தமிழ்நாட்டில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் ‘தாண்டவமாடி’ வருவதை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து சுட்டிக்காட்டி போராடி வருகிறது. பொதுவுடைமை கட்சியினர் இந்தப் பிரச்சினையில் தொடர்ந்து கவனத்தை ஈர்க்கும் போராட்டங்களை நடத்தி வருவதையும் குறிப்பிட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ‘மக்கள் சேவை’க்காக களத்தில் நிற்கும் வேறு எந்த அமைப்புகளும் இந்த முதன்மையான பிரச்சினைக்கு சமூக அவலத்துக்கு குரல் கொடுக்காமல் ஒதுங்கியே நிற்பது, வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியதாகும்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஒன்று - சத்துணவு மய்யங்கள் மற்றும் அங்கன்வாடிகளில் பணி நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடுகள், மறுக்கப்பட்டது தொடர்பானதாகும். தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு கூடங்கள், உணவு வழங்கும் இடங்கள் மட்டுமல்ல; சாதி தீண்டாமை ஒழிப்பும் அதில் அடங்கியுள்ளது. தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள், சத்துணவுக் கூடங்களில் சமையல்காரர்களாக இருந்து சமைத்து, அதை ஊரிலுள்ள அனைத்து சாதி ஏழைக் குழந்தைகளையும் உண்ண வைப்பது சமூக மாற்றத்துக்கான ஒரு திறவு கோலாகும். உத்திரபிரதேசத்தில் தலித் முதலமைச்சர் மாயாவதி, அங்கே உள்ள சத்துணவுக் கூடங்களுக்கு சமையல் வேலைக்கு தலித்துகளையே நியமிக்க ஆணையிட்டார். பிறகு பல பள்ளிகளில் சாதி உணர்வுள்ள பெற்றோர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதையே நிறுத்தி விட்டனர். அதனால், அந்த உத்தரவை மாயாவதி திரும்பப் பெற்றுவிட்டார்.
இது சாதி தீண்டாமை வெறி பிடித்த உ.பி.யின் நிலை என்று நாம், பெருமைபட்டுக் கொள்ள முடியாது. இங்கே மட்டும் என்ன வாழுகிறதாம், என்ற கேள்வியை கேட்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மய்யங்களில், அமைப்பாளர், சமையல்காரர், உதவியாளர் பணிகளுக்கு 29,773 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 2008 ஆம் ஆண்டு மே 30 ஆம் நாள், அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. கல்வித் தகுதி, வயது மற்றும் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டது. இதன்படி நிரப்பப்பட்டிருந்தால், 19 சதவீத இடஒதுக்கீட்டின்படி, 5675 காலிப் பணியிடங்களில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நியமிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமலேயே அரசு ஆணைக்கு எதிராகவே பணியிடங்களை நிரப்பிவிட்டது தமிழக அரசு. பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
வழக்கில் - தி.மு.க. அரசு, நீதிமன்றத்தில் அளித்த பதில்தான், அதிர்ச்சி தரக்கூடியது. சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் அரசுப் பணியாளர்கள் அல்ல என்றும், இவர்களின் பணி, எந்த ஒரு சட்டத்துக்கும் உட்பட்டதல்ல என்றும், எனவே, இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டியதில்லை என்றும், சமூகநீதி பற்றி ‘தம்பட்டம்’ அடித்துக் கொள்ளும் இந்த அரசு பதில் மனுதாக்கல் செய்தது. சத்துணவுத் திட்டங்களுக்கு அரசு ஒதுக்கும் நிதி ரூ.1,100 கோடி. இவ்வளவு அதிக நிதி ஒதுக்கீட்டின் கீழ், இயங்கும் திட்டத்தின் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள் அல்ல என்கிறது இந்த ஆட்சி! அது மட்டுமின்றி “உள்ளூரில் அங்குள்ள சமூகத்தோடு சேர்ந்து வாழும் நபர்களே இம் மய்யங்களில் தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்” என்று பதில் அளித்துள்ளது. அதாவது, உள்ளூரில் ஆதிக்கசாதியினராக இருக்கும் பிரிவினரே நியமிக்கப்படுகிறார்கள் என்பதே இதன் அர்த்தம். இதுதான் பெரியார், அண்ணா ஆட்சிக்கான அடையாளமா, என்று கேட்க விரும்புகிறோம்.
