பச்சை வண்ண ஆடையை தன் உடல் முழுவதும் போர்த்திக் கொண்ட மூணாறு மலை இன்று சிறப்புமிக்க சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. கண்களுக்கு குளிர்ச்சியையும், இதயத்திற்கு இன்பத்தையும் அள்ளிக் கொடுக்கும் இம்மலையில் தேயிலை மட்டுமல்ல கிழங்கு வகைகள், கீரைகள், காய்கறிகள், பணப்பயிர்கள் மற்றும் நறுமணப்பொருட்கள் செழித்தோங்குகின்றன. இலங்கையில் உள்ள நுவரெலியா மலைப்பகுதியில் 1800களில் தேயிலைத் தோட்டம் அமைத்து பெருஞ்செல்வத்தை ஈட்டிய பிரிட்டிஷ்காரன் ஜான் டேவிட் மன்றோவின் கழுகுப் பார்வையிலிருந்து இந்த அழகிய பசுமையான மூணாறு மலைகளும் தப்பவில்லை. நுவரெலியாவில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி இன்றுவரை அத்தோட்டங்களில் குறைந்த கூலிக்கு பாடுபட்டு வருபவர்களும் தமிழகத்திலிருந்து பிழைக்கச் சென்ற தமிழர்கள்தான். இலங்கையில் அவர்கள் மலையகத் தமிழர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

கேரளத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் முழுவதும் அன்று முதல் இன்றுவரை தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வளமான மலைப்பகுதிகளை பாண்டிய மன்னன் பூஞ்சாறு என்பவன் ஆட்சி செய்து வந்தான். தமிழர்களின் கடின உழைப்பிற்கு சாட்சி சொல்லும் இம்மலைப்பகுதிகளை பாண்டிய மன்னன் பூஞ்சாறு, பிரிட்டிஷ் பெருமுதலாளி ஜான் டேவிட் மன்றோவிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு தாரை வார்த்து விட்டான். விளைந்து குவிக்கும் மலையைக் கைப்பற்றிய ஜான் டேவிட் முதலில் சிங்கோனா பயிரிட்டான். கடுமையான குளிரை எதிர்கொள்ள முடியாத சிங்கோனா செடிகள் அழிந்து போயின. எனவே, கடுங்குளிரையும் இடி, மின்னல், தொடர் மழையையும் எதிர் கொள்ளும் தேயிலையைப் பயிரிட்டு கொள்ளையைத் தொடர்ந்தான்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 அடி உயரம் கொண்ட இம்மலையில் 57 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் தேயிலைத் தோட்டம் அமைத்தான் ஜான் டேவிட். இங்கு வேலை செய்வதற்காக தமிழ்க் கங்காணிகளின் துணையோடு தேனி, மதுரை, நெல்லை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களிலிருந்து கடுமையாக உழைக்கக் கூடிய தமிழர்கள் அடையாளம் காணப்பட்டு, தேனியின் வடபகுதியில் உள்ள குரங்கனி என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து கால்நடையாக டாப்சிலிப் என்ற உச்சி மலைக்கு பல்வேறு துயரங்களுக்கு இடையில் அடிமைகளைப் போல கடத்தப்பட்டனர். குரங்கனியிலிருந்து டாப்சிலிப் வரை உள்ள 18 கி.மீ. தூரத்தை போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில் கடந்து வரும்போது தமிழர்கள் சந்தித்த துன்பங்கள் சொல்லி மாளாது. கடுங்குளிரையும், தொடர் மழையையும், கொடிய விஷப் பாம்புகளையும் கடந்து வரும் வழியில் செத்து மடிந்தவர்கள் ஏராளம். இலக்கை அடைய முடியாமல் இடையில் இறந்து போனவர்கள் முறையாக அடக்கம் செய்யப்படாமல் குப்பைகளைப் போல் அடர்ந்த மலைக்காடுகளில் வீசியெறியப்பட்டனர்.

