மேதை அம்பேத்கர் அறிவுரைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவராகவும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் தலைவராகவும் மட்டுமே பார்க்கப்படும் தன்மைதான் இந்திய  வெகுமக்களின் உளவியலில் உறைந்து கிடக்கின்றது.

இந்திய மக்களின் சமூக, அரசியல், பொருளாதார விடுதலைக்காக ஓயாது சிந்தித்து உழைத்த மேதை அம்பேத்கரை இந்தியச் சமூகம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

ambedkar 344அம்பேத்கர் எழுதிய முதல் நூலான ‘இந்தியாவில் சாதிகளின் தோற்றம், வளர்ச்சி, அதன் அமைப்பியக்கம்‘ பிறகு ‘சாதி ஒழிப்பு’, ‘சூத்திரர்கள் யார்?’ இவையெல்லாம் இந்திய வெகுமக்களுக்காகத்தானே எழுதினார்!

அப்படியானால் அம்பேத்கர் வெகுமக்களின் தலைவர் என்றுதானே பொருள்!

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்று மார்க்சு சொல்லும்போது உலக தொழிலாள வர்க்கத்தினர் இன்று வரை அவரை பிரித்துப் பார்க்க வில்லை. இனம், மொழி, நிற, நில வேறுபாடுகளைக் கடந்து மார்க்சை கொண்டாடிக் கொண்டிருக்கினறனர்.ஆனால் இந்தியச் சூழலில் தொழிலாளர் உரிமை களுக்குத் தீர்வு கண்ட மேதை அம்பேத்கரை கொண்டாட மனம் இல்லையே ஏன்?

உலக நாடுகளின் உயர்ந்த பல்கலைக்கழகங் களில் படித்து, தேனி போல தேடித் தேடித் திரட்டிய அரசியல் அறிவை பெற்றுக் கொண்டு இந்தியாவிற்கு வந்த பின், அந்த அறிவை நமது நாட்டு மக்களின் மேம்பாட்டிற்குத்தான் மேதை அம்பேத்கர் தொடர்ந்து பயன்படுத்தினார்.

நிலமற்றவர்கள், ஏழை நில குத்தகையாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் உடனடி தேவைகள், துன்பங்கள், துயரங்கள் ஆகியவற்றிற்குத் தீர்வு காணுகின்ற வகையில் ஓர் சீரிய வேலைத் திட்டத்தை உருவாக்கும் வகையில், 1936இல் ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சி ‘ (Independent Labour Party) என்ற கட்சியை உருவாக்கினார்.

“தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தல், நீக்குதல், பதவி உயர்வு அளித்தல் ஆகியவற்றை நெறிப்படுத்துதல்; தொழிலாளர் வேலை செய்யும் நேரத்தின் அளவை நிர்ணயித்தல், நியாயமான கூலி பெற வழி காணல், ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்தல், தொழிலாளர்களுக்கு மலிவானதும் தூய்மையானதுமான முறையில் குடியிருப்புகள் அமைத்தல், வேலையற்றோர்க்குத் தரிசு நிலங்களை வழங்குதல், மேலும் அவர்களை மராமத்து பணிகளில் ஈடுபடுத்துவது மூலம் வேலை யின்மையை ஒழிக்க முடியும்“ - என அக்கட்சியின் அறிக்கை அமைந்திருந்தன.

1937இல் பம்பாய் மாகாணச் சட்ட மன்றத்தில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட போது, நில குத்தகையாளர்களின் கொத்தடிமை நிலையை ஒழிக்க வேண்டும் என தீர்மானத்தை கொண்டு வந்தார். ‘

நம்மை சுரண்டிக் கொண்டிருக்கும் முதலாளிகளுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்டி ஒரு முன்னணியை அமைக்க வேண்டும் எனவும் சுரண்டுவோரின் செல்வ செழிப்பில்தான் தொழிலாளர்களின் உழைப்பு குவிந்திருக்கிறது. எனவே, சாதி, இன வேறுபாடு கருதாமல் தொழிலாளர்களை ஒன்று திரட்டி ஓரணியில் நின்று போராடுவதே வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும் என தொழிலாளர் சிந்தனையைத் தூண்டினார்.

