கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
காலை சூரிய உதயத்தின் போதும், மாலை அந்தியின் போதும் பொன்னை வாரி இறைத்தது போல வானம் தங்க நிறம் தரித்துக் காணப்படும். நகர வாழ்க்கை ஓட்டத்தில் விழுந்துவிட்ட பலரும் சூரிய உதயத்தை பார்ப்பதேயில்லை. அதிகபட்சம் அவர்கள் மாலை நேரத்தை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். இப்படி பொன் வாரி இறைக்கப்பட்ட காலை, மாலை நேரங்கள் நமக்குள் சக்தியை ஏற்றி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இப்படிப்பட்ட தருணங்களை மறக்க முடியாத அனுபவமாக ஆக்கிவிடும் பண்பு பறவைகளுக்கு உண்டு.
உண்மையில் பறவைகளிடம் இருந்தே பல விஷயங்களை மனித இனம் கற்றுக் கொண்டது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற திரைப்பாடல் வரி, அதில் ஒன்றை மட்டும் பதிவு செய்துள்ளது. உண்மையில் இயற்கை சீராக இயங்குவதற்கான செயல்பாடுகளில் பறவைகள் பெரும் பங்கு செலுத்துகின்றன. அந்த செயல்பாடுகள் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.
மக்களின் வாழ்க்கையுடன் பறவைகள் இரண்டறக் கலந்துள்ளன. இயற்கை மீதும், பறவைகள் மீதும் பண்டை காலம் முதல் தமிழர்கள் காட்டி வந்த ஆர்வம் பல்வேறு வகைகளில் பதிவாகியுள்ளது. தற்போது உள்ளதைப் போல சுற்றுச்சூழல் விழிப்புணர்வோ, அறிவியல் வளர்ச்சியோ இல்லாத காலத்தில், தமிழர்களின் வாழ்க்கையில் இருந்து இயற்கை கூறுகள் பிரிக்க முடியாததாக இருந்து வந்தது.
அதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சத்திமுற்றப் புலவரின் ‘நாராய், நாராய்’ என்று தொடங்கும் சங்கப்பாடல்.
அந்தப் பாடல் –
நாராய், நாராய், செங்கால் நாராய்,
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும் நின்பெடையும் தென்திசைக் குமரிஆடி
வடதிசைக்கு ஏகுவீர் ஆயின், எம்மூர்
சத்திமுத்தம் வாவியுள் தங்கி...
-என்று போகிறது.
இந்தச் செய்யுள் வரிகளில் சிவப்பு கால்கள், பவளச்சிவப்பு நிறத்துடன் பனங்கிழங்கைப் பிளந்தது போல நீண்டு காணப்படும் அலகைப் பற்றி புலவர் வர்ணிக்கிறார். இந்த குறிப்புகளைக் கொண்டு பார்க்கும்போது புலவர் குறிப்பிடும் பறவை செங்கால் நாரையாக (White Stork) தான் இருக்க வேண்டும். செங்கால் நாரையை தெளி வாக வர்ணிப்பது மட்டுமின்றி, அப்பறவையின் இடப்பெயர்வு பண்புகளையும் புலவர் காட்சிப் படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் குளிரால் பனி போர்த்தப்படும்போது, உணவு தேடி பல பறவைகள் இந்தியாவுக்கு வருகின்றன. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் பறவைகள் மேற்கொள்ளும் இந்த இடப்பெயர்வு ‘வலசை போதல்’ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த வலசை போதலை மேற்கண்ட செய்யுள் 18 நூற்றாண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளது. இயற்கை வரலாற்று குறிப்புகளை புலவர்கள் உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர். அந்தச் செய்யுளின் முதல் ஆறு வரிகளில் இயற்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன்பே இது பற்றி அந்தச் சமூகத்தில் விழிப்புணர்வு இருந்திருக்க வேண்டும். பறவைகளின் பெயர் முதல் வலசை போகும் பண்பு வரை பல்வேறு அம்சங்களை பண்டைத் தமிழர்கள் கூர்ந்து நோக்கி, பதிவு செய்துள்ளனர்.
