அருந்ததியருக்கு சட்டமன்றம், பாராளுமன்றங்களில் அருந்ததியின மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு வரலாற்றில் முக்கியமான 3 நிகழ்வுகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. பார்ப்பனரல்லாதார் உரிமையைத் தடுத்த பார்ப்பனர்கள்
முதல் உலகப் போரில் இந்தியப் படைவீரர்கள் 15 இலட்சம் பேர் வரை ஈடுபடுத்தப்பட்டனர். பிரிட்டன் அணி வெற்றி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எனவே இந்தியாவுக்கு சில அதிகாரங்களை வழங்க விரும்பியது.
1917 ஆகஸ்ட் 20 இல் இந்தியர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்க இருப்பதாகவும் அதற்காக ஆய்வு செய்ய மாண்டேகு - செம்ஸ்ஃபோர்ட் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.
அப்பொழுது பிரிட்டனின் இம்ப்பீரியல் கவுன்சிலில் உறுப்பினர்களாக இருந்த பார்ப்பனர்கள் 19 பேர் அதை வரவேற்று அறிக்கை கொடுத்தனர்.டிசம்பர் 24 இல் சென்னைக்கு வந்த குழுவின் முன்பு தியாகராயர், டி.எம்.நாயர், அலெக்சாண்டர் காட்யூ சாட்சியமளித்தனர்.
இம்பீரியல் கவுன்சில் உறுப்பினர் அறிக்கையை (19 பேர் அறிக்கை) பிரிட்டிஷ் அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது, அதனை ஒப்புக் கொண்டால் பார்ப்பனரல்லாதார் பார்ப்பன சமூகத்திற்கு அடிமையாக நேரும். வெறும் அதிகாரம் வழங்குவதால் இந்தியர்களுக்குப் பயனில்லை.
இந்தியர்கள் என்ற பெயரில் பார்ப்பனர்கள் மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள். எனவே நீங்கள் அதிகாரம் வழங்குவதாக இருந்தால், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கட்டாயமாக்கி மட்டுமே வழங்க வேண்டும்.
அப்படி வகுப்புரிமை இல்லாமல் இந்தியர் களுக்கு அதிகாரம் வழங்குவதைவிட நீங்களே, ஆங்கிலேயர்களே எங்களை ஆட்சி செய்து கொள்ளுங்கள். பார்ப்பனர்களை விட உங்கள் ஆட்சி கருணையுள்ளது என்று கோரிக்கை வைத்தனர்.
தங்கள் கோரிக்கைக்குச் சான்றாக, 1916 இல் வெளியிடப்பட்ட பார்ப்பனரல்லாதார் பிரகடனத்தை வழங்கினர். ஆங்கிலேய அரசில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசு நிர்வாகங்கள் அனைத்திலும் உள்ள பார்ப்பன ஆதிக்கங்களையும், 1909 மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தால் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தையும் பார்ப்பனர்கள் முழுமையாக அபகரித்துக் கொண்ட நிலையையும் சான்றுகளோடு விளக்கியது பார்ப்பனரல்லாதார் பிரகடனம்.
பார்ப்பனரல்லாதார் பிரகடனம்:
“அளவுக்கு மிஞ்சிய இத்திட்டத்தைப் பற்றியோ அல்லது இம்பீரியல் சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் வைசிராயிடம் கொடுத்த திட்டத்தைப்பற்றியோ இங்கு நாம் விரிவாகக் கூற வேண்டியதில்லை. ஆங்கிலேயர் ஆட்சியின் செல்வாக்கைக் குறைக்கும் எந்தத் திட்டத்தையும் நாங்கள் விரும்பவில்லை.
இன்று நாடு இருக்கும் நிலையில் வெவ்வேறு சாதியினர் வகுப்பினர்களுக்கு நீதி கிடைக்கவும் அவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தவும், தேசிய ஒருமைப்பாட்டை உண்டாக்கவும் கூடியவர்கள் ஆங்கிலேயர்கள்தான். தவறினால் நாட்டில் தேசபக்தி இன்றி ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு சீரழியநேரிடும்”
1.பார்ப்பனர்களிடமிருந்து தேர்தலில் நிற்கும் உரிமையை பார்ப்பனரல்லாதார் பெறுவதற்காக டி.எம்.நாயர், கே.வி.ரெட்டி நாயுடு, தியாகராயர் போன்ற பலரும் பாடுபட்டனர். 1918 ஆகஸ்ட் 2 ஆம் நாள் இலண்டனிலுள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஃ, ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் இரண்டிலும் போராடினர்.
2.அதைத் தொடர்ந்து ‘சவுத் பாரோ’ கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் பார்ப்பனர்களுக்குச் சாதகமாக வந்தது. அதன் பிறகு பிரிட்டனின் Parliment Joint Select Committee உருவாக்கப்பட்டது.
