கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- எம்.ஆர்.ராஜகோபாலன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்றுதானே கேட்கிறீர்கள்? உயரம் என்று எடுத்துக் கொண்டால் 16 முதல் 98 அடி வரை தான் இருக்கும். செக்வோவியா - ஆஸ்திரேலிய நாட்டு யூக்கலிப்டஸ் மரங்கள் 400 அடிவரை உயரமானவை. மரத்தின் குறுக்களவைக் (விட்டம்) கணக்கிட்டால் 23முதல் 36 அடிவரை உள்ளது. பாவோபாப்தான் வேறு எந்த மரமும் கிடையாது. அதற்கிணையாக மரத்தின் சுற்றளவு 154 அடி வரை உள்ளது. இந்தப் பார்வையில் பார்க்கும்போது பாவோபாப் மரங்கள்தான் உலகின் மிகப் பெரிய மரங்கள்.
பேரதிசயம் என்னவென்றால் அடிமரத்தின் உட்பகுதி மூங்கில்போல் வெற்றிடம் கொண்ட தாகவும் நீர் நிறைந்தும் இருக்கும். எவ்வளவு தண்ணீர் தெரியுமா? பெரியதோர் பாவோபாப் மரத்தின் கொள்ளளவு 1,20,000 லிட்டர்கள்! மேலும் கடும் கோடைக் காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட ஆவியாக வெளியேறாதவாறு பாதுகாப் பாக வைக்கப்பட்டிருக்கும். தண்ணீரில் வேறு பயனுள்ள சத்துக்களும் உண்டு. வறட்சிக் காலங் களில் மடகாஸ்கர் - ஆப்பிரிக்க நாட்டு ஏழை மக்கள் இதன் நீரைப் பருகிப் பயன்பெறுவர். மேல்மரம் காய்ந்துவிட்ட நிலையில் பல கிராமங் களில் அடிமரத்தை நீர்த்தேக்கத் தொட்டியாகப் பயன்படுத்துகின்றனர்.
லத்தீன் மொழியில் இதை ஆடன்சோனியா என்று அழைக்கிறார்கள். இந்த மரத்தை மடகாஸ் கர் நாட்டில் முதன் முதலாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஆடன்சன் என்ற பெயர் கொண்ட விஞ் ஞானி கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்தி னார். அவரை கௌரவிக்கும் விதத்தில் இம் மரத்திற்கு லத்தீன் மொழியில் ஆடன்சோனியா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆடன்சோனியா அதாவது பாவோபாப்பில் ஏழுவகை (ஸ்பீஷிஸ்) மரங்கள் உண்டு. இவற்றில் ஆறுவகை மரங்கள் மடகாஸ்கர் நாட்டிற்குரியவை. இந்த ஆறில் ஒரு வகை மட்டும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காணப் படுகிறது. ஏழாவது வகை ஆஸ்திரேலியா நாட்டிற்குரியது.
பாவோபாப் என்பது இந்த வகை மரங்களின் பொதுவான பெயர். இம்மரத்தை போஆப், போவாபோவா, தலைகீழ் மரம், குரங்கு-ரொட்டி மரம் என்றெல்லாமும் அழைக்கின்றனர். தென் ஆப்பிரிக்காவின் லிம்போமா மாகா ணத்தில் உள்ள க்ளென்கோபர்வோபாப் உலகின் மிகப் பெரிய மரமாகக் கருதப்படுகிறது. இதன் சுற்றளவு 47 மீட்டர் (154 அடி). சமீப காலத்தில் இம்மரம் இரண்டாகப் பிளந்து விட்டது. தென் ஆப்பிரிக்காவின் சன்லாண்ட் பகுதியில் அமைந் துள்ள பாவோபாப் மரம் இப்போது உலகின் மிகப்பெரிய மரமாகக் கருதப்படுகிறது. இதன் குறுக்களவு 10.64 மீட்டர், சுற்றளவு 33.4 மீட்டர் (130 அடி).
பல்வேறு பாவோபாப் மரங்கள் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தவையாகக் கருதப்படுகின்றன. ஏனைய மரங்களில் அவற்றின் வயதைக் குறிக்கும் வளர்ச்சி வட்டங்கள் (க்ரோத் ரிங்ஸ்) போல பாவோபாபில் கிடையாது. ஆனால் கார்பன் டேட்டிங் முறையில் இவற்றின் வயதைக் கணிக்க இயலும்.
மடகாஸ்கர் நாட்டின் காடுகளில் ஆடன் சோனியா மடகாஸ்கரியன்சிஸ் மற்றும் ஆடன் சோனியா ரூப்ரோஸ் ட்ரைப்பா வகை மரங்கள் காணப்படுகின்றன. கடற்கரையை ஒட்டிய பகுதி களில் ஆடன்சோனியா டிஜிட்டாட்டா வகை மரங்கள் வளர்கின்றன. இம்மரத்தின் பல்வேறு பாகங்கள் பயன்களைத் தரவல்லன.
இலைகள்: இவற்றைச் சமைத்துக் கீரை வகை யைப் போல் சாப்பிடலாம். ஆப்பிரிக்க நாடு களாகிய மலாவி, ஜிம்பாப்வே, சஹேல் நாடுகளில் இலை பச்சையாகவும், உலர வைக்கப்பட்ட இலை களைப் பொடி செய்தும் உணவாக உண்கின்றனர். நைஜீரியா நாட்டில் பாவோபாப் இலைகளை கூக்கா என்று குறிப்பிடுகிறார்கள். இலைகளி லிருந்து கூக்கா சூப் தயாரித்து சாப்பிடுகிறார்கள்.
பழம்: ஆரஞ்சுப் பழத்தைக் காட்டிலும் கூடு தலான அளவில் ‘சி’ வைட்டமின் நிறைந்தது பாவோபாப் பழம். கால்ஷியம் சத்து பசும்பாலைக் காட்டிலும் கூடுதல். குரங்கு-ரொட்டி அல்லது புளிக்கும் பழம் என்று அழைக்கப்படும் இப்பழத் தின் விதை நீக்கிய சதைப் பகுதியை அப்படியே சாப்பிடலாம். சிலர் பழத்தின் சதைப் பகுதியைப் பாலிலோ கஞ்சியிலோ கலந்தும் சாப்பிடு கின்றனர். மலாவி நாட்டில் இப்பழத்திலிருந்து பழச்சாறு தயாரிக்கப்படுகிறது. இப்பழத்தை ஜிம் பாப்வே நாட்டின் மாவுயு என்று அழைக்கின்றனர். பழம் அப்படியே சாப்பிடப்படுகிறது. இப்பழத்தி லிருந்து மருந்தாகப் பயன்படும் களிம்பும் தயாரிக் கப்படுகிறது. பழத்தில் சர்க்கரை தூவி வண்ணம் (பெரும்பாலும் சிவப்பு) கொடுத்து இனிப்பு அல்லது புளிப்பு மிட்டாயாகவும் விற்கப்படுகிறது. இந்த மிட்டாய்க்கு உபுயு என்று பெயர்.
