மொழியின் மேலான ஆளுமையில் தான் மனித நாகரிகத்தின் வளர்ச்சிப் படிநிலைகள் அளக்கப்படுகின்றன. காடுகளில் மனிதர்கள் சுற்றித் திரிந்த காலங்களில் அவர்களின் வாழ்க்கை முறை உணவுக்கானதாக மட்டுமே இருந்தது. ஆனால் காலம் மாற மாற, மனிதனின் மொழி ஆளுமை வளர வளர, மனித வாழ்க்கை என்பது உணர்வுக்கானதாகவும் அறிவுக்கானதாகவும் மாறியிருக்கிறது. இந்த உணர்வுநிலை எப்படிப்பட்டது என்பதைக் கொண்டுதான் ஒரு சமூகத்தின் மதிப்பீடு உருவாக்கப்படுகிறது. மனித வேற்றுமைகளைக் காட்டும் உணர்வுநிலையைத் தன்னகத்தே கொண்டுள்ள சமூகத்தை முற்றிலும் நாகரிகமடையாத ஒரு சமூகமாகவே கருத முடியும். வேற்றுமையற்ற ஒரு சமநிலைச் சமூகத்தை ஏற்றுக்கொள்ளும் உணர்வு நிலையே நாகரிகத்தின் உச்சமாகும். 

puthumaipithan 320சென்னை பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு கதைகள் தலித் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடியவனவாக இருக்கின்றன. ஒன்று புதுமைப்பித்தனின் "துன்பக்கேணி'; மற்றொன்று வண்ணநிலவனின் "கடல்புரத்தில்.' முன்னது முப்பதுகளில் எழுதப்பட்ட சிறுகதை. பின்னது எழுபதுகளில் எழுதப்பட்ட நாவல். "துன்பக்கேணி' சிறுகதை விடுதலைக்கு முன்பான வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. இலங்கை தேயிலைத் தோட்டங்களில் தலித்துகளை அடிமைகளாகக் கொண்டு சென்றனர் என்ற பதிவு அதில் இருக்கிறது. மருதி என்ற தலித் பெண் கதையின் நாயகி. அவருடைய கணவர் வெள்ளையன் திருட்டுக்குற்றச்சாட்டால் சிறைக்குச் செல்ல, அதற்குப் பிறகு மருதியின் வாழ்வில் ஏற்படும் சிதைவுகள் கதையாக வளர்கிறது. மருதி இலங்கையில் இருக்கும் தேயிலைத் தோட்டத்திற்குச் செல்வது, அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு பலியாவது, குழந்தை பெற்றுக் கொள்வது, மீண்டும் தமிழகத்திற்கு வருவது என அந்தக் கதை அமைந்துள்ளது.
 
இன்னொரு கதை "கடல்புரத்தில்' என்னும் கடலோர கிராமத்தின் கதை. இது கடலோடிகளின் வாழ்க்கையைச் சொல்லுகிற கதையாக பிலோமி மற்றும் அவருடைய அம்மாவின் தனிவாழ்வைச் சொல்கிற து.
 
இவ்விரண்டு கதைகளையும் எழுதியவர்கள் தமிழின் மிக முக்கிய கதைஞர்கள். முப்பதுகளில் எழுதிய புதுமைப்பித்தன் தமிழ்ச்சிறுகதையின் நவீன போக்குக்கு வழிவகுத்தவர். "பொன்னகரம் பொன்னகரம் என்கிறீர்களே பாருங்கள் அய்யா, இதுதான் பொன்னகரம்' என்று மாறிவரும் பொருளாதாரச் சூழல் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதைப் பதிவு செய்தவர். வண்ணநிலவனின் கதைகளும் மக்களின் வாழ்வைச் சொல்லக் கூடியவை. நுணுக்கமாக அல்லது யாரும் பார்க்க முடியாத வேறு கோணத்தில் வாழ்வை அதன் அசலாகப் பார்க்கக் கூடியவை.
 
