(சமூக வலைத்தளங்களில் ‘ஆசிரியர் வீரமணி அவர்களுக்கான கேள்விகள்’ என சுற்றி வரும் கேள்விகளுக்கு பதில்கள்)
- ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?
வர்ணாசிரமம் எனும் அசிங்கமான அக்கிரமமான ஒரு கருத்தை கற்பித்து, சாதியில் படிநிலை உருவாக்கியது பார்ப்பனர்கள் தான்.
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றாண்டுகளில் ஆரியப் பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்தத் தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டிக்குக் கீழும் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்கக் கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து நாடார் பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.
இப்படி கொடூரமான முறைகளை அறிவார்ந்த தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி, அரசர்களையும் அதிகாரத்தையும் கைக்குள் வைத்து உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி உண்டு கொழுத்துக் கொண்டிருக்கும் இனம் ஆரியம் தான், பார்ப்பனியம் தான்.
மற்ற சாதிக்காரர்களுக்கும் அந்த பார்ப்பனிய சிந்தனையை மூளையில் விதைத்தது பார்ப்பனீயம் தான். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அடுக்குமுறையை உருவாக்கியதன் மூலம் தனக்கு கீழ் ஒரு சமூகம் அடிமையாக இருக்கிறது எனும் மகிழ்ச்சி தான் இன்னொருவனுக்கு அடிமையாக இருக்கிறோம் என்பதை மறக்கச் செய்கிறது, அல்லது மரத்துப் போகச் செய்கிறது.
பார்ப்பனிய சிந்தனை உள்ள எவரும் பேதம் பார்ப்பர். வேறு மதங்களில் பிரிவுகள் உண்டு. ஆனால் இந்து மதத்தில் உள்ளது போல சாதி இல்லை. படிநிலை இல்லை. தீண்டாமை இல்லை.
- கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறித்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?
கடவுள் இல்லை, கடவுள் இல்லை,
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
என்று தான் பெரியார் சொல்லி இருக்கிறாரே தவிர, தனியாக இந்துக் கடவுள், கிறித்துவக் கடவுள், இசுலாமியக் கடவுள் என சொல்லவில்லை. பொதுவாக அனைத்துக் கடவுள்களையும் தான் நாங்கள் மறுக்கிறோம்.
தசுலீமா நசுரீனின் கட்டுரைகள், கவிஞர் சல்மாவுடன் நேர்காணல் மற்றும் கட்டுரைககளை, திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கிறது.
அறிஞர் ரசல் எழுதிய நான் ஏன் கிறித்துவனல்ல (Why I Am Not a Christian Bertrand Russell) புத்தகத்தை வெளியிட்டது திராவிடர் கழகம் தான்.
அனைத்து மதத்திலும் உள்ள அடிப்படைவாதிகளையும் எதிர்க்கிறோம்.
பெரியாரோ, 1927லேயே நான் எந்த மதத்துக்காரனுக்கும் ஏஜென்டு அல்ல என்று எச்சரித்திருக்கிறார்!
"நான் எந்த மதக்காரனுக்கும் ஏஜென்டு அல்ல; அல்லது எந்த மதத்துக்காரனுக்காவது நான் அடிமையுமல்ல; அன்பு, அறிவு என்கிற இரண்டு தத்துவங்களுக்கு மாத்திரம் ஆட்பட்டவன். மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது? ஒரு தேசத்தையோ, சமூகத்தையோ கட்டுப்படுத்தி ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டதா? அல்லது ஒரு மனிதனின் மனசாட்சியைக் கட்டுப்படுத்தக் கூடியதா? மனிதனுக்காக மதமா? மதத்துக்காக மனிதனா? என்பவைகளை தயவுசெய்து யோசித்துப் பாருங்கள்." - குடிஅரசு 11.9.1927
- தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?
இதற்குப் பெரிய தைரியம் எல்லாம் தேவை இல்லை.
திரு. முத்துராமலிங்கம் அவர்கள் உயிரோடு இருந்த போதே அவரை எதிர்த்து கட்டுரைகள் எழுதி, செயல்பட்டு அவரைக் கைது செய்யச் சொன்ன ஒரே தலைவர் பெரியார்.
முதுகுளத்தூர் கலவரம் வெடித்தபோது, முதலமைச்சராக இருந்தவர் காமராசர். அப்போது முத்துராமலிங்கத் தேவரை துணிவுடன் கைது செய்தார் காமராசர். பெரியார் ஒருவர் தான் அன்று ஆதிக்க சாதியினருக்கு எதிராக உறுதியாகக் குரல் கொடுத்தார். காமராசர் எடுத்த நடவடிக்கைகளை தீவிரமாக ஆதரித்தார்.