விதைகள்: சூப்பை கெட்டியாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஊறவைக்கப்பட்ட விதைகளை வறுத்துச் சாப்பிடுகின்றனர். விதை களிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு சமை யலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மரத்திலிருந்து நார், வண்ணம் மற்றும் எரிபொருள் கிடைக் கின்றன. இதன் நார் மிகவும் கெட்டியானது.
காய வைக்கப்பட்ட பழத்தின் கூழ் அப்படியே உணவாக உண்ணப்படுகிறது - அல்லது கஞ்சி சற்று ஆறிவரும் போது அத்துடன் கலந்து சாப் பிடப்படுகிறது. இப்படிச் செய்வதால் அதிலுள்ள வைட்டமின்கள் அழிவதில்லை. இதைப் பொடி செய்தும் ஜூஸ் தயாரித்துச் சாப்பிடலாம். டான்சானியா நாட்டில் கரும்புச் சாறுடன் பாவோபாப் பழச்சாறைக் கலந்து பீர் தயாரிக் கிறார்கள்.
காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து வைத்தால் பழத்தின் கூழ் வெகு காலம் கெடாமல் இருக்கும். இதிலிருந்து குளிர் பானங்கள் தயாரிக் கலாம். சோடியம் மெட்டா சல்பைட் தூளைப் பயன்படுத்தி கூழைக் கெடாமல் பாதுகாக்க இயலும். கூழைத்தூள் பக்குவத்தில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப் போகாதவாறு பாது காப்பாக வைக்கலாம்.
சமீப காலம் வரை ஐரோப்பிய யூனியனில் பாவோபாப் பழ விற்பனை தடை செய்யப் பட்டிருந்தது. 2008-ஆம் ஆண்டு ஜூலை முதல் பாவோபாப்பின் உலர்த்தப்பட்ட பழக்கூழ் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. லாபநோக்கமில்லாத ஒரு தொண்டு நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் 25 லட்சம் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் பாவோபாப் பழம் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் பாவோபாப்: ஆஸ்தி ரேலியா நாட்டில் பாவோபாப் பழங்குடி மக் களால் உணவுக்கும் தண்ணீருக்கும் பயன்படுத்தப் பட்டு வந்தது. இலைகள் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டன. சுரைக்காய் போல் கெட்டியான தோல் கொண்ட பழத்தின் மீது சாயம் பூசி அலங் காரத்திற்கும் பயன்படுத்தினர். சிறிய துண்டுகளை ஆபரணமாகவும் அணிந்து வந்தனர்.
வேறு சில தகவல்கள்:
1. தண்ணீர்த் தொட்டி - வீடு - மதுக்கடை, சிறைச்சாலை:
பாவோபாபின் அடிமரம் சூடான் நாட்டில் தண்ணீர்த் தொட்டியாக (வாட்டர் டாங்க்) பயன் படுத்தப்படுகிறது. பாவோபாப் மரத்தைச் சிலர் வசிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். எர்ன்ஸ்ட் ஹெக்கல் என்ற பெயர் கொண்ட நூலாசிரியர் பாவோபாப் மரம் 5, 000 ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியது என்கிறார். தென் ஆப்பிரிக்காவின் லிம்போப்போ பகுதியில் உள்ள ஸன்லாண்ட் பண்ணையில் பெரியதோர் பாவோபாப் மரத் தைக் குடைந்து 72 அடி உயரம் 155 அடி சுற்றளவு கொண்ட இடத்தில் மதுபானக் கடை வைக்கப் பட்டுள்ளது. கார்பன்டேட்டிங்படி இம்மரம் 6,000 ஆண்டு தொன்மையானது என்று கணிக்கப் பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி நகரருகே இருந்த பெரியதோர் பாவோபாபின் அடிமரத் தைச் செதுக்கிச் சிறைச்சாலையே உருவாக்கப் பட்டிருந்தது. இது நிகழ்ந்தது 1890களில். இன்றும் அந்த மரம் ஒரு அரும் பொருட்காட்சியாக (மியூசியம்) மாறி மக்களைக் கவர்ந்து வருகிறது.
இதன் விசித்திரமான தோற்றத்தின் காரண மாக அரபு நாடுகளில் இப்படி ஒரு மரபுவழிக் கதை உண்டு. ஒரு பேய் இந்த மரத்தை வேருடன் பிடுங்கித் தலைகீழாக - அதாவது கிளைகளை பூமிக்கடியிலும் வேர்ப்பகுதியைப் பூமிக்கு மேலாகவும் நட்டு விட்டதாம்.
அமெரிக்க நாட்டிலும் ப்ளோரிடா போன்று சற்று வெப்பமான பகுதிகளில் பாவோபாப் மரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவின் மலைப் பகுதிகளில் இம்மரம் காணப்படுகிறது.
இந்தியாவில் பாவோபாப்: இந்தியாவில் கர் நாடகா மாநிலத்தில் சாவனூரில் 50 முதல் 60 அடி வரை சுற்றளவு (14-18மீட்டர்) கொண்ட மூன்று மரங்கள் உள்ளன. இந்த மரங்களும் 5,000 ஆண்டு தொன்மையானவை.
பெங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற லால் பாக் தோட்டத்தில் பாவோபாப் மரத்தைக் காண முடியும். இந்தியாவின் வேறு பகுதிகளிலும் இம் மரம் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு. சரியான தகவல் நம்மிடம் இல்லை.
தமிழகத்தில் வனத்துறையினர் கொடுத்த தகவல்படி ராஜபாளையத்தில் ஒரு மரம் உள்ளது என்று சொல்கின்றனர். வைகை அணை அருகே அமைந்துள்ள வனத்துறைப் பயிற்சிக் கல்லூரியின் தோட்டத்தில் 7 வயதுள்ள பாவோபாப் மரங்கள் இரண்டு உள்ளன. ஒரு மரத்தின் புகைப்படத்தை இங்கே தருகிறோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சி மடத்தில் பழைய மரம் ஒன்று உள்ளது. சென்னை நகரைப் பொருத்தவரை அடையாறில் உள்ள பிரசித்தி பெற்ற தியோசாபிக்கல் சொசைட் டியில் இரண்டு மரங்கள் உள்ளன. ஆந்திர மஹிளாசபா மற்றும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தலா ஒரு மரம் உள்ளது. நந்தனம் ஹவுசிங் போர்ட் அலுவலகத்திற்குப் பின்புறம் ஒரு மரம் உள்ளது. இன்னும் பல இடங்களில் இம்மரம் இருக்கக் கூடும். நமக்குத் தகவல் இல்லை.
இந்த மரத்தின் பல்வேறு தோற்றங்கள்பற்றி அறிய விரும்புவோர் இண்டர்நெட் வசதி இருந்தால் விக்கிப்பீடியாவில் காணலாம்.