சரி. இப்போது பிரச்சினைக்கு வருவோம். "துன்பக்கேணி' கதையும் "கடல்புரத்தில்' நாவலும் சென்னை பல்கலைக்கழகத்தின் இளங்கலை
அறிவியல் மற்றும் கலை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடத்தில் 2013 – 14 கல்வியாண்டில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டு கதைகளுக்குள்ளும் இருக்கும் உரையாடல்களில் பாத்திரங்களின் கூற்றாக வரும் பல இடங்களில் தலித் மக்களை இழிவுபடுத்தும் சொற்களும் வசவுகளும் இடம்பெற்றுள்ளன. பல இடங்களில் தலித்துகள் ஏமாற்றக்கூடியவர்கள், நன்றியில்லாதவர்கள், தலித் பெண்கள் பாலியல் பிறழ்வு மனநிலை கொண்டவர்கள், அவர்கள் குடிக்கக் கூடியவர்கள், யாருக்கும் தெரியாமல் எதைச் செய்தாலும் பாவமில்லை என்றுக் கருதக் கூடியவர்கள். என்பதான பல இழிவான சித்தரிப்புகள் இருக்கின்றன. 
 
அக்கதைகளில் சித்தரிக்கப்பட்ட தலித் பாத்திரங்கள் எல்லாமே சோரம் போனவையாக, அறம் அற்றவையாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் இலக்கியத்தை வெறும் இலக்கியமாகத்தான் பார்க்க வேண்டும் என்னும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. சாதியை முன்வைத்து சமூகத்தில் நடக்கும் கொடுமைகளையும் அவமானங்களையும் தட்டிக்கேட்கிறோம். மரபார்ந்த சமூக வழக்கமாக சாதிய வழக்குகளை மாற்றுவதற்காகப் பண்பாட்டுத் தளங்களில் நாம் செயல்படுகிறோம். இக்கதையில் வரும் ஒரு சாதி இந்து தலித்துகளைப் பார்த்து, "இந்தப் பறையன்களே இப்படித்தான்' என்று போகிற போக்கில் சொல்கிறார் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 
 
பறையடிப்பது இழிவு என்னும் கருத்திற்கு எதிராகப் பறையை நாம் விடுதலைக்கான கருவியாகப் பயன்படுத்துகிறோம். அவர்கள் அப்படி சொல்லிவிட்டார்கள் என்பதற்காக விட்டுவிடுவது என்பதோ, ஏற்றுக்கொள்வது என்பதோ நடக்காத ஒன்று. இலக்கியத்தை மட்டும் நாம் எப்படி விதிவிலக்காக்க முடியும்? ஏகலைவனின் விரலை சாதியின் பெயரால் காவு வாங்கியதைச் சரியானது என்று நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. சம்பூகனைக் கொன்ற ராமனின் செயலை நாம் இலக்கியம் என்று விட்டுவிடவில்லை. இதிகாசம் என்னும் நிலையைக் கடந்து அதனை மறுவாசிப்பு செய்கிறோம். ராமாயணத்தைக்கூட ஆரியர் து திராவிடர் போராக மட்டுமே பார்க்கிறோம். சுந்தரராமசாமி எழுதிய "பிள்ளை கெடுத்தாள் விளை' சிறுகதையில் ஒரு தலித் பெண் ஆசிரியர் மாணவரிடம் தவறாக நடந்தார் என்ற கதையைக் கண்டித்து "தலித் முரசு' கண்டனக் கூட்டம் நடத்தியது. 
 
பெருமாள் முருகனின் "மாப்புக் கொடுக்கோனும் சாமி' என்னும் சிறுகதையில் தலித் மக்கள் தங்கள் சட்டிகளில் மாட்டுக்கறி குழம்பு கொதிக்க வேண்டும் என்பதற்காக, தினந்தோறும் சாதி இந்துக்களின் மாடுகளைக் கொல்கிறார்கள் என்றும் அது கண்டுபிடிக்கப்பட்டு அம்மக்கள் சாதி இந்துக்களால் தாக்கப்படும்போது தலித் மக்கள் மன்னிப்புக் கேட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இத்தகைய உருவாக்கங்களை எல்லாம் நாம் கண்டித்தாக வேண்டும். அதை வெறும் இலக்கியமாக மட்டுமே பார்க்க முடியாது. மறுவாசிப்பில், ஒரு தலித் பார்வையில் கேள்விகள் எழும்போது அவர்களுக்கு பதில் சொல்லும் கடமை இருக்கிறது.
 
