நாம் வாழும் சமூகத்தின் அடி ஆழத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு சில முக்கியமான நீரோட்டங்களை, அவற்றின் போக்குகளை, தன்மைகளை, ஒற்றுமைகளை தமக்குள் கொண்டிருக்கும் தாக்கங்களை சுட்டிக்காட்டுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம். பார்ப்பன சமூகத்தையோ, அந்த சமூகத்தைச் சார்ந்த தனி நபர்களையோ கோபத்துடனும் வெறுப்புடனும் அணுகுவதல்ல எனது குறிக்கோள். பார்ப்பனியம் என்பது ஒரு சமூக–பண்பாட்டு–அரசியல்–பொருளாதார ஆதிக்கச் சித்தாந்தம். பார்ப்பன சமூகத்தில் பிறந்த சிலர் இதனை முழுமூச்சாக எதிர்ப்பதையும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த பலர் இதனை முட்டாள்தனமாக ஆதரிப்பதையும் நாம் அறிவோம். இந்த ஆதிக்க சித்தாந்தத்திற்கும், இத்தகைய ஆதிக்கச் சிந்தனை கொண்டோருக்கும் எதிரான பார்வையே இது.

                மனிதனாகப் பிறந்த நம் எல்லோருக்கும் கல்வியும் அறிவும் சிந்திக்கும் திறனும் உரிமையும் இருக்கிறது; இது ஏதோ விஞ்ஞானிகளுக்கு மட்டுமே உரிய திறனல்ல. ஆனால், மக்களைத் தொடர்ந்து அடிமைப்படுத்தி வைத்திருக்க அறிவியல், எரிசக்தி, வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயர்களில் "பழைய பார்ப்பனிய கள் புதிய அணுத்துவ மொந்தையில்' பரிமாறப்படுகிறது. நேரடியாக, சுருக்கமாகச் சொல்வதென்றால், பார்ப்பனியமும், அணுத்துவமும் ஒன்றிணைந்து பார்ப்பணுத்துவம் என்ற புதிய பெயரில் வருகிறது. பார்ப்பனியம், அணுத்துவம் எனும் இரண்டு சித்தாந்தங்களுக்குமே மிக நெருக்கமான தத்துவார்த்தத் தொடர்பும், வரலாற்றுப் பின்னணியும், எதார்த்த சமூக – பொருளாதார –அரசியல்–பண்பாட்டு இணக்கமும் இருப்பதைக் காண முடியும்.

"இந்துத்துவா' எனும் மதவாத தத்துவத்தை 1938ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற அகில பாரத இந்து மகாசபா மாநாட்டில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் அறிவித்து, அதை விளக்கிப் பேசினார்: “இந்துத்துவா என்பது இந்து மதம் என்று புரிந்து கொள்ளப்படக் கூடாது. மாறாக, இந்துத்துவா நமது இந்து இனத்தின் சிந்தனைகள், செயல்பாடுகள் என அனைத்தையும் உள்ளடக்கியது. இந்த வார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு இந்து எனும் வார்த்தையின் அர்த்தத்தையும், அது எப்படி பல லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது; வீரம் செறிந்த, சிறந்த மக்களின் அன்பான விசுவாசத்தைப் பெற்றது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.'' இந்தப் பேச்சு முழுவதிலும் இந்துத்துவா கொள்கையை விளக்க முற்படுகிறார் சாவர்க்கர். அவரும் அவரைப் போன்ற அனைத்து இந்துத்துவா தலைவர்களும் "இந்து' என்று பார்ப்பனர்களைத்தான் குறிப்பிடுகிறார்கள். இன்றைய இந்தியாவில் வலதுசாரி, பிற்போக்கு இந்து இயக்கங்களின் பார்ப்பனியமே இந்துத்துவம் என்று அறியப்படுகிறது. இந்துத்துவ இயக்கங்கள் மட்டுமல்ல, காங்கிரசு கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி என பல அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் பார்ப்பனியத்தின் பிடிக்குள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். பார்ப்பனிய ஆக்டோபஸ் தனது அனைத்துக் கைகளாலும், பல்வேறு தளங்களையும் பிடித்து வைத்துக் கொண்டு இயங்குவதால், பரந்துபட்ட பார்ப்பனியம்தான் இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கையாக இருந்து வருகிறது.