(உங்கள் நூலகம் டிசம்பர் 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- மலையமான்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நான்மணிக்கடிகை என்பது ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிறந்த நூல். இதிலுள்ள ஆறாம் பாடல் நல்ல கருத்தைச் சொல்கிறது. கள்ளிச் செடியின் வயிற்றில் உயர்ந்த பொருளான அகில் தோன்றும். மான் வயிற்றில் மணம் வீசக்கூடிய அரி தாரம் பிறக்கும். கடலிலுள்ள சிப்பியில் ஒளி முத்து உருவாகும். இப்படி, சாதாரண உயிரினங் களில் புகழ் மிகுந்த - உயர்வுடைய - பொருள் கள் பிறக்கும். ஆகவே, மிகச் சிறந்த மனிதர் எங்கே தோன்றுவார் என்பதை யார் அறிவார்? என்று அந்தப் பாடல் அழகாக அறிவிக்கின்றது. இங்கே கூறப்பட்ட அரிதாரம், இன்று கஸ்தூரி என்று சொல்லப்படுகிறது. இது மானின் வயிற்றில் இருந்து கிடைக்கிறது என்பதை, இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.
இந்தக் கஸ்தூரி தரும் மானைப் பற்றி வடபுல இராமாயணம் குறிப்பிடுகிறது. காட்டில் இராமனுடன் இருந்த சீதையைக் கவர்வதற்கு இராவணன் விரும்பினான். அவன் மாரிசனை அழைத்தான். மான் வடிவம் கொண்டு சீதையின் முன்னால் செல்லும்படி சொன்னான். மாரீசன் அப்படியே செய்தான். அவன் மேற்கொண்ட உருவம் கஸ்தூரி மான் என்று அந்த நூல் அறி விக்கின்றது.
இயற்கையின் படைப்புகளில் மானும், மயிலும் அழகின் சிகரங்கள். புள்ளி மான், கலைமான், கடமை மான் முதலிய பலவகை மான்கள் காடுகளில் உலவுகின்றன. கஸ்தூரி மானும் குடும்பத்திற்கு உரியது. இது உருவில் சிறியது. இதன் உயரம் 50 செமீ அளவு இருக்கும். இதன் எடை ஏழேகால் கிலோ. இதன் தலை சிறியதாய் இருக்கும். இதன் உடல் பகுதி பெரியதாய்த் தோன்றும். இதன் உடல் அமைப்பு ஏறத்தாழ முயலைப்போன்றிருக்கும். இதன் தலை வலிமை குறைந்தது. இதன் வாய் வினோதமானது. இதன் உடலில் உள்ள நீண்ட மயிருக்குள் அது அடங்கி இருக்கும். இதன் காது நீள் வட்ட வடிவில் இருக் கும். இதன் உடலில் மயிர் அடர்ந்திருக் கும். அது பழுப்பு நிறமாக அமைந் திருக்கும். இந்த மான் நீண்ட ஓய்வுக்குப் பின்பு தன் உடலைக் குலுக்கும். அப்போது அதன் உடலிலிருந்து மயிர் உதிரும். பொதுவாக மானின் உடலில் கொம்புகள் உண்டு. ஆனால், கஸ்தூரி மானின் தலை யில் கொம்பு வளர்வதில்லை. காட்டு மானின் தலைப்பகுதியில் முகச் சுரப்பு உண்டு. அப்படிப்பட்ட முகச்சுரப்பு கஸ்தூரி மானிடம் இல்லை. ஆனால் மற்ற வகை மான்களிடம் இல்லாத பித்தப் பையை இது பெற்றுள்ளது. தற்காப்புக்காக மான், கொம்பைப் பயன் படுத்தும். கொம்பு இல்லாத கஸ்தூரி மான், அதற்குப் பதிலாகக் கூர்மையான கோரைப் பற்களைப் பெற்றுள்ளது. இந்தப் பற்களே இதற்கு ஆயுதமாகப் பயன்படுகின்றது. எல்லா மானின் வயிற்றிலும் நான்கு உள் பிரிவுகள் உள்ளன. கஸ்தூரி மானின் வயிற்றிலும், இத்த கைய நான்கு உள்பிரிவுகளும் உள்ளன. இந்த வயிற்றமைப்புக் காரணமாகவும் முகத்தோற்றம் காரணமாகவும் இது மான் குடும்பத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. மற்ற வகை மான்களைப் போலவே, இது, வயிற்றிலுள்ள புல் உணவை, வாய்க்குக் கொண்டு வருகிறது. அசை போடுகிறது. இது மலைப் பாங்கான பகுதியில் வாழ்கிறது. அதற்கு ஏற்றபடி இது கால்களைப் பெற்றுள்ளது. இதன் காலிலுள்ள குளம்புகள் வலிமையானவை. கூர்மையானவை. வழுக்குப் பாறைகள் - பனி படர்ந்த பெருங்கற்கள் - ஆகியவற்றின் மேல் ஏறுவதற்கு ஏற்றபடி இதன் கால்களில் குளம்பு கள் அமைந்துள்ளன.
ஆண்சிங்கம் பிடரி மயிரைப் பெற் றுள்ளது. ஆண் யானை வலிமையும், நீளமும் உடைய தந்தங்களைக் கொண்டுள்ளது. ஆண் மயில் நீளமான அழகிய தோகையுடன் விளங்கு கிறது. இவற்றைப் போலவே, ஆண் கஸ்தூரி மானும் தனிச் சிறப்பு ஒன்றைப் பெற்றுள்ளது. அதனுடைய வயிற்றின் அடிப் பாகத்தில் ஒரு பை உறுப்பு உள்ளது. அதில் சுரப்பி ஒன்று இருக்கிறது. இந்தச் சுரப்பி வாசனை நீர்ப் பொருளைச் சுரக்கிறது. அதுவே கஸ்தூரி யாகும். இந்தக் கஸ்தூரியைச் சுரப்பதால், இது கஸ்தூரி மான் என்ற பெயரைப் பெற்றது.
கஸ்தூரி என்பது என்ன? இது நறு மணம் வீசும் பொருள். இது சிவப்பும், பழுப்பும் கலந்த நிறம் கொண்டது. மனிதர்கள் கஸ்தூரி மானைக் கொல்வார்கள். கஸ்துரி சுரப்பியைத் தனியாகப் பிரித்தெடுப்பார் கள். அதை உலர வைப்பார்கள். இதிலிருந்த நீர்ப்பொருள், சிறு சிறு மணல் போன்ற வடிவம் பெறும். இவற்றைக் கொண்டு வாசனைத் திரவியம் தயாரிப் பார்கள். இது மேலும் பலவிதங்களில் பயன்படுகிறது. தமிழகத்தில், இது சன்னி பாதாதிகேச ரோகங் களுக்குத் தயாரிக்கப்படும் மருந்தில் பயன் படுத்தப்படுவதாக அபிதான சிந்தாமணி என்ற தமிழ்க் கலைக்களஞ்சியம் கூறுகிறது. பாம்புக் கடி நஞ்சைப் போக்கும் மருந்து தயாரிப்பதிலும் இதன் பங்கு உள்ளது. கஸ்தூரி மாத்திரை என்ற சித்த மருத்துவ மருந்துகளில் இதன் பெயர் இடம் பெற்றுள்ளது. கஸ்தூரிப் பொருளில் ஐந்து வகை உள்ளன என்றும், அவை, கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என்றும் தமிழ் லெக்சிகன் அகராதி அறிவிக் கின்றது.
