கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
யானைகளை அழிவில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு புதிய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. உலகில் யானைகள் அதிகம் வாழும் எட்டு நாடுகளை சேர்ந்த வனத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகள், சுமார் ஐம்பது தேசங்களில் வாழ்கின்றன.
போட்ஸ்வானா, காங்கோ, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, கென்யா, தான்சானியா, மற்றும் தாய்லாந்து நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், யானைகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும், அவற்றை அழிவில் இருந்து காக்கவும் செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இந்த நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூன்று முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
-
வேட்டைகளை தடுப்பதற்கும், சட்ட விரோதமாக யானையின் உடல் பாகங்களை கடத்தப்படுவதை தடுப்பதற்காகவும் தகவல் பரிமாற்றங்களை இந்த நாடுகள் மேற்கொள்ளும். மனிதர்களுக்கும் யானைகளுக்கும் ஆன சிக்கல்களை களைவதற்காக உள்ளூர் அமைப்புகள் உருவாக்கப்படும்.
-
யானைகளின் எண்ணிக்கையை கண்காணிக்க புதிய அறிவியல் முறைகள் பின்பற்றப்படும்.
-
தொலைநோக்கு அடிப்படையில், விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஐம்பது சதவீதம் ஆசிய யானைகள் இந்தியாவில் மட்டுமே வாழும் சூழ்நிலையின் அவை சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் ஆராயப்பட்டது. வெவ்வேறு இயற்கை சூழ்நிலையில் வாழும் இந்த யானைகள், சாலை மற்றும் ரயில் திட்டங்களின் காரணமாக நிறைய சிக்கல்களை சந்திக்கின்றன. இதனால் அவற்றின் வசிப்பிடங்கள் பிரச்சனைக்கு உள்ளாகின்றன.
1992 -ல் தொடங்கப்பட்ட யானைகள் செயல்திட்டம் (Project Elephant), யானைகள் வாழும் மாநிலங்களுக்கு, யானைகளின் வாழும் வனப்பகுதியை பாதுகாக்கவும், யானைகளை அழிவில் இருந்து காப்பாற்றவும் நிதி உதவி அளிக்கிறது. தற்போது, புலிகளுக்கு செயல்படும் தேசிய ஆணையத்தை (National Tiger Conservation Authority) போல, யானைகளுக்கும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது (National Elephant Conservation Authority).
உணவுக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் யானைகள் வனங்களை விட்டு வெளியேறுவதும் அவற்றை மக்கள் விரட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. யானைகள் தேசிய ஆணையம் இந்த பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு காண வேண்டிய அவசியத்தில் உள்ளது. இல்லையேல் "யானைகள் அட்டகாசம்" என்ற செய்தி தொடர்ந்து ஒளிபரப்பாகும். உண்மையில் யார் அட்டகாசம் செய்வது? யானைகளா? இல்லை மனிதர்களா?
- விவரங்கள்
- வ.க.கன்னியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உங்களுக்குத் தெரியுமா ஒரு ஆச்சர்யமான செய்தி, ஆனால் உண்மை. புதிதாகப் பிறந்த புள்ளிமான் குட்டிகளின்மேல் எந்த விதமான உடல் வாசனையும் இருக்காதாம்.
பெண்மான் ஒரே பிரசவத்தில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈன்றிருந்தாலும், பெரும்பாலும் குட்டிகள் தாயை விட்டு தனியாகவே இருக்க நேர்கிறது. தாய் அருகிலிருந்தால் தாய்மானின் வாசனை மற்ற விலங்குகளுக்கு மானின் இருப்பிடத்தையும், குட்டிகளையும் காட்டிக் கொடுத்து விடும்.
மான்குட்டிகள் பிறந்து சில நிமிடங்களில் எழுந்து நின்று தாயிடம் பால் குடிக்க ஆரம்பித்து விடுகின்றன. தாயுடன் சென்று இரை தேட, பிறந்து ஓரிரு வாரங்கள் ஆகிவிடுகிறது. எனவே தாய்மான் இரை தேட வேண்டிய கட்டாயமான தருணங்களில் துணிந்து குட்டிகளை தனித்து விட்டுச் செல்கின்றன. அத்தருணங்களில் குட்டிகள் ஒன்றுக்கு மேல் இரண்டு அல்லது மூன்று இருந்தால், இரை தேடச் செல்லும்போது அவைகளை வெவ்வேறு இடங்களில், பிற மிருகங்களிடம் சிக்கிவிடாமல், பாதுகாப்பு கருதி தனித்தனியாக விட்டுச் செல்கிறது. குட்டிகளின் தனிமை அவைகளை பத்திரமாக இருக்கவே உதவுகிறது.
மான்குட்டிகள் பிறந்த முதல் பல நாட்களுக்கு அவைகளின் மேல் எந்தவித குறிப்பிட்ட வாசனையும் இருக்காது எனத் தெரிய வருகிறது. எனவே ஓநாய், காட்டுப் பூனை போன்ற எதிரி விலங்குகளின் கண்களுக்கு மான்குட்டிகள் இருப்பது தெரிவதில்லை.
