கடந்த காலத்தில் நமது நாட்டில் வேளாண்மை கிராமத்தின் சொந்தத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சாதி அடிப்படையிலான நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த உற்பத்திமுறையில் நில உடைமைச் சாதிகளான பார்ப்பனர், வேளாளர் மற்றும் இடைப்பட்ட சாதிகள் மட்டும் அல்லாமல் நிலமற்ற தச்சர், கொல்லர், குயவர், வண்ணார், நாவிதர், தலித்துகள் என்ற பல பிரிவினரும் பங்கு கொண்டிருந்தனர். ஆனால் இன்று முதலாளியத்தின் வளர்ச்சி காரணமாக வேளாண்மை முதலாளிய உற்பத்திமுறைக்கு மாறியுள்ளது. சொந்த நுகர்வுக்கான உற்பத்தியாக இல்லாமல் இன்று வேளாண்மை உற்பத்தி சந்தைக்கான உற்பத்தியாக, பண்ட உற்பத்தியாக மாறியுள்ளது. இன்று வேளாண்மை உற்பத்தி உலகச் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூலி உழைப்பை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறையாக மாறியுள்ளது.. சாதி அடிப்படையிலான நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை மறைந்து விட்டது. பிறப்பின் அடிப்படையிலான குலத் தொழிலும் மறைந்து விட்டது.

caste untouchability

சாதியத்தின் இருத்தலுக்கு அடிப்படையாக இருந்த நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை மறைந்தபோதும் இன்னும் சாதிகள் ஒழியவில்லை. சாதி உணர்வுகள் இமயமலையைப் போல மக்களின் மனங்களை அழுத்திக் கொண்டிருக்கின்றன. மக்களை, குறிப்பாக உழைக்கும் மக்களை ஒன்றிணைய விடாமல், அவர்கள் வர்க்க உணர்வு பெறாமல் தடுக்கும் பெரும் தடைக்கற்களாக சாதிய உணர்வுகள் நீடிக்கின்றன.

சாதியத்தின் இருத்தலுக்குப் பருண்மையான பொருளாயத அடிப்படையாக இருந்த நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை மறைந்தபோதும், சாதியத்தை நீட்டிக்க உதவும் பண்பாட்டுக் காரணிகளும், புதிய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு சாதியத்தைத் தகவமைக்கும் அரசியல் காரணிகளும் இங்கு நிலவுவதால்தான் சாதிகள் இன்னும் இங்கு முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பண்பாட்டுக் காரணிகள்

பிறப்பின் அடிப்படையிலான குலத் தொழில் அழிந்தபோதும், சாதி இன்னும் வேர் அறுபடாமல் நீடிப்பதற்கு மிகவும் முக்கியமான பண்பாட்டுக் காரணியாக இருப்பது அகமண முறையாகும். கிராமப்புற மக்கள் மத்தியில் இன்றும் மிகவும் கண்டிப்பான முறையில் அகமண முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. நகர்ப்புற மக்களிலும் பெரும்பான்மையோர் அகமண முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். இந்த முறை தொடர்ந்து நீடித்து வருவதால்தான் சாதி இன்னும் தனது பலமான ஆணி வேரைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முன்பு நிலப்பிரபுத்துவ உற்பத்திக்கு அடிப்படையாக இருந்த சாதியக் கட்டுக்கோப்பைக் கலையாமல் பாதுகாக்கும் ஒரு பலமான வழிமுறையாக அகமண முறை இருந்தது. ஆனால் இன்று அகமண முறையைக் காப்பாற்றும் பலமான பண்பாட்டுக் காரணியாக சாதி மாறியுள்ளது. சாதியின் இருப்புக்கான பருண்மையான அடிப்படையான நிலப்பிரபுத்துவ உற்பத்தி மறைந்தபோதும், சாதியச் சிந்தனை மாறாமல் அகமண முறை மூலம் நீடிக்கிறது. சாதியும் அகமண முறையும் பரஸ்பர வினை புரிந்து ஒன்றையொன்று காப்பாற்றியும், பலப்படுத்தியும் வருகின்றன.

