1938 பிப்பிரவரி 12, 13 ஆகிய நாள் களில் பம்பாய் மாகாணத்தில் மன்மத் தொடர் வண்டி நிலையத்திற்கு அருகில் இப்ரகீம் தேஜ்பாய் சேத் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், “கிரேட் இந்தியன் பெனின் சுலா” இரயில்வேயில் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டிற்குத் தலைமை வகித்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 13.2.1935 அன்று அம் மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு :

நண்பர்களே,

கிரேட் இந்தியன் பெனின்சுலா இரயில் வேயில் பணியாற்றும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர் களின் மாநாடு இது. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இந்த மாகாணத்திலும் இந்தியாவில் மற்ற மாகாணங்களிலும் பல தடவை மாநாடு களை நடத்தியுள்ளோம். அந்த வகையில் இது முதல் மாநாடு அல்ல. ஆனால் வேறொரு வகையில் இது முதலாவது மாநாடாகும். ஒடுக் கப்பட்ட வகுப்பினர் இதுவரையில் தங்களுடைய சமுதாய இன்னல்களை - இயலாமைகளை நீக்குவதற்காகத்தான் போராடி வந்தனர். தங்களுடைய பொருளாதார நலன்களுக் காகப் போராடவில்லை. இப்போதுதான் முதன் முறையாகத் தங்களின் பொருளாதார நலன் கள் குறித்து விவாதிக்கக் கூடியிருக்கிறார்கள்.

இதுவரையில் “பறையர்” என்ற நிலையில் கூடினீர்கள். இப்போது “தொழிலாளர்” என்ற நிலையில் கூடியிருக்கிறீர்கள். சமுதாயக் கொடுமை களை ஒழிப்பதற்கே நாம் முன்னுரிமை கொடுத்து வந்தோம் என்பதைத் தவறு என்று நான் கூற மாட்டேன். மற்றவர்கள் இதைப்பற்றி என்ன சொன்னாலும், சமூகம் நம்மீது திணித்துள்ள கொடுமைகளின் சுமை நம்முடைய ஆண்மையை நசுக்குவதாக இருக்கிறது.

தீண்டாமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற வில்லை என்பது உண்மைதான். மற்றவர்கள் அனுபவிக் கின்ற அடிப்படை உரிமைகளை நாம் பெறுவதற்கான முயற்சியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் அதேசமயம் நம்முடைய போராட்டம் நமக்கான அரசியல் அதிகாரத் தைப் பெறுவதில் வெற்றியை ஈட்டியுள்ளது. அதிகாரம் இருக்குமானால் விடுதலையும் இருக்கும் எனும் கூற்றில் உண்மை உண்டு. தடைகளைத் தகர்ப்பதற்கும் விடு தலை பெறுவதற்கும் அதிகாரத்தைப் பெறல் என்பது ஒரு வழிமுறையாக விளங்குகிறது. மதம் அல்லது பொருளாதார அதிகாரம் அளவுக்கு அரசியல் அதிகாரம் வலிமையானதாக இல்லாத போதிலும், அரசியல் அதிகாரமும் பயன்தரவல்லதாக இருக்கிறது.

புதிய அரசமைப்புச் சட்டத்தில் (1935) ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பெற்ற அரசியல் அதிகாரம் எதிரிகளின் வஞ்சகச் சூழ்ச்சிகளாலும் நம்மிடையே உள்ள தன்னலக் காரர்களாலும் வீணான வீறாப்பு கொண்டவர்களாலும் பயனற்றதாக ஆக்கப்பட்டதற்காக நான் வருந்துகிறேன். தனக்குப் பின்னால் ஓர் அமைப்பைக் கொண்டிராத அதிகாரமும், விழிப்புணர்வு கொண்டவர்களைப் பெற்றி ராத அதிகாரமும் உண்மையான அதிகாரமாக இருக்காது. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் மிக விரைவில் ஓர் அமைப்பின்கீழ் அணிதிரள்வார்கள்; தாங்கள் பெற்றுள்ள அரசியல் அதிகாரத்தைப் பற்றி விழிப்புணர்வு பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். அந்நிலையில் தங் களின் சமூக விடுதலயைப் பெறுவதற்காகத் தங்களு டைய அரசியல் அதிகாரத்தை உரிய முறையில் பயன் படுத்துவார்கள்.