மக்கள் - பறவைகள் இடையிலான உறவு இப்படி பண்டை காலம் தொட்டே தமிழ் நிலத்தில் உறுதியான பிணைப்பாக தொடர்ந்து வந்துள்ளது. அந்த உறவுக்கான சாட்சியத்தை தமிழகத்தின் பல்வேறு சரணாலயங்களில் பார்க்கலாம்.
(குறிப்பு: மேற்கண்ட செய்யுளை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் பல செய்யுள்களை எழுதிய புலவர்களின் பெயர் இல்லை. மேற்கண்ட செய்யுளில் அவர் கூறியுள்ள சத்திமுத்தம் என்ற ஊரின் பெயராலேயே இந்தச் செய்யுளை எழுதிய புலவர் சத்திமுற்றப் புலவர் என்றழைக்கப்படுகிறார்)
பறவைகள் வலசை போதல்
குளிர் காலங்களில் மேற்கு நாடுகள் பனியால் மூடப்படும்போது, சில பறவை இனங்கள் கிழக்கில் உள்ள வெப்பமண்டல நாடுகளுக்கு இரை தேடி வலசை வருகின்றன.
வலசை வரும் பறவைகளின் பிரதான தேவை உணவு. அவற்றின் உறைவிடங்கள் எல்லாம் பனியில் உறைந்து உணவுக்கு வழியில்லாதபோது, சூழ்நிலைகள் சாதகமாக உள்ள கிழக்கு நாடுகளுக்கு அவை வலசை வருகின்றன. ஆர்டிக், சைபீரியா போன்ற பகுதிகளில் இருந்து பல ஆயிரம் கி.மீ பறந்து வருகின்றன. வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் இங்கு கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வதில்லை. நீர்வாத்து, செங்கால் நாரை, உள்ளான் போன்ற வெளிநாட்டுப் பறவைகள் இரைதேட மட்டுமே நமது சரணாலயங்களை நாடுகின்றன.
தமிழக பறவை சரணாலயங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் வெண்கொக்கு, வக்கா, அரிவாள் நாரை, கூழைக்கடா போன்றவை நம் நாட்டுப் பறவைகள்தான். இவை கோடை காலத்தில் நாட்டின் பிற பகுதிகளில் வாழ்பவை. இவை உள்ளூர் வலசை பறவைகள் (Inland Migraed Secies) எனப்படுகின்றன.
இமயமலையின் பனிப்பகுதிகள் அருகே வசிக்கும் பட்டைத்தலை வாத்து, குஜராத்தின் கட்ச் பகுதியில் வசிக்கும் பூநாரைகள் பழவேற்காடு ஏரி, கோடிக்கரை சதுப்புநிலத்துக்கு வருகின்றன. சிறகி எனப்படும் நீர்வாத்தும் பெருமளவில் தமிழக ஏரிகளுக்கு வருகிறது.
இப்படி வரும் பறவைகள் அனைத்துக்கும் தமிழ்ப் பெயர்கள் உண்டு. பன்னெடுங்காலம் தொட்டே இந்தப் பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. மேலே கூறியது போல பண்டைத் தமிழ் இலக்கியங்கில் வலசை வரும் பறவைகள் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் பறவைகள்
பறவைகள், வலசைபோதல், கூடு கட்டுதல், இனப்பெருக்கம் செய்தல், உணவு உள்ளிட்டவை பற்றி ஆராய்ச்சி செய்வது ஒரு நவீன காலப் பழக்கமே. இந்தத் துறை கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் வரலாறு கொண்டது. ஆனால் இது தொடர்பான குறிப்புகள் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. பண்டைத் தமிழர்கள் பறவை வலசை போதல், அவற்றின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்துள்ளனர். கி.பி. 2ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்க இலக்கியத்தில் பறவைகள் பற்றிய விரிவான வர்ணனைகள் கிடைக்கின்றன.