அணுத்துவம் (Nuclearism) என்பது அணு ஆயுதங்களால் மட்டுமே சமூக அமைதியை நிலைநாட்ட முடியும்; அணுசக்தியால் மட்டுமே வளர்ச்சியைப் பெற முடியும். அணு விஞ்ஞானிகள் போன்ற "சரியானவர்களால்' மட்டுமே நாட்டுக்கு நல்வாழ்வு அமையும் என வாதிடும் ஓர் அரசியல் கொள்கை. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா போன்ற மேற்கத்திய வெள்ளையின மக்களின் கொள்கையான அணுத்துவம் முதலில் ஓர் ராணுவக் கொள்கையாகவே முகிழ்த்தது. பின்னர் "அமைதிக்கான அணு' என்ற பெயரில் அணு உலைகளாக ஒரு வியாபாரப் பொருளாகவும் மாறியது. நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும், வல்லரசாக மாற வேண்டும் என்று விரும்புவோர் அதற்கு அணுத்துவம்தான் ஒரே வழி என்று வாதிடுகின்றனர்.

கொஞ்சம் அணுகுண்டு; கொஞ்சம் வரலாறு

இந்திய அரசியல் அரங்கில் பார்ப்பனியமும், அணுத்துவமும் ஒன்றோடொன்று கை கோர்த்தே வளர்ந்து வந்திருக்கின்றன. "அகில இந்திய இந்து சபா' எனும் அமைப்பு 1915 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதே ஆண்டு அதன் முதல் மாநாடு ஹரித்துவாரில் நடத்தப்பட்டது. பின்னர் 1921 ஆம் ஆண்டு அந்த இயக்கம் "அகில இந்திய இந்து மகாசபா' என்று பெயர் மாற்றப்பட்டது. காங்கிரசு கட்சியோடு இணைந்து அந்தக் கட்சிக்குள்ளேயே செயல்பட்ட இந்த அமைப்பு இந்துக்களின் நலன்களுக்காக குரல் கொடுத்தாலும் அக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருக்கவில்லை. மதன் மோகன் மாளவியா, லாலா லஜபதி ராய் போன்றோர் இரண்டு இயக்கங்களிலும் தீவிரமாக செயல்பட்டனர்; இரண்டு இயக்கங்களுக்குமே தலைவர்களாகவும் இருந்தனர்.

1927 ஏப்ரல் மாதம் பாட்னாவில் நடைபெற்ற மாநாட்டுக்குப் பிறகு, மகாசபா காங்கிரசிடமிருந்து விலகத் தொடங்கியது. 1934 சூன் மாதம் காங்கிரசு கட்சி தனது உறுப்பினர்களை மகாசபா, ஆர்.எஸ்.எஸ்., முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகளில் சேர வேண்டாம் என்று தடை விதித்தது. 1939 ஆம் ஆண்டு விநாயக் தாமோதர் சாவர்க்கர் எனும் பார்ப்பனத் தலைவர் இந்து மகாசபா அமைப்புதான் இந்துக்களின் அரசியல் இயக்கமாக இருக்கிறது என்று அறிவித்து, அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். காந்தி கொலை வழக்கில் சிக்கிய சாவர்க்கர் நலிவடைந்தபோது, மகாசபாவும் பலமிழந்தது.

மகாசபாவின் துணைத் தலைவராக இருந்த ஷ்யாம் பிரசாத் முகர்ஜி அந்த இயக்கத்திலிருந்து 1949 ஆம் ஆண்டு வெளியேறி, நேருவின் அமைச்சரவையிலிருந்து ஏப்ரல் 19, 1950 அன்று ராஜினாமா செய்துவிட்டு, அக்டோபர் 21, 1951 அன்று பாரதிய ஜன சங்க் எனும் கட்சியைத் தொடங்கினார். மகாசபா தொடக்கம் முதலே ராணுவத்துவக் கொள்கையை ஆதரித்து வருவதாக பெருமைப்பட்டுக் கொண்டது. ராணுவ செலவை உயர்த்த வேண்டும், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று வாதிட்ட மகாசபா, இந்தியா அணு ஆயுதங்கள் தயாரிக்க வேண்டும் என்று 1966 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியது. 1967 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தனது தேர்தல் அறிக்கையில், ஜன சங்க் கட்சியும் இந்தியா ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும். அணு ஆயுதங்களும், ஏவுகணைகளும் தயாரிக்கப்பட வேண்டும், அனைத்து இந்திய இளைஞர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றெல்லாம் வாதிட்டது. இந்தியா அணு ஆயுதங்கள் தயாரிக்க வேண்டும் என்று மகாசபாவும், ஜனசங்கும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருந்தன.

