தங்களின் பகுத்தறிவின் மூட நம்பிக்கைகள்குறுநூல் கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தது. ஏற்கெனவே மண் மொழிஏட்டில் இவை தொடராக வெளிவந்தபோதே என் கடும் கண்டனத்தை மடல்வழி பதிவு செய்தேன். இவற்றில் சொல்லப்பட்டுள்ள எல்லாக் கருத்துகளுமே இந்துத்துவ வெறியர்களின் ஊதுகுழல் கருத்துகள் என்று அந்த மடலில் நான் குறிப்பிட்டிருந்தேன். இக்கட்டுரைகளை மொத்தமாகப் படிக்கும் போது என் கருத்து மேலும் உறுதியாகிறது.இந்த நூலில் நீங்கள் பகுத்தறிவாளர்கள் என்று குறிப்பிடுவது பெரி யாரையும் அவருடைய இயக்கத் தோழர்களையும் தான். பெரியாரையும் உணமையான பெரியார் தொண்டர்களையும் பகுத்தறிவாளர்கள்என்று குறிப்பிடுவதை விட நாத்திகர்கள்என்று குறிப்பிடுவதுதான் மேலும் தெளிவுள்ளதாக இருக்கும். ஆம், நாங்கள் இறைமறுப்பாளர்கள்தாம்.

பெரியார் பிறக்கும்போதே கடவுள் மறுப்பாளராகப் பிறக்கவில்லை. தம்முடைய சுயமரியாதை இயக்கத்தையும் இறைமறுப்பு இயக்கமாகத் தொடங்கவில்லை. இதனைப் பெரியாரே பின்வருமாறு குறிப்பிடுகிறார். இந்த இயக்கத்திற்கு என்று வகுத்திருக்கும் கொள்கைகளில் நாத்திகம் ஒரு கொள்கையாகக் குறிப்பிட் டிருக்கவில்லை. சுயமரியாதை இயக் கத்தில் சகல மதக்காரருக்கும் சகல அபிப்பிராயக்காரருக்கும் இடம் உண்டு. அதன் கொள்கை இவ்வளவு தான்: மனித சமூகத்தில் உள்ள குருட்டுப்பழக்க வழக்கங்களையும் அவற்றுக்காகச் செய்யப்படும் செலவு களையும் ஒழித்தல், சாதி, மதம், வகுப்பு ஆகியவற்றின் பேரால் உள்ள பேதங் களையும் சமூகத்துறையிலும் பொரு ளாதாரத் துறையிலும் இருந்து வரும் உயர்வு தாழ்வுகளையும் அகற்றி மக்கள் யாவரும் ஒரே சமத்துவமாகவும் சகோதரத்துவமாகவும் சமமாக வாழும் படி செய்தல். பகுத்தறிவுக்கும் சுய மரியாதைக்கும் கட்டுப்பட்டு நடக்கும் படி மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச் சியை உண்டாக்குதல்’. இதை நடத்தி வைக்க வேண்டிய காரியத்திற்கும் ஆத்திக - நாத்திகத்திற்கும் என்ன சம்பந் தமாயிருக்கிறது? ஆத்திகமும் நாத்திக மும் அவரவருடைய அபிப்பிராயமும் ஆராய்ச்சித் திறமுமாகும். (பெரியார் சிந்தனைகள் பக்கம் 457).

இப்படித்தான் - இந்த நோக்கில் தான் பெரியார் தம் பொது வாழ்க் கையைத் தொடங்கினார். இந்தக் காரியங்கள் செய்வதில் மதங்களோ, கடவுள்களோ, வேறு எவைகளானா லும் சரி, அத்தொண்டிற்குத் தடையாய் இருந்தால் அவற்றையும் ஒழிப்பதில் சுயமரியாதை இயக்கம் பின்வாங்காது” (பெரியார் சிந்தனைகள் பக். 458). பெரியார் பொழுதுபோக்கிற்காகவோ, வேடிக்கை விளையாட்டிற்காகவோ கடவுள்களை மதங்களை விமர்சித்தவர் அல்ல. உழைக்கும் மக்களுக்கு எதிராக, ஒடுக்குமுறைக்கு ஆதரவாக முன்நிற்கும் எந்த மூடக் கருத்துகளையும் உடைத்துச் சாய்க்க முற்பட்டவர் பெரியார். உங்கள் நூல் முழுவதும் நீங்கள் வக்காலத்து வாங்கும் இந்து மதத்தின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றியவர் பெரியார்.

