மணிப்பூர் மாநிலத்தில் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவதற்கு, ‘ஹரே கிருஷ்ணா - ஹரே ராமா’ அமைப்பினர் கட்டிய கிருஷ்ணன் கோயிலுக்குள் சென்ற கிருஷ்ண பக்தர்கள் 15 பேர், குண்டு வெடிப்பில் பலியானார்கள், வருந்தத்தக்க நிகழ்ச்சி தான். ஆனால், நாட்டில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அவதாரம் எடுத்து பூமிக்கு வருவேன் என்று தனது ‘கீதை’ உரையில் கூறும் கிருஷ்ணன், தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு ஆபத்து வரும்போது வரவில்லையே! மணிப்பூர் மாநிலத்தில், எல்லா கிருஷ்ணன் கோயிலுக்கும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மனு போடுகிறார்கள், கிருஷ்ண பக்தர்கள். ‘கிருஷ்ண பகவான்’ மீது பக்தர்களுக்கே நம்பிக்கை இல்லை.

ஆண் குழந்தை பிறந்துவிட்ட மகிழ்ச்சியில் திருப்பதி ஏழுமலையானுக்கு ‘துலாபாரம்’ சடங்கு நடத்த, சென்னையைச் சார்ந்த ஒரு குடும்பம் காரில் போனபோது, விபத்துக்குள்ளாகி, 10 பேர் இறந்து விட்டனர். தன்னை நம்பி வந்த பக்தர்களையே, ‘ஏழுமலையானால்’ காப்பாற்ற முடியவில்லை.

இவை இரண்டும் கடந்த வாரத்தில் மட்டும் நடந்த நிகழ்வுகள். இப்படி கடவுள் சக்தி சந்தி சிரித்துக் கொண்டிருக்கும்போது, கடவுள் சிலகள் பால் குடிப்பதாக மீண்டும் ஒரு வதந்தி - வட மாநிலங்களில் கிளம்பியிருக்கிறது. பக்தர்கள் கூட்டம் படை எடுக்கிறதாம். தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில், இதே போல் புரளிகள் பரப்பப்பட்டு வருகின்றன.

11 ஆண்டுகளுக்கு முன்பு 1995 செப்டம்பர் 21 ஆம் தேதி அதிகாலை - இதே போன்ற ஒரு புரளி காட்டுத் தீ போல பரவியது. அப்போது ‘விநாயகன்’ சிலை மட்டுமே பால் குடித்தது என்றார்கள். இப்போது வேறு சில ‘கடவுள்’களும் பால் குடிக்கிறார்களாம்.

சிலைகள் பால் குடிக்குமா? பால் மட்டும் குடிக்குமா அல்லது ஹார்லிக்ஸ், போன்விட்டாவையும் அப்படியே குடிக்குமா? சரி குடித்தால் செரிமானமாகி, சிறுநீராக வெளிவர வேண்டுமே? அது எப்போது வெளி வந்தது?

இந்த அறிவியல் கேள்விகளுக்கு எல்லாம் பக்தர்கள் வாய்திறக்க மாட்டார்கள்; விநாயகனே குடிக்க வாய் திறக்கும்போது, பக்தர்கள் வாய் திறந்து பதில் சொல்லக் கூடாதா என்று கேட்கிறார் ஒரு கிண்டல் பேர்வழி. இது ஒரு மோசடியான பொய்ப் பிரச்சாரம். பால் குடிப்பது போல் தோன்றுவதற்கு என்ன காரணம்? விஞ்ஞானிகள் வாய் திறந்து விளக்கம் தருகிறார்கள்!

“உலோகங்களின் கலவைக்கு இடையே மிக நுண்ணிய துவாரங்கள் இருக்கும். அது ஓரளவு திரவத்தை உறிஞ்சும் சக்தி கொண்டதாக இருக்கும். நமது வீடுகளில் இருக்கும் குழாய்களில்கூட இதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். குழாயை திறந்து பயன்படுத்திய பிறகு குழாயை மூடுவோம் அல்லவா? அப்போது ஒரு சில சமயம் குழாயின் முனையில் ஒரு சொட்டுத் தண்ணீர் அப்படியே ஒட்டிக் கொண்டு இருக்கும். அந்த தண்ணீர் துளியை விரலால் தொட்டால், அது அப்படியே திடீர் என்று மாயமாகிவிடும். காரணம், புவி ஈர்ப்பு சக்தி மூலம் அந்த ஒரு துளி தண்ணீர் கீழே விழுவதற்கு முன், குழாய் உலோகத்தின் முனை அந்த தண்ணீரை உறிஞ்சிவிடும். இதேபோல உலோகத்தால் செய்யப்பட்ட சிலையின் மீது ஒரு சில துளி திரவத்தை வைத்தால் அது உறிஞ்சிவிடும். இதைத்தான் சிலைகள் பால் குடிக்கின்றன என்கிறார்கள்.”

