சென்ற இதழ் தொடர்ச்சி...
நாகபுரி அனைத்திந்தியத் தாழ்த்தப்படோர் மாநாடு:-
1942 சூலை 18, 19 நாள்களில் திரு.என். சிவராஜ் தலைமையில் நடைபெற்ற அனைத்திந்தியத் தாழ்த்தப் படோர் மாநாட்டில், அம்பேத்கர் உரையாற்றினார். இம் மாநாட்டின் வெற்றி உங்கள் உறுதிமிக்க உழைப்பால் விளைந்ததாகும். நம் மக்கள் அரசியல் விழிப்படைந் துள்ளனர். கல்வி உள்பட பல துறைகளிலும் முன்னேறி யுள்ளனர். அரசுப் பணிகளிலும் காலூன்றியுள்ளனர். பெண்களும் முன்னேறியுள்ளனர். இது மன நிறை வைத் தருகின்றது, நமக்குத் தனி அரசியல் உரிமைகள் அளிக்கப்பட வேண்டும், என்றார். உலகப்போரில், சர்வாதிகாரம் வென்றிடாமல் தடுத்திட அரசின் போர் நடவடிக்கைகளுக்குக் கை கொடுத்திடல் வேண்டும் எனக் கூறினார்.
“அனைத்திந்திய தீண்டப்படாத வகுப்புகளின் பேரவை” உருவாக்கப்பட்டது பற்றி மாநாட்டில் அறி விக்கப்பட்டது. நாகபுரியில் இருக்கும் போது தான், சூலை 20 அன்று தந்தி மூலம் தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் பொறுப்பை ஏற்றார்.
வானொலியில், அம்பேத்கர் உரையாற்றி அரசின் போர் நடவடிக்கை களுக்கு ஆதரவளித்தார். இது சர்வாதிகாரத்திற்கும் சன நாயகத்திற்கும் இடையே நடக்கும் போர். சர்வாதி காரத்திற்கு அடிப்படையாக இருப்பது இனவெறி கொண்ட ஆணவமேயாகும். நாசிசம் மானுடத்தின் எதிர்காலத் திற்கே அச்சுறுத்தலாகும்.
சன நாயகத்தையும் இவ்வு லகையும் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டியது நம் கடமையாகும்” என்று அம்பேத்கர் 1942, நவம்பர் 15 ஆம் நாள் பம்பாய் வானொலியில் “போரும் இந்தியத் தொழிலாளரும்” என்ற தலைப்பில் பேசினார். ஆனால் மகாத்மா காந்தி, பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களின் அனுமதி பெறாமலே இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தி யதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்டு போராட்டத்தைத் தொடங்கினார்.
தொழிலாளர் முத்தரப்பு மாநாடு :
தொழிலாளர் நல அமைச்சர் அம்பேத்கர் தலை மையில் டில்லியில் 1943 செப்டம்பர் 6,7 ஆகிய நாள்களில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் அம்பேத்கர் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான கோரிக்கைகளை முன் வைத்தார். உணவு, உடை, உறையுள், கல்வி, கலாச்சார மேம்பாட்டு வசதிகள், மருத்துவம் ஆகிய வையே தொழிலளர்கள் கோரும் தேவைகள் என விளக்கினார்.தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். தன்னுடைய முயற்சியால் மத்திய சட்டசபையிலும், மத்திய மேல் சட்டசபையிலும் தீண்டப்படாத வகுப்பினர்களுக்கான பிரதிநிதித்துவம் கூடுதலாகப் பெற்றது பற்றி, அம்பேத்கர் மன நிறைவு கொண்டார். தீண்டப்படாத வகுப்பினர் இராணுவத்தில் உயர் அதிகாரிகளாகப் பதவி வகிக்கக் கூடாது என்று இருக்கின்ற தடையை நீக்கவேண்டும் என்று கோரி ஐக்கியமாகாணங்களைச் சார்ந்த தீண்டப் படாத வகுப்பு உறுப்பினரான பியாரிலால் குரீல் தாலீப் மத்திய சட்ட சபையில் கொண்டுவந்த தீர்மானம் 1943 அக்டோபர் மாதத்தில் நிறைவேறியது.
தான் அமைச்சரான பிறகு, தீண்டப்படாத வகுப்பின ருக்காக தான் பெற்றுத் தந்துள்ள நன்மைகளை 1943 நவம்பரில் தொழிலாளர்களிடம் விளக்கினார். தீண்டப் படாதவர்களுக்கு மத்திய அரசு அலுவலகங்களில் 8.33 விழுக்காடும், இலண்டனில் தொழிற்கல்வி படிப்பில் தனி இடஒதுக்கீடும், மத்திய சட்ட சபையில் கூடுதலாக ஓர் இடமும், மாநிலங்கள் அவையில் புதியதாக ஓர் இடமும் பெறப்பட்டுள்ளதை அம்பேத்கர் விளக்கினார்.