அணுக் கொண்டாட்டம்

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும்வரை அடக்கி வாசித்துக் கொண்டிருந்த அணுசக்தித் துறை, வாஜ்பாய் அரசின் 1998 மே 1113 நாட்களில் போக்ரான்2 அணு ஆயுதப் பரிசோதனைக்குப் பிறகு, ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளையாகி துள்ளி விளையாடத் தொடங்கியது. பார்ப்பனியமும், அணுத்துவமும் ஒன்றாய் இயங்கின. 1987 ஆம் ஆண்டுக்குள் அணு உலைகளில் இருந்து 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்போம், 2000 ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்போம் என்றெல்லாம் புளுகி, தர்மசங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த அணுசக்தித் துறை, அணுகுண்டு தயாரித்ததுதான் எங்கள் சாதனை என்று புளகாங்கிதமடைந்தது. மேலும், அணுசக்தித் துறையில் பெரும்பாலான உயர் அதிகாரிகள் பார்ப்பனர்களாக இருப்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

அணுசக்தித் துறையின் தலைவர்களாகப் பணியாற்றியிருக்கும் ஹோமி பாபா (1948 – 1966), விக்ரம் சாராபாய் (1966 – 1971),ஹெச்.என்.சேத்னா (1972 – 1983), ராஜா ராமண்ணா, (1983 – 1987) எம்.ஆர். சீனிவாசன் (1987 – 1990), பி.கே. அய்யங்கார் (1990 – 1993), ஆர். சிதம்பரம் (1993 – 2000), அனில் ககோட்கர் (2000 – 2009), சிறீகுமார் பானர்ஜி

(2009 – 2012), ரத்தன் குமார் சின்கா (2012 )ஆகியோரில் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகள்கூட பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே இருக்கின்றனர். எனவே இத்துறையின் சிந்தனையோட்டம், செயலாக்கம் எல்லாமே நேரடியாகவோ மறைமுகமாகவோ பார்ப்பனியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. விஞ்ஞானிகளாகிய நாங்கள் உயர்ந்தவர்கள், எங்களை மதிக்க வேண்டும், நாங்கள் சொல்வதுபோல கேட்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எல்லாம் இங்கேயிருந்துதான் புறப்படுகின்றன.

சமூக–பொருளாதார–அரசியல்–பண்பாட்டுத் தளங்களில் சற்றே குனிந்திருந்த பார்ப்பனியம் உலகமயமாக்கலின் வழி, அறிவியலின் வழி, வளர்ச்சியின் வழி மீண்டும் தலை தூக்குகிறது. உலக அரங்கில் கோலோச்சும் வெள்ளையரினமும், இந்திய சமூகத்தில் அரசோச்சும் பார்ப்பனர்களும் ஒரே தளத்தில் நிற்பவர்கள். தாங்கள் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தும்போது, பிறர் வெறுமனே அடிமைகளாக மட்டும் வேலை செய்தால் போதும் என்றே நினைக்கின்றனர். அதனால்தான் இந்தியாவில் விவசாயிகளும், மீனவர்களும், சிறுபான்மையினரும், தலித் மக்களும் சேவைத் துறைக்குப் போகும்படியாக நிர்பந்திக்கப்படுகின்றனர். பொது வாழ்விலும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த தலைவர்கள் அரசியல்–பொருளாதாரத்தின் அழுக்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்க, பார்ப்பனர்கள் உயர் விஞ்ஞானிகளாக மேலேயிருந்து கொண்டு "தேசியப் பாதுகாப்பு' என்ற பெயரில் அரசியலை, அரசியல்வாதிகளை, பொருளாதாரத்தை, ராணுவத்தைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேசிய தொழிற்நுட்ப நாளான மே 11, 2012 அன்று விடுத்த செய்தியில் தற்போதைய அணுசக்தித் துறை தலைவர் ரத்தன் குமார் சின்ஹா சொல்லியிருக்கிறார்: “அணுசக்தித் துறை அணுசக்தியின் மூலமும், அது சார்ந்த பயன்பாடு களின் மூலமும், எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, தண்ணீர் பாதுகாப்பு, தேசியப் பாதுகாப்பு மற்றும் நாட்டிற்கான நல்வாழ்வு ஆகியவற்றை பெற்றுத் தருவதற்கு கடமைப்பட்டிருக்கிறது.''