ரத்தத்தை உறிஞ்சும் அட்டை, நஞ்சைக் கக்கி கொடூரமாய் கொத்திக் கொல்லும் பாம்பு, முட்டி மோதி உயிரை எடுக்கும் காட்டெருமை, திடீரெனத் தாக்கும் இயற்கைச் சீற்றம் இவற்றைக் கடந்து 1878 இல் இங்கிருக்கும் பார்வதி மலையில்தான் முதல் தேயிலைச் செடியை நட்டு வளர்த்தான் தமிழன். ஆனால் அதன் விளைச்சலை அறுவடை செய்ததோ ஆங்கிலேயனும், மலையாளியும் தான். கால்நடையாய் மலையேறி விவசாயத்தைத் தொடங்கி, படுக்க இடமின்றி, வாழ வழியின்றி பாறைகளில், மலை இடுக்குகளில் படுத்துறங்கி நேரம் பாராது பாடுபட்ட தமிழர்கள் பார்வதி மலையை சொந்தம் கொண்டாட முனைந்தபோது மலையாளிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஆங்கிலேயர் காலத்தில் மட்டும் தேயிலைக் காடுகளில் கொத்தடிமைகளாய் பாடுபட்ட 2000 தமிழர்கள் மர்மமான முறையில் மரணத்தை சந்தித்துள்ளனர். தமிழர்கள் பிழைக்கச் சென்ற இடங்களில் எல்லாம் அடி, உதை வாங்கி அவமானப்படுத்தப்படுகிறார்கள். விலங்குகளை விட கீழ்த்தரமான முறையில் நடத்தப்படுகிறார்கள். ஆனால், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காக குரல் கொடுத்துப் போராடி வரும் தமிழ்த்தேசிய, திராவிட இயக்கங்கள் மற்றும் கட்சிகள் இதுவரை மூணாறு தமிழர்களின் கண்ணீரைத் துடைத்தெறிய ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை என்ற கசப்பான உண்மையை மூணாறு மக்களிடம் உரையாடியபோது உணர முடிந்தது.

1956 இல் மொழிவழி மாநிலப் பிரிவினை நடந்தபோது தமிழகத்தோடு இணைய வேண்டிய தேவிகுளம், பீர்மேடு, மூணாறு ஆகிய பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. கேரளாவின் மொத்த வருவாயில் 10 சதவிகித வருமானம் தேவிகுளம், பீர்மேடு தேயிலைத் தோட்டங்களிலிருந்து கிடைப்பதால் மலையாளிகள் இம்மலைப்பகுதிகளை சூழ்ச்சியுடன் அபகரித்துக் கொண்டனர். இடுக்கி மாவட்டத்தில் 80 சதவிகித மக்கள் தமிழர்களாக இருப்பது கேரள அரசுக்கு ஆபத்து எனக் கருதிய கேரள முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை, இன்று இலங்கையில் ராஜபக்சே செய்வது போல "குடியேற்றம்' என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அவர் முதல்வராக இருந்தபோது, தேவிகுளம், உடுமன்சேரி, பீர்மேடு, தொடுபுழா போன்ற பகுதிகளில் குற்றவாளிகளாக சிறைகளிலிருந்த மலையாளக் கைதிகளை விடுதலை செய்து தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் மேற்படி பகுதிகளில் குடியமரச் செய்தார். மலையாளிகளைக் குடியமரச் செய்து விட்டால் தேவி குளம், பீர்மேடு பகுதிகள் எந்தக் காரணத்தாலும் கேரளாவை விட்டு பிரிந்து செல்ல முடியாது என்பதை நோக்கமாகக் கொண்டே அவர் செயல்பட்டார்.

இப்போது தமிழர்களை அங்கிருந்து விரட்டினால் அது தேசியப் பிரச்சனையாக உருவெடுக்கும் என்று உணர்ந்த கேரள உயரதிகாரிகள் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தேசியப் பூங்காக்களையும், வன விலங்கு சரணாலயங்களையும் அமைத்துள்ளனர். இரவிகுளம் தேசியப் பூங்கா, ஆனைமுடி சோலை தேசியப் பூங்கா, பாம்படம் சோலை தேசியப் பூங்கா, மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா, சின்னாறு வனவிலங்கு சரணாலயம், குறிஞ்சிமலை வனவிலங்கு சரணாலயம் என ஒரே தாலுகாவில் இவையனைத்தையும் அமைத்து, இப்பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்துவரும் தமிழர்களை இடுக்கி மாவட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற முனைப்போடு மலையாளிகள் செயல்பட்டு வருகின்றனர்.

