இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான சர்ச்சை இப்போது மீண்டும் செய்திகளில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத்(?) தொடர்ந்து தமிழகக் கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று இந்துத்துவா பாஜகவின் சில தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவாரங்கள் கூறி வருகின்றன. உண்மையில் இது பாரதீய ஜனதா கட்சியின் நீண்ட காலக் கோரிக்கை.

தமிழகம் முழுக்க உள்ள அனைத்து பெரிய கோயில்களும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சிதம்பரம் நடராசர் கோயில் மட்டும் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் சர்ச்சைக்குரியதாக தொடர்ந்து வருகிறது. 1885 ஆம் ஆண்டிலேயே சிதம்பரம் கோவில் தொடர்பாக வழக்கு நடந்துள்ளது. 1951 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் சிதம்பரம் கோயில் தனிச் சொத்து அல்ல அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தீட்சிதர்களுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. இதைத்தொடர்ந்து அப்போது முதலமைச்சராக இருந்த குமாரசாமி ராசா, சிதம்பரம் கோயிலை சட்ட வரம்பிற்குள் கொண்டுவர ஆணை பிறப்பித்தார். ஆனால் அந்த ஆணைக்கு நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற தீட்சிதர் தரப்பு தொடர்ந்து கோவிலை தங்கள் வசமே வைத்திருந்தது.

பிறகு 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சிதம்பரம் கோயிலை அரசு எடுத்துக் கொண்டு செயல் அலுவலரை நியமித்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர் தீட்சிதர்கள். பல ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் பல்வேறு மேல் முறையீடுகளுக்குப் பிறகு  2009 ஆம் ஆண்டு சிதம்பரம் கோயிலை அரசு எடுத்துக்கொண்டது செல்லும் என தீர்ப்பளித்தார் நீதியரசர் பானுமதி. கோயில் நிருவாகத்தை ஏற்று நடத்த ஒரு வார காலம் அவகாசமும் தந்தார். ஆனால் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தீர்ப்பு வந்த அன்று மாலையே சிதம்பரம் கோயிலை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இதன் மீதும் தீட்சிதர்கள் மேல் முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. ஆனால் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிதம்பரம் கோயில் மீதான தமது உரிமையை நிலைநாட்டுவதில் ஆர்வம் செலுத்தவில்லை. வழக்கில் வாதாட வேண்டிய தமிழக அரசின் வழக்கறிஞர்கள் ஏன் பின்னால் அமர்ந்திருக்கிறீர்கள் என உச்ச நீதிமன்ற நீதியரசர்களே கேட்டனர். இதைத் தொடர்ந்து சிதம்பரம் கோயிலை  அரசு எடுத்துக்கொண்டது செல்லாது உடனே தீட்சிதர்கள் வசம் கோயிலை ஒப்படைக்க வேண்டும் என 2014 இல் தீர்ப்பளித்தது நீதிமன்றம். இப்போது வரை சிதம்பரம் கோயில் மட்டும்  இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இல்லாமல்  தீட்சிதர்கள் எனப்படும் தில்லை பார்ப்பனர்கள் வசமே இருந்து வருகிறது.

அவ்வப்போது இவர்கள் இக்கோரிக்கையை எழுப்பி வந்தாலும், அண்மையில் கேரள அரசு தாழ்த்தப்பட்ட ஒருவரை அர்ச்சகராக நியமித்தது மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து இவர்களை மீண்டும் அறநிலையத் துறைக்கு எதிராகப் பேச வைத்துள்ளது. எனவே தமிழக கோயில்களையும், அதன் நிருவாகத்தையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகிறார்கள். இந்து சமயம் என்பதும் இந்துக்கள் என்பவர்களும் ஆரியப் பார்ப்பனர்களே என்பது வெள்ளிடை மலை. தமிழர்களுக்கே உரிமையான தமிழ்நாட்டு கோயில்களையும் அதன் சொத்துக்களையும் பார்ப்பனர்களிடமே ஒப்ப்டைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. உண்மையில் இந்து என்ற சொல்லே ஆங்கிலேயர்கள்  அவர்களின் நிருவாக வசதிக்காக உருவாக்கியதுதான். ஆண்டைகளின் துண்யுடன் மக்களை சாதி ரீதியாக பிறப்பின் அடிப்படையில் ஒடுக்கிsவந்த பார்ப்பனர்கள் இந்து என்ற போர்வையில் மீண்டும் முழு ஆதிக்கம் செய்யத் துடிக்கிறார்கள் என்பதின் வெளிப்பாடே இது.

