திமுகவினுடைய மிகப்பெரிய பலமே அவர்கள் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதும், அவர்களின் குறைகளை, கோரிக்கைகளைக் கேட்கவாவது தயாராக எப்போதும் இருப்பதுதான். உதாரணமாக கடந்த காலங்களில் ஆதித்தமிழர் பேரவை வைத்த பல கோரிக்கைகளை திமுக அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலே சேர்த்திருக்கிறார்கள். ஒரு சிறிய அமைப்பின் கோரிக்கையை ஏற்று அதை அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் சேர்க்கின்ற அந்த "மனநிலை" என்பதே திமுகவின் மிகப்பெரிய வெற்றி.
1972 ஆம் ஆண்டு, வரலாற்றின் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கோவை செழியன் ஒரு மாநாட்டினை நடத்தி, அப்போது முற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்த கொங்கு வேளாளர்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட கலைஞர் மிக எளிதாக அக்கோரிக்கையை அவர்களுக்கு நிறைவேற்றிக் கொடுத்தார். தற்பொழுது வட நாட்டில் ஜாட் சமூகத்தினர் மற்றும் குஜ்ஜார் சமூகத்தினர் எவ்வளவு தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கலைஞர் ஆட்சியில் ஒரு மாநாட்டில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய ஒரே முதலமைச்சர் தலைவர் கலைஞர் மட்டும்தான்.
அந்த வகையில்தான் பேரவையின் கோரிக்கைகளான தூய்மைத் தொழிலாளர் நல வாரியம், தோல் தொழிலாளர் நல வாரியம், அருந்ததியருக்கு மூன்று சத உள்ளிட ஒதுக்கீடு மற்றும் அருந்ததியர்களின் தலைவரான சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் போன்றவற்றைத் திமுக நிறைவேற்றியது. இவையெல்லாம் நடைமுறைக்கு வந்தது அருந்ததியர் மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத விடயங்கள், தலைவர் கலைஞர் தவிர வேற யாராலும் நிறைவேற்றப்பட முடியாத கோரிக்கைகள். அருந்ததியர் மக்கள் எவ்வளவு பெரிய போராட்டங்கள் செய்தாலும், பல உயிர் தியாகங்கள் செய்தாலும் கூட யாராலும் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளைக் கலைஞர் மிக எளிதாக நிறைவேற்றியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு மட்டும்தான் திமுக பணியாற்றியது என்று யாரும் கூற முடியாது. வன்னியர் உட்பட இருபது சாதிகளை ஒன்றாகச் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கியது. எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இருந்த போது பாமக வினர் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது பல லட்சக்கணக்கான மரங்களை பாமகவினர் வெட்டி வீழ்த்தினர். பல பேர் பலியானார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அந்தப் போராட்டத்தையும் அவர்களின் கோரிக்கைகளையும் கண்டுகொள்ளவே இல்லை.
தமிழ்நாட்டில் திராவிட கொள்கையை உள்வாங்கிய கட்சி என்றால் அது திமுக மட்டும்தான். அதிமுக வுக்கு பெயரில் தான் திராவிடம் இருக்கிறதே தவிர கருத்தில் இல்லை. அவர்கள் மண்சோறு சாப்பிடுவது, காவடி எடுப்பது என்று வேறு வழியில் சென்றுவிட்டார்கள். அருந்ததியருக்குக் கலைஞர் உள்ளிட ஒதுக்கீடு கொடுத்தபோது கூட இந்த அம்மையார் "இது தவறான ஒதுக்கீடு, இது செல்லாது, நான் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு முறையாக 7 சதவீதம் இட இதுக்கீடு பெற்றுத்தருவேன்" என்று கூறினார். இப்போது அவர் ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. இதுவரை இந்த அருந்ததியர் இடஒதுக்கீடு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அருந்ததியர் பற்றிய எந்த அக்கறையும் அதிமுக அரசுக்கு கிடையாது. சமுதாயத்தில் தலித் மக்களில் மூன்றில் ஒரு பங்காக, ஒரு பெரும்திரளாக வாழ்பவர்கள் அருந்ததியர்கள். அனைத்து அடித்தட்டு வேலைகளிலும் பெறும் பங்காற்றி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தாங்கி தூக்கிப் பிடிப்பவர்கள் அருந்ததியர்கள். அப்படிப்பட்ட ஒடுக்கப்பட்ட அருந்ததியர்களைப்பற்றி எவ்வித அக்கறையும் காட்டாமல் இருப்பதும் அதிமுக அரசின் மிகப்பெரிய தோல்வி!!
- அதியமான், நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை