(திருப்பூர் தமிழர் எழுச்சி விழாவில் அக்.2 ஆம் தேதி காலை-மாலை நிகழ்ச்சிகளில் தலித் சுப்பையா குழுவினரின் ‘விடுதலைக் குரல்’ எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நிகழ்ச்சியில் பாடல்களுக்கிடையே தோழர் தலித் சுப்பையா, அறிவார்ந்த சிந்தனைகளை முன் வைத்தார். அவர் பேசியவைகளிலிருந்து ஒரு தொகுப்பு.)
தோழர்களே! பெரியார் மரணமடைந்தபோது - அதற்கு, தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவிக்காத அமைப்புகள் இரண்டு. ஒன்று சங்கர மடம்; மற்றொன்று அகில இந்திய பார்வர்டு பிளாக். சங்கரமடம், நமது இன எதிரி. எனவே அது இரங்கல் தெரிவிக்காதது வியப்பு அல்ல. ஆனால் நமது மண்ணின் மைந்தர்களான கள்ளர், தேவர், மறவர் சமூகத்தினர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை? இதற்கான வரலாற்றுக் காரணத்தை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
1957-ல் முதுகளத்தூரில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான சேரிகள் எரிக்கப்பட்டன. அது ஒரு சாதிப் போர். அப்போது முதல்வராக இருந்தவர் பெரியவர் காமராசர். மாபெரும் மனிதர். எங்களுடைய கல்விக்கு அவர்தான் அடித்தளமிட்டவர். சாதிக் கலவரத்தை நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியார் வைத்த கோரிக்கையை ஏற்று, காமராசர் கடும் நடவடிக்கையை எடுத்தார். அதனால்தான் காமராசர் இறந்த போது, மதுரை, கம்பம், உசிலம்பட்டி, தேனி பகுதிகளில், ஆடு வெட்டி பூசை செய்து, தீபாவளி கொண்டாடினார்கள். காமராசர் எடுத்த கடும் நடவடிக்கைகளுக்காக, தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். நான் பிறந்த கிராமம் - சிவகங்கை படமாத்தூர் அருகே உள்ள நாட்டார்குடி, முதுகளத்தூர் கலவரத்தின் போது கிராமத்தில் வாழ முடியாமல், மதுரைக்கு இடம் பெயர்ந்து, குடி புகுந்த குடும்பம் என் குடும்பம். எனவே தான் இந்த வரலாறு எனக்குத் தெரியும்.
இன்றைக்குப் பெரியாரைக் குறைகூறும் ‘தலித்’களுக்கு, இந்த வரலாறு தெரியுமா? இப்படிக் குறை கூறுகிறவர்கள் எல்லாம் வடமாவட்டங்களில் பிறந்த வயது குறைந்தவர்கள். இந்த வரலாறுகள் பதிவு செய்யப்படாத காரணத்தால், இவர்கள் எல்லாம், பெரியாரைக் குறை கூறுகிறார்கள். வரலாறுகளைத் தெரிந்து கொள்ளாமலே, பெரியாரைக் குறை கூறுவது நியாயம் தானா? பெரியார் நாடகம் பார்த்தீர்களா? என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு, ஒருவர் பதில் எழுதுகிறார், “40 வருடமாக அந்த நாடகம் தானே நடந்து கொண்டிருக்கிறது” என்று. நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
பெரியார் நாடகமாக இருக்கலாம்; ஏன், அது வரலாற்று நாடகம்! ஒரு வரலாற்றை நாடகமாக்கியிருக்கிறார்கள். அதுதான் உண்மை. பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. பெரியார் எங்கேயாவது, வன்னியர்களுக்குத் தலைவர், செட்டியார்களுக்குத் தலைவர் என்று எந்தச் சாதிக்காவது தலைவர் என்று உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? வ.உ.சிதம்பரனாரை சாதித் தலைவராக்குகிறார்கள்; காமராசரை சாதித் தலைவர்களாக்குகிறார்கள்; பெரியாரை அப்படி நீங்கள் காட்ட முடியுமா?
ஒருவர் எழுதுகிறார் பெரியாரை, ‘இரவல் சிந்தனையாளர்’ என்று. தோழர்களே! நான் ஒரு மாதத்துக்கு 18 தமிழ்ப் பத்திரிகைகளையும், 6 ஆங்கிலப் பத்திரிகைகளையும் வாசிக்கிறேன். நான் - பிறர் படிக்கக் கேட்ட சமூகம். பிறர் பாடக் கேட்ட சமூகம். இன்று நாங்கள் பாடுகிறோம், சமூகம் கேட்கிறது. இதற்கு அடித்தளமிட்டவர் யார்? தமிழ்நாட்டில், அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு, தலித் இயக்கங்கள் அம்பேத்கரை அறிமுகப்படுத்தின. ஆனால் அதற்கு முன்பே, தமிழ்நாட்டில் அம்பேத்கரை அறிமுகப்படுத்தியது யார்? பெரியார். அம்பேத்கரின் ‘சாதியை ஒழிக்க வழி’ நூலை தமிழில் அச்சிட்டு, மக்களிடையே பரப்பியவர் யார்? பெரியார்!
ஆனால் பெரிய பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பில்லாமல் பெரியாரை குறை கூறுகிறார்கள். தமிழ்ச் சமூக மரபில் அடித்தட்டு மக்கள். தாழ்த்தப்பட்ட மக்கள், பார்ப்பனர்களுக்கு எதிராக ஒரு யுத்தம் நடத்துகிறபோது, ஆயுதம் எடுத்துப் போராடுகிற மக்களாக இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். அவர்களை சக பாட்டாளி மக்களிடமிருந்து பிரித்தெடுப்பதற்கான அவசியமென்ன? சிந்தித்துப் பாருங்கள்!
தோழர்களே! 1925 இல் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய ஆண்டு. நாக்பூரில் ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ்.சை துவக்கியது அந்த ஆண்டுதான். தமிழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கம் துவங்கி, இந்து மதத்துக்கு தூக்குக் கயிறு மாட்டியது அதே ஆண்டு தான்! வடநாட்டில் அம்பேத்கர், 1955 இல், ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்ட அதே நாகபுரியில் தான் இந்து மதத்துக்குத் தூக்குக் கயிறு மாட்டினார். புத்த மார்க்கத்தைத் தழுவினார். அதை மதமாற்றம் என்று சொல்வது தவறு. புத்த மார்க்கம் ஒரு மதமல்ல; புத்தர் ஒரு கடவுள் அல்ல; அம்பேத்கர் இந்து மதத்துக்கு தூக்கு மாட்டியதால் தான், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்வு செய்து, ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதியை இடித்தார்கள்.
தோழர்களே! பெரியார் என்பவர் துயரின் வெளிப்பாடு அல்ல; அவர் மாபெரும் வரலாறு. காமராசர் கட்டிய பள்ளிக் கூடத்தில் படித்தவர்கள் நாங்கள். அவர் துவக்கிய மதிய உணவுத் திட்டத்தில் சாப்பிட்டு படித்தவர்கள் நாங்கள். பெரியார் நடத்திய பார்ப்பன எதிர்ப்புக் களத்தினூடாக சாதி என்றால் என்ன? தீண்டாமை என்றால் என்ன? அவை எப்படி இயங்குகிறது என்பதன் விளக்கங்களை அறிந்தவர்கள் நாங்கள்.
உலகம் முழுதும் ஆங்கிலேயனும், பிரஞ்சுக்காரனும், செர்மானியக்காரனும் சந்தித்துக் கொண்டால், தங்கள் தாய்மொழியிலே வணக்கம் சொல்கிறார்கள். இங்கே தான் சிலர் ‘குட்மார்னிங்’ என்கிறார்கள். சிலர் ‘நமஸ்தே’ என்கிறார்கள். சிலர் ‘ஜி’ என்கிறார்கள். ஆனால் உழைக்கும் மக்கள், தங்கள் மண்ணின் மொழியிலேயே உறவு சொல்லி வணக்கம் சொல்கிறார்கள். அம்மா, வணக்கம், அண்ணன் வணக்கம், அப்பு வணக்கம் என்கிறார்கள். நாங்களும் எங்கள் நிகழ்ச்சியை ‘வணக்கம்’ சொல்லியே துவங்குகிறோம்.
தோழர்களே! பெரியாரிடம் இந்துமதம் என்றால் என்ன என்று கேட்டார்கள். அவர் கவிஞர் இல்லை; ஆனால் கவித்துவமாக - மூன்று சொற்றொடர்களில் பதில் சொன்னார். இந்து மதமா? அது ‘அசிங்கம்; ஆபாசம்; அறியாமை’ என்று மூன்று சொற்களில் கவித்துவமாகச் சொல்கிறார். பெரியாரை முறையாக வாசிக்கிறவர்கள் - அவரது சிந்தனையின் பல்வேறு பரிமாணங்களைப் பார்க்கலாம். ஆம், பெரியார் இந்துமதத்துக்குத் தூக்குக் கயிறு போட்டார். “தொங்குதடா அந்தரத்தில் இந்துமதம்; அதைத் தூக்கிலிட்ட பெரியாருக்கு எம் செவ்வணக்கம்.”