நாட்டின் மிக முக்கியமான அறிவியல் துறையாக தம்மைக் காட்டிக் கொண்டு, நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும், மக்கள் நல்வாழ்வுக்கும் தாங்களே முழு பொறுப்பு என்ற தோற்றத்தை உருவாக்கி, இந்தியாவின் அதிகாரத் தளங்கள் அனைத்தையும் தன்வயப்படுத்துவதுதான் அணுசக்தித் துறையின், அணுத்துவத்தின் திட்டம். அணுவாயுதப் பரிசோதனை நடத்தி, அணு குண்டுகள் தயாரித்த பிறகு, அவற்றை இன்னும் அதிகமாக தயாரிக்க புளூட்டோனியம் தேவைப்படுவதால், நாடெங்கும் அணு உலைகளைத் தொடங்கி, மின்சாரம் தயாரிப்பதாகச் சொல்லி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்த முயல்கிறது அணுசக்தித் துறை. இந்தத் துறை பலமானதாக இருக்கும் ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகளில் அவர்களின் அரசியல், பொருளாதாரம், ராணுவம் போன்றவை பெருமளவில் அணுசக்தித் துறையின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன.

இந்திய அணுசக்தித் துறை 2030 ஆம் ஆண்டுக்குள் அணு உலைகளில் இருந்து நான்கு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் போகிறோம் என்று கதை விடுகிறது. நொடிந்து கிடக்கும் தங்கள் நாட்டு பொருளாதாரங்களைத் தூக்கி நிறுத்த, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு போன்ற நாடுகள் அணுஉலைகளை விற்க முன்வருகின்றன. அந்த நாடுகள் இந்தியாவுக்கு ஏதோ பெரிய உதவி செய்வதுபோல பாவனை செய்து ஆட்சியாளர்கள் விரும்பும் கமிஷனையும், முதலாளிகள் விரும்பும் லாபத்தையும் வாங்கிக் கொடுத்து தன்னை வளர்த்தெடுக்க, நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறது அணுசக்தித் துறை. சுருக்கமாகச் சொல்வதென்றால், பார்ப்பனியமும் அணுத்துவமும் ஒன்றிணைந்து, பார்ப்பணுத்துவமாக அடுத்த ரவுண்ட் ஆட்டத்திற்கு வந்திருக்கிறது. தத்துவார்த்த ரீதியில் மட்டுமல்ல, எதார்த்த நடைமுறையிலும் பார்ப்பனியமும், அணுத்துவமும் ஒரே மாதிரியாகவே செயல்படுகின்றன.

தற்பொழுது பார்ப்பணுத்துவத்தின் "புதிய மநுதர்மம்' செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த இரண்டாம் வருகை நவீனமயமாக்கல், எந்திரமயமாக்கல், சந்தைமயமாக்கல், பணமயமாக்கல் எனும் நான்கு முகங்களைக் கொண்டுள்ளது. இந்த நவீன நான்முகன் தன் பங்குக்கு மக்கள் மத்தியில் அச்சங்களையும், அயற்சிகளையும், குழப்பங்களையும் விதைக்கிறான் என்பது தெளிவு. இவற்றைப் பயன்படுத்தி மூட நம்பிக்கைகளையும் வளர்த்து, அத்தோடு விஞ்ஞான பசுத்தோலையும் போர்த்திக்கொண்டால் வியாபாரம் நன்றாக நடக்கும் என்பது பார்ப்பணுத்துவத்தின் கணிப்பு. நவீன நான்முகனின் தலையில் பிறப்பவர்கள் அறிவார்ந்த விஞ்ஞானிகள், தோளில் பிறப்பவர்கள் அதிகார வர்க்கத்தினர் / ராணுவத்தினர், வயிற்றில் பிறப்பவர்கள் வியாபாரிகள், காலில் பிறப்பவர்கள் சமூக செயல்பாட்டாளர்கள். உயிர்களைப் போற்றி, வாழ்க்கை, இயற்கை, மனிதம் எனச் செயலாற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நவீன சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள், தேசத் துரோகிகள்.

