ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக கட்சி தலைமையிலான மோடி ஆட்சி. இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் புதிய பாசிச தத்துவார்த்த தளமான பார்ப்பனீய மனுஷ்மிருதி இந்துத்துவத்திற்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தைத் பல்வேறு இடதுசாரி அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி இன்னுயிரை தூக்கு மேடையில் இழந்த மாபெரும் போராளி பகத்சிங் பல ஆண்டுகளுக்கு முன் “ஆர்.எஸ்.எஸ் பற்றிச் சொல்ல எனக்கு ஏதும் இல்லை.
ஆனால் எதிர்காலத்தில் இந்தியர்களின் ஒற்றுமைக்கும், சமத்துவ இந்தியா உருவாவதற்கும் எதிராக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்று வரலாற்று முன்னுணர்வுடன் ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய காலத்திலேயே சொல்லி விட்டு சென்று உள்ளது இன்று உண்மையாகி கொண்டிருக்கிறது.
அதனால்தான் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் 1927 ஆம் ஆண்டில் நாக்பூரில் பெண்கள், தலித்துகள், பிற ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர்கள் பெருந்திரளாக இணைந்து மனுஸ்மிருதியை செப்டம்பர் 28 நாளில் எரித்தனர்.
கம்யுனிஸ்ட் கட்சிகள், இடதுசாரி ஆய்வாளர்கள், மாற்று இயக்கங்களின் ஆய்வாளர்கள் பார்ப்பனீயம், மனுஸ்மிருதி, இதனை கோட்பாடாகக் கொண்ட ஆர் எஸ் எஸ், அதன் அரசியல் பிரிவான பாஜக பற்றி விரிவாக ஆராய்ந்து உள்ளனர். அதிலிருந்து சிலவற்றை தொகுத்து இணைத்து வரலாற்றை ஆராய்ந்து புரிந்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு நமது புரிதலுக்காக.
1. "பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது" அத்தியாயம் 8. சுலோகம் 20.
2. "சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை யுடையதாயிருக்கும்" அ.8. சு.22.
3. "சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி" அ.8.சு. 22.
4. "ஸ்தீரிகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை" அ.8. சு.112.
5. "நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்ய வேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனை பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்" அ. 8. சு. 113115.
6. "சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும்" அ.8. சு. 270.
7. "சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்" அ.8. சு.271.
8. "பிராமணனைப் பார்த்து, "நீ இதைச் செய்ய வேண்டும், என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்" அ.8. சு.272.
9. "சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்தில் உட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்" அ.8. சு.281.
10. "பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை" அ.8. சு.349.
11. "சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்."
"பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும்." அ.8. சு.380.
12. "அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு பணி விடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்." அ. 8. சு.410.
13. "பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்" அ. 8. சு.413.
14. "பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்" அ. 8. சு.417.
15. "சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது" அ. 9. சு.416.
16. "பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை" அ. 8. சு.155.
17. "பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்தரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம்." அ.9. சு.248.
18. "பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்" அ. 9. சு. 317.
19. "பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள்." அ. 9. சு.319.
20. "பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்." அ.9 சு. 320.
21. "சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் க்ஷத்திரியனுக்கும், க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன். பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு." அ.11. சு.12.
22. "சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்." அ.11. சு.13.
23. "யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது." அ.11. சு.20.
24. "பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்." அ.11. சு.66.
25. "ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்." அ.11. சு.131.
25(அ). "அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது." அ.11. சு.132.
26. "க்ஷத்திரியன் இந் நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப்பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணி விடை செய்வதே தவமாகும்." அ.11 சு.285.
27. "சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்." அ.10. சு.75.
28. "பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்." அ.10. சு.96.
29. "சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்." அ.10. சு.96.
30. "பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும், சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும்." அ.10. சு.125.
31. "சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்." அ.10. சு.129.
32. "மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர்." அ.2. சு.7.
இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன.
மனுதரும சாத்திரமும் பெண்களும்
இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்
— மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 3
எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.
— மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 147
தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.
— மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 213
புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக் குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.
— மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 214
பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக.
— மனுதரும சாத்திரம் 9, அத்தியாயம் செய்யுள் 19
மனுதர்மம் மாதரைக் காப்பாற்றுவதற்கான காரணத்தையும் விளக்குகிறது .
வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!
— மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 11
கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்று விதிக்கிறது மனுதர்மம்.
கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.
— மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78
இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக.
— மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 154
மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது.
— மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 156
இவைகள் தற்பொழுது மோடி ஆட்சி நடைமுறை படுத்தும் புதிய கல்வி கொள்கை, தொழிலாளர் சட்ட திருத்த மசோதா, வேளாண் திருத்த மசோதா, இந்திய வரலாற்று ஆராய்ச்சி வல்லுநர் குழு .. என்று அனைத்திற்கும் ஆதரமாக இருப்பதை கூர்ந்து ஆராய்ந்தால் புரிந்துக் கொள்வது எளிது.
கம்யுனிஸ்டுகளும் சங் பரிவார் கும்பலும்
தமிழ் சமூகம், இந்திய சமூகமானது அதல பாதாள நெருக்கடிக்குள் சரிந்துப் போய் கொண்டிருக்கிறது இந்த ஆட்சி உணர்த்துகிறது. பார்ப்பனீய மனுஸ்மிருதி இந்துத்துவ பாசிச சக்திகள், கார்ப்பரேட்கள், இந்திய பெருமுதலாளிகள் கூட்டணி மோசனமான கொரோனா நோய் தொற்றியையும், இதன் விளைவான ஊரடங்குகளையும் பயன்படுத்தி புதிய புதிய கொள்ளை திட்டங்களை சட்டத்திற்கு புறம்பாக, மீதம் இருக்கின்ற மக்களாட்சி மாண்புகளை, இந்திய அரசியல் சட்ட அமைப்பை மிதித்து நடைமுறை படுத்திக் கொண்டிருக்கின்றன.
பாஜக கட்சி தனது ஆட்சி அதிகார ஆக்டோபஸ் கரங்களை தமிழ்நாட்டில், இந்தியா முழுவது விரித்து நசுக்க அனைத்து தளங்களிலும் திட்டங்களை, சதிகளை, முறைகோடுகளை, அதிகார துஷ்பிரோகங்களை, ஊழல்களை நடைமுறை படுத்துகின்றன. தமிழ்நாட்டில் குறிப்பாக ஊடக துறையை முழுவதையும் கைப்பற்றி மாற்று கருத்துக்களை முற்றிலுமாக துடைத்தெறிந்து புதிய பார்ப்பனீய கொள்கைகளை பரப்ப முயல்கின்றன. இந்த நிலையில் மாற்று சக்திகள் குறிப்பாக கம்யுனிஸ்டுகள் தங்கள் பணிகளை குவிக்கப்பட வேண்டிய மையத்தை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது.
உலக கம்யுனிஸ்ட் இயக்கம் இருநூற்றாண்டையும், இந்திய -தமிழக கம்யுனிஸ்ட் இயக்கம் நூற்றாண்டையும் கொண்டாடும் இந்த ஆண்டில் எங்கிருந்து கம்யுனிஸ்டுகள் தொடங்கினார்கள், இன்று அவர்களின் பணியின் குவிமையம் என்ன?
2025 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டாகும். இந்தியாவை மனுஸ்மிருதி நாடாக, இந்து நாடாக, இந்துத்துவ வல்லரசு நாடாக, பார்ப்பனீய சனாதன நாடாக, நால்வர்ண-சாதிய பாரம்பரிய இந்திய சனாதன மரபு நாடாக அறிவிக்க திட்டங்களை, சட்டங்களை தீட்டி அனைத்து அடக்குமுறை, அநீதி வழிகளிலும் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கின்றன பாசிச சக்திகள்.
ஒருவிதத்தில் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் 2025 ஆம் ஆண்டு ஒரு நூற்றாண்டு நிறைவை குறிப்பதாகவும் உள்ளது. முழுமையான கான்பூரில் முதல் கம்யுனிஸ்ட் பேராயம் நடந்த ஆண்டும் இதுதான்.
இந்திய கம்யுனிஸ்டுகள் செய்தது என்ன என்ற மீள்பார்வை இந்த நூற்றாண்டில் பார்ப்பது இன்றைக்கும் அவசியாமானதது என்பதை இருநூறாண்டு கம்யுனிஸ்ட் இயக்க வரலாற்றினை மீளாய்வுக்குள் இணைந்து புரிந்து கொள்ள வேண்டும்.