1947 க்குப்பிறகு ஆங்கிலேயர் வசம் இருந்த இத்தேயிலைத் தோட்டங்கள் யாவும் மழையிலும், கடுங்குளிரிலும் கடுமையாக உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வளம் கொழித்த மலைகள் யாவும் மலையாளிகளின் கைக்கு மாறின. மீண்டும் தமிழர்கள் மலையாளிகளின் நிர்வாகத்தின் கீழ் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டனர். சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேய நிறுவனங்களில் அடிமைகளாக உழைத்த தமிழர்கள், சுதந்திரத்திற்குப்பிறகு மலையாளிகளின் கொடுங்கரங்களில் சிக்கிக் கொண்டு இன்றுவரை மீள முடியாமல் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

அதிகாலை தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தமிழர்கள் மாலை 7 மணி வரை வேலை செய்தால் அவர்களுக்கு ஒரு நாள் கூலியாக 184 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், இதே நிறுவனத்தில் வேலை செய்யும் மலையாளிகளுக்கு ஒரு நாள் கூலியாக 600 ரூபாய் வழங்கப்படுகிறது! தொழிலாளர் நலச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து இங்கு அரங்கேறி வரும் அநீதிகளை, மனித உரிமை மீறல்களைத் தட்டிக் கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ நாதியற்ற சூழ்நிலையே நிலவுகிறது. நாள்தோறும் 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்யும் தமிழர்களுக்கு கூலி உயர்வு கிடையாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு என்ற பெயரில் 2 ரூபாய், 3 ரூபாய், 5 ரூபாய் என உயர்த்தி தொழிலாளர்கள் மீது அக்கறை உள்ளவர்களாக தொழிற்சங்கங்களும், நிறுவனமும் நாடகமாடி வருகின்றன. கேரள அரசு இதை ஒரு பிரச்சனையாகக் கண்டு கொள்வதே இல்லை.

ஒவ்வொரு தொழிலாளியும் ஒரு நாளைக்கு 22 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். அதில் 5 கிலோவை கழிவு என ஒதுக்கி விடுவார்கள். மொத்தமாக கணக்கிட்டுப்பார்த்தால் நாள்தோறும் நிறுவனத்திற்கு எல்லா தொழிலாளர்களிடமிருந்தும் 50 ஆயிரம் கிலோ தேயிலைக் கொழுந்து கழிவு என்ற பெயரில் கிடைக்கிறது. ஓய்வறியாமல் உழைக்கும் தொழிலாளர்களுக்கு இங்கு போதிய மருத்துவ வசதி இல்லை. ஏதேனும் அவசரம் அல்லது நோயாளியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அவர்கள் தேனி அல்லது கோட்டயத்திற்கு தான் செல்ல வேண்டும். "டாடா' நிறுவனம் ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறது. இங்கு எல்லோருக்கும் மருத்துவ உதவி கோரும் உரிமை கிடையாது. நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள், சங்க நிர்வாகிகள், மலையாளிகள் மட்டுமே இந்த மருத்துவமனையைப் பயன்படுத்த முடியும்.

மூணாறு மலைப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருந்தாலும் அனைத்தும் ஆங்கில வழிக்கல்வியில் நடைபெறுவதால் தொழிலாளர்களின் குழந்தைகள் இதில் சேர்ந்து பயில வாய்ப்பில்லை. "ஹைரேஞ் பள்ளி' என்ற பெயரில் நிறுவனம் நடத்தும் பள்ளியில் அதிகாரிகளின் குழந்தைகள் மட்டுமே அதிகம் படிக்கின்றனர். தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை எதுவும் கிடையாது. அதனால் பெரும்பாலான குழந்தைகள் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். தமிழ் வழியில் படித்து முடித்தவர்களுக்கு கேரள அரசு வேலை கொடுப்பதில்லை. மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டு படித்தவர்களுக்கே கேரளாவில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே, மூணாறு தமிழர்களின் குழந்தைகள் படித்து முடித்த பிறகு கேரளாவிலும் வேலை செய்ய முடியவில்லை; தமிழகத்திலும் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. எந்த வகையிலும் முன்னேற வழியின்றி விழி பிதுங்கி போராடிக் கொண்டிருக்கும் "கேரள தமிழர் கூட்டமைப்'பினர் எம்மிடம் பகிர்ந்து கொண்ட சோகங்கள் நெஞ்சை உறைய வைத்தன.

“எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க மட்டும் 100 பேர் இங்கே உழைத்து இறந்து போயிருக்கிறார்கள். என்னுடைய தாத்தா 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்திருக்கிறார். அவருக்குப் பின் எங்க அப்பா. எங்க அப்பாவுக்குப் பின் நான். எனக்குப் பின் என் மகன் என தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக இங்குள்ள தேயிலைக் காடுகளில் உழைத்தாலும் இன்னும் எங்களால் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை'' என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இடுக்கி மாவட்டச் செயலாளர் ஜெயபால்.

டாக்டர் அம்பேத்கர் தோட்டத் தொழிலாளர் விடுதலை முன்னணித் தலைவர் மா. செல்வராஜ், “ஊர் ஊராச் சென்று மக்களை அணிதிரட்டி கால்நடையாக இங்கே கூட்டி வந்தார்கள். நான் 28 ஆண்டுகளாக தொழிற்சங்கவாதியாக இருந்தேன். தொழிலாளர்களுக்கு கம்பெனிகள் செய்யும் துரோகத்தைப் புரிந்துகொண்டு தான் அங்கிருந்து வெளியேறினேன். இங்கே யாரும் தொழிற்சங்கம் நடத்த வில்லை. மாறாக வட்டிக்கடை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருக்கிற அய்.என்.டி.யு.சி., ஏ.அய்.டி.யு.சி., சி.அய்.டி.யு.சி. போன்ற மூன்று தொழிற்சங்கங்களும் கடந்த 138 ஆண்டுகளாக தொழிலாளர்களை அடிமைகளாகத்தான் நடத்தி வருகிறார்கள். இதை உணர்ந்துதான் 2010 இல் "டாக்டர் அம்பேத்கர் தோட்டத் தொழிலாளர் விடுதலை முன்னணி'யை உருவாக்கினோம். மாநில பலம் இல்லாததால் தொழிலாளர்கள் இந்த சங்கத்தில் இணைய மறுக்கிறார்கள். எங்களோடு கட்சி செயல்களிலோ, கம்பெனிக்கு எதிரான போராட்டங்களிலோ, கேரள அரசுக்கு எதிரான செயல்பாடுகளிலோ தொழிலாளர்கள் எவரேனும் ஈடுபட்டால் அவர்களை உடனே பணிநீக்கம் செய்து விடுவார்கள்'' என்கிறார்.

“இங்கே மனித உரிமையே கிடையாது. எங்களுக்கு சொந்த பூமி கிடையாது. இத்தனை வருஷமா பாடுபட்டும் ஒரு சென்ட் இடம்கூட எங்களுக்கு இல்ல. தமிழர்களின் வாழ்க்கைத் தரம் கெட்டுப் போய்விட்டது. நான் படிக்கும்போது இந்த எஸ்டேட்ல வெள்ளைக்காரன் இருந்தான். அப்போதாவது கொஞ்சம் நீதி, நேர்மை இருந்தது. இப்ப மலையாளிகள் கம்பெனி நிர்வாகத்தை கையில எடுத்தபிறகு தான் நாங்க ரொம்ப சித்ரவதைக்கு ஆளாகி வருகிறோம். வெள்ளைக்காரன் காலத்துல வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால் வாரிசுரிமை அடிப்படையில் பிள்ளைகளுக்கு வேலை, வீடு குடுத்தாங்க. ஆனால் இப்போது அப்படி கொடுப்பதில்லை. கம்பெனி கட்டிக்கொடுத்துள்ள சிறை போன்ற சிறிய வீடுகளில்தான் குடியிருக்கிறோம். அதுக்கும் கொறைஞ்ச வாடகைய வேற வழியில புடிச்சிருவாங்க. வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டால் வீட்டுச் சாவிய நிறுவனத்தில் ஒப்படைச்சாத்தான் ஓய்வுப் பணத்தை கொடுப்பாங்க, இல்லன்னா அதுவும் கிடையாது'' என்கிறார் கேரள காங்கிரஸ் கட்சியின் மூணாறு வட்டாரத் தலைவர் நயினார்.

“இந்த சின்னக் குடிசையில 5 பேரு இருக்கிறோம். சுதந்திரமான இந்த காலத்துல ஓர் அடிமைத் தனமான ஏரியான்னா அது மூணாறுதான். தொழிற்சங்கவாதிகள் மிருகங்களைவிட கேவலமா வாழ்ந்துகிட்டிருக்காங்க. எங்களைச் சுரண்டி விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு சேவை செய்யுற எம்.எல்.ஏ., நாங்க எப்படி அழிஞ்சி போனாலும் பரவாயில்ல; தன்னுடைய பதவி அஞ்சு வருஷத்துக்கு நெலைக்கணும். இதுதான் அவரோட கனவு. நூறு வருஷத்துக்கும் மேலாக ரத்தத்தை சிந்தி வேலை செய்யும் எங்களோட வாழ்க்கைத் தரத்தை ஒசத்துறதுக்கு அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கல. இந்த வேதனை இங்க வேலை செய்யுற ஒவ்வொரு தமிழனையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது'' என்கிறார் தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஏசையா.