நிலங்களை ஐந்தாகப் பகுத்திருந்ததே, இயற்கை பற்றி தமிழர்கள் கூர்மையான அறிவைக் கொண்டிருந்ததற்கு எடுத்துக்காட்டு. ஒவ்வொரு நிலத்தையும் திணை, முறையாகப் பகுத்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இயற்கைக் கூறுகளையும் வகுத்திருந்தனர்.
சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் 67வது பாடலில் பூநாரைகள் (Flamingo) பற்றிய குறிப்பு வருகிறது. உலகெல்லாம் வியக்கும் பூநாரைகளின் உணவுப் பழக்கம். வலசை போதல் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமரி அம் பெருந்துறை ஆயிரை மாந்தி
வடமலை பெயர்குவை ஆயின்
-என்று போகிறது அந்தச் செய்யுள்.
‘குமரி நீர்நிலையில் காணப்படும் நுண்ணுயிரியை உண்ட பின், வடக்கில் உள்ள இமயமலைக்கு நீ வலசை போகிறாய்’ என்று இந்தச் செய்யுள் குறிப்பிடுகிறது. இன்றளவும் பூநாரைகள் குஜராத்தில் இருந்து கோடிக்கரை, பழவேற்காடு ஏரி பகுதிகளுக்கு வலசை வந்து செல்கின்றன.
இது போன்ற இயற்கைப் பதிவுகள் தற்போதைய இலக்கியங்களில் மிகமிகக் குறைவாக இருக்கிறது என்று காட்டுயிர் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்.
நவீன தமிழ் இலக்கியங்களில் காணப்படும் காட்டுயிர் மூடநம்பிக்கைகள், விழிப்புணர்வு இன்மை பற்றி காட்டுயிர் எழுத்தாளர் ச.முகமது அலி ‘நெருப்புக் குழியில் குருவி’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.
காக்கைகளில் குடும்பப் பிரிவினைகள் உண்டு. தன் குடும்பத்தைத் தவிர இதர காக்கைகளுடன் அவை வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதில்லை. அற்புதமாகப் பாடும் பறவைகளில் பலரையும் கவர்ந்தது குயில். குயிலைப் பார்க்காதவர்கள் கூட அதன் குரலை கேட்டிருப்பார்கள். இப்படி மயக்கும் மனோகர குரலால் பாடுவது ஆண் குயில்தான். காதல் செய்வதற்கு பெண்ணுக்கு விடுக்கும் அழைப்பு இது. ஆனால் பாடகிகளுக்கு ‘இசைக்குயில்’ என்று பெயர் வைக்கிறார்கள். எவ்வளவு மோசமான முரண் இது. எரித்தாலும் புத்துயில் பெறும் பீனிக்ஸ் என்றொரு பறவையே கிடையாது என்பது போன்று பல்வேறு கருத்துகளைப் பற்றி அப்புத்தகம் பேசுகிறது.
மேற்கண்ட இரண்டு கூற்றுகளும் தமிழ் எழுத்தாளர்களிடம் நிலவும் இயற்கை பற்றிய ஆழ்ந்த அறிவின்மையை வெளிப்படுத்துகின்றன. இது வருந்தத்தக்க ஒரு விஷயம் தான். நமது பாரம் பரியத்தை மிக வேகமாக இழந்துவிட்டோம். சமூகத்தில் முன்னோடிச் சிந்தையாளர்கள் என்று கருதப்படும் எழுத்தாளர்களிடமும் இது போன்ற வறட்சி காணப்படுவது நல்ல அறிகுறியல்ல.
சாம்பல் கொக்கு (Eastern Grey Heron)
வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிளி சரணாலயங்களில் இந்தப் பறவை பெருமளவில் இனப் பெருக்கம் செய்கிறது.
ஆழமில்லாத நீர்நிலைகளில் கொக்குகள் (Egret) வேகமாக நகர்ந்து இரையைத் தேடும். அதற்கு நேர்மாறாக சாம்பல் கொக்குகள் நுட்பமாக பதுங்கி நகரக் கூடியவை. மிக மெதுவாக, நீரிலிருந்த கால்களை சப்தம் எழுப்பாமல் வெளியே எடுத்து, நீரை அசைக்காமல் மீண்டும் கால்களை உள்ளே வைக்கும். சப்தமெழுப்பாமல் இரை தேடும் பண்பு கொண்டது இப்பறவை.
