உயிர்ப் பன்மயத் தன்மையை பாதுகாப்பதில் தேனீக்கள் மகத்தான பங்கு வகிக்கின்றன. உணவு, சூழல் பாதுகாப்பிற்கு இந்த சின்னஞ்சிறிய உயிரினங்கள் ஆற்றும் சேவை அற்புதமானது.

தேனீக்களுக்காக ஓர் உலக நாள்

நவீன தேனீ வளர்த்தலின் தந்தை என்று அழைக்கப்படும் ஆண்டன் ஜாக்சா மத்திய ஐரோப்பா ஸ்லோவேனியா நாட்டில் 1734 மே 20 அன்று பிறந்ததன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 20 உலக தேனீக்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. மகரந்த சேர்க்கை மூலம் உணவுப் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் தேனீக்கள், பல சிறிய பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையில் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் அவை இந்த நாளைக் கொண்டாடுகிறது.

பூச்சிகள் குடும்பத்தைச் சேர்ந்த தேனீக்களை வளர்ப்பதற்கேற்ற சூழ்நிலை தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இவற்றிற்குத் தேவையான ஆற்றல் தேனில் இருந்தும், வளர்ச்சிக்கு அவசியமான புரதம் மகரந்தத் தூளில் இருந்தும் கிடைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வெவ்வேறு காலங்களில் பூக்கும் மரங்கள், குத்துச் செடிகள் தேனீக்களுக்கு தேன், மகரந்தத் தூளை சேகரிக்கும் மூல ஆதாரமாக விளங்குகின்றன.beesகேரளா, தமிழகத்தில் முக்கிய பயிரான தென்னை தேனீக்களுக்குத் தேவையான மகரந்தத்தை வழங்குகிறது. தேனீக்களின் வளர்ச்சிக் காலமான ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் தேனீக்களின் காலனிகளை தென்னந்தோப்புகளில் அமைத்து வளர்க்கலாம். இரப்பர், ஏலம் உள்ளிட்ட பல பயிர்கள் வளரும் தோட்டங்களில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் விளைச்சலையும் அதிகரிக்கலாம். இவற்றின் மகரந்த சேர்க்கை மூலம் விவசாயப் பயிர்களில் 20 முதல் 40% விளைச்சல் அதிகரிக்கிறது.

தேனீக்கள் மூலம் மகரந்த சேர்க்கை நிகழ்ந்து அதில் இருந்து கிடைக்கும் பழங்கள், காய்கள் தரம் மிக்கவையாக உள்ளது. விதைகளின் எடையும் அதிகமாகக் காணப்படுகிறது. எண்ணெய்ப் பயிர்களில் இருந்து எண்ணெய் அதிகம் கிடைக்கிறது. சமீபத்தில் கேரள விவசாயப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் சிறுதேனீக்கள் கொண்டு நடத்தப்பட்ட மகரந்த சேர்க்கையில் வெள்ளரியின் விளைச்சல் 60% அதிகரித்துள்ளது. பொதுவாக வேளாண்மையில் இந்தியத் தேனீக்கள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.

தேனீ என்னும் அமுதசுரபி

 தேனீக்களில் இருந்து தேன், மெழுகு, மகரந்தத் தூள், நஞ்சு, ராயல் ஜெல்லி, புரோப்போலிஸ் போன்ற விலை மதிப்பிட முடியாத பொருட்கள் கிடைக்கின்றன. பூக்களில் இருந்து சேகரிக்கும் தேனை தேனீக்கள் தங்கள் வயிற்றுப் பகுதியில் சுரக்கும் திரவங்களைப் பயன்படுத்தி குளுக்கோஸ், பிரக்டோஸ் என்னும் எளிய சர்க்கரை மூலக்கூறுகளாக மாற்றுகின்றன. பிறகு தேனில் கலந்துள்ள நீரின் அளவைக் குறைத்து தேனீக்கள் தேனை அடைகளில் சேகரிக்கின்றன.

தனிச்சிறப்பு மிக்க ஓர் உணவான தேன் முன்கூட்டியே பாதியளவு செரிக்கப்பட்டதால், நம் உடலில் வேகமாக இரத்தத்துடன் கலக்கிறது. பல அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, சி, இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் தேனில் உள்ளது. இதனால் ஆயுர்வேதம், சித்தா போன்ற பல பாரம்பரிய மருத்துவ முறைகளில் தேன் ஒரு முக்கியப் பொருளாகப் பயன்படுகிறது.

