திருமகன். தமிழ்ச்சூழலில் பரபரப்பாக அறியப்பட்டிருக்க வேண்டிய பெயர். மூன்று கவிதைத்தொகுப்புகளை இவர் வெளியிட்டிருக்கிறார்.ஆனால், இன்றையதமிழ்க் கவியுலகம் இவரை இதுவரை அடையாளப்படுத்தியிருக்கிறதா?

‘எனக்காக / நானொரு பாடலைப் பாட முடியாது / ஏனென்றால் / எனக்கும் சேர்த்து அவர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள்' திருமகனின் இந்த வரிகள்தான் தமிழ் இலக்கியம் இன்னும் யாரிடம் இருக்கிறது என்று உணர்த்தும் வரிகள். இது இலக்கியத்தைக் கடந்தும் பொருந்துகிறது. கவிதையில் ‘பாடலை' என்ற இடத்தில் ‘வாழ்க்கை' என்று போட்டால் தலித் வாழ்க்கை. ‘அரசியல்' என்று எழுதிக் கொண்டால் தலித் அரசியல். இப்படி ஒரு ஓவியத்தை திருமகன் வரைந்திருக்கிறார்.

முத்து என்னும் இயற்பெயர் கொண்ட திருமகன், தூத்துக்குடி மாவட்டம் உழக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர். நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்டைகளுக்கு வயல்வெளிகளில் வேலை செய்வதற்காக தலித்துகளைக் கொண்டு வந்து இங்கு குடியமர்த்தி உருவாக்கப்பட்டிருக்கிறது இவருடைய ஊர். இந்நிலத்தின் ஆதிக்கம் முன்பொரு காலத்தில் பார்ப்பனர்களிடமும் தற்பொழுது பிள்ளைமாரிடமும் இருக்கிறது.

ஜாதி ஆதிக்கம் நிறைந்த ஊரில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற திருமகன் முதலில் சென்னையில் ‘உதவும் கரங்கள்' என்ற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர் அய்.ஏ.எஸ். அதிகாரியான கிருத்துதாசு காந்தி அவர்களின் உரையை ஒரு முறை கேட்டதற்குப் பிறகு தன்னால் தொழில் முனைவராக பொருளாதாரத்தை ஈட்ட முடியும் என்று முடிவெடுத்து, இன்றைக்கு சென்னையில் மிகச்சிறப்பாக அப்பள வணிகம் செய்து கொண்டிருக்கிறார். பள்ளிக் காலத்திலேயே எழுத வந்த அவருடைய முதல் கவிதை ‘செம்மலரில்' வெளிவந்தது. பின்னர் நவீன கவிதைகளுடன் ஏற்பட்ட தாக்கத்தில் பெரும்பாலும் தன்னுணர்வுக் கவிதைகளை எழுதி இருக்கிறார்.

திருமகனின் முதல் தொகுப்பான ‘நிகழ்காலம்' 2005 இல் வெளிவந்தது. இவருடைய இரண்டாவது தொகுப்பு ‘சேரியிலிருந்து வருகிறேன்'; மூன்றாவது தொகுப்பு’கழிவறைக் கடவுள்கள்'. அதற்குப் பிறகுதான் யாருக்காக நாம் எழுத வேண்டும் என்று அவர் உணர்ந்த தருணத்தை மிக முக்கியமானதாகக் கருதுகிறார். ‘தலித் முரசு' வாசிக்கத் தொடங்கிய பிறகு அரசியல்ரீதியான எழுத்து அவருக்குள் விளைந்திருக்கிறது. இப்போதெல்லாம் அவர் கவிதையின் அரசியலையும் கவிதைக்கான அரசியலையும் தலித் அரசியலாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

