இன்று தமிழினம் ஈழத்திலும் தமிழகத்திலும் தனது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள், குறிப்பாகத் தமிழகத்தில், கவலை கொள்வதாகத் தெரியவில்லை. நம்மால் மக்களிடையே ஓர் எழுச்சியை உருவாக்க முடிந்தால், நமது சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எளிதாகும். அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் செயல்பாடுகளின் அடிப்படை நோக்கமும் அதுபோன்ற ஓர் எழுச்சியை உருவாக்குவதே.

அதற்கான நமது சிந்தனைகள் எல்லாம் அடிப்படையில் பகுத்தறிவின் மீது கட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, மக்களுக்கு சிக்கல்களைப் பகுத்தறிவைக் கொண்டு விளக்கிப் புரியவைத்தால், மக்கள் ஒன்று திரண்டு ஆதரிப்பர் என்ற எண்ணம் இருக்கிறது. இப்பொழுது இந்த கருதுகோள் தவறு என்றால் என்னவாகும்? கடந்த சில பத்தாண்டுகளாக நடந்த உளவியல், மூளை நரம்பியல் ஆராய்ச்சிகள் "பகுத்தறிவு உணர்வுகளுக்கு அடிமை" [1] என்று நமது கருதுகோளை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. இது அடிப்படையில் நமது அரசியல் செயல்பாடுகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. அறிவியலாளர்கள் இந்த புதிய அறிவினைக் கொண்டு அரசியலைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். அதிலுள்ள சில கருத்துக்களைக் கொண்டு என்ன கற்றுக் கொள்ளலாம் என்று ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

அரசியலில் உணர்வும் பகுத்தறிவும்:

பொதுவாக மனிதன் பகுத்தறிவானவன் என்ற கருதுகோளின் அடிப்படையிலேயே அரசியல் செயல்பாடுகள் அலசப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் மக்கள் அரசியலைப் பற்றி சிந்திப்பதில்லை, மாறாக அவர்களின் உணர்வுகளின் வழியாக அரசியலைப் பார்த்து எது பிடித்திருக்கிறதோ அந்த அரசியலை ஆதரிக்கின்றனர். தீர விசாரித்து நன்மை தீமைகளை கணக்கிட்டு எடுக்கப்படுவதல்ல. அரசியலில் உணர்வுக்கும் பகுத்தறிவிற்கும் இடையேயான மோதலில், உணர்வுகளே எப்பொழுதும் வெல்கின்றன என்கிறார் வெசுடன் [2]. அரசியலில் உணர்வுகள்தான் முக்கியம், உண்மையோ அல்லது ஆதாயமோ அவ்வளவு முக்கியமல்ல.

“In politics, when reason and emotion collide, emotion invariably wins.” [2]

அரசியல்வாதிகள் மக்களை பகுத்தறிவினால் பேசி ஈர்ப்பதில்லை, மாறாக அவர்களின் அடையாளம் (சாதி, மதம்) , சித்தாந்தம், வெறுப்பு, பயம், காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றின் அடிப்படியில் உணர்வுகளைத் தூண்டி ஈர்க்கிறார்கள்.

பொதுவாக ஒருவர் எந்த அரசியலை ஆதரிக்கிறார் என்பதை அறிய அவருக்கு என்ன ஆதாயம் என்று பார்க்கக் கூடாது, மாறாக அவர் எது மாதிரியான பாரபட்சங்களை, விருப்பு வெறுப்புக்களைக் கொண்டுள்ளார், எது உணர்வுகளைத் தூண்டும் என்று பார்க்கவேண்டும். ஒருவர் தனக்கு முக்கியம் என்று கருதுவது எதுவும் உணர்வுகளுடன் தொடர்புடையது. முக்கியமானதை இழந்தால் உணர்வுகள் வருத்தத்தை அளிக்கும். நாம் இழந்தால் வருத்தப்படாத ஒன்றை முக்கியமாகக் கருதமுடியாது.