1944 ஏப்ரல் மாதத்தில் நிலையாக இயங்கிக்கொண் டிருக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரும் திருத்த மசோதவை மத்திய சட்ட சபையில் அம்பேத்கர் முன்மொழிந்தார். வைசிராய் வேவல் பிரபு, 1945 செப்டம்பரில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். காங்கிரஸ், வெள் ளையனே வெளியேறு என்ற முழக்கத்துடனும், பண பலத்துடனும் முஸ்லீம் லீக் பாகிஸ்தான் பிரிவினைக் கோஷத்தோடும், இந்து மகாசபை இந்தியாவின் சுதந்திரம், இந்திய ஒற்றுமை என்ற பிரச்சாரத்துடனும் தேர்தலைச் சந்தித்தன. தீண்டப்படாத மக்கள் பேரவைக்கு அமைப்பு வசதியும் பணபலமும் இல்லாத நிலையில் தேர்தலை எதிர்கொண்டது.1945 அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தைப் பூனாவில் தொடங்கினார். காங்கிரஸின் வழிகாட்டுதலை நம்பக்கூடாது, காங்கிரஸ் முதலாளி களின்-பனியாக்களின் கையாளாக இருந்து வருகிறது. தீண்டப்படாதவர்களின் குறைகளை நீக்க காங்கிரஸ் எத்தனிக்கவே இல்லை. இதற்குப் பரிகாரம் தீண்டப்படாத வர்களின் கையில்தான் இருக்கிறது. அரசியல் அதிகாரத் தைத் தீண்டப்படாதவர்கள் பிடிக்கவேண்டும். தொழி லாளர்கள், இந்தியாவில் தொழிலாளர்களின் அரசை ஏற்படுத்துவதற்காகப் பாடுபடவேண்டும். இதுதான் தன் நோக்கமாகும் என்றார் அம்பேத்கர் . இந்தியா சுதந்தரம் அடைவது மட்டும் போதாது. அதைவிட முக்கியமானது அந்தச் சுதந்தரம் யாருடைய கையில் இருக்கவேண்டும் என்பதே ஆகும் என்று குறிப்பிட்டார். அந்தத் தேர்தல் அவர்களுக்கு வாழ்வா, சாவா என்பதாகும். அரசியல் சட்டம் ஏற்படுத்தும் குழுவை, மாநில சட்டசபைகள் தான் தேர்ந்தெடுக்கப் போகின்றன என்று பேசினார்.
தேர்தலில் அம்பேத்கரும் அவரது கட்சியினரும் தோல்வியைச் சந்தித்தனர். காங்கிரஸ் பெரும் வெற்றி யினை அறுவடை செய்தது.
இந்தியர்களும், இந்திய இராணுவ வீரர்களும் விடுதலை உணர்வு மிக்கவர்களாகக் கிளர்ச்சிகளிலும் ஈடுபடலாயினர். ஆங்கிலேயர்களும் இந்தியாவை வெகு நாள்களுக்கு அடிமைப்படுத்தியிருக்க முடியாது என்று உணர்ந்தார்கள். பிரதமர் அட்லி 1946 மார்ச் 15 ஆம் தேதி இந்தியா முழுசுதந்திரம் அடையும் உரிமையையும், தமது பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் சேர்ந்தோ அல்லது சேராமலோ இருக்கலாம் என்பதையும் ஒப்புக்கொண்டார்.
சுதந்திரம் வழங்குவது குறித்து ஆய்வு செய்திட பிரிட்டிஷ் பிரதமர் அமைச்சரவைக் குழுவினை அனுப்பினார், அக்குழு 1946 மார்ச் 24 இந்தியா வந்து சேர்ந்தது. அக்குழுவை, காங்கிரஸ் சார்பில் மௌலானா அபுல்கலாம் ஆசாத், முஸ்லீம் லீக் சார்பில் முகம்மது அலி ஜின்னா, சிற்றரசர்கள் சார்பாக போபால் நவாபு ஆகியோர் சந்தித்து சாட்சியம் அளித்தனர் இந்தியா முழுவதையும் மூன்று முஸ்லீம்களே பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். தாழ்த்தப் பட்டவர்களின் கோரிக்கையைத் தனியாக அம்பேத்கர் எழுதிக்கொடுத்தார்.