இசுலாமிய, கிறித்துவ, சீக்கிய மதக் கோயில்கள் அவர்களாலேயே நிருவகிக்கப் படும்போது இந்துக் கோயில்களை மட்டும் அரசு நிருவகிப்பது இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்கிறார்கள். உண்மையில் இசுலாமிய வழிபாட்டு நிறுவனங்களின் சொத்துக்கள் இந்திய வக்பு சட்டம் 1954 இன்படி அமைக்கப்பட்ட மத்திய வக்பு வாரியத்தின் மூலமே நிருவகிக்கப்படுகிறது. இதன் தலைவராக இருப்பவர் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி என்பவர். இவ்வாரியத்தின் கீழ்தான் மாநில வக்பு வாரியங்கள் இயங்குகின்றன. கிறித்துவ தேவாலயங்களின் சொத்துக்கள்  இந்துக் கோயில்களைப் போல் தமிழக மக்களின் உழைப்பு மற்றும் அன்றைய மன்னர்களின் கொடை, மானியங்களால் உருவானதல்ல. இவை வெளிநாட்டு கிறித்துவ மிசனரிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் நிதியால் உருவாக்கப்பட்டவை. இவை சனநாயக ரீதியாக அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுக்களால் இயங்குபவை. இவைகளுக்கு பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை என்பதாலும் சிறுபான்மையினர் என்பதாலும் இங்கே நடக்கும் ஊழல்கள் வெளியே தெரிவதில்லை.

பாசகவின் சுப்பிரமணியசாமி இந்தக் கோரிக்கையை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. தேசபக்தி - தெய்வபக்தி என்று மதவாத அரசியல் நடத்தும் பாஜக மற்றும் அதன் சங்-பரிவாரங்கள் தமிழக கோயில்களை விட்டு அரசின் அறநிலையத்துறை வெளியேற வேண்டும் எனக் கூறுவது ஏன்? இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மதச்சார்பற்ற இந்திய அரசில் இந்துத்துவாவைத் திணிக்கும் அதாவது பார்ப்பனிய மனுநீதி சட்டத்தைப் புகுத்தும் இவர்கள் தமிழகக் கோயில்களிலிருந்து அரசு வெளியேற வேண்டும் என்று கூச்சலிடுவது ஏன்? தமிழக திருக்கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்று சொல்லும் இவர்கள் அரசியலிலிருந்து மதத்தை வெளியேற்ற மறுப்பது ஏன்?  இவர்களின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் நாம் இந்து சமய அறநிலையத் துறை உருவான வரலாறு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்து சமய அறநிலையத் துறை கருணாநிதி காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டமோ அல்லது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டு வரப்பட்ட சட்டமோ அல்ல. தமிழகக் கோயில்கள் அரசின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்ட வரலாறு கிழக்கிந்திய கம்பெனி காலத்திலிருந்தே தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டம் 22 / 1959 என அழைக்கப்படும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை மட்டுமல்ல சமணக் கோயில்கள் மற்றும் சமயம் சார்ந்த அற நிலையங்களை நிருவகிப்பதற்கான சட்ட அதிகாரத்தைத் தருகிறது. பிற்காலத்தில் தமிழக மக்களை  இந்து என்று பொதுமைப்படுத்தலுக்கு முன்னர் சிவனியம் (சைவம்), மாலியம்  (வைணவம்), சமணம் போன்ற சமய நெறிகளே கோலோச்சி வந்தன.

நிலக்கிழாரிய மன்னர்களால் திருக்கோயில்களுக்கு மானியமாக அளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான நிலங்கள் மற்றும் சொத்துக்களை ஆரியப் பார்ப்பனர்களும், ஆதிக்க சாதியினரும் அனுபவித்து வந்தனர். நிலக்கிழாரிய மன்னர்களை இறுதியாக ஆங்கிலேயர்கள் முறியடித்து தங்கள் அதிகாரம் மற்றும் ராணுவ பலத்தால் இந்தியாவை உருவாக்கினர். அன்றைய இந்தியா உலக வரைபடத்தில் பிரிட்டிஷ் இந்தியா என்றே அழைக்கப்பட்டது. பல்வேறு இனம், மொழி, பண்பாடு, வழிபாடு, வேலைப்பிரிவினை  ஆகியவற்றைக் கொண்டிருந்த மக்களை ஒற்றைச் சொல்லால் இந்து என்றனர் அந்நியர்கள். தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்ட ஆரியப் பார்ப்பனர்கள் மத ரீதியாகக் கூட மக்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்று ஏற்கனவே இருந்த வேலைப்பிரிவினைகளை சாதியாக மாற்றி முன்னால் இந்து என்ற சொல்லைச் சேர்த்தனர். அதாவது இந்து-வேளாளர், இந்து-முதலியார், இந்து-பறையர் என்பதாக.