பரணரின் அகநானூறு 276வது செய்யுள், சாம்பல் கொக்கின் இரை தேடும் பண்புக்கு ஒப்பாக, இரவில் திருட வீட்டுக்குள் நுழையும் திருடனின் நகர்தலை குறிப்பிட்டுள்ளது.
நீளிரும் பொய்கை இரை வேட்டெழுந்த
வாளை வெண்போத்து அனய, நாரை தன்
அடியநி வறுதலஞ்சிப் பயப்பய
கடியிலன் புகூம் கள்வன் போல
-அகநானூறு 276 – மருதம் – பரணர்
மேற்கண்ட செய்யுள்கள் மூலம் நீர்ப்பறவைகள் வலசை போதல் உள்பட கூர்மையாக உற்று நோக்கப்பட்ட அவற்றின் பழக்கவழக்கங்களை அந்தக் காலத்தில் இருந்தே தமிழர்கள் பதிவு செய்து வந்துள்ளது தெரிகிறது.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஆர்க்டிக் பகுதிகளில் பெரிய மரம் செடி கொடிகள் கிடையாது. ஏதோ கொஞ்சம் குற்றுச் செடிகள், பூண்டுகள், சின்ன சின்ன மூலிகைகள், லைக்கன்ஸ் மற்றும் பாசிகள் நிறைய உண்டு. இவைகள் இணைந்ததுதான் துந்திரா பிரதேசம். வடக்கே செல்லச் செல்ல, தாவரங்களைப் பராமரிக்க வேண்டிய வெப்பம் மிகக் குறைவு. அதன் அளவு, அடர்வு, உற்பத்தி, வகைகள் என அனைத்தையும் குளிர் காலி செய்து விடுகிறது. இங்கு வளரும் குற்றுச் செடிகளும் கூட அதிக பட்சம் 2 மீ உயரம் வரைதான் இருக்கும். லைக்கன்ஸ் மற்றும் பாசிகள்தான் அடர்வாக உருவாகின்றன. அதன் பெயர் செட்ஜ்ஜஸ்(sedges). ரொம்ப குளிரான பகுதிகளில், தரை மொட்டையாய் இருக்கும் சில புற்கள் இருக்கலாம். ஆர்க்டிக் பாப்பி என்ற மஞ்சள் நிற பூ பூக்கும் செடி உண்டு.
துந்திரா பகுதியில் தாவர உண்ணிகளும் உண்டு. துருவ முயல், லெம்மிங் (Lemming), புனுகு எருது, கலைமான்கள் உண்டு. துருவ முயல் குளிர் அதிகமாகும் காலங்களில் தரைக்கு அடியில் குழிபறித்து உறங்கும். காது மட்டும் கொஞ்சம் நீளமாக இருக்கும். புனுகு எருதின் உடலிலிருந்து புனுகு வாசனை வரும். இந்த வாசனை பெண்ணைக் கவருவதற்காகவே. ஆனால் இந்த விலங்குகளை எல்லாம், ஆர்க்டிக் நரியும், ஓநாயும் வேட்டையாடி உண்ணும். துருவக்கரடியும் கூட மற்ற விலங்குகளை அடித்து உண்ணும். ஆனாலும் கூட பொதுவாக துருவக்கரடிக்கு, கடல் வாழ் விலங்கினங்களின் மேல்தான் கொள்ளைப் பிரியம். கடலிலும், பனிப்பகுதிக்குள்ளும் நுழைந்தே வேட்டையாடும்.
