பெருமழைக்கு நடுவே
சிறுமழை உன் இணைவு
புனைவல்ல பூங்காவனம்
உன் காலடி பட்ட மழை புனைவு

குடையற்ற போதும்
கூந்தல் கொண்டு மறைக்கும்
நின் காந்தள்
விடையற்ற போதும்
சந்தம் கொண்ட பதில்தான்
உன் காந்தம்

மின்னிடும் கீறல் மொழி
வெளிச்சத்துக்கு
பூத்தூவும் சாரல் மழை
வெளி சத்தத்துக்கு

ஊன் உருக உயிர் பருக
விழி நான்கில் நம் இருள்
பொருள் கூசும் விரல் இடுக்கில்
பொன் நிறம்தூவும் நக நுனி

இசை வந்து வந்து மோதும்
நம் திசைக்கு நாமே நாதம்
இமை மூட துளி கூடும் பெருமழை
இதழ் மூட தேன் துளி பெருங்கலை

சிறுகுருவி
சிலிர்க்கும் மரம்
பச்சை வழித்தடம்
பதுங்கும் புலி மேகம்
மழையோடு மழையாக
ஓவியம் நுழைகிறோம் நாம்

- கவிஜி

Pin It