சிகப்பு கலந்த தவிட்டு நிறத்துடன் கூடிய வெண்புள்ளிகளுடைய மான்குட்டிகளின் உடல் தோல் அவைகளுக்கு பாதுகாப்பைத் தருகிறது. இத்தோற்றம் காட்டின் மரக் கிளைகளுக்கு ஊடாக தரையில் விழும் சூரிய ஒளியின் புள்ளி புள்ளியான தோற்றத்தை ஒத்திருப்பதால் விலங்குகள் அக்குட்டிகளின் மேல் தடுக்கினால் ஒழியத் தெரிவதில்லையாம்
எனவே, வனசரணாலயங்களுக்கு நாம் செல்ல நேரிடும்பொழுது, புதிதாகப் பிறந்த புள்ளிமான் குட்டிகளைக் காண முடிந்தால் நாம் அதிர்ஷ்டசாலிகள். புள்ளிமான் குட்டிகளுக்கு இயற்கை கொடுத்த வரத்திற்கு நன்றி சொல்வோம்.
- வ.க.கன்னியப்பன் (
- விவரங்கள்
- வரீதையா கான்ஸ்தந்தைன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள். பொது மொழியில் சொன்னால் 1370 கோடி கோடி கனமீட்டர்கள். நிலத்தைப் பொறுத்தவரை அதன்பரப்பில்தான் உயிர்கள் உலவ முடியும். கடலோ முப்பரிமாண ஊடகம். உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல்.
கடலை நினைத்தவுடன் சட்டென்று உங்கள் நினைவுக்கு வருவது என்ன? அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம். ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடல் என்பது நீர் என்னும் திரவம். இயல்பில் வெப்பசக்தி மாற்றங்களைப் பொறுத்து திட நிலைக்கும் ஆவி நிலைக்கும் மாறிக் கொள்கிற திரவம். தன்னளவில் நிறமற்ற இந்தத் திரவம்தான் உயிரின் ஆதாரமும். வேறந்தப் பொருளையும் போன்று நீருக்கும் இயற்பியல், வேதிப் பண்புகள் உண்டு. நீரானது உயிரின் அக ஊடகமாகவும் புற ஊடகமாகவும் இயங்குவதற்கு இந்தப் பண்புகள் தாம் காரணமாய் இருக்கின்றன. அடிப்படையில் கடலின் பண்பு என்பது அது கொண்டிருக்கும் நீர்த்திரளின் பண்பு தான்.
கடல் உயிரின் தொட்டில். ஆதியில் உயிர் கடலில் தோன்றியதாய்ப் பரிணாமவியல் சொல்கிறது. நீரின்றி அமையாது உலகு. நீர் அமைந்துபடுவதனால் மட்டுமே உலகில் உயிர்கள் தோன்றி வாழ்கின்றன. நீர் உயிரின் அமுதம் உயிரின் இயக்க ஊகமும் நீர்தான். மனித உடலில் ஏறத்தாழ 75 விழுக்காடு நீர். உலகின் இயக்கமும் அதன் விளைவான நீரின் இயக்கமுமே உயிர் இயக்கத்தின் ஆதார சுருதி. உயிர்களின் அன்றாட செயல்பாடுகள் என்பவை வளர்சிதை மாற்றம் சார்ந்தவை. உயிர்களின் இயக்கம் கரிம மூலக் கூறுகளின் கூட்டல் கழித்தல் கணக்கீடுகள் தாம். பிரம்மாண்டம், ஆச்சரியம் என்பவற்றின் குறி யீடாய்க் கடலைச் சொல்கிறோம். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் கடலைப் பரவை என்கிறது. பரவை என்றால் பரந்து பட்ட என்று பொருள்.
இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் ஒரு ஆக்ஸிஜன் அணுக்கூறு சேர்ந்தால் கிடைப்பது ஒரு நீர் மூலக்கூறு. ஹைட்ரஜன் நேர்மின் விசை அயனி ஆக்ஸிஜன் (பிராணவாயு) எதிர்மின்விசை அயனி. பிற மூலக்கூறுகளின் எதிர்மின்விசையுடன் ஹைட்ரஜன் அயனி எளிதில் இணைந்து விடுகிறது. நீர் இயற்கையின் மிகச்சிறந்த கரைப்பானாய் இருப்பதற்கு இது முக்கியமான காரணம். வெப்ப சக்தியுடனான நீரின் பரிவர்த்தனையும் அடர்த்தி வேறுபாடுகளும் கடலின் இயற்பியல் கூறுகளைத் தீர்மானிக்கின்றன. ஹைட்ரஜன் அயனிகளின் பிணைப்பால் நீர்த்திரவத்தின் மேற்பரப்பு மெல்லிய தோல் போல் இயங்குகிறது. பூச்சிகள் போன்ற சிறு பொருட்கள் அதனுள் அமிழ்ந்து விடாமல் மேலே மிதப்பதற்கு இந்த பரப்பு ஈர்ப்புதான் (Surface tension) காரணம்.