திரவ வடிவில் உள்ள தேன் (liquid honey/extracted honey), அடைத்தேன், ஜங்க் தேன், கிரீம் தேன் போன்ற பல்வேறு வடிவங்களில் தேன் கிடைக்கிறது. மனிதரின் தொடுதல் இல்லாமல், தானே வடிவமைத்து நீரின் அம்சத்தைக் கட்டுப்படுத்தி நொதிகள், அமிலங்கள், உயிர்ச்சத்துகள் போன்றவற்றை சரியான விகிதத்தில் கலந்து தேனீக்கள் உருவாக்கும் தேனடை/அடைத்தேன் வெளிநாடுகளில் பிரபலமாக உள்ளது.

தரமேன்மை உள்ள இது திரவ வடிவில் உள்ள தேனைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் தேன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மனியில் ஒருவர் சராசரி ஓர் ஆண்டில் 10 முதல் 15 கிலோ தேன் சாப்பிடுகிறார். இதில் வெறும் 8.4% மட்டுமே இந்தியாவில் உட்கொள்ளப்படுகிறது. தேனின் மகத்துவத்தை இந்தியர்கள் இன்னும் உணரவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

தேன் மெழுகு

14 நாட்கள் வயதுள்ள வேலைக்காரத் தேனீக்கள் அவற்றின் வயிற்றுப் பகுதியின் அடியில் உள்ள சுரப்பிகளில் இருந்து தேன்மெழுகை உற்பத்தி செய்கின்றன. ஒரு கிலோ மெழுகை உற்பத்தி செய்ய ஏறக்குறைய 6.5 முதல் 8.5 கிலோ தேன் ஒரு தேனீ காலனிக்குத் தேவைப்படுகிறது. தேன் மெழுகில் முதன்மையாக மோனோ எஸ்டர்கள் அடங்கியுள்ளன.

செயற்கைத் தேனடைகள், கியூசெல்கப் போன்றவற்றை உருவாக்க, தேன் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் டிரம்கள், பேரல்களின் உட்புறப் பூச்சிற்காக தேன் மெழுகு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உடற்செல்களை மென்மைப்படுத்த, புனரமைக்க உதவும் என்பதால் தேன் மெழுகு அழகு சாதனங்களில் ஒரு முக்கிய பொருளாகப் பயன்படுகிறது.

நீர்க்காப்பு துணிகள் (water proof fabrics) தயாரிப்பு, தோல் பொருட்களின் பூர்த்தி செய்யும் தொழில் (finishing works), சூழலிற்கு நட்புடைய காலனித் தொழிலில் இது அதிகமாகப் பயன்படுகிறது. இது தவிர வண்ணப்பூச்சுகள், உதட்டுச் சாயங்கள், மெழுகு பொம்மைகள், இசைக்கருவிகள், குழந்தைகள் பயன்படுத்தும் வண்ண மெழுகு பென்சில்கள் (cryons) ஆகியவை தயாரிக்க தேன் மெழுகு பயன்படுகிறது. ஒரு கிலோ மெழுகு சந்தையில் இப்போது ரூ.450 முதல் 550 வரை விற்கிறது.

மகரந்தத்தூள்

மகரந்தத் தூள் தேனீக்களின் முக்கிய மாவு சத்து உணவு. மருத்துவ குணத்துடன் அதிக மதிப்பு கூட்டப்பட்ட பொருளான இது பல நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இதில் 25% மாவு சத்துடன் அமினோ அமிலங்கள், தாதுக்கள், நொதிகள், வைட்டமின் பி, சி, டி ஆகியவை உள்ளன.

வேலைக்காரத் தேனீக்கள் பூக்களில் இருந்து துகள்களை அவற்றின் பின்கால்களில் உள்ள போலன் கூடைகளில் (polen baskets) நிறைத்து சிறிய உருண்டைகளாக மாற்றி கூட்டிற்கு கொண்டு வருகின்றன.

ஒரு முறை ஒரு லோடு தூளைச் சேகரிக்க ஒரு தேனீ ஏறக்குறைய 50 முதல் 100 பூக்களில் சென்று அமர்கின்றது. இவ்வாறு தினம் 5 முதல் 50 முறை ஒரு தேனீ கூட்டை விட்டு வெளியில் செல்கிறது. கேரளப் பல்கலைக்கழகத்தில் செயற்கையாக மகரந்தத் தூளை சேகரிக்க புதியதொரு மகரந்தத் தூள் வலை (polen trap) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கேரளா வெள்ளாயினி விவசாயக் கல்லூரி துணைப் பேராசிரிய & அகில இந்திய தேனீக்கள் மூலமான மகரந்த சேர்க்கை ஆய்வுத் திட்டத்தின் (All India Project on Bee Polination) முதன்மை ஆய்வு விஞ்ஞானி (Chief investigator) டாக்டர் வி எஸ் அமிர்தா கூறுகிறார்.

