“தத்துவமில்லாத நடைமுறை குருட்டுத் தனம்; நடைமுறை யில்லாத தத்துவம் மலட்டுத்தனம்” என்று மார்க்சியம் கூறும். மெய்யியல் (Philosophy), கருத்தியல் (Ideology) இரண்டிற்கும் இக்கூற்று பொருந்தும். பல்லாயிரம் ஆண்டுகளாக, பலநூறு தலைமுறைகளாகக் கைமாற்றிக் கைமாற்றிக் கொடுக்கப்பட்ட மனித சிந்தனையே கருத்தியல் வளர்ச்சியின் உயிர்.

மனித சிந்தனை என்பது தனிப்பட்ட மனிதனின் சிந்தனையும், சமூகச் சிந்தனையும் கலந்ததே. டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் பிரடெரிக் எங்கெல்ஸ் பின்வருமாறு கூறினார்.

“தனித மனித சிந்தனை இல்லை. ஆனால் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால மனிதர்கள்  பலகோடிப் பேரின் தனிப்பட்ட சிந்தனையாகவே அது நிலவுகிறது”.

இதன் பொருள், சமூக அனுபவத்தின் ஊடாகத் தனிமனிதர்கள் பெறும் சிந்தனைகளும் அத்தனிமனிதர்கள் அவற்றைத் தொகுத்துத் தங்களின் புதிய கருத்தையும் இணைத்து வழங்கும் கருத்துகளுமே தனிமனிதர்களும் முகாமையான பாத்திரம் வகிக்கிறார்கள்.

புறச் சூழல்கள் மனித சிந்தனையை வளர்க்கின்றன. மனித சிந்தனைகள் புறச்சூழலை  மாற்றுகின்றன என்றார் காரல் மார்க்ஸ். ஃபாயர் பாக் தத்துவம் குறித்த ஆய்வியல் கட்டுரையில் அவர் இவ்வாறு கூறினார்:

“கல்வி கற்பிக்கிறவருக்கே கல்வி கற்பிக்க வேண்டிய தேவை இருக்கிறது”

சமூக அனுபவம் என்பதில் புறச்சூழல்கள், சமூகத் தலைமுறைகளின் அறிவு வளர்ச்சி, வளர்ப்பு ஆகியவை அடங்கும். தனிமனித சிந்தனை என்பதில் குறிப்பிட்ட தனிமனிதனின் அறிவாற்றல் அடங்கும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வளர்வோர் அனைவரும் ஒரே மாதிரியான அறிவாற்றல் பெற்று விடுவதில்லை. அவர்களுள் தனிமனித ஆற்றல் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. ஒரு பெற்றோர்க்குப் பிறந்து ஒரே குடும்பச் சூழலில் வளர்ந்து ஒரு கல்விக் கூடத்தில் பயிலும் பிள்ளைகள் அனைவரும் ஒரே அளவில் அறிவாற்றல் பெற்றுவிடுவதில்லை.

இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள் மட்டுமின்றி, உடல் ஒட்டிப்பிறந்த இரட்டையரிடம் கூட ஒரே தன்மையில் அறிவாற்றலோ அல்லது பண்புகளோ அமைவதில்லை. புறச்சூழலை உள்வாங்கி அதற்கு எதிர்வினைபுரியும் ஆற்றல் ஒவ்வொரு தனிநபருக்கும் வேறுபடுகிறது.

அடிமைப்பட்ட இனத்தில் ஒரே காலத்தில் எல்லோர்க்கும் விடுதலைச் சிந்தனைகள் உருவாவதில்லை. புரட்சி முதலில் தனி மனிதனின் மனதிலிருந்து தோன்று கிறது என்றார் அந்தோணியோ கிராம்சி.

தானும் சக மனிதர்களும் அடிமைப்பட்டிருக்கும் சமூகச் சூழ்நிலை இல்லாமல் தனிமனிதன் மனதில் புரட்சி எண்ணம் தோன்றிவிடாது. முதலாளியம் வளர்ச்சி யடையாத புறச்சூழலில் “மூலதனம்” என்ற நூல் பிறக்க முடியாது. அதே வேளை, முதலாளியச் சூழலில் எல்லோரும் காரல்மார்க்ஸ் ஆகிவிடமுடியாது. ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ போன்ற முந்திய தலைமுறை முதலாளியப் பொருளியல் வல்லுநர்கள் வரிசை தோன்றும் முன் காரல்மார்க்சும் உருவாகியிருக்க முடியாது. கருத்தியல் என்பது முழுக்க முழுக்கத் தனிமனித மொத்தக் கண்டுபிடிப்பு அன்று . அதேபோல் சமூக உறுப்பினர்கள் அனைவரும் கருத்தியல் வழங்கிட இயலாது.

குறிப்பிட்ட சூழலில் வாழும், குறிப்பிட்ட சமூகத்தில், குறிப்பிட்ட ஆற்றல் உள்ள தனிமனிதர்களே கருத்தியல் வழங்குகிறார்கள். மனித சிந்தனைக்கு எப்போதும் வரம்புண்டு. அடுத்தடுத்த தலைமுறையால் முடிவில்லாமல் அது வளர்க்கப்பட வேண்டும். சிறு பிழையுமின்றி ஓர் உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது என்றால் அது பல தவறுகளுக்குப் பின்னால்தான் கைவரப் பெற்றிருக்கும் என்றார் எங்கெல்ஸ்.

இவ்வாறான உண்மைகளில் ஒன்றோ அல்லது  மற்றதோ மனித வாழ்வின் முடிவில்லாத காலப் போக்கில் மட்டுமே முழுமையாகக் கைவரப் பெறமுடியும் என்றார்.

“நிரந்தரமான உண்மை என்று ஒன்றில்லை. அறியப்பட்ட உண்மைகள்ள்ள்ள்ள் சார்புத் தன்மை உள்ளவையே (Relative Truth). எடுத்துக்காட்டாக, உயர்நிலை விலங்குகள் தமது வயிறுகள், குடல்கள் மூலமாகவே செரிமானம் நடத்துகின்றன என்று கூடத் துணிந்து கூற முடியாது. காரணம், தலையில் மையப்பட்டிருக்கும் நரம்பு மண்டலச் செயல்பாடு செரிமானத்திற்கு இன்றியமையாதது.

“எனவே, இறுதியும்  அறுதியுமான உண்மைகளை வேட்டையாடி வெல்லத் தொடங்குவோர் சிலர், 1821 மே 5-ஆம் நாள் நெப்போலியன் இறந்தார்; உழைக்காமல் மனிதர்கள் வாழமுடியாது என்பன போன்ற ஆரவார அறிவிப்பு களையும், பழஞ்செய்திகளையும் நிரந்தர உண்மைகளாகக் கூறிக் கொண்டிருக்கலாம்.