மார்க்சியம் தத்துவம் எப்படி உருவானது?
மாமேதைகள் மார்க்ஸ்-எங்கெல்ஸ் எந்தந்த விமர்சனங்களை வரலாற்றில் செய்து இயக்கவியல் வரலாற்று பொருள்முதலியல் கோட்பாட்டை வந்தனர்?
தோழர் லெனின் சோவியத் புரட்சிக்காக செய்த முதல் ஒரடி எது?
தோழர் மாவோ சீன புரட்சிக்கு எடுத்து வைத்த ஒரடி எது?
சமயம் அல்லது மதம் பற்றிய விமர்சனம்தான் அந்த ஒரடி! முதல் அடி!! இதைதான் முன் வைத்தார்கள் என்பது கம்யுனிச இயக்கத்தின் வரலாறு!
மார்க்ஸ் - எங்கெல்ஸ் ஆகியோர் தனது ஆரம்ப இளம் பருவ ஆராய்ச்சிகள், நூல்கள் பல அங்கிருந்த கிருத்துவ சமயம், அதன் தத்துவங்கள், அதன் வளர்ச்சிகள், அதற்கான தோற்றுவாயான புறநிலை மெய்மைகளை பற்றியதாகவே இருந்தது என்பது ஊரறிந்தது.
“இதிலிருந்துதான் தோழர்கள் லெனினும், மாவோவும் தங்கள் சமூகத்தின் மனிதர்கள் வரலாறுகளை ஆராய்ந்து கோட்பாடுகளாக விளக்குகின்றனர்.
இந்திய துணை கண்டத்திலும், தமிழ்நாட்டிலும் கம்யுனிஸ்ட்கள் இங்குள்ள மதங்கள் பற்றி ஆய்வுகளை செய்துள்ளனரா? செய்துள்ளனர். ஆனால் போதமானதாக இல்லை. மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில் செய்யவில்லை. செய்யப்பட்ட ஆய்வுகளும் முழுமை அடியாமல் பாதி கிணறு தாண்டியதாகவே இருக்கின்றன.
இந்து மதம் என்று அழைக்கப்படும் கிருத்துவம், இஸ்லாம் அல்லாத மதங்கள், வழிபாடுகள் அனைத்தும் இந்து மதம் என்று அழைக்கலாமா?
இந்து மதம் பன்மை தன்மைகள் கொண்டாதா?
இந்திய தேசியம் என்பது பாஜக கும்பல் பிரச்சாரம் செய்வது போல் பண்பாட்டு தேசியம் மட்டும்தானா?
இந்து மதத்தின் மையம், ஆதாரம் என்பது சனாதன கோட்பாடு, வைதீக கோட்பாடுகள் என்கிறார்கள். இந்திய தத்துவ ஞான மரபு அதன் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை பற்றிய கம்யுனிஸ்டுகள் நிலைபாடு என்ன?
இந்திய தத்துவ ஞான மரபில், மதங்களின் கண்ணோட்டத்தில் இரண்டு நீரோட்டங்கள் தொடர்ந்து நிலவி வந்துள்ளன. அவை வைதீக மரபு, அவைதீக மரபு என்பன. நால்வர்ண கோட்பாடு, பிராமண மதம், அத்வைதம், சைவ மதம், வைஷ்ண மதம், துவைதம், கர்ம வினை, சாதிய கோட்பாடு, இந்து மதம், இந்துத்துவா, பார்ப்பனீயம், ஆர்.எஸ்.எஸ் கோட்பாடுகள் என்ற அனைத்தும் வைதீக மரபுக்குள் அடக்கும்.
இந்த வைதீக மரபு கருத்து தான் முதன்மையானது, ஏதோ ஒரு தெய்வீக சக்தியின் கருத்துக்கள் அடிப்படையில் உலகமானது, இயற்கை, உயிர்கள், மனிதர்கள் இயக்கப்படுகிறார்கள். கருத்து முதல் வாத கண்ணோட்டம் அடிப்படையில் அதாவது சனாதன கோட்பாடு, வைதீக கோட்பாடுகளை கொண்டு மனிதர்கள் செயல்களை, இயற்கையை, ஆட்சியை, வர்க்க வேறுபாடுகளை, சாதி படிநிலைகளை, செல்வங்களை, இன்ப துன்பங்களை, ஆட்சி வடிவங்களை, சட்டத்தை, நீதியை, வரலாற்றை என்று அனைத்திலும் ஊடுருவி நின்று தீர்மானிக்கின்றன.