மதங்களின் தோற்றமே மோசடியானதுதான். இதில் எந்த மதமும் விதிவிலக்கல்ல. இதனை நான் மட்டும் சொல்லவில்லை. நீங்களே உங்கள் நூலில் குறிப்பிடுகிறீர்கள். எல்லா மதங்களினதும் தோற்றம் எதுவானாலும் அவை அனைத்தும் பின்னாளில் ஆதிக்கச் சக்திகளால் தங்கள் நலனுக்குகந்த வகையிலேயே பயன் படுத்திக் கொள்ளப்பட்டன. அதே வேளை, பொதுவில் இம்மதங்கள் பரந்துபட்ட மனித நேயத்தைப் பேசுவதாகவும், மனித வாழ்வின் உயர்வுக்கான வழியைக் காட்டுவதாகவும் போலவே மக்களால் நம்ப வைக்கப்பட்டு வந்திருக்கிறது. (பகுத்தறிவின் மூட நம்பிக்கை பக்கம் : 19)

இவற்றுள் நீங்கள் மிகவும் சிலாகித்துப் பேசும் பகுத்தறிவாளர்களால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகிப் புண்படுத்தப்படுவதாய் நீங்கள் வருத்தப்படும் இந்து மதத்தின் யோக்கியதை என்ன? அதனையும் உங்கள் எழுத்திலேயே பார்ப்போமே! இந்துமதம், இந்துத்துவம் என்பது சாராம்சத்தில் பார்ப்பனியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பது பொதுவில் அனைவரும் அறிந்த ஒன்று. பார்ப்பனியக் கோட்பாடு என்பது, தர்மம், கர்மம், தண்டம் என்கிற மூன்று அம்சங்களை உள்ளடக்கியது.... அவரவர் வருணத்தில் சாதியில் நின்று அவரவர் கர்மத்தைத் தொழிலைச் செய்து ஆதிக்கத்திற்கு அடிபணிந்து அதற்குக் கட்டுண்டு கிடக்கச் செய்வது. அப்படி அடிபணிய மறுப்பவர்கள், எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை ஒறுப்பது, தண்டிப்பது” (மேற்படி நூல் பக். 5).

எங்கெங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கங்கு இருந்து முளைப்பது தான் நாத்திகம்என்றார் பெரியார். சமத்துவத்திற்கு ஆழக் குழி தோண்டிச் சமாதிகட்டும் கேடு கெட்ட மதந்தான் இந்துமதம். பார்ப்பான் பார்ப்பானாகவே இருக்க வேண்டும். பறையன் பறையனாகவே செத்து மடிய வேண்டும் என்று ஆணி அடித்து அறைந் தது போல் சொல்லும் அயோக்கியத் தனமான மதம் இந்து மதம். நான்கு சாதிகளையும் இறைவனே படைத் ததாகப்பகவத்கீதை சொல் கிறது. மற்ற வருணத்தான் எல்லோரும் பார்ப் பானுக்கு அடிமைஎன்று மனுநீதி பகர்கிறது.

பகவத்கீதையையும் மனு வையும் சிலர் இந்து மதத்திற்கான புனித நூலாகக் குறிப்பிடுகிறார்கள். இது மற்றவர்களாகச் சாற்றியதுதானே தவிர, மற்றபடி கீதையையோ, மனுவையோ எல்லா இந்துக்களும் ஏற்றுக் கொண்டது கிடையாது” (மேற்படி நூல் பக். : 26) என்று சவடால் அடிக்கிறீர்கள். பகவத்கீதை, மனுஸ்மிருதி, யக்ஞவல்யர் ஸ்மிருதி போன்றவை தான் இந்துச் சட்டத்திற்காக ஆதாரங்கள் என்று இந்திய அரசியல் சட்டத்தில் கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டு விட்டது. இது இன்றுவரை நீடிக்கிறது. இனி உச்சிக் குடும்பி , பாப்பானின் ஒரு குடுமி மயிரையும் நம்மால் பிடுங்க முடியாது. இந்த இழி நிலையைப் போக்க வேண்டித்தான் மேதை அம் பேத்கர் இந்துச் சட்டத்திருத்த முன் வரைவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். இந்துமத வெறி பிடித்த இராஜேந்திரப் பிரசாத்தும், சோசலிசப் பிதாமகர் என்று ஊதிப் பெருக்கப்பட்ட பண்டித நேருவும் அம்பேத்கருக்கும் இந்த நாட்டுக்கும் இரண்டகம் செய்துவிட்டார்கள். அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார்.