கல்வி என்பது என்ன என்று வரையறுத்த கல்வியாளர்கள் அதை "நடத்தையில் மாற்றம்' என்று சொல்கின்றனர். இதுவரை இருந்த நடத்தையிலிருந்து மாறி புதிய நடைமுறைக்கு வருவது. ஆனால் கல்விப் புலத்தில் வைக்கப்படும் இத்தகைய கதைகள் அத்தகைய மாற்றத்தை மாணவர்களிடையே ஒருபோதும் கொண்டு வராது. ஏற்கனவே சாதிய சமூகப் பின்புலத்திலிருந்து வருகின்ற மாணவர்கள், தலித் மாணவர்களுக்குத் தரப்படும் இடஒதுக்கீடு மற்றும் கல்வி உதவித்தொகையைக்கூட தவறு எனக் கருதும் சாதிய மனநிலைக் கொண்டவர்களாகவே இன்றும் இருக்கின்றனர். 
 
அண்மையில் நடைபெற்ற தருமபுரி தாக்குதலில் தன் சக மாணவர்களின் வீடுகளை ஆதிக்க சாதி வகுப்பு மாணவர்களே கொளுத்தினார்கள் என்று சாட்சிகள் சொன்னதை நாம் மறந்துவிட முடியாது. மேலும் அரசியல் தளத்தில் தலித்துகள் தனிமைப்படுத்தப்பட்டு வரும் இன்றைய சூழலில் இந்தக் கதைகளில் வரும் தலித் மக்கள் மீதான வசவுகள் – அது ஆசிரியர் கூற்றாக இருந்தாலும் பாத்திரங்களின் கூற்றாக இருந்தாலும் – படிக்கிற ஆதிக்க சாதி மாணவர்களுக்கு தன் வகுப்பில் இருக்கும் தலித் மாணவர்கள், மாணவிகள் மீது ஓர் இழிவான பார்வையையே அது உருவாக்கும். தலித் மாணவர்களிடையே அது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். அக்கதைகளை நடத்தும் பேராசிரியர்கள் தலித் அல்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றை மிக விரிவாகவும்; தலித்துகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று அனைவரின் மனதில் பதியும்படியும் நடத்துவார்கள். தலித் பேராசிரியர்கள் அதை விரிவாக நடத்தாமல் கடந்து போக வேண்டும் என நினைப்பார்கள். அங்கே விவாதங்கள் நடக்கும்போது தலித் மாணவர்கள் நிச்சயம் புண்படுவார்கள்.
 
“வரவர பறக்கழுதைகளுக்கும் திமிறு ஏறுது என்று எதிரில் இருந்த பறைச்சிறுமியை அதட்டிக்கொண்டு, பண்ணையாரிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார் ஒட்டாரம்பிள்ளை'' என்ற புதுமைப்பித்தனின் வரிகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு மேற்சொன்ன நிலையில் நாம் வைத்துப்பார்த்தால், இந்தக்கதைகள் எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும். ஒற்றுமையாக இருக்கவேண்டிய வகுப்பறைச் சூழலை இது சீர்குலைக்கும். சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குட்பட்ட எல்லா கல்லூரிகளிலும் இது பாடமாக இருக்கும்போது, அக்கல்லூரிகள் அமைந்திருக்கும் பட்டிதொட்டிகளில் எல்லாம் சமூக அமைதி உருவாவதற்குப் பதில், சாதிய மனநிலையே மேலோங்கும்; சாதி மோதலுக்கு வழிவகுக்கும். சாதியற்ற சமூகத்தை உருவாக்க வேண்டிய கல்வி நிலையங்கள், சாதிய முரண்களை உரத்துப் பேசும் இத்தகைய கதைகளைப் பாடத்திட்டத்தில் வைப்பதை எப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?
 