ஆனால், அவைதீக மரபு என்பது சாங்கியம், உலகாயுதம், லோகாதியம், தொல்தமிழரின் திணைக் கோட்பாடு, பவுத்தம், சமணம், சித்தர்கள், பூதவாதம், திருக்குறள், அக-புற கோட்பாடு, இராமலிங்கரின் சமரச சன்மார்க நெறி, அய்யாவழி, கபீர்தாஸ், துளசிதாசர், திராவிடம், மகாத்மா பூலே, அம்பேத்கர், பெரியார், மார்க்சியர்கள் என்று விரிந்து பரந்ததாக இந்த வரலாற்று பொருள்முதலியல் கண்ணோட்டம் விரிந்துபரந்ததாக யதார்த்ததில் நிலவிக் கொண்டிருக்கிறது.
இப்படியான வைதீக மரபு, அவைதீக மரபுகளை தூய்மையான கருத்து முதலியல், பொருள்முதலியல் என்ற இரு சிமிழுக்குள் நமது மரபில் அடைத்து விடக்கூடாது. இயக்கியல், வரலாறு போக்குகள் ஒன்றை ஒன்றை வெட்டியும், ஒட்டியும் வந்துள்ளன, இயக்கியுள்ளன என்பதுதான் உண்மை.
அவைதீக மரபுகள் பெரும்பாலும் அரசர்களால், ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்படவில்லை. ஆனால் வைதீக மரபுகள், மதங்கள் மன்னர்களால் வரவேற்க்கப்பட்டு, ஆட்சி கட்டில் குடியேறி செல்வங்களை சூறையாட, மக்களை கருத்தியல்ரீதியாக அடக்கி வைக்க, திசைதிருப்ப பயன்பட்டன என்பது வரலாறு.
மதம் என்பது வர்க்க சமூகத்தின் வெளிப்பாடு. வர்க்கங்கள் ஒழியும் பொழுதுதான்மதங்கள் மறையும்.
“மனிதன் என்று சொல்கையில் மனிதனின் உலகம், அரசு, சமுதாயம் என்பதாகும். இந்த அரசு, இந்த சமுதாயம், சமயத்தை, தலைகீழாக்கப்பட்ட உலக உணர்வை உருவாக்குகிறது. அதற்குக் காரணம் அவையே தலைகீழான உலகமாக இருப்பதுதான்… சமயம் என்பது இந்தத் தலைகீழ உலகம் பற்றிய பொதுவான கோட்பாடு: அதனுடைய அறிவுக் களஞ்சியத் தொகுப்பு: சனரஞ்க தொகுப்பு: சனரஞ்க தொகுப்பு வடிவங்களினூடாக வெளிப்படும் அதன் தர்க்க நெறி விளக்கம்; அதன் ஒப்புதல்; அதை முழுமையடையச் செய்வது, அதை நியாயப்படுத்தவும் தேற்றவும் உதவும் உலகு தழுவிய விளக்கம். சமயம் என்பது மனித சாரத்தை யதார்த்தத்தில் எய்ய முடியதில்லை…
… சமயத்தில் வெளிப்படுத்தப்படும் அவலம் ஒரு பக்கம் உண்மையிலேயே நிலவும் அவலத்தின் வெளிப்பாடாகும்; மற்றொரு பக்கம் இந்த உண்மையான அவலத்திற்கு எதிரான எதிர்ப்பு குரலுமாகும். சமயம் என்பது ஒடுக்கப்பட்ட சீவனின் பெருமூச்சு; இதயமற்ற உலகிற்கு ஒர் இதயக் கனிவு; சத்தற்ற வாழ்வில் ஒரு சத்து. அது மக்களுக்கு வாய்த்த ஒரு அபின் “ என்றார்.
(சமயம் பற்றிய மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆங்கில நூல் பக்கம் origin of religion 41 என்று மனித சாரம் நூலில் ஜார்ஜ் தாம்சன் பக்கம் 88)
இறுதியாக சமயத்தில் (கிருத்துவ சமயங்களில்) தலைகீழாக பிரதிபலித்த மனித வாழ்வை தனது ஆய்வுகள், கோட்பாடுகள் மூலம் நேராக வரலாற்றின் தொடர்ச்சியாக மார்கஸ் - எங்கெல்ஸ் முன்வைத்தனர்.