“அதற்காக இப்பொழுது நாம் எட்டியுள்ள அறிவின் கட்டம் சிறிதும் இறுதியானதல்ல என்ற உண்மையைக் கண்டு கலவரமடைய வேண்டாம். இது ஏற்கெனவே விரிந்த அளவிலான  தீர்ப்புகளைத் தழுவியதாக இருக்கிறது.”

- எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு.

கருத்தியல் என்பது வளர்ந்து கொண்டே இருக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. வளர்தல் என்பதன் பொருள் என்ன? காலாவதியாகிவிட்ட அல்லது பொருந்திவராத அல்லது பிழையாக இடம் பெற்றுவிட்ட கருத்துகள் களையப்பட்டு, புதிய உயிர்ப்பும், பொருத்தப்பாடும், பிழை நீக்கமும்  செய்யப்பட்ட புதிய கருத்துகள் அக்கருத்தியலில் இணைக்கப்படுவது தான் கருத்தியல் வளர்ச்சி.

ஒப்பீட்டளவில் அனைத்தம்சத் தன்மையுடன் கூடுதல் வளர்ச்சி பெற்று, ஒழுங்கமைப்பும், தன்னமைதியும்,  வளர்வதற்கான வாயில்களும் கொண்ட தத்துவம் மார்க்சியம் மட்டுமே. ஆனால் மார்க்சியம் என்பது  வளர்ந்து கொண்டே இருக்க வேண்டிய தத்துவம் ஆகும். முற்ற முழுதாக வளர்ந்து முடிந்துவிட்ட தத்துவம் அல்லது கருத்தியல் எதுவும் இல்லை. அப்படி ஒன்று இருப்பதாகச் சொன்னால் அது செத்துப்போயிருக்கும்.

இந்தியாவில், தமிழ்நாட்டில் மார்க்சிய அரசியல் தலைவர்கள் இந்த மண்ணுக்கேற்ப மார்க்சியத்தை வளர்த்தார்களா? இல்லை. மார்க்சியம் வளர்ந்துகொண்டே இருக்க வேண்டிய தத்துவம் என்று சொல்லளவில் கூறினார்கள். நடைமுறையில் அதைக் கடைபிடிக்கவில்லை. அவர்கள் மூளையை மூன்றாவது அகில ஆவணங்களும் ரசிய, சீனப்புரட்சிகளின் சாதனைகளும் அடைத்துக் கொண்டடுவிட்டன.

இந்தியத் துணைக் கண்டத்தின் தனித்தன்மைகளாக உள்ள வர்ணம், சாதி, பார்ப்பனியம் ஆகியவை குறித்து அவர்களின் ஆராய்ச்சி என்ன?அம்முரண்பாடுகளைத் தீர்க்க அவர்கள் முன் வைத்த முடிவுகள் யாவை? எதுவுமில்லை. நிலக்கிழமை ஒழிக்கப்பட்டால் இவை எல்லாம் தீர்ந்து விடும் என்று கிளிப்பிள்ளை போல் சொல்லி வந்தார்கள். “பார்ப்பனியம்” என்ற ஆதிக்கக் கருத்தியல் இருப்பதையே அவர்கள் ஏற்கவில்லை.

நிலக்கிழமை செல்வாக்கிழந்து, முதலாளியம் வளர்ந்துவிட்ட நிலையிலும் இந்தியாவில், வர்ண, சாதி ஆதிக்கம் பார்ப்பனிய ஆதிக்கம் ஆகியவை கோலோச்சுகின்றன. இந்திய அரசு கட்டமைப்பிலேயே பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் இருக்கின்றன. அனைத்திந்திய சமூக மாறுதல்

அல்லது அனைத்திந்தியப் புரட்சி பேசும் எந்தக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் அல்லது எந்த மா.லெ. குழுவும் இந்த வரையறுப்பை தனது கட்சித் திட்டத்தில் அடுத்து, இந்தியா ஒரு தேசமல்ல் அதற்குள் பல தேசங்கள் இருக்கின்றன என்ற அடிப்படை உண்மையைக் கூட இந்தக் கம்யூனிஸ்ட்டு கட்சிகளும், மா.லெ. குழுக்களும் ஏற்கவில்லை.

வர்ணம், சாதி, பார்ப்பனியம் குறித்த துல்லியமான ஆய்வுகளை மார்க்சோ லெனினோ செய்ய வாய்ப்பில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்பவர்கள் தாம் அந்த ஆய்வை செய்ய முடியும். ஆனால் தேசம், தேசிய இனம் குறித்த ஆய்வுகளை லெனினும் ஸ்டாலினும் செய்துள்ளார்கள். ரசியப்புரட்சியின் வெற்றிக்குப் பின் இறையாண்மையுள்ள தேசங்களின் ஒன்றியத்தை நிறுவியும், பிரிந்து போக விரும்பிய தேசிய இனத்தைப் பிரிந்துபோக அனுமதித்தும் ஓர் எடுத்துக்காட்டை உருவாக்கினார்கள். அவர்களிடமிருந்து  இங்குள்ள கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும், மா.லெ. குழுக்களும் ஏன் பாடம் கற்கவில்லை?

இந்தியாவை ஒரு தேசமென்றும், இந்தியப்புரட்சிக்கு வேலைத்திட்டம் என்றும் எப்படி வகுத்தார்கள்? ரசியப்புரட்சி என்பது முகாமையாக ரசிய தேசிய இனத்தில் நடந்த புரட்சிதான்! ஜார்மன்னன் பிடித்து வைத்திருந்த பிற தேசிய இனங்களில் ரசியப்புரட்சிக்கு ஆதரவு இருந்தது. இந்தியாவில் பல் தேசிய இனங்களிடையே புரட்சி நடத்த எப்படி முடிவுக்கு வந்தார்கள்? சற்றொப்ப எழுபது ஆண்டுகளாக அனைத்திந்தியப் புரட்சியில் என்ன முன்னேற்றம் கண்டார்கள்?

தமிழ்த்தேசியம், தமிழ்த்தேச விடுதலை என்றால் மேற்படி கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளுக்கும், மா.லெ. குழுக்களுக்கும் எட்டிக் காயாய் கசக்கிறது. “தமிழ்த்தேசியம்” என்பது மார்க்சிய - லெனினிய அடிப்படையில் தவறான கருத்தியல் என்று இவர்கள் ஒருபோதும் மெய்ப்பித்ததில்லை. அது குறித்து உருப்படியாக கருத்தியல் தருக்கம் நடத்தி உண்மையை உள்வாங்கிக்கொள்ள ஒருபோதும் இவர்கள் முன்வந்ததில்லை.