ஆர்க்டிக் நரி வெள்ளையாகவே இருக்கும். பொதுவாக ஆர்க்டிக் பகுதியில் வாழும் அனைத்து விலங்குகளும் வெள்ளையாகத்தான் இருக்கின் றன. துருவ நரிக்கு அடர்த்தியான தோலும், அதன் கீழே கொழுப்பும், தோலின் மேல் அடர்வான நீண்ட முடியும், குளிர் மற்றும் பனிக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. இது பொதுவாக லெம்மிங் (lemming), வோல் என்னும் சிறிய கொரிப்பான், முட்டைகள், போன்றவற்றை சாப்பிடும். சமயத்தில் தாவரங்களையும், பெர்ரியையும் விதைகளையும் கூட உண்ணும். உணவு அதிகம் கிடைத்தால் பனித் தரையில் பதுக்கி, பாதுகாப்பாக வைத்திருந்து உண்ணும். அதே சமயம் உணவுத் தட்டுப்பாடு என்றால், மற்ற விலங்குகள் விட்டுச் சென்ற உணவையும், பெரிய விலங்குகளின் கழிவுப் பொருட்களையும்/மலத்தையும் கூட சாப்பிடும்.
ஆர்க்டிக்கில் வாழும் லெம்மிங் என்னும் கொரிப்பான் சிறியது. 30 -110 கிராம் எடைதான் இருக்கும். 7 -15 செ. மீ நீளம் இதன் உடல். உடல் சிறிதாக வால் நீளமானதாக இருக்கும். இவை தாவர உண்ணிகள். மற்ற துந்திர விலங்குகள் போல இவை குளிர்கால உறக்கம் மேற்கொள்வதில்லை. எந்த நேரமும் துறுதுறுதான். புல்லைப் பறித்து முன்னெச்சரிக்கையாக சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆர்க்டிக் பகுதியில் பறவைகளும் காணப்படுகின்றன. இங்குள்ள கடல் வாழ் விலங்குகள் இப்பகுதிகளுக்கு மட்டுமே உரித்தானவை. வேறு எந்த பகுதியிலும் காணப்படுவதில்லை. சீல், (கடல் பசு ) வால்ரஸ்(கடல் சிங்கம்), பலீன் திமிங்கலம், வெள்ளைத் திமிங்கலம் நீலத் திமிங்கலம் என்ற பெரிய கொலைகார திமிங்கலம் மற்றும் மேல்தாடை நீண்டு தந்தமான நார் திமிங்கலம் என ஏராளமான விலங்குகள் ஆர்க்டிக் கடலில் வாழ்கின்றன. நார்த்திமிங்கலத்தின் உடல் 5 மீ நீளம். ஆனால் இதன் தந்தம் சுமார் 3 மீ நீளம் உள்ளது.
அண்டார்க்டிகாவில் வாழும் வளர்ந்த நீலத் திமிங்கலம் சாப்பிடத் துவங்கினால் ஒரு நாளில் சுமார் 3.6 - 4 டன் உணவு உட்கொள்ளும். தொடர்ந்து 6 மாதம் சாப்பிட்டு விட்டுப் பின்னர் 6 மாதம் பட்டினி கிடக்கும். இது ஒரு நாளில் உண்பதை, ஒரு மனிதன் 4 ஆண்டுகள் நிறைவாக உண்ண முடியும். இங்கு ஒரு வினோதமான மீன் உள்ளது. அதன் பெயர் ஐஸ் மீன் ( Ice Fish). இதன் இரத்தத்தில் சிவப்பணு கிடையாது. இங்குள்ள குளிர்ச் சூழலில் எளிதில் நீரிலேயே ஆக்சிஜன் கரைந்து விடுவதால் அப்படியே ஆக்சிஜனை இந்த மீன் எடுத்துக் கொள்கிறது. இது மனத்தைக் கொள்ளை கொள்ளும் வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் செவுள் கூட வெள்ளைதான். அண்டார்க்டிகாவின் தரை விலங்கில் மிகப் சிறியது என்று சொல்லிக்கொள்ளக் கூடியது ஒரு பூச்சிதான். அதன் அளவு 1.3 செ. மீ தான். அதனால் பறக்க முடியாது. அண்டார்க்டிக்காவில் எல்லா விலங்கினங்களும் கடலில்தான் வசிக்கின்றன.
