பூக்கள்தோறும் பாடி நடந்து, பூமி முழுவதைம் வர்ண ஜாலமாக்கும் வண்ணத்துப் பூச்சிகளை விரும்பாதவர்களாக இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். கவிஞர்களும், இலக்கியவாதிகளும் பாடிப் பாடி, இந்த வண்ண அழகுகளை நம் தோழர்களாக மாற்றியுள்ளனர். பல வண்ணங்களிலும், அளவுகளிலும் வாழும் இவை பூச்சிகள் என்று சொல்லப்படுகின்றன. என்றாலும் இறக்கைகளில் காணப்படும் பலவித வண்ணங்கள், அவை அமைக்கப்பட்டுள்ள விதம் போன்றவை என்றுமே நம்மைக் கவர்வன.

இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பே பூமியில் வண்ணத்துப் பூச்சிகள் தோன்றியதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவில் ப்ளோரிசன் ஏரிக்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட லிம்பாலிடே வண்ணத்துப் பூச்சியின் படிவம் “fossil” 4 கோடி வருடங்களுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. 1973ல் பிரான்சில் கண்டெடுத்த புதைபடிவப் பொருள்களின் ஆராய்ச்சிகள் இதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. இவை, ஆர்த்ரோபோடா என்ற வகையைச் சேர்ந்தவை. உயிரினங்களின் வகைப்பாட்டில், அதிக உயிரினங்கள் அடங்கிய பிரிவு இது. ஆர்த்ரோபோடா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் பல பகுதிகள் இணைந்து உருவான காலுள்ள உயிரினங்கள். இவை அடங்கியுள்ள பூச்சிகள் (insectae ) பிரிவில்தான் பிராணிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை பூச்சிகள் (insects). 29 பிரிவுகளில் 627 குடும்பங்கள் இதில் உள்ளன. இதில் லெப்பிடோட் டிரா குடும்பத்தில் வண்ணத்துப் பூச்சிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.

1735ல் கார்ல் லினயஸ் இப்பெயரை வழங்கினார். வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்வில் நான்கு நிலைகள் உள்ளன. முட்டை, லார்வா, பியூப்பா, வண்ணத்துப் பூச்சி. இணை சேர்ந்ததற்குப் பிறகு, பெண் வண்ணத்துப் பூச்சிகள் முட்டை இடுவதுடன் வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி ஆரம்பிக்கிறது. நான்காவது நிலையில் வண்ணத்துப் பூச்சி வெளியே வருகிறது. வண்ணத்துப் பூச்சிகளில் ஆண், பெண் வேறுபாட்டை அறிந்து கொள்வது கடினம். பியூப்பாவில் இருந்து வெளிவந்தவுடன் இணை சேரும் வண்ணத்துப் பூச்சிகளும் உள்ளன.butterfly 433முட்டையில் இருந்து வெளியே வரும் லார்வாக்கள் சாப்பாட்டுப் பிரியர்கள். இவற்றின் முதல் உணவு முட்டையின் ஓடு. பின், தொடர்ச்சியாக இலைகளைத் தின்னத் தொடங்குகிறது. வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் இவை தோலை உரித்துவிடும். அதனால் எது ஆண், எது பெண் என்று கண்டுபிடிப்பது கடினம். சிலந்திகள், குளவிகள், பிராணிகள், ஓணான்கள் போன்றவை இவற்றின் லார்வாக்களை உண்ணும் முக்கிய எதிரிகள். இவைகள் உணவு உண்ணும் வேட்கையுடன் லார்வாக்களின் அருகில் வரும். சில லார்வாக்கள் சிக்கிக் கொள்ளும். வேறு சில தந்திரமாகத் தப்பித்துக் கொள்வதும் உண்டு. சில லார்வாக்கள், சிறிய பாம்பு போல தங்களின் சுபாவத்தை மாற்றிக் கொள்ளும்போது, வேறு சில பறவைகளின் எச்சத்தைப் போல நடிக்கும். துர் நாற்றம் வீசி எதிரிகளை அருகில் நெருங்க விடாமல் செய்யும் லார்வாக்களும் உண்டு. ஆனால், இவை தோற்றுப் போவது மனிதரிடம்தான். விளைந்ததை எல்லாம் ஒட்டுமொத்தமாகக் கூட்டம் கூட்டமாகத் தின்னும் புழுக்களைத் துரத்த மனிதன் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கிறான். வண்ணத்துப் பூச்சிகளாக மாறி, மகரந்தச் சேர்க்கை செய்து இவை நம்மை வாழ வைக்கின்றன. இவற்றின் அழிவு நமக்கே ஆபத்தை விளைவிக்கிறது.