சமூக விடுதலைக்காக நாம் மேற்கொண்ட முயற்சிகள் - செயல்பாடுகள் தவறானவை என்று நான் சொல்லமாட்டேன். சமுதாய நிலையில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் போலவே, பொருளாதாரச் சிக்கல்களும் நம்மை அழுத்தி வருகின்றன. பொருளாதாரச் சிக்கல்களை வெகு காலத்திற்கு முன்பே நாம் கையில் எடுக்கத் தவறி விட்டோம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அத்தன்மையில் இன்று தீண்டப்படாதவர்கள் என்பதைவிட, தொழிலாளர்கள் என்ற நிலையில் நாம் கூடியிருப்பது கண்டு நான் மகிழ்ச்சி அடை கிறேன். இதுவே ஒரு புதிய மாற்றம். நம்முடைய பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து விவாதிப் பதற்காக இம்மாநாட்டை ஏற்பாடு செய்தவர் களை நான் பாராட்டுகிறேன்.

ஆனால் நம்முடைய புதிய முயற்சிக்குச் சில பேர் தீய உள்நோக்கம் கற்பிக்கின்றனர். நான் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதைத் தவறு என்று கண்டிக்கின்றனர். தொழிலாளர் தலைவர்களிடமிருந்து அல்லாமல் வேறு எவரிடமிருந்து இந்த விமர்சனம் வந்திருந்தாலும் நான் அதைப் பொருட்படுத்தி இருக்க மாட்டேன். ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் தொழிலாளர் மாநாட்டை நடத்துவதால் நாம் தொழிலாளர்களிடையே பிளவை ஏற்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.

இந்த நாட்டின் உழைப்பாளிகள் இரண்டு பகைவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பார்ப்பனியமும் முதலாளியமும் அந்த இரண்டு எதிரிகள் ஆவர். பார்ப்பனியம் தொழிலாளர்களுக்கு எதிரியாக இருப்பதையும், தொழிலாளர்கள் அதை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் பற்றி நம்மைக் குறைகூறுவோர் எண்ணிப்பார்க்கத் தவறுகின்ற காரணத்தால்தான், நம்மீது குற்றஞ் சாட்டுகின்றனர்.

நான் பார்ப்பனியம் என்று குறிப்பிடுவது பார்ப் பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற நிலையில் பெற்றி ருக்கிற அதிகாரம், சிறப்புரிமைகள் பற்றியது அல்ல. “பார்ப்பனியம்” என்ற சொல்லைப் பார்ப்பனர்களை மட்டும் குறிக்கும் சொல்லாக நான் பயன்படுத்த வில்லை. சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை மறுக்கும் மனப்போக்கையே நான் பார்ப்பனியம் என்று கருதுகிறேன். இம்மனப்போக்கின் மூல கர்த்தாக்கள் பார்ப்பனர்களாக இருந்தபோதிலும், இம்மனப்போக்குப் பார்ப்பனர்களிடம் மட்டுமல்லாது, எல்லா வகுப்பினரிடமும் இருக்கிறது. பார்ப்பனியம் எல்லா இடங்களிலும் ஊடுருவி இருக்கிறது. எல்லா வகுப்பு மக்களின் சிந்தனைகளையும் செயல்களையும் இயக்குகின்ற ஆற்றலாகப் பார்ப்பனியம் விளங்குகிறது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மையாகும். பார்ப்பனியம் சில வகுப்பினருக்கு உயர்ந்த நிலையை அளித்திருக்கிறது. அதேசமயம் மற்ற வகுப்பினருக்குச் சம வாய்ப்பைத் தர மறுக்கிறது.

பார்ப்பனியத்தின் தாக்கம் கலப்பு மணம், சேர்ந்து உண்ணல் போன்ற சமூக உரிமைகளுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவ்வாறு மட்டும் அது இருக்கு மாயின், அதைப்பற்றி நாம் பொருட்படுத்தமாட்டோம். ஆனால் அது அவ்வாறு மட்டும் இல்லை. பார்ப்பனி யம் சமூக உரிமைகள் என்பதையும் தாண்டி, குடிமை உரிமைகளையும் (civic Rghts) தாக்குகிறது. பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுப் போக்குவரத்து, பொது உணவகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்து வது குடிமை உரிமைகளாகும்.