கஸ்தூரி மான்கள் இமயமலைப் பகுதி யிலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும் வாழ்கின்றன. மான்கள் சமுதாய உணர்வு டையவை. வானில் தவழும் மேகக்கூட்டத்தைப் போல் சேர்ந்து வாழும் இயல்புடையவை. ஆனால், கஸ்தூரி மான்கள் தனியாக இருக்கும் நிலா போன்றவை. இவை கூட்டமாகச் சேர்ந்து வாழ்வதில்லை. சில சமயம், ஆண் கஸ்தூரி மான், தன் துணை குட்டியுடன் ஒன்றாக இருப்பதும் உண்டு.
கஸ்தூரி மான்கள் மலைப் பாறைகள் மேல் தாவிச் செல்லக்கூடியவை. சாய்வான மரத்தின் மீதும் ஏறி நடக்கக்கூடியவை. இவை புல் தின்னும். தழையையும் மெல்லும். குருத்தைக் கடித்துண்ணும். வேர்களையும் உணவாகக் கொள்ளும். அவசரமாகத் தின்ற தீனியை அசை போடும். சிறுத்தை, தன் வாழிடப் பரப்பை வரையறுத்துக்கொள்ளும். அதைப் போலவே, ஆண் கஸ்தூரி மானும் தான் வாழும் இட அளவை வகுத்துக் கொள்ளும். தன் உடலின் சுரப்பி ஒன்று வெளிப்படுத்தும் நீர்ப்பொருளை வாழிட எல்லையிலுள்ள பாறை, செடியின் கிளை முதலியவற்றில் தடவி வைக்கும். இதன் மூலம் மற்ற மான்களுக்குத் தனக்குரிய இடத்தை அறிவிக்கும்.
மலை ஆடுகள், மலைப்பாங்கான இடத்தில் வாழும். சில சமயம் மனத்தை உலுக்கும் சத்தம் அங்கு எதிரொலிக்கும். வலிமை கொண்ட இரண்டு ஆண் ஆடுகள் தங்கள் தலைகளை மோதிச் சண்டை போடுவதன் விளைவாக அந்தப் பேரொலி அந்தப் பகுதியில் எதிரொலிக்கும். பெண் ஆட்டுடன் இணைவதற்காக அப்போராட்டம் நடக்கும். இப்படிப்பட்ட மோதல் சண்டை ஆண் கஸ்தூரி மான்களிடமும் உண்டு. இவற்றுக்குக் கொம்பு இல்லை. ஆனாலும் கடுமையான போட்டி உண்டு. இவை தம் கோரைப்பற்களை ஆயுதமாகப் பயன் படுத்தும். ஆண் கஸ்தூரி மான்கள் கழுத்தை வளைக்கும். எதிரியின் கழுத்தில் தம் கூர்மை யான - நீளமான - கோரைப் பற்களை ஊன்றிப் புண் ஏற்படுத்தப் பெரு முயற்சி செய்யும். ஆழ மிகுதி காரணமாக இரத்தம் வரும். வலி தாங்க முடியாத ஆண் மான் தோல்வியை ஒப்புக் கொள்ளும். ஒதுங்கிச் செல்லும். இப்படிப்பட்ட போராட் டம் காரணமாகப் பல ஆண் கஸ்துரிமான் களின் கழுத்தில் வடுக்கள் காணப்படும். சில சயமம் கழுத்தில் ஏற்பட்ட பெரிய புண்ணின் விளைவாக ஆண் மான் இறந்து விடுவதும் உண்டு.
பெண் கஸ்தூரி மானின் வயிற்றில் கரு ஐந்து மாதங்கள் வரை வளரும். பின்பு அது ஒரு குட்டி போடும். சில சமயம் அது இரண்டு குட்டிகளை ஈனுவதும் உண்டு. தாய் மான், குட்டியைப் பாறைச் சந்தில் மறைத்து வைக்கும். அது உணவு தேடப் போகும். குறிப்பிட்ட நேரத்தில் அது குட்டி இருக்குமிடத்திற்கு வரும். அதற்குப் பால் ஊட்டும். நான்கு வாரங்கள் சென்ற பிறகு குட்டி மான் நடக்கும் ஆற்றலைப் பெறும். பின்பு அது தாயைப் பின்தொடரும். ஓராண்டு வரை அது தாயின் பாதுகாப்பில் இருக்கும். அது முழு வளர்ச்சி பெறும். அதற்குப் பிறகு தாயிடமிருந்து பிரியும். தன் வாழ்க் கையை அமைத்துக்கொள்ளும்.
கஸ்தூரி மானுக்கு இயற்கையான பகை விலங்குகள் உண்டு. நரி முதலியவை அதை வேட்டை ஆடும். ஆனால், மனிதன் தான் அதன் கொடிய பகைவன். கஸ்தூரிக்காக அவன், அந்த அழகிய மானை அழிக்கிறான். அநியாயமாகக் கொல்கிறான்.
கஸ்தூரி வாசனைப் பொருளைத் தரும் மற்றொரு விலங்கு கஸ்தூரி மாடு. கிரீன்லாந்து, கனடாவின் வட பகுதி முதலிய பனிபடர்ந்த இடங்களில் இது வாழ்கிறது. இது நான்கடி உயரம் இருக்கும். இதன் உடலில் மிகவும் அடர்த்தியான மயிர் உள்ளது. அம்மயிருக்கு அடிப்புறத்தில் மென்மையான மயிர் உள்ளது. கோடைக் காலத்தில், குளிர் தாங்கும் போர்வை போன்ற இந்த மென்மையான மயிர், கஸ்தூரி மானுக்குத் தேவைப்படாது. ஆகவே, அது அந்த மென்மையான மயிர்களை உதிர்த்து விடும். அப்பகுதியில் வாழும் மக்கள் அதைத் திரட்டு வார்கள். ஆடையாக நெய்து விடுவார்கள். கஸ்தூரி மாட்டின் முகம் அச்சமூட்டுவதாக இருக்கும். அமெரிக்க நாட்டின் பைசன் என்ற காட் டெருமையின் முகத்தை நினைவூட்டுவ தாக இருக்கும். இதன் கண்களில் முரட்டுத் தனம் பொங்கும். இதற்குச் சிறிய கொம்புகள் உண்டு. அது சற்று முன்னோக்கி வளைந் திருக்கும். மனிதர் சிலரின் முகத்தில் முடுக்கி விடப்பட்ட மீசை வீரத்தை வெளிக்காட்டும் சின்னம் போல் காணப்படுவதுண்டு. கஸ்துரி மாட்டின் வளைந்த கூர்மையான கொம்புகள், அந்த மீசைகளைப் போன்று தோன்றும். இந்த மாட்டின் சிறிய கொம்புகள் பகை உயிரிக்கு அச்சமூட்டும்.