வண்ணத்துப் பூச்சியின் வாழ்வில், ஒவ்வொரு நிலையும் அதிசயமானது. இலைகளிலும், பூக்களிலும், செடிகளின் தண்டுகளிலும் இவைகள் முட்டை இடுகின்றன. சில பல முட்டைகள் முதல் நூற்றுக்கணக்கான முட்டைகளை இடுகின்ற வண்ணத்துப் பூச்சிகள் வரை உண்டு. பியூப்பாவில் இருந்து வெளிவந்தவுடன், இவை முட்டை இடுவதற்கான செடிகளைக் கண்டுபிடிக்கின்றன. மற்ற உயிரினங்கள் முட்டை இடாத துளிர் இலைகள்தான் இவற்றுக்குப் பிடிக்கும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவ்வாறு செய்வதால், பியூப்பாவிற்குத் தேவையான உணவு கிடைக்கும். துளிர் இலை முதிர்ச்சியடைய, உதிர்ந்து போக பல நாட்கள் ஆகும். ஆள் அரவம் இல்லாத இடமாக இருப்பதால் எதிரிகளின் நடமாட்டத்தைத் தவிர்க்கலாம். மற்றொரு அதிசயம் வண்ணத்துப் பூச்சிகள் எறும்புப் புற்றுகளிலும் முட்டையிடும். இது ஒன்றுக்கொன்று உதவும் செயல். முட்டையை எறும்புகள் பாதுகாத்துப் பராமரிக்கும். பியூப்பா விரிந்து வரும்போது பியூப்பாவின் வெளியில் இருக்கும் இனிப்புத் திரவம் எறும்புகளுக்கு உணவாகும்.

வண்ணத்துப் பூச்சிகளின் குடும்பத்தில் மிகவும் பெரியது அட்லஸ் மவுத் என்ற வண்ணத்துப் பூச்சி. இந்தியக் காடுகளில் மிக அரிதாகக் காணப்படும் இவற்றின் இறக்கை அளவு 30 செ.மீ. குவின் அலெக்சான்டர்ஸ் பேர்டு விங் (Queen Alexandras Birdwing ) உலகில் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி. இதன் இறக்கையின் அளவு சுமார் 250 மி.மீ. இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி சர்தர்ன் பேர்டுவிங் (Southern Birdwing). இதன் இறக்கை அளவு 140 முதல் 200 மி.மீ வரை. பாப்பிலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த ப்ளூ மார்மோன், ரெட் ஹெலன் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய வண்ணத்துப் பூச்சிகள்.

வண்ணத்துப் பூச்சிகளைப் போலவே பட்டாம்பூச்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை இரவில் மட்டுமே வெளியே வருகின்றன. என்றாலும் அபூர்வமாக பகலிலும் இவை வெளியே வருவதுண்டு. வண்ணத்துப் பூச்சிகளைக் காட்டிலும் அற்புதங்கள் நிறைந்தது இவற்றின் உலகம். நம் வீட்டிலும் வண்ணமயமான இந்த அதிசய உயிரினங்கள் விஜயம் செய்ய வேண்டும் என்றால் நம் வீட்டையே ஒரு வண்ணத்துப் பூச்சிகளின் நந்தவனமாக நம்மால் மாற்ற முடியும். அவற்றிற்கு அவசியமான செடிகளை நம் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்க்க வேண்டும். புல்லினத்தைச் சேர்ந்த செடிகள், எலுமிச்சை, கொய்யா, நெல்லி, ஏலம், மல்பெரி, அகத்தி போன்றவை வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் செடிகள். ஈரத்தன்மை உள்ள சூழல், நல்ல சுற்றுப்புறம் ஆகியவை இருந்தால், நம் வீட்டுத் தோட்டம் வண்ணத்துப் பூச்சிகளின் சொர்க்கமாக மாறும்.

வலசை செல்லும் பறவைகளைப் போல வலசை போகும் வண்ணத்துப் பூச்சிகளும் உண்டு. 3000 கிலோமீட்டருக்கும் கூடுதலாக, இவர்களின் ஆகாயப் பயணம் அமைகிறது. மொனார்க் பிரிவைச் சேர்ந்த வண்ணத்துப் பூச்சிகள் இதில் திறமையானவை. வேனில்காலத்தில் வடஅமெரிக்காவில் காணப்படும் இவை, குளிர்காலத்தில் தென்னமெரிக்காவை நோக்கிப் பறக்க ஆரம்பிக்கின்றன. கலிபோர்னியா, மெக்சிகோ, க்யூபா ஆகிய இடங்களில் அடைக்கலம் தேடும் இவற்றைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் இந்த இடங்களுக்கு வருகை தருகிறார்கள். வயிறு நிரம்ப தேன் சாப்பிட்டால் சராசரி 1000 கி.மீ வரை இவற்றால் பறந்து செல்ல முடியும். ஓய்விற்குப்பின் மறுபடியும் பயணம் தொடரும். அமெரிக்காவில் மொனார்க்குகள் போல ஐரோப்பாவில் பெயின்ட்டெட் லேடி பிரபலமானவை. குளிர்காலம் ஆகும்போது வட ஆப்பிரிக்காவிற்கு கூட்டத்துடன் இவை பறந்து செல்லும். பறந்து சென்று அடையும் இடங்களில் முட்டையிடும். வேறொரு பருவ காலத்தில் இவற்றின் புதிய தலைமுறை, மற்றொரு வலசைப் பயணத்தை மேற்கொள்வதும் உண்டு. ஒரே நிறத்தில், இலட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் பறக்கும் காட்சி, அற்புதமான ஒன்று. ஒன்றரை நூற்றாண்டிற்கு முன்பு ஒரு சூடான் பயணி தன் வண்ணத்துப் பூச்சி அனுபவங்களைப் பின்வருமாறு வர்ணித்துள்ளார்.

