நரேந்திர மோடியின் ஒற்றை மைய அதிகாரக் குவியல் நடவடிக்கைகள், சாதாரணப் பார்வையாள ருக்கு ஒரு நபர் எதேச்சாதிகார நகர்வுகள் போல் தோன்றும். இந்திரா காந்தியின் ஒரு நபர் எதேச்சாதி காரம் - அதற்காக அவர் கொண்டு வந்த நெருக்கடி நிலை ஆகியவற்றை நினைவூட்டும்.

ஆனால் மோடியின் ஒற்றை மைய அதிகாரக் குவியல் - இந்தியத் துணைக் கண்டத்தை ஒற்றைத் தேசிய இனத்தேசமாக, ஒற்றை ஆரியத் தேசமாக, ஒற்றைப் பண்பாட்டுத் தேசமாக, ஒற்றை மத ஆதிக்க தேசமாக, ஒற்றை ஆட்சிமொழித் தேசமாக, ஒற்றை ஆன்மிக மொழித் தேசமாக மாற்றும் கொள்கை கொண்டது. இந்திரா காந்தியைப் போல், ஒரு நபர் அதிகாரக் குவியலாக - அதாவது ஒரு நபர் எதேச்சாதி காரமாக இல்லை.

மோடியின்  நகர்த்தல்களில் - தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் தனிநபர் அதிகார நகர்வுகளும் உண்டு. அதேவேளை இந்தியாவின் பன்மொழி - பல இன, பல மத, பல பண்பாட்டு அடையாளங்களை வெட்டி நறுக்கி அவற்றை ஒற்றை ஆரிய இந்துத்துவா இந்தி தேசமாக மாற்றுவதே முதன்மையானது. எனவே, மோடியின் தனிநபர் அதிகாரச் சேட்டைகள் சிலவற்றை ஆர்.எஸ்.எஸ் பொறுத்துக் கொள்கிறது. தேனெடுத்துத் தருபவன் புறங்கையை நக்கத்தான் செய்வான்! மோடியை விட வாய்ப்பான - கவர்ச்சியான இந்துத்துவா அடியாள், தலைமை அமைச்சர் பதவியில் கிடைப்பது அரிது என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது.

மோடி தலைமையில் இந்துத்வா பாசிசம் முழுவீச்சில் அரங்கேறும் என்று ஆவலுடன் ஆரிய வர்த்தக் காரர்கள் நம்புகிறார்கள். உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ச.க. பெற்ற பெரும் வெற்றி இந்த ஆவலை அவர்களுக்குத் தூண்டுகிறது. 2019 மக்களவைத் தேர் தலில் பா.ச.க. பெரும்பான்மை பெறும் என்று கருது கிறார்கள்.

எதிரே, அனைத்திந்தியக் கட்சியாகக் காட்சி அளிப்பது காங்கிரசுதான்! கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் பெயருக்குத்தான் அனைத்திந்தியக் கட்சிகள்! மற்றபடி மூன்று மாநிலங்களில் தான் - சி.பி.எம். கட்சியின் செல் வாக்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. காங்கிரசும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும்தான் பா.ச.க.வின் பாசிச எதிர்ப்புக் கட்சிகள்!

இந்திரா காந்தியின் எதேச்சாதிகார நெருக்கடி நிலை அறிவிப்பிற்கும் பா.ச.க.வின் பாசிசத்திற்கும் இடையே உள்ள முகாமையான வேறுபாடு - பா.ச.க.வின் பாசிசம் இந்துத்துவா என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது; இட்லரின் சர்வாதிகாரம் நாஜிசம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது போல! இந்திராவின் நெருக்கடி தனிநபர் அதிகார வெறி சார்ந்தது; வழக்கமான முதலாளிய அரசியலுக் குரிய பொருளியல் கொள்கைகள் கொண்டது; அவ்வளவே!

இந்துத்துவா தனித்துவமான சித்தாந்தம்! இந்துத்துவா என்பதில் ஆரிய இன மேலாதிக்க வாதம், வர்ணாசிரமப் பார்ப்பனியம், வைதீக மதவெறி ஆகிய மூன்றும் அடங்கி யுள்ளன. இவற்றிற்கான அடிப்படை அரசியல் முழக்கம் இந்தியத்தேசியம்! இந்தியத்தேசியம் -அதற்கான தேச பக்தி ஆகியவற்றின் வழியாகத்தான் பா.ச.க. இந்துத்துவாவை முன் தள்ளுகிறது.

காங்கிரசும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் இந்தியத் தேசியம் என்ற அச்சில் பா.ச.க.வுடன் இணைபவை. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள தமிழ்த்தேசியம் உள்ளிட்ட பல்வேறு தேசியங்களை, தேசிய இனங்களை மறுப்பதில் - பா.ச.க. - காங்கிரசு - கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளிடையே முழு ஒற்றுமை உண்டு.

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவைத் தேசம் என்று குறிப்பிடாமல் ஒன்றியம் என்று கூறுகிறது. ஆனால் அதற்கு மாறாக மேற்படி பா.ச.க. - காங்கிரசு - கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் இந்தியாவைத் தேசம் என்று அழைக்கின்றன. இவை மூன்றும் இந்தியாவின் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்கின்றன. “இந்தியன்” அல்லது “பாரதீயன்” என்ற பெயரில் இந்தியாவில் ஒரு தேசிய இனம் இருப்பதாக இந்திய அரசமைப்புச் சட்டம் கூறவில்லை. “இந்தியக் குடிமக்கள்” என்று மட்டுமே கூறுகிறது.

ஆனால் மேற்படி மூன்று கட்சிகளும் இந்தியன் - பாரதீயன் என்ற ஒற்றைத் தேசிய இனம் இருப்பதாகக் கூறிக் கொள்கின்றன. அதேபோல் இந்தியாவின் பழம் பெருமை என்று கூறுவதில் வேதகாலப் “பெருமிதங் களையே” இவை அடையாளப்படுத்துகின்றன.

இந்தியத்தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பா.ச.க.வின் இந்துத்துவா பாசிசத்தில், பாதியைக் காங்கிரசுக் கட்சியும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. இவை எப்படி பா.ச.க.வின் பாசிசத்தை எதிர்க்க முடியும்?

(தொடரும்)