தமிழ்த்தேசியப் புரட்சிப்பதாகையை ஏந்தியுள்ள அமைப்புகள் மீதும் அவர்களின் கருத்தியல் மீதும் பிரிவினைவாதம், பிராந்தியவாதம், தமிழ் இனவெறி என்று கொச்சை மொழிகள் கூறுவதோடு நிறுத்திக்கொள்கின்றன.

மார்க்சியம் - லெனினியம் - என்ற தத்துவத்தின் முதுகுக்குப் பின்னால் இவ்வமைப்புகளின் தலைவர்கள் ஒளிந்து கொள்கிறார்கள் மார்க்சிய - லெனினியத் தத்துவத்தை உரியவாறு இவர்கள் உள்வாங்கிக் கொள்ளவுமில்லை. அதைத் தாங்கள் வாழும் சமூக நிலைமைக்கேற்ப வளர்க்கவுமில்லை.

பெரியார், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்கள், வர்ணம், சாதி, பார்ப்பனியம் குறித்துச் செய்துள்ள ஆய்வுகளைக் கற்று உள்வாங்கி, அவற்றை மார்க்சிய இயங்கியலுக்கேற்ப தகவமைத்து, மார்க்சிய - லெனினியத்துடன் இணைக்க வேண்டும். அந்த ஆய்வுப் பணியை இவர்கள் செய்யவில்லை.

தேசம், தேசிய இனம், மொழி ஆகியவை குறித்த ஆய்வுகள் மார்க்சிய - லெனினியத்தில் இருக்கின்றன. ஆனால் அவை இன்னும் மேம்படுத்தி வளர்க்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பாட்டாளிவர்க்கம் ஆதரிக்க வேண்டும் என்ற வரம்புடன் அது நிற்கிறது. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பாட்டாளிவர்க்கம் முன்னெடுக்க வேண்டும் என்று அது மேம்படுத்தப்படவேண்டும்.

பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Self Determination with the right to secede ) என்பதில், பிரிந்து போவதைவிடவும் கூட்டாட்சியில் இடம் பெறுவதற்குக் கூடுதல் அழுத்தம் தரப்படுகிறது. பாட்டாளிவர்க்கம் சொந்த தேசத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும், பாட்டாளிவர்க்க சர்வதேசியம் என்ற கருத்திற்கு அதை உட்படுத்துவதால், பாட்டாளி வர்க்கம் தனது சொந்த தேசியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவையைக் குறைத்து, அது சர்வதேசியத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் கருத்து வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேசியம் என்பது இப்பொழுது கருத்தளவில் தான் இருக்கும். மெய்நடப்பில் சர்வதேசியம் உருவாவது நிகரமைத் தேசங்கள் பற்பலவாக உலகில் பெருகிய பின்னரே நடக்கும். தொலைவான எதிர்காலத்தில் செயல்பட வேண்டிய நடைமுறையை, அதாவது, சர்வதேசியத்திற்கு தேசியத்தை உட்படுத்துவதை இப்பொழுதே கடைபிடிக்க முடியாது; கூடாது.

பாட்டாளிவர்க்க சர்வதேசியம் அமைவதற்கு முன்நிபந்தனை, தனியான தேசம் ஒவ்வொன்றும் அதனதன் முரண்பாடுகளைத் தீர்த்து நிகரமைச் சமூகம் அமைப்பதுதான். தனி ஒரு நாட்டில் நிகரமைப்புரட்சி செய்வதுதான். மற்ற நாடுகளுக்கு அக்கொள்கை காலப் போக்கில் பரவி பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அமைய வழிவகுக்கும் என்று லெனின் கூறினார். ஒரே  நேரத்தில் உலகப்புரட்சி செய்தால் தான் பாட்டாளிவர்க்க சர்வதேசியம் உருவாகும். தனியொரு நாட்டின் நிகரமையும் நிலைக்கும் என்றார் டிராட்ஸ்கி. டிராட்ஸ்கி கோட்பாடு கானல்நீர் பருக ஓடிய கதையாகவே முடியும்.

தனியொரு தேசப் புரட்க்கு முன்னுரிமை தராமல் சர்வதேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது, மறுக்கப்பட்ட டிராட்ஸ்கியத்திற்கு மறு வாழ்வு கொடுப்பதாகவே ஆகும். மொழி, தேசிய இனம் ஆகியவை குறித்த ஆய்வுகள் மார்க்சிய- லெனினியத்தில் இருக்கின்றன. இன்று நாம் முன்வைக்கும் ஒரு மொழிக் கொள்கை லெனினிடமிருந்து கற்றுக்கொண்டது தான். ஆனாலும் மொழியின் சமூகவியல் குறித்து மேலும் வளர்க்க வேண்டிய கூறுகள் இருக்கின்றன.

உற்பத்தி சக்திகளில் ஒன்றாக மொழி இருப்பதைக் கிட்டத்தட்ட ஸ்டாலின் சொல்லிவிட்டார். ஆனால், அந்த அடிப்படையில், சமூக மாற்றத்தில் மொழிக்குள்ள தனித்தன்மையான பாத்திரத்தை அவரோ லெனினோ தெளிவாக வரையறுக்கவில்லை. சமூகக் கட்டுமானத்தின் அடித்தளத்திலும் மேல் தளத்திலும் மொழி செயல்புரிகிறது. இரண்டுக்கும் பொதுவானது மொழி என்கிறார் ஸ்டாலின். சமூகத்தில் மொழிக்குள்ள இயங்கு ஆற்றலை (Dynamics) உரியவாறு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. ஆனால் அதற்கான அடிப்படைக் கூறுகள் மார்க்சியத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. தேசிய இனத்தின் சமூக இயங்கு ஆற்றலை உரியவாறு மார்க்சியம் அடையாளம் காணவில்லை. தேசிய இனக் கோரிக்கைகளை சனநாயகக் கோரிக்கைள் என்ற அளவில்தான் லெனின் பார்க்கிறார். சமூக வளர்ச்சியில், சமூக மாற்றத்தில் தேசிய இனம் வகிக்கும் தீர்மானகரமான பாத்திரம் விளக்கப்பட வேண்டும். தேசிய இனச்சிக்கலை மூன்றுவகையாக லெனின் பார்த்தார்.

1. வளர்ச்சி அடைந்த முதலாளிய நாடுகள் தங்கள் தேசிய இனச்சிக்கலைத் தீர்த்துக் கொண்டன. தேச அரசுகளை உருவாக்கிக் கொண்டன.

2. ரசியா போன்ற,  முதலாளியம் வளர்ச்சி பெறாத மண்டல வல்லாட்சிகள் பக்கத்துத் தேசங்களை ஆக்கிரமித்துத் தன்னுடன் சேர்த்துக்கொண்டன. (இப்பொழுது சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள திபெத், துருக்கிஸ்தான் ஆகியவற்றையும் இந்த வகையினத்தில் சேர்த்துக் கொள்ளலாம் - கட்டுரையாளர்)

இதற்கான தீர்வாக,  பிரிந்துபோகும் உரிமையுள்ள தன்னுரிமையை முன்வைத்தார். சமத்துவ அடிப்படையில் இந்தத் தேசிய இனங்கள் சேர்ந்தும் இருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லையேல் பிரிந்தும் போகலாம்.