பொது மக்களின் பயன்பாட்டுக்குரியதாக உள்ள ஒவ்வொன்றும் அல்லது பொது மக்களின் வரிப் பணத்தால் நிருவகிக்கப்படுகின்ற அனைத்தும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பயன்படுத்த உரிமை உடையதாக இருக்க வேண்டும். ஆனால் பல கோடி மக்களுக்கு இக்குடிமை உரிமைகள் மறுக் கப்படுகின்றன. இவ்வாறு மறுக்கப்படுவதற்குப் பார்ப்பனியமே காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட பார்ப்பனியம் இன்றும் பேராபத்தானதாக இருக்கிற தல்லவா? பொருளாதார வாய்ப்புகளையும் மறுக் கும் பேராற்றல் வாய்ந்ததாகப் பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்துகிறது.

தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்த ஒரு தொழி லாளியைத் தீண்டத்தக்க வகுப்பைச் சேர்ந்த ஒரு தொழிலாளியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். தீண்டத்தகாத தொழிலாளிக்கு உள்ள வேலைவாய்ப்புகளின் நிலை என்ன? நிலையான வேலையைப் பெறுவது, அதில் மேலும் உயர் நிலையை எய்துவதற்கு உள்ள வாய்ப் புகள் என்ன? தீண்டப்படாதவன் என்ற ஒரே காரணத் திற்காகப் பல வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். பருத் தித் தொழிலில் அப்பட்டமாகத் தெரியும் இந்நிலையைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ள நிலைமை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் பம்பாய் மாகாணத் தில் பம்பாயிலும் அகமதாபாத்திலும் உள்ள ஆலைகளில் நெசவுப் பிரிவில் தீண்டப்படாதவர்களை வேலையில் சேர்ப்பதே இல்லை. பஞ்சிலிருந்து நூல் நூற்கும் பிரிவில் மட்டும் அவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படு கின்றனர். நூற்புப் பிரிவில் ஊதியம் குறைவு. துணி நெய்யும் நெசவுப் பிரிவில் வேலை செய்யும் சாதி இந்துத் தொழிலாளர்கள் தீண்டத்தகாத தொழிலாளர் களுடன் இணைந்து வேலை செய்ய மறுத்தனர். அதனால் தீண்டப்படாதவர்களுக்கு நெசவுப் பிரிவில் வேலை மறுக்கப்பட்டது. ஆனால் சாதி இந்துத் தொழி லாளர்கள் முசுலீம் தொழிலாளர்களுடன் வேலை செய்வது பற்றிக் கவலைப்படவில்லை. (இன்று கொழுத்த சம்பளம் கிடைக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களிலும் மற்ற தனியார் நிறுவனங்களின் உயர்ந்த பதவிகளிலும் உரிய தகுதி பெற்றிருந்த போதிலும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப் படுகின்றன என்பது குறித்து க்ஷடடிஉமநன லெ ஊயளவந - நுஉடிnடிஅiஉ னுளைஉசiஅiயேவiடிn in ஆடினநசn ஐனேயை - நனவைநன லெ ளுரமாயனநடி கூhடிசயவ யனே முயவாநசiநே ளு. சூநறஅயn - டீஒகடிசன யீசநளள, 2010 என்கிற ஆங்கில நூலில் உரிய சான்றுகளுடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்).