இந்தக் கஸ்தூரி மாடு கடுங்குளிரையும் தாங்கக்கூடியது. ஒரு டிகிரி பாரன் ஹீட்டுக் கும் கீழாக கழித்தல் நாற்பது டிகிரி (-400 ) குளிரிலும் இது உயிர் வாழும். பனிப்புயலை யும் எதிர் கொள்ளும். அப்போது இது, பனிக் கட்டித் தரையில் படுத் துக்கொள்ளும். கஸ்தூரி மானைப் போல் இது தனித்து வாழாது. காட்டு மானைப் போல் கூட்டமாக வாழும். துரத்தும் சிறுத்தையைக் கண்டு, காட்டு மான்கள் உயிர் தப்புவதற்காகப் பாயும். தாவி ஓடும்.ஆனால், கஸ்தூரி மாடு அப்படிப்பட்டது அல்ல. பகை உயிரி வருவ தைக் கண்ட தும் ஒன்று கூடும். அரை வட்டக் கோட்டின் அமைப்பில், பகை உயிரின் முன்னால் நெருக்க மாக இருக்கும். தாக்கப் போகும் நிலையில் தலை தாழ்த்தி நிற்கும். பகை உயிரியை முறைக்கும். இதைக் கண்ட பகை உயிரி பின் வாங்கும். அஞ்சி ஓடும்; சில சமயம், அரை வட்ட அமைப்பிலுள்ள ஒரு கஸ்தூரி மாடு, பகை உயிரியை நோக்கி முன்னேறும். உருமு வது போன்று முழங்கும். இந்நிலையில் கண்ணிற்குக் கீழிருக்கும் சுரப்பி ஒன்றை பின்னங்காலால் உரசும். அதிலிருந்து நீர்ப் பொருள் வெளிவரும். அது கீழே தரையில் விழும். அது ஒருவித வாசனை கொண்ட நீர்ப் பொருள். பூமியில் விழுந்த அது ஒரு குறிப் பைப் பகை உயிருக்கு உணர்த்தும். ‘இது எங்கள் இடம். இங்கே நீ வராதே’ என்று மறை முகமாகக் கஸ்தூரி மாட்டின் கருத்தை அறிவிக் கும். அந்த எச்சரிக்கைக் குறிப்பைப் புரிந்து கொண்ட பகை விலங்கு பின் வாங்கிச் சென்று விடும்.
பெண் கஸ்தூரி மாடு ஒரு கன்று ஈனும். இது தன் கன்றின் மேல் முழுக் கவனம் செலுத்து வதில்லை. வீட்டுப் பசு, தன் கன்றை அக்கறை யோடு காப்பாற்றும். ஆனால், கஸ்தூரி மாடு ஓடும்போது, தன் கன்று தன்னைப் பின்பற்றி வருகிறதா என்று கூட கவனிப்பதில்லை. இதன் விளைவாகக் கன்று தாயை விட்டுப் பிரிந்து விடும். அது பால்குடிக்கும் வாய்ப்பைப் பெறாமல் இறக்கும். அல்லது பனிப்படல நரி அதைக் கொன்று தின்றுவிடும். இந்தக் கஸ்தூரி மாடு முன்பு வட அமெரிக்காவில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தது. பேராசை கொண்ட மனிதன் , இந்த மாடுகளை அழித்துவிட்டான். இன்று அங்கு ஒரு கஸ்தூரி மாடு கூட இல்லை. சில நல்லவர்கள் உலகின் வட பகுதியில் ஒரு சில கஸ்தூரி மாடுகளைக் கண்டார்கள். அவற்றைக் கொண்டு வந்தார்கள். ஸ்கேண்டினேவியா, இரஷ்யாவின் வடக்குப் பகுதி ஆகிய இடங்களில் அவற்றை விட்டார்கள். அந்தப் புகலிடங் களில் அவை பாதுகாப்புடன் வாழ்கின்றன.
கஸ்தூரி போன்ற வாசனைப் பொருள் கொண்ட வேறு சில உயிரினங்களும் உள்ளன. கஸ்தூரி வாத்து என்பது அவற்றில் ஒன்று. இது அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் வாழ்கிறது. எனவே, அந்தக் கண்டங்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. கஸ்தூரிப் பூனை என்பது மற்றொரு விலங்கு. இதுவும் அமெரிக்காவில் உள்ளது. ஒரு வேளை இது தமிழ்நாட்டின் புனுகுப்பூனை போன்ற விலங்காக இருக்கலாம். கஸ்தூரி எலி என்று கூட ஓர் உயிரி உள்ளது. இது வும் அமெரிக்காவில் உள்ளது. இதன் உடம்பிலிருந்து ரோஜாப் பூவின் வாசனை வெளிப்படுகிறது.
தமிழ்நாட்டில், மரம், செடி இனத்தில் கஸ்தூரி என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு வழங்கப்படுகிறது. கஸ்தூரி எலுமிச்சை என்று ஒரு மரம் சொல்லப்படுகிறது. இது சீனக் கொளுஞ்சி என்று அகராதி அறிவிக்கிறது. கஸ்தூரி மல்லிகை என்பது ‘நறுமணம்’ வீசும் பூவாகும். கஸ்தூரி மஞ்சள் என் றும் இங்கே சொல்லப்படு கிறது. கஸ்தூரி மரம் என்று ஐரோப்பாவில் ஒரு வகை மரம் உள்ளது.
(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)
- விவரங்கள்
- வி.கீதா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே’ என்றும், ‘காக்கை, குருவி எங்கள் ஜாதி’ என்றும், கவிதை பாடி ஐந்தறிவு உயிரினங்களைச் சொந்தம் கொண்டாடினான் மகாகவி பாரதி. புத்தனும், காந்தியும், அகிம்சையை வாழ்க்கை முறையாக போதித்த நாடு இது. இவர்களின் வழியில் விலங்குகளின் நலனைப் பற்றிக் கொஞ்சம் சிந்திப்போம்.
நமது நாட்டில் விலங்குகள் நல இருவாரம் ஜனவரி 14-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. விலங்குகள் நலன் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவதும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதும்தான் இதன் நோக்கமாகும்.
நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளின் மீது அக்கறை செலுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் .இந்த விலங்குகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்க்கைக்கு உதவி செய்கின்றன. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கின்றன. தாவரங்களுக்கு உறுதுணையாக உள்ளன.
இந்த வாயில்லா ஜீவன்களுக்கு நம்மால் நிச்சயம் உதவ முடியும், எப்படி? இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள இந்தக் குறிப்புகள் நாம் செய்ய வேண்டிய பணிகளை நினைவுபடுத்துகின்றன.