இவ்வாறு ஒரு மதமாகக்கூட தமிழர்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதே அவர்கள் நோக்கம். ஆனால் தங்களை மட்டும் பிராமணர் என்றே அழைத்துக் கொண்டனர்; இந்து-பிராமணர் என்று சொல்வதில்லை. ஆகவே இந்துக்கள் என்பவர்கள் பிராமணர்கள் மட்டுமே என்பது தெளிவு. இன்றும் தமிழகத் திருக்கோயில்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும். கருவறைக்குள் அவர்கள் மட்டுமே நுழைய முடியும். அரசனானாலும், அதிகாரியானாலும் கருவறைக்குள் செல்ல அனுமதியில்லை. இந்தப் பின்னணியில் இந்து சமயக் கோயில்களுக்கு தொடக்கம் முதலே இருந்து வருகின்ற பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும், சொத்துக்களும் எவ்வாறு நிருவகிக்கப் படுகின்றன என்பதை ஆய்வு செய்வோம்..

தமிழகத் திருக்கோயில்களை நிருவாகம் செய்வதில் பிராமணர்கள் மற்றும் நிலவுடைமைச் சாதிகளின் ஆதிக்கம் மட்டுமே இருப்பதாகவும் ஊழல்கள் மிகுந்து காணப்படுவதாகவும் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் இருந்தே புகார்கள் எழுந்தன. அப்போது ஆட்சி செய்த மன்னர்களிடமும், கிழக்கிந்தியக் கம்பெனி நிருவாகத்திடமும் இது தொடர்பாக சமூக முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமான புகார்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில 1817 இல் முதன் முறையாக மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசு பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த சட்டமானது திருக்கோவில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி முதலான அறக்கொடைகள் முறையாகப் பயன்படுத்தப் படுகின்றனவா என்பதையும் தனிப்பட்டோர் நலன்களுக்காக பயன்படுத்தப். படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வழிவகை செய்தது. இந்த அதிகாரம் அப்போதிருந்த வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் தொடங்கி 1849 ஆம் ஆண்டுக்குள் 21 ஜில்லாக்களில் இருந்த 8828 கோயில்களில் சர்க்காரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. ஊழல் புரிந்த அறங்காவலர்கள் (தர்மகர்த்தாக்கள்) பணி நீக்கம் செய்யப்பட்டனர். மூடிக்கிடந்த கோயில்கள் வழிபாட்டுக்குத் திறந்து விடப்பட்டன.

1858 இல் இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் மகாராணியிடம் நேரடியாகச் சென்றது. தங்கள் மீது இந்திய மக்களுக்கு இருந்த வெறுப்பை குறைக்கவும் நம்பிக்கையை வளர்க்கவுமான தேவை அப்போதைய பிரிட்டிஷ் மகாராணிக்கு இருந்தது. இதனால் அவரது நிருவாகம் மத விவகாரங்களில் பிரிட்டிஷ் அரசு தலையிடாது என்ற வாக்குறுதியை அளித்தது. இதனால் ஏற்கனவே கோயில்களும் அவற்றின் சொத்துக்களும் யார் வசம் இருந்தனவோ அவர்கள் தங்கு தடையின்றி அவற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள்.

புகார்கள் பெரிய அளவில் வந்தாலும் கூட இந்திய சாதி அமைப்பையும், அதில் ஆதிக்க சாதி மற்றும் பார்ப்பனர்களின் மேலாண்மையையும்,  அதனுடன் பின்னிப் பிணைந்திருந்த கோயில் விவகாரங்களையும் பிரிட்டிஷ் அரசு வெளியில் இருந்தே அனுகியது; உள்ளே தலையிடவில்லை, அதேநேரம் கோயில்களின் உள்ளே இருக்கும் விலைமதிப்பு மிக்க தங்க நகைகள், விக்ரஹகங்கள் உள்ளிட்டவை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், சொத்துக்களில் ஊழல் மலிந்துவிட்டதாகவும் பொதுமக்கள் புகார் கொடுப்பது மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. குறிப்பாக கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அறங்காவலர் (தர்மகர்த்தா) உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் கோவில் நிலங்களை நிருவகிப்பதின் வழியே கிடைக்கும் வருவாயை அரசு கஜானாவிற்கு கொண்டு சேர்க்காமல் முறைகேடு செய்தனர்.