இரயில்வே துறையில் தீண்டப்படாத வகுப்புத் தொழிலாளர்களின் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம். கேங் மேனாக (ழுயபேஅயn) வேலை செய்ய வேண்டும் என்பதே அவன் தலைவிதி யாக இருக்கிறது என்பதை எவரும் மறுக்க இயலாது. உயர்வதற்கான வாய்ப்பே இல்லாமல் பணிக்காலம் முழுவதும் கேங்மேனாகவே வேலை செய்கிறார். அரிதாக இரயில் நிலையத்தில் சுமைதூக்குவோராக அமர்த்தப்படுகிறார். சுமைதூக்குவோராக (யீடிசவநச) இருப்பவரின் கடமைகளில் ஒன்று தொடர்வண்டி நிலைய அதிகாரியின் வீட்டுவேலைகளைச் செய்வதும் ஆகும். இது ஒரு வழமையாக இருந்துவருகிறது. பொது வாகத் தொடர் வண்டிநிலைய அதிகாரி சாதி இந்துவா கவே இருப்பார். சாதி இந்துவாக உள்ள நிலைய அதிகாரி தீண்டப்படாத ஒருவரைச் சுமைதூக்குவோ ராக அமர்த்தினால் தன் வீட்டு வேலைகளைச் செய்ய அனுமதிக்க முடியாது என்பதால் தீண்டப்படாதவர் களுக்குச் சுமைதூக்கும் பணியாளர் வேலையும் தரப்படுவதில்லை.

இரயில்வேயில் எழுத்தராக அமர்த்தப்படு வதற்குத் தகுதித் தேர்வு எழுதவேண்டும் என்கிற நடைமுறை இல்லை. அதனால் மெட்ரிக்கில் தேர்ச்சி பெறாதவர்கள் எழுத்தர்களாக அமர்த் தப்பட்டு வருகின்றனர். கிறித்தவர்களில், ஆங்கிலோ இந்தியர்களில், சாதி இந்துக்களிலிருந்து மெட்ரிக் படிப்பில் தேர்ச்சி பெறாத நூற்றுக்கணக்கான வர்கள் எழுத்தர்களாகப் பணி அமர்த்தம் செய் யப்படுகின்றனர். மெட்ரிக் - தேர்ச்சி பெறாத நூற்றுக் கணக்கான தீண்டப்படாத இளைஞர்கள் இருக் கின்றனர். ஆனால், இரயில்வேயில் எழுத்தர் பணி இவர்களுக்குத் திட்டமிட்டே மறுக்கப்படு கிறது. ஒருவர்கூட எழுத்தர் பணியில் அமர்த்தப் படவில்லை.

இரயில்வே பணிமனையிலும் இதே நிலைதான் இருக்கிறது. மிக அரிதாகவே தீண்டப்படாதவர் மெக் கானிக்காக வேலையில் சேர்க்கப்படுகிறார். ஃபோர் மேனாகவோ அல்லது பணிமனைக் கிடங்கின் பொறுப்பாளராகவோ தீண்டப்படாதவர் அமர்த்தப்படுவ தில்லை. ஒரு கூலி; அவன் கூலியாக நீடிக்க வேண் டும் என்ற நிலைதான் இருக்கிறது. இரயில்வேயில் தீண்டப்படாத தொழிலாளர்களின் அவல நிலை இவ்வாறாக இருக்கிறது.

எனக்கும் உங்களுக்கும் தீயநோக்கம் கற்பிப்பவர் களுக்கு நான் இரண்டு வினாக்களை நேரிடையாகக் கேட்க விரும்புகின்றேன். மேலே குறிப்பிட்டுள்ள தீண்டப்படாதவர்களின் துயரங்கள் உண்மையா இல் லையா? இரண்டாவதாக, அத்துயரங்கள் உண்மை யெனில், அத்துயரத்தால் பாதிக்கப்படுவோர் அவற்றைக் களைவதற்காக ஓர் அமைப்பாக அணிதிரள வேண்டு மல்லவா? இந்த வினாக்களுக்கு நேர்மையான எந்த மனிதனும் எதிர்மறையாக விடைகூற முடியாது.

எங்களைக் குற்றஞ்சாட்டும் தொழிலாளர் தலை வர்கள் ஒருவகையான தப்பெண்ணத்தில் இருக்கிறார் கள். அவர்கள் காரல் மார்க்சைப் படித்தவர்கள்; உடைமை வர்க்கம், தொழிலாளர் வர்க்கம் என இரண்டு வர்க்கங் கள் மட்டுமே உண்டு என்று எண்ணுகிறார்கள். காரல் மார்க்சு கூறியபடியே இந்தியாவிலும் உடைமை வர்க்கம், தொழிலாளர் வர்க்கம் மட்டுமே இருப்பதாகக் கருதுகிறார்கள். இந்த அடிப்படையில் இந்தியாவில் முதலாளியத்தைத் தகர்த்துவிடலாம் என்று நினைக் கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கருதுவதில் இரண்டு தவறு கள் உள்ளன. மார்க்சு சொன்னதை ஒரு கருத்து நிலை யாகக் கொள்ளாமல் மெய்மை என்று நினைப்பது அவர்கள் செய்யும் முதல் தவறு. இந்தியாவில் இரண்டு வர்க்கங்கள் மட்டுமே உள்ளன என்கிற கருத்தியலை அடித்தளமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பரப்பு ரையோ, செயல்திட்டமோ எத்தகைய பயனையும் தராது என்பதுடன், கேடானதாகவே இருக்கும்.