அப்போது பெரியார் ‘விடுதலை’யில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:
‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியு மில்லை; கொள்கையுமில்லை. ‘சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா? தேவர் தம் சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவரா யிருந்துகொண்டு, அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவது என்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமா என்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவராதலால் அந்த வாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு (அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார். தன்னந் தனியாய்ப் பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான் கேட்க வேண்டும்.
‘ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை. ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜன நாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத் தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.
‘தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர். (இராஜகோபாலாச்சாரி), கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம். இதே சி.ஆர். அவர்கள் முதலமைச்சராயிருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப் பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.
‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தகைய ஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?”.
வர்ணாசிரம அடிப்படையில் தேவர் சாதியும் சூத்திர சாதி தான், பார்ப்பானுக்கு கீழ் நிலையிலிருந்து அவர்களுக்கு ஊழியம் செய்யும் சாதி தான். இன்றும் கருவறைக்கு வெளியே நின்று கையேந்தும் சாதி தான்.
சூத்திரப் பட்டத்திற்கு எதிராக போராடாமல், மொழி, சமூக, அரசியல், பொருளாதாரத்தில் உள்ள ஒடுக்குமுறையை எதிர்க்கத் துணிவில்லாமல் தேவர் ஜெயந்தி கொண்டாடுவதால் என்ன பயன்?
சாதி கடந்து உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவதை விடுத்து தங்க கிரீடங்களால் யாருக்குப் பயன்?
- பிராமணன் பூணூலை அறுக்கத் துணிந்த உங்களுக்கு ஒரு கிறித்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலைப் பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?
இசுலாம் மதத்தில் யார் ஒருவரும் வஜ்ராத் ஆகலாம், இமாம் ஆகலாம்.
கிறித்துவ மதத்தில் யார் ஒருவரும் பாதிரியார் ஆகலாம், ஏன் போப் ஆண்டவர் கூட ஆகலாம்.
ஆனால் இந்து மதத்தில் யார் வேண்டுமானாலும் சங்கராச்சாரி ஆக முடியுமா? நீயும் இந்து, நானும் இந்து என்றால் எல்லோரும் சங்கராச்சாரி ஆக முடியுமா? பார்ப்பனர்கள் மட்டுமே ஆக முடியும். பார்ப்பனர்களிலும் அனைவரும் ஆகிவிட முடியாது. தெலுங்கு பேசும் ஸ்மார்த்த பார்ப்பனர் மட்டுமே ஆக முடியும்.
அனைத்து கிறித்துவரும் சிலுவை அணியலாம், அனைத்து இசுலாமியரும் தொப்பி அணியலாம், அனைத்து இந்துவும் பூணூல் அணிய முடியுமா? அப்படியே அணிந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியுமா? அர்ச்சகராக முடியுமா?
பார்ப்பன இனத்தில், பார்ப்பனச் சிறுவர்களுக்கு அவர்களது 8வது வயதில் ‘உபநயனம்’ என்ற சடங்கை நடத்தி பூணூல் அணிவித்த பிறகு பிராமணனாக ‘இரண்டாவது பிறவி’ எடுக்கிறார்கள். அப்படி ‘பிராமணனாக’ மாறியதன் அடையாளமாகத் தான் ‘பூணூல்’ அணிவிக்கப்படுகிறது.
இந்து மனுசாஸ்திரம் ‘சூத்திரர்’ என்றால் ‘பிராமணர்களின் வைப்பாட்டி மக்கள்’ என்று கூறுகிறது. (அத்தியாயம் 8; ஸ்லோகம் 415) இந்திய அரசியல் சட்டத்தில் 372 வது பிரிவு இதற்குப் பாதுகாப்பாக உள்ளது.
அதனால்தான் தோழர் பெரியார் “ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் இது பத்தினியின் வீடு என எழுதினால் மற்ற வீடுகள் என்ன வகையான வீடுகள்?” எனக் கேட்டார். அதாவது, ஒருவர் தன்னை ‘பிராமணர்’ என்று அறிவித்துக் கொண்டால் மற்றவர்கள் ‘சூத்திரர்கள்’ என்று தானே பொருள் எனக் கேட்டார்.
ஆக சமூகத்தில் தான் உயர்ந்த சாதி எனக் காட்டிக் கொள்ளவும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாலும் அதை ஒரு சில தோழர்கள் அறுத்தார்கள்.
பெரியார் எப்போதும் வன்முறையை ஆதரித்ததில்லை, நாங்களும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமாதானத்தையுமே விரும்புகிறோம்.
- தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?
என்னைப் போல் நீயும் சிந்தி என சொல்வதே பகுத்தறிவு கிடையாது, மற்றும் அது அறிவுசார் வன்முறை.