ஏன் உணர்வுகள் இவ்வளவு முக்கியமானதாக செயல்படுகிறது என்பதற்கு நமது மூளையின் வடிவமைப்புதான் அடிப்படைக் காரணம். இதை நம்மால் மாற்ற முடியாது. உணர்வு எதை சரி என்று சொல்கிறதோ, அதை நியாயப்படுத்தும் ஒரு வக்கீல்தான் பகுத்தறிவு என்கிறது உளவியல் ஆராய்ச்சிகள். உதாரணமாக தொலைக்காட்சி அல்லது முகநூல் விவாதங்களில், யாரவது "நீங்கள் சொல்வது சரி" என்று பகுத்தறிந்து கட்சி தாவி பார்த்து இருக்கிறீர்களா? உண்மையில் என்ன நடக்கிறதென்றால் அனைவரும் உணர்வுகளின் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதற்கு சாதகமாக ஒரு வக்கீலைப் போல நியாயம் கற்பிக்கிறார்கள்.

இன அரசியல்:

உணர்வுகளின் முக்கியத்துவத்தை அடைப்படையாகக் கொண்டு சுடூவர்டு காஃப்மன்[3] அவர்கள் இன அரசியலை ஆராய்ந்து "குறியிட்டு அரசியல் தத்துவம்" (Theory of Sybmolic Politics) என்று ஒரு தத்துவத்தை வெளியிட்டுள்ளார். அவரின் தத்துவப்படி இன அரசியலின் அடிப்படையாக இருப்பது வரலாற்றுக் கற்பிதங்கள். இந்த கற்பிதங்கள் அண்டைய இனங்களைப் பற்றி பாரபட்சங்களையும் ஓரவஞ்சனைகளையும் கற்பித்தால், அது இனங்களுக்கிடையே பயத்தை உருவாக்குகிறது. அவற்றை அரசியல் தலைவர்கள் பயன்படுத்தி கருத்துருவாக்கம் செய்து மக்களின் ஆதரவைப் பெறுகின்றனர். பின்பு அந்த ஆதரவின் துணையுடன் நல்ல பரவலாக்கப்பட்ட அடிமட்ட அமைப்புகளை உருவாக்கி, மக்களை அணி திரட்டுகின்றனர். இதைப் படம் (1) விளக்குகிறது. இனி ஒவ்வொரு அலகையும் சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.

tamil desiyamகற்பிதங்கள் (Narratives):

ஓர் இனத்தின் கற்பிதங்கள் யார் குழுவின் உறுப்பினர், இனக் குறியீடுகள், இனத்தின் பொற்காலம், இறந்த காலம், அழிவு காலம், எது பூர்வீகம், யார் மாவீரர்கள், யார் எதிரிகள் ஆகியவற்றை உள்ளடக்கி இன அடையாளக் கற்பிதங்களின் மையமாக இருக்கிறது. இந்தக் கற்பிதங்கள்தான் மூலம் தான் நிலத்தை காக்கவேண்டும், அடையாளத்தை காக்கவேண்டும், மாவீரர்களைப் போற்றவேண்டும், எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் வருகிறது.

உதாரணமாக, சிங்கள தேசியத்திற்கும் அதன் தமிழின அழிப்பிற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது சிங்களர்களின் மகாவம்சக் கட்டுக்கதைகளே என்கிறார் கேப்வெரர்:

Sinhalese nationalism is constructed out of its myths of history and the deeds of its heroes, wherein Tamils threaten to destroy or subsume Sinhalese but are themselves conquered and destroyed. These ideas are integral to the modern social and political practice of nationalism in Sri Lanka and are part of a current tragedy, and in the fires of its passions, Sinhalese, and especially Tamils, are being consumed. [4]

தமிழர்களுக்கு எதிரான இனப்போருக்கு சிங்களர்களின் இந்த மகாவம்ச மனநிலைதான் அடிப்படை காரணம் என்று பிரபாகரன் அவர்கள் ஏறக்குறைய ஒவ்வொரு மாவீரர் உரையிலும் கூறியிருக்கிறார். நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் [5] அவர்களும் இனப்படுகொலைக்குக் காரணமாக இதையேக் கூறுகின்றார்.