எல்லா வர்க்கங்களிலும் ஒரு பொருளாதார மனிதன் அல்லது பகுத்தறிவு மனிதன் அல்லது தர்க்கரீதியான மனிதன் இருக்கிறான் என்பதை உண்மை என்று நம்புவது எந்த அளவுக்குத் தவறோ அதேபோல் இந்திய சமூகத்தில் இரண்டு வர்க்கங்கள் மட்டுமே இருக்கின்றன என்பதும் அதே அளவுக்குத் தவறாகும். பொருளியல் வல்லுநர்கள் ஒரு பொருளாதார மனி தனை அடிப்படையாகக் கொள்ளும்போது, மற்ற வகைகளில் சமூகத்தில் சமத்துவமான நிலையில் மனிதர்கள் இருப்பதான ஓர் ஊகத்தின் பேரில்தான் தங்கள் ஆய்வை மேற்கொள்வதாக முன்னெச்சரிக்கை செய்கின்றனர். இந்தத் தொழிலாளர் தலைவர்கள் பொருளாதார வல்லுநர்கள் பயன்படுத்தும் பிற புறச் சூழல்களின் சாதகமான நிலையை குறித்து அறவே மறந்துவிடுகிறார்கள்.

அய்ரோப்பாவில்கூட மார்க்சு சொன்னது சரியாக இருந்தது என்று சொல்வதற்கில்லை. செருமனியில் ஒடுக்கப்பட்ட ஏழை இருக்கிறான். பிரான்சில் சுரண்டப் பட்டதால் தன் வாழ்வாதாரத்தையே இழந்துவிட்ட கைவினைஞன் இருக்கிறான். இருவரும் இனம், நாடு, சமய நம்பிக்கைகள், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றால் வேறுபட்டவர்கள். ஆயினும் சுரண்டப்படுவோர் என்ற நிலையில் அவர்களிடையே ஓர்மை உணர்வும் ஒற்றுமையும் உண்டாக வேண்டும் என்று காரல் மார்க்சு காலம் முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. செருமனியின் ஒடுக்கப்பட்ட ஏழையும் பிரான்சின் சுரண்டப்பட்ட ஏழையும் ஒன்றுசேர்ந்திருக் கிறார்களா? நூறு ஆண்டுகள் ஆன பிறகும் அவர்கள் ஒன்றுபடக் கற்றுக்கொள்ளவில்லை. கடந்த (முதல்) உலகப் போரில் அவர்கள் எதிர் எதிர் அணியில் நின்று பகைவர்களாகப் போரிட்டார்கள்.

இந்தியாவுக்கும் இது பொருந்தும். உடைமை வர்க்கம், உடைமை இல்லாத வர்க்கம் என்னும் திட்டவட்டமான பிரிவினை இந்தியாவில் ஏற்படவே இல்லை. எல்லாத் தொழிலாளர்களும் ஒன்று - ஒரு வர்க்கம் என்பது ஒரு இலட்சியம்; அது அடையப்பட வேண்டிய இலட்சியம்; ஆனால் அதுவே நடப்பில் நிலவுகின்ற உண்மை எனக் கருதுவது தவறு. அவ்வாறாயின் தொழிலாளர்களை எப்படி அணிதிரட்ட முடியும்? தொழிலாளர்களிடையே எப்படி ஒற்றுமையைக் கொண்டுவர முடியும்? ஒரு பிரிவுத் தொழிலாளர்கள் இன்னொரு பிரிவுத் தொழி லாளர்களை நசுக்குவதைத் தடுப்பதன் மூலம் அவர் களிடையே ஒற்றுமையை உருவாக்க முடியும். ஒடுக் கப்பட்ட மக்கள் அமைப்பு ரீதியாகத் திரள்வதைத் தடுப்பதன் மூலம் அது முடியாது. தமக்கு இழைக்கப் படும் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பிரிவினரைத் தடுப்பதன் மூலம் அது முடியாது. ஒற்று மையைக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளிக்கு  இனம், மதம் ஆகிய பின்னணியில் பகைமை கொள்வதற்கான அடிப் படைக் காரணங்களைக் கண்டறிந்து களைவதன் மூலம் அத்தகைய ஒற்றுமையை அவர்களிடையே கொண்டுவரமுடியும்.