அமெரிக்காவைச் சார்ந்த பெவர்பி நிக்கலஸ் என்ற ஆராய்ச்சியாளர் 6 மாத காலம் இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ‘இந்தியாவைப் பற்றிய ஒரு தீர்ப்பு’ எனும் நூலை எழுதினார். அதில், ஒவ்வொரு மாநிலத்தவரும் வங்காளி, மலையாளி, தெலுங்கர் என்றும், மாநிலங்களுக்குள்ளே போனால், ரெட்டியார், முதலியார் என்றும், ஒவ்வொருவரும் கூறுகிறார்களே தவிர, தன்னை இந்தியர் என்று ஒருவர்கூட கூறவில்லை என்று எழுதினார். அதைத் தான் பெரியார் - இந்தியா என்பது ஒரு கற்பனை என்றார். நாம் அதைத் தான் இந்தப் பாடல் மூலம் கேட்கிறோம்.
சாதிகளாய் பிரிந்திருப்பது நியாயமா? தமிழ்
சனங்களாகச் சேருவது என்ன பாவமா?
இந்துவாக இருப்பது என்ன மோகமோ? - இந்த
இழிவைச் சுமக்க எத்தனை காலம் வேணுமோ!
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஆற்றல்மிகு செயல்வீரர் பத்ரிநாராயணன், அவர் கொல்லப்பட்டார் என்ற செய்தியை ஒரு நாள் பத்திரிகையில் படித்தபோது நான் கலங்கிப் போனேன். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இறுதிவரைப் போராடிய தோழர் பத்ரி நினைவுக்காக இந்தப் பாடலை, புதுவையில் நடந்த ஒரு விழாவில் பண்ணமைத்துப் பாடினோம். லெனின் ஒரு முறை கூறினார், உலகம் முழுதும் தங்கம் தான் சக்தி வாய்ந்த செலாவணியாக இருக்கிறது.
உலகம் தழுவிய ஒரு சோஷலிச சமுதாயம் உருவாகும் போது, நகரங்களில் கழிவறைகளைக் கட்டி, அதில் இந்தத் தங்கத்தைத் தளமாகப் போடுவோம் என்றார் லெனின். பகுத்தறிவாளர்களாகிய நாம், பகுத்தறிவு அரசு ஒன்று அமைகிற போது, கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளி விட்டு அங்கு கழிவறைகளைக் கட்டுவோம், “வீட்டுக்கொரு பூசை அறை; வீதியெங்கும் கோயில்களாம்; தமிழர்கள் பூசாரிகளாய் மாறியதேனோ! தந்தை பெரியார் மறந்ததால் வந்த தீங்கு தானோ?”
தோழர்களே! பெரம்பலூரில் நடந்த ஒரு பெரும் கூட்டத்தில் நான் என்னை மறந்து பெரியாரைப் பற்றிப் பாடிக் கொண்டிருந்தேன். எங்கள் இசைக்குழுவில் இடம் பெற்றுள்ள, தோழர்கள் அலெக்ஸ், பாக்கியநாதன் இருவரும், பெரியாரைப் பற்றிய பாடலை நாம் பாடாத மேடை இருக்கவே கூடாது என்பார்கள். அப்படி நான் பாடிக் கொண்டிருந்தபோது, ஒருவர் மேடைக்கு வந்து பெரியாரைப் பற்றிப் பாடாதே என்றார். ஏன்? அவர் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் தலைவரல்லவா? என்றேன்.
அவர், ‘இல்லை, அவர் பிற்படுத்தப்பட்டோரின் தலைவர். நமக்கான தலைவர் இல்லை’ என்றார். நான் எவ்வளவோ வாதாடியும் பயனில்லை. கடைசியில் பாட்டை பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகு என்னுடைய பாடல் ஒன்வொன்றிலுமே பெரியாரை இடம் பெறச் செய்தேன். பாடல் வரிகளின் இடையிலே பெரியாரைச் சொருகி விடுவேன். அப்போது அவர்கள் பாடலை நிறுத்தச் சொல்ல முடியாது அல்லவா?
தோழர்களே! சங்கராச்சாரிகளிலே பல ‘கிரேடுகள்’ இருக்கிறார்கள். ‘தீக்குறளை சென்றோதோம்’ என்று திருப்பாவையில் ஆண்டாள் பாடுவதற்கு, ஒரு செத்துப் போன சங்கராச்சாரி என்ன விளக்கம் தந்தார் தெரியுமா? ‘தீமையைப் பயக்கும் திருக்குறளைப் படிக்கக் கூடாது’ என்று விளக்கம் கூறி, தமிழர் மறையான திருக்குறளையே இழிவுபடுத்தினார். அதற்கெல்லாம் சேர்த்துத்தான், இப்போது ஒட்டுமொத்தமாக ‘ஆப்புவச்சு’ அடிச்சிருக்காங்க. யார் யாருக்கு இவர்கள் எல்லாம் ‘ஆசி’ வழங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்களிடம் போய் கைகட்டிக் கொண்டு நிற்கிறார்கள். இதற்கெல்லாம் விதை போட்டவர் யார்? இந்த விழிப்புணர்வுக்கு அடித்தளமிட்டவர் யார்? பெரியார் அல்லவா?