நீர் மூலக்கூறுகளின் நெருக்கமான பிணைப்பை ஆக்சிஜனுடனோ வேறு கரை பொருட்களுடனோ உருவாக்கி விடுகிறது. பலவீனமான, ஆனால் எண் ணற்ற ஹைட்ரஜன் பிணைப்புகளின் காரணமாக நீர்த்திரவம் அடர்த்தி மிகுந்தும் ஒட்டும் தன்மை மிகுந்தும் காணப்படுகிறது. வெப்பத்தை உள் வாங்கியும் வெளியேற்றியும் விரிவடையவும் சுருங் கவும் செய்யும். ஹைட்ரஜன் பிணைப்புகளின் விலகலும் சேரலும் பனி உருகி நீராதல், நீர் விரி வடைந்து ஆவியாதல், மறுதிசையில் இயல்பு மாறுதல் எல்லாமே அடர்த்தி நிலைகளின் மாற்றம்தான். வலுவான பிணைப்பிலிருந்து மூலக் கூறுகளைப் பெயர்த்தெடுக்க (நீர் ஆவியாக) நிறைய சக்தி தேவைப்படுகிறது. நிரின் கொதிநிலை மிக அதிகமாயிருப்பதற்கு (100 டிகிரி செல்ஷியல்) இதுதான் காரணம். கடலின் வெப்பநிலை மாற்றம் ஒரே மட்டத்திலுள்ள நீரில் அடர்த்தி நிலை மாற் றத்தை ஏற்படுத்துகிறது. இப்படி விரிவடையும் நிர்த்திரள் பகுதி நகர்ந்து பரவுவதனால் பெருங்கடல் நீரோட்டங்கள் உருவாகின்றன.
கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை. வெப்பமண்டல பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர் ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம். இடையிலிருக்கும் நீர்த்தரளில் வெப்ப நிலை சடுதியாய்த் தாழ்ந்து விடுகிறது. அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில் மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையில் உறைபனியாய்க் கிடக்கையில் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி வெப்பநிலையும் அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக அதிகம். வெப்ப மட்டங்கள் இதனால்தான் உருவாகின்றன. இந்த மாறுபட்ட பண்பு மட்டும் கடலுக்கு இல்லா திருந்தால் உலகின் மிகப் பெரிய வாழிடத்தில் உயிர்கள் நீடிக்க முடியாமல் போயிருக்கும்.
நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும் பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு அடர்த்தி அதிகம். நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில் எளிதாய் மிதக்கலாம்.
கடலின் உயிரின் இருப்பைத் தீர்மானிக்கும் முக்கிய கூறுகள் இன்னும் சில உண்டு. பிராண வாயு காற்று மண்டலத்திலிருந்து கரைந்து கலந்தால் மட்டுமே கடல்வாழ் உயிரினங்கள் சுவாசிக்க முடியும். பச்சையம் தாங்கிய மிதவை உயிரினங்களும் கடற்பாசிகளும் கடலின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. நேரடியாகவோ, மறைமுகமாகவோ எல்லா உயிர்களும் இந்தப் பச்சை உயிர்களை நம்பியிருக்கின்றன. உணவு உற்பத்தியின்போதும் பிராணவாயு வெளியாகிறது. சூரிய ஒளிச் சக்தி இருந்தால்தான் உணவு உற்பத்தி சாத்தியம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே எட்டுவதில்லை. மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.
சார்புநிலைதான் உயிர்வாழ்தலின் பிழிவு உயிரினங்கள் ஒன்றையன்று சாராமல் வாழ்க்கை சாத்தியமில்லை. சூழலியலில் இந்தச் சார்புறவை உணவுச் சங்கிலி என்கிறார்கள். ஒரு குளத்தின் உணவுச் சங்கிலி எளிமையானது. சிறு சிறு பாசியினங்களைப் புழுக்கள் தின்கின்றன; புழுக்களைப் பூச்சிகள் தின்னும்; பூச்சிகளை மீன்கள் தின்னும், மீன்களை தவளைகள் உண்ணும், தவளை யைப் பாம்பு தின்னும், பாம்பைப் பறவைகள் வேட்டையாடும். இந்த எல்லா உயிர்களும் கழிவுகளை வெளியேற்றும். இறுதியில் இறந்தும் போகும். கழிவையும் சடலங்களையும் சிதைப்பதற்கென்று பலகோடி நுண்ணுயிர்கள் உள்ளன. சிதைவுற்ற கூறுகளைப் பாசிகளும் பிற தாவரங்களும் மீண்டும் உணவாய்த் தயாரிக்கும் நிகழ்வுகள் சுழற்சியாய்த் தொடர்ந்து கொண்டிருக்கும். கடல் இன்னொரு சூழலியலைக் கொண்டிருக்கிறது. அடிப்படைக் கூறுகள் ஒரே மாதிரியானவை நீரானது. அதன் உள் வாங்கும் பண்பு, நீரியல் சுழற்சி, பருவக் காற்றுகள், நீரோட்டங்கள், ஓதங்கள், அலைகள் புவியீர்ப்பு, கோளீர்ப்பு, வெளிச்சம், உயிர்கள், உணவுச் சங்கிலி எல்லாவற்றையும் மனதில் திரட்டிப் பாருங்கள் - ஒரு பிரம்மாண்டம் உருக்கொள்ளும் -அதன் பெயர்தான் கடல்.
