முதலைக் கண்ணீர் என்பது ஒருவர் துன்புறும்போது, வருத்தப்பட்டு அழுது கண்ணீர் வடிப்பது போல் நடிப்பதாகும். முதலை தன் இரையை விழுங்கும்போது கண்ணீர் விடுவது போல தோற்றம் தரும். நமக்கு உணவைப் பார்த்ததுமே வாயில் உமிழ் நீர் சுரப்பதுபோல, அது தன் இரையைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் வருவதும், இரை நெருங்கியதும் அதை கவ்விப் பிடிப்பதும் அதன் இயல்பு.

உண்மையில் முதலைகள் அழுவதில்லை, ஏனென்றால் அவைகளுக்கு கண்ணீர் நாளங்களே (Tear ducts) கிடையாது எனத் தெரிகிறது. ஏனென்றால் அவைகள் பெரும்பாலும் தண்ணீரிலேயே இருப்பதால் கண்களை, குறிப்பாக கருவிழிகளை (Cornea) காய்ந்து விடாமல் நனைக்க கண்ணீர் தேவையே இல்லை. தண்ணீரை விட்டு நிலத்திற்கு வரும்போது, இமைகளையும், கண்களையும் நனைக்கும் வகையில் கண்களில் திரவம் சிறிதளவு சுரக்கிறது, ஆனால் அது கண்ணீரில்லை.

பின், இரையை விழுங்கும்போது கண்களில் எப்படி, ஏன் நீர் வடிகிறது?

கண்களை நனைத்து ஈரமாக்கும் சுரப்பிகள் கிட்டத்தட்ட முதலையின் தொண்டைக்கருகில் இருபக்கமும் இருப்பதாக முதலையின் உடற்கூறு அறிந்தவர்கள் சொல்வதாகத் தெரியவருகிறது.

இரையைப் பார்த்ததுமே சுரப்பிகள் சுரக்க ஆரம்பித்து விடுகின்றன. எனவே இரையை விழுங்கும்போது, இரையின் உடலால் சுரப்பிகளின் மீது ஏற்படுத்தும் அழுத்தம், சுரப்பியிலிருந்து அதிகளவு திரவத்தை கண்களில் வெளிப்படுத்தி பெருமளவு கண்ணீர் வடிப்பது போன்ற தோற்றம் தருகிறது.

இரையை விழுங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கிறதோ, அவ்வளவு நேரம் கண்ணீர் வடிப்பது போன்றும் தெரிகிறது.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.