நீதிபதி சந்துரு, தனது தீர்ப்பில், “பல்வேறு சமூகத்தாரின் குழந்தைகளுக்கு ஒரு தலித் உணவு தயாரித்து பரிமாறுவதை, சாதி இந்துக்கள் எதிர்ப்பார்கள் என்பது, மற்றொரு இன ஒதுக்கலின் வடிவமேயாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். தேசிய சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே சமூக மாற்றத்துக்காக சாதி தீண்டாமைக்கு எதிரான கருத்துகளை முன் வைத்தபோது, அதற்கு எதிர்ப்புகள், கருத்து மாறுபாடுகள் எழுந்ததை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, “நீண்டகால கசப்பான அனுபவங்களுக்குப் பிறகுதான் எதிர்ப்புகளை மீறி, சமபந்தி விருந்து வந்தது. உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தினர் தயாரித்த உணவை பல்வேறு உயர்சாதி சமூகத்தினருக்கு பரிமாறும் நடைமுறைகள் கொண்டு வரப்பட்டன. அதன் பிறகே சில வகையான தீண்டாமைகள் ஒழிக்கப்பட்டன. இது ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்குவதில் ஏற்பட்ட மைல்கல்” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடத்திய காங்கிரஸ் மாநாடுகளில், பார்ப்பனர்களுக்கு தனியாக உணவு பரிமாறப்பட்டதையும், நீடாமங்கலம் காங்கிரஸ் மாநாட்டில், உணவு பந்தியில் உட்கார்ந்த, ஒரு தாழ்த்தப்பட்டவரை, மரத்தில் கட்டி வைத்து, தேசிய பார்ப்பனர்கள் தலையை மொட்டை அடித்ததையும், அதே நேரத்தில் - சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாடுகளில் ‘சமபந்தி’ நடந்தது மட்டுமல்ல, ‘தீண்டப்படாத நாடார் சமூகத்தினர் சமையல்’ என்று அறிவித்து மாநாடு நடத்தியதையும் நினைவுகூர விரும்புகிறோம். தி.மு.க. ஆட்சி, சுயமரியாதை இயக்க வழிக்கு நேர்மாறாக, ‘தேசிய பார்ப்பன காங்கிரஸ்’ பின்பற்றிய ‘உணவுத் தீண்டாமை’யைப் பின்பற்றுவதுதான், தி.மு.க.வின் கொள்கை வளர்ச்சியா? என்று வேதனையோடு கேட்கிறோம்!
மற்றொரு வழக்கு தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான ‘தாட்கோ’ என்ற அமைப்பின், கட்டுமானப் பணி தொடர்பான ஒப்பந்தங்களை வழங்குவது பற்றியதாகும். ஆதி திராவிட மக்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டப் பணிகளை, அதே சமுதாயத்தைச் சார்ந்த ஒப்பந்தக்காரர்களுக்கே வழங்கவேண்டும் என்று 1997 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி, அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியின் ஆதி திராவிடர் நலத் துறை கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி பிறப்பித்த ஆணையோ கட்டுமானப் பணி ஒப்பந்தத்தில், தலித் பிரிவினர் அல்லாத மற்றவர்களும் பங்கேற்கலாம் என்று அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம், அரசு ஆணையை ரத்து செய்து விட்டது.
தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி டி. அரிபரந்தாமன், “இப்போதும், பட்டியல் மற்றும் பழங்குடி இனப் பிரிவில் பெரும் பகுதியினர், வறுமைக் கோட்டுக்கும் கீழே தான் உழலுகிறார்கள். அரசியல் சட்டம் தீண்டாமையை சட்ட விரோதம் என்று அறிவித்திருந்தாலும், தீண்டாமை இன்னும் நடைமுறையில் செயல் அளவில் இருப்பது தேசிய அவமானமாகும். இப்போதும் கிராமங்களில் ‘இரட்டைக் குவளை’ அமைப்பு இருக்கவே செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுத்துள்ள சாதி - தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தின் நியாயங்களுக்கு, இத் தீர்ப்புகள் மேலும் வலிமையை கூட்டியுள்ளன என்றே கூறலாம். சாதி எதிர்ப்பு பரப்புரைகளையோ, இயக்கத்தையோ தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளாக வலம் வரும் கட்சிகள் முழுமையாகக் கைவிட்டு விட்டன.
பெரும்பான்மை வாக்கு வங்கிகளுக்காக - சாதி, தீண்டாமை எதிர்ப்பிலும் சமரசம் செய்து கொண்டு, பெரியார்-அண்ணா கொள்கைகளை பெயர்களில் மட்டும் வைத்திருப்பது மிகப் பெரும் கொள்கை வழுக்கல். பின்னோக்கியப் பயணம் என்றே சொல்ல வேண்டும். அரசு எந்திரங்களைக் கைப்பற்றி அதிகாரத்துக்கு வந்த நோக்கம் - இந்த செயல்பாடுகளுக்காகத்தானா?தி.மு.க.வில் மிச்சம் மீதி இருக்கும் கொள்கையாளர்களாவது சிந்திக்க வேண்டும்.