ஒரு கதையை கல்வித் திட்டத்தில் சேர்க்கும்போது, அதற்கு இருக்கும் இலக்கிய மதிப்பீட்டை மட்டும் அளவுகோலாக வைத்துப்பார்ப்பது நவீன கல்விச் சூழலுக்கு ஏற்றதாக இருக்காது. அதன் சமூக மதிப்பீடு மற்றும் அதன் வாழ்வியல் மதிப்பீடு என்ற வகையிலும் அவற்றை ஆராய வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சமூக அமைப்பை கல்வி உருவாக்க முடியும். கெடு வாய்ப்பாக, கல்வி என்பது ஏதோ தனிப்பட்ட மாணவனின் மனப்பாடத்திறனைப் பொருத்தது என்னும் நிலை இங்கே கல்வியாளர்களிடம் இருப்பதால்தான் இப்போது இருக்கும் மாணவ சமூகத்தில் சமூக அக்கறை கொண்டவர்கள் மிகவும் சொற்பமாக இருக்கின்றனர்.
 
புதுமைப்பித்தன் மற்றும் வண்ணநிலவனின் பிற கதைகளைப் பாடமாக வைத்திருப்பதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் புதுமைப்பித்தன் எழுதிய 103 சிறுகதைகளில் அவர்கள் ஏன் "துன்பக்கேணி'யைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்? பொன்னகரம் கதையை வைத்திருக்கலாம்; "ஆற்றங்கரைப் பிள்ளையார்' கதையை வைத்திருக்கலாம்; "கோபாலைய்யங்காரின் மனைவி' கதையைக்கூட வைத்திருக்கலாம். இல்லை, இந்தக் கதைகளில் ஏதாவது பிரச்சினை இருக்கும்பட்சத்தில் அவற்றையும் விவாதித்து வைத்திருக்கலாம். அவற்றை எல்லாம் விட்டுவிட்டு தலித் மக்களை இழிவுபடுத்தும் கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன? "கடல்புரத்தில்' நாவலும் அப்படித்தான். வண்ணநிலவனின் பிற கதைகளை அவர்கள் பாடமாக வைத்திருக்கலாம். இவ்விரு கதைகளையும் பாடமாக வைத்த உளவியலைத்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
 
சமூகத்தளத்தில் நடைபெறும் சாதிய வன்கொடுமைகள் குறைந்தபட்ச எதிர்ப்புகளையாவது சந்தித்துவிடுகின்றன. ஆனால் இலக்கியப் போர்வையில் நடைபெறும் இத்தகைய வன்மங்கள் தொடர்ந்து கண்டுகொள்ளப்படாமல், கேள்வி கேட்கப்படாமலேயே இருக்கின்றன. இலக்கியங்களிலும் பாடநூல்களிலும் உருவாக்கப்படும் இத்தகைய கருத்தியல்களே சமூகத்தளங்களில் நடைபெறும் வன்கொடுமைகளுக்கு அடித்தளமிடுகின்றன. இதைக் கருத்தில் கொண்டுதான் தலித் மக்களை இழிவுபடுத்தும் கதைகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெய்சாம்யாக் என்ற தமிழ்ப் பேராசிரியர் தொடுத்திருக்கிறார். வன்கொடுமைகள் நிகழாமல் தடுக்கும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு உண்டு. 
 
vannanilavan 320ஜாதிப் பாகுபாடு பாடம் ஆகலாமா?
 
