வங்கத்து உழவனின் இதயம்

அவனது காணிநிலம்...

 

காணி நிலம் களவுபோகாமல்

கட்டப்பட்டிருக்கும்

வேலிக் கம்புகளை உற்றுநோக்குங்கள்

வேலிக் கம்புகளில்

தோழர் ஜோதிபாசுவின்

விலா எலும்புகளின் சாயலைக் காணலாம்.

 

வங்கம் எங்கும் பரவியுள்ள

நியாய விலைக் கடைகளின்

நியாயமாய் அவர்

நீடூழி வாழ்கிறார்

 

அவரது புன்னகைவெண்மை

அந்த அங்காடிகளில் விநியோகிக்கப்படும்

அரசியலில் பதப்படுத்தப்பட்டிருக்கிறது

அவரது ஆட்சியின் மகிமை

அது

சோனார் பங்களாவின்

தங்கவங்கத்தின்

பொன் மஞ்சள் மகிமை

 

அந்த பொன்மக்கள் மகிமை

கூலி மகனுக்கு மலிவாய்த் தரும்

கோதுமை நிறத்தில்

குடிகொண்டிருக்கிறது நிரந்தரமாய்

வங்கத்து கிராமப் பஞ்சாயத்துக்களின்

ஜீவ ஓட்டத்தில் அவரது

உயிரின் ரகசியம் உறைந்திருக்கிறது

எனவே அவரது

உயிரை அவரது

உடலில் தேடலாமா?

 

அவரது மூளையின் கூர்மையை

இந்திய கிராமத்து உழவனின்

உழவு கோலின் கூர்முனைகள்

தங்களுக்கென எப்போதோ

தத்தெடுத்துக் கொண்டுவிட்டனவே

 

எமது இயக்கத்தின்

படைநடை அணிவகுப்பு

அவரது

பாதச் சுவட்டின் பின்னேதான்

இன்னும் சென்று கொண்டிருக்கிறது

 

அவரது நரம்புகளின்

நாடித் துடிப்புகள்

அடங்கிவிட்டதாய்

அறிவிக்கும் மருத்துவரே!

 

வங்கமெங்கும் வற்றாமல்

மிகையாக ஓடும்

மின்சாரக் கம்பிகளின்

காந்தத் துடிப்புகளில்

அவரது

நரம்பின் நாடிகள் எழுப்பும்

நாதங்களை நீர் கேட்வில்லைபோலும்!

 

அவரது இரு கண்களையும்

இப்போதுதான்

தானமாய்ப் பெற்றதாய்

சந்தோஷப்படும் மருத்துவமனையே!

 

எழுத்தறிவின்றி இருந்த

வங்கத்துப் பாமரனின்

ஒவ்வொரு மூளையிலும்

ஒட்டியிருக்கிறது

அவது ஞானக்கண்.

 

எனவே அவர்

வங்கத்தின் கோடானுகோடி

மக்களுக்கும் ஏற்கெனவே

'கண்தானம்' செய்துவிட்டார்

 

அவரது ஒளி எமது

கட்சிக் கொடியின் நட்சத்திரத்தை

மேலும் ஜொலிக்கச் செய்கிறது

 

அவரது

கம்பீர அசைவுகள்

எமது

கட்சிக் கொடியின் அசைவுகளில்

இரண்டறக் கலந்திருக்கிறது

 

எனவேதான் இன்று

இன்னும் துடிப்புடன்

எழுச்சிப் படபடப்புடன்

பட்டொளி வீசிப் பறக்கிறது

பாட்டாளிகளின் கொடி.

 

தோழர் ஜோதிபாசு மறையவில்லை

ஏன் எனில்

மலைகள் மறைவதில்லை

ஆழ்கடலின் அலைகள் மறைவதில்லை

 

- நவகவி

 

Pin It