4. 1919 ஆகஸ்ட் 12 இல் பாராளுமன்ற இரு அவைகளிலும் கே.வி.ரெட்டி நாயுடு போராடினார். அதன் விளைவாக லார்ட் மெஸ்டர்ன் கமிட்டி அமைக்கப்பட்டது.
5. 1920 இல் மீண்டும் ஒரு நடுவர்குழு அமைக்கப்படுகிறது.
இத்தனை குழுக்களிலும், அவைகளிலும் பல ஆண்டுகளாகப் போராடிப் பெற்றது தான் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் நிற்கும் உரிமை. தமிழ்நாட்டில் மொத்தம் 127 தொகுதிகள் வழங்கப்பட்டன.
அதில் 98 தொகுதிகளில் தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் வருவார்கள். இந்த 98 இல் 28 தொகுதிகளில் பார்ப்பனரல்லாதார் மட்டுமே நிற்கமுடியும். மற்றவை பார்ப்பனர்கள், பண்ணையார்கள், பல்கலைக் கழகங் களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
29 தொகுதிகளுக்கு ஆளுநர் நியமனங்கள் வழியாக நியமனங்கள் நடக்கும். அந்த ஆளுநர் நியமனங்களில் பட்டியலின மக்களுக்குள்ளேயே ஜாதிக்கு ஒருவர் என 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் இராவ் சாகிப் எல்.சி.குருசாமி.
திராவிடர் இயக்கத்தின் தோற்றமே, அது உருவானதற்கான அடிப்படையான முதற்காரணமே தேர்தல்களில் இடஒதுக்கீடு என்பது தான்.
இப்படி பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற போராட்டம் அரசியல் தளத்தில் நடந்துகொண்டிருந்த போது, பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிக்கு உரிமை வேண்டும் எனப் போராடவில்லை. மாறாக, இந்தியர்களுக்குள் பிரிவினையை உண்டாக்க வேண்டாம்.
பொதுவாக இந்தியர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள் என்று தான் போராடினார்கள். பார்ப்பனர்களிடமிருந்து அரசியல் உரிமை பெறுவதற்காக பார்ப்பனரல்லாத தலைவர்கள் முன்வைத்த அனைத்து வாதங்களும், நியாயங்களும் இப்போது நாம் கேட்கும் அருந்ததியர் அரசியல் உள் ஒதுக்கீட்டுக்கும் அப்படியே பொருந்தும்.
2. வட்டமேஜை மாநாடுகள் - இஸ்லாமியர் தனித்தொகுதிக்கு பார்ப்பனர் எதிர்ப்பு
மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தின் காரணமாக 1909 லிருந்தே இஸ்லாமியர்களுக்கு தனிஒதுக்கீடு, இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது. அதை இந்த வட்டமேஜைமாநாடுகளின் மூலமாக ஒழித்துவிட பர்ப்பனர்கள் திட்டமிட்டிருந்தனர். அதை எதிர்த்து இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் போராடினர்.
அந்தப் போராட்டங்களை ஒழிக்க, பார்ப்பனர்கள் எடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? “இஸ்லாமியர்களுக்கான இந்தத் தனித் தொகுதி முறை என்பது இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்குகிறது. எங்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம்” என்ற சூழ்ச்சி அஸ்திரத்தைக் கையிலெடுத்தனர். அப்போது பெரியார், இஸ்லாமியர்களின் போராட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசியது,
“முஸ்லீம்கள் முஸ்லீம் பிரதிநிதிகளாய் முஸ்லீம்களின் ஓட்டைக் கொண்டே பிரதிநிதிகளாக அங்கம் பெறவேண்டும் என்பதாகவே இந்தியாவின் பெரும்பான்மை யாகிய முஸ்லீம்கள் விரும்புகின்றார்கள் என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும்.
தனித் தொகுதியால் ஒற்றுமை ஏற்படாது என்கின்றார்கள். இதிலும் சிறிது கூட அர்த்தமில்லை என்றுதான் சொல்லுவேன். இப்போது சுமார் 20 வருஷகாலமாய் தனித் தொகுதிதான் இருந்து வருகின்றது. இதனால் என்ன விரோதம் ஏற்பட்டுவிட்டது? என்ன ஒற்றுமையில்லாமல் போய்விட்டது? என்று கேட்கின்றேன்.
இப்போது இதை மாற்ற வேண்டிய அவசியமான காரியமென்ன? என்றும் கேட்கின்றேன்.கூட்டுத் தொகுதியாயிருந்தால் எவ்வளவோ கலவரங்கள் ஏற்பட்டு இருக்கும். உதாரணமாகக் கூட்டுத் தொகுதி உள்ள முனிசிபாலிட்டிகளில் இந்து முஸ்லீம் கலகம் மனஸ்தாபம் அல்லது அபிப்பிராய பேதம் இல்லாத முனிசிபாலிட்டி ஒன்றைக் காட்டுங்கள்.