கடலில் வாழிடங்கள் வகைவகையாய் உள்ளன. அலைகள் கரையுடன் மோதும் பகுதிகள் கூட எல்லா இடத்திலும் ஒன்று போலிருப்பதில்லை. பாறைக்கரை, மணல் திட்டுகள், மணல்வெளி, மணற்குன்று, களிமண் குன்றுகள், உள்ளே போனால் பரப்புக் கடல் (Pelagic Water), நடுக்கடல், கண்டத்தட்டுக் கடல், நிலப்பகுதிக்கு வந்தால் உவர் பரப்புகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், அலையாத்திக் காடுகள் எனப் பல. ஒவ்வொரு வகையும் பிரத்தியேகமானதொரு சூழலியலை முன்னிறுத்துகிறது. பவளப் புற்றுச் சூழலியல் இதற்கு அருமையான உதாரணம். அலைவாய்க் கரையிலிருந்து 200 மீட்டர் உயரம் வரையுள்ள நிலப்பகுதி கடற்கரை மண்டலத்தைச் சேர்ந்தது. பன்னாட்டுக் கடற்சட்டங்களில் குறித்துள்ளபடி கடலோர நாடுகளின் பிரதேச எல்லை 12 கடல் மைல் (ஏறத்தாழ 216 கிலோ மீட்டர்); அதற்கு அப்பால் 12 கடல் மைல்கள் கண்காணிப்பு எல்லை அலைவாய்க் கரையிலிருந்து 200 மைல்கள் வரை அந்தந்த நாடுகளின் முற்றுரிமைப் பொருளாதார மண்டலம். இப்பொருளாதார எல்லையிலிருந்து மேலும் 150 கடல் மைல்கள் வரை விரியும் கண்டத்தட்டுகளின் மீதும் அந்தந்த நாட்டுக்கு உரிமை உள்ளது. இந்தியாவின் கடற்கரை ஆசிய நாடுகளில் மிக நீளமானது. தீவுப் பகுதிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 8000 கிலோ மீட்டர் கடற்கரை. இந்திய முற்றுரிமைப் பொருளாதார மண்டலம் 20.2 லட்சம் சதுர கிலோ மீட்டர்கள். இந்தக் கடற்பகுதி இந்தியாவுக்கு நான்கு பெரும் சேவைகளை வழங்குகிறது.
இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல் போக்குவரத்து. மௌரியர் காலத்திலிருந்தே சரக்குப் போக்குவரத்திலும் மக்களின் பயணத்துக்கும் கடல் பயன்பட்டு வந்துள்ளது. ஐரோப்பியர் காலத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள்தாம் இதில் ஈடுபடுத்தப் பட்டிருந்தன. பிரிட்டிஷ் இந்திய நீராவிக் கப்பல் நிறுவனம் 1862இல் தொடங்கிய பிறகே கடற்செலவு சார்ந்த பொருளாதாரம் வளர்ந்தது, பிறகு இந்திய கடற்போக்குவரத்து நிறுவனம் போன்ற பல கம் பெனிகள் இந்தத் துறையில் இறங்கின. 1961இல் நிறுவப்பட்ட இந்தியக் கப்பல் நிறுவனம் அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் கப்பல் சரக்குப் போக்குவரத்தில் 51 விழுக்காட்டைக் கைப்பற்றி ஆண்டுக்கு 7000 புதிய வேலைவாய்ப்புகளை அத்துறை உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறது.
ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில் வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம். இந்தியாவின் 7600 கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000 மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன. ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில் ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன. இதன் பொருளாதார மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி ஈட்டுகிறது. கழிமுகங்களிலும் கடலை ஒட்டிக் கிடக்கும் உவர்நீர்க் கழிவுகளிலும் ஏராளம் மீனக்ள் அறுவடையாவதுடன் பல நூறு மீன்களின் இனப்பெருக்க வளர்ப்பிடமாகவும் இந்த இடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை தவிர கரைக்கடல் பகுதிகளிலும் உவர்நீர்ப் பரப்புகளிலும் மீன்வளர்ப்பு நடைபெறுகிறது. மதிப்புக் கூட்டிய மீன்பண்ட உற்பத்திச் சாலைகளும் மீன்பதனிடும் ஆலைகளும் பல இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு ஏற்றுமதியாகின்றன. சுறாத் துடுப்புகள் (shark fins) வளைகுடா நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. டப்பாக்களில் அடைத்தல் (canning),), உறைய வைத்தல், குளிரூட்டல், சரக்குப் போக்குவரத்து முதலிய துறைகளில் விரிவாக்கத்துக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. 1950களில் இந்தியா கடற்பாசிகளை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அல்ஜினேட், அகர் அகர் போன்ற வேதிப்பொருட்களைப் பிரித் தெடுக்கத் தொடங்கிய பிறகு கடற்பாசி ஏற்றுமதி நின்று போனது. கராகீனன் என்னும் விலையுயர்ந்த வேதிப்பொருளும் இப்போது கடற்பாசிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