குறியீட்டு சார்புகள், ஓரவஞ்சனைகள் (Symbolic Predispositions, Prejudice):

உணர்வுகளைத் தூண்டி செயல்படுத்தும் குறியீடுகள் அனைத்தும் குறியீட்டு சார்புகளாகும். கொடி, சின்னம், சித்தாந்தம் (இந்துத்வா, தமிழ்த்தேசியம்) ஆகியவையும் குறியீட்டு சார்புகளே. குறியீட்டு சார்புகளும் ஓரவஞ்சனைகளும் மக்களுக்கு அவர்களின் கற்பிதங்கள் மூலம் வருகிறது. இரு இனங்களுக்கிடேயே எவ்வளவு ஓரவஞ்சனை (Prejudice) உள்ளதோ, அதனைப் பொறுத்தே பகையும் இருக்கும். ஈழத்தில் இனப்படுகொலை நடந்தேறியதற்கு அடிப்படைக் காரணம் தமிழர்கள் மீது மகாவம்சக் கட்டுக்கதைகள் உருவாக்கிய ஓரவஞ்சனையே.

எந்த அமைப்புகள் மக்களுக்குப் பிடித்த குறியீடுகளைப் பயன்படுத்துகிறதோ, அதை மக்கள் விரும்புவர். பிடிக்காத குறியீடுகளைக் கொண்ட அமைப்புகளை மக்கள் வெறுப்பர். உதாரணமாக காந்தி இந்துமத கற்பிதங்கள் வழியாக வரும் குறியீட்டு சார்புகளைப் பயன்படுத்தியே வெற்றி கொண்டார் எகிறார் காஃப்மன். புலிகளின் பல போர் வெற்றிகளுக்கும் அவர்கள் குறியீடுகளைப் பயன்படுத்தி மக்களையும் போராளிகளையும் உணர்வுப் பூர்வமான ஆதரவைப் பெற்றது ஒரு முக்கிய காரணம்.

அச்ச உணர்வுகள்:

ஓர் இனம் எவ்வளவு தூரம் ஓரவஞ்சனை கொண்டுள்ளார்களோ, அவ்வளவு தூரம் வேற்றின மக்களிடமிருந்து ஆபத்தை உணர்வார்கள். ஓரவஞ்சனை இல்லாவிட்டால், அச்சம் தோன்றுவதில்லை. அது போன்ற நிலையில், அரசியல் என்பது பெரும்பாலும் எவ்வாறு பொருளாதாரப் பயனைப் பங்கிடுவது என்றே இருக்கும்.

இலங்கை சுதந்திரம் அடையும் பொழுது, தமிழர்கள் சிங்களர்களின் மீது எந்த அச்சமும் கொள்ளவில்லை. இதற்குக் காரணம் தமிழர்களின் கற்பிதங்கள் சிங்களர்களின் மீது பயம் கொள்ளும்படியாக பாரபட்சமாக இல்லை. ஆனால் சிங்களர்களிடம் தமிழர்கள் மீதான வெறுப்பு அவர்களின் மகாவம்ச கட்டுக்கதைகள் மூலம் கட்டியமைக்கப் பட்டிருந்தது. அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தவுடன், தமிழர்களுக்கு எதிரான அரசியல் சூடு பிடித்தது.