1946 மே 16 இல் அந்தக்குழு தன் முடிவை அறிவித்தது. தாழ்த்தப்பட்டவர்களின் கோரிக்கையை அக்குழு ஏற்றுக் கொள்ளவில்லை.
1946 இல் வைசிராய் இடைக்கால பாதுகாப்பு அரசை அமைத்திட இருந்தார். ஆகவே நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் 1946 சூன் மாதம் மூன்றாவது கிழமை பதவி விலகினர். தொழிலாளர் அமைச்சராக இருந்த அம்பேத் கரும் விலகினார். ஜூன் 29 இல் பாதுகாப்பு அரசு அறிவிக் கப்பட்டது.
“மக்கள் கல்விக் கழகம்” என்ற அமைப்பை உருவாக்கினார் அக்கல்விக்கழகம்.1946 சூன் 20 இல் தீண்டப்படாத மக்களின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் ஒரு கல்லூரியைத் தொடங்கியது. இந்தியா விலேயே சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக அக்கல்லூரித் திகழ்ந்தது. அந்தக் கல்லூரிக்கு சித்தார்த்தா என்று பெயரிடப்பட்டது புதிய வைஸ்ராய் மௌண்ட்பேட்டன் பிரபு 1947 ஜூன் 3ஆம் நாள் பிரிட்டிஷ் அரசின் திட்டத்தை வெளியிட்டார். இத்திட்டத்தின்படி இரண்டு மத்திய அரசுகள், இரண்டு அரசியல் நிர்ணய சபைகள் ஏற் படுத்தப்படும். இந்தியாவைத் துண்டாடுவதை எதிர்த்து வந்த மகாத்மா காந்தியும் இறுதியில் இத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
1947 ஜூலை 15 ஆம் நாள் பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கும் மசோதா நிறைவேறியது. அரசியலமைப்புச் சட்ட அவையின் கொடி வடிவமைப்புக் குழுவின் உறுப்பினராக அம்பேத்கர் இருந்தார். 1947 ஜூலை 22 ஆம் நாள் அரசியலமைப்புச் சட்ட அவை, அசோகச் சக்கரத்துடனான மூவண்ணக் கொடியை இந்திய நாட்டின் தேசியக் கொடியாக ஏற்றுக் கொண்டது.
1947 ஆகஸ்டு 15 இல் இந்திய விடுதலைக்குப் பின் அமைந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பொறுபேற்க அம்பேத்கர் அழைக்கப்பட்டார். ஆகஸ்ட் 29 இல் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு அமைக்கப்பட்டது. கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.எம்.முன்ஷி, டி.டி. கிருஷ்ண மாச்சாரி, என்.மாதவராவ் (அனைவரும் பிராமணர்) முகம்மது சதகத்துல்லா, ஆகியோர் உறுப்பினர்கள். ஐந்து பிராமணர், ஒரு முஸ்லீம், ஒரு தீண்டப்படாதவர், என அன்று கல்வி, சமூக மேதைகள் சமூக ரீதியில் இப்படித் தான் இருந்தனர். அம்பேத்கர் தலைவராகப் பொறுப் பேற்று அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் பணியில் ஈடுபட்டார்.
1947 ஆகஸ்டு மாதம் முதலே உடல் நலம் குன்றியிருந்த நிலையிலும் எடுத்தகாரியத்தைச் சிறப்புற முடித்திட வேண்டும் என்று ஊக்கத்துடன் அம்பேத்கர் தன் பணியைத் தொடர்ந்தார் 1948 பிப்ரவரி மாதக் கடைசி வாரத்தில் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி முடித்தார். அதன் பின் தன் உடல் நலம் பேணிட பம்பாய் மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனையில் அம்பேத்கருடன் உடனிருந்து உடல் நலம் பேணிக்காத் திட்ட மருத்துவர் செல்வி சவிதா கபீர் அவர்களைத் தன் வாழ்க்கைத் துணைவியாக 1948 ஏப்ரல் 15 ஆம் நாள் ஏற்றுக்கொண்டார்.
1948 நவம்பர் 4 இல் அரசியல் சட்ட முன்வரைவு, அரசியல் நிர்ணயசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அம்பேத்கரின் விளக்கவுரையும் அரசியல் அமைப்புச் சட்டமும் எல்லாராலும் போற்றிப் புகழப்பட்டன. 1949 நவம்பர் 26 ஆம் நாள் 395 விதிகளையும், 8 அட்ட வணைகளையும் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டத்தை அரசியல் சட்டசபை நிறைவேற்றியது. அரசியல் சட்டவரைவு நகலின்பேரில் 7600 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன அவற்றுள் 2473 மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றின் மீது முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்துச் சட்டத் திருத்த மசோதாவை அம்பேத்கர் 1948 அக்டோபரில் அரசியல் சட்ட அவையிடம் அளித்திருந்தார். இந்த மசோதாவை எதிர்த்தும் ஆதரித்தும் விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடைபெற்றன. பிரதமர் பண்டித நேரு இந்த இந்துச் சட்டமசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று உறுதியுடன் ஆதரவளித்தார். ஆனால் சர்தார் வல்லபாய் படேல், இராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஆதலால் இம் மசோதவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து விவாதிக்க காலங்கடத்தினார் பண்டித நேரு.