கடல் காட்சிப்படுத்தும் அருமையான சூழலியல் கட்டமைவுகளில் பவளப் புற்றுகள் மிக முக்கிய மானவை. கரைக்கடல் மற்றும் தீவுப் பகுதிகளில் மாசுறாச் சூழல்களில் சற்றொப்ப 21 டிகிரி மித வெப்பம் நிலவும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டமே பவளப் பாறைகள் அமைகின்றன. நைடேரியா வகையைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பவளப்புற்று இனங்கள் தாம் வாழும் காலத்தில் தம்மைச் சுற்றிச் சுரந்து அமைக்கும் சுண்ணாம்புப் புற்றுகள் இவ்வுயிர்களின் மறைவுக்குப் பிறகும் நிலைத்திருக்க, அவற்றின் மீது புதிய உயிர்கள் புற்றுகளை அமைத்துக் கொள்கின்றன. படிப்படியாக புற்றுகள் வளர்ந்து குன்றுபோல் உயர்கின்றன. கடல் மட்டத்துக்கு அடியில் பரவியும் வளர்கின்றன. இந்தப் பவளப் புற்றுகளில் வாழும் சுசாந்தலே என்னும் உயிர்கள் பவளப்பாறைக்குக் கவர்ச்சியான நிறத்தைத் தருகின்றன. மெல்லுடலிகள், குழியுடலி, துளையுடலி, கணுக்காலி, மீன்கள், ஆமைகள் கடல் அட்டை, கடல் வெள்ளரி போனற் முட் தோலிகள், மீன்கள், திமிங்கலம், கடற்பசு முதலிய எண்ணற்ற வகை விலங்கினங்களும் கடற்பாசிகள், கடற்கோரைகள் போன்ற பல நூறு தாவர இனங் களும் பவளப் பாறைகளைச் சார்ந்து வாழ்கின்றன. 10500 சதுரகிலோமீட்டர் மன்னார் வளைகுடா கடலுயிர்க் கோளப் பகுதியில் 21 சிறு தீவுகளைச் சூழ்ந்து 3600 உயிர்வகைகள் வாழகின்றன. உலகின் உயிர்ப்பன்மயச் செறிவு மிகுந்த கடலுயிர் உய்விடங் களுள் ஒன்றாக இப்பகுதி கருதப்படுகிறது. இது தவிர இந்தியாவில் பாக் நீரிணையிலும் கட்ச் வளைகுடாவிலும் அந்தமான் நிக்கோபார் மற்றும் இலட்சத் தீவுகளிலும் பவளப் பாறைகள் உள்ளன.
இலட்சத்தீவின் 35 தீவுத் தொகுப்பில் பதினொரு தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றன. நூறுக்கு மேற்பட்ட பவளப்புற்று இனங்கள் வாழும் இப்பகுதி களில் ஸ்கிப்ஜாக் சூரைகள் தூண்டில்களின் மூலம் பிடிக்கப்படுகின்றன பருவமழைக் காலங்களில் மக்கள் பவளப் பாறைகளின உபவளங்களை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர். அந்தமான நிக்கோபாரின் 350 தீவுகளில் 38இல் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. கரைநோக்கித் தேயும் பவளப் பாறைகளும் அலையாத்திக் காடுகளும் கடற்கோரை மற்றும் கடற்பாசிப் படுகைகளும் இங்கு மிகுதியாக அமைந்துள்ளன. இந்தியாவில் இவ்விரு தீவுப் பகுதிகளின் பவளப்பாறை மட்டுமே ஆரோக்கியமான சூழலியலில் நீடிக்கின்றன. பிறபகுதிகளில் கடல்தரையைத் தோண்டியும் பவளப் பாறைகளை உடைத்தும் விஷம் மற்றும் வெடி பொருள் பயன்படுத்தியும் மீன்பிடித்தும் பவளப் பாறைகள் சிதைவுற்று வருகின்றன. சேறு சகதி படிவதாலும் நகரக் கழிவுகள் சேர்வதாலும் எண்ணைக் கசிவுகளாலும் கடற்சூழலியல் சிதை வுறும் சூழலில் மென்மையாக பவளப்புற்று இனங்கள் நம் கடல்களிலிருந்து மறைந்து வருகின்றன. அறுவடையாகும் கடல் மீனில் 90 விழுக்காடு கரைக்கடலிலிருந்துதான் கிடைப்பவை. கரைக்கடலின் சூழலியலைப் பவளப் பாறைகளும் கடற்கோரை, கடற்பாசிப் படுகைகளும் செழுமைப் படுத்துகின்றன. கரைக்கடல் சூழலியலின் சிதைவு மீன்வளப் பொருளாதாரத்துக்கு நேரடியான தாக்கு தலாகும்.
இந்தியக் கடல்கள் வழங்கும் முக்கியமான மூன்றாவது வளம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள். மும்பை உட்கடல் எண்ணை வயல் மற்றும் கோதாவரி எண்ணை வயல்கள் இரண்டும் இந்தியாவின் முக்கியமான பெட்ரோலிய வளங்களாகும். 1993இல் இந்தியாவின் எரிபொருள் தேவையில் (5.87 கோடி டன்கள்) பாதிக்குக் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வாண்டில் இந்தியாவின் தேவை 14 கோடி டன்கள். இதில் 65 விழுக்காடு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிடைக்கிறது. இறக்குமதி இந்தியப் பொருளாதாரத்தின் போக்கை வெகுவாய்ப் பாதிக்கிறது. பெட்ரோலியப் பொருட்கள் எரி சக்தியாக மட்டுமின்றி பிளாஸ்டிக், செயற்கை இரப்பர், சலவைப் பொடி முதலிய பல்வேறு வேதிமங்களின் உற்பத்திக்கு மூலப்பொருளாகவும் தேவைப்படுகிறது.