• உங்கள் பகுதியில் நோய் வாய்ப்பட்டிருக்கும் விலங்குகளை, விலங்குகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம். ஆதரவற்ற தெரு நாய், பூனைகளைத் தத்தெடுத்து உங்கள் வீட்டில் வளர்ப்பதன் மூலம் ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம் .
• ஆதரவற்ற விலங்குகளுக்கான ஒரு சிறு உறைவிடத்தை உருவாக்கி அவைகளுக்கான உணவளித்து கவனித்து வரலாம்.
• பறவைகளுக்கு உணவு, குடிநீர் அளிப்பதற்காக சிறு, சிறு மண்குவளைகளை உங்களின் வீட்டுக்கு அருகில் ஆங்காங்கே வையுங்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அவர்கள் விரும்பும் போது உணவுத் தானியங்களையும், நீரையும் இந்த குவளையில் வைக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள்,
• ஒரு விலங்கு சிரமப்படும் போது அதற்கு எப்படி உதவுவது என்று உங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு முதலுதவி வகுப்புகளை நடத்தலாம்.
• பறவைகளுக்குப் புகலிடமாக உள்ள வேப்பமரம் போன்ற பல்வேறு மரக்கன்றுகளை அதிக எண்ணிக்கையில் நட்டு வளர்க்கலாம்.
• பிளாஸ்டிக் கவர்களுக்கு எதிராக உங்கள் பகுதி மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யுங்கள். பிளாஸ்டிக் பைகள் தெருக்களில் அலட்சியமாக எறியப்படுவதால் பசுக்களும், எருமைகளும் அவற்றைச் சாப்பிட்டு இறந்து போகின்றன. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாகத் துணிப் பையைப் பயன்படுத்தச் சொல்லி மக்களிடமும், வியாபாரிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
• ஆதரவில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியும் பல குதிரைகளுக்கும், கழுதைகளுக்கும் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. இந்த விலங்குகளுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யலாம். இவைகளுக்கு உணவையும், மருந்தையும் தொடர்ந்து அளிக்கலாம் .
• பள்ளிகளில் விலங்குகளை அறுத்துக் கூறுகளாக்கி ஆராய்ச்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். .உயிருள்ள விலங்ககளுக்குப் பதிலாக கணினியில் தவளை, எலி, மண்புழு, கரப்பான்பூச்சி, புறா ஆகியவற்றின் ரத்த நாளங்கள், ஜீரண அமைப்பு, பிற உடல் பாகங்களை உருவாக்கி மாணவர்களுக்குக் கற்றுத் தரலாம் . பள்ளிகள் இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உதவியை நாடலாம் .
• சாலையோரங்களில் அடிபட்டும், நோயுற்றும் உள்ள விலங்குகளைக் காப்பதற்காகப், பல்வேறு இடங்களில் சிறு முதலுதவி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.
• தெருவோர விலங்குகளுக்கு உங்களால் முடிந்த உணவளிக்கலாம். அருகில் உள்ள இறைச்சிக் கூடங்களுக்குச் சென்று, விலங்குகளை சித்தரவதை செய்யாமல் மனிதாபிமான முறையில் கொல்வது குறித்து அறிவுறுத்தலாம். இறைச்சிக் கூட விதிகள் பற்றிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்துங்கள்.
• மிக இளம் வயதில் குழந்தைகளை இறைச்சிக் கூடப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தடுக்க வேண்டும்,
• பால் கறக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், மாடுகள், எருமைகளுக்கு ஆக்சிடாக்சின் ஊசி போடக்கூடாது. இது உணவு, மருந்து கலப்படத்தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்ட விரோதமான செயலாகும்,. இதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
• தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம், ராபிஸ் நோய்த் தடுப்புத் திட்டம் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் உங்கள் பகுதிகளில் செயல்படுத்தலாம்,
நமது நாட்டின் பாரம்பரியத்தில், கலாச்சாரத்தில் அகிம்சைக்கு முக்கிய இடமுண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51 ஏ பிரிவில், வனங்கள், ஏரிகள், வன உயிரினங்கள் ஆகியவை உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதும், உயிருள்ள ஜீவன்களிடம் பரிவு காட்டுவதும் இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறப்பட்டுள்ளது.
விலங்குகளுக்கு எதிரான சித்தரவதைத் தடுப்புச் சட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்த மிகச் சில உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1890-ம் ஆண்டு இச்சட்டம் நமது நாட்டில் கொண்டு வரப்பட்டது. 1960-ல் இச்சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. கொடுமைகள், சித்தரவதைகளில் இருந்து விலங்குகளைப் பாதுகாப்பதற்காகப் பல்வேறு விதிமுறைகள் இதில் படிப்படியாக சேர்க்கப்பட்டன.
மத்திய அரசு 1962-ம் ஆண்டில் இந்திய விலங்குகள் நல வாரியத்தை ஏற்படுத்தியது. இந்த வாரியம் 28 உறுப்பினர்களுடன், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
விளையாட்டுகள், பொழுதுபோக்கு, விளம்பரப் படங்கள், திரைப்படங்கள், சர்க்கஸ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் விலங்குகளைப் பாதுகாப்பதற்காகப் ‘பெர்ஃபார்மிங் அனிமல்ஸ் சட்டம் - 2001’-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. பொழுதுபோக்கிற்காக விலங்குகளைப் பயன்படுத்துவதை இந்தச் சட்டம் நெறிப்படுத்துகிறது. பொழுதுபோக்கிற்குப் பயன்படுத்தப்படும் விலங்குகளை இச்சட்டத்தின் கீழ் இந்திய விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் .
கரடி, குரங்கு, புலி, சிங்கம், சிறுத்தை ஆகிய ஐந்து விலங்குகளையும் காட்சிப்பொருளாக எந்தப் பொழுதுபோக்கு ஊடகத்திலும், விளையாட்டிலும், செயல்முறையிலும் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாட்டு வண்டிப் பந்தயம், குதிரைப் பந்தயம், நாய்ச்சண்டை, சேவல் சண்டை, காளைகள் சண்டை, ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்களில் அப்பாவி விலங்குகள் கொடுமையான சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவற்றைக் காப்பதற்காக இந்திய விலங்குகள் நல வாரியம் சட்ட ரீதியாகப் போராடி வருகிறது.
நம்மைச் சுற்றியுள்ள வாயில்லா இந்த அப்பாவி ஜீவன்களிடம் சற்றே பரிவு காட்டுவோம். எதிர்க்க முடியாது என்ற ஒரே காரணத்தால் விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதும், சித்தரவதை செய்வதும் நியாயமற்றது.
நீங்கள் மனது வைத்தால் உங்களைச் சுற்றியுள்ள சிறு சிறு விலங்குகளைக் காப்பாற்றலாம். சுற்றுச் சூழல் சமநிலையைத் தக்க வைக்கலாம்.