இந்த வலை அக்கீல் என்ற விரிப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த உபகரணம் தேனீக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் கூட்டின் நுழைவாயிலில் கட்டப்படுகிறது. இதன் மூலம் செயல் திறனுடன் தூய்மையான தூளை சேகரிக்க முடியும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட தூளை நுண்ணுயிரிகளிடம் இருந்து பாதுகாக்க தூளில் உள்ள நீரின் சதவிகிதம் 5 முதல் 8% வரை இருக்குமாறு செய்யப்படுகிறது. 

புரொப்போலிஸ் (propolyse)

எப்பிஸ் (Epis) வகையைச் சேர்ந்த இந்திய, இத்தாலியத் தேனீக்கள், சிறுதேனீ ஆகியவை இதனை சேகரிக்கின்றன. ஐரோப்பியத் தேனீக்களுடன் ஒப்பிடும்போது இந்தியத் தேனீக்கள் மிகக் குறைந்த அளவே புரோப்போலிசை சேகரிக்கின்றன. குளிர்காலங்களில் இந்தியத் தேனீக்கள் இந்த மதிப்புமிக்க பொருளை அதிகமாக சேகரிக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. தேனீக்களின் கூட்டில் சட்டங்கள், இடைவெளிகளை அடைப்பதற்காக இதனை தேனீக்கள் பயன்படுத்துகின்றன.

மரங்களின் தோல் பகுதி, நுனிக் கிளைகளில் உள்ள அரக்கு போன்ற பொருளாக மாற்றி தேனீக்கள் இதைத் தயாரிக்கின்றன. இது தேனீக்களால் தேன் கூடுகளில் பாதுகாத்து வைக்கப்படுகிறது. இதில் 50% ரெசின், 30% மெழுகு உள்ளது. புராதன காலத்தில் எகிப்தில் இறந்தவர் உடல்களைப் பாதுகாக்க இது பயன்படுத்தப்பட்டது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளை அழிக்கும் திறனுள்ள புரோப்போலிஸ் பல தரப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

இது தவிர தோலில் தடவும் கிரீம், சுவிங்கம், பற்பசை போன்றவற்றில் இது முக்கிய பொருள். பிளாஸ்டிக் வலையைப் பயன்படுத்தி ஒரு தேன் கூட்டில் இருந்து ஏறக்குறைய 300 கி புரோப்போலிசை ஓர் ஆண்டில் தயாரிக்கமுடியும். 28 கி புரோப்போலிஸின் இன்றைய விலை ரூ.500. வெளிநாடுகளில் குழாய் மாத்திரை, மாத்திரை, டிங்க்ச்சர், எண்ணெய் (oil extract) என்று பல வடிவங்களில் புரோப்போலிஸ் விற்பனை செய்யப்படுகிறது.

ராயல் ஜெல்லி

6 முதல் 12 நாட்கள் வயதான ஒரு வேலைக்காரத் தேனீயின் ஹைப்போபிரிஞ்ஜில் சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் திரவத்தை மேண்டிகுலர் சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் திரவத்துடன் துல்லியமான அளவில் கலந்து தேனீ ராயல் ஜெல்லியைத் தயாரிக்கிறது. இது இளம் மஞ்சள் கலந்த வெள்ளை நிற அடர் திரவம்.

முட்டையில் இருந்து பொரிந்து வெளிவரும் வேலைக்காரத் தேனீ, ஆண் தேனீ ஆகியவற்றின் புழுக்கள் முதல் மூன்று வாரம், ராணித் தேனீயின் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் இதனை உணவாக உட்கொள்கின்றன. இதில் ஏறக்குறைய 67% நீர், 12 முதல் 15% புரதம் உள்ளது. விலைமதிப்பு மிக்க சத்துக்கள் நிறைந்த ராயல் ஜெல்லி மனிதர்களில் இளமை, கவர்ச்சியான தோற்றத்தை நிலைநிறுத்துவதற்கு உதவுகிறது. இது இரத்த கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கப் பயன்படுகிறது.