இதன் மூலம் கோவில் நிலங்கள் ஏலத்திற்கு வந்தன. அப்படி ஏலத்துக்கு வரும்போது குறைந்த விலைக்கு அவர்களே வேறு நபர்கள் மூலம் வாங்கிக் கொண்டார்கள். விசாகப்பட்டினம் முதல் திருநெல்வேலி வரை இப்படி அப்பட்டமாக முறைகேடு செய்து கோயில் சொத்துக்களை கொள்ளையடித்த 65 வழக்கு விவரங்களை நான் தொகுத்து  வைத்திருக்கிறேன்; ஆர்வமுள்ளவர்கள் படித்துக் கொள்ளலாம் என்றார் அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

இந்நிலையில் இந்தியாவின் இரண்டு முக்கியமான சீர்திருத்தங்கள் நடைபெற்றன. ஒன்று 1919 இல் நடைபெற்ற மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்; இரண்டாவது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட பிராமணர் அல்லாதாரின் அமைப்பு நீதிக்கட்சியாக உருவெடுத்த நிகழ்வு. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் விளைவாக இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த வகையில் 1920 இல் நடைபெற்ற மதராஸ் மாகாண தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது.

பனகல் அரசர் ராமராய நிங்கர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்து திருக்கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சி செய்தார். இதற்காக 1922 இல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியிலிருந்தும், உயர் சாதி அமைப்புகளிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அவற்றை எதிர்கொண்டு சமாளித்து 1925 இல் இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அவற்றை ஏற்க மறுத்து பெரும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்த மசோதா மீது 800 திருத்தங்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்தனர். அந்த 800 திருத்தங்களில் 500 திருத்தங்களை கொண்டு வந்தவர் அன்றைய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த சத்தியமூர்த்தி ஐயர் என்ற பார்ப்பனர். (இவர்தான் அன்று சட்ட அவையில் முத்துலட்சுமி அம்மையார் கொண்டுவந்த தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராய் நின்றவர் என்பது குறிப்பிடத் தக்கது). 

அந்த எதிர்ப்புகளையும் மீறி இந்து பரிபாலன சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பனகல் அரசர் முனைப்புடன் இருந்தார். இறுதி கோரிக்கையாக திருப்பதி கோயிலில் மட்டுமேனும் விட்டுவிட வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தமாக எழுந்தது. அதையும் பனகல் அரசர் நிராகரித்தார். மதத்தில் அரசு தலையிடுவதாக குற்றம் சாட்டிய சத்தியமூர்த்தி அய்யர் ஆண்டவனை சட்டம் போட்டுக் கட்டுப்படுத்துவதா என ஆவேசமாகக் கேட்டார். சத்தியமூர்த்தியின் நிலைப்பாட்டை ஆதரித்து அறநிலையத்துறை சட்டத்தை எதிர்த்த சுதேசமித்திரன், இந்து உள்ளிட்ட பார்ப்பனிய செய்தியேடுகள் சட்டத்தை கண்டித்து கடுமையாக தலையங்கங்களை எழுதின. எனினும் முதலமைச்சர் பனகல் அரசர் அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் எடுத்துச் சொல்லி இந்த சட்டத்திற்கான ஒப்புதலைப் பெற்றார். இறுதியில் 1927  இல் இந்து சமய அறநிலைய வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அதன்படி திருகோயில்களின் நிருவாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் வழங்கப்பட்டது. அதைப்போலவே நிருவாகம் சரிவர நடைபெறாத கோயில்களுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரமும் வாரியத்துக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து 1947 முதல் 1949 வரையிலான இரண்டாண்டு காலம் ஓமந்தூர் ராமசாமி சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்தார். அப்போது தமிழகக் கோயில்களில் நடந்த எண்ணற்ற ஊழல்கள், முறைகேடுகளை எதிர்த்து பல நடவடிக்கைகளை அவர் எடுத்தார். வைணவ நெறிகளைப் பின்பற்றிய முழு ஆத்திகவாதியான ஓமந்தூரார் கோயில்களும், மடங்களும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறிவிட்டதால்தான் நாட்டில் நாத்திகம் வளர்கிறது என்று நினைத்தார். இதனால் அறநிலையத்துறை சட்டங்களில் மேலும் பல திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

