வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள பல பார்ப்பனிய கருத்துகளை, கம்பன் திட்டமிட்டு இருட்டடித்து, ஆரியத்துக்குப் பெருமை சேர்க்க முயன்றதை கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் அம்பலப்படுத்தினார்.

திருப்பூர்  புலவர் குழந்தை நூற்றாண்டு விழா கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்று (அக்.2, 2005) கழகத் துணை தலைவர் ஆனூர் செகதீசன் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

நேந்றிலிருந்து விழாக்கள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று நடந்த பேரணியானாலும் சரி, தொடர்ந்து நடந்த குத்தூசி குருசாமி நூற்றாண்டு விழாவானாலும் சரி, மிகச் சிறப்பாக நடைபெற்றன. இப்போது ராவண காவியம் பாடிய திராவிட இயக்கப் பெரும் புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவில், பேசுவதற்கு, மிகச் சிறந்த அறிஞர் பெருமக்கள் வருகை புரிந்துள்ளார்கள். நமது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நேற்று, என்னை அறையில் சந்தித்து, புலவர் குழந்தை எழுதிய நூல்களை எல்லாம் கொடுத்தார். அதில் - ஒரே ஒரு நூலை மட்டும் எடுத்துப் படித்தேன்.

பரிமேலழகர் எனும் பார்ப்பான், திருக்குறளுக்கு எழுதிய உரையில் பார்ப்பனக் கருத்துகளை எல்லாம், எப்படித் திணித்துள்ளான் என்பதை புலவர் குழந்தை அற்புதமாக, ஒரு நூலில் விளக்கியிருக்கிறார். நேற்று பகல் முழுதும் உறக்கமே இல்லாமல், அந்த நூலைப் படித்தேன்.

கம்பன் எழுதிய ராமாயணத்தைப் பார்ப்பனர்கள் தூக்கிப் பிடித்து, அதிலே கவிநயத்தைப் பாராட்டினார்கள். பார்ப்பனர் மட்டுமல்ல, பல தமிழர்களும் கூட கம்பனின் கவித்திறமையைப் புகழ்ந்து போற்றிக் கொண்டிருந்தார்கள். ஆரிய தர்மத்தை உயர்த்திப் பிடித்த கம்பராமாயணத்தை இப்படி உயர்த்திப் பிடித்தபோதுதான், நமது புலவர் குழந்தை ராவணனை காவியத் தலைவனாக்கி, கம்பனையும் மிஞ்சக்கூடிய கவித் திறமையால் ராவண காவியத்தை உருவாக்கிக் காட்டினார்.

பார்ப்பனர்களுக்கு துன்பமோ, பிரச்சினையோ வரும் போதெல்லாம், ராமாயணத்தைப் படியுங்கள் என்று, பார்ப்பனர் ராஜகோபாலாச்சாரி கூறினார். ராமாயணத்தை வீட்டில் படிக்கக் கூடாது. கோயில்களிலும், மண்டபங்களிலும் படியுங்கள் என்று பார்ப்பனர்கள் சொன்னார்கள், என்ன காரணம்? அவ்வளவு ஆபாசம் நிறைந்தது, ராமாயணம்.

ராமாயண ஆபாசத்துக்கு, ஒன்றே ஒன்றை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ராமனைப் பார்ப்பதற்கு, அவனைத் தேடி, ராமனின் தம்பிகள் பரதன், சத்துருகன் தாயார், பெரிய தாயார், சிற்றன்னை எல்லோரும், குகனின் படகில் போகிறார்கள். பெண்கள் எல்லோருமே வயதான மூதாட்டிகள். படகில் போகும் போதும், ஆற்றில் வாலை மீன் துள்ளியதால், படகில் போகிறவர்கள் மீது தண்ணீர் விழுந்ததாம். அந்தத் தண்ணீர் பட்டு, பெண்களின் உடல் உறுப்புகள் எல்லாம் எப்படி இருந்தன என்று நான்கு பாடல்களில் கம்பன் விவரிக்கிறான். இப்படி, ஆபாசமாக சித்தரிப்பதற்கு, ஒரு கம்பன் தேவையா?

காட்டுக்குப் போகும் ராமனுடன், அவனது மனைவி சீதையும் போகிறாள். சரி, அதே போல், லெட்சுமணனும் காட்டுக்குப் போகிறான். லெட்சுமணன், தனது மனைவியை ஏன் அவனோடு காட்டுக்கு அழைத்துப் போகவில்லை? தனது மனைவி முழு கர்ப்பிணியாக இருக்கும் போது, ராமன், அவளை ‘சந்தேகப்பட்டு’ விலக்கி வைக்கிறான். இவன் எப்படி அவதார புருஷனாக இருக்க முடியும்? ராமனுக்கு லவ, குசா என்று இரண்டு குழந்தைகள் பிறந்ததாக வால்மீகி ராமாயணம் கூறும்போது, கம்பராமாயணம் குசா மட்டுமே பிறந்ததாகக் கூறுகிறது. அப்படியானால் ‘லவ’ என்ற குழந்தை யாருக்குப் பிறந்தது? அது ராமனுக்குத்தான் பிறந்ததா என்ற கேள்வி எழுகிறது.

வால்மீகி ராமாயணப்படி, ராமன், லட்சுமணன், சத்துருகன்களே யாருக்குப் பிறந்திருக்கிறார்கள் தெரியுமா? குழந்தை இல்லாத தசரதன், 3 யாகப் பார்ப்பனர்களை அழைத்து தனது மனைவியை, அந்த 3 புரோகிதப் பார்ப்பனர்களிடம் ஒப்படைத்து தனது மனைவியிடம், “நீ என்னைப் போலவே இவர்களையும் பாவி” என்று கூறுவதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது. அப்படிப் பிறந்தவர்கள்தான் ராமன் உட்பட நான்கு சகோதரர்கள். ஆனால், கம்பன், இதை எல்லாம் மறைத்து விட்டான். ‘சம்பூகன்’ என்ற சூத்திரன் - பார்ப்பனருக்குரிய தவத்தை செய்ததாலேயே - பார்ப்பன தர்மம் கெட்டுப் போய்விட்டது என்று, ராமன் சம்பூகனைக் கொன்றான். வால்மீகி ராமாயணத்தில் உத்திர காண்டத்தில் இது குறிப்பிடப்படுகிறது. இதைச் சொன்னால், ராமனின் ‘பார்ப்பன தர்மம்’ தமிழர்களிடையே அம்பலப்பட்டு விடும் என்பதால், கம்பன், உத்திரகாண்டத்தையே எழுதாமல் விட்டு விட்டான். தமிழனைத் தலை குனிய வைத்தது தான் கம்பராமாயணம். இந்தத் தலைகுனிவுக்கு மாற்றாக - ராவணனை காவியநாயகனாக்கி, தமிழன் பெருமையைப் பேச வைத்தார், புலவர் குழந்தை. அது தான் ‘ராவண காவியம்’.

இவ்வாறு ஆனூர் ஜெகதீசன் பேசினார்.

Pin It