பார்வர்டு பிளாக் கட்சியின் கேரள மாநில செயலாளர் வெள்ளை துரைப் பாண்டி, “இலங்கை அகதிகளைவிட நாங்கள் மிக மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீடு, தண்ணீர், மருத்துவம், கல்வி, மின்வசதி, மருத்துவமனை போன்ற அடிப்படையான வசதிகளை செய்து தர நிர்வாகம் தயாராக இல்லை. அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எங்களை கண்டுகொள்வதில்லை. அதனால்தான் கேரள தமிழர் கூட்டமைப்பை சாதி, மொழி, இனம் கடந்து உருவாக்கியுள்ளோம். தமிழர்களின் விடிவு காலம் இதில்தான் உள்ளது என உறுதியாக நம்புகிறோம்'' என்கிறார்.

அரசியல் தேர்தல் நிலைப்பாடுகளில் தொழிற்சங்கம் யாருக்கு ஓட்டுப் போடும்படி கட்டளையிடுகிறதோ அவர்களுக்குதான் வாக்களிக்க வேண்டும். இதைவிடக் கொடுமை என்னவென்றால் தேர்தல் காலங்களில் ஒவ்வொரு தொழிலாளியும் தேர்தல் நிதியாக 100 ரூபாயும், ஒரு நாள் வேலையையும் கண்டிப்பாக இழக்க வேண்டும். சி.பி.எம், சி.பி.அய். மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அனைத்தும் சாதி, இன அடையாளங்களோடுதான் கீழ்த்தரமான அரசியலை நடத்தி வருகிறார்கள். பாட்டாளி வர்க்க விடுதலை பேசும் கேரள கம்யூனிஸ்ட்டுகள் கடுமையான சாதியவாதிகளாக இருக்கிறார்கள்.

நிறுவனத்திற்கு எதிராகவோ, தொழிற்சங்கத்திற்கு எதிராகவோ உரிமைக்குரல் எழுப்பும் தமிழர்களின் உயிருக்கு உத்திரவாதமற்ற சூழ்நிலைதான் அவர்களிடையே பேரச்சத்தை விதைத்துள்ளது. "கவாத்து வெட்டு இல்லையெனில் நிறுவனத்தை விட்டு ஓடு' என்ற கட்டளைக்குப் பணிந்து தேயிலைத் தோட்டங்களில் கவாத்து வெட்டும் பெண்களின் தோற்பட்டைகள் நொறுங்கி தேய்வடைந்து 58 வயது வரை தொடர்ந்து வேலை செய்ய முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

“இங்குள்ள தொழிற்சங்கங்களில் மலையாளிகள் தான் பொறுப்புகளில் உள்ளனர். ஆனால், மூணாறு தமிழர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் அவர்கள் கம்யூனிஸ்ட்களாகவும் இல்லை. காங்கிரஸ்காரர்களாகவும் இல்லை. அவர்கள் இன வெறியர்களாக, தமிழின விரோதிகளாகவும் செயல்படுகின்றனர். இவர்கள் இடுக்கி மாவட்டத்திலிருந்து தமிழர்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார்கள். எனவே தமிழர்களின் தன்னெழுச்சியான போராட்டம் ஒன்றே அவர்களை அடிமைத் தளைகளிலிருந்து விடுதலை செய்யும். தமிழகத் தலைவர்களை நம்பி இன்னும் எப்படி ஈழத்தமிழர்கள் விடுதலையை எதிர் நோக்கிக் காத்துக் கிடக்கிறார்களோ அது போல மூணாறு தமிழர்களும் தமிழகத் தலைவர்களை நம்பி ஏமாந்து கிடக்கிறார்கள்'' என்கிறார் கேரள தமிழர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