அண்டார்க்டிக்காவில் 17 வகை பென்குவின்களும், 35 வகை பறவைகளும், 11 வகை டால்பின்களும், 6 வகை சீல்களும், 8 வகை திமிங்கலங்களும் கடலில் வாழ்கின்றன. இந்த விலங்குகள் எல்லாவற்றையும் நீங்கள் அருகில் போய் பார்க்கலாம். மனிதனைப் பார்த்து பயந்து ஓடிவிடாது. இதனைப் போய் பார்ப்பதற்கு உகந்த நேரம் டிசம்பர், ஜனவரி மாதங்கள் தான். கடற்கரை ஓரங்களில் திமிங்கலங்கள் அணிவகுத்து நிற்கும். சீல்கள் பார்க்கவும் இதுதான் சரியான தருணம். இப்போதுதான் பெங்குவின்கள் முட்டையிட்டு, அடை காத்து குஞ்சு பொரிக்கும். பேபி பென்குவினை, அது ஓடி விளையாடுவதை வசந்த காலத்தில் (பிப்ரவரி, மார்ச்) பார்க்கலாம். ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு மாதிரி அண்டார்க்டிகா அழகாக காட்சி அளிக்கும். ஒரு நாளில் கூட, ஒவ்வொரு மணி நேரமும் வேறு வேறு வகையில் அழகு கொப்பளிக்கும்.
ஆர்க்டிக் டெர்ன் (Arctic Tern) என்ற குட்டிப் பறவைதான் உலகிலேயே அதிக தூரம் வலசை வரும் பறவையாகும். இது ஆர்க்டிக் வட்டமான துந்திராவில்தான் இனப்பெருக்கம் செய்கிறது. எங்கிருந்து எங்கு வலசை போகிறது தெரியுமா? வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் பறந்து ஓடி விடுகிறது. இதன் தூரம் எவ்வளவு என்று சொன்னால் மயக்கம் போட்டுவிடுவீர்கள். சுமார் 35,000 கி. மீ. தொலைவை. ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் இது. ஆனால் இந்த பறவையின் அளவு சுமார் ஒரு அடி நீளம்தான். இந்த அற்புதப் பறவை, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நம்மிடையே சில மாடுகளுக்கு சிவப்பு வண்ணம் பிடிக்காது என்று ஒரு நம்பிக்கை உலவி வருகிறது. அது உண்மை என்பதுபோல, காளை விரட்டு விளையாட்டுகள் இங்கும், அயல்நாடுகளிலும் கூட நடக்கின்றன. பல ஊடகங்களும் இந்தப் பொய்யை பலமாக விதைத்து வருகின்றன. பாலுட்டிகளில், குரங்கினம் மற்றும் மனித இனத்துக்கு மட்டும் தான் வண்ணம் அறியும் கண்கள் உள்ளன. ஆடு, மாடு, நாய் போன்ற எந்த பாலூட்டியும் வண்ணங்களை உணர முடியாது. அவை கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணத்தில் மட்டுமே பொருட்களைப் பார்க்க முடியும். நம் கண்களில், வண்ணம் மற்றும் கருப்பு வெள்ளை பார்க்க கண் திரையில் குச்சிகள் மற்றும் கூம்புகள் உள்ளன. குச்சிகள் கருப்பு வெள்ளையையும், கூம்புகள் வண்ணத்தையும் பார்க்கின்றன.