3. ஏகாதிபத்தியங்கள் பிடித்துவைத்துள்ள காலனி நாடுகள். இவற்றிற்கு விடுதலையே ஒரே  தீர்வு.

வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளில் கூட இப்பொழுது தேசிய இனச்சிக்கல் எழுந்து, அங்கும் தனிநாட்டுக் கோரிக்கைள் முன்னுக்கு வந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, ஒருங்கிணைந்த அரசில் (ஹி.ரி.- பிரிட்டனில்) மார்க்ஸ், லெனின் காலத்திலிருந்து உள்ள அயர்லாந்து விடுதலைப்போராட்டம் இன்னும் தொடர்கிறது. அதை ஒரு விதிவிலக்காகக் கருத முடியாத வகையில் இப்பொழுது அங்கு ஸ்காட்லாந்து விடுதலை இயக்கம் செல்வாக்குப் பெற்றுள்ளது. ஸ்பெயினில் பாஸ்க்கு,  கட்டலான் விடுதலை இயக்கங்கள் இயங்குகின்றன. உலகக் கவனத்தை அவை ஈர்க்கின்றன. கனடாவில் கியுபெக்கில் பிரெஞ்சுக்காரர்கள் விடுதலை கோருகிறார்கள்.

இரண்டாவது கூறாக, பிரிந்து போகும் உரிமையுடன் தன்னுரிமை பெற்று, பல தேசிய இனங்கள் கூட்டரசில் இணைவது என்பதாகும். இவ்வாறு இணைந்த தேசிய இனங்கள், சோவியத் ஒன்றியம், செக்கஸ்லோவாக்கியா, யுகோஸ் லாவியா கூட்டரசுகளிலிருந்து பிரிந்து தங்களுக்குரிய தனித் தனித் தேசங்களை அமைதியாகவோ அல்லது ஆயுதப்போர் வழியிலோ நிறுவிக் கொண்டன. தன்னுரிமையில் கூட்டாட்சிக்கு அழுத்தம் கூடுதலாகத் தரப்பட்டது. தனித் தனி அரசுகளாக அவை பிரிந்ததன் மூலம் பிரிந்து போகும் உரிமையே கூடுதல் அழுத்தம் பெற்றுள்ளது.

மூன்றாவதாக, காலனிகள் விடுதலை. காலனிகள் விடுதலை அடைந்தன. விடுதலை அடைந்த காலனிகளுக்குள் தேசிய இன ஒடுக்குமுறைகள் மேலோங்கி, அவை தேசிய விடுதலை கோரிப் போராடுகின்றன. பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் விடுதலை அடைந்தது. எத்தியோப்பாவிலிருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது. இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத் திமோர் விடுதலை அடைந்தது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சூடான் போன்ற முன்னாள் காலனிகளுக்குள் சிக்கிக்கொண்ட இந்நாள் காலனிகள் விடுதலைக்குப் போராடுகின்றன.

தேசிய இனசிக்கலில் உள்ள இந்த நான்காவது கூறு, லெனின் காலத்தில் முன்னுக்கு வரவில்லை. இரண்டாம் உலகப்போருக்குப்பின் காலனிகள் விடுதலை அடைந்த பின்னரே இந்தக்கூறு முன்னுக்கு வந்தது. இதற்கான விடையை லெனினிடம் தேடாமல், நாம்தான் காணவேண்டும்.

ஒரு தேசிய இனம் தனக்கான தனிநாட்டை அமைத்துக்கொள்வது அதன் அடிப்படை உரிமை என்ற லெனின் வரையறுப்பு, இந்த நான்காவது கூறில் வரும் தேசிய இனச்சிக்கலின் தீர்வுக்கு வழிகாட்டும். அவ்வாறு அதை நாம் புரிந்துகொண்டு லெனினியத்தை வளர்க்க வேண்டும்.

வாக்குச்சீட்டு ஒடுக்குமுறை

முன்னாள் காலனிகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ள இந்நாள் காலனிகளின் நிலை என்ன? அனைத்துத் தேசிய இனங்களிலும் உள்ள மக்களுக்கு ஆளுக்கொரு வாக்கு என்ற சனநாயகத்  தோற்றத்திலான மாயப்போர்வைக்குள் இந்த வகைக் காலனியம் மறைக்கப்படுகிறது.

ஏகாதிபத்தியங்கள், தங்களின் கொள்ளைக்கான நிர்வாக ஏற்பாடாக, பல்வேறு தேசிய  இனங்களை ஒன்றாகப் பிணைத்து செயற்கையான நாடுகளை உருவாக்கின. அவ்வாறு செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றுதான் இந்தியா.

ஏகாதிபத்தியங்கள் இவ்வாறான செயற்கை நாடுகளைவிட்டு வெளியேறியபின் இந்நாடுகளில் உள்ள பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்கி, அதே செயற்கை நாடுகளுக்குள் வைத்தன.

அந்த ஒடுக்குமுறையை மறைக்க, சனநாயகத் தோற்றத்துடன் கூடிய ஆளுக்கொரு வாக்கு என்ற தூண்டிலை நீட்டின. ஆளுக்கொரு வாக்கு என்பது இந்நாடுகளில், தேசிய ஒடுக்கு  முறையை மறைக்கும் மூடுதிரையே!

பெரும்பான்மைத் தேசிய இனத்தின் பேராளர்களே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருப்பர். அந்தப் பெரும்பான்மை வாக்களித்து, சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்கவும், சுரண்டவும் சட்டங்களை நிறைவேற்றும். எந்த வரலாற்றுத் தொடர்பும், சமூகத் தொடர்பும், நிலத்தொடர்பும் இல்லாத வெவ்வேறு தேசிய இனங்களை ஒன்றாக இணைத்து வைத்துவிட்டு , அவற்றுள் ஒரு தேசிய இனம் பெரும்பான்மை, இன்னொரு தேசிய இனம் சிறுபான்மை என்பது வரலாற்று அநீதி.

ஒரு வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்துடன் அதனோடு தொடர்பில்லாத இன்னொரு குடும்பத்தைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டு, வீட்டுக்குரிய குடும்பத்தினர் சிறுபான்மை ஆகிவிட்டனர் என்றால் எப்படியோ அப்படியே இதுவும் வல்லடி வழக்கு.