ஆகவே சகோதரர்களே! நீங்கள் தனித்தொகுதியே விரும்பி அதையே ஏகமனதாய் நிறைவேற்றிக் கொண்ட விஷயம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இவ்வளவோடேயே நீங்கள் நின்றுவிடாமல் இதைக் கடைசிவரை கொண்டு செலுத்தி முடிவில் வெற்றிபெற முனைந்து நில்லுங்கள். குடி அரசு - சொற்பொழிவு - 21.06.1931 என்றார்.
இறுதியில் இஸ்லாமியர்கள், சீக்கியர்களின் தனித்தொகுதி முறையை காந்தியும் இந்துமகாசபை மாளவியாவும் ஆதரித்தனர். பார்ப்பனர்களிடமிருந்து அரசியல் உரிமை பெறுவதற்காக இஸ்லாமியத் தலைவர்கள் முன்வைத்த அனைத்து வாதங்களும், நியாயங்களும் இப்போது நாம் கேட்கும் அருந்ததியர் அரசியல் உள்ஒதுக்கீட்டுக்கும் அப்படியே பொருந்தும்.
3. வட்டமேஜை மாநாடு - பட்டியலின மக்களுக்கு பார்ப்பனர்களின் துரோகம்
இஸ்லாமியர்களின் இரட்டை வாக்குரிமையைக்கூட ஆதரித்த பார்ப்பனப் பிரதிநிதிகளான காந்தியும், மாளவியாவும் பட்டியலின மக்களின் இரட்டை வாக்குரிமையை எதிர்த்தனர்.
அப்போது காந்தியும், மாளவியாவும் எடுத்த ஆயுதம் வழக்கம் போலவே சூழ்ச்சி தான். “பட்டியலின மக்களுக்கு இரட்டை வாக்குரிமை கொடுத்தால், அது இந்துக்களுக்குள் பிரிவினையை உண்டாக்கும், எங்களைப் பிரிக்க வேண்டாம்” என உயிரைப் பணயம் வைத்து நமது உரிமையைத் தடைசெய்தார்.
அப்போது அம்பேத்கரும், இரட்டமலை சீனிவாசனும் காந்தி மற்றும் பார்ப்பனர்களின் துரோகத்தை நேரடியாகச் சந்தித்துப் போராடினர். அந்த வட்டமேறை மாநாட்டில் பங்கேற்ற பெரியாரின் நண்பர்களும், தளபதிகளுமான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், சர்.ஏ.இராமசாமி, பொப்பிலி அரசர் மூவரும் அம்பேத்கருக்கு ஆதரவாகத் தோளாடு தோள்நின்று போராடினர்.
“சுயராஜ்யத்தில் எவ்வளவு சிறிய சுதந்திரம் கிடைத்தாலும், எவ்வளவு பெரிய சுதந்திரம் கிடைத்தாலும் அது இந்தியாவில் உள்ள - இருக்க வேண்டிய எல்லா ஜாதி மத வகுப்புக்கும் சரியான பிரதிநிதித்துவமாய் இருக்கக் கூடியதாய் இருந்தால் தான், இந்திய மக்களால் ஒப்புக் கொள்ளக்கூடிய தாகும். இல்லாதவரை எதிர்க்க வேண்டியதாகும்”. - தோழர் பெரியார், குடி அரசு - 11.10.1931
பார்ப்பனர்களிடமிருந்து அரசியல் உரிமை பெறுவதற்காக அம்பேத்கர் முன்வைத்த அனைத்து வாதங்களும், நியாயங்களும் இப்போது நாம் கேட்கும் அருந்ததியர் அரசியல் உள்ஒதுக்கீட்டுக்கும் அப்படியே பொருந்தும்.
இந்த நேரத்தில் முக்கியமான தவகல் ஒன்றை கூற விரும்புகிறேன். 1970 ஜனவரி 22 இல் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு பெரியாரைச் சந்தித்தது. கலைஞர் ஆட்சி நடந்த போது அமைக்கப்பட்ட குழு அது. அந்தக் குழுவிடம் பெரியார் வைத்த கோரிக்கை:
“சட்டசபையில் 25 சதவீத இடங்களை, தேர்தல் மூலம் நிரப்பப்பாமல், போட்டியிட்டு வரமுடியாத ஜாதிகளிலிருந்து அரசே நாமினேசன் செய்ய வேண்டும்”. என்றார் - தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு, கருணாநந்தம் நூல்.