கருத்துக்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக இருக்கும் பருண்மையான சூழ்நிலைமைகள் மறைந்ததும் அல்லது மாறியதும் கருத்துக்களும் தானே மறைந்து விடவோ அல்லது மாறிவிடவோ செய்வதில்லை. சூழ்நிலைமைகள் மாறினாலும் மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள கருத்துக்கள் உடனே மாறி விடுவதில்லை. மாறி விட்ட சூழ்நிலைமைக்கும் மக்கள் மனதில் இறுக்கமாகப் பதிந்து பின்தங்கி விட்ட கருத்துக்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. அது பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. இதை அகமண முறையில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியில் நாம் காணலாம்.

ஒரே சாதிக்குள் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் அந்தச் சாதிக்குள்ளேயே பல வர்க்கங்கள் உருவாகியுள்ள நிலை, தொழில், வேலை ஆகியவற்றின் காரணமாக தனது சாதியினர் வாழும் பகுதியை விட்டு நகரங்களுக்கும், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி நாடுகளுக்கும் கூடச் சென்று குடியேறும் நிலை, கல்லூரிகளில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மாணவர்களும் மாணவிகளும் கலந்து படிக்கும் நிலை, பணி புரியும் இடங்களில் வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களுடன் ஏற்படும் உறவுகள் போன்ற புறநிலை எதார்த்தங்கள் அகமணமுறைக்கு நெருக்கடியைக் கொண்டு வருகின்றன. விரும்பினால் கூட தொடர்ந்து அகமண முறையைக் காப்பாற்ற முடிவதில்லை. அகமண முறையில் உடைவுகள் ஏற்படுகின்றன. புறநிலைக்கு ஏற்றவாறு மாற்றமடையாத, பாறாங்கல்லாக அழுத்திக் கொண்டிருக்கும் பின் தங்கிய சிந்தனை அகமண முறையில் ஏற்படும் உடைவுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. அது சாதி ஆணவப் படுகொலைகளுக்கும் இட்டுச் செல்லுகின்றன.

அகமணமுறை சாதியை வேர் அறாமல் காக்கும் ஒரு பண்பாட்டுக் காரணியாக இருக்கும் அதே நேரத்தில், வேறு சில பண்பாட்டுக் கிளைகளும் சாதியைத் தாங்கிப் பிடித்து வருகின்றன.

முதலாளிய உற்பத்திமுறையின் காரணமாகக் கிராமப்புறங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்குக் குடி பெயர்ந்தாலும், சாதியின் நீட்டிப்புக்கு அவசியமான புறநிலைமைகள் நிலவாவிட்டாலும், சாதிய உணர்வு தானாக மறைந்து விடுவதில்லை. அவ்வாறு குடி பெயரும் மக்கள், குறிப்பாக ஒரே சாதியைச் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் குடி அமர்வது, அவர்களுக்குள்ளேயே குடும்ப உறவுகளையும், பண்பாட்டு உறவுகளையும் வைத்துக் கொள்வது, கிராமத்தில் தாங்கள் கொண்டாடி வந்த சாதி அடிப்படையிலான பண்டிகைகள், பின்பற்றி வந்த சாதியச் சடங்குகள் ஆகியவற்றைத் தொடர்வது, கிராமத்தில் உள்ள தங்கள் சாதியினருடன் தொடர்ந்து குடும்ப உறவுகளையும், பண்பாட்டு உறவுகளையும் தொடர்வது போன்ற காரணிகள் சாதிய உணர்வைத் தொடர்ந்து தக்க வைக்க உதவுகின்றன.

உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வு ஊட்டி, அவர்களை ஒன்றிணைத்து சுரண்டலற்ற ஒரு சோசலிச சமூகத்திற்கு வழி நடத்திச் செல்ல விரும்பும் ஒரு இயக்கம் இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சாதிய உணர்வுக்கு உயிரூட்டி வரும் பண்பாட்டுக் காரணிகளுக்கு எதிராக உணர்வுபூர்வமான ஒரு போராட்டத்தைப் பண்பாட்டுத் தளத்தில் நடத்த வேண்டும்.