தமிழகத்தில் பார்ப்பணுத்துவம்

தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள், நியூட்ரினோ ஆய்வு மய்யம், ராணுவத் தளவாட தயாரிப்பு நிலையங்கள் போன்றவை வரவேற்கப்படுகின்றன. தி.முக. – அ.தி.மு.க. எனும் தமிழகத்தின் இரண்டு முக்கியக் கட்சிகளுமே பார்ப்பணுத்துவத்தை எந்தக் கேள்வியும் கேட்காது ஏற்றுக்கொள்கின்றன. தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது மாநிலங்களவை முதலுரையில் (2007) இந்திய–அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசினார். “நான் நிகழ்த்தவிருக்கும் இந்த முதல் பேச்சானது முக்கியத்துவம் வாய்ந்த 123 ஒப்பந்தத்தைப் பற்றிய என் கட்சியின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும்'' என்று சொன்ன அவர், “இவ்விஷயத்தில் எங்கள் கட்சியோ கட்சித் தலைவரோ தங்கள் நிலைப்பாட்டிலிருந்து என்றுமே மாறியதில்லை என்பதை நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பவர்கள்தாம்'' என்றார்.

அ.தி.மு.க.வின் கதையும் கிட்டத்தட்ட இதே போன்றதுதான். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரானப் போராட்டம் 2011 செப்டம்பர் மாதம் தொடங்கியபோது, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா அந்தத் திட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார். பிறகு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது போராடும் மக்களிடம், “உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்று உத்தரவாதம் அளித்தார். கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி போராளிகளோடு பேசுவதற்கு தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழுவில், அணுசக்தித் துறையைச் சார்ந்த எம்.ஆர்.சீனிவாசனையே உறுப்பினராக நியமித்தார். பின்னர் 2012 மார்ச் மாதம் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், மீண்டும் கூடங்குளம் திட்டத்தை ஆதரித்தார். 2012 செப்டம்பர் மாதம் காவல்துறை வன்முறையை ஏவிவிட்டு, “கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. அணுஉலை திறக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அணுஉலைக்கு எதிர்ப்பு என்ற கொள்கையுடைய எதிர்ப்பாளர்களின் மாயவலையில் மீனவர்கள் யாரும் விழ வேண்டாம்'' என்று கோரிக்கை வைத்தார்.

தமிழகக் காங்கிரசு கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி போன்ற பார்ப்பணுத்துவ இயக்கங்கள் எல்லாம் போராடும் மக்களை தேசத்துரோகிகள் என்று வர்ணித்தன. தமிழகத்தில் அணுசக்திக்கு ஆதரவாக, கூடங்குளம் போராட்டத்துக்கு எதிராக எழுதிய, பேசிய, செயல்பட்ட பார்ப்பணுத்துவவாதிகளுள் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள்: "தினமலர்' உரிமையாளர்கள் லெட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி, கோபால்ஜி, "துக்ளக்' ஆசிரியர் சோ. ராமசாமி, "இந்து' உரிமையாளர் என். ராம், "புதிய தலைமுறை' இதழாசிரியர் மாலன் நாராயணன் உள்ளிட்டோர் எனப் பட்டியல் நீள்கிறது.

பார்ப்பனியம் – அணுத்துவம்: ஓர் ஒப்பீடு

பார்ப்பணுத்துவம் பெற்றிருக்கும் பல பார்ப்பனிய, அணுத்துவ அம்சங்களை நாம் எளிதில் கண்டுணர முடியும். தாங்கள் வேதத்தின் பாதுகாவலர்கள், தாங்கள் சொல்வதே வேதம், தாங்கள் யாரிடமும் எதற்கும் எந்த நிலையிலும் பதில் சொல்ல வேண்டியதில்லை. வெள்ளையரினத்தின் விஞ்ஞானத்தை வெள்ளந்தியாய் பின்பற்றுவதும், தம்மைப்பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மை கொண்டிருப்பதும், தனக்கானத் தனித்தன்மையோ படைப்புத்திறனோ இல்லாதிருப்பதும், வலிமைக்காக ஏங்கும் ராணுவத்துவ ஆசை கொண்டிருப்பதும் பார்ப்பணுத்துவத்தின் முக்கிய அம்சங்கள்.