இந்தியா சுதந்திரமடையும் முன்னர் திராவிடநாடு கோரிக்கை எழுந்தது, ஆனால் மக்களிடம் பெரிய ஆதரவு இல்லை. ஆழி செந்தில்நாதன் [6] அவர்கள், அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டதற்கு முக்கிய காரணமாகக் கூறுவதும் இதே ஆதரவின்மை தான். இதற்கு முக்கிய காரணம் என்ன என்பதை குறியீட்டு அரசியல் தத்துவத்தின் மூலம் அறியலாம். தமிழக மக்கள் என்றுமே இந்தியாவை அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை. பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்ட கற்பிதங்கள் பொதுவாக இந்திய கற்பிதங்களுடன் ஒத்து செல்கின்றன. ஆரிய திராவிட கற்பிதங்கள் உருவாக்கப் பட்டு பரப்பப்பட்டாலும், அவை அச்சுறுத்தலை உருவாக்காமல், ஒரு இணக்கப்பாடு அல்லது மீள்பங்கீடு அரசியலை நோக்கியே நகர்த்தியது.

தலைவர்களின் கருத்துருவாக்கம்:

எப்படிப்பட்ட கருத்துருவாக்கத்தையும் கொண்டு ஒரு தலைவரால் வெற்றி பெறமுடியாது. எப்பொழுது கருத்துருவாக்கம் குறியீட்டு சார்புகளை ஒத்து இருக்கிறதோ, அப்பொழுதுதான் மக்களின் ஆதரவு பெருகும். சுருக்கமாகக் கூறினால் தலைவர்கள் கருத்துருவாக்கம் மூலம் தலைமை தாங்குகிறார்கள். அக்கருத்துருவாக்கம் சாதகமான உணர்வலைகளை ஏற்படுத்தினால், மக்கள் ஒன்று திரள்வர். தலைமை நம்பிக்கைக்கு உரிய தலைமையாக இருக்கவேண்டும். தலைமை சுயநலம் கொண்டதாக இருந்தால், மக்களை ஒன்று திரட்டமுடியாது.

உதாரணமாக, இலங்கைத்தீவு புத்த தர்மத்திற்காக கடவுளால் அளிக்கப்பட்டது என்று மகாவம்ச புராணக் கதைகளினால் சிங்கள தேசிய கருத்தியலை கட்டமைத்துள்ளனர் [7]. அதுபோலவே இந்துத்வாவும் இராம இராச்சியம் அமைப்போம், இந்தியா ஒரு இந்து தேசம் என்ற கருத்தியலை புராணங்கள் மூலம் கட்டியமைத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர்களது கருத்துருவாக்கம் மக்களிடம் உள்ள கற்பிதம் சார்ந்த குறியீடுகளுடன் ஒத்து வருவதால், மக்கள் அவ்வியக்கங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். திராவிட அரசியல் என்பது பகுத்தறிவு இயக்கத்திலிருந்து வந்தது என்றாலும், அவர்களின் வெற்றிக்குக் காரணம் பகுத்தறிவு அல்ல. அன்று மக்களிடம் பரப்பப்பட்ட ஆரிய-திராவிட கற்பிதங்கள், மொழிப் பற்று, திரைப்படங்கள், உணர்வுப் பூர்வமான மேடை பேச்சுக்கள், சமூக நீதி ஆகியன மக்களின் உணர்வுகளைத் தூண்டி இழுத்தது. மக்களின் உணர்வுகளை வென்றதால்தான் அரசியலில் வெல்ல முடிந்தது.[8]

அமைப்புகள்:

கருத்துருவாக்கம் குறியீட்டு சார்புகளுடன் ஒத்து இருக்கும்பொழுதே ஆதரவு பெருகும், ஆனால் அது மட்டும் மக்களை அணி திரட்டிவிடாது. மக்களை பல்வேறு அமைப்புகள் மூலம் ஒரு வலைப்பின்னலாக இணைக்கவேண்டும். கருத்துருவாக்கம் என்பது வான்போர் போன்றது; வலைப்பின்னல் என்பது தரைப்போர் போன்றது. இரண்டு போர்களையும் சரியாக நடத்தினால்தான் மக்கள் அணிதிரள்வர்.[3]

இன்று இந்துத்வா அமைப்புகள் நாடு முழுவதும் பலவேறு கிளைகளை உருவாக்கி இந்துக்களின் குறியீட்டு சார்புகளைக் கொண்டு அவர்களின் அமைப்புகளில் சேர்த்து வருகிறது. இந்த அமைப்புகள்தான் இந்துத்வ அரசியலின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். அவர்கள் குறியீட்டு சார்புகளின் தன்மையை நன்றாக உணர்ந்து அதை பயன்படுத்துகின்றனர்.