எவரையும் வலிந்து தாலி அகற்றச் சொல்லவில்லை. அது அவரவர் விருப்பம். அவரவர் முடிவு. சமூகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக மனமுவந்து, தாலி என்பது பெண்களுக்கு அடிமைச் சின்னம் எனக் கருதி தாலி அணிந்திருந்தவர்கள் துணைவரின் விருப்பத்தோடு தாலியை அகற்றுகிறார்கள்.
அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டத்தில் தாலி கட்டாயமில்லை என்றே சொல்லப்பட்டது.
பின் குறிப்பு: தாலி கட்டிக் கொண்ட பெண்கள், கணவனை இழந்த நிலையில் நடைபெறும் மூடச் சடங்குதான் தாலி அறுப்பு என்பது; தாலி அகற்றலையும், அறுத்தலையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது.
- எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரச்சாரம் செய்ய தைரியமுண்டா?
'திராவிடர் கழகம்' வாக்கு அரசியலில் பங்கேற்காத அரசியல் இயக்கம்.
- கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ.வெ.ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை, காமராஜர், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல் என்பது தமிழர்களுக்கு மானமும் அறிவும் கற்று கொடுத்து, கல்வியில் இடஒதுக்கீடு வாங்கி கொடுத்து, சாகும் வரை தொண்டூழியம் செய்த அந்த மாமனிதருக்கு நாம் செலுத்தும் மரியாதை அவ்வளவே.
பெரியார் சிலையை வழிபடவில்லை. பெரியார் சிலையை யார் வேண்டுமானாலும் தொடலாம், யார் வேண்டுமானாலும் மலர் மாலை அணிவிக்கலாம். புரியாத மொழியில் அர்ச்சனை செய்வதில்லை, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை வெளியே நிறுத்தி யாரையும் இழிவுப்படுத்துவதில்லை. உணவுப் பொருட்களை நெருப்பிலிட்டு வீணாக்குவதில்லை..
பகுத்தறிவாளர்கள் மற்ற தலைவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவதும் நன்றியுடன் மரியாதை செலுத்துவதற்காகத் தான்.
சிலைகளில் இருவகை உண்டு. ஒரு வகை சிலைகள் கோவில்களில் வைப்பதற்காக உருவாக்கப்படுகின்றன. அவை வழிபாட்டிற்கு உரியவை என அவர்கள் கருதுகிறார்கள். வேறு விதமான சிலைகள் பொது இடங்களில் வைக்கப்படுகின்றன. அவை தலைவர்களின் சிலைகள். அவை வழிபாட்டிற்காக உருவாக்கப்படவில்லை, அடுத்த தலைமுறைக்கு வழிக்காட்டுவதற்காக உருவாக்கப்படுகின்றன.
இரண்டு சிலைகளுக்கும் இன்னொரு விதமான வேறுபாடும் உண்டு. பொது இடங்களில் வைக்கப்படும் தலைவர்களின் சிலைகள் எப்போதும் சிலைகள் தான், அவற்றிற்கு புனிதம் ஏதுமில்லை. ஆனால் கோவில்களில் வைக்கப்படும் சிலைகளோ மந்திரம் சொல்லி, பிரதிஷ்டை செய்து வைக்கப்படுகின்றன. பிரதிஷ்டை செய்து முடிந்தவுடன் அந்த சிலைகள் கடவுள் ஆகிவிடுகின்றன என்பது வைதீகர்களின் நம்பிக்கை. அப்படிப் பார்த்தால் கோவிலில் இருக்கும் சிலைகள் திருட்டு போனால் சிலைகள் களவு போய்விட்டன என சொல்லுவது பொருத்தமில்லை, கடவுளைக் காணவில்லை என்பது தான் சரி.
- இந்துக்களை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் மற்றவர்களை முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூற அஞ்சுகிறீர்களா ?
இந்துக்களை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும், சமத்துவமின்மையையும், தீண்டாமையையும், தமிழ் மொழியை, மனிதர்களை இழிவுப்படுத்துவதையும், வர்ணாசிரமத்தையும், சனாதன தர்மத்தையும் எதிர்க்கிறோம்.
மற்றும் அனைத்து மதங்களிலும் உள்ள மூட பழக்கவழக்கங்களையும் பெண்களுக்கு எதிராக உள்ள நிலைப்பாட்டையும் எதிர்க்கிறோம். அனைத்து மத அடிப்படைவாதிகளையும் எதிர்க்கிறோம்.
- நாட்டில் நடந்துள்ள கொலைகள், குண்டுவெடிப்புகள், கொள்ளைகள், ஹவாலா திருட்டுக்கள் இவற்றில் இந்துக்கள் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா? அதை மேடையில் பட்டியலிடும் துனிவுஇருக்கிறதா?
இது போன்ற விவரங்கள் ஓர் அரசியல் இயக்கத்திடம் இருக்காது. காவல் துறையினரிடம் கேட்டுப் பெறவும். குற்றச் செயல்களில் அனைத்து சாதியினரும் மதத்தினரும் ஈடுபடுகின்றனர். யார் செய்தாலும் அது தவறு தான்.