தமிழர்கள் தொழிலாளர்களாகவும், மலையாளிகள் அதிகாரிகளாகவும் நீடிக்கும்வரை மூணாறு தமிழர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாத நிலைதான் உள்ளது. தமிழகத்தின் தலைநகரிலேயே கேரளத்திலிருந்து பிழைக்க வந்த மலையாளிகள் தொழிலதிபர்களாக, உயரதிகாரிகளாக சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள். மலையாளிகளை இன அடிப்படையிலோ, தொழில் அடிப்படையிலோ தமிழர்கள் ஒடுக்குவதில்லை. ஆனால் கேரளாவில் வாழும் தமிழர்கள் சுதந்திரமாக வாழ வழியில்லாத நிலைதான் தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழர்கள் எங்கு சென்றாலும் சாதியையும் உடனழைத்துச் செல்வதுதான் வழக்கம். ஆனால், இன ஒடுக்குமுறை அதிகளவில் இருப்பதால் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இங்கு பெருமளவில் வெளிப்படவில்லை. நிறுவனம் கட்டிக் கொடுத்துள்ள சிறிய வீடுகளில் எல்லோரும் ஒரே இடத்தில் சரிசமமாக குடியிருப்பதால் திருமணம், காதுகுத்து, சடங்கு போன்ற நிகழ்வுகளில் எல்லோரும் பங்கேற்கிறார்கள்.

 "டேம் 999' – ஆவணப்படம், முல்லைப் பெரியாறு அணை பலவீனமடைந்து விட்டதென சொல்லப்பட்ட சித்தரிப்புகளால் தேனி, குமுளி பகுதிகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மூணாறு தமிழர்கள் முதலில் கேரள அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கேரள அரசு இப்போது மூணாறு தமிழர்களுக்கு வேறு விதமான தொல்லைகளைக் கொடுத்து வருகிறது.

குறிப்பாக, மூணாறு தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் கொடுக்க மறுத்து வருகிறது கேரள அரசு. இடுக்கி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வோரில் 90 சதவிகிதத்தினர் தலித் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தலித்துகள் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை அனுபவிப்பதற்கு அடிப்படையான சாதிச் சான்றிதழை கொடுக்க மறுப்பதன் மூலம் தலித்துகளின் வாழ்வை நிர்மூலமாக்கி, அவர்களை முகவரியற்றவர்களாக மாற்றி ஒடுக்க வேண்டும் என்பதை கேரள அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. மூணாறு தமிழர்களை கேரள அரசு ஒடுக்குவதற்கு முதல் காரணம், பெரும்பாலான தொழிலாளர்கள் தலித்துகளாக இருப்பதுதான். அதனால் மத்திய அரசு தலித் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ள கோடிக்கணக்கான பணத்தில் ஒரு பைசாகூட மூணாறு தமிழர்களுக்கு செலவழிப்பதில்லை. இந்த அநீதியைக் கண்டித்து 26.5.2013 அன்று மூணாறு பேருந்து நிலையம் அருகில் கேரள தமிழர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சிறுத்தை ஜெயபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வழக்குரைஞர் பானுமதி, ராஜ் திருமா, நயினார், வெள்ளைத்துரைப் பாண்டி, வழக்குரைஞர் நீதிமலர், எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். குறிப்பாக, சாதிச் சான்றிதழ் கொடுக்க மறுக்கும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் 1951 ஆம் ஆண்டு இருப்பிடச் சான்றிதழை கொண்டு வரச் சொல்லி துன்புறுத்துவதைக் கைவிடக்கோரியும், கோரிக்கைகளை கால தாமதமின்றி நிறைவேற்றத் தவறும்போது குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்ற அடையாளங்களை எரித்து சாம்பலாக்குவோம் எனவும் சூளுரைத்தனர்.

மூணாறு மட்டும் அல்ல; உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் ஒடுக்கப்படும் நிலையில் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் எத்தகைய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றனர்? தங்கள் அரசியல் சார்ந்த நலன்களை முன்னிறுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆதாய நோக்கில் போராட்டங்களை நடத்தி இருக்கிறார்களே தவிர, மொழி உணர்வும் இனப்பற்றும் கலந்த ஒருங்கிணைந்த வீரம் செறிந்த போராட்டங்களை எவரும் முன்னெடுக்கவில்லை.