இன எழுச்சிக்கு தேவையான நிலைமைகள்:

இதுவரை பார்த்ததிலிருந்து, ஒர் இன எழுச்சி ஏற்பட பல சாதகமான நிலைமைகள் இருக்கவேண்டும்[3]. இனங்களுக்கிடைய ஓரவஞ்சனை இருத்தல் வேண்டும், தலைவர்கள் அதைப்பயன்படுத்தி கருத்துருவாக்கம் செய்யவேண்டும். மேலும் தலைமை நம்பிக்கையுள்ள தலைமையாக இருக்கவேண்டும், தலைவர்கள் நாடு முழுவதும் பரவலான அமைப்புகளை ஏற்படுத்தி மக்களை ஒருங்கிணைக்க வேண்டும். மேலும் எதிர்கொள்ள முடியாதபடி அதீத அடக்குமுறை இருந்தாலும், எழுச்சி ஏற்படாது. இத்தனையும் சாதகமாக இருக்கும்பொழுதே எழுச்சி ஏற்படும். ஏதாவது ஒன்று இல்லாவிட்டாலும் எழுச்சி ஏற்படாது. இதனால்தான் இன எழுச்சி என்பது அவ்வளவு எளிதில் ஏற்படுவதில்லை.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:

உண்மை என்பது சிக்கலானது. அதை நாம் பார்த்து உணர்வதில்லை, மாறாக நாம் தத்துவங்களின் வழியாகவே பார்க்கிறோம் என்கிறார் பாப்பர் [10]. உலகில் எந்த ஒரு தத்துவமும் உண்மையை முழுதுமாக பிரதிபலிப்பதில்லை. அதனால் ஒரு தத்துவம் என்றில்லாமல், அனைத்து தத்துவங்களின் வழியாகவும் பார்த்து அறிந்து கொள்வதே சிறப்பான புரிதலைத் தரும் [11]. கீழ்வரும் கருத்துக்கள் காஃப்மனின் அரசியல் தத்துவத்தின் அடிப்படையிலேயே இருக்கும். அதனால் இதுதான் இன அரசியல், இதுதான் முழுமையானது என்று எடுத்துக் கொள்ளவேண்டாம்.

 1. அரசியலில் உணர்வுகளுக்கு முதன்மைத்துவம் அளிக்கவேண்டும்.

அரசியலில் உணர்வுகளின் பங்கு முதன்மையானது; மக்களை உணர்வுகளால் வெல்ல முடியாமல், தமிழ்த்தேசிய அரசியலை நகர்த்த முடியாது. இதன் பொருள் பகுத்தறிவை நிராகரித்து குருட்டுத்தனமாக உணர்வுகளின் பின்னால் செல்வதல்ல. நமது குறிக்கோள்கள், திட்டமிடல்கள் அனைத்தும் பகுத்தறிந்துதான் உருவாக்கப்பட வேண்டும், ஆனால் அதை அடையும் முறையில் அனைத்து உத்திகளும் அவற்றின் செயற்திறனுக்கு ஏற்றபடி பயன்படத்த வேண்டும்.

 1. நமக்கு வரலாற்றுக் கற்பிதங்கள் தேவை

இன அரசியலில் வரலாற்றுக் கற்பிதங்கள் முதன்மையாக இருக்கிறது. இது இன அடையாளம், பூர்விகம், அறம், இனக் குறியீடுகள், வரலாறு, மாவீரர்கள் யார் என அனைத்தையும் உள்ளடக்கியது. இது மக்களின் உணர்வுகளுடன் கலந்து அவர்களை இயக்குகிறது.