தொழிலாளர்களிடையே ஒற்றுமையை உருவாக்கு வதற்கான சிறந்த வழி என்னவெனில், ஒரு தொழிலாளி மற்ற தொழிலாளர்களுக்குத் தரவிரும்பாத உரிமை களை அவன் மட்டும் பெறவேண்டும் என்பது தவறான சிந்தனை என்று அவனுக்கு எடுத்துச் சொல்வதுதான். தொழிலாளர்களுக்கிடையே சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைப் பின்பற்றுவது தொழிலாளர் ஒற்றுமை யைச் சீர்குலைக்கும் என்று தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும். வேறு வகையில் சொல்வதாயின், பார்ப்பனியத்தை-சமத்துவமின்மை எனும் சிந்தனையை அடியோடு கல்லி எறிவதுதான் தொழிலாளர் ஒற்று மைக்கு வழிகோலும். இத்தகைய முயற்சியில் இறங்கிய தொழிலாளர் தலைவர் யார்?

முதலாளியத்துக்கு எதிராகக் கடுமையாகப் பேசும் தொழிலாளர் தலைவர்களை நான் அறி வேன். ஆனால் பார்ப்பனியத்துக்கு எதிராக இவர் களில் எவரும் பேசியதாகத் தெரியவில்லை. இதில் அவர்கள் கடைப்பிடிக்கும் கள்ள மவுனம் வெளிப்படையாகத் தெரிகிறது. தொழிற்சங்கத் திற்கும் தொழிலாளர் ஒற்றுமைக்கும் பார்ப் பனியத்துக்கும் தொடர்பில்லை என்று நம்புவ தால் அவர்கள் இதுபற்றிப் பேசாமல் இருக் கிறார்களா? தொழிலாளர்களிடையே ஒற்றுமை யைக் குலைக்கும் ஆற்றல் வாய்ந்ததாகப் பார்ப் பனியம் உள்ளது என்கிற உண்மையை ஏற்க மறுப்பதால் மவுனமாக இருக்கிறார்களா? பார்ப் பனியத்தைக் கண்டித்துப் பேசினால், அதனால் தொழிலாளர் மனம் புண்படுமானால், தாங்கள் தொழிலாளர் தலைவர்களாக இருக்க முடியாத நிலை ஏற்படுமோ என்கிற சந்தர்ப்பவாதச் சிந்தனை காரணமாக இருக்குமா?

தொழிலாளர்களிடையே ஒற்றுமை ஏற்படாத தற்கு மூலகாரணியாக இருப்பது பார்ப்பனியமே என்பது என்னுடைய உறுதியான கருத்து. எனவே தொழிலாளர்களிடம் நிலவும் பார்ப்பனிய மனப் போக்கை அகற்றிடத் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பார்ப்பனியம் எனும் தொற்றுநோயைப் புறக்கணிப்பதாலோ அல்லது அதுகுறித்துப் பேசாமல் இருப்பதாலோ அது ஒழிந்துபோகாது. இந்தப் பார்ப்பனியப் போக் கைத் தேடிக் கண்டறிந்து, தோண்டித் துருவி ஆராய்ந்து அடியோடு கல்லி எறியவேண்டும். அப்போதுதான் தொழிலாளர் ஒற்றுமை முகிழ்க்கும்.

(“டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுத்துகளும் பேச்சுகளும் (ஆங்கிலம்”) தொகுதி 17, மூன்றாம் பாகம் நூலில் உள்ள சொற்பொழிவின் ஒரு பகுதியின் தமிழாக்கம். தமிழில் : க. முகிலன்).

Pin It