பெரியார்

தமிழ்நாட்டில் இன அரசியலையும், இன விடுதலை அரசியலையும் விரிந்த பகுதி மக்களிடம் கொண்டுசேர்த்தவை தி.க.வும். தி.மு.க.வும் ஆகும். இந்த இன அரசியலின் தத்துவத் தந்தை பெரியார் ஆவார். பெரியார் கடைசிவரை தமிழ்நாட்டின் விடுதலைக் கோரிக்கையை வலியுறுத்தினார். அவர் 1973 டிசம்பரில் மறைவதற்கு முன் வந்த செப்டம்பர் -17 பிறந்த நாள் விடுதலை இதழ் மலருக்கு அவர் கடைசியாக எழுதிய கட்டுரையில் தனித் தமிழ்நாட்டுக்காகப் போராட, மக்களுக்கு உறுதியான வேண்டுகோள் விடுத்தார்.

தி.மு.க. 1963 -இல் விடுதலைக் கோரிக்கையைக் கைவிட்டது. “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முத்திரை மொழியை விடுதலை ஏட்டின் முகப்பில் தாம் உயிரோடிருக்கும் வரை போட்டு வந்தார் பெரியார். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நிலையில், மணியம்மையாரும் ஆசிரியர் வீரமணியும் அம்முத்திரை மொழியை விடுதலையிலிருந்து நீக்கிவிட்டனர்.

ஆரிய இனத்தை எதிர்த்த இந்த இனவிடுதலை இயக்கத் தலைவர்கள் ஆரியர்களுக்கு எதிராக திராவிடர்கள் என்ற குழப்பமான இனக் கருத்தியலை முன்வைத்தார்கள். 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களுக்கு ஆரியர்கள் சூட்டிய திரிபுப் பெயர்தான் திராவிடர் என்பது. அதையே புத்தாக்க கால ஐரோப்பிய ஆய்வாளர்களும் எடுத்துக் கொண்டனர்.

திராவிட இயக்கம் சுட்டிய திராவிட இனத்தில் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி உள்ளிட்டோர் இடம் பெற்றனர். தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம் அடங்கிய “திராவிட நாட்டுக்கு” விடுதலை கோரினர். ஆனால் தமிழர் தவிர மற்ற மூன்று மாநிலத்தவரும் தங்களைத் திராவிடர் என்றும் அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை.

தங்கள் நாடு திராவிட நாடு என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இயற்கையான தங்கள் தங்கள் தேசிய இன அடையாளத்தையும், அதன் வழித் தேசத்தையுமே ஏற்றனர். பிற்காலத்தில் “தெலுங்கு தேசம்” என்ற பெயரில் ஒரு கட்சி உருவானதையும் கவனத்தில் கொள்ளலாம்.

மற்ற மூன்று மாநிலங்களிலும் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் தி.க. கிளையையோ, தி.மு.க. கிளையையோ தொடங்கவில்லை. அம்மாநிலங்களில் உள்ள தமிழர்களில் ஒரு சாரார் இக்கழகங்களின் கிளைகளைத் தொடங்கினர். இன அரசியலையும், இனவிடுதலைப் போராட்டத்தையும் விரிந்த பகுதி மக்களிடம் கொண்டு சேர்த்த இக்கழகங்கள், இயற்கையான தமிழின, தமிழ்த்தேசிய அரசியலை முன்வைக்கவில்லை.

தந்தை பெரியார் 1950- களில் தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனாலும் அவர், தமக்கு மொழிப்பற்றோ, இனப்பற்றோ இல்லை; மனிதப்பற்றுதான் உண்டு என்று அவ்வப்போது கூறி வந்தார். மனிதப் பற்றின் ஒரு கூறுதான் இனப்பற்று. ஆனால் தேசியம் என்பதே பாசிசம் என்று கூறி தேசிய இனக்கோட்பாட்டை பெரியார் எதிர்த்தார். இட்லரின் செர்மானிய தேசிய வெறியால் எவ்வளவு பேரழிவு ஏற்பட்டது என்று விளக்கினார். இந்திய தேசியத்தை எதிர்ப்பதற்காகத் தேசியம் என்ற கருத்தியலைப் பெரியார் எதிர்த்தார் என்று கூற முடியாது.

தமது புரிதலுக்கேற்ப கோட்பாட்டு அடிப்படையில் தேசியம் என்ற கருத்தியலைப் அவர்  எதிர்த்தார். இந்த நிலைபாடு, இனச்சிக்கலில் அவரது தன் முரண்பாட்டையே காட்டியது. தேசிய இன அடிப்படையிலான, தமிழ்த்தேசியத்தை அவர் ஏற்காததால் வர்ண - சாதி ஆதிக்கமற்ற, மூடநம்பிக்கை ஒழிந்த ஒரு தனிநாடு , கன்னியாகுமரி மாவட்ட அளவிற்குக் கிடைத்தால் கூட, அதை ஏற்றுக் கொள்வேன் என்றார்.

இந்த நிலைபாட்டைத் திறனாய்வு செய்தால், கன்னியாகுமரி மாவட்டந் தவிர்த்த பிறபகுதித் தமிழர்களிடம் வர்ணசாதி ஆதிக்கமும் மூடநம்பிக்கைகளும்  நீடித்தால் அதைப்பற்றி பெரியாருக்குக் கவலை இல்லையா என்ற வினா எழும். உண்மையில் அப்படிப்பட்ட எண்ணம் அவருக்குக் கிடையாது.

அப்படி வினா எழுப்பாமல், வர்ண - சாதி ஆதிக்கத்தின் மீதும் மூடநம்பிக்கைகள் மீதும்  பெரியாருக்கு எந்த அளவு வெறுப்பு இருந்தது என்ற அளவில் மட்டுமே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மேல், இன அரசியலில், பெரியாரின் “கன்னியாகுமரி மாவட்ட அளவு” என்ற இக்கூற்றை வழிகாட்டும் நெறியாக ஏற்கக்கூடாது.

மொழிகுறித்தும் பெரியாரின் கொள்கை குழப்பமானதே. தமிழ்நாட்டில் வடமொழி ஆதிக்கம் ஆட்சி முதல் அடுப்பங்கரை வரை இருப்பதை எதிர்த்துப் போராடியவர் அவர். அவ்விடங்களில் தமிழைக் கொணரப்பாடுபட்டவர். ஆனாலும் அவர்க்கு மொழி குறித்து முன்னுக்குப்பின் முரணில்லாத தெளிந்த வரையறுப்பு இல்லை.

எனவே ஒரு கட்டத்தில் தமிழைக் “காட்டுமிராண்டி மொழி” என்றார். தமிழைக் கைவிட்டு, ஆங்கிலத்தைக் கல்வி மொழியாகவும் வீட்டுமொழியாகவும் மாற்றிக் கொள்ளச் சொன்னார் 1965-இல் மாணவர்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்தார். தமிழர்கள் ஆங்கிலம் கற்றால், பாரப்பனர்களுடன் போட்டி போட்டு முன்னேற முடியும். ஆங்கிலம் ஓர் அறிவியல் மொழி அதனால் தமிழர்கள் பகுத்தறிவு பெறுவார்கள் என்று பெரியார் கருதினார். இக்கருதுகோள்கள் பிழையானவை. ஆங்கிலம் கற்று உயர் அலுவல்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் பலர் பார்ப்பனியச் சடங்குகளை விரும்பி ஏற்றுக்கொள்வதைப் பார்க்கிறோம்.