உறைக்குள்/விழித்திருக்கும் வாளை உருவி எடுக்க / கண நேரமாகாது எனக்கு / உன்னோடு முடிந்துவிடக் கூடாது / என் பெருங்கோபம் / அனலில் வறுத்தெடுத்து / பொறுக்கிப் பொறுக்கிச் சேர்க்கிறேன் / சூடு பரத்தும் சொற்களை / இனிவரும் தலைமுறையின் / நாவுகளில் / நாடி நரம்புகளில் / விடுதலையின் தீ / பற்றி எரியவென்று – என எழுதும் அவர் தன்னுடைய இத்தொகுப்புக்கு ‘சேரியிலிருந்து வருகிறேன்' என்று பெயர் சூட்டியிருக்கிறார். இப்படியான தலைப்பைச் சூட்டுவதற்கு துணிச்சல் வேண்டும். பொதுவான தலைப்புக்குள் தலித் கவிதைகளை அடைத்துவிடும் இன்றைய நிலையில் நீங்கள் அட்டையிலேயே இப்படி அசத்தியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, வார இதழ் ஒன்றில் தலித் எழுத்தாளரான பாமா அளித்த நேர்காணலில் தன் அடையாளத்தை வெளிப்படையாகச் சொன்னதுதான் தன்னுடைய துணிச்சலுக்கு காரணம் என்கிறார்.

பரமாத்மாக்களின் / நாற்றமெடுக்கும் நீதியின் சட்டங்களை / ஜீவாத்மாக்களின் வன்மம் வழியும் / ஏளனப் பார்வைகளை மகாத்மாக்களின் / வஞ்சகம் இழைக்கும் போலிப் பரிவுகளை எதிர்கொண்டுதானிருக்கிறேன் / தினம் தினம் அவலம் பெருகுமென் / சக ஆத்மாக்களின் / விழிகள் புன்னகைக்கும் வரை / உங்களது ஆன்மிக அருளுரைகளின்/அரசியல் முழக்கங்களின் / பொருளியல் / கோஷங்களின் / மேல் / மூத்திரம் / பெய்து கொண்டிருப்பேன் / நான் – என தனது அரசியலை நிலைநிறுத்தும் இலக்கியத்தை அவர் நிர்மாணிக்கிறார்.

தலித் இலக்கியத்தின் தேவை இன்றும் கூடிக்கொண்டிருக்கிறது என்று அடித்துக் கூறும் திருமகன், ஜாதி இருக்கும் வரை தலித் இலக்கியம் அதற்கு எதிர்வினையாற்றும் என்று உறுதிபடக் கூறுகிறார். தலித் இலக்கியத்தின் பாடுபொருள் அதன் தேவையை எப்போதும் உணர்த்துவதாகவே உள்ளது. தேங்கிப்போயிருந்த தமிழ் இலக்கியத்தை உயிர்ப்படையச் செய்தது தலித் இலக்கியம்தான். அதுவரை வெறும் புனைவாக இருந்த தமிழ் இலக்கியம் அதன் பிறகுதான் புதிய பரிமாணத்தைப் பெற்றது. சொல்லப்படாதவை இன்னும் ஏராளம் இருக்கின்றன. அனைத்து தலித் பகுதிகளிலிருந்தும் ஆக்கங்கள் பூத்துக் குலுங்க வேண்டும் என்கிறார்.

1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த சாதிக்கலவரத்திற்குப் பிறகு அவருடைய ஊரில் தலித் இளைஞர்களிடம் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தங்களை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் தீவிரமாக வேர் கொண்டுள்ளது. அதனால்தான் குடிசை வீடுகள் இன்று காரை வீடுகளாயிருக்கின்றன.படிக்கும் ஆர்வம் பெருகி இருக்கிறது. பண்பாட்டுத் தளத்திலும் பெரும் மாற்றங்கள் உருவாகி இருக்கின்றன. எங்கெல்லாம் சாதிக்கலவரங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் சாதி இந்துக்களுக்கு பின்னடைவுதான் ஏற்பட்டிருக்கிறது என்று கூறும் அவர், ஆண்டுக்கொரு முறை தன்னுடைய ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அங்கிருக்கும் இளைஞர்களுக்கு நூல்களையே பரிசாக வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