அதே நேரத்தில் பறவைகள், பூச்சிகள் வண்ணம் பார்க்க வல்லவை. நம்மைவிட அதிக நிறங்களை நிறங்களின் சாயல்களை, முக்கியமாக வண்ணத்துப்பூச்சிகள் பார்க்கின்றன. மனிதர் களால் காணமுடியாத, புற ஊதாக் கதிர்களையும் காணும் திறன் பெற்றவை பறவைகள். இவை களின் ரெட்டினாவில் மனிதர்களைவிட அதிக எண்ணிக்கையில் ஒளி வாங்கிக் கூம்புகளும், அதிக நரம்பு இணைப்புகளும் உள்ளன. மேலும் குறைவான ஒளியிலும் நன்கு பார்க்கும் அளவுக்கு, அடர்வாக கூம்புகள் உள்ளன. கடல் பறவைகளின் தூரப்பார்வை துல்லியமாக அமைய, அவைகளின் கண்களில், சிவப்பு அல்லது மஞ்சள் எண்ணெய் சுரக்கிறது. மனித கண்ணில் ஒரு ச.மி.மீ க்கு 20,000 ஒளிவாங்கிகள் உள்ளன. ஆனால் பறவைகளில் 40,000 முதல் 1,20,000 ஒளி வாங்கிகள் உண்டு. பகலில் இரை தேடும் பறவைகளுக்கு 80-90% ஒளி வாங்கிகள் கூம்புகளாகவும் இருக்கின்றன. ஆனால் இரவில் இரை தேடும் பறவைகளுக்கு கிட்டத்தட்ட அனைத்து ஒளி வாங்கிகளும் குச்சிகளாகவே உள்ளன.
ஆந்தையின் கண்கள் மற்றவைகளை விட 2.2 மடங்கு பெரியது. மனிதனை விட 5 மடங்கு அதிகமான ஒளி வாங்கி செல்கள் இதற்கு உள்ளன். இவை அகச்சிவப்பு கதிரிலும் கூட பார்க்கும். இருகண் நோக்கி போல இதன் கண் செயல்படுகிறது, இதன் உடலின் எடையில் 5% கண் உள்ளது.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
அமெரிக்க ஐக்கிய நாட்டு விஞ்ஞானிகளின் குழுவைச்சேர்ந்த கிரிஸ் ஆஸ்டின் என்ற விஞ்ஞானி , சமீபத்தில் நியூகினியாவில் இரண்டு புதிய இனங்களைச் சேர்ந்த தவளைக் கண்டுபிடித்துள்ளார். எலும்புள்ள விலங்குகளில் இதுதான் உலகிலேயே மிக மிகச் சிறியது என்பது வியப்புக்குரிய விஷயமாகும். இந்த தவளை எவ்வளவு பெரிசு தெரியுமா? சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இதன் அளவு 7 .7 மி.மீ தான். ஒரு இன்ச் நீளம் என்றால் உங்களுக்குத் தெரியுமல்லவா ? அந்த ஒரு இன்ச்சில் மூன்றில் ஒரு பகுதியைவிடச் சிறியது. இதற்கு முன் உலகின் சிறிய முதுகெலும்பி என்று பெயரும், பெருமையும் பெற்றிருந்த 8 மி.மீ நீளமுள்ள இந்தோனீசிய சின்ன மீனை இந்த தவளை பின்னுக்குத் தள்ளி விட்டது. இந்த குழு மூன்று மாதங்களாக உலகில் மிகப் பெரியதும், உயரமான வெப்ப மண்டல தீவான நியூகினியாவின் தீவை ஆராய்ந்து தேடித் தேடி இந்த தவளை இனங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது ஆஸ்டின் குழு வினருக்கு மிகப் பெரிய சவா லும்,சாதனையுமாகும்.
இம்மாத்தூண்டு தவளையைக் கண்டு பிடிப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இதன் பெயர் பீடோ பைரினி அமானூன்சிஸ் (Paedophryne amauensis) என்பதாகும் .இதன் ஆண் தவளையின் கீச்சிடும் ஒலி, ஒரு பூச்சியின் ஒலியைப் போலிருக்குமாம் . அதன் மூலம்தான் இந்த தவளையைக் கண்டுபிடித்தோம் என்று ஆஸ்டின் கூறுகிறார் . ஆனால் இது மிக மிகப் பெரிய கண்டுபிடிப்புதான்...! இதனைக் கண்ணால் காண்பதே பெரிய் விஷ்யம்தான். பொதுவாக நியூகினியா அதிகவகையான உயிரினங்கள் வாழும் ஓர் உயிரிப்பன்மையின் உச்ச பட்ச இடம். அந்த இடத்தில் எப்போதுமே புதிய வகை உயிரினங்களை கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிக்க முடியும்.அதனால்தான் ஏதாவது புதிய வகை உயிரினங்கள் கிடைக்குமா என்று தேடியவர்களுக்கு மிகப் பெரிய புதையல் அகப்பட்டதுபோல் கிடைத்ததுதான் இந்தப் புள்ளித் தவளை.இந்த தவளை பற்றிய தகவல் வெளியுக்லகுக்கும், அறிவியல் இதழிலும் 2012 , ஜனவரி 11 ம் நாள் வெளியிடப்பட்டது.