நம்நாட்டில் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று பார்ப்பனீயம், மற்றது முதலாளித்துவம். அதனால்தான் தொழிலாளர் வாழ்க்கையில் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் தொழிலாளர்களைக் கிளர்ந் தெழ வைத்தார். தொழிலாளர் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.அதற்கு தொழிலாளரிடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கும் பார்ப்பனீயத்தை அடியோடு கிள்ளி எறியவேண்டும் என்று விளக்கினார்.

தொழிலாளர் வேலைநிறுத்தம் என்பது உரிமையை நிலைநாட்ட செய்யப்படும் ஒரு வழியாகும். அது தொழிலாளரை அடிமை போல நடத்துவதைத் தண்டிக்கின்ற ஒரு முறையாகும். தான் விரும்புகிறத் தன்மையில் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுதந்திரமாக ஒருவர் வேலை செய்வதற்கான உரிமையை அடைய மேற்கொள்ளளப்படுவதே வேலை நிறுத்தமாகும் என்றும், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான உரிமையை ஒரு புனிதமான உரிமை என்று காங்கிரசார் கருதுவதைப் போலவே வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் புனிதமானதாகும் என்று 1938ல் பம்பாய் மாகாண சட்டசபையில் தொழில் தகராறு மசோதா விவாதத்தின்போது அம்பேத்கர் தனது நிலைபாட்டை தெளிவாக விளக்கியுள்ளார்.

1942இல் வைசிராய் நிர்வாக அவையில் தொழி லாளர் நலத்துறை அமைச்சராக அம்பேத்கர் பொறுப் பேற்றபோது பல பத்திரிகைகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்தன. இந்தியாவிலும் ஐரோப் பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழிலாளர் நல சட்டங்களை ஆழமாக கற்றறிந்தவர் என்பதுதான் இந்த பதவிக்கு அம்பேத்கரை தேர்ந்தெடுத்தற்குக் காரணம் என்று கூடச் சொல்லலாம்.

அமைச்சரான பிறகு பாராட்டு விழா ஒன்றில் பேசும்போது, “நான் ஏழையாக பிறந்து, ஏழைகள் மத்தியில் வளர்ந்தவன். ஏழைகளைப் போலவே ஈரமான தரைமேல் சாக்குப்பையைப் போட்டு அதன்மீது படுத்து உறங்கியவன்.அவர்களுடைய துன்பங்களில் பங்கேற்றவன். ஆகவே, என்னுடைய போக்குகளிலிருந்து என்றும் நான் மாறமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். டெல்லியிலுள்ள என் வீட்டின் கதவுகள் என் நண்பர்களுக்காக என்றும் திறந்தே இருக்கும். மேலும், இந்தியாவிலுள்ள உழைப்பாளி மக்களின் நலன்களை பாதுகாக்கவும், உயர்த்தவும் நான் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் ஒருபோதும் பணிந்து போக மாட்டேன்“ என உறுதியளித்தார்.

வைசிராய் நிர்வாக அவையிலே தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அம்பேத்கர் வீற்றிருந்தாலும் அவர் தன்னை ஒரு தொழிலாளர் தலைவராகவே கருதிக்கொண்டு செயல்பட்டார். இந்திய பரப்பெங்கும் சுற்றுப் பயணம் செய்து தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துயரங்களையும் வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொண்டார். குறிப்பாக இந்தியப் பெண்கள் படும் வேதனைகளைப் புரிந்து கொண்டார். பிறகு தனது பதவியை பயன்படுத்தி அதற்கான சட்டபூர்வமான தீர்வுகளையும் கண்டார்.