ஏராளமான அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி செய்ய இது உதவுகிறது. சரியாகப் பராமரிக்கப்படும் ஒரு தேன் கூட்டில் இருந்து ஐந்து, ஆறு மாதங்களில் 500 கி வரை இதனை சேகரிக்கலாம். இதற்காக செயற்கையாக ராணித் தேனீயை உருவாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. 3 முதல் 4 நாள் வயதுள்ள ராணித் தேனீ அறையில் இருந்து சேகரிக்கப்படும் புழுக்களிடம் இருந்தே அதிக அளவில் ராயல் ஜெல்லி கிடைக்கிறது. ஒரு ராணித் தேனீயின் அறையில் இருந்து 200 முதல் 300 கி வரை ராயல் ஜெல்லி கிடைக்கிறது.

நன்கு மூடப்பட்ட குப்பிகளில் சேகரித்து இதை குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து பாதுகாக்கலாம். இன்று இதன் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது சீனா. ஒரு அவுன்ஸ்/28 கி ராயல் ஜெல்லியின் சர்வதேச சந்தை விலை ரூ.4000. திரவ வடிவிலும், குழாய் மாத்திரை வடிவிலும் இது சந்தைப்படுத்தப்படுகிறது.

நஞ்சு (Epi toxin)

எதிரிகளிடம் இருந்து தேனீக்களுக்கு இயற்கை வழங்கிய ஒரு தற்காப்புப் பொருளே தேனீயின் நஞ்சு. வேலைக்காரத் தேனீயின் வயிற்றில் உள்ள தனித்தன்மை கொண்ட சுரப்பியில் இருந்து இது உற்பத்தி செய்யப்படுகிறது. நஞ்சுப்பையில் இது சேகரிக்கப்படுகிறது. தேனீ கொட்டும்போது அதன் கொடுக்கு வழியாக இது வெளியே செலுத்தப்படுகிறது. இரண்டு நாள் வயதான வேலைக்காரத் தேனீயில் இருந்து அதிக நஞ்சு கிடைக்கிறது.

இந்த நஞ்சைப் பயன்படுத்தி அளிக்கப்படும் சிகிச்சை தேனீ நஞ்சு சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. பல தரப்பட்ட பெப்டைடுகள் (Peptides) அடங்கிய இதில் மெலிட்டின் என்ற வேதிப்பொருள் அதிகமாகக் காணப்படுகிறது. மூட்டு வலி (tomotraid arthritis) குறைபாட்டிற்கு இந்த நஞ்சு ஒரு நல்ல மருந்து. செப்புக் கம்பிகள் பொருத்தப்பட்ட சட்டங்களில் (Copper frames) 12 வோல்ட் மின்சாரத்தை செலுத்தி தேனீக்களை தூண்டி இந்த நஞ்சு சேகரிக்கப்படுகிறது.

இந்தக் கருவியின் பெயர் நஞ்சு சேகரிப்பு பேடகம் (P venum clucter). இந்த முறையில் ஒரு இந்தியத் தேன் கூட்டில் இருந்து ஏறக்குறைய 30 நிமிடத்தில் 25 கி வரை நஞ்சை சேகரிக்க முடியும். இது ஒரு கண்ணடிப் பாத்திரத்தில் வைக்கப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. ஒரு கிராம் தேனீ நஞ்சின் விலை 50 முதல் 60 டாலர். தேனீ நஞ்சு உற்பத்தியில் சீனா உலகில் முதலிடத்தில் உள்ளது.

கொரோனாவைக் கண்டறிய உதவும் தேனீக்கள்!

மகத்தான தேனீக்களின் நற்பண்புகளுக்கு சிகரம் வைத்தாற்போல சமீபத்தில் ஒரு வியப்பூட்டும் செய்தி வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ்கள் உள்ள மாதிரிகளை அடையாளம் காண தேனீக்களுக்கு பயிற்சி வழங்கி ஆய்வுகள் நடைபெற்றன. இது வெற்றி கண்டுள்ளது. வாண்டல்பால் என்ற டச்சு விஞ்ஞானியின் தலைமையில் இந்த ஆய்வுகள் நடந்தன.

 எண்ணில் அடங்காத நன்மைகளை வாரி வழங்கும் இந்த அருமை உயிரினங்களின் வாழ்வை துயரமயமாக்காமல் பாதுகாக்க வேண்டியது மனித குலத்தின் பொறுப்பு. தித்திக்கும் தேனைத் தரும் இந்த உயிரினங்களின் வாழ்க்கையை சூழலிற்கு விரோதமான செயல்களால் நாம் கசப்பு மிக்கதாக மாற்றி விடக்கூடாது. தேன் எடுக்க மலர்கள் இல்லாமல், உண்ண உணவு கிடைக்காமல், வாழிடம் பறிக்கப்பட்டு பட்டினி கிடந்து இவை அழிந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலை நீடித்தால் நாளை நமக்கும் இதே கதி ஏற்படும்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It