உலகெங்கும் கடலும் கடற்கரைப் பிரதேசமும் கேளிக்கை இடங்களாகவும் பொழுது போக்கு வளமாகவும் பயன்படுகின்றன. இந்தியாவின் 7600 கிலோ மீட்டர் தீபகற்பக் கடற்கரையும் அந்தமான் நிக்கோபார் தீவுகளும் சுற்றுலா வளர்ச்சி வாய்ப்புகளை அள்ளித் தருகின்றன. கடற்கரை தூய்மையான பிராணவாயுப் பிரதேசம் ஓய்வுக்கும் சிரம பரிகாரத்துக்கும் கேளிக்கைக்கும் கடற்கரை மிகப் பொருத்தமான இடம். நீர்க்கேளிக்கை, பாய்மரப்படகு விளையாட்டு, படகுப் பயணம், கடலுக்குள் புகைப் படம் எடுத்தல் என வகைவகையான பொழுது போக்கு, கேளிக்கை வாய்ப்புகள் கடற்கரையில் உள்ளன. மாலத்தீவின் மக்கள் தொகை இரண்டு இலட்சம் தான். ஆனால் அங்குள்ள 58 சுறறுலாத் தலங்களில் ஆண்டுக்கு இரண்டு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மாலத்தீவுப் பொருளாதாரம் மீன்வளத்தையும் சுற்றுலாவையும் மையமாய்க் கொண்டு சுழல்வதாகும். இந்தியாவின் கடற்கரைகளில் மும்பை, கோவா, கொச்சி, சென்னை போன்ற பகுதிகளிலும் அந்தமான் நிக்கோபார் இலட்சத்தீவுகளிலும் சுற்றுலா பெரும் பொருளியல் வளர்ச்சியை உருவாக்கக்கூடும். இந்தியச் சூழலில் சுற்றுலா இயற்கை நேய நடவடிக்கையாக ஒழுங்கு படுத்தப்பட வேண்டிய ஒன்று.
கடலுக்கும் உங்களுக்கும் தொப்புள் கொடி உறவு இருக்கிறது. அடுத்தமுறை நீங்கள் கடலைப் பார்க்க நேர்ந்தால் கண்ணுக்குப் புலப்படும் தொலைவுக்கு அப்பாலும் உங்களால் பார்க்க முடியலாம்.
(பன்னாட்டு கடல் நாளன்று (1.6.2010) நாகர் கோவில் கார்மல் மேனிலைப் பள்ளியில் ஆற்றிய உரையின் சுருக்கம். பூவுலகு மார்ச் 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- கே.வி.கோவிந்தராஜ்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகம் தோன்றி பல கோடிக்கணக்கான ஆண்டுகளில் பல்கிப்பெருகிய உயிரினங்களின் வாழ்க்கை வெவ்வேறு வகைகளில் பரிணாமம் பெற்றுக் கொண்டே வருவதை உலக சரித்திரம் நிரூபித்துக் கொண்டே வருகிறது. உலகில் மற்ற வகை விலங்குகளைக் காட்டிலும் பாலூட்டிகளே முதன் முதலில் உருவானது. உச்ச உயர்வு பால்குடி உயிரினங்களான வாலில்லா குரங்குகள், குரங்குகள், மனிதர்கள் என விரிந்தார்கள். இன்று மனிதர்களின் ஆசைகளினாலும் அத்து மீறல்களாலும் சத்துகுறைவுற்ற உணவு, மிகுந்த மாசு, இரசாயன உரம் மற்றும் தொற்று நோய்களாலும் விலங்கினம் அழிந்து வருவதை உலகம் வருத்தத்துடன் உற்று நோக்குகிறது. காடுகளை அழித்து கழனியாக்குகிறேன் என்று விலங்குகளின் வீடுகளை அழித்து விலங்குகளின் வழித்தடங்களும் மறைக்கப்பட்டு மாற்றப்பட்டு காட்டை விட்டு நாட்டை நோக்கி திசை மாறி விலங்குகளும் உலா வர ஆரம்பித்தன. விரிந்திருந்த காடு அழிக்கப்பட்ட காரணங்களாலும் அவை வாழும்பகுதி சுருங்கி குறுகிய எல்லைக்குள் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட காரணத்தாலும் மேற்கூறிய காரணத்தாலும் விலங்கினங்களில் 80 வகை பாலூட்டிகள் 40 வகை பறவைகள் 20 வகை நில நிர் வாழ்வன மற்றும் ஊர்வன அழிவின் விளிம்பை நோக்கிப் போய் கொண்டிருப்பது, வேதனை யளிக்கும் விசயங்களாகும்.
பாலூட்டிகளில் நீலகிரி மந்தி, தங்கநிற மந்தி, சிங்க வால் குரங்கு, வெள்ளை புருவ குரங்கு, ஒல்லி தேவாங்கு, பெரிய தேவாங்கு ஆகிய உயிரினங்கள் அழிந்து கொண்டிருப்பதில் சிலவாகும். யானைக்கு இந்திய நாட்டின் பாரம்பரிய விலங்கு என்கிற அந்தஸ்து கிடைத்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இன்று இந்தியாவில் 25000 யானைகள் மட்டுமே உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதிலும் 3500 யானைகள் கோவில் களிலும் சர்க்கஸ் கூடாரங்களிலும் அதற்குப் போது மான உணவு மற்றும் சுகாதாரமின்றி போட்டதைத் தின்று எலும்பும் தோலுமாய் இருப்பதை நினைக்கும் பொழுது வருத்தமாய் உள்ளது.
