தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்துள்ளன. அரசு வெளியிட்டுள்ள ஆவணங்களே இதற்கு சான்றாக உள்ளன.

2007-08 ஆம் ஆண்டுக்கான கல்வித் துறையின் கொள்கைக் குறிப்பேடு (அரசு ஆவணம்) தந்துள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் 247 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 238 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இந்த சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள (2007-2008-ல்) மொத்த மாணவர்கள் 73807. இதன்படி, ஷெட்யூல்டு பிரிவினருக்கு 18 சதவீத ஒதுக்கீட்டின்படி 13,285 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சேர்க்கப்பட்ட மாணவர்களோ, 6942 தான் (அதாவது 9 சதவீதம்).

சுயநிதி கல்லூரிகளில் மட்டுமல்ல, அரசு கல்லூரிகளிலும், இதே நிலை தான். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், 3662 இடங்கள் உள்ளன. இதில் ஷெட்யூல்டு பிரிவினர் 574 பேர் மட்டுமே (அதாவது 15.6 சதவீதம்).

அரசின் கொள்கை அறிக்கையின்படி, நடப்பாண்டில் (2008-09), தமிழ் நாட்டில் 263 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் சேர்க்கப்படும் மொத்த மாணவர்கள் 1,04,814. இதில் 89985 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 16,197 பேருக்கு இடமளிக்க வேண்டும். ஆனால், சேர்க்கப்பட்ட வர்கள் 8373 பேர் மட்டுமே (அதாவது 9 சதவீதம்).

அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2209 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஷெட்யூல்டு பிரிவு மாணவர்கள் 320 மட்டுமே (அதாவது 14.48 சதவீதம்).

அரசு நேரடியாக நடத்தும் பொறியியல் கல்லூரிகளிலும் ஷெட்யூல்டு பிரிவினருக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை. 9 இடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் ஷெட்யூல்டு பிரிவினருக்கான 78 இடங்களும் நிரப்பப்படவில்லை. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 7824 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஆக 2007-2008-ம் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் ஷெட்யூல்டு பிரிவினருக்கான 7911 இடங்கள் நிரப்பப்படவில்லை.

அரசு கல்லூரிகளில் பழங்குடியினருக்கான 19 இடங்களில், இரண்டு இடங்கள் நிரப்பப்படவில்லை. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பழங்குடியினருக்கான 22 இடங்களில் 4 இடங்கள் நிரப்பப்படவில்லை. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிரப்பப்பட வேண்டிய 900 இடங்களில், 169 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். 731 இடங்களில் பழங்குடியினர் சேர்க்கப்படவில்லை.

சுயநிதி கல்லூரிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் 17,997. ஆனால் சேர்க்கப்பட்டவர்களோ 16,548 தான். அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் 441, சேர்க்கப்பட்டுள்ளோர் 378 பேர் தான். -

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் - இந்த ஆய்வை வெளியிட்டுள்ளார்.

தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், மிகப் பெருமளவில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியாதவர்களாக உள்ளனர் என்பதை ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. காரணம் - இந்த நிறுவனம் கேட்கும், கல்வித் தொகையைக் கட்டவியலாத நிலையில் - இவர்கள் உள்ளார்கள் என்பதுதான்.

Pin It