யாருக்குமே நியாயமில்லாத பொழுதில்

நிகழ்ந்த மரணத்தின் நெடி வீசுகிறது

நெருப்பிட்டு தன்னை தீப்பந்தமாக்கியவனின்

செல்கள் கருக கருக உயர்ந்த தீக்கொழுந்துகளின்

முனைகளில் காற்றும் பற்றி எரிகிறது

சிதைக்கப்படும் மானுடத்தின் மூச்சைக்

காக்க

சிதையாய் எரிந்து கரிந்து போன

துயரம் அலையலையாய் அசைகிறது

நெருப்பின் வெம்மையில்

நிகழ்ந்த தவிப்பின் சுடர் கொளுத்திய தாகம்

தளும்பி தளும்பி வழிகிறது

உணர்ச்சியின் விளிம்பில் மக்களைத் தள்ளும்

அரசியல்

மரணத்தைவிட கொடுமையானது

கண்களின் கண்ணீர்ச் சித்திரங்கள்

செந்நீரால் சிதைக்கப்படுவதில்

தர்க்கம் என்ன வாழ்கிறது

மானுடப்பரப்பில் அமைதியற்ற

பிரதேசங்களெங்கும்

துன்பங்கள் கிளைத்து கிடக்கின்றன

துன்பம் செய்தவனின் திமிறறுக்காமல்

துடித்து நாம் சாவதில்

நமக்கென்ன இங்கே கிடைக்கிறது

எரிதல்கள் என்பவை தீமைகளுக்கானவை

விடுதலை மட்டுமே மக்களுக்கானது

Pin It