நமது நாட்டில் தந்தங்களுக்காக ஆண் யானை களை கொல்வது அதிகமாகி வருகிறது. முதலில் 50 பெண் யானைகளுக்கு ஒரு யானை என்றிருந்த விகிதாச்சாரம் இன்று ஆண் யானைகளின் சாகடிப் புக்கு பின்பு 200 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்கிற விகிதாச்சரம் இனப்பெருக்கத்திற்குப் போதுமானதாக இல்லை என்பதுடன் விரைவில் யானை இனமும் அழிந்து விடுமோ என்கிற பயம் நெஞ்சில் வறட்சியை உருவாக்குகிறது.
பளிங்கு பூனை, லிங்க்ஸ் பூனை, ஓனாய், இந்தியக் குள்ள நரி, செந்நாய், பழுப்புக்கரடி, புனுகுபூனை, மலபார் புனுகு பூனை, புள்ளி லிங்சாங், சிவப்புப் பாண்டா, எறும்பு தின்னி, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், ஆசிய காட்டுக்கழுதை, சடைமாடு, சதுப்பு நில மான், நாலு கொம்பு மான், நீலகிரி வரையாடு, கஸ்தூரி மான், ஹிஸ்பிட் காட்டு முயல் போன்ற பாலூட்டிகளும் அழிந்து வரும் விலங்கினங்களில் சிலவாகும்.
60 ஆண்டுகளுக்கு முன்பு 40000 புலிகள் வாழ்ந்த இடத்தில் சென்ற ஆண்டு கணக்கெடுப்பின்படி 1400 புலிகள் மட்டுமே இருக்கின்றது என்பது வேதனையிலும் வேதனை இன்னும் 10 ஆண்டுகளில் புலிகள் இனிமே அழிந்து விடுமோ என்கிற பய உணர்வு நம்மைப் போன்றவர்களையும் சமூக ஆர்வலர்களையும் வேதனைக் குள்ளாக்குகிறது.
பாலூட்டிகளில் தான் நிலைமை மோசம் என்றால் பறவையினத்தில் அதை விடக் கொடுமை. மாபெரும் இந்தியப் பஸ்டர்டு, பெரிய இருவாட்சி, லிக் புளோரிக்கான, சைபீரியா கொக்கு, இமயமலை மோனால் பெசன்ட் முதலிய பறவைகளும் அழிவை நோக்கியுள்ளன. அரிய பறவைகளான கௌதாரி, பூ நாரை, வல்லூறு, தீக்கோழி முதலானவைகளும் காலப்போக்கில் அழிந்து வருகிறது. டர்கி போன்ற அளவுடைய டோடோ என்கிற மொரிஷியப் பறவையின் கடைசி உயிர் 1680 ஆம் ஆண்டே பிரிந்து விட்டது. அதன் புகைப்படம் கூட இப்போது இல்லை என்பது வேதனைக்குரியது 1500 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பியர்கள் அங்கே குடியேறியபோது கொண்டு வந்த செல்லப் பிராணி கள் டோடோவின் முட்டைகளை குடித்தே அழிந்து விட்ட காரணத்தால் அந்த இனமே அழிந்து போனது. வட அமெரிக்காப் புறா, மடகாஸ்கரின் யானைப் பறவை ஃபுளோரிடாவின் வண்ணக்கழுகு, தென்னாப்பிரிக்காவின் குவாக்கா ஆகிய அழிந்தே பல நூற்றாண்டுகளாகிவிட்டது. வேட்டை சிறுத்தை, சிவப்புத்தலை வாத்து, மலைக்காடை முதலானவை சென்ற நூற்றாண்டோடு அழிந்து போனது.
ஊர்வனவற்றில் கடல் ஆமை, தோல் ஆமை, கங்கை முதலை, கழிமுக முதலை, சதுப்பு நில முதலை, இந்திய உடும்பு, நீர் உடும்பு, பாம்புகளில் ராஜ மலை பாம்பு, இந்திய முட்டை தின்னி பாம்பு, நீர் நிலத்தில் வாழ்வனவான இமயமலை நியூட், மலபார் மரத் தேரை, கோரோ மலை மரத் தேரை, முதுகெலும்பில்லா பிராணிகளான கிரேஷ்டேஷியன் எனப்படும் நண்டு, நத்தை முதலானவைகளுக்கும், 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய 50000க்கும் அதிகமான வகைகள் உள்ள பூச்சிகளில் அதன் உறைவிட அழிப்பு, சுற்றுச்சூழல் மாசு, அதிக அளவில் அடிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்து போன்றவைகளால் காலப்போக்கில் அழிந்து கொண்டுள்ளன. இமயமலையில் மட்டுமே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கஸ்தூரிமான் உள்ளது என்பதும் இதயத்தையே பிசையும் அவலம்.