மக்கள் தங்கள் சாதிக்குள் வைத்திருக்கும் குடும்ப உறவுகளுக்கும், பண்பாட்டு உறவுகளுக்கும் பதிலாக இயக்கத்திற்குள் இருக்கும் குடும்பங்களுக்கு இடையில் பண்பாட்டு உறவுகளை உருவாக்க வேண்டும். இயக்க உறவைக் குடும்ப உறவுகளாக மாற்ற வேண்டும். மக்களைப் பிளவுபடுத்தும் சாதியப் பண்பாடுகளுக்குப் பதிலாக உழைக்கும் மக்களை இணைக்கும் வர்க்கப் பண்பாடுகளை முன் வைக்க வேண்டும். சாதி தங்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது என்ற போலியான உணர்வு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதற்குப் பதிலாக இயக்கம்தான் தங்களுக்கு உண்மையான பாதுகாப்பை வழங்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு இயக்கம் நடைமுறையில் காண்பிக்க வேண்டும். 

அரசியல் காரணிகள் : தேர்தல்

இன்றைய முதலாளிய அரசியல் அமைப்பில், தேர்தல் முறை சாதியின் நீட்டிப்புக்கு உதவும் ஒரு முக்கியமான அரசியல் காரணியாக உள்ளது. ஒரு சாதியில் உள்ள அனைவரும் இன்று ஒரே மாதிரியான பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருக்கவில்லை. அனைவரின் நலன்களும் ஒரே மாதிரி இல்லை. ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல வர்க்கங்கள் இருக்கின்றன. முதலாளிய வர்க்கம், குட்டி முதலாளிய வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என ஒவ்வொரு சாதியும் இன்று வர்க்கங்களாகப் பிளவுண்டு உள்ளன. இந்த நிலையில், ஒவ்வொரு சாதியிலும் உள்ள ஆதிக்க சக்தியினர் சாதி என்ற அடிப்படையில் தமது சாதி மக்களைத் திரட்டி, அவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தி அரசியல் இலாபம் அடைய முயற்சி செய்து வருகின்றனர். அதன் மூலம் ஆட்சிக்கு வந்து வரி வருவாய்களிலும், சலுகைகளிலும் பங்கு பெற முயற்சி செய்து வருகின்றனர். இவர்களது இலாபத்தில் அந்தச் சாதியைச் சேர்ந்த அனைத்து மக்களும் பயனடைவதில்லை. இருப்பினும் அவர்கள் சாதிய உணர்வை ஊட்டி, அடையாள அரசியல் நடத்தி வருகின்றனர். அதற்காக மக்களைச் சாதி அடிப்படையில் பிளவு படுத்தி, ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு வருகின்றனர். அதன் வழியாக மக்கள் சாதி உணர்விலிருந்து மீறாமலும், வர்க்க அடிப்படையில் ஒன்று சேராமலும் தடுத்து வருகின்றனர். இங்குள்ள ஆளும் வர்க்கத்திற்கு அது அவசியமாகவும் உள்ளது.

உழைக்கும் மக்களுக்கு உண்மையான அதிகாரத்தை வழங்கும் மாற்று அரசியல் அமைப்புக்காகச் செயல்படும் ஒரு இயக்கம் வர்க்க அடிப்படையில் அதற்காக மக்களைத் திரட்டுவதன் மூலமே சாதிக்கு உயிரூட்டி வரும் இந்தத் தேர்தல் முறைக்கு முடிவு கட்ட முடியும்.

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு நல்ல எண்ணத்தில் கொண்டு வரப்பட்டாலும் அது தனது நோக்கத்தை நிறைவேற்றவில்லை. சாதிகளுக்குள் இடையிலான ஏற்றத் தாழ்வை அது போக்கவில்லை. அதற்குப் பதிலாக இன்று அது சாதி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக உள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

