கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் என்னும் பெயரில் மோடி அரசு கொண்டு வரத் துடிக்கும் மாற்றங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்களாகவும், பெரு முதலாளிகள் நலச்சட்டங்களாகவுமே இருக்கின்றன. அவற்றுள் சில :

1) 50 தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் அவர்களின் உரிமைகள் தொழிற்தாவா சட்டங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மாற்றி, இனி 300 தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கு மட்டுமே இது பொருந்தும் என புதிய திருத்தம் வர இருக்கிறது. இதன் பொருள், 299 தொழிலாளர்கள் வேலை செய்தாலும் அவர்களின் உரிமைகள் பாதுக்காக்கப்பட தொழிற்தாவா சட்டம் செல்லாது என்பதே.

2) மின்சாரம் பயன்படுத்தப்படும் இடங்களில் 10 தொழிலாளர்களும், மின்சாரம் பயன்படுத்தாத இடங்களில் 20 தொழிலாளர்களும் வேலை செய்தால் ஃபேக்டரி சட்டப்படி அவர்களின் உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பது முறையே 20 தொழிலாளர்கள், 40 தொழிலாளர்கள் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

3) 20 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் இடத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் செல்லும் என்பதை 50 தொழிலாளர்கள் என எண்ணிக்கையை அதிகரித்து திருத்தம் செய்துள்ளது மோடி அரசு

4) 100 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் தொழிற்சாலைகளை அரசு அனுமதி பெற்றே மூட வேண்டும் என்னும் விதியைத் தளர்த்தி 1000 தொழிலாளர்கள் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது

5) தொழிற்சங்க ஆய்வாளர்களின் அதிகாரத்தை மொத்தமாகச் சுருக்கி, அவர்கள் தொழிற் சாலைகளில் ஆய்வு செய்வதையே முடக்க சட்ட திருத்தம் கொண்டு வருகிறது மோடி அரசு. இனி, தொழிற்சாலை நிர்வாகம் அனுப்பும் ஆய்வு அறிக்கையைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதும், ’ஆய்வு’ என்னும் பெயரில் முதலாளிகளைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்கிறார் மோடி.

’இன்ஸ்பெக்டர் ராஜ்’-ஐ ஒழிக்கப் போகிறோம் என்று பெருமை வேறு பேசிக் கொள்கிறார். இதுபோக, பெண்களை இரவு நேரத்தில் வேலைக்கு அமர்த்தலாம், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டியதில்லை, பயிற்சித் தொழிலாளர்களை எல்லாத் தொழில் களிலும் பயன்படுத்திக் கொள்வது, தொழிற்சங்கம் தொடங்குவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் என்று முழுக்க முழுக்கத தொழிலாளர் விரோத, பெரு முதலாளித்துவ நலன்களைப் பாதுகாக்கும் சட்டத் திருத்தங்களைத் ’தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள்’ எனக் கொண்டுவர காத்துக் கொண்டிருக்கிறது கார்ப்பரேட்களுக்கான அரசான மோடி அரசு.

இதுபோக, சமூக நீதிக்கும் வேட்டு வைக்கும் விதமாக குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் சட்டத்தில், குடும்பத் தொழிலை பெற்றோரோடு குழந்தைகள் செய்யலாம் என்னும் அபாயகரமான திருத்தத்தைக் கொண்டு வருகிறது மோடி அரசு. குழந்தைத் தொழிலாளர் முறையை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி, குலக்கல்வி, குலத்தொழில் முறையை வளர்த்துவிடும் பார்ப்பனீய அணுமுறையே இந்தப் புதிய திருத்தம்.

இன்று நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களையே தொழிலாளர்களைக் கொல்லும் சட்டங்கள் எனக் கூறினார் சட்ட மேதை அம்பேத்கர். தொழிலாளர்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், தவறு செய்த பெருமுதலாளிகளைத் தண்டிப்பதற்கோ, போட்டி போட்டு வெல்வதற்கோ பல தடைகளைத் தொழிலாளி தாண்ட வேண்டும். பண பலமிக்க பெரு முதலாளிகளோடு அன்றாடம் வயிற்றுப்பாட்டுக்கு அல்லல்படும் தொழிலாளி மோதுவது இந்திய நீதித்துறைக் கட்டமைப்பில் சாத்தியமில்லை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவேதான், அண்னல் அம்பேத்கர் அன்றே அவ்வாறு கூறினார்.

இந்தச் சட்டங்களையே மாற்ற வேண்டும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்க, உள்ளதையும் பறித்து, தொழிலாளிகளை மொத்தமாக கார்ப்பரேட்டுகளின் முடிவில்லா இலாபவெறி அராஜக உற்பத்தி முறை என்னும் புதை குழிக்குள் தள்ளுவதற்கு காத்திருக்கிறது மோடி அரசு.

அவர்கள் செய்துகாட்டிய சாதனைகளில் இதுவும் ஒன்று!