யாராக இருந்தாலும் ஒரே மாதிரியான தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்பதே நியாயம்.
பார்ப்பான் கொலை செய்தால் அவர் முடியை மட்டும் வெட்டினால் போதும் எனக் கூறும் மனுவின் நீதி போல் இருக்கக் கூடாது.
- இந்துக்களிடையே ஜாதி வெறியைத் தூண்டி பிரித்தாள நினைக்கும் கருமர்களே பிற மத ஜாதிவேறுபாடுகளை மூடிமறைப்பதேன்? மேடையில் பேச நா நடுங்குவதேன்?
இந்து மதத்தில் மட்டுமே படிநிலை ஜாதி இருக்கிறது. உலகில் எந்த மதத்திலும் ஜாதி இல்லை. ஏற்றத் தாழ்வு இல்லா, படிநிலை இல்லா சமத்துவமான பிரிவுகளே உள்ளது.
மேலே உள்ள கேள்விகளில் ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளோம்.
- சிவனும் இல்லை, அல்லாவும் இல்லை, ஏசுவும் இல்லை என உங்கள் அறிவிப்பு பலகையில் எழுத தைரியம் உள்ளதா?
ஏற்கனவே இரண்டாம் கேள்வியில் விரிவாக விளக்கியுள்ளோம்.
- உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பொதுமேடையில் வைத்து தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த முடியுமா?
அவர்கள் விருப்பப்பட்டால் நிச்சயம் நடத்தலாம்.
- இந்துக்கள் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி.சி.எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் ‘தமிழன் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது’ என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?
தொலைபேசியை, மின்சாரத்தை, தொலைக்காட்சிப் பெட்டியை, வீட்டில் நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் இந்து மத நண்பர்கள் கண்டுபிடித்ததில்லை, இருந்தும் நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம்.
ஏற்கனவே சொன்னது போல நாங்கள் இந்துக்களை எதிரிகளாகப் பார்ப்பதில்லை. இந்து மதத்தில் உள்ள குறைகளையே எதிர்க்கிறோம்.
கைபர் போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக நுழைந்து, இந்த நாட்டையே சூழ்ச்சியால் பிடித்து, எங்கள் சமூகத்திற்கு கல்வியை மறுத்துவிட்டு, கல்வி கற்றால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிவிட்டு, மருத்துவத்திற்கு சமசுகிருதம் தெரிய வேண்டும் என தகுதி நிர்ணயித்து, நீங்கள் மட்டும் படித்து விட்டு அனைத்து அரசாங்கப் பதவிகளும் பெற்று விட்டு, தமிழன் கட்டிய கோவில்களில் புகுந்து கொண்டும் இருக்கிற நீங்கள், பார்ப்பனர் அல்லாத நிறுவனங்களின் வேலையிலிருந்தும், எங்கள் நிலத்தை விட்டும் முதலில் வெளியேறுங்கள் எனச் சொன்னால் அதை ஏற்க முடியுமா?
- பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை அடி என்ற உங்களால், அந்தப் பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?
பெரியார் எங்கேயும் இப்படிச் சொல்லவோ எழுதவோ இல்லை.
இது ஓர் வடநாட்டுப் பழமொழி என்பதும் பீவர்லி நிக்கல்ஸ் என்பவர் 1944ல் எழுதியது என்றும் Verdict on India என்ற நூலிலிருந்து எடுத்துக் காட்டி எப்போதோ விளக்கமளித்துவிட்டார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு, கருப்புச் சட்டை பற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?
சமுதாயத்தில் தான் மட்டும் உயர்ந்தவன் எனக் காட்டிக் கொள்ள அணியும் பூணூலும், கருப்புச் சட்டையும் ஒன்றா?
"ஏனப்பா? கறுப்புச் சட்டை?" என்று யாரும் கேட்டால் அதற்குப் பதில், "நான் ஈன ஜாதியானாக இருக்கிறேன். தோல்பதனிடும் நாற்றம் பிடித்த வேலை எனக்கு. பார்ப்பனனுக்குப் போலீஸ் சூப்பிரிண்டெண்டு வேலை. நான் பறையனாம். உழைக்காத சோம்பேறிப் பார்ப்பான் உயர் ஜாதியாம். இதற்காக நான் வருத்தப்படுகின்றேன், ஆத்திரப்படுகின்றேன். இதை ஞாபகமூட்டிக் கொண்டு இந்த இழி நிலையிலிருந்து மீளுவதற்காகத்தான் கறுப்புச் சட்டை அணிந்துள்ளேன்," என்று சொல்லுங்கள். – பெரியார்
- சுபாஷ், தபெதிக, சூலூர், கோவை