக்கும் தேவை என்றார். இந்திய தேசியக் காங்கிரசை மொழிவழியாகப் பகுத்தமைக்க வேண்டும் என்ற கட்டுத்திட்டத்தின் அடிப்படையில்தான் காங்கிரசுக்குத் தலைமையேற்க இணங்கினார்.
ஒரே மொழி பேசும் மக்களைப் போராட்டங்களில் அணிதிரட்டுவது எளிது என்பதைக் காந்தியார் உணர்ந்திருந்தார். 1920ஆம் ஆண்டு இந்தியத் தேசிய காங்கிரசின் நாகபுரி மாநாட்டில் காந்தியார் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. அதே நாகபுரி மாநாட்டில்தான் காங்கிரஸ் அமைப்பை மொழிவழியாகப் பகுத்தமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களுக்கும் உயிர்த் தொடர்பு பொருள்பொதிந்த ஒன்று.
நாகபுரி மாநாட்டு முடிவுப்படிதான் சென்னை மாகாண காங்கிரஸ் கலைக்கப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ், ஆந்திர காங்கிரஸ், கர்நாடக காங்கிரஸ், கேரள காங்கிரஸ் யாவும் பிறந்தன, தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தார் என்று படிக்கிறோமே, அரசின் பார்வையில் சென்னை மாகாணமாக இருந்த போதே, தேசிய இயக்கப் பார்வையில் தமிழ்நாடு பிறந்து விட்டது. புதுமக் கால அரசியல் வரலாற்றில் தமிழ்நாடு என்ற பெயர் நூறாண்டு முன்பு மீட்கப்பட்ட வரலாறு இதுவே,
நாகபுரி மாநாடு பற்றிப் பிற்காலத்தில் எழுதிய அறிஞர் அண்ணா மொழிவழி அமைப்பு முறையின் சிறப்பை விளக்கி அயலாட்சியாளர்கள் அதற்கு எதிராக நின்ற வரலாற்றை எடுத்துரைத்தார்.
பிரித்தானியரின் பிரித்தாளும் சூழ்ச்சி பற்றி நமக்கு நிறைய சொல்லப்பட்டுள்ளது. Divide and rule என்பார்களே, அது முதலில் வங்கத்திலேதான் கூர்பார்க்கபட்டது, கர்சான் பிரபு 1905ஆம் ஆண்டு வங்கத்தை இரண்டாகப் பிரித்தார். சமூகச் சீர்திருத்தம் ஆனாலும் அயலார் ஆட்சிக்கு எதிர்ப்பானாலும் இந்திய விடுமைப் போராட்ட வரலாற்றில் வங்க மக்கள் முன்னுக்கு நின்ற போது வங்கத்தை சமய அடிப்படையில் இரண்டாகப் பிரித்தது, இந்த வங்கப் பிரிவினை ’வங்க பங்கம்’ என்றே அழைக்கப்பட்டது.
1947 அதிகாரக் கைமாற்றம் வரை மொழிவழி மாநிலச் சீரமைப்பின் தேவை பற்றி நீட்டி முழக்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் அதன் பிறகு பின்னடிக்கவே முயன்றது. நேரு தலைமையில் அமைக்கப்பட்ட மொழிவழி மாநிலச் சீரமைப்புக் குழு மொழிவழி மாநில அமைப்பைத் தவிர்க்கவே முயன்றது.
ஐதராபாத் சமத்தானத்தின் தெலுங்கு மொழிபேசும் பகுதியில் பொதுமையர் தலைமையில் நடந்த ஆய்தப் போராட்டத்தில் விசாலாந்திரத்தில் மக்கள் ராஜ்யம் என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. ஆந்திர மாநில அமைப்புக்காக பொட்டி சிறிராமுலு பட்டினிப் போராட்டத்தில் உயிரீகம் செய்தார், இந்தப் பின்னணியில்தான் 1953இல் மொழிவழி ஆந்திரம் பிறந்தது. அப்போதே தமிழ்நாடும் பிறந்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரசாட்சி இழுத்தடித்து மட்டுமல்ல, தட்சிணப் பிரதேசம் என்று திட்டம் கொண்டுவர முயன்றார் பண்டித நேரு. தமிழகத் தலைவர்கள் யாரும் அதை ஏற்கவில்லை.
ஒருவழியாக 1956 நவம்பர் முதல் நாள் தமிழ்நாடு அமைந்த போதிலும் எல்லையில் பெரும்பரப்பை இழந்தோம். இன்னும் கூட எல்லைச் சிக்கல் தீர வில்லை என்பதோடு, இருக்கிற எல்லைகளுக்கும் இந்தியாவில் பாதுகாப்பில்லை. பெரிய கொடுமை என்ன என்றால் தமிழ்நாடு மதராஸ் மாகாணமாகவே இருந்து வந்தது. மொழிவழி மாநிலத்துக்காகவும் தமிழ்நாடு என்று பெயரிடுவதற்க்காகவும் விருதுநகர் சங்கரலிங்கனார் பட்டினிப் போரில் உயிர் விட்டார்.
1968ஆம் ஆண்டு நம் மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயரிடவே கூட இந்தியாவின் ஒப்புதல் தேவைப்பட்டது என்பதை மறக்க முடியாது!
தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை என்பதைத்தான் கச்சத்தீவு இழப்பு நமக்கு வலியுடன் நினைவூட்டுகிறது. தமிழ்நாடு என்ற பெயர் தேவைதான், ஆனால் பெயர் மட்டும் போதாது. இறைமை இல்லாத நாடு நாடே ஆகாது.
தமிழ்நாட்டைக் காக்க வேண்டும். தமிழ்நாட்டை இறைமை கொண்ட நாடாக்கவும் போராட வேண்டும்!
மொழிவழி மாநில அமைப்பின் பகைவர்கள் கையில் நாடு சிக்கியுள்ளது என்பதை மறந்து விடக் கூடாது, எம் எஸ் கோல்வால்கர் 1961இல் தேசிய ஒருமைப்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில்.எழுதினார்:
”இன்றைய கூட்டாட்சி வடிவம் பிரிவினைவாத உணர்வுகளுக்கு வித்திடுவதுடன் அதற்கு ஊட்டமளிக்கவும் செய்கிறது. ஒரே தேசம் எனும் கருத்தாக்கத்தை அங்கீகரிக்க மறுப்பதுடன் அதைச் சிதைக்கவும் செய்கிறது. அது முற்றிலுமாக வேரறுக்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் சீரமைக்கப்பட்டு ஒற்றை ஆட்சி நிறுவப்பட வேண்டும்.
“மையப்படுத்தப்பட்டதாக அரசு இருக்க வேண்டும் மாநிலங்கள் என்பவை நிர்வாகரீதியான பிரதேசங்களாக இருக்க வேண்டும். நமது ஒருங்கிணைந்த ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய துண்டாடக் கூடிய, பிராந்தியம் சார்ந்த, குறுங்குழுவாத மொழி அடிப்படையிலான அல்லது வேறு எவ்விதமான பெருமித உணர்வும் சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டு, ஒரே நிலம், ஒரே தேசம், ஒரே நாடளுமன்றம், ஒரே நிர்வாகி என்பது பறைசாற்றப்பட வேண்டும். இந்தியாவுக்கு மையப்படுத்தப்பட்ட அரசு நிர்வாகமே தேவை. நாட்டை இதற்காக 50 நிர்வாகப் பிரிவுகளாகக் கூட பிரித்து நிர்வகிக்கலாம்.”
கிடைக்கு நரி காவல்! நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!