சிட்டுக்குருவிகள் நூற்றுக்கணக்கில் கூட்டம் கூட்டமாய் பறப்பதையோ இரண்டு தொலைபேசிக் கம்பங்களுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில் ஓர் இடம் கூட இடைவெளியின்றி வரிசையாக அமர்ந் திருப்பதையோ வயல்வெளிகளில் இப்போது பார்க் கவே முடியவில்லை. ராஜாளி என்கிற கழுத்தில் வெள்ளை நிறம் கொண்ட (பெருமாள்) பருந்து இப்போது இருக்கிறதா என்றே தெரியவில்லை. தினமும் 11 மணியளவில் எங்கிருந் தாலும் பிரசாதம் எடுக்க பறந்து வரும் பருந்து இப்பொழுது திருக்கழுக் குன்றம் வந்து பிரசாதம் எடுப்பதில்லை என்பதை எண்ணும்போது வருத்தமே மிகுந்து வேதனை வெளிப்படுகிறது. அலைபேசி இப்போது எல்லோர் கைக்கும் வந்து விட்டது. இப்போது 3 லட்சத்து 50 ஆயிரம் அலைபேசி கோபுரங்கள் நாட்டில் எல்லா இடத்திலும் வியாபித்துள்ளது. இன்னும் அலைபேசி கோபுரங் களின் எண்ணிக் கையை அதிகரிக்கத் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. அதில் இருந்து கிளம்பும் மின்காந்த அலைகள் பறவைகளின் உயிரைப் பறிக்கிறது. இனப்பெருக்கத்தை தடுக்கிறது. புற்றுநோயை உருவாக்குகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
புலிகள் பாதுகாப்புத் திட்டம், கிர் சிங்க சரணாலயத்திட்டம், இமயமலை கஸ்தூரி மான் பாதுகாப்புத் திட்டம், ஹங்கல் மான் பாதுகாப்புத் திட்டம், யானை பாதுகாப்புத் திட்டம், பறவைகள் சரணாலயம், முதுமலை சரணாலயம் போன்ற மத்திய மாநில அரசுகளின் முயற்சியின் பலனாக அரியவகை விலங்குகள் அழிந்து வருவதைத் தடுத் தாலும் காடுகள் அழிக்கப்பட்டு அவை வாழும் பகுதி குறைந்து வரையறுக்கப்படுவதும் உணவுக் காகவும் பிற பொருளுக்காகவும், சுடப்படுவதும், இனப் பெருக்கத்திற்கு உதவாத ஆண், பெண் விகிதா சாரமும் விலங்கினங்கள் அழிய காரணங்கள் இன்று விளை நிலங்கள் கட்டடங்களாக மாறி விடுகிறது. சுருங்கி வரும் விவசாய நிலத்திலும் இரசாயன உரங்களை உபயோகித்து அதனால் ஏற்படும் வேதி யியல் மாற்றங்களால் நிலங்கள் அனைத்தும் நஞ்சாகி அதில் விளையும் தானியங்களான நஞ்சையே நாமும் பறவைகளும் உண்டு உயிர் வாழ வேண்டிய கட்டாயம். தோல் சுத்திகரிக்கும் நிலையங்களிலும், சாயப் பட்டறைகளிலும் வெளியேற்றப்படும்கழிவுகள் ஆற்றிலே கலந்து நதியும் நஞ்சாகி வருகின்றது. காடுகளின் பரப்பளவும் குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்படைந்து பூமி வெப்பமயமாகி வருவதை விஞ்ஞானிகள் உணர்த்தி வருகின்றனர். சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
விலங்குகளின் வாழ்வுரிமையைத் துச்சமாக மதிக்கும் பாமரர்கள் ஒருபக்கம்; விலங்கினம் மற்றும் பறவைகளின் இறைச்சிக்காகவும், தந்தம் போன்ற விலையுயர்ந்த பொருளுக்காகவும் வேட்டையாடும் கூட்டம் ஒரு பக்கம்; தீ, புயல் இடி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஒரு பக்கம், காட்டை அழிக்கும் கும்பல் ஒரு பக்கம்; வேறு என்ன வேண்டும் விலங்கினம் அழிய? ஒரு தொலைநோக்கு பார்வையுடன் அரசு செயல்பட்டால் மட்டும் அடுத்த தலைமுறைக்கு சில விலங் கினங்களை புகைப்படத்தில் மட்டுமே பார்க்கும் அவலம் ஏற்படாது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.
-கே.வி.கோவிந்தராஜ், விலங்குகள் நலத்துறை அலுவலர்
(பூவுலகு மார்ச் 2011 இதழில் வெளியானது)
- பறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன?
- சிறுத்தை புலிகள் - சிக்கல் அவிழ்கிறது
- சிறுத்தையும் நாமும் - யாருக்கு யார் எதிரி?
- வாழ்வை இழக்கும் வெளவால்கள்
- காண்டாமிருகங்களின் தாயகங்கள்
- தேனீக்கள் வளர்ப்பில், தேன் உற்பத்தியில்... மர்மங்கள்
- முதலைக் கண்ணீர்
- கங்கை முதலைகள்
- இயற்கை வேளாண்மை - தேனீக்கள் வளர்ப்போம்
- புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..?
- வேங்கை வர்ணங்கள்
- நம்முடன் வாழும் யானைகள்
- இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள்
- பறவைகளுக்கும் பொருந்துமா காதலர் தினம்?
- புலிகள் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?
- மனங்கவரும் பறவைகள்
- நான் ஒரு குட்டி யானை
- பாண்டா கரடிகள்: சீனாவின் சூப்பர் ஸ்டார்
- சுமத்திரா புலிகள் - இன்னும் கொஞ்சமே மிச்சம் இருக்கு
- வீழ்ந்து கொண்டிருக்கும் வரையாடுகள்