(அறிவியல் ஒளி ஜனவரி 2012 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- அ.மு.அம்சா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இயற்கையை நேசிப்பவர்கள் எல்லாம், இயற்கையை ஆழமாக புரிந்தவர்கள் அல்ல-இயற்கைவாதி.
அதிகாலை 5 மணிக்கு எழுந்து கோடநாடு மலை உச்சியில் இருந்து காட்டு வழியாக தெங்குமராடா செல்லும் நடை பயணத்தின் மகிழ்ச்சியில் அனைவரும் உற்சாகத்தோடு புறப்பட்டோம்.நீலகிரி மலை அடிவாரம் வந்தபோது உற்சாகம் அதிகமானது. நடை பயணத்திற்கான தேவையான பொருள்கள் மற்றும் மதிய உணவுக்கான தாயரிப்போடு தயாராக இருந்தோம்.
நாங்கள் காட்டுக்குள் செல்லும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்.யானை அல்லது விலங்குகளின் இருப்பிடத்தில் நாங்கள் நடந்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை ஆலோசனைகளை காட்டுயிர் ஆசிரியர் விளக்கி கூறினார்.
நாங்கள் செல்லும் காட்டுவழி நடை பயணத்தில் எந்த விலங்கை சந்திக்க போகிறோம் என்று மனதில் கற்பனையோடும்,ஆவலோடும் காட்டுயிர் ஆசிரியர் உடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. அரவேணு வந்தவுடன், நாங்கள் செல்லும் பயணத்திற்கான அனுமதி கடிதத்துடன் நண்பர் பூபதி காத்திருந்தார். காலை 8.30 மணிக்கு கர்சன் எஸ்டேட் தாண்டி அய்யன் எஸ்டேட் பாதையின் தொடக்கத்தில் வண்டியை நிறுத்தி அனைவரும் இறங்கினோம். காட்டுயிர் ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்து கூறி சில ஆலோசனைகளை வழங்கி, நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.காட்டுயிர் ஆசிரியரிடம் விடைப்பெற்று எங்கள் வழிகாட்டியை அழைத்து கொண்டு நடை பயணத்தை தொடங்கினோம்.
சுமார் 3 அல்லது 4 கிலோமீட்டர் நடந்து மலைகளை கடந்து காட்டுக்குள் சென்று அய்யன் எஸ்டேட் முடிவில் ஒரு காட்டு மரத்தின் அடியில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறினோம். சுமார் 6000 அடி உயரத்தில் சரிவை நோக்கி எங்கள் நடைபயணம் தொடர்ந்தது. திடீரென்று எங்களது வழிகாட்டி “எல்லோரும் நில்லுங்கள், யாரும் பேசாதீர்கள்”-என சைகையால் எச்சரித்தார்.அப்பொழுது காட்டு யானையின் சப்தம் நாங்கள் நடந்து செல்லும் பாதையின் வலது புறம் இருந்து கேட்டது. ஒரு நிமிடம் அமைதியாக நின்றோம். யானை கிளைகளை உடைக்கும் சப்தம் கேட்டது.10 அடி உயரத்திற்கு மரம்,செடி,புதர்களால் இரு புறமும் சூழப்பட்ட ஒற்றையடி பாதையில் எல்லோரும் அமைதியாக, வரிசையாக, ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்தோம். முன்னே செல்லும் வழிகாட்டி ஒரு திருப்பத்தில் திரும்பும் போது, சற்று நின்று,எதோ சொல்லி சப்தம் போட்டார். அவரது சொல் ஊர்ப்புறத்தில் நாயை விரட்டுவது போல் இருந்தது, கையில் வைத்திருக்கும் தடியை தரையில் ஓங்கி அடித்தவாறு வித விதமாக சப்தம் போட்டார்.
நண்பர்கள் அனைவரும் அமைதி, அனைவரின் முகத்திலும் அச்சம் கலந்த பதட்டத்துடன் மெல்ல வழிக்காட்டியின் பின் நடந்து சென்றனர். ஒரு வேளை நாங்கள் நடந்து செல்லும் ஒற்றையடி பாதையின் குறுக்கே யானை வந்து விட்டால்,மேல் நோக்கி ஓடுவதை தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் எல்லாருடைய மனதிலும் தோன்றி அச்சத்தை உண்டாகியது. யாரும் ஒருவருக்கொருவர் இடைவெளி விடாமல் நடந்து செல்லுங்கள் என்றபடி நானும் அவர்களுடன் பின்தொடர்ந்து, வழிகாட்டியின் அருகில் சென்று “சப்தம் போட வேண்டாம், விரைவாக இந்த இடத்தை கடந்து விடலாம்” என கூறி நடையை விரைவுபடுதினோம். அந்த பதட்டம் சுமார் 30 நிமிடம் நீடித்தது.
ஒரு வழியாக குறுகிய,அடர்ந்த காட்டை கடந்து ஒரு திருப்பத்தில் மலை முகட்டில் திரும்பி, அல்லிமாயாறு பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதிக்கு வந்தோம்.மறுபக்கத்தில் பக்கவாட்டில் உயரமான மலை, அதன் நடுவில் பெரும் பிளவு, நாங்கள் பக்கவாட்டு மலையின் சரிவில் ஒற்றையடி பாதையில் நின்றவாறு, பிளவை பார்த்து வியந்து,ரசித்தபடி சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தி ஒய்வெடுத்தோம்.
கடந்து வந்த பாதையை பற்றியும் யானையை பற்றியும் பேச்சு எழுந்தது நண்பர் அபிசேக் யானையின் சத்தத்தை அருகில் கேட்டதாக கூறினார். பள்ளத்தாக்கின் ஒரு புறத்தில் இருந்து இதமாக காற்று வீசியது உடலுக்கு உற்சாகமாக இருந்தது.மலை சரிவில் நடை பயணம் தொடர்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடைப்பயணத்திற்கு பிறகு இன்னொரு மலையின் பள்ளத்தாக்கில் இறங்கினோம். அங்கே ஒரு சிற்றோடையில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறி பயணத்தை தொடர்ந்தவுடன், திடீரென்று எங்கள் முன்னால் இருந்த மலை சரிவின் பாதை துண்டிக்கப்பட்டு இருந்தது. வழிகாட்டி அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தார். எந்த பக்கம் பார்த்தாலும் பெரிய பாறாங்கல் தான் தென்பட்டது.அதில் எட்டிப்பார்த்தால் பெரிய சரிவு தான் கண்களுக்கு தெரிந்தது. ஒருவழியாக ஒரு பாறையின் சரிவில் கைகளால் தவழ்ந்து,சறுக்கி கொண்டு அடுத்த பாறைக்கு சென்று விடலாம் எனக்கூறி அவர் முன்னே சறுக்கி செல்ல, யாருமே சறுக்கி செல்ல முடியாமல் தடுமாறினோம்.