இன்று கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உள்ள இட ஒதுக்கீடு முறை ஒவ்வொரு சாதியிலும் உள்ள சமூகம், பண்பாட்டு, கல்வி ஆகியவற்றில் பின்தங்கி உள்ளவர்களுக்கு உண்மையில் பயன்படுவதில்லை. மாறாக ஒவ்வொரு சாதியிலும் வாய்ப்பும், வசதியும் உள்ள மேல் தட்டினருக்கே பயன்படுகிறது. இது சமூகத்தில் மேலும் ஏற்றத் தாழ்வையே கொண்டு வருகிறது. எனவே சாதி என்ற ஒற்றை அடையாளத்தில் உள்ள இட ஒதுக்கீடு முறைக்கு மாறாக ஒவ்வொரு சாதிக்குள்ளும் உள்ள அடித்தட்டு மக்கள் பயன்படும் வகையில் இந்த முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சாதிக்குள்ளும் உள்ள உடைமை வர்க்கங்களுக்கும், ஏற்கனவே இட ஒதுக்கீட்டின் மூலம் பயன் பெற்றுப் பொருளாதார ரீதியாக உயர்ந்தவர்களுக்கும் அந்தப் பயன் வழங்கப்படக் கூடாது. ஒவ்வொரு சாதியிலும் உள்ள தொழிலாளர்களுக்கும், கூலி விவசாயிகளுக்கும், ஏழை விவசாயிகளுக்கும், நடுத்தர விவசாயிகளுக்கும் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த முறை மூலம் சாதி உணர்வு உடைபடும். ஒரே சாதிக்குள் வர்க்க முரண்பாடுகள் கூர்மையடையும். இட ஒதுக்கீட்டைக் காட்டி சாதி அடிப்படையில் மக்களைத் திரட்டுவது சாத்தியமில்லாமல் ஆக்கப்படும்.

சாதிக்குள்ளேயே வர்க்க அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தால்தான் இன்று சில சாதிகள் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டிற்காக மக்களைத் திரட்ட முடிகிறது. ஒவ்வொரு சாதியிலும் உள்ள அடித்தட்டு மக்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அண்மையில் இட ஒதுக்கீட்டிற்காகக் குஜராத்தில் நடந்த பட்டேல் சாதி மக்களின் பெரும் போராட்டம், ஹரியானாவில் நடந்த ஜாட் சாதி மக்களின் போராட்டம், ஆந்திராவில் நடந்த காப்பு சாதி மக்களின் போராட்டம் அனைத்தும் அந்தந்த சாதிகளில் உள்ள அடித்தட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. சாதி என்ற ஒற்றைப் பரிமாணத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இட ஒதுக்கீடுதான் சாதி அடிப்படையிலான அந்தப் போராட்டங்களுக்கு வழி வகுத்துள்ளன.

இட ஒதுக்கீடு பற்றி நாம் கூறும்போது அதன் வரையறையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு நமது மக்கள் அனைவருக்கும் கல்வி வாய்ப்பையும், வேலை வாய்ப்பையும் வழங்கி விடுவதில்லை. இது முதலாளிய அமைப்பில் உள்ள முறை. நூறு பேரில் ஒரு சிலருக்கு மட்டும் கல்வியும் வேலையும் வழங்கி விட்டுத் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் அமைப்பு இது. தகுதியும், திறனும் உடையவர்கள் முன்னேறுகின்றனர், முன்னேறாதவர்கள் தகுதியும் திறனும் அற்றவர்கள் என்று கூறி மக்கள் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளும் அமைப்பு இது. வலுத்தது வாழும் என்று டார்வின் விலங்கு இனத்திற்குச் சொன்னதை மனித சமூகத்திற்குப் பொருத்தும் சமூக டார்வினியம்தான் இந்த அமைப்பின் சித்தாந்தம்.

இட ஒதுக்கீடு முறை ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காது என்பதைக் கவனத்தில் கொள்ளும்போதே, வர்க்க உணர்வை ஏற்படுத்தி சாதிய உணர்வை உடைக்கப் பயன்படும் என்ற அளவிலேயே ஒரு மாற்று இட ஒதுக்கீடுமுறை பற்றி இங்கு பேசப்படுகிறது.