“நான் சூடான் வழியாக ஒட்டகத்தின் மீது அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தேன். கடுமையான வெப்பத்தால் என்னையும் அறியாமல் லேசாகக் கண் அயர்ந்தேன். கண் திறந்து பார்த்தபோது எட்டிப் பிடிக்கும் தூரத்தில் எனக்கு முன்னால் ஏதோ ஒரு இனம் புரியாத காட்சி என் கண் முன்னால் விரிவதை உணர்ந்தேன். வேகமாக ஒட்டகத்தில் இருந்து இறங்கிப் பார்த்தபோது பியூப்பாவில் இருந்து வெளியே வந்த இலட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் பறந்து விண்ணை நோக்கி உயர்ந்து செல்வதை நான் கண்டேன். வெறும் அரை மணிநேரத்திற்குள் அவை எல்லாம் கண் பார்வையில் இருந்து மறைந்து போயின”.

தென்னிந்தியாவில், பொதுவாக 5 வகை வண்ணத்துப் பூச்சிகள் காணப்படுகின்றன. குறிப்பாக இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள கேரளாவில் அதிகமாகக் காணப்படுகின்றன. வீடு, வயல்வெளிகள், வனப்பிரதேசங்கள், நிழல் பிரதேசங்கள், நகரங்களின் எல்லைப் பகுதிகள் போன்றவை இவற்றின் சூழல் மண்டலங்கள். பின் இறக்கைகளில் சிறு வால்களைக் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளும் உண்டு. இந்தியாவில், மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சி இனமான கருட வண்ணத்துப் பூச்சி இனம் இன்ரு அழியும் அபாயத்தில் உள்ளது. பல வண்ணத்துப் பூச்சிகள் அடங்கிய ஒரு குடும்பம் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளின் குடும்பம். மஞ்சள், வெள்ளை நிறங்களில் இவை காணப்படுகின்றன. உலகில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளின் குடும்பங்களும் உள்ளன. இத்தகையவை தென்னிந்தியாவில் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. முன்கால்கள் மிகவும் சிறியதாக அமைந்த, தூரிகையின் நார்கள் போன்ற உரோமங்களால் மூடப்பட்டவை உரோமக்காலுள்ள வண்ணத்துப் பூச்சிகள். வாசனையை நுகர்வதற்கும், தேனுள்ள செடிகளை அறிந்து கொள்வதற்கும் இவற்றின் கால்கள் உதவுகின்றன. தவிட்டு நிறம், கறுப்பு நிறம், ஆரஞ்சு தவிட்டு நிறம் கலந்த வண்ணத்துப் பூச்சிகள் துள்ளிச் செல்லும் இயல்புடையவை. அளவில் சிறியவையான இவை, சுறுசுறுப்புடன் துள்ளித் துள்ளிச் செல்லும்.

சூழல் நலம்பெற, வண்ணத்துப் பூச்சிகள் நலமுடன் வாழ்வது அவசியம். வண்ணத்துப் பூச்சிகளுக்கான கிராமங்களை உருவாக்கி, அவற்றிற்குரிய சூழல் மண்டலங்களை அமைத்து, வண்ணத்துப் பூச்சிகளை நேசிப்பவர்கள், இயற்கையின் இந்த அற்புதப் படைப்புகள் பூமியிலிருந்து அழிந்து விடாமல் பாதுகாக்க முயற்சி செய்து வருகிறார்கள். மும்பையில் உள்ள பாம்பே இயற்கை வரலாறு அறக்கட்டளை (BNHS), கோழிக்கோடு இயற்கை வரலாற்றுச் சங்கம், திருவிதாங்கூர் இயற்கை வரலாற்றுச் சங்கம், போன்ற பல அமைப்புகள் வண்ணத்துப் பூச்சிகள் உலா வர உதவி செய்கின்றன. வண்ணத்துப் பூச்சிகளைத் தேடிய நம் பயணங்கள் நிச்சயம் இதற்கு உதவும். பூக்களே இறக்கை முளைத்து செடிகளிலிருந்து உயர எழும்பிப் பறப்பதைப்போலப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைக் குழந்தைகளுக்குக் காட்டிக் கொடுத்து, இவை பற்றிய ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் உருவாக்குவோம். இனி வாழ்வில் ஒவ்வொரு நாளும், இவற்றின் எழில்மிகு தோற்றத்துடன் நம் பொழுதுகள் விடியட்டும். எல்லாமுமாக விரிந்து பரந்திருக்கும் இயற்கை அன்னையின் நேசப்பிணைப்பில் சுற்றித் திரியும் வண்ணத்துப் பூச்சிகளுடன், வாருங்கள் நாமும் ஒவ்வொரு நாளும் பயணிப்போம்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It