அங்கு கிடைத்த இரண்டாவது தவளை., இந்த பீடொபைரீன் அமானூன்சிஸைவிட துளியூண்டு பெரிது. அதன் அளவு, 8 .5 மி.மீ ஆகும். இந்த குட்டியூண்டு தவளையின் பெயர் பீடோபைரினி ஸ்விப்ட்டோரம் (Paedophryne swiftorum ). பொதுவாக முதுகெலும்பிகளில் மிகச் சிறியதும், மிகப் பெரியதும் கொஞ்சம் பெருமையும், பிரபலமும் உடையவை. மனித இனம் அறிந்த 60,000 வகை முதுகெலும்பிகளில், மிகப் பெரியது நீலத் திமிங்கலமே..! அது எவ்வளோ பெரிசு தெரியுமா? சுமார் 25 மீட்டர் அளவு இருக்கும். அதாவது 75 அடி. அம்மாடியோவ் ஒரு வீடு சைஸ் என்று சொல்லலாமா? அதற்கு அடுத்த படி, மிகச் சிறிய முதுகெலும்பி, இந்தோனீசிய மீன்தான் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தோம்.அதன் சைஸ் வெறும் எட்டு மி.மீ மட்டுமே. ஆனால் அந்த எண்ணத்தை தூக்கி கபளீகரம் பண்ணி சாப்பிட்டுவிட்டது இந்த துளியூண்டு பூச்சி சைஸ் தவளை. ஒரு தண்ணீர்ப் பூச்சியைவிடச் சிறியது. இந்த குட்டி,பொட்டுத் தவளையின் சைஸ் 7 .7 மி.மீ. இதுவரை உலகின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய முதுகெலும்பிகள் நீரில்தான் இருக்கும் என்றும் நினைத்தோம். அந்த எண்ணத்தையும் முறித்துவிட்டது இந்த தவளையார். ஆமாம் இது தரை வாழ் விளங்கல்லவா ? வாழிட சூழலில் மழைக்காடுகளின் தரையில், இலைகளில்தான் இந்த மாதிரி சிறிய விலங்குகள் வாழ்க்கை நடத்துகின்றன என்று ஆஸ்டின் தெரிவிக்கிறார் . அமெரிக்க பணமான டைமில்(Dime) .(.நம்ம ஊரு ஒரு பைசா நாணயம் போலத்தான் இந்த டைம்.).இந்த தவளையை வைத்து படம் எடுத்துள்ளனர். பாருங்களேன்..!
- பேரா.சோ.மோகனா (
- பாவோபாப் - ஓர் அதிசய மரம்
- மணம் வீசும் பொருள் தரும் கஸ்தூரிமான்
- நிற்பதுவே… நடப்பதுவே… பறப்பதுவே…
- காட்டுக்குள் நடை பயணம்
- நீலகிரியின் நிலை....
- காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்
- நான், நீ, நாம் - இது பாக்டீரியா மொழி
- காட்டுயிர்களும் மூடநம்பிக்கைகளும்
- கானமயில்
- மயில்களை கொல்ல வேண்டாம்
- இலவங்கப் பட்டை - சில தகவல்கள்
- மாயமாகும் மயில்களின் உலகம்
- வாரணம் ஆயிரம்; வழி செய்வோம்
- இயற்கை கொடுத்த வரம்
- கடல் எனும் விந்தை
- வாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும்
- பறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன?
- சிறுத்தை புலிகள் - சிக்கல் அவிழ்கிறது
- சிறுத்தையும் நாமும் - யாருக்கு யார் எதிரி?
- வாழ்வை இழக்கும் வெளவால்கள்