பெருநகரங்களிலெல்லாம் யாருடைய ஜாதியும் யாருக்கும் தெரியாது; இங்கு அறவே ஜாதிப் பாகுபாடுகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், சென்னைக்கு வந்த பிறகு திருமகனின் ஜாதி அடையாளம் தெரிந்ததால் நான்கு முறை அவர் தனது வீட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறார். அடக்க நினைப்பவனுக்குத்தான் / ஆயுதம் தேவை / அடங்க மறுப்பவனுக்கு / அறிவே தேவை – என அறிவை ஆயுதமாக்கும் அவர் ‘வா வா சகோதரா' எனத் தொடங்கும் கவிதையில் கம்பு சுழற்ற, வாள் வீச, குறி தவறாமல் துப்பாக்கியால் சுட சொல்லிக் கொடுக்கும் அதே நேரத்தில் – ஓர் எழுதுகோலையும் எடுத்துக்கொள்வாயெனில் – நலம்பெறலாம் நானும் என்று முடிக்கிறார்.

இக்கவிதை இயங்கும் இரண்டு தளங்களை நாம் கவனித்தால், இது தலித்துகளுக்கு கல்வியை வலி யுறுத்துவதாக அமைகிறது; அடுத்து சாதி இந்துக்களும் எழுதுகோலை எடுத்துவிட்டால் தலித்துகளுக்கு எதிரான வன்முறை கைவிடப்படும் என்ற அவருடைய எதிர்பார்ப்பும் அடங்கியிருக்கிறது!

அம்பேத்கரின் நூல்களை வாசித்த பிறகு, தான் இந்துவாக இருப்பதில் அர்த்தமே இல்லை என்பதை உணர்ந்த இவர் பவுத்தத்தைத் தழுவியுள்ளார். அம்பேத்கரே பவுத்தத்தை தழுவிய பிறகு நமக்கு எதற்கு மாற்று?பவுத்தம் இப்போது வலுவற்றதாக இருக்கலாம். ஆனால் அம்பேத்கரின் கனவு நனவாகும்போது இந்துத்துவத்திற்கு பெரும் சவாலாகத் திகழும் எனக் கூறும் திருமகன், ஒரு பவுத்தராக இந்த சாதிய சமூகத்தில் விடுதலை பெற்ற மனிதனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறார். தனது மனைவிக்கு அருள்மொழி என்றும் குழந்தைக்கு குறிஞ்சி மலர் என்றும் மத அடையாளங்களற்ற பெயர்களை வைத்திருக்கிறார்.

இவருடைய ‘கழிவறைக்கடவுள்' தொகுப்பு முழுக்க முழுக்க பெரியாரியலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட தொகுப்பு. மூட நம்பிக்கைகளுக்கு எதிரான இவருடைய கவிதைகள் போர்ப்பரணி பாடி இருக்கின்றன. ஒருமுறை / ஒரே ஒரு முறை / உலகறியத்தன்னை / தன் இருப்பை / வெளிப்படுத்திக் கொள்ளக்கூட / திராணியற்றவராய் இருக்கிறார் / எல்லாம் வல்ல கடவுள் என்பது போன்ற கவிதைகள் தொகுப்பு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. அம்பேத்கர் – பெரியார் என்ற இரு புரட்சியாளர்களின் இணைப்பு இன்றைய சூழலில் இந்துத்துவத்திற்கு எதிரான நம் அறிவாயுதங்களாகத் திகழ்கின்றன என்கிறார் திருமகன்.

அழிக்க முடியாத பெருமரமாக விரிந்திருக்கும் தலித் இலக்கியத்தில் அவ்வப்போது பல விழுதுகள் இறங்கி மண்ணில் ஊன்றி வேராகி அதைத்தாங்கிப் பிடிக்கின்றன. அப்படிப்பட்ட மய்ய விழுதாக நிற்கிறார் திருமகன்! 

                – யாழன் ஆதி

திருமகனை தொடர்பு கொள்ள:                 98402 46979

Pin It