இந்திய மார்க்சியர்கள், (தமிழக மார்க்சியர் உட்பட) இத்தகைய ஆய்வுகளை முழுமையாக நிறைவாக செய்து தொழிலாளர்கள், மக்கள் முன் வைத்து அவர்களுக்கு கல்வியாக சேர்த்துள்ளோமா, இந்த சமூக வரலாற்றை எப்படி மார்க்சிய ஆய்வுக்கு உட்படுத்தி தொழிலாளர்களிடன் கொண்டு சேர்த்து உள்ளோமா என்பதுதான் இன்றைய கேள்வி!
இந்த கேள்விக்கான கம்யுனிஸ்டுகள் பதில்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் புதிய பாசிச தத்துவார்த்த தளமான பார்ப்பனீய மனுஷ்மிருதி இந்துத்துவத்திற்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை தொடங்குங்கள் என்ற அறை கூவலாகான உண்மையான அர்த்தமாகும். பல ஆயிரம் மைல்கள் கடக்க வைக்கப்படும் முதல் அடியாக இந்த ஆய்வுகள் இருக்க வேண்டும் இல்லையெனில் முதல் கோணல் முற்றும் கோணல் தான் முடியும்.
வைதீக தத்துவமும் இந்திய தேசமும்
தேசிய இனம், தேசம், தேசியம், நாடு, பல தேசங்களின் ஒன்றிய அரசு (நாடு) என்பது நவீன கருத்தாக்கமும், முதலாளித்துவ வளர்ச்சியின் ஊடாக முகிழ்ந்தது. இந்தியா என்ற நாடு பிரிட்டிஷார் வருகைக்கு முன் இருந்தது கிடையாது.
2000 ஆண்டுகளாக பல்வேறு சிற்றரசுகளாக, பேரரசுகளாக, பழங்குடிகள் அரசுகளாக, மன்னராட்சி அரசுகளாக பிரிந்து கிடைந்தது என்பதுதான் வரலாறு. இந்த அரசுகள் இராணுவ பலத்தினால் மட்டும் அல்ல, கருத்து - பண்பாட்டு - சிந்தனையை கட்டுப்படுத்த தத்துவங்கள் மூலமாகவும் தங்கள் குடிமக்களை ஆட்சிக்கு கீழ்ப்படிய செய்தன என்பது வரலாறு.
அந்த தத்துவம் பெரும்பாலும் வைதீக தத்துவ பிரிவுகளாக இருந்தன. அதிலும் குறிப்பாக மனுஸ்மிருதியை அடிப்படையாக கொண்ட பார்ப்பன தத்துவத்தை அடிப்படையாக இருந்தன. ஏனெனில் மற்ற எந்த தத்துவ பிரிவுகளையும் விட பிராமண தத்துவம் இந்த அரசுகள், ஆட்சிகள் எளிதாக மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள இலகுவாக இருந்தது என்பதுதான் உண்மை.
இந்திய துணைக்கண்டத்தின் அனைத்து அரசுகளை பல்வேறு வழிகளில் வீழ்த்தி பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கவாதிகள் இந்தியா என்ற ஒரு நாட்டை ஒரே ஆட்சி, அரசின் கீழ கொண்டு வந்தனர். பல்வேறு தத்துவங்களை பின்பற்றிய பல கோடி மக்களை ஒரே தத்துவத்தின் கீழ் கொண்டுவந்து அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்ற ஆங்கிலேயர்கள் முயன்றனர்.
அப்பொழுது ஆங்கிலேயரின் அடிவருடிகளாக இருந்த பெருபான்மையான பிராமண சமூகத்தின் ஆலோசனைகளின் அடிப்படையில், மேல்சாதியினர் விருப்பபடி மனுஸ்மிருதியை அடிப்படையாக கொண்ட பார்ப்பனீய தத்துவத்தை இந்து சட்டம் என்பதாக மாற்றி மற்ற அனைத்து வைதீக, அவைதீக மரபுகளையும், தத்துவங்களையும் இவற்றின் கீழ் நிலைப்படித்தினர். இந்தியா முழுவதும் ஒரே சந்தை, சட்டத்தின் கீழ் சுரண்ட காலனிய ஆதிக்கவாதிகளுக்கு உகந்ததாக இருந்தது.