இந்துச் சட்ட திருத்தத் மசோதாவை நிறைவேற்றிட பலத்த எதிர்ப்புகளும் தடைகளும் ஏற்படுத்தப்பட்டன. இதனால் மனம் வருந்திய அம்பேத்கர் 1951 செப்டம்பர் 27 இல் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
அதன் பின் அம்பேத்கர் 1951 நவம்பர் 18ஆம் நாள் பம்பாய் சென்றார். அங்கே அவருக்கு விக்டோரியா டெர்மினசில் தீண்டப்படாத சாதிகள் பேரவையும் சோஷ லிஸ்டு கட்சியும் இணைந்து மாபெரும் வரவேற் பளித்தன. அதன் பின்னர் சித்தார்த்தா கல்லூரிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அக்கல்லூரியில் தங்குவதை வழக்கமாக்கிக் கொண்டார். தேர்தலில் ஈடுபட காங்கிரசுக்கு எதிராக, சோஷலிஸ்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். பம்பாய் சௌபாத்தி யில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தவர் சுபாஸ் சந்திரபோஸ்தானே தவிர காங்கிரஸ் அல்ல என்று கூறினார். அடுத்த நாள் கவாஸ்ஜி ஜகாங்கீர் அரங்கில் தீண்டப்படாத சாதிகள் பேரவையும் சோஷலிஸ்டு கட்சியும் இணைந்து நடத்திய கூட்டத்தில் பேசினார். காங்கிரஸ் அரசு தூய்மையான ஆட்சியைத் தரத் தவறிவிட்டது. பிரதமர் நேரு, ஆட்சியில் உள்ள ஊழல், பெருங்கேடானதாக இல்லை என்று கூறியுள்ளது மிகவும் வேதனையாக உள்ளது என்றார். காங்கிரஸ் கட்சிக்கு நன்றி மறந்தவராக மாறிவிட்டார் அம்பேத்கர் என்ற குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்தபோது, “எந்த ஒரு மனிதனும் தன் சுயமரியாதையை இழந்து நன்றி செலுத்தமாட்டான். எந்த ஒரு நாடும் தன் சுதந்திரத்தை இழந்து நன்றி செலுத்தாது; எந்தவொரு பெண்ணும் கற்பை இழந்து நன்றி செலுத்தமாட்டாள்”, என்று ஐரிஷ் தத்துவமேதையின் கூற்றை எடுத்துக்காட்டிப் பேசினார்.
1952 இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் வடக்கு பம்பாய் தொகுதியில் வேட்பாளராக நின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அவருடைய முன்னாள் உதவியாளர் நாராயண் கஞ்ரோல்கர் ஆவார். அவரிடம் அம்பேத்கர் தோல்வி யுற்றார். பின்னர் அம்பேத்கர் ராஜ்யசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
1954 இல் பந்தாராவில் நடைபெற்ற லோக் சபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைச் சந்தித்தார். 1957 இல் இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்ற போது அம்பேத்கர் உயிருடன் இல்லை.
அம்பேத்கர் இளமையில் மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் ஆர்வமுடன் படித்திருந்த போதும் அவர் தன்னைச் சிறந்த மனிதராக உருவாக்கி வளர்த்துக் கொண்டதில் புத்தரின் வாழ்வும், கபீரின் போதனை களும், சோதிபா புலேயின் போராட்டங்களும் பெரும் பங் காற்றின. அவர் மேலை நாட்டில் பெற்ற கல்வி அவருக்கு அறிவாயுதங்களை வழங்கியது.
புத்தம் தழுவுதல்
1950 முதல் அம்பேத்கர் புத்தமதத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார் புத்தமத நூல்களைப் படித்து ஆய்வு செய்து வந்தார். மே 25 இல் தன் மனைவியுடனும் சுதந்தரக் கட்சியின் செயலாளர் ராஜ்போஜ்வுடனும் கொழும்பு சென்று புத்தமதத்தின் செயற்பாடுகளைக் கண்டறிந்தார். 1954 டிசம்பரில் மூன்றாவது உலக பௌத்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இரங்கூனுக்குச் சென்றார். 3-1-1955 இரங்கூனில் பெரியாரைச் சந்தித்து அங்கு உரையாடினார். “புத்தரும் அவருடைய தம்மமும்”, “பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்”, “புத்தரும் மார்க்சும்” ஆகிய நூல்களை 1956 பிப்ரவரி யில் எழுதி முடித்தார்.
