மொழி – தேசம் – தேசியம் - உறவும் பிறவும்

தேசியம் என்றால் என்ன? என்ற வினாவிற்கு வரலாற்று இயங்கியல் பார்வையோடு விடையளிக்க முற்படாமல் எந்திரத்தனமான சுருங்கிய பார்வையோடு விடையளிக்க முற்படுவது இந்தியத் தேசியம் என்ற ஒன்று இருப்பதையே மறுக்கும் நிலைக்குத் தோழர் பெ.ம.வைத் தள்ளி விடுகிறது. இந்தியத் தேசம் என்ற ஒன்று இல்லை என்பதால் இந்தியத் தேசியம் என்ற ஒன்றும் இருக்க முடியாது என்ற முடிவுக்கு அவர் சென்று விடுகிறார். தேசம் இல்லாத தேசியமா? என்று கொதிக்கிறார். தேசத்துக்குரிய இலக்கணத்தையும் தேசியத்துக்குரிய இலக்கணத்தையும் முழுதொத்தவையாகக் கருதிக் கொண்டு தேசத்தின் இலட்சணங்களைத் தேசியத்தில் தேடுகிறார்.

அண்மைக் காலத்தில் இந்துத்துவ ஆற்றல்கள் இந்தியத் தேசியம் என்ற ஒரு சரக்கை முனைப்புடனும் மூர்க்கமாகவும் அரசியல் அங்காடியில் கடைவிரிக்க முற்படுவதைக் காண்கிறோம் அல்லவா? இதுவும் தேசியம்தான், ஆனால் இந்துத்துவத் தேசியம்! பிற்போக்குத் தேசியம்! பேரரசியத் தேசியம் (ஏகாதிபத்தியத் தேசியம்)!

இலங்கைத் தீவில் தமிழ்த் தேசியம் என்பது ஒடுக்குண்ட தேசிய இனத்தின் உரிமைகளுக்கும் விடுதலைக்குமான முற்போக்குத் தேசியமாக இருக்கும் போதே, ஒடுக்குமுறைக்கான பிற்போக்குத் தேசியமாக சிங்கள-பௌத்தப் பேரினவாதம் உள்ளதல்லவா? சிங்களப் பேரினவாதத்தை சிங்களத் தேசியம் என்றும் சிங்களப் பேரினவாதிகளை சிங்களத் தேசியவாதிகள் என்றும் நடப்பு அரசியல் இலக்கியம் குறிப்பிடுவதைத் தோழர் பெ.ம. கண்டதில்லையா?

தேசியம் முற்போக்கானதாகவும் இருக்கலாம், பிற்போக்கானதாகவும் இருக்கலாம். தேசியம் உரிமைகளுக்கானதாகவும் இருக்கலாம். ஒடுக்கும் தேசியமாகவும் இருக்கலாம். பொதுவாக இந்தியத் தேசியத்தை வரலாற்றின் இருவேறு கட்டங்களில் இந்த இருவேறு நிலைகளிலும் பார்க்கலாம். மொழிவழித் தேசியம் எப்போதுமே முற்போக்கானதாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பிஸ்மார்க்கின் ஜெர்மன் தேசியமும் இட்லரின் ஜெர்மன் தேசியமும் ஒன்றல்ல..

ஒரு தேசத்துக்கு ஒரு மொழி -- தமிழ்த் தேசத்துக்குத் தமிழ் மொழி! ஒரே மொழி பேசும் இரு தேசங்கள் – தமிழகமும் தமிழீழமும்! ஒரு மொழிக்கு ஒரு தேசம் – பாரசீக மொழிக்கு ஈரான்! ஒரே மொழி பேசும் பல தேசங்கள் – அரபுமொழி பேசும் எகிப்து, லிபியா, சிரியா, அரேபியா, பாலத்தீனம் போன்ற பல தேசங்கள்! மொழிக்கும் தேசத்துமான உறவில் காணப்படும் இந்தப் பல்வகைமை தேசத்துக்கும் தேசியத்துக்குமான உறவிலும் காணப்படும். ஒற்றை வாய்பாட்டுக்குள் இந்த உறவை அடக்க முடியாது,

ஒரு மொழி பேசும் பல தேசங்கள் இருக்கலாம், ஆனால் பல மொழி பேசும் ஒரு தேசம் இருக்க முடியாது என்ற உண்மையை, பல மொழி பேசுவோர்க்கு அல்லது பல தேசங்களுக்கு ஒரு தேசியம் இருக்க முடியாது என்பதாகப் புரிந்து கொள்கிறார் பெ.ம. தேசியத்துக்கு தேசம் சாராத இருப்பு இருக்க முடியும் என்ற புரிதல் அவர்க்கில்லை.        

ஒரு மொழிக்கு ஒரு தேசம் என்பதை, ஒரு மொழிக்கு ஒரு தேசம் - ஒரு தேசத்துக்கு ஒரு தேசியம் என்று தோழர் பெ.ம. எந்திரத்தனமாகப் புரிந்து கொள்கிறார். இது வரலாற்று இயங்கியல் பார்வைக்குப் புறம்பானது என்று சுட்டிக்காட்டத்தான் முடியும்.

ஒரு தேசத்துக்கு ஒரு தேசியம் என்பது போலவே ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களுக்கு ஒரு தேசியம் இருக்க முடியும் என்பது தோழர் பெ.ம.வுக்குப் புரியாத புதிராக உள்ளது. இந்த இரண்டாம் வகைத் தேசியத்தை கூட்டுத் தேசியம் (collective nationalism) என்று நான் அழைக்க விரும்புகிறேன். ஒற்றைத் தேசியத்தில் முற்போக்கும் பிற்போக்கும் உண்டு என்பது போலவே கூட்டுத் தேசியத்திலும் உண்டு. இந்தப் புரிதல் இல்லாததால்தான் தோழர் பெ.ம. “சோவியத்(து) தேசியம் உருவானதா?” என்று கேட்கிறார்.

(தொடரும்)

- தியாகு

Pin It