டெல்லியை சேர்ந்த பிரபல விஞ்ஞானி பேராசிரியர் யாஷ் பால் தந்துள்ள விஞ்ஞான ரீதியான விளக்கம் இது! பால் குடிக்க வாய் திறக்கும் ‘கடவுள்கள்’ - தன்னைத் திருட வருகிறவன் தூக்கும்போது, ‘அய்யோ; திருடன்; திருடன்!’ என்று கூக்குரல் போடக் கூடாதா? இதைக் கேட்டால் பக்தர்கள் உள்ளத்தைப் புண்படுத்துவதா? என்பார்கள்; நமக்கேன் வீண்வம்பு?

வெள்ளைத் திமிர்: கோவை மாணவர்கள் கொதிப்பு

கோவை சட்டக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பு; ஆதித் தமிழர் மாணவர் பேரவை சார்பில் ‘வெள்ளைத் திமிர்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கை.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை பெற்று பெரியாரின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்து சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர், பெரியாரின் வரலாற்றுப் படத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியதை விமர்சனம் செய்து உள்ளார். அதோடு மட்டுமல்லாமல், இராஜாஜிக்கும், வைத்தியநாத அய்யருக்கும் வரலாற்று படம் எடுப்பீர்களா? என்று கேள்வி கேட்டு தன் உயர்சாதி திமிருத்தனத்தை காட்டி உள்ளார்.

தந்தையின் தொழில் இழிவானதாகவே இருந்தாலும் அதையே நீயும் செய் என்று குலக்கல்வி திட்டத்தை அறிமுகம் செய்தவர் இராஜாஜி. வர்ணாசிரம கொள்கை (சாதிய பாகுபாடு) இருக்க வேண்டும். பிராமணன் தான் உயர்ந்தவன், நான் பிராமணன் என்று சொன்னவர் வைத்தியநாத அய்யர்.

அ.தி.மு.க. உறுப்பினர் என்றால் எம்.ஜி.ஆருக்கோ, அண்ணாவிற்கோ வரலாற்று திரைப்படம் எடுக்கச் சொல்லாமல் தன் சாதி பாசத்தை காட்ட எஸ்.வி.சேகர் பேசிய பேச்சு தந்தை பெரியார் ‘சொன்னதை போல’ ஆட்டு மூளைகூட நமக்காக சிந்திக்கும். ஆரிய மூளை நமக்காக சிந்திக்காது என்பதை தெளிவுபட காட்டுகிறது. வரலாற்றில் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். தன் வாழ்நாள் முழுவதும் மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவும், தமிழர்களின் சுயமரியாதைக்காகவும் போராடி ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று சொன்னவர் பெரியார்.

தன் வாழ்நாள் முழுவதும்

10,700 - பொதுக் கூட்டங்கள்
21,400 - மணி நேர பேச்சு
71 - புத்தகங்கள்
114 - பிரசுரங்கள்
சுற்று பயணம் தூரம் - 8,20,000 மைல்கள்
பூமியின் சுற்றளவைப்போல் 33 மடங்கு, பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப்போல் 3 மடங்காகும்.

தந்தை பெரியாரின் சொற்பொழிவுகள் அனைத்தையும் ஒலி நாடாவில் ஒலிக்கவிட்டால் 2 ஆண்டுகள் 5 மாதம் 11 மாதங்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.

இவையெல்லாம் இன்றைக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் அறிவியல் மேதைகளாகவும், விஞ்ஞானிகளாகவும் ஆவதற்கு சூத்திர பட்டம் ஒழிவதற்கும் தந்தை செலுத்திய உழைப்பு.
தமிழா இன உணர்வு கொள்.

இவ்வாறு அந்தத் துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pin It