யாரென்று தெரியவில்லை
பின் தொடர்ந்து வந்து
புதிதாய் குற்றம் சுமத்தினாள்
நிற்கிறேன் என்றாள்
பார்க்கிறேன் என்றாள்
பின் தொடர்வதாகவும் சொன்னாள்
பாழாய் போன கவிதை மனம்
பரந்து சரிந்திருந்த மலை பிரதேசம் மேல்
காகம் விரட்டிக் கொண்டிருந்தது
தலைக்கவசம் கழற்று
முகக்கவசமும் ம்ம்ம்ம்
உள்ளாடை கழற்று என்று மட்டும் தான்
சொல்லவில்லை
ஆணையிடும் தோரணை
அரக்க பரக்க புரிந்தாலும்
அமைதியாய்
இன்ன தேசம் இன்ன மொழி
இன்ன உருவம் நான் என்றேன்
அவள் விட்டபாடில்லை
மிரட்டி கண்களாலே நாலைந்து முறை
என்னை புரட்டியும் கொண்டிருந்தாள்
நான் உதிராத உள்ளத்தை
கெட்டியாக பிடித்துக் கொண்டு
நகர்ந்து விட்டேன்
ஞானத் தெரு தாண்டியும் கூட
முன்னொரு தீயவினையென
முடியாமல் நீண்டிருந்தது
அவள் குரலில் மிஞ்சும் வஞ்சம்
அக்கா அடிக்கடி சொல்லும்
அக்கினி குஞ்சு ஏனோ
இப்போதெல்லாம் என்னை எரிக்க
விடுவதில்லை
மாறாக வெந்து தணியும் மனங்களை
விட்டகல்கிறது..!
- கவிஜி