படித்த பிற்படுத்தப்பட்டவர்களில் பலர் சாதி ஆதிக்க உணர்ச்சியோடு செயல்படுவதையும்  பார்க்கிறோம். ஆங்கிலத்திலும் மூட நம்பிக்கைகள் ஏராளமாக இருக்கின்றன. இங்கிலாந்திலிருந்து இங்குவந்து “ஆவி எழுப்புதல்” கூட்டங்களையும் “தேவனின் அற்புதக் கூட்டங்களையும்” ஆங்கிலத்திலேயே நிகழ்த்துவோரை பார்க்கிறோம். ஒரு மொழியில் பகுத்தறிவுக் கருத்துகளும் இருக்கும்; மூடக்கருத்துகளும் இருக்கும். சுரண்டும் வர்க்கத்தின்  கருத்தும் இருக்கும், சுரண்டப்படும் வர்க்கத்தின் கருத்தும் இருக்கும். மொழியானது சமூகக் கருத்துகளின் கொள்கலன். தமிழே கல்வி மொழியாகவும், ஆட்சிமொழியாகவும் வழிபாடு உள்ளிட்ட அனைத்துப் பண்பாட்டு மொழியாகவும் ஆகவேண்டும். இந்நிலைபாடே உலகு தழுவி நிலவும் தாய்மொழி குறித்த மொழிக் கொள்கைக்கு இணக்கமானது.

ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகக் கற்கலாம். மேற்கண்ட திருத்தங்களுடன் பெரியாரியலை செழுமைப்படுத்தாமல் தமிழகத்தில் , இன்றைய நிலையில் இன, மொழி அரசியலுக்குப் பெரியாரியல் சிந்தனையாளர்களால் முகம் கொடுக்க முடியாது. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைக்கு முற்றிலும் முரணாக, “சொந்த புத்திவேண்டாம், ஐயா தந்த புத்தி போதும்” என்று ஆசிரியர் வீரமணி முழங்குவது பெரியாரின் முதுகுக்குப்பின்னால் ஒளிந்து கொள்வது தவிர வேறல்ல.

ஒரு கருத்தியல் வளரும் அல்லது தேயும். இரண்டுமின்றி இருந்தபடியே இருக்காது என்பது இயங்கியல்.

அம்பேத்கர்

அம்பேத்கரின் வர்ண - சாதி மற்றும் பார்ப்பனியம் குறித்த ஆய்வுகள் சமூக அறிவியலுக்கு அவர் வழங்கிய சிறந்த பங்களிப்பாகும். ஆனால் அவர் இந்திய தேசத்தை ஏற்றுக்கொண்டதும், மொழிவாரி மாநிலப் பிரிவினையை எதிர்த்ததும சரியல்ல. அந்தக் குறிப்பிட்ட சிக்கலில் அவர் பார்ப்பனியத்தோடு இணக்கம் கண்டதாகவே ஆகியது.

இல்லாத இந்திய தேசியத்தை உருவாக்கியதில் பார்ப்பனியத்தின் பங்களிப்பு கூடுதலாகவே உள்ளது. பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் நீக்கிவிட்டால் இந்திய தேசியம், தாங்குநிலை இல்லாது கீழே விழுந்து நொறுங்கிவிடும். இந்தியத் தேசியமும் இந்திய அரசும் இல்லையென்றால் பார்ப்பனியம் அனாதை ஆகிவிடும். அம்பேத்கர் சிந்தனைகளில் உள்ள “இந்திய தேசியக்” கருத்துகளை நீக்கிவிட்டு, சாதி ஒழிப்புக் கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தத்துவ விசுவாசம்

எந்தத் தத்துவத்திலும் தள்ளுவன தள்ளி கொள்ளுவன கொள்ள வேண்டும். அதற்கும் மேலே, ஒரு தத்துவத்தில் ஏற்கத்தக்க பல கூறுகள், ஏற்கத்தக்க பல செய்திகள் இருக்கும். அவை அனைத்தையும் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் செயல்படுத்த முடியாது. அப்படி அனைத்தையும் செயல்படுத்துவதற்கான சமூகக் கள நிலையும் இருக்காது; அதற்கான சமூகக் கோரிக்கையும் இருக்காது.

ஒரு தத்துவத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்பதன் பொருள் அத்தத்துவத்தில் உள்ள சாரமான  ஆய்வு முடிவை ஏற்றுக்கொள்கிறோம் என்பதாகும். அதிலுள்ள பொருந்தாத சில நிலைபாடுகளையும் ஏற்பதாக பொருள் ஆகாது.

இவ்வாறு நாம் கூறுவதைத் தத்துவத்திற்கு விசுவாசம் காட்டாத செயல் என்று சிலர் சொல்லக்கூடும். மார்க்சியம் உள்ளிட்ட சமூகவியல் தத்துவங்கள் தங்கள் மீது விசுவாசம் வைக்கும்படி கோருவதில்லை. மதத் தத்துவங்கள் தாம் தம்மை விசுவாசிக்கும்படி கோருகின்றன. மெய்ப்பிக்கும் சான்றுகள் மீது நிற்காமல், வெறும் நம்பிக்கைகள் மீது கட்டப்பட்ட பொம்மைக் கோபுரங்களாக உள்ள மதத் தத்துவங்கள் விசுவாசத்தைக் கோரும். சமூக அறிவியல் அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்ட தத்துவங்கள் விசுவாசத்தைக் கோருவதில்லை; புரட்சியைக் கோருகின்றன. அவை, தம்மை மேலும் செழுமைப்படுத்துமாறு அவாவுகின்றன. மார்க்சிய இயங்கியல் இப்படித்தான் கோருகிறது.

புரட்சித் தத்துவம் ஒரு போர்வாள். அதை அவ்வப்போது கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். கூர்மைப்படுத்த முடியாத ஒரு கூறு அத்தத்துவத்தில் இருக்கிறதென்றால் அதைக் கைவிட்டு, அதன் இடத்தில் சமகால அறை கூவலைச் சந்திக்கும் புதிய கோட்பாட்டைப் பொருத்த வேண்டும்.