வெள்ளையன் இந்தியாவுக்குள் காலூன்றியபோது இந்த மண்ணுக்கான குடிமைச் சட்டங்களை இயற்றும் போது பெருமளவு அதை மனுவிலிருந்துதான் பெற்றான் என்று சொல்வார்கள். ஆனால் காலவோட்டம், சமூக வளர்ச்சி இதில் எவ்வளவோ மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இளம் வயதுத் திருமண ஒழிப்பு, கைம்பெண் மறுமண உரிமை, மணவிலக்கு உரிமை, மணக்கொடைத் தடை, பெண்களுக்குச் சொத்துரிமை, குடும்ப வன்முறைத் தடைச்சட்டம் என்று இதற்குப் பல எடுத்துக்காட்டுக்களைச் சொல்லலாம்” (பக்கம் 17) என்று எழுதுகிறீர்கள்.

உடன்கட்டை ஒழிப்பு, கைம் பெண் மறுமண உரிமை, கோயிலுக்குப் பொட்டுக்கட்டிவிடும் தேவடியாள் முறை ஒழிப்பு போன்ற எதுவுமே காலகட்டத்தில் தாமாய்க் கனிந்தவை அல்ல. பல்வேறு போராட்டங்களைச் சமூகச் சீர்த்திருத்தவாதிகள் என்போர் நடத்திய பின்னர் கிட்டியவையாகும். இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சத்தியமூர்த்தி அய்யர், தேவ தாசி முறையை மிகக் கொடூரமான முறையில் தமிழ்நாடு சட்டமன்றத் திலேயே ஆதரித்துப் பேசினார். கைம்பெண் மறுமண உரிமை கூடாது என்று இன்று வரை காஞ்சி சங்கரன் திமிரடியாகப் பேசிக்கொண்டிருக் கிறான். நீங்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு ஆதரிக்கும் இந்து மத வெறியர்கள் ஆண்ட, ஆண்டு கொண்டி ருக்கும் பலவேறு மாநிலங்களில் குழந்தைத் திருமணங்களும், சதிமாதா வழிபாடும் நடந்து கொண்டிருக் கின்றன.

இந்து மதம் ஒரு மனிதனைச் சாதியச் சிறைக்குள் பிறக்க வைக்கிறது என்றால் பிறந்த அம்மனிதனைத் தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பை, இந்து மதத்தில் உள்ள எந்த ஒரு நிறுவனமும் மேற்கொள்வ தில்லை.. ஆனால் மற்ற மதங்கள் அப்படியல்ல. இசுலாமிய கிறித்துவ மதங் களில் குழந்தை பிறப்பது, பெயர் வைப்பது, பருவமெய்துவது, திருமணம் செய்விப்பது, இல்வாழ்க்கை நடத்து வது, இறப்பது, ஈமச்சடங்குகள் செய்வது என்பன உள்ளிட்ட அனைத்து நடவடிக்களையும் அம்மத நிறுவனங் களே கண்காணிக்கின்றன. கட்டுப் படுத்துகின்றன” (பக். 9, 10) என இந்துமத வெறி இரு கண்ணையும் மறைக்க எழுதுகிறீர்கள்.. இவ்வாறே இந்து இறையர்களுக்குப் படைத்த உணவையும் பெரும்பாலும் இசு லாமிய கிருத்துவர் உண்பதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு மத நடைமுறைகளையும் நோக்கவும் இதைப் புரிந்து கொள்ளலாம்’ (பக். 10) எனப் பச்சையாய் இந்து பாசிஸ்டுகள் நடையிலே எழுதுகிறீர்கள்.