கள்ளப்புருஷனுடன் கொஞ்சுகிறாளாம்.... பறக்குடியில் தப்பிப் பிறந்த அபூர்வமான பெண். ("கடல்புரத்தில்' பக்கம் 27)
 
இது என்னல நாத்தம் புடிச்ச பறையக் குடியின்னு நெனச்சீயளா. ("கடல்புரத்தில்' பக்கம் 62)
 
பறையக்குடி பெண்களுக்கெல்லாம் வெளியே சொல்லத் தெரியா ஸ்தூலமானதொரு இருட்டு மனசில் இருந்தது. ("கடல்புரத்தில்' பக்கம் 71)
இந்தப் பறையனுவளில் யோக்கியன் எவனுண்டு. 
 
("கடல்புரத்தில்' பக்கம் 103)
 
வரவர பறக்களுதைகளுக்கும் திமிறு ஏறுது! என்று எதிரிலிருந்த பறைச்சிறுமியை அதட்டிக் கொண்டு பண்ணையாரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார் ஒட்டப் பிடாரம் பிள்ளை. ("துன்பக்கேணி' பக்கம் 90)
 
பண்ணையார் பறச்சனமோ குறச்சனமோ என்று வெறுத்துக் கொண்டார். என்ன செய்தாலும் நன்றியில்லை என்ற மனக்கசப்பு. ("துன்பக்கேணி' பக்கம் 91)
 
“குற்றமுள்ள கதைகளை ஆதிக்க சிந்தனைதான் இலக்கியமாகப் பார்க்கும்' ' 
 
பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் புதுமைப்பித்தன் மற்றும் வண்ணநிலவன் எழுதியுள்ள சாதிப்பாகுபாட்டை வலியுறுத்தும் கதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என பேராசிரியர் ஜெய்சாம்யாக் தொடுத்துள்ள வழக்கை, உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சு.சத்தியச்சந்திரன் வாதிடுகிறார். இவ்வழக்கு குறித்து அவருடன் ஒரு நேர்காணல்.
 
 இந்த வழக்கிற்கான அடிப்படை முகாந்திரம் என்ன?
 
பொதுவெளியில் இது இலக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் கல்விச்சூழலில் இது பாடமாக மாறுகிறது.ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பாடத்திட்டத்திற்கென ஒரு குழு இருக்கிறது. அதனுடைய வேலை பாடங்களை மாணவர்களுக்கு தேர்ந்தெடுத்து தருவதுதான். அப்படித் தேர்ந்தெடுக்கும்போது இரண்டு விஷயங்களை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்: 1.பாடமாகத் தரும் செய்தி தவறானதாக இருக்கக்கூடாது. 2.ஒருவேளை அது சரியானதாகவோ, வரலாறாகவோ இருந்தாலும் அது யாரையும் புண்படுத்தக்கூடாது. இக்கதைகள் பாடமாக வைக்கப்பட்டபோது இவற்றை பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழு கவனத்தில் கொள்ளவில்லை. நாடார்கள் பிரச்சினையை நீங்கள் எடுத்துக்கொண்டால் தோள்சீலைப் போராட்டம் வரலாறாக இருந்தாலும் அது சிலரைப் புண்படுத்துகிறது என்பதற்காக அந்தப்பாடத்தை நீக்க வேண்டும் என்று கோரினார்கள். அந்த சாதியினருக்கு அரசியல் செல்வாக்கு, வணிக பலம் மற்றும் அரசின் நிர்வாகத்தில் அச்சாதியினரின் பிரதிநிதித்துவம் இருப்பதால் இது எளிதில் சாத்தியமாயிற்று. அவர்கள் வாக்குவங்கியாகவும் இருப்பதால் எல்லா அரசியல் கட்சிகளும் அவர்களின் கோரிக்கைக்கு குரல் கொடுப்பவையாக இருக்கின்றன. இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆதரவும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தலித்துகளின் நிலை அப்படியில்லை.
 
புதுமைப்பித்தனின் கதை 1939 லும் வண்ணநிலவனின் கதை 1970 களிலும் வெளிவந்தன. அப்போதெல்லாம் எதிர்க்காமல் இப்பொழுது மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்?
 