மதம் மாறுவது குறித்து 23-9-1956 அன்று அறிக்கை வெளியிட்டார். 14-10-56 அன்று நாகபுரியில் தன் மனைவியுடன் புத்தமதத்திற்கு மதம் மாறினார். அவரைத் தொடர்ந்து அவரின் ஐந்து இலட்சம் தொண்டர்களும் மதம் மாறினர். 1956 நவம்பர் 15 ஆம் நாள் காட்மண்டு வில் உலக பௌத்த சங்க நான்காவது மாநாடு நடை பெற்றது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அம் மாநாட்டில் கலந்துகொண்டார். 1956 டிசம்பர் 2ஆம் தேதி அசோக்விகாரில் தலாய்லாமாவிற்கு அளிக்கப்பட்ட வர்வேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 1956 டிசம்பர் 4ஆம் தேதி மாநிலங்கள் அவை வராந்தாவில் சில நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கரின் கடைசி வருகையாக அது அமைந்து விட்டது..
1956 டிசம்பர் 6 ஆம் நாள் காலை 6.30 மணியள வில் அந்தப் புரட்சியாளர் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டார்.
பெரியார் இரங்கல்:-
“இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணி யிலுள்ள அறிஞரும், ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்தி விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட் டேன். உண்மையில் சொல்லவேண்டுமானால் டாக்டர் அம்பேத்கர் மறைவு சரி செய்யமுடியாத மாபெரும் நட்டமேயாகும். அவர் சிறப்பாக, தாழ்த்தப்பட்ட சமுதா யத்துக்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களையெல் லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும் படியான வீரராகவும் விளங்கினார்.
இந்து மதம் என்பதான ஆரிய ஆத்திகக் கோட் பாடுகளை வெகு அலட்சியமாகவும் ஆபாசமானதாகவும், அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாகவும் பேசியும் எழுதியும் வந்தார். உதாரணம் சொல்லவேண்டுமென் றால், காந்தியாரையே ஒரு பத்தாம்பசலி, பிற்போக்குவாதி என்றும், அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையை, முட்டாள்களின் உளறல்கள் என்றும் சொன்ன தோடு, காந்தியாரின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும், இராமாயணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி, பல்லாயிரக் கணக்கான மக்களிடையில் இராமாயணத்தை எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார். இந்துமதம் உள்ளவரையும் தீண்டாமையும், சாதிப்பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். இந்தக் கருத்துகள் தவழும்படியான ஏராளமான நூல்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அநேகக் காரியங்களைச் செய்த மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி யாளரும், சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கர் முடிவு எய்தியது இந்தியாவுக்கும், தாழ்த்தப்பட்டமக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.
அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து, அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில ரகசியங்கள் இருக்க லாமென்று கருதுகிறேன். அதாவது காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும், அதற்கு ஆதாரணமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கர் மரணத்துக்கும் இருக்கக்கூடும் என்பதே ஆகும்” என்று, பெரியார் அறிக்கை வெளியிட்டார்.
அம்பேத்கர் நினைவைப் போற்றி
அம்பேத்கர் இறந்தபின், இந்தியரசின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதினை 1990 ஆம் ஆண்டில் அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது லக்னோ வில் உள்ள பூங்காவிற்கு, அம்பேத்கர் பூங்கா எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. அப்பூங்காவில் அம்பேத்கர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது அவுரங்கா பாத்திலுள்ள மராத்வாடா பல்கலைக்கழகம், டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் பல்கலைக்கழகம் எனப் பெயரி டப்பட்டுள்ளது. அங்கே டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
நாக்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையம் சோனேகான் விமான நிலையம் என அறியப்பட்டது. .அதற்கு டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது, ஜலந்தரில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜிக்கு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நேஷனல் இன்ஸ்டிடிடியூட் ஆப் டெக்னாலஜி எனப் பெயரிடப்பட்டது.
இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அரசால் அங்கீ கரிக்கப்பட்ட அம்பேத்கர் ஓவியம் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது. சென்னைச் சட்டக் கல்லூரி, அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது.
வெல்க அம்பேத்கரின் கொள்கைகள்!
- முற்றும்