கோயில் சொத்துக்களை குறைந்த குத்தகைக்குக் கொடுப்பதை முற்றிலுமாக தடுத்து நிறுத்திய ஓமந்தூரார், மடங்களில் உள்ள நகைகள் பதிவேட்டில் பதிப்பிக்கப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றார். இந்து சமய மற்றும் தர்ம ஸ்தாபன பரிபாலன வாரியம் என்ற பெயரில் இருந்த அமைப்பை மாற்றி அதை ஒரு அரசாங்கத் துறையாகக் கொண்டுவந்தார். இந்துக் கோயில்கள் மட்டுமின்றி சமணர்களுடைய கோயில்களையும் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தவர் ஓமந்தூரார்தான். அப்போதும் மத விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை ஏற்றுக்கொள்ளாத ஓமந்தூரார், தேவதாசி ஒழிப்பு மசோதா, அரிசன ஆலயப் பிரவேச மசோதா போன்றவை கொண்டு வரப்பட்டபோதும் இதையேதான் சொன்னார்கள்; இந்த எதிர்ப்பு கூச்சல்களை ஏற்க முடியாது; மதத்தின் பெயரால் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் மதத்திற்கே தீமை செய்பவர்கள் எனக் கடுமையாகச் சாடினார். எனினும் ஓமந்தூராரின் ஆட்சி இரண்டு ஆண்டுகளே நீடித்தன.

பிறகு 1951 இல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி கீழிருந்து மேலாக அதிகார மட்டங்கள் நிருணயிக்கப்பட்டு  அதிகாரிகள் நியமிக்கப்படவும், தலைமை அதிகாரியாக ஆணையர் ஒருவரை நியமிக்கவும் வழிவகை செய்யப்பட்டது. அதிகாரிகளின் நிருவாக எல்லைகளும் வரையறுக்கப்பட்டன. பிறகு 1954 இல் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற காமராசர் இந்து சமய அறநிலையத் துறையில் மேலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். முதன்மையாக போக்குவரத்து, அரிஜனர் நலம், இந்து அறநிலையத்துறை அமைச்சராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பரமேசுவரனை நியமித்தார். இவர் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னோடி தலைவரான இரட்டைமலை சீனிவாசனின் பேரன் ஆவார். 1959 இல் காமராசர் ஆட்சிக்காலத்தில் அறநிலையத்துறையின் முந்தைய சட்டங்களின் பெரும்பான்மையான குறைகள் களையப்பட்டு தற்போது உள்ள சட்டமான தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் இயற்றப்பட்டது.

அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன்,  அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம் என்பார் தந்தை பெரியார். பார்ப்பனர்கள் சில பணக்காரர்களையும், பார்ப்பனிய அதிகாரிகளையும் கைக்குள் வைத்துக் கொண்டு தமிழக மக்களின் கோயில் சொத்துக்களை கொள்ளையடித்து வருகின்றனர். சிலை திருட்டு மற்றும் கடத்தல் முதல் தங்களுக்கு ஒத்துவராத ஊழியர்களை கொலை செய்வது வரை பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு இந்திய தரகுப்-பார்ப்பனிய வல்லரசும் பாதுகாவலனாக உள்ளது.

இவர்களின்  கொள்ளையை மேலும் முழுமையாகச் செய்ய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை தடையாகவுள்ளது பார்ப்பனர்களுக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தி வருகின்றது. அதனாலேயே தமிழகக் கோயில்களிலிருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று இந்து மதவாதக் கும்பல்கள் கூச்சலிடுகின்றனர். தமிழ்மக்கள் விழிப்போடிருந்து இந்தக் கும்பலை கோயில்களிலிருந்து மட்டுமல்ல; தமிழ்நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும். கோயில் சொத்துக்கள் மற்றும் ஆலய வழிபாட்டு உரிமையை அனைத்து மக்களுக்குமான உடைமையாக, உரிமையாக மாற்றப் போராட முன் வரவேண்டும்.