அதாவது, பார்ப்பனர்களோ, பிற்படுத்தப்பட்ட ஜாதியினரோ, பொருளாதார பலமுள்ள ஜாதியினரோ எப்படியாவது தேர்தலில் நின்றுவிட முடியும். அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைத்துவிடும். ஆனால் அருந்ததியர் போன்ற சமுதாயத்தின் அடித்தட்டில் வாழ வைக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கவே முடியாத நிலை உள்ளது.
அப்படிப்பட்ட சமுதாய மக்களுக்கு சட்டமன்றங்களில் 25 சதவீதம் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். அவர்களால் தேர்தலில் நின்று, வென்று சட்டமன்றங்களில் நுழைவதற்கு இந்த இந்துச் சமுதாயம் பெரும் தடையாக இருக்கும். அதனால் அந்த 25 சதவீத இடங்களை அரசே நியமனம் செய்ய வேண்டும் என்றார்.
இப்போராட்டங்களின் நோக்கம், பிரதிநிதித்துவம் கிடைக்காத ஜாதியினருக்கு சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் அவசியம் வேண்டும் என்பது தான். அந்த அடிப்படையில் இப்போது, பட்டியலின மக்களுக்கு என ஒரு அரைகுறையான பிரதிநிதித்துவம் தான் வந்துள்ளது என்றாலும் அதிலும் அருந்ததிய மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காதது சமூகநீதிக்கு எதிரானது.
அன்று, “இந்தியர்களுக்குள் பிரிவினையா உண்டாக்குவாதா?” என்றனர். “இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்குவதா?” என்றனர். “இந்துக்களுக்குள் பிரிவினையை உண்டாக்குவதா?” என்றனர். அவர்கள் பேசிய ஒற்றுமையின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். அது நிரந்தரமான பார்ப்பன ஆதிக்கம்.
அதுபோல இன்று அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு என்ற முழக்கம் தொடங்கப்படும் போதே பட்டியலின மக்களுக்குள் பிரிவினையா? என்ற குரல்களும் ஒருவேளை தோன்றலாம்.
அப்படிப்பட்ட ஒற்றுமை முழக்கங்களை யார் எழுப்பினாலும் அவர்களுக்குப் பின்னால் கட்டாயம் பார்ப்பன நலன்கள் இருக்கும். எனவே யாருடைய குரல் எனப் பார்க்காதீர்கள். அந்தக் குரல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் எனப் பாருங்கள்.
தோழர் அதியமான் அவர்களும், ஆதித்தமிழர் பேரவையும் தொடங்கியுள்ள இந்த அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டுப் போரில் கருஞ்சட்டைகளும் பங்கேற்பதில் பெருமை அடைகிறோம்.
மிக முக்கியமாக நமது கோரிக்கையானது சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் மட்டும் உள்ஒதுக்கீடு வேண்டும் என்பதோடு நின்று விடக்கூடாது. ஜனநாயகத்தின் தூண்களான நிர்வாகத்துறை, நீதித்துறை, ஊடகதுறை அனைத்திலும் உள் ஒதுக்கீடு அவசியம் வேண்டும். இடஒதுக்கீடு இல்லாத துறைகளில் முதலில் இடஒதுக்கீடு வேண்டும்.
அருந்ததியினருக்கு மட்டுமல்ல; குரலே எழுப்ப முடியாத குறவர்கள், புதிரை வண்ணார்கள் போன்ற பல ஜாதியினருக்கும் நாம் தான் குரல் எழுப்பவேண்டும்.
அந்த உள்ஒதுக்கீட்டிலும் நாங்கள் இன்னொரு உள் ஒதுக்கீட்டையும் கூடுதலாகக் கேட்கிறோம். அருந்ததியினப் பெண்களுக்கு அந்த உள் ஒதுக்கீட்டுக்குள்ளேயே 50 சதவீத உள்ஒதுக்கீடு வேண்டும் என்பதையும் முக்கியமாகக் கூற விரும்புகிறோம்.
அரசுத் துறைகள் அனைத்தும் தனியார் மயமயாகி வருவதால், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும். அதிலும் உள் ஒதுக்கீடும் வேண்டும் என்ற போராட்டத்தையும் தொடங்க வேண்டும்.
இந்த நீண்ட நெடிய போரைத் தொடங்கியுள்ள ஆதித்தமிழர் பேரவைக்கு வாழ்த்துக்களையும், போராட்டங்களில் நாங்களும் பங்கேற்போம் என்ற உறுதியையும் வழங்கி விடைபெறுகிறோம்.
(03.01.2021 ஞாயிறு மாலை உடுமலைப்பேட்டையில் ஆதித்தமிழர் பேரவை நடத்திய “அருந்ததியர் அரசியல் உள்ஒதுக்கீட்டு உரிமை” மாநாட்டில் பேசிய உரை)
- அதி அசுரன்