சுதந்திர போராட்டத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்-இந்துத்துவா கும்பலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆங்கிலேயரின் விசுவாசிகளாக ஆர்.எஸ்.எஸ் - இந்துத்துவா கும்பல் இருந்தது. இன்றைக்கும் தேச பக்தி என்ற போர்வையில் அந்நிய நாடுகளின் கார்ப்பரேட் கும்பல்களுக்கும், தேச நலன் பற்றி கவலைப்படாத இந்திய பெருமுதலாளிகளுக்கு சேவை செய்வதை தனது ஆட்சி கடமைகளாக உள்ளதை மோடி ஆட்சியின் கொரோனா ஊரடங்கு கால நிர்வாக ஆட்சி அம்பலப்படுத்தி உள்ளதை ஆர்.எஸ்.எஸ் யின் ஒரு நூற்றாண்டு வரலாற்று வெட்ட வெளிச்சமாக்கி அம்பலப்படுத்தி உள்ளது.
பெரும் தியாகங்களுக்கு பின்பு 1947யில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஆட்சி மாற்றம் நடந்தது. இந்திய பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்கள் கூட்டு வர்க்க நலன்களுக்கு உகந்த வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதிகளை கொண்ட டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.
சில உரிமைகளை இது மக்களுக்கு அளித்தாலும், பிரிட்டிஷ் காலனியாதிக்க வாதிகளில் சட்டங்களை, அமைப்புகள்தான் தொடர்ந்து பின்பற்றின. காங்கிரஸ், பிஜேபி கட்சிகள் உட்பட பல அகில இந்திய கட்சிகள், மாநில கட்சிகள் இந்த வைதீக மரபு, தத்துவத்தின் தொடர்ச்சியாக தங்கள் கொள்கை கோட்பாடுகளை வகுத்துள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு மாற்றாக இந்திய துணை கண்டத்தில், இந்தியாவில், தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் அவைதீக மரபுகளை, தத்துவத்தை அதன் தொடர்ச்சியை தெளிவாக புரிந்து கொள்ளாமல் உள்ளன, அதனால்தான் சரியான மாற்று கொள்கைகளை, திட்டங்களை, மூல-செயல் யுத்திகளை வகுத்துச் செயல்பட முடியவில்லை.
ஒரே தேசம், ஒரே பண்பாடு, ஒரே சந்தை என்ற இந்துத்துவா கொள்கையை நடைமுறைப்படுத்தும் பாஜக கட்சியின் அடிப்படை மூலவேர் இந்த பார்ப்பனீய வைதீக தத்துவ மரபு தொடர்ச்சியில்தான் ஆழப்புதைந்துள்ளது.. அதன் ஆன்மீக அரசியல், பக்தி அரசியல், தேச பக்தி, பெருமுதலாளிகள் - கார்ப்பரேட்கள் நலன் அனைத்திற்கும் அடிப்படையாக இந்த தத்துவ தொடர்ச்சிக்கு உள்ள இணைவை தெளிவாக மாற்று சக்திகள் ஆராய்ந்து புரிந்து கொண்டு, அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
சாங்கியம், பவுத்தம், திருக்குறள், தமிழ் சமணம், ஆசீவகம், சமரச சன்மார்க்க நெறி, மகாத்மா பூலே, பெரியார், அம்பேத்கர், நாரயணகுரு, அய்யா வழி உட்பட எண்ணற்ற அவைதீக மரபு, தத்துவ தொடர்ச்சியை தெளிவாக விளங்கி கொள்வது, கோட்பாட்டுரீதியில் மக்களிடம் கொண்டு செல்வதுதான் சமூக மாற்றத்தின், புரட்சியை முன் கொண்டு செல்ல உதவ முடியும்.
அதை எந்த அளவுக்கு ஆழமாக, விரிவாக செய்துள்ளோமா என்பதே நம் உள்ள இன்றைய கேள்வி! இந்த கேள்விக்கான விடையை தேடுதலில்தான் கம்யுனிஸ்ட் கட்சிகள் தங்கள் கொள்கைகள், திட்டங்களின் முதல் படியை எடுத்து வைத்து தீரத்துடன் முன்னேற முடியும். இதுதான் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனீய மனுஷ்மிருதி இந்துத்துவத்திற்கு எதிராக பிரச்சாரத்தை எங்கிருந்து தொடங்குவது என்பதன் அர்த்தமாக இருக்கும்!
- கி.நடராசன்