இந்துவாகப் பிறந்த ஒருவன் ஏழையாய் இருந்தாலும், பணக் காரனாய் இருந்தாலும், படித்தவனா யிருந்தாலும், பட்டிக்காட்டான் ஆயினும் பார்ப்பனியம் என்கிற கொடுமையின் நச்சுப் பல்படாமல் வாழ்க்கையின் எந்த வாசலையும் அவன் கடந்து வந்து விட முடியாது. இப்போது நாம் கணினி உலகில் வாழ்கிறோம். இன்னும் ஆயிரம் திருமணங்களில் 998 திருமணங்கள் பார்ப்பனிய வைதீக முறைப்படி தான் நடந்து கொண்டிருக் கின்றன. சுடு காட்டிலும் மனிதனைச் சாதியடிப் படையில் பிரித்து, அதைச் சாம்பல் மேட்டிலும் விதிக்க நினைப் பது சனாதன இந்து மதம், பெரியாரியல் வாதிகளின் இந்துமத எதிர்ப்பே சாதி யொழிப்பை முன்நிறுத்தியது தான். உங்கள் குறுநூலின் ஊறல்களைப் படிக்கும் போது எதைக் கண்டிப்பது, எதற்கு மறுப்பு எழுதுவது என்கிற மலைப்பும் சலிப்புமே தோன்றுகிறது. பரிவார் அமைப்புகளின் பொது சிவில் சட்டத்தை நீங்களும் முன்மொழிவது கொடுமை.

பெரியாரும் அவர்வழிவந்த நாத்திகர்களும் வறட்டுத்தனமாய் கடவுள் மறுப்பை வழிமொழிந்தவர்கள் அல்ல. ஒடுக்கப்பட்ட உழைப்புச் சாதி மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய வரலாற்று நாயகர் பெரியார். அறிவு நிலையில் நின்று அவர் ஆண்டவன் கருத்தியலை எதிர்த்தி ருந்தாலும் கோயில் நுழைவுப் போராட்டங்களை முன் நின்று நடத்தியவர்கள் அவரும் அவருடைய தொண்டர்களும்தான். கல் பேசாது என்பதை அறிந்திருந்தும் கல்முன் ஒலிக்கப்படும் மந்திரங்கள் தமிழாகவே இருக்க வேண்டும் என்று கவலைப் பட்டவர்கள். கருவறை ஒரு சாதிக்கு மட்டுமே உரிமைப்பட்டயமாக இருந்த மாந்த நேயக் கொடுமைக்கு எதிராக தன் வாழ்வின் இறுதி நாட்களிலும் அரிமாவென முழங்கிய அஞ்சா நெஞ்சினர் பெரியார்.

இங்குப் பெரியாரைப் பற்றிய பேச்சு ஏன் என்று நீங்கள் முகஞ்சுளிக்கலாம். உங்களுக்கும், நீங்கள் வக்காலத்து வாங்கும் இந்து மத வெறியர்களுக்கும் வேப்பங்காயாய் இன்றுவரை வெறுப்பூட்டுவர்கள் இந்தப் பகுத்தறிவாளர்கள்தான்... நாத்திகர்கள் தான். மார்க்சியம் அறிந்த, தமிழ்த் தேச விடுதலையில் நாட்ட முள்ள நீங்கள் எப்படி இந்துத்துவ வாதியாய் விளங்குகிறீர்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

உங்கள் நூலின் முன்னுரையில் இந்துமத வெறிச் சக்திகளை மறை முகமாக உசுப்பிவிட்டு அதற்கு ஆள் சேர்க்கும் கைங்கர்யத்தை நாங்கள் செய்து வருவதாகக் கூறுகிறீர்கள். ஆனால் அந்த இழிந்தசெயலை இப் படிப்பட்ட எழுத்துகளின் மூலம் நீங்கள்தான் வெளிப் படையாகச் செய்து வருகிறீர்கள். 1925 முதல் மதவெறி வித்தை ஊன்றி ஒவ்வோர் அடியாக முன்னேறி வரும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரங்கள், ஒரிசாப் படுகொலைகள் என நாடு முழுவதும் நரவேட்டையாடி வரு கின்றன. பெரியார் மண்ணில் அவர் உயிரோடு இருந்த வரை அவர்களால் எதையும் செய்ய முடிய வில்லை. இப்போது அவர்களுக்கு ஏராளமான தோழர்கள் - உங்களையும் சேர்த்து! மதத் திவீரவாதம் எல்லா வகையிலும்... எந்த இடத்திலிருந்து வந்தாலும் கண்டிக்கப்பட வேண்டிய தான். ஆனால் இங்குள்ள நிலைமைகள் தனித்தன்மை வாய்ந்தவை. இதற்கு மேலும் எழுத மனமில்லை, அதனால் பயனுமில்லை.

 

Pin It