அந்தக் கதைகள் அதுவரை படிக்கப்பட்டுதான் வந்தன. "கடல்புரத்தில்' நாவலை நான்கூட படித்திருக்கிறேன். அப்போது இந்தப்பார்வையில் படிக்காமல் ஒரு வாழ்வைப் பதிவு செய்த வகையில் படித்தேன். ஆனால் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு எழுந்த தலித் எழுச்சி, தலித் இலக்கியத்தின் தாக்கம் எல்லாம் மாற்றுப்பார்வையைக் கொண்டு வந்து சேர்த்தன. அதுவும் இக்கதைகள் கல்விச்சூழலில் பாடமாக வைக்கப்படும்போது அவற்றை நாம் நுட்பமாக, ஆய்வு நோக்கோடுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.
 
இந்தக் கதைகள் ஏன் ஆட்சேபனைக்குரியனவாக இருக்கின்றன என்றால், இந்தக் கதைகள் தலித்துகள் குறித்த ஒரு தவறான பிம்பத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துகின்றன. தலித் அல்லாத மாணவர்கள் படிக்கின்றபோது, அது தலித் மாணவர்கள் மீது நகைப்பை உருவாக்கும். சாதிய மனநிலையில் இருக்கும் மாணவர்கள் கதையில் இருப்பதைப் போலவே தலித் மாணவர்களை சாதிப்பெயரைச் சொல்லி கேலிக்குள்ளாக்குவதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.
 
எடுத்துக்காட்டாக, சட்டக்கல்லூரி மாணவர்களின் மோதல் 2009 இல் நடைபெற்றது. அதற்கு முக்கியக் காரணம், முக்குலத்தோர் மாணவர்கள் தாங்கள் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் படிக்கவில்லை; சென்னை சட்டக்கல்லூரியில்தான் படிக்கிறோம் என்று கூறியதுதான். தாங்கள் படிக்கும் கல்லூரியின் பெயரில் அம்பேத்கர் பெயர் இருந்தால், அதைக்கூட நாங்கள் உச்சரிக்க மாட்டோம் என்று எண்ணும் மாணவர்களுக்கு இத்தகைய கதைகள் எத்தகைய உணர்வினைக் கொடுக்கும்? அது மட்டுமல்ல, இந்தக்கதைகளைப் பாடமாக நடத்தும்போது அங்கிருக்கும் தலித் மாணவர்களின் நிலை என்ன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால்தான் அத்தகைய கதைகளை நாம் எதிர்க்கிறோம்.
 
இந்தக் கதைகளை நாம் இலக்கியமாகத்தான் பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்களே?
 
அப்படிச் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் ஆதிக்க மனநிலையில் இருப்பவர்கள் என்றுதான் பொருள். எல்லா நேரத்திலும் அப்படி இலக்கியமாகப் பார்க்க முடியாது. நான் இப்படிச் சொல்கிறேன். பறையர் என்ற சமூகம் இப்போது இருக்கிறதா, இல்லையா? இருக்கிறது. "டே பறப்பயலே' என்று ஒருவர் சொன்னால் அது குற்றமா இல்லையா? குற்றம் என்றால் இந்தக் கதைகளும் குற்றமுடையவைதாம். இன்னொன்றையும் கேட்கிறேன். இந்தக் கதைகள் பாடமாக இருப்பதற்கு வேறென்ன சிறப்புக் காரணங்கள் இருக்கின்றன என்று சொல்ல முடியுமா?
 
வழக்கின் தற்போதைய நிலை என்ன?
 
வழக்கு விசாரணையில்தான் இருக்கிறது. இடைக்காலத் தீர்ப்பாக இவ்விரண்டு கதைகளையும் பாடமாக நடத்துவதை நிறுத்தக் கோரியதற்கு, நீதிமன்றம் வழக்கை இறுதித் தீர்ப்பிற்கே எடுத்துக் கொள்வதாகக் கூறிவிட்டது. ஆனால், நாங்கள் பல்கலைக் கழகத்திற்கு கொடுத்த விண்ணப்பத்தின் பேரில் தற்பொழுது நடைபெறும் தேர்வுகளில் அப்பாடங்களிலிருந்து கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. 
Pin It