 "புனிதமான கோயில் கருவறைக்குள் பார்ப்பனர் அல்லாத சாதியினர் போகக் கூடாது; அந்த ஆன்மிக வெளிகள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, புனிதமான, சக்தி வாய்ந்த பார்ப்பனர்களுக்கு மட்டுமானவை' என்ற மநுதர்ம கொள்கையைப் போலவே நவீன அறிவியல்–தொழில்நுட்ப–ராணுவக் கோயில்களான அணுமின் நிலையங்கள், அணுவாயுத உற்பத்தித் தளங்கள் அனைத்தும் அறிவுக்கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அப்பழுக்கற்ற, உயர் அணு விஞ்ஞானிகளுக்கு மட்டுமே உரிய வெளிகளாக உள்ளன. புராதன பார்ப்பனக் குடியிருப்புக்களான அக்ரகாரங்களைப் போலவே நவீன அணுசக்திக் குடியிருப்புகள் (டவுன்ஷிப்கள்), விஞ்ஞானிகளின் நகரியங்கள் தொலைவான, பாதுகாப்பான இடங்களில் தகவமைக்கப்படுகின்றன. அறிவாளர்/ஆய்வாளர் அக்ரகாரத்தில் குடியிருப்போர் தவிர, பிற சூத்திரர்களுக்கு அங்கே சென்று வரும் உரிமை மறுக்கப்படுகிறது. அறிவாளர்/ஆய்வாளர் குடியிருப்புகளிலும் வேலையாட்கள் பிரித்து வைக்கப்படுகின்றனர். உயர் அதிகாரிகள் வீடுகள் சொகுசானவையாகவும், உழைப்பாளிகளின் வீடுகள் தரமற்றவையாகவும், தள்ளிவைக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன.

"அறிவு'ப் பூசாரிகள்

உயர்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு போலி, மக்கள் விரோத, ஜனநாயக விரோத அறிவுத்தளத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு, தமது வேதமும், விஞ்ஞானமும் உயர்ந்தவை என்று பிரச்சாரம் செய்து, வாழ்வின் பிற அம்சங்களிலிருந்து தம்மை உயரத்தில் நிலை நிறுத்தி, பிறரைத் தாழ்வாக நடத்தி, அவர்களையும் அவ்வாறே கருதச் செய்து, தமது சுயநலன்களை பார்ப்பனர்கள் கவனமாகப் பாதுகாத்துக் கொள்கின்றனர். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அணுசக்தித் துறையும் இதே மாதிரியான சாக்குப்போக்கையும், பொய்களையும் தான் சொல்கிறது.

தங்களின் இந்த உயர்ந்த வேதத்தை, அறிவியலை தங்களோடு மட்டுமே வைத்துக் கொள்வதும், பிறரோடு பகிர்ந்து கொள்ளாமலிருப்பதும், பிறரைப்புறந்தள்ளுவதும் அடுத்த முக்கிய அம்சம். சாதாரணமானவர்களுக்கு எங்கள் வேதம்/அறிவியல் புரியாது, தெரியாது. நாங்கள் பிறப்பால்/படிப்பால் உயர்ந்தவர்கள்; எனவே விசேஷ அறிவை/அறிவியலை நாங்கள் மட்டும்தான் தெரிந்து கொள்ள முடியும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர் ஆய்வு செய்யும் தகுதியற்றவர்கள்; இந்த விசேஷ உண்மையின் உலகத்துக்குள் அவர்கள் நுழைய முடியாது. அவர்களுக்கு இது புரியாது, தெரியாது. இதைக் கேள்வி கேட்பது, அபச்சாரம், பாவம். அவர்கள் அனைத்தும் அறிவர்; அவர்களை நம்ப வேண்டும், சந்தேகிக்கக் கூடாது, அவர்களோடு தர்க்கம் செய்யக்கூடாது வேதம் படித்தவர்கள் அனைவரும் பார்ப்பனர்களாக இருப்பது நியதி. எனவேதான் பார்ப்பன ஆச்சாரம்.

எந்த விதமான வெளிப்படைத்தன்மையும் பார்ப்பனியத்திலும், அணுத்துவத்திலும் கிடையாது. வேத மந்திரங்கள் பார்ப்பனரல்லாதாரோடு பகிர்ந்து கொள்ளப்பட முடியாதவை. காயத்திரி மந்திரம் போன்ற மந்திரங்களை குழந்தைகளுக்கு போதிக்கும்போதுகூட காதுக்குள்தான் சொல்வார்களே தவிர, உரக்கச் சொல்ல மாட்டார்கள். அது போலவே, அணுசக்தி சாஸ்திரங்களும் ரகசியத்தன்மை மிக்கவை. எந்த நடவடிக்கையிலும் கணக்கு வழக்கு கிடையாது; ஜனநாயகப் பண்புகளும் போற்றப்படுவதில்லை. யாருக்கும் எந்தத் தகவலும் கொடுப்பதில்லை. உழைப்பவனை உதாசீனப்படுத்துவதும், அவனது உழைப்பைச் சுரண்டுவதும், உரிய ஊதியத்தைக் கொடுக்க மறுப்பதும் பார்ப்பனியத்தின், அணுத்துவத்தின் கேவலமான அம்சங்கள்.