நிலப் பிரச்சினை

சாதியின் இருப்புக்கு இன்னும் ஆதாரமாக இந்திய ஒன்றியத்தில் உள்ள கிராமப்புறங்கள் இருக்கின்றன. கிராமப் புறங்களில் நில உடைமையில் கடுமையாக நிலவி வரும் ஏற்ற தாழ்வும், அதனை ஒட்டிக் கிராமப்புற மக்கள் மத்தியில் நிலவி வரும் பொருளாதார ஏற்ற தாழ்வும், பின் தங்கிய பொருளாதார வாழ்நிலையும் பண்பாட்டுச் சூழலும் இன்னும் அதற்கு ஆதாரமாக இருந்து வருகின்றன.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தைப் பெற்ற இந்திய முதலாளி வர்க்கம் ஏகாதிபத்தியத்திடமிருந்து தன்னுடைய சார்புத்தன்மையை முற்றிலும் முறித்துக் கொள்ளவில்லை. நிதி மூலதனத்திற்காகவும், தொழில் நுட்பத்திற்காகவும், சந்தைக்காவும் ஏகாதிபத்திய முகாம்கள் மீது தனது சார்பை மென்மேலும் வளர்த்துக் கொண்டது. அதே சமயத்தில், உள்நாட்டிலும் தனது உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையின் விரிவாக்கத்திற்கும், தனக்குத் தேவையான மூலப் பொருட்களின் உற்பத்தியின் பெருக்கத்திற்கும் தடையாக இருந்த நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையையும், நில உடைமை முறையையும் விவசாயிகளைத் திரட்டி உடனடியாகத் தீவிரமான முறையில் மாற்றியமைப்பதற்குப் பதிலாக நிலப்பிரபுக்களுடனும், பண்ணையாளர்களுடனும் கூட்டு ஏற்படுத்திக் கொண்டு, படிப்படியாகச் சீர்திருத்தமுறையில் அவர்களை முதலாளிய உற்பத்திமுறைக்குக் கொண்டு வரும் வழியை மேற்கொண்டது.

தன்னுடைய தேவைகளைத் தானே நிறைவு செய்து கொள்ளும் அடிப்படையில் அமைந்திருந்த கிராமப்புற நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மாற்றமடைந்தது. விவசாயத்தில் மின்சாரத்தின் மூல நீர் இறைக்கும் மோட்டார்கள், ட்ராக்டர் போன்ற இயந்திரங்கள் ஆகியவை புகுத்தப்பட்டதனாலும், இரும்புக் கலப்பைகள், கடப்பாரைகள், மண் வெட்டிகள், கொத்துகள், வீட்டிற்குப் பயன்படும் பாத்திரங்கள் போன்றவை நகர்ப்புறம் சார்ந்த பட்டறைகளில் பெரும் அளவு உற்பத்தி செய்யப்பட்டு கிராமப்புறங்களில் சந்தைப்படுத்தப்பட்டதாலும், கிராமப்புறங்களில் விவசாய உற்பத்திக்கு அவசியமான பல்வேறு உற்பத்திக் கருவிகளையும் உற்பத்தி செய்வதில் பங்கு கொண்டிருந்த தச்சர், கொல்லர், குயவர், தலித்துகள் போன்ற சாதியினர் தொழில்களை இழந்துள்ளனர். அவர்கள் விவசாயக் கூலிகளாக மாறியுள்ளனர்..

இன்று கிராமங்கள் பெரும் பண்ணையாளர்களையும், பணக்கார விவசாயிகளையும், நடுத்தர விவசாயிகளையும், ஏழை விவசாயிகளையும், கூலி விவசாயிகளையும் கொண்டுள்ளன.. பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் பெரும் பண்ணையாளர்களையும், பணக்கார விவசாயிகளையும் தவிர நகர்ப்புற முதலாளிகளும் இன்று கிராமங்களில் நிலங்களை வாங்கிக் குவித்துப் பெரும் பண்ணைகளை உருவாக்கி வருகின்றனர். சந்தைக்கான உற்பத்திமுறை வேளாண்மையிலும் முதலாளியப் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் நடுத்தர விவசாயிகளும், ஏழை விவசாயிகளும் தமது நிலங்களை இழந்து கூலி விவசாயிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். இலட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலை மோசமாகி உள்ளது. ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்குக் குடி பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதலாளிய உற்பத்தி முறைக்குள் வந்து விட்டாலும் பெரும் பண்ணையாளர்களும், பணக்கார விவசாயிகளும் கிராமப்புறங்களில் ஆண்டாண்டு காலமாகச் சாதி அடிப்படையில் மக்கள் மத்தியில் நிலவி வரும் பிளவுகளைத் தங்களுடைய ஆதிக்கத்திற்கும், சுரண்டலுக்கும் வசதியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களே நாட்டில் உள்ள கட்சிகளுக்கான உள்ளூர் தலைவர்களாகவும், ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் தலைவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் ஆளும் வர்க்கத்தின் அங்கமாகவும், அரசியல் அதிகாரத்தின் பகுதியாகவும் இருக்கின்றனர். இவர்கள் இப்பொழுது உள்ள சமூக நிலைமையை அப்படியே காப்பாற்ற விரும்புவர்களாகவும், மாற்றத்தை விரும்பாதவர்களாகவும் இருக்கின்றனர். சாதியப் பண்பாட்டின் காவலர்களாக இருந்து வருகின்றனர்.