மேதை அம்பேத்கர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது தொழிலாளர் தமது துயரங்களுக்குத் தீர்வுகாண அவரிடம் எவரும் மனு எதுவும் கொடுத்ததில்லை. தமது பிரச்சனைகளுக்காக போராடியதில்லை. மனித உயிர்கள் மாண்டதில்லை. இரத்த ஆறு ஓடவில்லை. ஆனாலும் தாயுள்ளத்தோடும் தந்தையுள்ளத்தோடும் தன்னிச்சையாக தொழிலாளர் நலன் பயக்க 28 மசோதாக்களை நிறைவேற்றினார். அவை;

 1. சம வேலைக்கு பாலின பேதமற்ற சம ஊதியம்.
 2. தொழிலாளர்களில் 12 மணி நேரம் வேலை நேரத்தை நீக்கி 8 மணி நேரம் வேலை திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்.
 3. முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டை நடத்தி அந்த திட்டத்தை அமுல்படுத்துதல்.
 4. சுரங்க பெண் தொழிலாளர்கள் மகப்பேறு நலத்திட்டம்.
 5. பெண் தொழிலாளர் நலநிதி
 6. பெண்கள் மற்றும் குழந்தைகள் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம்
 7. பெண் தொழிலாளர் மகப்பேறு நலத்திட்டம்
 8. நிலக்கரி சுரங்கங்களில் நிலத்தடி வேலை திட்டத்தில் பெண்கள் வேலை வாய்ப்பு குறித்த தடை மீட்பு.
 9. தொழிற்சங்கங்களை கட்டாயமாக அங்கீகரித்தல்.
 10. தேசிய வேலை வாய்ப்பு மையங்கள்.
 11. ஊழியர் அரசாங்க காப்பீட்டுத் திட்டம்
 12. குறைந்த பட்ச ஊதிய திட்டம்.
 13. நிலக்கரி மற்றும் மைகா சுரங்கங்கள், வருங்கால வைப்பு நிதித்திட்டம.
 14. தொழிலாளர் சேம நல நிதித் திட்டம்.
 15. தொழில்நுட்பப் பயிற்சி திட்டம் மற்றும் திறன் தொழிலாளர் திட்டம்.
 16. மகப்பேறு நலச் சட்டம்.
 17. அகவிலைப் படி
 18. தொழிற்சாலை தொழிலாளர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள்.
 19. தொழிற்துறை ஊழியர்களுக்கான சுகாதாரக் காப்பீடு.
 20. சட்டபூர்வ வேலை நிறுத்தம்.
 21. வருங்கால வைப்பு நிதி திட்டம்
 22. ஊழியர்கள் சம்பள உயர்வு மீளாய்வு செய்தல்
 23. இந்திய தொழிற்சாலை. சட்டம்.
 24. இந்திய தேயிலை கட்டுப்பாட்டு மசோதா.
 25. இந்திய தொழிற்சாலைப் பணியாளர்களுக்கான வீட்டு வசதி திட்டம்.
 26. மோட்டார் வாகனங்கள் (ஓட்டுநர்) மசோதா.
 27. தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டம்.
 28. தொழிலாளர் இழப்பீடு (திருத்த) சட்டம்.

               இந்திய தொழிலாளர்கள் இன்றைக்கு அனுப விக்கும் இத்தனைச் சட்டங்களையும் அன்றைக்கே கொண்டு வந்த அம்பேத்கரை இந்திய சமூகம் அவ்வளவு எளிதில் கடந்து போக முடியுமா?

அப்படி கடந்து போனால் அது நியாயமா? உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளி அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்போம்!

பாட்டாளி வர்க்கத்தின் தலைமகன் அம்பேத்கர் பாதையில் பயணிப்போம்!

தொழிலாளர் தோழர் அம்பேத்கர் வாழ்க என உரக்கச் சொல்வோம்!

- இரா.திருநாவுக்கரசு

Pin It