பார்ப்பணுத்துவ இந்தியா

பார்ப்பனியமும், அணுத்துவமும் உறவாடிப் பிறக்கும் பார்ப்பணுத்துவம் கோலோச்சும்போது இந்தியா எப்படி இருக்கும்? இடிந்தகரையைப் பாருங்கள்! அப்படியிருக்கும்! உங்கள் ஊருக்குள் அனுமதியின்றி நுழைந்து, தான்தோன்றித்தனமாக, எதேச்சாதிகாரமாக, பலவந்தமாக பார்ப்பணுத்துவம் கடை விரிக்கும். தட்டிக்கேட்டால், சீனிவாச பார்ப்பணுத்துவர் சொன்னதுபோல, “நாங்கள் வரும்போது, உங்கள் ஊரே இருக்கவில்லையே'' என்று நாகூசாமல் பொய் சொல்லும். நீங்கள் தகவல் கேட்டால், தர மறுக்கும். “மீனவன், உனக்கு என்னடா புரியும்?'' என்று ஏளனம் செய்யும். அவர்களை தடுத்து நிறுத்தினால், தேசவிரோத வழக்கு பாயும். தேசத்தின் மீது போர் தொடுத்தக் குற்றச்சாட்டு குரல்வளையை நெரிக்கும். கொலைக் குற்றம் சுமத்தப்படும், கொடிய சட்டங்களெல்லாம் பிடித்தாட்டும். உங்களை அந்நிய சக்தியின் கைக்கூலி என்று அசிங்கப்படுத்தும்; அந்நாட்டுப் பணத்துக்காய் அலைவதாக அவதூறு சொல்லும். ஊருக்குள் வருவதற்கு காவல் துறை தடை விதிக்கும்.

 பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், உங்கள் எதிரியே அங்கு நீதிபதியாக நியமிக்கப்படுவார். அவர்கள் பேச்சை வேத வார்த்தையாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்குள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே அடியாட்களை ஏவிவிட்டு அடிப்பார்கள்.

இடிந்தகரை அராஜகம் இந்தியாவெங்கும் நடந்தேறும். இந்திய கிராமப்புற மக்களுக்கு நகர வாழ்க்கை மாதிரியாகக் காட்டப்படும். நகர்ப்புற மக்களுக்கு அமெரிக்க வாழ்க்கை உதாரணமாக சொல்லப்படும். மீதேன் கிடைக்கிறது, தோரியம் கிடைக்கிறது என்று நமது நிலங்களை, கடற்கரையை, காடுகளை, மலைகளை வெளிநாடுகளுக்கு விற்பார்கள். இயற்கையை இழந்து, மண்ணை, மக்களை, மாண்பைத் துறந்து பன்னாட்டு நிறுவனங்களின் கூலிகளாக மாற்றிவிடுவார்கள். விவசாயம், மீன்பிடித் தொழில் முற்றிலுமாக முடக்கப்பட்டு, உணவுக்காக பிற நாடுகளிடம் கையேந்தி நிற்கும் கொடூர நிலைக்குத் தள்ளப்படுவோம். இந்தியா கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு முற்றிலுமாகக் கைமாறும். இப்போதே ரஷ்ய தூதர், நம்நாட்டுக் கொள்கை முடிவுகளை அறிவிக்கிறார். இந்நிலை இன்னும் மோசமாகும்.

பாகிஸ்தான், சீனாவைக் காட்டி அமெரிக்கா உள்ளே வரும்; பலம் வாய்ந்த ஒண்ட வந்த பிடாரியோடு பலமற்ற, தனித்துவமற்ற, தன்னம்பிக்கையற்ற பார்ப்பன ஊர்ப்பிடாரி சேர்ந்து கொள்ளும். ரகசியத்தன்மை மிக்க அரச எந்திரமும், லாப நோக்கோடு செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களும், தன்னலமிக்க பார்ப்பணத்துவமும் கைகோர்த்துக் களிநடனம் புரியும். அரசத்துவமும் முதலாளித்துவமும் பார்ப்பணுத்துவமும் கூட்டணி அமைக்கும்போது, இந்தியாவில் நிலவும் ஓரளவு ஜனநாயகத்துக்கு, மனித உரிமைகளுக்கு, நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு நிரந்தர சாவு மணி அடிக்கப்படும். அதிகாரமுள்ளோருக்கு, ஆதிக்க சக்திகளுக்கு, பணக்காரர்களுக்கு இந்தியா ஒளிரும்; விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு, சிறு வணிகர்களுக்கு, பழங்குடியினருக்கு, தலித் மக்களுக்கு, சிறுபான்மையினருக்கு, ஏழைகளுக்கு இந்தியா இருளும்.