இன்னும் ஓர் பேரச்சம் தாழ்த்தப்பட்ட தமிழர்களிடையே நெடுங்காலமாய் நெஞ்சைவிட்டு நீங்காமல் வேரூன்றிப் போயுள்ளது. தமிழின அடிப்படையிலோ தமிழ் மொழி அடிப்படையிலோ தமிழ்த்தேசம் அமையும் பட்சத்தில் அந்த நாட்டில் தலித் மக்கள் சாதி மற்றும் தீண்டாமைக் கொடுமைகளில் இருந்து விடுபட்டு தன்மானத் தமிழர்களாக வாழ முடியுமா? அல்லது இன்று நாம் காணும் அதே தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாகி சாதி இந்துத் தமிழர்களுக்கு அடிமைகளாக வாழ நிர்பந்திக்கப்படுவார்களா? இந்த கேள்வி ஒவ்வொரு தலித்திடமிருந்து விடுதலை வேட்கையோடு எழுகின்ற கேள்வி மட்டுமல்ல; சுதந்திர நாட்டில் ஜாதி – தீண்டாமைக் கொடுமைகளை காலந்தோறும் வேதனைகளைச் சுமந்து அனுபவித்து வரும் தலித்துகள் இங்கு பல்வேறு "இசங்'களையும் கொள்கைக் கோட்பாடுகளையும் முழங்கி போராடிவரும் இயக்கங்களையும், தலைவர்களையும் சந்தேகிப்பதற்கான தார்மிக உரிமை தலித்துகளுக்கு உண்டு.

இந்தியப் புரட்சிக்கு சாதி ஒழிப்பே முன்நிபந்தனை என்றார் அம்பேத்கர். அதேபோல, தமிழ்த்தேசிய விடுதலைக்கும் சாதி ஒழிப்பே முன்நிபந்தனையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, மூணாறு தமிழர்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் தமிழராய் அணிதிரள்வோம்; சாதி ஒழிந்த தமிழராய் ஒருங்கிணைவோம்.

‘கேரளத் தமிழர் கூட்டமைப்பு’ முன்வைக்கும் கோரக்கைகள் 

             குமுளி, வண்டிப் பெரியாறு, பீர்மேடு, உடும்பஞ்சோலை, கட்டப்பனை, நெடுங்கண்டம் உள்ளிட்ட ஊர்களில் தமிழ் மக்கள் அடிக்கடி தாக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

             இரண்டு தலைமுறைகளுக்கு மேலாய் தேயிலைக் கம்பெனி வீடுகளில் குடியிருக்கும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டைச் சொந்தமாக்க வேண்டும்.

             இன்றைய விலைவாசியை கவனத்தில் கொண்டு தேயிலைக் காடுகளில் மாடுபோல உழைக்கும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 400 ரூபாய் கூலியாக வழங்கப்பட வேண்டும்.

             மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் தமிழ்த் தோட்டத் தொழிலாளிகளுக்கு முழு பணிப்பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்.

             தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிறுவனம் நேரடியாக தொழிலாளர்களிடம் வழங்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் நிறுவனத்திற்குமான கள்ள உறவு நிறுத்தப்பட வேண்டும்.

             தேயிலைக்காடுகளில் பணியாற்றும்போது இடி, மின்னல் தாக்கி தொழிலாளர்கள் இறக்க நேரிட்டாலோ, கொடிய விஷப்பாம்பு கடித்தோ, காட்டு யானை மிதித்து இறந்தாலோ சம்பந்தப்பட்ட தேயிலை நிறுவனம் 5 லட்ச ரூபாயும், மாநில அரசு 5 லட்ச ரூபாயும் இழப்பீட்டுத் தொகையாக உடனே வழங்க வேண்டும்.

             கேரள மாநிலத்தில் வாழும் தலித் தமிழர்களுக்கான சாதிச் சான்றிதழை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

             குட்டியார் வேலி, பார்வதி மலைச்சரிவு இன்னும் இப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை தமிழ்த் தோட்டத் தொழிலாளிகளுக்கு பட்டா போட்டு கொடுக்க வேண்டும்.

             இடுக்கி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும்.

             தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் செயல்பாட்டாளர்களை ஊடகங்களில் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை நிறுத்த வேண்டும்.

 கேரளாவில் வாழும் தமிழர்களை பிற மாநிலத்தவர் என்ற பட்டியலின் கீழ் கொண்டு வரக்கூடாது. மீறிக் கொண்டு வந்தால் அது சேர மன்னனுக்காக உழைத்துக் களைத்த தமிழர்களை சிறுமைப்படுத்துவதாகும். 

Pin It