அரசியல் கட்டுக்கதைகளின் உண்மைத் தன்மையை ஆராய்வது என்பது ஒரு துப்பாக்கியின் உண்மைத் தன்மையை ஆராய்வது போன்று பொருளற்றது, நகைப்புக்குரியது. இரண்டுமே ஆயுதங்கள், அவற்றின் உண்மைத் தன்மை என்பது அவை இலக்கை எப்படி வீழ்த்துகின்றன என்பதே ஆகும். நமது எதிரிகள் இரண்டாயிரம் ஆண்டு பழமையான மதம் சார்ந்த அரசியல் கட்டுக்கதைகளை நமக்கு எதிராக ஆயுதங்களாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் ஆயுதங்களை எவ்வாறான ஆயுதங்கள் கொண்டு எதிர்கொள்ளவேண்டும் என்று சிந்திப்பதே சரியான வழி.

“To inquire into the “truth” of the political myths is, therefore, as meaningless and as ridiculous as to ask for the truth of a machine gun or a fighter plane. Both are weapons; and weapons prove their truth by their efficiency. If the political myths could stand this test they needed no other and no better proof. In this respect the theory was beyond attack and invulnerable. All it had to do was to put the political myths into action and to show their constructive and destructive power." [4]

சிங்களர்கள் மகாவம்சக் கட்டுக்கதைகளைக் கொண்டிருக்கிறார்கள், இந்துத்வா குழுக்கள் புராண இதிகாசங்களைக் கொண்டுள்ளார்கள். நமது வரலாற்றுக் கற்பிதங்கள் என்ன என்பது இன்னும் தெளிவுபடாத ஒன்று. நமது வரலாற்றுக் கற்பிதங்களை தெளிவு படுத்தி மக்களிடம் பரப்புவது அவசியமானது. இதில்லாமல் அரசியல் வளர்க்க நினைப்பது, விதை இல்லாமல் மரம் வளர்க்க முனைவது போல. வரலாற்றுக் கற்பிதங்கள் எல்லாம் மதங்களைப் போல பகுத்தறிவற்றதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவை உண்மையின் அடிப்படையிலும் அமைக்கலாம். சொல்லப்போன்னால் மதங்களே உண்மை என்று கூறியே கற்பிதங்களைப் பரப்புகின்றன. நமது வரலாற்று கற்பிதங்களை உண்மையின் அடிப்படையில் அமைப்பதே சிறந்தது.

 1. சாதிப் பிணக்குகளுக்கான தீர்வு

சாதி சச்சரவுகளின் வேர் இந்துமத கற்பிதங்களிலேயே இருக்கிறது. அதனுடன் காலகாலமாக வரும் சாதிகளுக்கிடையேயான முத்திரை குத்தல், ஓரவஞ்சனைகள் ஆகியன காஃப்மனின் இன அரசியலை ஒத்ததே. சாதி பிணக்குகள், சாதி அரசியல் ஆகியன பகுத்தறிவிலிருந்து வருவதல்ல, அதனால் இதை பகுத்தறிவைக் கொண்டு விளக்கி தீர்க்க முடியாது. இச்சிக்கலை மாற்றுக் கற்பிதங்கள் மூலம் உணர்வுகளை மாற்றுவதன் வழியாகத் தீர்க்க முடியும். இது வரலாற்றில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, பண்டைய அரேபியாவில் அரேபியர்கள் பல குழுக்களாக ஒருவருடன் ஒருவர் சாதிக் கலவரங்களை போல வெட்டுக்குத்தில் ஈடுபட்டிருந்தார்கள் [12]. அவர்களை இசுலாம் ஒரு புதிய கற்பிதங்கள் மூலம் ஒன்றிணைத்து அன்றைய உலகில் தலைசிறந்த நாகரீகத்தை தோற்றுவித்தது.