புரட்சித் தத்துவம் என்ற போர்வாள் பகை முகாமை எதிர்த்துப் போராடுவதற்குரியது. அந்த வேலைக்கு அதைப்பயன்படுத்தாமல் அதை நமது முதுகு சொறியப் பயன்படுத்தக்கூடாது. சமூகத்திற்காகத்தான் தத்துவம், தத்துவத்திற்காக சமூகம் அன்று. சமூகத்தால் தத்துவம் செழுமைப்படுவதும், தத்துவத்தால் சமூகம் மாறுதல் காண்பதும் ஒன்று இன்னொன்றின் மீது தாக்கம் செலுத்தும் செயல்வழி ஆகும்.

தத்துவம் இருவழிகளில் செயல்படும். ஒன்று வழிகாட்டும் செயல். இன்னொன்று வழிமறிக்கும் செயல். வழிகாட்டும் செயல்தான் முதன்மையானது. அதுவே அத்தத்துவத்திற்கு சமூக  ஏற்பையும் செல்வாக்கையும் ஈட்டித்தருகிறது. வழிமறிக்கும் செயல் பக்கவிளைவு போன்றது. சமூகவியல் தத்துவம் மட்டு மன்று, இயற்பியல், வேதியியல் போன்ற அறிவியல்  கோட்பாடுகளும் வழிமறிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

தத்துவமேதைகள், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரின் அறிவாற்றல், அடுத்த தலைமுறைச் சிந்தனையாளர்களுக்குப் பெரும் வியப்பையும் அவர்கள் மீது பெரும் மதிப்பையும் உண்டாக்கும். அவர்களை மீறிச் சிந்திக்க முடியாதபடி ஒருவகை மலைப்பையும் உண்டாக்கும். அவர்கள் இமயத்தின் கீழ் உள்ள ஒரு சிறு பாறையாகத் தம்மைக் கருதிக்கொள்வர்.

நியூட்டனின் எந்திரவியல் (Mechanics) விதிகள் இயற்பியல் துறையில் புதிய ஊழியின் கதவுகளைத் திறந்துவிட்டன. அவரது கோட்பாடுகளுள் ஒன்றின் அனைத்து தழுவியப் பொருத்தப்பாட்டின் மீது அடுத்த தலைமுறை அறிவியலாளர்களுக்கு ஐயம் ஏற்பட்டது.  ஆனால் வெளியே சொல்லவில்லை.

நியூட்டன் மீது அவர்கள் வைத்திருந்த பெருமதிப்பும், நியூட்டனுக்கு அறிவியல் உலகில் இருந்த பெருஞ்செல்வாக்கும் தாங்கள் கண்டறிந்த உண்மையைச் சொல்ல முடியாமல் அவர்களைத் தடுத்து விட்டன. ‘வையகம் ஏசுமோ’, ‘மாசுவந்து எய்துமோ’ என்ற அச்சம், ஐயம்!

ஒரு பொருள் ஒரு நேரத்தில் ஒரு வடிவில்தான் இருக்கும் என்ற நியூட்டனிய இயற்பியல் விதி கேள்விக்குள்ளானது. ஒரு பொருள் ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களிலும் செயல்படும் என்ற உண்மையை சொல்லத் தயங்கி சொல்லாமலே விஞ்ஞானிகள் பலர் இறந்துவிட்டனர். அவர்களுக்கும் பின்னர் நீல் போர், ஐன்ஸ்டின் ஆகிய விஞ்ஞானிகள் துணிச்சலாக அந்த உண்மையை வெளியிட்டனர்.

கற்றை இயற்பியல் ( Quantum Physics) உருவானது. அணுவின் உள் துகள்கள் (Sub- Atomic Particles) ஒரே நேரத்தில் துகளாகவும், அலையாகவும் இருக்கிறது என்பதை மெய்ப் பித்தார்கள்.  இந்தப் புதிய கண்டுபிடிப்பால், நியூட்டன் குறித்த விதிகள் அனைத்தும் தவறு என்று ஆகிவிடவில்லை.

நியூட்டன் புகழுக்குக் களங்கமும் வந்திடவில்லை. அந்தக்காலத்தில் அவர் (1642-1727) செய்த சாதனைகளுக்காக அறிவியல் உலகில் அவர் புகழ்மேலும் மெருகேறிக் கொண்டுதான் உள்ளது.

சமூகவியல் தத்துவ மேதைகளுக்கும் நியூட்டன் குறித்த மேற்கண்ட எடுத்துக்காட்டு  பொருந்தும்.

முந்தையப் புரட்சிகளின் மறுபிறப்பு

ஏற்கெனவே, தமிழ்நாட்டில் நடந்த வரலாற்றுப் பதிவு பெற்ற பெரும் நிகழ்வுகளையோ, அல்லது பிறநாட்டுப் புரட்சிகளையோ அப்படியே  நகலெடுத்து மீண்டும் அரங்கேற்ற நினைக்கக் கூடாது. அப்படி முயன்றாலும் அது நடக்காது. அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றைக் கற்றுக்கொள்வது வேறு; நகலெடுப்பது வேறு.

இது குறித்து காரல் மார்க்ஸ் (1818-1883) கூறுவது கவனத்திற்குரியது.

“பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகப்புரட்சி தன்னுடைய கவிதைத் திறனைப் பழங்காலத்திலிருந்து பெற முடியாது; எதிர்காலத்திலிருந்து தான் பெற முடியும். அது தன்னுடைய பணிகளைத் தொடங்குவதென்றால் கடந்த காலத்தைப் பற்றிய எல்லா மூட நம்பிக்கைகளையும் முதலில் ஒழிக்க வேண்டும். முன்பு நடைபெற்ற புரட்சிகள்ள் தங்களுடைய உள்ளடக்கத்தைத்  தாங்களே முனை மழுங்கச் செய்ய்ய்ய்ய்யும் வகையில் கடந்த காலத்தில் உலகத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தன.”

- லூயி போன பார்ட்டின் பதினெட்டாம் புருமேர்- மார்க்ஸ் - எங்கெல்ஸ் தேர்வு நூல் - தமிழ், தொகுதி - 4

நாம் நடத்த வேண்டிய புரட்சிக்கு நாம் தாம் உள்ளடக்கத்தையும் போராட்டங்களையும் தீர்மானிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ். பழைய நிகழ்வுகளை நகலெடுக்கக் கூடாது என்றார். இதற்கொரு நல்ல உவமை சொன்னார்.

“புதிதாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்குபவர் எப்பொழுதும் தன்னுடைய தாய் மொழியில் அதை மொழிபெயர்த்துக் கொள்வார். ஆனால் எப்பொழுது பழைய மொழியின் உதவியை நாடாமல் புதிய மொழியைக் கையாள்கிறாரோ, எப்பொழுது தாய் மொழியை மறந்து (துணைக் கழைக்காமல்) புதிய மொழியைப் பயன்படுத்துகிறாரோ, அப்பொழுது தான் அவர் புதிய மொழியின் தன்மையைப் புரிந்துகொண்டவர் ஆவார். அவரால் அந்த மொழியில் தம் கருத்துகளை எளிதில் வெளியிட முடியும்”-மேற்படி நூல்.