நில உடமை அடிப்படையிலான இவர்களுடைய பொருளாதார ஆதிக்கமும், சுரண்டலும், இவர்களுடைய அரசியல் அதிகாரமும் மக்களைச் சாதி அடிப்படையில் பிளவுபடுத்தியும், தொடர்ந்து அவர்களைச் சுரண்டி ஓட்டாண்டியாக்கியும் வருகின்றன. இவர்களுடைய பொருளாதார ஆதிக்கத்திற்கும், அரசியல் ஆதிக்கத்திற்கும் முடிவு கட்ட வேண்டுமானால் அது மக்களின் ஒன்று பட்ட போராட்டத்தினால்தான் சாத்தியம். ஆனால் மக்களோ சாதியினால் பிளவுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களை ஒன்றிணைப்பது எப்படி?

விவசாயத் திட்டம்

பெரும் பண்ணையாளர்களுக்கும், பணக்கார விவசாயிகளுக்கும் எதிராக ஏழை விவசாயிகளையும், கூலி விவசாயிகளையும், நடுத்தர விவசாயிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒரு விவசாயத் திட்டம் முன் வைக்கப்பட வேண்டும். அத்திட்டம் ஒரு குடும்பத்தின் தேவைக்கு மேல் பெரும் பண்ணையாளர்களிடமும் பணக்கார விவசாயிகளிடமும் குவிந்திருக்கும் நிலங்களைக் கைப்பற்றி ஏழை விவசாயிகளுக்கும், கூலி விவசாயிகளுக்கும் பகிர்வு செய்வதை தனது நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அதை நிறைவேற்ற ஏழை விவசாயிகளும், கூலி விவசாயிகளும், நடுத்தர விவசாயிகளும் ஒன்று திரட்டப்பட வேண்டும். பொதுவான எதிரியை எதிர்த்துப் போராடும் மக்கள் தங்களுக்குள் உள்ள சாதி வேறுபாடுகளை மறப்பார்கள். எதிரியை வெல்ல வேண்டுமானால் தங்கள் மத்தியில் உள்ள சாதி வேறுபாடுகளை மறந்தே தீர வேண்டும். போராட்டம் அவர்களைப் புதிய மனிதர்களாக, புதிய பண்பாட்டைக் கொண்ட மனிதர்களாக மாற்றும்! சுரண்டலிலிருந்தும், சாதியத் தீமைகளிலிருந்தும் மக்கள் விடுதலை பெறுவர்!

இந்திய ஒன்றியத்தில் இன்று நிலவி வரும் தனி உடைமையை அடிப்படையாகக் கொண்ட முதலாளிய உற்பத்தி முறைக்கும், முதலாளிய வர்க்க சர்வாதிகாரத்திற்கும் மாற்றாகச் சமூக உடைமையை அடிப்படையாகக் கொண்ட சோசலிச உற்பத்திமுறைக்கும், தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் தலைமையிலான ஒரு சோசலிச அதிகாரத்திற்கும் போராடும் ஒரு இயக்கம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவசாயத் திட்டத்தை முன் வைத்து கிராமப்புறங்களில் உள்ள உழைக்கும் மக்களை ஒன்றிணைக்க வேண்டும். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் நமது மக்கள் சாதி என்னும் பெரும் தீமையிலிருந்து விடுதலை பெற வழி வகுக்க வேண்டும். இன்று நமக்குத் தேவை அத்தகைய சோசலிச சமூகத்திற்கான ஒரு இயக்கமே!

- புவிமைந்தன்

Pin It