 1. குறியீட்டு அரசியல் உத்திகளை பயன்படுத்தவேண்டும்:

இந்துத்வாவின் அரசியல் உத்திகள் அனைத்தும் மனிதனின் உணர்வுகளை நோக்கி செய்யப்படும் அரசியல். தமிழர் என்ற உணர்வுகளைத் தூண்டும் அனைத்தும் தடை செய்யப்படுகிறது. அதே நேரம் இந்துத்வ உணர்வுகளைத் தூண்டும் அனைத்தும் புகுத்தப்படுகிறது. அவர்கள் செய்வது காஃப்மனின் குறியீட்டு அரசியல். ஈழத்திலும் அதுபோன்ற செயல்பாடுகளையே சிங்கள அரசு பின்பற்றுகிறது. நமது அரசியல் செயல்பாடுகள் அவர்களின் குறியீட்டு அரசியலை எதிர்கொள்ளும்படியாக இல்லை. நமது அரசியல் என்பது மக்களின் பகுத்தறிவை நோக்கி நகர்கிறது. இது செவிடன் காதில் ஊதுகின்ற சங்கைப் போன்று எந்த ஒரு பெரிய விளைவையும் உருவாக்கப் போவதில்லை.

 1. தமிழ்க் கல்வியை மறுபரிசீலனை செய்யவேண்டும்

யூதர்கள் இரண்டாயிரம் வருடங்களாக தங்களுக்கு என்று ஒரு நாடில்லாவிட்டாலும், தங்களை அழியாமல் காத்துக் கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் யூதக்கல்வி முறை (Jewish Education) [13,14]. அவர்கள் மொழியை மட்டும் கற்பிக்காமல், அவர்களின் வரலாற்றுக் கற்பிதங்களை முக்கியமாக கற்பித்தால்தான் அவர்கள் இன்றும் இருக்கிறார்கள்:

“You’ve stumbled upon one of the secrets to Jewish survival. As holy as Hebrew is, and as central as it is to our prayer and study, it is not what defines us as Jews… Ever since we were exiled from Israel, we have spoken many languages…Is this ideal? No. In a perfect world, we would all be speaking Hebrew…But the rabbis understood that it is not Hebrew, but the Torah, that sustains us as a nation. Our language, country of residence, culture, and accent have changed numerous times throughout history. But we are still here today. For the Torah has been studied and its mitzvahs observed in all times, lands, and circumstances. Let the language be compromised, but not the message.” [15]

யூதக்கல்வி முறை என்பது குறியீட்டு அரசியலை மையமாகக் கொண்டது. நமது தமிழ்க்கல்வி முறையை குறியீட்டு அரசியல் தத்துவத்தைக் கொண்டு மறுபரிசீலனை செய்யவேண்டும். பள்ளிகளில் மொழியை மட்டும் நாம் கற்பிக்க முனைந்தால் தோல்வி ஏற்படலாம். வரலாற்றுக் கற்பிதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

முடிவுரை:

நாம் விரும்பும் ஒரு நல்ல சமூகத்தை அடையும் முயற்சியில் நீண்டகாலமாக மதங்களிடமும் சாதிகளிடமும் தோற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தத் தோல்விக்கு நாம் உணர்வுகளின் தன்மையை உணராதது ஒரு முக்கிய காரணம் என்பேன். பகுத்தறிவும் உணர்வுகளும் ஒரு சமூகத்தில் ஒரு சமநிலையில் இருக்கவேண்டும். ஏதாவது ஒன்று விஞ்சினால், அது நாட்டிற்கு கேடாய் முடியும் என்கிறார் தத்துவமேதை பிளேட்டோ:

“The first great political theorist, Plato, was an ardent admirer of reason. Yet he recognized that reason and passion each had its proper place in mind and state. When one or the other consistently takes control in an individual, Plato asserted, the result is “injustice of the soul”. The same imbalance between reason and passion can lead, he argued, to injustice in the state.” [2]