இந்தியப் புரட்சியை ரசியப்புரட்சி மாதிரி நடத்துவதா, சீனப்புரட்சி மாதிரி நடத்துவதா என்று ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடந்த விவாதம் சொல்லி மாளாது. கடைசியில் ஸ்டாலினிடம் அறிவுரை கேட்க மாஸ்கோவுக்குப் போனார்கள். மாதக்கணக்கில் அங்கு தங்கி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நடுவண் குழு தோழர்களிடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுத் தோழர்கள் விவாதித்தனர். ஸ்டாலினிடமும் விவாதித்தனர். கடைசியில் இரண்டு புரட்சிகளின் தன்மைகளையும் கலந்து இந்தியப்புரட்சி நடத்துவது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.

சி.பி.ஐ. மார்க்சிய-லெனினியக் கட்சியோ,(நக்சல்பாரிக் கட்சி) “சீனக்கட்சி எங்கள் கட்சி, சீனத்தலைவர் எங்கள் தலைவர்; சீனப்புரட்சி எங்கள் புரட்சி, சீனப்பாதை எங்கள் பாதை” என்று முழக்கமிட்டனர். ரசியப்புரட்சியிலிருந்தும் சீனப்புரட்சியிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்புரட்சிகளின் மூல உத்தியையும் (Strategy) நடைமுறை உத்திகளையும் (Tactics) இங்கு கடைபிடிக்க முயல்வது, சொந்தப் பார்வை இன்மையையே காட்டும். தமிழின உணர்வு கொண்ட துடிப்பு மிக்க இளைஞர்கள் சிலர் ஈழ விடுதலைப் போர் போலவே தமிழ்த்தேசியப் புரட்சியும் நடைபெறும் என்று கருதுகிறார்கள்.

களங்கள் இரண்டும் வெவ்வேறு. கதைமாந்தர்களும் வேறு வேறு. தமிழீழ விடுதலைப் போருக்கு நாம் துணை நிற்பதும், அப்போரிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைக் கற்றுக்கொள்வதும் கட்டாயம். ஆனால் அதைப் போலவே இங்கு தமிழ்த்தேசிய புரட்சி நடைபெறும் என்று கற்பனை செய்யக்கூடாது.

தமிழ்த்தேசியம்

ஆறரைக்கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டிற்கு இறையாண்மை இல்லாததால் உலக அரங்கில் நாம் நாதியற்றவர்களாக, அரசியல் அனாதைகளாக உள்ளோம். இந்தியாவின் காலனியாகத்தான் தமிழ்நாடு இருக்கிறது. தமிழக அரசு என்பது, இந்திய ஏகாதிபத்தியத்திற்குக் கங்காணி வேலை பார்க்கும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கட்சிகள் கங்காணிக் கட்சிகளாகவே செயல்படுகின்றன.

இனத்தை அடமானம் வைத்து பணம், பதவி, விளம்பரம் சேர்க்கும் பகற்கொள்ளைக் கூடாரங்களாகிவிட்டன அக்கட்சிகள். இந்தியாவில் அடிமைப்பட்ட இனமாகத் தமிழர்கள் இருப்பதால்தான் எவ்வளவோ போராடியும் ஈழத்தமிழர்களை நம்மால் பாதுகாக்க  முடியவில்லை. நமது அடிமைத்தளையை அறுக்க வந்த போர் வாள் தமிழ்த்தேசியம்.

அரசியல், பொருளியல், பண்பியல்,உரிமைகளை மீட்க வந்த கருத்தியல் கருவி தமிழ்த்தேசியம்.

தமிழர்களை  ஒருங்கிணைக்கும் தத்துவச்சொல் தமிழ்த்தேசியம்.

நமது தேசம் தமிழ்த்தேசம், நமது தேசியமொழி தமிழ், நமது தேசிய இனம் தமிழர், இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு அமைப்பதே நமது இலக்கு என்ற வரையறுப்பே தமிழ்த் தேசியம்.

நமது மனதை மாசு படுத்தியுள்ள பார்ப்பனியத்தையும், சாதி அழுக்கையும் எரிக்கவந்த சமத்துவச்சுடர் தமிழ்த்தேசியம்!

“நாங்கள் தமிழர்கள் ஒரு மரத்தின் கிளைகள்” “ஒரு குலைக்காய்கள்” எங்களிடையே புகுந்துவிட்ட ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்போம் என்று சூளுரைக்கும் கோட்பாடு தமிழ்த்தேசியம்.

ஆணுக்குப் பெண் அடிமை என்ற கோணலை நிமிர்த்த வந்த கொள்கைச் சம்மட்டி  தமிழ்த்தேசியம்.

இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தமிழர் மரபில் உள்ள இயற்கைச் சமன்பாடு போன்றவற்றைப் பேணுவது தமிழ்த்தேசியம்.

பன்னாட்டு ஏகபோகங்கள், அனைத்திந்தியப் பெருமுதலாளிகள் ஆகியோரின் சுரண்டலிலிருந்து தமிழக உழைக்கும் மக்களை விடுவிக்கும் நிகரமை (சோசலிச)த் திறவுகோல் தமிழ்த்தேசியம்.

வர்ணசாதி - ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறை, ஆணாதிக்கம் ஆகியவை ஒழிந்த சமத்துவத் தாயகமாகப் புதிய தமிழ்த் தேசத்தைப் படைக்க வந்த புரட்சியின் பெயர் தமிழ்த்தேசியம்.

மார்க்சிய - லெனினியம், பெரியார் - அம்பேத்கர் சிந்தனைகள், தமிழர் மரபில் உருவான அறச்சிந்தனைகள் ஆகிய அனைத்தையும் உரியவாறு உள்வாங்கிக் கொண்ட புதிய வார்ப்பே நாம் முன்வைக்கும் தமிழ்த்தேசியம்.

நாடாளுமன்றப் பாதையும் அன்று; ஆயுதக்குழுப்பாதையும் அன்று. போர்க்குணமுள்ள மக்கள் போராட்டப்பாதையே தமிழ்த்தேசியப் புரட்சியின் பாதை.

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி ஏந்தியுள்ள  தமிழ்த்தேசியத்திற்கு இவ்வாறான தத்துவச் செறிவு உள்ளது. “டசன் கணக்கில் திட்டங்கள் தீட்டுவதை விடவும் ஒரு செயல் மேலானது” என்ற மார்க்சிய வழிகாட்டலையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

தத்துவம் இல்லாத நடைமுறை குருட்டுத்தனமானது.

நடைமுறை இல்லாத தத்துவம் மலட்டுத்தனமானது.

கடந்த காலச் சாதனைகளிலிருந்து வீரம் பெறுவோம்;

கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் பெறுவோம்!

Pin It