வேறுவழியில்லாமல் வழிகாட்டி பாறையின் நடுவில் நின்று கொண்டு தன் தோல்துண்டை எடுத்து விரித்து, கயிறு போல் திரித்து அதை மேல் புறம் வீசி அதை பிடித்து கொண்டு ஒவ்வொருவராக பாறையின் கீழ் சறுக்கி கீழே இறங்கினோம்.எல்லோரும் கீழே இறங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆயிற்று.வழிகாட்டியின் பக்கம் நகர்ந்து சென்று கீழ்நோக்கி பார்த்தால் சுமார் 1000 அடியில் பள்ளத்தாக்கு, தவறி விழுந்தால் அதோகதி தான் – அந்த இடத்தில் நண்பர்கள் கால்கள் நடுங்கியது. மனம் தளர்ந்து போனார்கள். ஒரு வழியாக அனைவரும் பாறையை கடந்து மறுபுறம் சென்றதும் சோதனை தொடர்ந்தது. கீழே இறங்கிய சரிவில் பாதை இல்லை, அனைவரும் தவழ்ந்து, தவழ்ந்து அந்த மலையை விட்டு இறங்கினோம். சரியான பாதைக்கு வந்த பின்னர் எல்லோரும் உற்சாகம் அடைந்தார்கள். கீழே இருந்து அந்த மலையை பார்த்தோம் பிரமிப்பாக இருந்தது.கடந்த முறை நீலகிரியில் பெய்த கன மழையால் நிலசரிவு ஏற்பட்டு இருக்கிறது என பிறகு அறிந்து கொண்டோம். ஒரு வழியாக துண்டிக்கப்பட்ட பாதையின் மறுமுனையை அடைய சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.
மீண்டும் மலை சரிவில் எங்கள் காட்டுவழி பயணம் தொடர்ந்தது. நண்பர் ஒருவருக்கு கால்வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டார், பிறகு அவருக்காக அனைவரும் மெல்ல நடக்க துவங்கினோம்.
அல்லிமாயாறு பள்ளத்தாக்கின் அடிவாரம் அடைவதற்கு சற்று மேலே ஒரு நீரோடையில் மதிய உணவை, மாலை நேரத்தில் சாப்பிட்டோம். நீரோடையில் அனைவரும் களைப்பு தீர குளித்து, உடலை உற்சாகப்படுத்தி கொண்டு, வெளிச்சம் மறைவதற்குள் அல்லிமாயாறு செல்ல வேண்டும்,என அனைவரும் அவசரமாக கிளம்பினோம்.நீரோடையை தாண்டி சிறிது தூரத்தில் வழி எங்கும் சில இடங்களில் சிறுத்தையின் எச்சங்களை பார்த்தோம். மாலை 6 மணிக்கு அல்லிமாயாறு வந்தடைதோம்.அனைவரும் சோர்வாக இருந்தனர்.
வழிகாட்டியை அழைத்து ஏதாவது வண்டி கிடைக்குமா? என விசாரிக்க சொன்னோம். ஊருக்குள் சுற்றி யாரிடமோ பேசி பால்வண்டி ‘வேனை’ கூட்டி வந்தார் வழிகாட்டி, களைப்பாக இருந்த நண்பர்கள் வேனுக்குள் வேகமாக ஏறினார்கள், அரை மணி நேரத்தில் தெங்குமராட தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தது வேன். எங்கள் நடை பயணம் முடிந்தது. ஓய்வெடுக்கும் விடுதியின் முன் அமர்ந்து நாங்கள் வந்த சுமார் 6000 அடி உயரமுள்ள மலையை நோக்கினோம். மலைப்பாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது. 6000 அடி உயரத்தில் இருந்து இறங்கி வந்தது, மனதிற்கு மகிழ்ச்சியையும், புது நம்பிக்கையும்,எங்களுக்குள் ஏற்பட்டது. அதே சமயம் எந்த வன விலங்கும் எங்கள் கண்ணில் படாதது வருத்தத்தையும், வன விலங்குகள் அழிந்து வரும் ஆபத்தையும் எங்களுக்கு உணர்த்தியது.
புலி வாழும் காடு என்று புகழப்பட்ட,கூறப்பட்ட,இந்த காட்டினுள் புலி வாழ்வதற்கான எந்த தடயத்தையும்,அடையாளத்தையும் காண முடியவில்லை.மலை உச்சியில் தேயிலை தோட்டங்களால் சூழப் பட்டிருக்கிறது.மலை அடிவாரத்தில் அல்லிமாயாறு என்ற கிராமத்தால் விவசாய நிலங்களாக சூழப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வரும் இரண்டு, மூன்று ஊராக, விவசாயத்தாலும்,மனிதர்களாலும் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறது. வன விலங்குகள் வாழிடம் மக்கள் வாழிடமாக மாறி, மக்கள் பெருக்கமும், வாகனங்களின் எண்ணிக்கையும் காட்டுக்குள் அதிகமாகி இருக்கும் ஆபத்தையும் அறிந்து கொள்ள முடிந்தது.
மேலேயும், கீழேயும் மனிதர்கள் ஆக்கரமிப்பு செய்து, காட்டை கழுத்தை நெறிப்பது போல் நெறித்தால் வன செல்வங்களை எப்படி காக்க முடியும்? என்ற கேள்வி நியாயமானதாக இருந்தாலும், எதிர் கேள்விகளால் சிக்கல்கள் அதிகமாகி கொண்டே இருப்பதை நினைத்தால் வருத்தம் அதிகரிக்கின்றது.
இந்த நாடும், இந்த நாட்டு மக்களும்,இந்த காடும், இந்த காட்டு உயிரினங்களும் நன்றாய் வாழ முடியுமா? இயற்கையை ஆழமாக புரிந்தவர்கள் மட்டும் தான் காட்டையையும், இந்த நாட்டையையும் காப்பாற்ற முடியும். நம் சமூகத்தை நினைத்தோம், கனத்த இதயத்தோடு படுக்கைக்கு சென்றோம்.
- நீலகிரியின் நிலை....
- காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்
- நான், நீ, நாம் - இது பாக்டீரியா மொழி
- காட்டுயிர்களும் மூடநம்பிக்கைகளும்
- கானமயில்
- மயில்களை கொல்ல வேண்டாம்
- இலவங்கப் பட்டை - சில தகவல்கள்
- மாயமாகும் மயில்களின் உலகம்
- வாரணம் ஆயிரம்; வழி செய்வோம்
- இயற்கை கொடுத்த வரம்
- கடல் எனும் விந்தை
- வாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும்
- பறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன?
- சிறுத்தை புலிகள் - சிக்கல் அவிழ்கிறது
- சிறுத்தையும் நாமும் - யாருக்கு யார் எதிரி?
- வாழ்வை இழக்கும் வெளவால்கள்
- காண்டாமிருகங்களின் தாயகங்கள்
- தேனீக்கள் வளர்ப்பில், தேன் உற்பத்தியில்... மர்மங்கள்
- முதலைக் கண்ணீர்
- கங்கை முதலைகள்