நாம் இதுவரை பகுத்தறிவில் விஞ்சினோம், மதங்கள் உணர்வுகளில் விஞ்சுகின்றன. அதுதான் மதங்களின் பலவீனம். நாம் உணர்வுகளிலும் பகுத்தறிவிலும் ஒரு சமநிலையை அடையும் பொழுதுதான் சாதி மத அரசியல்களை ஒரு கட்டுக்கு கொண்டுவரமுடியும். நான் மதங்களை கட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று கூறுவது, அவற்றை அழிப்பது என்ற பொருளில் அல்ல. மதங்கள் தனிமனிதனைப் பொறுத்தவரையில் பலருக்கும் தேவையாக இருக்கிறது. அதில் நாம் தலையிடத் தேவையில்லை. மதங்கள் அரசியல் சக்தியாக இருப்பதைத்தான் ஒழிக்கவேண்டும்.

நாம் இதுவரை பார்த்தது நாம் வெற்றியடையத் தேவையான முக்கியமான அறிவு. ஆனால் இதுவே மொத்தமும் அல்ல, போதுமானதும் அல்ல. நாம் தொடர்ந்து நமக்குத் தேவையான அறிவை பெருக்கிக் கொண்டே செல்லவேண்டும். அறிவில் தான் அனைத்து சிக்கல்களுக்கான தீர்வு உள்ளது[16].

பி.கு: இக்கட்டுரை கீழ்காணும் என்னுடைய இரு கட்டுரைகளிலிருந்து சுருக்கி எழுதப்பட்டது. மேலும் தெளிவான விளக்கங்களுக்கு இவற்றை பார்க்கவும்.

பகுதி 1: இன அரசியல் – இன எழுச்சி எவ்வாறு ஏற்படுகிறது?

பகுதி 2: இன அரசியல் – நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

உசாத்துணை:

 1. Haidt, Jonathan. The righteous mind: Why good people are divided by politics and religion. Vintage, 2012.
 2. Westen, Drew. The political brain: The role of emotion in deciding the fate of the nation. PublicAffairs, 2008.
 3. Kaufman, Stuart J. Nationalist passions. Cornell University Press, 2015.
 4. Kapferer, Bruce. Legends of people, myths of state: violence, intolerance, and political culture in Sri Lanka and Australia. Berghahn Books, 2011.
 5. Visuvanathan Rudrakumaran, Black July, Mullivaikal, and the Mahavamsa mindset of the Sinhala nation. https://www.colombotelegraph.com/index.php/black-july-mullivaikkaaal-and-the-mahavamsa-mindset-of-the-sinhala-nation/
 6. ஆழி செந்தில்நாதன், காணொளி, https://www.youtube.com/watch?v=t4YCC5NetFQ&feature=share
 7. J. L. Devananda. The Mahavamsa mindset : Revisiting Political Budhism in Srilanka, http://dbsjeyaraj.com/dbsj/archives/1886
 8. சு. சேது, பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய வேர்கள்
 9. சு. சேது, இன அடையாளம்
 10. Popper, Karl. All life is problem solving. Routledge, 2013.
 11. Feyerabend, Paul. Against method. Verso, 1993.
 12. Wright, Robert. The evolution of God: The origins of our beliefs. Hachette UK, 2010.
 13. Botticini, Maristella, and Zvi Eckstein. "The Chosen Few: How Education Shaped Jewish History, 70-1492." Economics Books (2013).
 14. Fox, Seymour, Israel Scheffler, and Daniel Marom, eds. Visions of Jewish education. Cambridge University Press, 2003.
 15. Is it Torah if it is not in Hebrew, https://www.chabad.org/library/article_cdo/aid/1073767/jewish/Is-It-Torah-If-Its-Not-In-Hebrew.htm
 16. சு. சேது, தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது?
Pin It