தோழர்களே! நான் போட்டோ எடுக்காத குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய வீட்டில் எனது தாய் தந்தை போட்டோ கூட இல்லை. எனது வீட்டில் இரண்டு சிலைகள் மட்டுமே இருக்கின்றன. இரண்டும் பெரியார் சிலைகள். அதில் ஒன்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் தோழர் கோவை இராமகிருட்டிணன் எனக்கு அன்பளிப்பாக வழங்கியது. மற்றொன்று, எனது திருமணத்துக்கு நண்பர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கியது. இந்த இரண்டு சிலைகளையும், எனது பிள்ளைகள், ஒவ்வொரு நாளும் வணங்கிவிட்டுத்தான் பள்ளிக்குச் செல்கிறார்கள். பெரியார் எனக்கு என்ன மாட்டு ‘லோன்’ வாங்கிக் கொடுத்தாரா? ஆட்டு ‘லோன்’ வாங்கிக் கொடுத்தாரா? வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்தாரா? பட்டம் வாங்கிக் கொடுத்தாரா? பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதையும் செய்யவில்லை என்று சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை? மாபெரும் மனிதர்கள் வரலாற்றின் போக்கைத் திருப்புவார்கள். துக்கடா அரசியல்வாதிகளைப் போல், மாட்டு லோன் வாங்கித் தரலை; ஆட்டு லோன் வாங்கித் தரலை; என்று இப்படியா பேசுவது? மார்க்ஸ் - யாருக்கு ஆட்டு ‘லோன்’; மாட்டு ‘லோன்’; ரேஷன் கார்டு வாங்கிக் கொடுத்தாரு? அவர் வரலாற்றின் போக்கை மாற்றியவர். அதுபோல், தமிழ்ச் சமுதாயத்தின் வரலாற்றின் போக்கை மாற்றியவர் பெரியார்; அப்படித்தான் பார்க்க வேண்டும்!
“இந்து மதம் எனக்குப் பிடிக்காத மதம். அதன் அயோக்கியத்தனத்தை நான் விரும்புவதில்லை” என்றார் டாக்டர் அம்பேத்கர். அதனால் தான் மதம் மாறச் சொன்னார். மதம் மாறுவதால் என்ன பலன் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். இந்திய சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பலன் என்று கேட்டார் டாக்டர் அம்பேத்கர். பெரியாரும் அம்பேத்கரும் இந்துத்துவத்தை எதிர்த்து அடித்த அடியால்தான் அது பலவீனமானது. நாம் நிமிர்ந்து நிற்கிறோம்.
தோழர்களே! ஒடுக்கும் ஆளும்வர்க்கமே வெளியேறு என்ற முழக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும். வரலாற்றில் ஒவ்வொரு தேசிய இனமும், இந்த முழக்கத்தைத் தான் முன் வைத்திருக்கிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகமும் அதைத் தான் முன் வைக்கிறது. பெரியார் என்ற மாமனிதர் நிழலில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். அவர் விதைத்த விதைகளினால் தான், நாம் இன்று அதிகாரிகளாக, டாக்டர்களாக, வழக்கறிஞர்களாக வர முடிந்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் இந்தத் துறைகளில் எல்லாம் பார்ப்பனர்கள்தான் கொடிகட்டிப் பறந்தார்கள். இந்த மாற்றத்துக்கு யார் காரணம்? தந்தை பெரியார்! அவர் அழகிய முகத்தைப் பாருங்கள்; அதில் தமிழகம் தெரிகிறது.”
தோழர்களே! அம்பேத்கர் சென்னை வந்தபோது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்து அரசு ஊழியர்கள் - அவரை சந்தித்து, தங்களுக்குத் தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அம்பேத்கர், “இங்கே தமிழ் நாட்டிலேயே உங்களுக்காகப் போராடுகிற தலைவர் இருக்கிறார் தெரியுமா? அவர்தான் ஈ.வெ.ராமசாமி. அவர் தலைமையில் செயல்படுங்கள்” என்று கூறுகிறார். இந்த வரலாறைத் தெரியாதவர்கள் பெரியாரை இன்று குறை கூறுகிறார்கள்.
தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்