புரட்சியாளர் அம்பேத்கரின் 118ஆவது பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று மத்திய, மாநில அரசுகள் விடுமுறை என அறிவித்து, ஊடகங்களில் அரசு செய்தியாக வெளியிட்டது. ஆனால் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் விடுமுறைக்கான காரணத்தை அறிந்திருக்கவில்லை. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களில் அம்பேத்கர் பிறந்த நாளுக்காகத்தான் அரசு விடுமுறை விட்டுள்ளது என்ற உண்மையை சாதி இந்துக் கூட்டம் மிகக் கவனமாக மாணவ சமூகத்திடம் மறைத்து விட்டது.

ஏப்ரல் 14 புத்தாண்டு. அதனால்தான் அரசு விடுமுறை என்கிறது சாதி இந்துக் கூட்டம். தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு என தமிழக அரசு அறிவித்த பின்னும் இத்தகைய போக்குகள் நீடிப்பதற்குக் காரணம், அம்பேத்கர் என்ற மாமனிதரை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்ற பிற்போக்குச் சிந்தனையே தவிர, வேறெந்த காரணம் இருந்துவிட முடியும்?

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளில் அவருடைய அளப்பரிய சிந்தனைகளை வெகு மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், அம்பேத்கர் பண்பாட்டுப் பாசறையின் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு திருவில்லிப்புத்தூரில் நடைபெற்றது. "அம்பேத்கரின் சமூகவியல் ஆய்வு' என்ற பொருளில் முதல் அமர்வு தொடங்கியது. முனைவர் க. நெடுஞ்செழியன், இந்திய வரலாற்றுத் தொன்மத்தின் எச்சங்களிலிருந்தும் சமகால எடுத்துக்காட்டுகளிலிருந்தும் உரையாற்றினார்.

"அம்பேத்கர் பார்வையில் இந்தியாவில் சாதி அமைப்பு' என்ற தலைப்பில் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் கருத்துரையாற்றினார் : “ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு தான் இந்தியா என்கிற நாடு உருவானது. இந்தியாவில் காணப்படும் வர்ணங்கள் அழிந்தால் சமூகம் அழிந்து விடும் என்ற அச்சம், இந்து மதத்திற்கு இருந்தது. அதனால் சாதி – தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருக்கும் சாதிய அமைப்பை ஆய்வு செய்து அதன் கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டியவர் அம்பேத்கர். அவருடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. பார்ப்பன – சத்திரியர் கூட்டு என்பது பின்னாளில் பார்ப்பன – வைசி யர் கூட்டõக மாறும் என்றார். அம்பேத்கர் அன்று சொன்னதை இன்று நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலக சமூகவியல் அறிஞர்கள் எவருடனும் ஒப்பிடமுடியாத வகையில் தனக்கென ஒரு புதிய சமூகவியல் திசையை உருவாக்கி அதனடிப்படையில் இந்தியச் சமூகத்தை ஆய்வு செய்தவர்தான் அம்பேத்கர்.''

"அம்பேத்கர் : அனைத்து உழைக்கும் மக்களின் விடுதலைக் குறியீடு' என்ற பொருளில் புதுக்கோட்டை அபெகா நூலக நிறுவனர், ஜெயராமன் கருத்துரை வழங்கினார். “புரட்சியாளர் அம்பேத்கர் தலித் மக்களுக்காக மட்டும் உழைக்கவில்லை. இந்தியாவிலுள்ள அனைத்து உழைக்கும் மக்களுக்காக, தொழிலாளர் வர்க்கத்திற்காகப் போராடியதோடு மட்டுமின்றி, முதலாளித்துவத்தின் சுரண்டல் ஒடுக்குமுறைகளிலிருந்து தொழிலாளர் வர்க்கத்தைக் காப்பாற்ற 8 மணி நேர வேலை என்பதை சட்டமாக்கியவர். பாபாசாகேப் அம்பேத்கரை "இந்தியாவின் மே தினத் தந்தை' என்றல்லவா இந்திய தொழிற்சங்கங்கள் போற்ற வேண்டும். அதை விடுத்து நன்றி மறந்த சமூகமாக தொழிற்சங்கங்கள் இயங்குவது இந்தியாவின் சாபக்கேடு. அதுபோல, இந்திய திருநாட்டில் பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து இந்து சட்ட வரைவு நிறைவேறாதபோது அதற்காக தன் அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர் தான் அண்ணல் அம்பேத்கர்'' என்றார்.

“அம்பேத்கரின் சிந்தனைவெளி'' என்ற பொருளில் முனைவர் ச. லூர்து நாதன் ஆழமான கருத்துச் செறிவுகளுடன் கருத்துரையாற்றினார். “அம்பேத்கர் தனி மனிதரல்ல, அவர் ஓர் இயக்கம். அம்பேத்கர் ஒரு வரலாற்று நிகழ்வு. அம்பேத்கர் என்ற மாமனிதர் ஒரு தேடலாக அதிலும் சுய தேடலாக காணப்படுகிறார். அம்பேத்கர் பயன்படுத்திய சொல்லாடல்கள் யாவும் அசாதாரணமானவை. ஒரு சொல்லுக்குப்பின் ஒளிந்திருக்கும் அதிகாரம், வர்க்கம், அது ஏற்படுத்தும் சமூக விளைவுகள் போன்றவற்றை ஆய்ந்தறிந்து சொற்களைக் கையாண்டுள்ளார். கருத்தியல் தளத்திலும், கட்டுமானத் தளத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதே உண்மைப் புரட்சி'' என்றார்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கில் பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் பங்கேற்றன. குறிப்பாக இடதுசாரி முகாம்களிலிருந்து நிறைய தோழர்கள் பங்கேற்றனர். அம்பேத்கரின் நூல்களை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் அம்பேத்கர் பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பில் சேர்ந்து பயில வேண்டும் என்ற ஆவலையும் அனைவருக்குள்ளும் ஏற்படுத்தியது, இக்கருத்தரங்கின் வெற்றி எனலாம்.

Pin It