பார்ப்பணுத்துவ முறிவு

இந்தியா ஒரு திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறது. காங்கிரசு அரசு பார்ப்பணத்துவ சித்தாந்தத்தை சிரமேற்கொண்டு, அதனை அதிரடியாக நடைமுறைப்படுத்த ஆயத்தமாய் நிற்கிறது. கூடங்குளம், கல்பாக்கம், தேவாரம் (தமிழகம்), கொவ்வாடா (ஆந்திரம்), பதி சோனாப்பூர் (ஒடிசா), ஹரிப்பூர் (மேற்கு வங்கம்), ஜைதாபூர் (மராட்டியம்), மித்தி விர்தி (குஜராத்), பத்தேஹாபாத் (ஹரியானா), பன்ஸ்வாடா (ராஜஸ்தான்), சுட்கா (ம.பி.) என நாடு முழுவதும் அங்கிங்கெனாதபடி எங்கும் அணுமின் நிலையப் பூங்காக்கள் நிர்மாணிக்க எத்தனிக்கிறது பார்ப்பனிய காங்கிரசு கட்சி. பா.ஜ.க.வோ அவர்களுக்கும் ஒருபடி மேலே போய், பாகிஸ்தானை அழித்து, பங்களாதேஷைப் பிடித்து, சீனாவை இடித்து, "அகண்ட பாரதம்' அமைத்து, பார்ப்பனியத்தை தீவிரமாக செயல்படுத்த விழைகிறது. எனவே, இரண்டு கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும், பார்ப்பனியமே சமூக–பொருளாதார–அரசியல்–ராணுவ–பண்பாட்டுத் தலைமை ஏற்கும். நாட்டின் நிலைமை மிக மோசமாகும். தலித், சிறுபான்மையினர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் என மக்கள் நலனும் பாதுகாப்பும் கேள்விக் குறியாகும். நாட்டின் ஒருமைப்பாடு சீர்குலைக்கப்படும்.

இந்நிலையில், அரச அறிவியலை எதிர்த்து, மக்கள் அறிவியலை தீவிரமாக வளர்த்தெடுக்க நாம் முன்வர வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, ராணுவக் கொள்கை, அறிவியல் கொள்கை, ஆற்றல் கொள்கை என அனைத்தும் ஜனநாயக ரீதியில் மக்களால் விவாதிக்கப்பட்டுத்தான் முடிவெடுக்கப்பட வேண்டுமே தவிர, நேர்மையற்ற மக்கள் பிரதிநிதிகளாலும், தரகர்களாய் இயங்கும் ஆட்சியாளர்களாலும், சுயநலம் பேணும் அந்நிய நாட்டவர்களாலும் நிர்ணயிக்கப்படக் கூடாது. முழுத் தகவல்களை மக்களுக்கு வழங்குவது, கருத்துக் கேட்பு நடவடிக்கைகளை உண்மையாகச் செய்வது, மக்கள் முடிவுகளை ஏற்றுக்கொள்வது போன்ற ஏற்பாடுகளை நாம் உடனடியாகச் செய்தாக வேண்டும்.

பார்ப்பணுத்துவத்தைப் பொருத்தவரை, மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு 46 சதவிகித தமிழக மக்கள் ஆதரவாகவும், வெறும் 23 சதவிகிதத்தினர் மட்டுமே எதிராகவும் இருக்கிறார்கள் என்கிற புள்ளி விவரம் ஓர் ஊடகக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. எந்த ஒரு சாதிய, மதக் குழுவும் தமிழ்ச் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதிலும் மக்கள் உறுதியாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய தகவல்களை, உண்மைகளை, வரலாறுகளை, கனவுகளை எடுத்துச் சொல்லி, அவர்கள் கருத்துகளைக் கேட்டு, ஒரு பரந்துபட்ட கருத்துப் பரிமாற்றம் நடத்துவதுதான் நமது உடனடித் தேவையாக இருக்கிறது.

Pin It